சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -7

This entry is part [part not set] of 24 in the series 20100326_Issue

சீதாலட்சுமி


வீணையிலிருந்து சுகமான சங்கீதம் கேட்க வேண்டுமென்றால் வீணை நரம்புகளை விரல்கள் முறையாக மீட்டத் தெரிந்திருக்க வேண்டும். அவசரப்பட்டோ அலட்சியத்திலோ இசைத்தால் அபஸ்வரம்தான் கேட்கும்.

தாம்பத்தியத்தின் இனிமையைப் ‘பிணக்கில்’ அருமையாகக் காட்டியுள்ளார் ஜெயகாந்தன்.

பிணக்கின் கணக்கைப் பார்க்கலாம்

மருமகள் சரசா தன் கணவன் அறைக்குப் பால் எடுத்துச் செல்லும் பொழுது கைலாசம் பிள்ளையின் பார்வையும் தொடர்ந்தது. அவள் அறைக்குள் நுழைந்து கதவை மூடவும் அவர் பார்வையும் கதவில் முட்டி நின்றது.

வெட்கம், பயம், துடிப்பு, காமம், வெறி, சபலம், பவ்யம். பக்தி, அன்பு இத்தனையும் கொண்டு வடிவம் பெற்ற ஒர் அழகுப் பெண் அங்கிருந்து அருகில் வரவும் கைலாசம் தாவி அவளை அணைக்கப் பார்க்கின்றார்.

அவர் பத்தினி தர்மாம்பாளின் வாலைக் குமரியின் தோற்றம்.

கற்பனையில் மிதக்கும் கைலாசம் பிள்ளைக்கு அறுபதுக்கு மேல் வயதாகின்றது. ஆச்சி தர்மாம்பாள் தன் பேரக்குழந்தைகளைக் கவனித்துக் கொண்டிருந்த பொழுது கைலாசம் தன் வாலிபப் பிராய நினைவுகளில் மனத்தை மேயவிட்டு மவுனமாக உட்கார்ந்திருந்தார்.

பால் தம்பளரை தர்மாம்பாள் நீட்டிய பொழுது சட்டென்று அவள் கையைப் பிடித்துக் கொண்டார்.

“பிள்ளை இல்லாத வீட்லே கெழவன் துள்ளியாடறானாம்..கையை விடுங்க”.

“யாருடி கெழவன்?” என்று மனைவியின் கன்னத்தில் தட்டியபடி சிரித்தார்.

“இல்லே, இப்போத்தான் பதினேழு முடிஞ்சு பதினெட்டு நடக்கு. பொண்ணு பாக்கவா”

“எதுக்கு நீதான் இருக்கியே” அவள் முந்தியைப் பிடித்து இழுத்தார்.

“ஐயே, என்ன இது ?”

மறுபடியும் சிரிப்புதான். கிழவர் பொல்லாதவர் கற்பனைக் குதிரை வேகமாகப் பறக்கின்றது. கைலாசம் தன் மனைவியைக் காணும் பொழுது தன்னையும் கண்டார்

கிழவரின் கை மனைவியின் தோளை ஸ்பரித்தது.

அந்த தம்பதிகளிடையே ஒரு சிறு மனத்தாங்கல் கூட நின்றதில்லை. ஒரு சச்சரவு என்பதில்லை. “சீ எட்டி நில்”, என்று அவர் சொன்னதில்லை. சொல்லி இருந்தால் அவள் தாங்குவாளா என்பது இருக்கட்டும், அவர் நாக்கு தாங்காது.
சிரிப்பும் விளையாட்டுமாகவே வாழ்க்கை கழித்துவிட்டார்கள். இதுவரை ஆரோக்கியமான தம்பத்யம் நடந்தது.

கைலாசம் நாவில் சனி உட்கார்ந்தது.

ஆரம்ப காலத்தில் தர்மாம்பாள் ஏழு மாதக் கர்ப்பிணியாக இருக்கும் பொழுது தாசி கோமதியுடன் நீலகிரிக்குச் சென்றதைச் சொல்லுகின்றார். அதுவும் எப்படி?

“அந்தக் காலத்துலே அவளுக்குச் சரியா யாரு இருந்தா.. தாசின்னா தாசிதான். “ இது அவர்.

“நானும் எத்தனியோ பேரைப் பார்த்திருக்கேன். ஆம்புள்ளைனா நீங்க தான் “

கைலாசம் பிள்ளைப் பேசப் பேச தர்மாம்பாள் பொடிப்பொடியாக சிதைந்து கொண்டிருந்தாள்.

