சீதாலட்சுமி
“சீதாலட்சுமி, என்னைப்பற்றி எழுதப் போகின்றீர்களா?”
என்னைக் கேள்வி கேட்பது போன்ற பார்வை.. அதற்கு ஓர் தனி அர்த்தம் உண்டு.
என்னைப் பற்றி, என் அனுபவங்களைப் பற்றி எழுத நான் தேர்ந்தெடுத்த எழுத்தாளர்தான் ஜெயகாந்தன். எங்கள் முதல் சந்திப்புக்குக் காரணம் அதுதான். என் தோழிகள் அமைத்துக் கொடுத்த சந்திப்பு. அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க எங்களைப் பார்க்க வந்தார். .அன்று என்னைப் பேச விட்டு அவர் மவுனமாக இருந்தார். என் தோழிகள்தான் இடையில் பேசுவார்கள். ஒன்றிரண்டு வார்த்தைகளை மட்டும் உதிர்த்தார். (எழுதத்தான் தெரியும் போல் இருக்கின்றது. சரியான உம்மணாம் மூஞ்சி என்று நினைத்துக் கொண்டேன்). நான் எளிதில் உணர்ச்சி வசப்பட்டு விடுவேன். என் குறைகளில் அதுவும் ஒன்று. சமுதாயத்தில் மீது இருந்த கோபத்தில் உரத்துப் பேசிய கணங்களும் உண்டு. அவரோ பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தார்
He is a good listener
அவர் எழுத்தின் வலிமைக்கு அதுவும் ஒரு காரணம். அவர் புறப்படும் பொழுது
என் தோழி பழனியம்மாள்தான் ஒன்றைக் கேட்டார்கள்
“சீதா சொன்னவைகளை எழுதுவீர்களா?”
“என்னிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்திருக்கின்றார்கள் எல்லாம் கொட்டி விட்டார்கள். இவர்களுக்கு ஒரு வடிகால் தேவை. அவர்கள் மனம் இப்பொழுது சமாதானம் ஆகியிருக்கும். இவர்களைப் பற்றி எழுதமாட்டேன்..சீதாலட்சுமியால் என்னைப் புரிந்து கொள்ள முடியும்.”
அவர் பார்வையை என் பார்வை சந்தித்த பொழுது அவர் கூற்றின் உண்மையை நான் உணர முடிந்தது. ஆம், என்னைப்பற்றி யாரும் எழுத வேண்டாம் என்று நினைத்தேன்.
ஒரு ஆண்மகனிடம் புலம்பி என்னைக் கோழையாக்கிக் கொண்ட அவமானத் துடிப்பு
சிறியதாக உணர்ந்தேன். மனக்குரங்கு குதிப்பதை அடக்கினேன். அதே நேரத்தில் உளவியல் தெரிந்த ஒருவரிடம் பேசியதில் ஒரு திருப்தியும் தோன்றியது. எனக்கு ஒரு நண்பன் கிடைத்துவிட்டான் என்று மனம் குதியாட்டம் போட்டது. எங்கள் நட்பு இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. எங்கள் சந்திப்புகளில்
நான் வெளிப்படுத்திய செய்திகள் எத்தனை எத்தனை! ஆனால் அவர் எழுத்தில் என்
செய்திகளின் சாயல் கூட வந்ததில்லை. சொன்ன வாக்கின்படி நடக்கின்றார்
He is a gentleman of words
அவரைப் பற்றி, அவர் எழுத்துக்களைப் பற்றிப் பலரும் எழுதிவிட்டார்கள். நம்மில் ஒருவராக அவரைப் பற்றி எழுத விரும்புகின்றேன். அவரை நான் கண்ட கோணங்களில் காட்ட விரும்புகின்றேன். ஒவ்வொருவருக்கும் அவரைப் பற்றிய கருத்து இருக்கும். அது அவர்கள் சுதந்திரம். நான் எழுதுபவைகள் அவருடன் பழகிய பொழுது நான் உணர்ந்தவைகள். .எல்லாவற்றையும் எழுதினால் நீண்ட தொடராகிவிடும். . சில காட்சிகளாவது பார்க்கலாம்.
