சீதாம்மாவின் குறிப்பேடு ஜெயகாந்தன் -1

This entry is part [part not set] of 26 in the series 20100212_Issue

சீதாலட்சுமி


“ஒரு பாத்திரத்தின் மீது அர்த்தமில்லாத வெறுப்பு அல்லது அசட்டுத்தனமான அனுதாபம் கொள்ளுகின்ற வாசகர்கள், இலக்கியத்தின் மூலம் வாழ்க்கையினை புரிந்து கொள்ள மறந்துவிடுகிறார்கள்"
ஜெயகாந்தன்

ஜெயகாந்தன் வாழ்க்கைக் குறிப்பு
ஜெயகாந்தன் 1934-ஆம் ஆண்டு கடலூரில், ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தார்.பள்ளிப் படிப்பில் நாட்டம் இல்லாமையால், தனது ஐந்தாம் வகுப்பிலேயே பள்ளி வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்தார். வீட்டில் இவர் நடத்தப் பட்ட விதம் பிடிக்காமல், வீட்டை விட்டு வெளியேறி விழுப்புரம் சென்றார்.அங்கு, அவரது மாமாவின் மேற்பார்வையில் வளர்ந்தார். அவர், ஜெயகாந்தனை கம்யூனிச வேதாந்தத்திற்கும், பாரதியின் எழுத்துக்களுக்கும் அறிமுகப் படுத்தினார்.
ஜெயகாந்தன் சில ஆண்டுகள் விழுப்புரத்தில் வாழ்ந்த பின் சென்னைக்கு குடிப்பெயர்ந்தார். அங்கு பெரும்பாளான நேரத்தை சி.பி.ஐ (CPI) -யின் ஜனசக்தி அலுவலகத்தில் – அச்சகத்தில் பணிப்புரிந்தும், ஜனசக்தி பத்திரிக்கைகள் விற்றும் களித்தார். ஆனால் 1949-ஆம் ஆண்டு சி.பி.ஐ மீதும் அதன் உறுப்பினர்கள் மீதும் தடை விதிக்கப் பட்டது.ஆதலால், அவர் சில மாதங்கள், தஞ்சையில் காலணிகள் விற்கும் கடை ஒன்றில் பணிப் புரிந்தார். இந்த எதிர்ப்பாராத இடைவேளை, அவர் வாழ்க்கையில் முக்கிய கால கட்டமாக அமைந்தது – அவர் சிந்திக்கவும் எழுதவும் நேரம் கிடைத்தது.இக்கால கட்டத்தில், தமிழ் நாட்டில் முக்கிய அரசியல் மாற்றங்களும் நேர்ந்தன.தி.மு.க மற்றும் தி.க -வின் வளர்ச்சியால், சி.பி.ஐ மெதுவாக மறையத் துவங்கியது. உட்கட்சிப் பூசல்களினாலும், கட்சியிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளாலும், ஜெயகாந்தன் சி.பி.ஐ-யிலிருந்து விலகினார்.பின்னர் காமராசருடைய தீவிர தொண்டனாக மாறி, தமிழக காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
அவரது இலக்கிய வாழ்க்கை 1950களில் துவங்கியது – சரஸ்வதி, தாமரை, கிராம ஊழியன், ஆனந்த விகடன் போன்ற பத்திரிக்கைகளில் இவரது படைப்புகள் வெளியாயின. இவரது படைப்புகளுக்கு புகழும் அங்கிகாரமும் கிடைத்தது. இருபதாம் நூற்றாண்டின் தலைச் சிறந்த தமிழ் எழுதாளர்களில் ஒருவராகப் போற்றப் பட்டார். ஜெயகாந்தன் சில ஆண்டுகள், தமிழ் திரையுலகிலும் வலம் வந்தார். இவரது நாவல்களான "உன்னைப் போல் ஒருவன்" மற்றும் "சில நேரங்களில் சில மனிதர்கள்" படமாக்கப் பட்டன. இதில் "உன்னைப் போல் ஒருவன்" சிறந்த மாநில மொழித் திரைப் படத்திற்கான ஜனாதிபதி விருதில் மூன்றாம் பரிசைப் பெற்றது. மேலும், அவருக்கும் ஒரு நடிகைக்கும் ஏற்பட்ட உறவே "ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்" என்ற நாவலாக உருப் பெற்றது.
+++++++++++++