தர்மாம்பாள் கிழவிதான். கிழவி பெண்ணில்லையா ?

அன்று முதல் அவள் அவருடன் பேசுவதில்லை. அவருக்கு ஏதாவது கொடுக்க வேண்டுமென்றாலும் பிறர் மூலம் அவைகளைச் செய்தாள். உயிர் ஒடுங்க ஆரம்பித்தது. கடைசி நிமிடங்களில் கூட அவர் அவள் வாயில் விட்ட பாலை விழுங்காமல் பல்லை இறுக மூடி உயிரை விட்டாள்.

எத்தனை ஆண்டுகளாக வாழ்ந்த இன்ப வாழ்க்கை ஒரு நொடிப் பொழுதில் மாயமாய் மறைந்துவிட்டது.

ஏன்?

இது ஒரு தற்செயல் நிகழ்வு. ஆனாலும் விஷ வார்த்தைகள் தாம்பத்தியத்தை அழித்துவிட்டது. அறிவுரை கூறும் நீதிக் கதையல்ல. ஆனாலும் படிப்பவர்களின் சிந்தனையைத் தூண்டிவிடும் அவலக் காட்சி. பல குடும்பங்களில் வேண்டு மென்றே நடைபெறும் துன்பியல் நாடகம். பெண்ணைச் சீண்டிப்பார்க்கும் இந்த ஆசை வரலாமா?

இளமைக் கால அனுபவங்களாக செய்திகள். வெளியூர் சென்று வந்தால் வித விதமான கற்பனை பொய்ப் மூட்டைகள். அடுத்தவன் பொண்டாட்டியின் சிறப்பைக் கூறி “பொண்டாட்டின்னா அவளைப் போல் இருக்கணும்” என்ற ஒப்பீட்டு வருணனைகள், ஒன்றா இரண்டா? பிணக்கு வராது. காயப் படும் பெண் மரத்துப் போவாள். அவள் ஜடத் தன்மை பார்த்து வெறுப்பு கொண்டு பரபரப்பைத் தேடி மனம் அலைந்து அவனும் தொலைந்து போவான்.

இப்படி நினைத்துப் பார்க்கலாமே.

ஏங்க, உங்க சின்ன வயசுக் கதை நன்னா இருக்கு. எல்லாருக்கும் சின்ன வயசே ஜாலிதான். நான் படிக்கும் போது குமார்னு ஒரு பையன். என்னைச் சுத்தி சுத்தி வருவான்.

அவள் சொல்ல ஆரம்பிக்கவும் அவன் முகம் முதலில் சுருங்கும்.

நாங்க ஊரைச் சுத்துவோம். கோயில்லே உட்கார்ந்து அரட்டை..

சரி போதும். அவன் பொறுமையை இழக்க ஆரம்பித்துவிட்டான்.

நாங்க சினிமாவுக்கும் போவோம். அவன் பொல்லாதவன். நிறைய சேட்டை செய்வான்.

போதும்டி நிறுத்து. இவ்வளவு கேவலமானவளா? முன்னாலே தெரிஞ்சிருந்தா உன்னைக் கல்யாணம் பண்ணிண்டிருக்க மாட்டேன்

அவன் பேசினால் அவள் கல்லாய் இருக்கணும். அவள் பேசினால் அவன் மட்டும் எரிமலையாகலாம். பெண்ணும் மனுஷ ஜன்மம்தானே.

பெண்ணச் சீண்டிவிட வேண்டும். அவளுக்குக் கோபம் வரவேண்டும். என்ன வக்கிரமான ஆசை!

அழகு மனைவியை மறந்து பல ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த மாதவியை விட்டுப் பிரிந்து கோவலன் சென்றதற்கும் இது போன்ற பாடிய வரிப் பாடல்கள்தானே காரணம்.

இல்லறம் நல்லறமாக நடக்க நாவையும் கட்டுப் படுத்திக் கொள்ள வேண்டும்.

தனக்கு உரிமையானவரை அடுத்தவர் பார்ப்பதைக்கூடத் தாங்காது மனம். இது இருபாலாருக்கும் பொருந்தும். என் பணிக்காலத்தில் பெரும்பாலான குடும்பச் சண்டைகளுக்கு உளறல்கள் காரணமாக இருந்ததைப் பார்த்திருக்கின்றேன்.
உடலும் உள்ளமும் உரமாக இருக்க, எழுபதிலும் இளமையாக இன்பம் நேராது பார்த்துக் கொள்ள வேண்டும்.