அப்படி என்னைப் பற்றி எழுத நான் என்ன தனித் தகுதி படைத்தவளா? அவர் பாத்திரங்கள் சாதாரணமானவர்கள். ஆனால் ஒருவருக்கு ஒன்று, அல்லது சில பிரச்சனைகள் இருக்கும். ஆனால் பிரச்சனைக் குவியலில் வாழ்ந்த ஒருத்தி.. சமுதாயத்துடன் மோதிய ஓர் போராளி.! உருண்டு புரண்டு, மீண்டும் எழுந்து நிமிர்ந்து நின்றவள் நான்.
எழுத்தாளர் டாக்டர் லட்சுமி அவர்களும் என்னிடம் ஒரு விருப்பம் தெரிவித்தார்கள்.
“சீதாலட்சுமி, ஒருவாரம் நாம் இருவரும் மகாபலிபுரம் போய்த் தங்குவோம். உங்கள் அனுபவங்கள் எல்லாம் கூறுங்கள் நான் எழுத விரும்புகின்றேன்”.
அவர்கள் மென்மை யானவர்கள். ஆப்பிரிக்கவிலிருந்து திரும்பிய பின், பத்திரிகைகளைப் படித்துவிட்டு அதிர்ந்தார். மாற்றங்களை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. உலகம் யாரையும் பொருட்படுத்தாது, மாற்றங்களில் உருண்டு ஓடிக் கொண்டிருக்கும். “உங்கள் எழுத்துக்கு நான் பொருந்தமாட்டேன். நான் அடக்க மில்லா ஒரு பெண். பிரச்சனைகளைக் கூட முரட்டுத்தனமாகவே சந்திக்கின்றவள். ஒரு காலத்தில் என்னைப் பற்றி ஜெயகாந்தன் எழுதவேண்டுமென்று விரும்பினேன். பின்னால் யாரும் எழுதுவதை நான் விரும்பவில்லை. என் ஓட்டம் நின்று களைத்துப்போய் உட்காரும் பொழுது நானே எழுதுவேன்’
ஜெயகாந்தன் எழுத மறுத்த கதையின் நாயகி நான். அவளே பேச வந்துவிட்டாள்
கதைப் பாத்திரமும் கதாசிரியனும் சந்தித்துப் பேசுவது கதையில் கண்டிருக்கலாம்.
இப்பொழுது வாசகர்களும் பார்க்கப் போகின்றார்கள். விசித்திரமான, வேடிக்கயான சந்திப்பு. இனி கற்பனைக் குதிரைகளுக்கு கிராக்கி வந்துவிடும். விமர்சனங்கள் பறக்கலாம். சுவையான பயணம் மட்டுமல்ல சூடான விருந்தும் உண்டு. அவரிடம் செய்திகளைக் கூறும் பொழுது சில கேள்விகளுக்கு ஒற்றைச் சொல்லில் பதில் இருக்கும். சில கேள்விகளுக்கு நீண்ட விளக்கம் கிடைக்கும். ஆனால் பல கேள்விகளுக்குப் பதில்களாகக் கிடைத்தது ஒன்று சிரிப்பு அல்லது மவுனம்.
சென்னை மெரீனா கடற்கரை சென்றால் வித விதமான, சுவாரஸ்யமான காட்சிகள். அங்கே டொம்மி குப்பம், நொச்சி குப்பம் இருக்கின்றதே! போயிருக்கின்றீர்களா? அங்கே ஏதாவது ஓர் வீட்டுக்குள் நுழைந்து பார்த்திருக்கின்றீர்களா? ஒர் வீட்டில் அரிய காட்சியொன்றை நான் கண்டேன். தாயென்றால் பாலூட்டிச் சீராடும் அம்மாவை நமக்குத் தெரியும். நான் போன பொழுது வீட்டுக் கதவு பூட்டப்படாமல் சாத்தி இருந்தது. பெயர் சொல்லிக் கூப்பிட்டேன். யாரும் வரவில்லை. மெதுவாகக் கதவைத் திறந்தேன். ஓர் குழந்தை தூளியில் தூங்கிக் கொண்டிருந்தது. இது ஒரு அதிசயமா என்று கேலியாகப் பார்க்கின்றீர்களா? கொஞ்சம் பொறுங்கள்..பக்கத்து வீட்டுக்காரி வந்தாள்
எங்கே வள்ளி ?