சீதாம்மாவின் குறிப்பேடு
ஜெயகாந்தன் -1

டாக்டர். ஜெயகாந்தன்

பட்டம் வழங்கப் போவதாக செய்தி மட்டும்தான் வந்திருந்தது.
ஆனால் ஏனோ உடனே அவர் பெயருடன் டாக்டர் பட்டத்தை ஒட்டிப் பார்க்க மனம் விழைந்தது. டாக்டர் பட்டம் சிலருக்கு அளிக்கும் பொழுது அந்தப்பட்டத்தின் நிறம் மங்குவதுண்டு. ஆனால் ஜெயகாந்தனால் அந்தப்பட்டத்தின் ஒளி கூடியிருக்கின்றது. நம் காலத்தில் வாழும் ஓர் ஒப்பற்ற சிந்தனையாளன். விமர்சனங்கள் அந்த வணங்காமுடியை வளைக்க முடியாது. தன் எண்ணங்களை எழுத்தில் ஆழப் புதைக்கும் ஓர் அற்புத மனிதன் பள்ளிப் படிப்பு கூட முடிக்காதாவர் அச்சகத்தில் அச்சு கோர்க்கும் சாதாரண தொழிலாளி. இவருக்குள் எப்படி இத்தனை சிந்தனைகள் கொட்டிக் கிடக்கின்றன! வெளியில் சிதறிக் கிடப்பவை, சிந்தியவை இவர் பார்வைக்கு மட்டும் உயிரோட்டமாகத் தெரிகின்றதே!

மனிதர்களின் இதயங்களுக்குள் ஊடுருவிப் பார்க்கும் சக்தி எங்கிருந்து பெற்றார் ?

இவரைப்பற்றி எழுத என் மனம் கட்டளையிட்டுவிட்டது. என் அன்புக்குரிய நண்பர். 40 ஆண்டுகால நண்பர். குடும்ப நண்பர்.
எத்தனை சந்திப்புகள்! நாங்கள் கழித்த பொழுதுகள் அனைத்தும் அர்த்தமுள்ளவை. ஒருகாலத்தில் எனக்குள் ஒரு ஆசை இருந்தது.

ஜான்சனைப்பற்றி பாஸ்வெல் எழுதியது போல் ஜெயகாந்தனின் உரையாடல்களைத் தொகுத்து எழுத விரும்பினேன். கையிலே டேப்
ரிகார்டர் சகிதமாகச் சுற்றியிருக்க வேண்டும். அப்படியிருந்தாலும் பதிவு செய்திருக்க முடியாது. சிறு அசைவும் கூட அவரிடமிருந்து திடீரென்று வெள்ளமென வரும் வார்த்தைகளின் ஓட்டத்தைப் பாதித்திருக்கும் அப்பொழுதே எழுதியிருந்தால் இந்த சமூகத்திற்கு ஓர் அரிய நூல் கிடைத்திருக்கும். இப்பொழுது என் நினைவுப் பெட்டகத்தில் தேடிப் பார்க்கும் வலுக் கூடக் குறைந்து விட்டது. இருப்பினும் நினைவில் இருப்பதையாவது பதிவு செய்ய வேண்டியது என் கடமையெனக் கருதுகின்றேன்

என் நட்பு வட்டம் மிகப் பெரியது. நான் சந்தித்தவர்களில் உரையாடலில் மிகச் சிறந்தவர் ஜெயகாந்தன்.

HE IS ONE OF THE GREATEST CONVERSATIONALISTS

என்னைப் பற்றி நன்குணர்ந்த, எங்கள் குடும்ப நண்பர் பேராசிரியர் அரசு அவர்கள் கூறியது.

ஜெயகாந்தன் ஒரு எழுத்தாளர்.

ஜெயகாந்தன் ஒரு பேச்சாளர்.

“இந்த இரண்டினைப் பற்றியும் நிறைய எழுதிவிட்டார்கள். அவருடன் பேசும் பொழுது அவரிடம் கண்டவைகளை, உணர்ந்தவைகளை அவருடன் பழகியவர்கள் எழுத வேண்டும். சீதாம்மா, அவர் உங்களுக்கு நீண்ட கால நண்பர். நினைவில் இருப்பவைகளைப் பதிவு செய்யுங்கள். ஏற்கனவே நீங்கள் மீண்டும் எழுதத் தாமதித்துவிட்டீர்கள்.

தொடர்ந்து உங்களுடன் பழகிய பல அறிஞர்களைப் பற்றி எழுத வேண்டும். உங்கள் அனுபவங்களையும் பதிவு செய்யுங்கள் “அரசு வேறு யாருமல்ல. வரலாற்றாய்வாளர் டாக்டர். ராசமாணிக்கனாரின்
மகன். அவர்கள் குடும்பத்துடன் எனக்கிருக்கும் நட்பின் காலம் 52 ஆண்டுகள். அவர்கள் குடும்பத்தில் ஒருத்தியாய் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். மதுரையில் பிறந்து, எட்டயபுரத்தில் வளர்ந்து, சமுதாயப் பணியில் தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவிலும், வெளி நாடுகளிலும் பல இடங்களில் வலம் வந்தவள். இன்றும் சமுதாய அக்கறையுடன் வாழ்ந்து கொண்டிருப்பவள். என் அறிமுகத்திற்குக் காரணம் ஜெயகாந்தனைப் பற்றி எழுத எனக்குக் கொஞ்சமாவது தகுதி இருக்கின்றதா என்பதை உணர்த்தவே இந்த சிறு அறிமுகம். நாங்கள் இருவரும் சமுதாயத்தைக் கூர்ந்து நோக்குகின்றவர்கள். அவர்களின் உணர்வை இருவரும் உணர்வோம். யதார்த்தமாகப் பார்ப்போம்.