குடும்பத்தில் விரிசல் வந்தால் துன்பம் அவர்களுடன் நிற்காது. கோபத்தில் அவள் குழந்தைகளை அடிப்பாள். அவர்கள் தேவைகளைக் கவனிப்பது கூடப் பாதிக்கப் படும். சிலவினாடி உளறல்கள் குடும்ப அமைதியைச் சாகடிக்கும் விஷப்பூச்சிகளாகி விடும். பிணக்கு கதை நமக்குணர்த்துவது பெரிய படிப்பினை.

இருபத்து நான்கு வயதில் அறுபது வயது வாழ்க்கையினைப் படம் பிடித்துக் காட்டியிருக்கின்றார் ஜெயகாந்தன்.

இளமையில் முதுமையின் துள்ளல்.

இன்னொன்றையும் சொல்ல விரும்புகின்றேன். என் தோழி ஒருத்தியின் கணவர் அடிக்கடி வெளி நாடு செல்வார். வந்த பின் வகை வகையாக அவர் பல நாட்டுப் பெண்களை அனுபவித்ததாக நிறைய அளப்பார். அவளோ சண்டை போடாமல் சிரித்தபடி கேட்டுக் கொண்டிருந்தாளாம்.. அவள் கணவருக்குக் கோபம் வந்து விட்டது. ஏன் தெரியுமா? அவர் சொன்னதைக் கேட்டு அவள் சண்டை பிடிக்கவில்லையாம். அவளுக்கு அவர் மேல் ஆசை இல்லையாம். இப்படியும் புருஷ மனம் இருக்கின்றது!

மனக்குரங்கின் மகிமையே மகிமை. அது எப்படியெல்லாம் தாவும் என்று அறுதியிட்டுக் கூற முடியாது.

புதுச் செருப்பு கடிக்கும் கதையிலும் இன்னொரு குணத்தையும் சொல்லாமல் காட்சியாகக் காட்டுகின்றார்.

அவர் கதைகளில் அவர் உரையாடல்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. நேரடிச் சந்திப்புகளிலும் நடக்கும் உரையாடல்களும் அப்படியே. சில நேரங்களில் அவர் காட்சிகளைப் பேச வைத்துவிடுவார்.

ஆறு மாத காலம் ஒருத்தியுடன் இருந்து பார்த்தும் ஏமாற்றம், அதனால் ஏற்பட்ட புகைச்சலில் திணறி வீட்டை விட்டு இன்னொரு பெண்ணிடம் ஓடி வருகின்றான். கிரிஜா அவனுக்குப் புதியவள் அல்ல. வந்தவன் உடனே அவளுடன் உடலுறவு கொள்ளவில்லை. குமுறுகின்றான். புலம்புகின்றான். எதற்காக வந்தான்? ஒடிந்து போன நிலையில் அவன் சாய ஓர் இடம் வேண்டும். பரிவுடன் அவனைத் தேற்ற ஓர் தோழமை வேண்டும். காயப் பட்ட மனத்திற்கு ஒத்தடம் பெற வேண்டும். இப்படியும் மனிதன் ஆறுதல் தேடுகின்றான்.

வெளிப்படையாக ஜெயகாந்தன் எதுவும் கூறவில்லை. ஆனால் வேறு ஒரு கதையில் இது கூறப்பட்டிருக்கின்றது. ஒரு பெண்ணின் கூற்று. அதுவும் ஓர் விலைமாதின் கூற்று. அந்தக் கதையின் பெயர்.

GOD’S CALL GIRL

கார்லா என்ற ஓர் விலைமாது தன் சுய சரிதையில் எழுதியிருக்கின்றாள்.

கதையின் தொடக்க முதல் கடைசி வரை கடவுளையும் சுமந்து செல்கின்றாள். கடவுளின் விலைமகளாக இருந்தவள் கடவுளின் பெண்ணாகின்றாள். தெள்ளிய நீரோட்டமாக தங்கு தடையின்றி கதை செல்லுகின்றது. சம்பவங்களைவிட உள்ளத்தின் உலாவைக் காணலாம். அடுத்து அந்தக் கதையைப் பார்க்கலாம். நம் ஜெயகாந்தன் கோபித்துக் கொள்ளமாட்டார்.

தொடரும்

+++++++++++++++++++++++++++++++
seethaalakshmi@gmail.com

Series Navigation

author

சீதாலட்சுமி

சீதாலட்சுமி

Similar Posts