அவள் வீட்டு வேலை செய்யப் போய்ருக்கா. வர நேரமாகும்
குழந்தை எழுந்தா யார் பாத்துப்பாங்க ?
அது எழுந்திருக்காதும்மா. சாராயம் கொடுத்துத் தூங்க வச்சுட்டுப்போவா
பாலூட்டும் தாய் சாராயம் கொடுத்துத் தூங்க வைத்திருக்கின்றாள். இந்தக் கொடுமையை நான் பார்த்த பொழுது துடித்தேன்.
என்னம்மா செய்றது ? பச்சபுள்ளையை வேலை செய்ற வீட்டுக்குக் கூட்டிட்டுப் போக முடியாது. புருசனும் குடிகாரன். இவதான் சம்பாதிக்கறா. ஏதோ அரை வயத்துக் கஞ்சி.
யாவது கிடைக்குது.
அரசாங்கத்தை, அல்லது ஆளும் கட்சியைத் திட்டத் தோன்றுகின்றதா? நம் நாட்டு வளர்ச்சியை வரைகோடு போட்டு பார்க்கக் கூடாது. முக்கோணம் போடுங்கள். அதான், குடும்பக் கட்டுப்பாட்டுக்கு போடுவோமே. இந்த முக்கோணம் மூன்று பக்கமும் ஒரே அளவா போடக் கூடாது. அடிப்பாகம் மிக மிகப்பெரிது ஆம், பொருளாதாரத்தில் அடிமட்டத்தில் இருப்பவர்கள் அதிகம். மத்தியதரக் குடும்பம் ரெண்டுங்கெட்டான். அரசாங்கத்திடம் கற்பக விருட்சம் கிடையாது. வரிப்பணம் அதிகரிக்க வேண்டும். மேலும் சுமை. அர்த்தம் கெட்டு நாம் நிறைய பேசுகின்றோம். என்னளவில் செய்ய முடிந்ததைச் செய்தேன். முழுப்பிரச்சனையைத் தீர்க்கும் வலிமை எனக்குக் கிடையாது. கோபம் மட்டும் வந்தது.
இன்னொரு அம்மாவையும் காட்ட விரும்புகின்றேன். கிண்டியிலிருந்து 45B பஸ் பிடித்து நந்தனம் சென்று கொண்டிருந்தேன். அலுவலக நேரம் கூட்டம் அதிகம். சைதாப்பேட்டையில் பஸ் சில நிமிடங்கள் நின்றது. ஒரு பெண் கையில் அழும் குழந்தையைத் தூக்கிக் கொண்டு வந்து பிச்சை கேட்டுக் கொண்டிருந்தாள். அவ்வப்பொழுது துணியை விலக்கிக் குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்று சொல்லிக் கொண்டு வந்தாள். என் பார்வைக்கு வந்த பொழுது நான் அதிர்ந்துவிட்டேன். குழந்தையின் ஆசன வாயிலில் சிகப்பாக பெரிய சதைக் கட்டி.. .என்ன வென்று கேட்கும் முன் பஸ் புறப்பட்டு விட்டது. அன்று முழுவதும் அமைதி இல்லை.
இரண்டு நாட்களில் அவளை எலெக்ட்ரிக் டிரைனில் பார்த்தேன். என் பக்கம் வரவும் காசு கொடுத்து மெதுவாக விசாரித்தேன். அவள் குழந்தையை எக்மோர் குழந்தைகள் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றாளாம். அவர்கள் கவனிக்கவில்லையாம். காசு வசூலித்து வேறு நல்ல டாகடரிடம் காட்டப் போகின்றாளாம் எனக்குப் புரிந்துவிட்டது.
நானே ஆஸ்பத்திரிக்குக் கூட்டிப் போகின்றேன் என்றேன். திரு திருவென்று விழித்தாள். மெதுவாக நகர ஆரம்பித்தாள். எக்மோர் வந்தது. அவளை இறுகப் பற்றிக் கீழே இறக்கினேன். திமிரி ஓடப் பார்த்தாள். பக்கத்தில் இருந்தவர்களை உதவிக்குக் கூப்பிட்டேன். முதலில் தயங்கினார்கள்.” இவள் பெரிய தப்பு செய்யறா. குழந்தையைக் காப்பாத்தணும் ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் இவளைக் கூட்டிப் போக வாங்க. உடனே நீங்க போய்டலாம். நான் ஒரு பெரிய ஆபீஸர்தான்” என்றேன். பின்னர் தயங்காமல் வந்தனர். அவளைப் பிடித்துக் கொண்டு ரயில்வே போலீஸ் நிலையம் சென்றோம்.
