கவிதைக்குரிய காட்சிகள் செல்வராஜ் ஜெகதீசனின் “இன்ன பிறவும்”

This entry is part [part not set] of 32 in the series 20100220_Issue

பாவண்ணன்


இத்தொகுதியில் உள்ள முப்பதுக்கும் மேற்பட்ட கவிதைகளை ஒருசேரப் படித்துமுடித்ததும் எழுகிற உணர்வு ஜெகதீசனை வகைப்படுத்திக்கொள்ள உதவுகிறது. காட்சிகள்மீது அவர் காட்டுகிற வேகத்துக்கும் தீவிரத்துக்கும் இக்கவிதைகள் சாட்சியாக உள்ளன.

“சாயல்” கவிதையை இத்தொகுதியின் முக்கியக்கவிதையாகச் சொல்லலாம். இரு வெவ்வேறு தருணங்களில் முகம் வெளிப்படுத்திய வெவ்வேறு உணர்வுகளை அடுத்தடுத்து வைத்து மனம் பரிசீலிக்கும் காட்சியே இக்கவிதை. காதலைச் சொன்ன கணம் ஒன்று. காதலை விலக்கிக்கொள்வதாகச் சொன்ன பிரிவின் கணம் மற்றொன்று. பிரிவை வெளிப்படுத்திய கணத்தில் முகம் எந்த உணர்வையும் காட்டாமல் தட்டையாக இருக்கிறது. வலியின் சுவடோ, சிரமங்களின் அழுத்தமோ, பிரிவின் வேதனையோ எதுவுமே இல்லை. காதலைச் சொன்ன கணத்தையே மறந்துவிட்ட தோற்றம் அது. அப்படி எதுவுமே நிகழவில்லை என்பதுபோல. அழித்துத் துடைக்கப்பட்ட பலகைபோல. இறந்த காலத்தின் சாயல் துளியளவும் இல்லை. இத்தருணங்களை நிகழ்த்துவதற்காகக் கட்டியெழுப்பப்பட்ட பின்னணிக்குறிப்புகள் கவிதையைக் கவனத்துக்கு உரியதாக மாற்றுகிறது. காதலைத் தெரிவிக்கும் தருணம் இரு தளங்களை இணைக்கும் படிக்கட்டு. காதல்விலகலைத் தெரிவிக்கும் தருணம் மூடிக்கொள்கிற ஒரு மின்தூக்கி. மின்தூக்கியின் கதவுகள் மூடிக்கொள்வதைப்போல அவள் மனக்கதவுகளும் மூடிக்கொள்கின்றன.

“சிறகடித்து” கவிதையில் இடம்பெறும் காலைநேரக் காட்சி முக்கியமானது. காட்சியின் மையம் ஒரு வெண்புறா. தொடக்கத்தில் அது ஒரு காரின் முன்புறக் கண்ணாடியில் உட்கார்ந்திருக்கிறது. காருக்குரியவர் வந்து கதவைத் திறக்கும்வரை அங்கேயே இருக்கிறது. சத்தத்தில் அதிர்ந்து விலகிப் பறக்கிறது. பிறகு மெல்லமெல்ல தன்னிலைக்கு வந்து, பக்கத்தில் நிறுத்தப்பட்டிருந்த வேறொரு காரின் இரு சக்கரங்களுக்கிடையே அமர்ந்துகொள்கிறது. அந்தக் காருக்குரியவர் வந்து காரை எடுக்கும்போது அப்புறாவுக்கு எது போக்கிடம் என்றொரு கேள்வியை எழுப்பிக்கொள்கிறார் முதல் காருக்குரியவர். அடுத்த கணம் என்னும் பாதுகாப்பு மனிதவாழ்விலும் இல்லை. பறவைகள் வாழ்விலும் இல்லை. நிச்சயமின்மை என்பதே வாழ்வென்னும் பயணத்தின் விதியாக இருக்கிறது.