உள்ளே போகவும் என்னை அறிமுகப் படுத்திக் கொண்டேன். உடன் வந்தவர்களை அனுப்பிவிட்டேன். அங்கிருந்து எங்கள் டைரக்டருக்கு போன் செய்து விபரம் கூறவும் அவர்களே போலீஸ் நிலயத்திற்கு தொலை பேசியில் பேசி உதவி செய்யச் சொன்னார்கள். போலீஸ் ஜீப்பில் எக்மோர் குழந்தைகள் ஆஸ்பத்திரிக்குச் சென்றோம். அப்பொழுது அங்கே டைரக்டராக இருந்தவர் டாக்டர் .கிருஷ்ணமூர்த்தி அவர்கள்.
விசாரித்ததில் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.அவள் துணைக்குத் தங்க வேண்டும் என்று சொன்னவுடன் தங்க மாட்டேன் என்று போய் விட்டாளாம். அவளிடம் உண்மையைக் கூறும்படி மிரட்டவும் உண்மைகள் வெளி வந்தன. அவள் கணவனும் குடிகாரன். குழந்தையைக் காட்டி பிச்சை எடுக்கச் சொன்னது அவனே தான்.. புருஷன் அடிப்பான் என்று அழுதாள். இவள் அம்மா மட்டுமல்ல ஒருவனின் மனைவியும் கூட. பெற்றவளே ஆனாலும் தான் பெற்ற பிள்ளை வலியால் துடித்தும் பெற்றமனம் இங்கே கல்லாகிவிட்டததைக் காண்கின்றோம்..
தாய்ப் பாசத்தைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதுகின்றோம். இந்த வகையினரை எதில் சேர்ப்பது? இச்சையில் ஆடவன் மிருகமானால் இல்லற சோதனையில் பெண் இயந்திரமாக மாறுகின்றாளே ! பாசம், பரிவு எல்லாம் பதுங்கி விடுகின்றன.
குழந்தையை ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டு அவள் கணவனை போலீஸ் உதவியுடன் கூட்டி வந்து எங்கள் டைரக்டர் முன் நிறுத்தினேன். அவனுக்கு மனைவி, குழந்தை வேண்டுமென்றால் அவளை அவன் கொடுமைப் படுத்தக் கூடாது. அல்லது பிடித்து கேஸ் போட்டு ஜெயிலுக்கு அனுப்பிவிடுவோம் என்று கூறவும் பணிந்தான். குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு. ஆனால் பொண்டாட்டியை அடித்தால் போலீஸ் வந்துவிடும் என்று தெரிந்தததால் திட்டுவதுடன் நிறுத்திக் கொண்டான். குழந்தை பிழைத்தது. அடிவாங்குவதும் அப்பொழுது நின்றது. ஆனால் இது முழுமையான தீர்வாகுமா?
தீர்வு காணமுடியாத பிரச்சனைகள் எத்தனை எத்தனை ? தினமும் பல பிரச்சனைகள் சங்கிலித் தொடராக என்னைத் தேடிவரும். நான் பார்த்த பணி சமூகநலம். நான் ஓர் சமூக மருத்துவர்…இலாக்க அளவில் முடிந்ததைச் செய்வோம். ஆனாலும் மனத்தில் திருப்தி இருக்காது. மணியனிடம் போய்ச் சொல்லுவேன்.” அசடு, ஊர்ன்னு சொன்னா எல்லாம்தான் இருக்கும்” என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார். சாவியிடம் சொன்னால் உச் கொட்டுவார். ஆரம்பத்தில் கொஞ்சம் சொன்னேன். எதிரொலி இல்லை. ஜெயகாந்தனிடம் ஓடிப் போய் புலம்புவேன். ஒரு நாள் அருகில் இருந்த ஒருவர் “அம்மா பாவம், உளறாங்க” என்றார். அன்று முதல் நானும் ஜெயகாந்தனிடம் “உங்களிடம் உளறணும் எப்போ வர “ என்று கேட்க ஆரம்பித்தேன். அவரும் “ எப்போ வேணும்னாலும் வாங்க. உளறுங்க. உளறலைக் கேட்க எனக்கு இரண்டு காதுகள் இருக்கின்றன” என்பார். ஆமாம் ஒரு காதில் வாங்கி இன்னொரு காதில் விட்டு விடலாம். மண்டைக்குள் செலுத்தினால்தானே கோலுக்கு வந்து அது எழுத்தாகும். சமத்துப் பிள்ளையாண்டான்..
சொல் விளையாடலில் சாம்பியன்.
குடிகார புருஷனைப்போல் பொறுப்பில்லா அப்பனாக இருந்துவிட்டால் அங்கும் கொடுமைகளும் நடக்கும். இன்னொருத்தியைப் பற்றி ஒரு புகார்.. நிலையான வேலை பார்க்கின்ற ஒருத்தி விபச்சராமும் செய்கின்றாள் என்று புகார். அவளிடம் பேசினேன். எனக்கு ஒரு ராசி உண்டு.. என்னிடம் பேசுகின்றவர்கள் அவர்கள் துன்பத்தை அப்படியே கொட்டிவிடுவார்கள். அவளும் தான் செய்யும் இன்னொரு தொழிலை மறைக்கவில்லை அவள் சொன்னதைச் சொல்லுகின்றேன்
“என் அப்பா ஒரு சூதாடி. பணம் திருடினதால் வேலை போச்சு. அதனாலே கவலையாம். கவலை மறக்க குடிக்கணுமாம். வீட்டில் இருக்கும் ஒவ்வொன்றாய் காணாமல் போச்சு. காப்பாத்த வக்கில்லாத ஆம்புள்ளைக்கு புள்ளங்க இருக்கலாமா? குடும்பக் கட்டுப்பாடு திட்டத்துலே ஆப்பரேஷன் செய்தால் அவன் ஆம்புள்ளைத்தனம் போய்டுமாம். புள்ளே பெத்து பெத்து அம்மா உடம்பும் கெட்டது. லூப் போட்டுக் கோன்னு அம்மாகிட்டே சொன்னேன். என் தலைவிதி. அம்மாகிட்டே மக சொல்ல வேண்டியிருக்கு. .ஏற்கனவே ஆறு புள்ளங்க. எங்கே தப்போ அப்புறமும் ரெண்டு குழந்தைங்க பிறந்துச்சு. அம்மா ஆப்பிரேஷன் செய்துட்டாங்க. என் சம்பாத்தியம் முழுசும் குடும்பத்துக்கு.ப் போய்டும். வெட்கம் கெட்ட அப்பன் எங்கே எனக்குக் கல்யானம் செய்து வைக்கப் போறான். கல்யாணம்னா அங்கேயும் நகை காசு இல்லாம நடக்குமா? அதுக்குத்தான் என் கல்யாணத்துக்குப் பணம் சேர்க்க இதை சைட் பிஸினஸாகச் செய்கின்றேன்.”
என்னை யாரோ அடிப்பதுபோல் உணர்ந்தேன். அவள் உடல் பசிக்கு இரை தேடவில்லை. திருமணத்திற்குக் காசு வேண்டி விபசாரத் தொழில். இப்படி ஒரு ஸ்டேட்மெண்ட் கேட்டிருக்கிங்களா ? பேசும் சக்தி இழந்து விழித்துக் கொண்டிருந்தேன். அடுத்த அடி விழுந்தது
“என்னம்மா, அதிர்ச்சியா? உங்களுக்குத் தெரியுமா ? இந்த தரகங்கிட்டே வர்ர ஆம்புள்ளங்க கேக்கறது அவங்களுக்குக் குடும்பப் பொண்ணு அல்லது காலேஜ் படிக்கிற பொண்ணு வேணுமாம்.. அவனுக்குக் குடும்பம் இல்லியா?., இவன் மக காலேஜுக்குப் போக மாட்டாளா ? இவனுக்கு மட்டும் பத்தினி பொண்டாட்டிவேணும். அடுத்தவன் பொண்டாட்டி இவனுக்கு வேணும்.. பாவிங்க. இவங்க திருந்தாம இருந்தா இனிமே பொண்டாட்டி second hand ஆகத்தான் கிடைப்பா”
இது கற்பனையல்ல. இப்படி விதவிதமான எரிமலைக் குமுறலைக் கேட்டுக் கொண்டிருக்கின்றேன்.