ஓர் இசைக்கச்சேரிக் காட்சியைச் சித்தரிக்கும் “தானாய் விழும் அருவி” கவிதையில் ஒருவித முரண்வசீகரம் இருக்கிறது. அருவி என்று உருவகிக்கப்படுவது இசையருவி. இசையின் நாதமே அருவியென விழுந்து கூடம்முழுதும் வழிந்தோடியபடி இருக்கிறது. கூடத்தில் இருப்பவர்கள் அருவியின் பாய்ச்சலையோ, அழகையோ, அது தரும் சிலிர்ப்பையோ, அதன் மகத்துவத்தை உணர்ந்தவர்களாக இல்லை. ஒரு பிரிவினர் புடவை, நகை பற்றிப் பேசுகிறவர்களாக இருக்கிறார்கள். இன்னொரு பிரிவினர் நாற்காலிகளுக்கு இடைப்பட்ட நடைபாதைப் பாய்விரிப்பில் பிள்ளையைக் கிடத்திவிட்டுக் காத்திருப்பவர்களாக இருக்கிறார்கள். அடிக்கடி கைபேசியில் பேசுகிறவர்களாக இருக்கிறார்கள். அல்லது அழைப்பை எதிர்பார்ப்பவர்களாக இருக்கிறார்கள். உண்மையில் அருவியைக் கண்டதும் ஆனந்தத்தில் திளைப்பவர்கள் கூடத்துக்கு வெளியே இருக்கலாம். ஆனால் அவர்கள் கூடத்துக்குள் வர வாய்ப்பில்லை. அந்த வாய்ப்பைப் பெற்று வந்தவர்களுக்கு அருவியில் நனையும் உத்வேகம் இல்லை. கேட்பவர்களுக்குக் கிடைப்பதில்லை. கிடைத்தவர்கள் கேட்பதில்லை. இசைக்குமட்டுமல்ல, வாழ்வின் எல்லாத் தளங்களுக்கும் பொருந்தக்கூடிய உண்மை இது.

“நர்சரி வார்த்தைகள்” என்னும் கவிதையில் காணப்படுவது ரத்தமும் சதையும் கொண்ட ஒரு காட்சி. தன் குழந்தையை எப்போதும் குழந்தையாகவே பார்க்கிற தந்தை, தன் உதவி தேவைப்படாத ஒருவனாக தன் குழந்தையைப் பார்க்கநேரும்போது கொள்கிற திகைப்பும் சிரிப்பும் பதிவாகியுள்ள கவிதை. ஒருபுறம் மூத்த மகன். இன்னொரு புறம் இளைய மகன். இளையமகனைத் தட்டித் தூங்கவைக்கிற தந்தையிடம் தன்னைத் தட்டவேண்டாம் என்றும் தானே தூங்கிக்கொள்வதாகவும் சொல்கிறான் மூத்தமகன். அந்த அறிவிப்பின் தோரணை, அக்கணத்தில் மனம் கொள்கிற திகைப்பு இரண்டுமே கவிதையில் பொருத்தமாக இடம்பெற்றுள்ளன. சக்கரத்தில் வைத்து வனைந்துமுடிக்கும்வரை மண்ணைப் பிசையலாம். அழுத்தம் தரலாம். அகலமாக்கலாம். குறுகலாக்கலாம். ஆனால் உத்தேசித்த வடிவத்தோடு பாத்திரம் திரண்டெழுந்தபிறகு அதை அறுத்துத் தனியாக வைப்பதைத் தவிர குயவனுக்கு வேறு வழியில்லை. தந்தைமகன் உறவைக்கூட ஒருவகையில் இதற்குச் சமமாகவே சொல்லலாம்.

முக்கியமென தன் மனம் உணர்கிற காட்சிகளை உள்வாங்கவும் அவற்றை மொழிவழியாக வெளிப்படுத்தவும் தேவைப்படுகிற தேர்ச்சி ஜெகதீசனுக்குப் போதுமான அளவில் கூடிவந்திருக்கிறது என்றே சொல்லவேண்டும். பயிற்சிகளின்மூலம் ஜெகதீசன் அடைந்திருக்கிற பலம் இது. காட்சிகளில் கவிதைக்குரிய காட்சி எது என்பதை வரையறுத்துக்கொள்வதில் அவருக்கு இருக்கிற நிச்சயமின்மை அவருடைய பலவீனம்.

( இன்ன பிறவும். கவிதைகள். செல்வராஜ் ஜெகதீசன். அகரம். மனை எண்.1, நிர்மலா நகர், தஞ்சாவூர். விலை. ரூ 60)

Series Navigation

author

பாவண்ணன்

பாவண்ணன்

Similar Posts