ஓர் ஆசிரியர் செய்த சைட் வியாபாரம். மாணவர்களுக்கும் உடன் வரும் இளைஞர்களுக்கும் ப்ளூ பிலிம் போட்டுக் காட்டி சமபாதிப்பது. ஒரு நிருபர் என்னிடம் சொன்ன பொழுது நான் நம்ப வில்லை. நானும் என் தோழி பேபியும் அவருடன் சென்றோம். என் மனம் கொதித்தது.
தெய்வத்திற்கு முன் வைத்துப் போற்றிவரும் தொழில் ஆசிரியத் தொழில். எனக்கு நாட்டுப் பற்றையும் துணிச்சலையும் கற்றுக் கொடுத்தவர் என் ஆசிரியர். பாரதியை எனக்குள் புதைத்தவர் எங்கள் ஆசிரியர் கே.பி.எஸ் நாராயணன் அவர்கள்.. இன்றும் எட்டயபுரத்தில் அவரிடம் படித்த மாணவர்கள் அனைவரும் அவரை நினைத்துக் கொண்டிருக்கின்றோம்.
எனக்கு மிகவும் பரிச்சயமான மனிதர் ஒருவர், தரகரிடம் குடும்பப் பெண் கேட்டு வீட்டிற்கே அழைத்துச் செல்லப் பட்டார். இவர் உள்ளே நுழையும் பொழுது வீட்டிற்குள் இருந்து ஓர் ஆண் வெளியில் சென்றிருக்கின்றான். கூடத்தில் ஒரு கிழவி சுவற்றின் பக்கம் முகம் திருப்பி படுத்துக் கொண்டிருக்கின்றாள். இவர் உள்ளே போய்
உடலுறவு கொண்டிருந்த பொழுது குழந்தை அழும் சத்தம் கேட்டு உடனே அந்தப் பெண் இவரைப் பிடித்து தள்ளிவிட்டு எழுந்திருக்கின்றாள். பால் குடிக்கும் குழந்தை.. அதன் பின்னர் அவர் விசாரித்த பொழுது அழுதது அவள் குழந்தை, வெளியில் சென்றது புருஷன், கூடத்தில் படுத்திருப்பது மாமியார் என்று சொல்லி இருக்கின்றாள். ஒன்றும் பேசாமல் பணம் கொடுத்துவிட்டு வந்து விட்டார். என்னிடம் சொன்ன பொழுது ஓங்கி அடித்து விட்டேன். அந்த மனிதனுக்கு மனைவியும், இரு குழந்தைகளும் இருக்கின்றனர். சிறுவயது முதல் அவர்கள் குடும்பம் எனக்குப் பழக்கமானது. அவருக்குள் இப்படி ஒரு மிருகம் இருந்தது அன்றுதான் தெரியும்.
கள்ள உறவுக்கு எதுக்கைய்யா குடும்பப் பொண்ணும் கல்லூரி மாணவியும். ?
நான் இத்தனை சம்பவங்கள் கூறினால் எதை எழுதுவார், எதை விடுவார் ? இவைகளைக் கூறியதற்குக் நான் எத்தகைய பணியில் இருந்தேன் என்பதைப் புரிய வைக்கவும் நம்மைச் சுற்றிக் கொட்டிக் கிடக்கும் குப்பைகளையும் கொஞ்சம் அடையாளம் காட்டவும் விரும்பினேன்.
ஜெயகாந்தனின் பேச்சைக் கேட்க வருகின்றவர்கள் போல் அவரிடம் நிறைய பேச விழைகின்றவர்களும் வருவார்கள். சாதாரணமாகப் பார்க்க வருவார். அவர் பார்வை, அவர் சிரிப்பு, நம் நெஞ்சுக்குள் புதைந்திருக்கும் செய்திகளைத் தானே கொத்திக் கொண்டு வந்துவிடும். கோயிலுக்குப் போகின்றோம். கடவுளிடம் நிறைய புலம்புகிறோம். உடனே அவர் காட்சியளித்து நம் கவலைகளைப் போக்கி விடுவதில்லை. நம் கவலைகளைச் சொல்லும் பொழுது மனத்தை அழுத்தும் பாரம் குறையும். இப்படி எழுதுவதால் ஜெயகாந்தனைக் கடவுளாக்கி விட்டார் சீதாலட்சுமி என்று நினைத்துவிட வேண்டாம். குறைகளும் நிறைகளும் கலந்த ஓர் மனிதர் ஜெயகாந்தன். ஆனால் அவரிடம் மனம் விட்டுப் பேசும் பொழுது ஓர் ஆறுதல் கிடைக்கின்றது. சில மனிதர்களிடம் சில மின் அதிர்வுகள் இருக்கும். நம்முடன் ஒத்துப் போகாதவர்களை வெறுக்கின்றோம். நமக்கே காரணம் தெரியாது
அரசியல்வாதிகள் கால்களில் விழும் கலாச்சரத்தைப் பார்த்துக் கேலி செய்கின்றவள் நான். ஒரு நாள் என்ன நடந்தது தெரியுமா ? 1986ல் நான் வெளி நாட்டிற்கு முதல் பயணம் செல்லவேண்டி வந்தது. அதுவும் மகளிர் நலன் பேசும் ஓர் கருத்தரங்கில் கலந்து கொள்ளப் போக வேண்டும். முதல் அமைச்சர் அவர்களிடம் சொல்லிவிட்டுப் போக நினைத்து கோட்டைக்குப் போனேன். அப்பொழுது முதல்வராக இருந்தவர் மக்கள் திலகம் திரு எம்.ஜி.ஆர் அவர்கள். அவரைப் பார்க்க நான் நுழையும் பொழுது அவர் வெளியில் செல்ல எழுந்து நின்று கொண்டிருந்தார். அவரை வணங்கிவிட்டு நான் செல்லப் போவதைக் கூறினேன். அவரும் சில விபரங்கள் கேட்டார். அவர் முகத்தையே பார்த்துக் கொண்டு விடை அளித்து வந்தவள் திடீரென்று அவர் கால்களில் விழுந்து நமஸ்காரம் செய்தேன். இது ஒரு அனிச்சை செயல்.
ஜெயகாந்தனிடம் அவர் தங்கி இருக்கும் இடத்தில் போய்ப் பார்த்தால் சிலரால்
உணர முடியும். இப்படி எழுதுவதால் கிண்டல் செய்யத் தோன்றும். உங்கள் சிலரிடமும் அந்த சக்தி இருக்கலாம். உங்களை அறியாதவர்கள், புதியவர்கள் கூட உங்களைப் பார்க்கவும் விரும்பலாம். சிலருக்கு வெறுப்பு தோன்றலாம். நாம் இவைகளை உணர்வதில்லை..
ஜெயகாந்தனிடம் உளவியலை தர்க்க ரீதியாகப் பேசும் திறமை உண்டு. அந்தப் பேச்சுதான் பாதிக்கப் படும் மனங்களுக்கு ஒத்தடமாக இருக்கும். இங்கே நான் அவர் மேடைப் பேச்சைப் பற்றிச் சொல்ல வில்லை
எல்லோருக்கும் எல்லோரையும் பிடித்துவிடாது. சங்கீதத்தை எடுத்துக் கொள்வோம். சிலருக்கு தோடி ராகம் பிடிக்கும். சிலருக்கு பைரவி பிடிக்கும். ரசனைகள், ருசிகள் தனிப்பட்டவை. ஒரு காலத்தில் ஜி.என் பி. அவர்கள் சுத்த கர்நாடகத்தில் கலப்பு கொண்டு வருகின்றார் என்று கிசு கிசுத்தனர். டி. கே பட்டம்மாள் மாதிரி எம். எஸ் சுப்பு லட்சுமி இல்லை; பட்டம்மாள் பாடும் பொழுது ராகத்திற்காக சொற்களைப் பிரிக்காமல், அர்த்தம் பிரிந்து நிற்காமல் பாடுவார் என்பார்கள்.
ஜெயகாந்தனைப் பற்றியும் பல விமர்சனங்கள் இருப்பதை அறிவேன். நான் ரசித்ததை, நான் உணர்ந்தவைகளைக் கூறுகின்றேன். அவர் இல்லம், அவர் மற்றவர்களைப் பார்க்கவும், பேசவும் எடுத்துக் கொண்ட ஆழ்வார்பேட்டைக் குடில், இரண்டிற்கும் போயிருக்கின்றேன். அவருடன் கிராமங்களுக்குப் போயிருக்கின்றேன். பயணங்கள் செய்திருக்கின்றேன். அவரின் பரிமாணங்களைப் பார்த்தவர்களில் நானும் ஒருத்தி. என் அனுபவங்களைக் கூறுகின்றேன் அவ்வளவுதான். மாற்றுக் கருத்துக்களை மதிப்பவள் நான் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன். எங்களுக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் உண்டு.
எழுத்தாளர்கள் எதனையும் விருப்பம் போல் வளைத்து எழுத முடியும். ஆனால் செயலாற்றுகின்றவர்கள் நிலை அப்படியல்ல. பிரச்சனைகளை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அவைகளைச் சீராக்க வழி வகைகள் காண வேண்டும். செயல் படுத்தும் பொழுது வெற்றியும் கிடைக்கலாம் தோல்வியுற்றும் திரும்பலாம். விருப்பம் போல் அவ்வளவு எளிதில் முடிக்க முடியாது. ஒரு காலத்தில் நானும் கதைகள் எழுதிக் கொண்டிருந்தவள். எனவே இரண்டின் பலமும் பலஹீனமும் தெரியும்..
அடுத்து எழுதப் போகும் இரு சம்பவங்களுக்கு உளவியல் ரீதியாக ஜெயகாந்தன் கொடுத்த விளக்கங்ககளை எழுதுவேன்.
(தொடரும்)
- செயற்கைக் கதிரியக்கம் ஆக்கிய ஐரீன் ஜோலியட் கியூரி (1897-1956)
- பாகிஸ்தான் என்ற நல்ல பக்கத்து வீட்டுக்காரன்
- ஒரு ஓவியத்திலிருந்து அல்லது பவித்திராவின் நீர்க்குவளையிலிருந்து விடுப்படும் ஆற்றல்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) ஐந்து உரைகளை மொழிவேன் கவிதை -4 பாகம் -2
- இந்தியச்சூழல்களில் சமூக முரண்பாடுகளும் சமயங்களின் எதிர்வினைகளும் – தேசிய கருத்தரங்கு
- உயிர்பெற்ற சிற்பங்கள் கலாப்ரியாவின் “நினைவின் தாழ்வாரங்கள்”
- கவிதைக்குரிய காட்சிகள் செல்வராஜ் ஜெகதீசனின் “இன்ன பிறவும்”
- கற்பனையின் தளம் அரவிந்தனின் குழிவண்டுகளின் அரண்மனை
- டாக்டர் ரெ.கார்த்திகேசுவின் – ‘ஒரு சுமாரான கணவன்’
- சீதாம்மாவின் குறிப்பேடு ஜெயகாந்தன் -2
- அக்கினிப் பிரவேசம் !
- அமீரகத் தமிழ் மன்றத்தின் பத்தாம் ஆண்டு விழா
- ‘துணையிழந்தவளின் துயரம்’ கவிதை நூலின் வெளியீட்டு விழா
- 2009-ஆம் ஆண்டுக்கான இலக்கியப் பரிசுகள் – அறிவிப்பு
- ஒரு சமூகம்…. என்னை கடந்திருந்தது…..
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஆத்மாக்களின் உணர்வுப் பரிமாற்றம் கவிதை -23 பாகம் -2
- வேதவனம்-விருட்சம் 73
- பெருநகரப் பூக்கள்
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -5
- ODI விளையாடு பாப்பா
- நீரலைகள் மோதி உடையும் படிக்கட்டுகள்
- முள்பாதை 17
- இஸ்லாமிய இளைஞர்களுக்கு ஒரு மடல்
- இஸ்லாமிய இளைஞர்களுக்கு ஒரு மடல் (முடிவு)
- வளரும் பருவத்தில் ஆசிரியர் – மாணவர், பெற்றோர் – குழந்தைகள் உறவுகள் மேம்பட….
- விலைபோகும் மில்களும் வீதிக்கு வந்த வாழ்க்கையும்
- தேடல்
- விருந்து
- குழந்தைக் கவிதைகள்
- என் தந்தை ஜெயந்தன்
- கவிதைகள்
- வழிதப்பிய கனவுகள்..!