அபூர்வமான சூழலில் எங்கள் முதல் சந்திப்பு நிகழ்ந்தது. நான் தான் அன்று நிறைய பேசினேன், எங்களிடையே நட்பு வளர்ந்ததற்குக் காரணங்கள் எங்கள் சமுதாயச் சிந்தனைகளும், பாரதியிடம் கொண்டிருந்த ஈடுபாடும் தான். பல செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன். நாங்கள் இருவரும் அச்சமில்லாதவர்கள். வெளிப்படையாகப் பேசுபவர்கள். ஆடம்பரமில்லாதவர்கள்.

அவரின் பார்வை குடிசைகளில் விழுந்தது. ஏழைகள் அவரின் உறவினர்கள். மற்றவர்கள் கண்களுக்குக் குறைவாகப் பட்டவைகள்,
ஏளனமாகக் கருதப் பட்டவைகளின் உள்ளுக்குள் போய்ப் பார்த்து
உண்மைகளை சத்தம் போட்டுக் கூறியவர்.

அவர் எண்ணங்கள் எழுத்தில் வந்தன. நான் செயலில் இறங்கினேன். இந்த விஷயத்தில் நாங்கள் ஒரே பார்வை கொண்டிருந்தோம்.

கண்ணுக்குத் தெரியும் சாதனை அவருடையது. அவர் எண்ணங்கள்
எழுத்துக்களில் வெளிப்பட்டன

என்னுடைய பணி வாழ்க்கையில் துன்பப்படுபவர்களின் துயர் துடைப்பது மனங்களில் வரைந்த சித்திரம்.

என்னுடைய பணியில் எனக்குக் கிடைத்த குடும்பங்கள் நிறைய இருக்கின்றன. இரத்த சம்பந்த உறவுகளைவிட இதய சம்பந்த உறவுகளிடம் எனக்கு ஒட்டுதல் அதிகம்.

என் சாதனைகள் என்று கூறவில்லை. இறைவன் கொடுத்த வரம் இது.

கடந்த கால நிகழ்வுகளைமனம் அசை போடும் பொழுது ஓர் மகிழ்ச்சி.

ஜெயகாந்தனின் எழுத்துக்கள் என்றும் புதுமை மாறாது அதே சக்தியுடன் நம்மை ஆட்கொள்ளும்.

மேடைப் பேச்சுக்கள் அவ்வப்பொழுது விமர்சனங்களில் மாட்டிக் கொள்ளும். அவருடன் உரையாடல் மிக மிகச் சிறந்தது. அவர் திடீரென்று பேச ஆரம்பிப்பார். காட்டாற்று வெள்ளமென வரும் பேச்சைக் கேட்பவர்கள் திக்கு முக்காடி பிரமித்துப் போய் உட்கார்ந்திருப்போம். அவருடன் செல்லும் பொழுது பாதையில் அவர் பார்வை போகும் திசையை நாமும் பார்க்கத்தான் செய்வோம். அனால் வீடு வரவும் அவர் பேசுவதைக் கேட்டால் மலைத்துப்போய் நிற்போம்.

எல்லோரிடமும் அரசியல் பேச மாட்டார். பொதுவாக அவர் அரசியல் பேசுவதே குறைவு. எப்பொழுதும் அவர் நோக்கு, அக்கறை, ஆதங்கம் எல்லாம் சமுதாயத்தைச் சுற்றியே இருக்கும்.

அவருக்கு நண்பர்கள் அதிகம். அதைவிட ரசிகர்கள் அதிகம். ரசிகைகளைவிட ரசிகர்கள் அதிகம். ரசிக்கும் பெண்களும் அவரைத் தேடி வந்து அதிகம் பேசுவதில்லை. அவர் தங்கும் இடத்தில் அவர் பேச்சைக் கேட்கக் காத்திருக்க வேண்டும். மழையைக் கூட விஞ்ஞானத்தால் வரவழைக்க முடியும். ஆனால் இந்த முரட்டுக் குதிரை தானாகத்தான் நாட்டியமாடும். காத்திருக்க முடிந்தவர்களே அதைக் கண்டு களிக்க முடியும். பெண்களின் தயக்கத்திற்கு அதுவும் ஒரு காரணம்.

ஜெயகாந்தனைப் பற்றி எனக்குத் தெரிந்தவைகள், நான் கண்டவைகள், உணர்ந்தவைகள் எல்லாம் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வேன்.

(தொடரும்)

+++++++++++++++++++++++

ஜெயகாந்தன் படைப்புகள்
தன் வரலாறு
· ஒர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் (அக்டோபர் 1974 )
· ஒர் இலக்கியவாதியின் கலையுலகஅனுபவங்கள் (செப்டம்பர் 1980 )
வாழ்க்கை வரலாறு
· வாழவைக்க வந்த காந்தி 1973 (ரொமெயின் ரொலேண்ட்டின் ஃப்ரெஞ்சு மொழியில் வந்த காந்தியின் தன்வரலாற்றின் தமிழாக்கம் )
· ஒரு கதாசிரியனின் கதை (மே 1989 ( முன்ஷி பிரேம்சந்தின் வாழ்க்கை வரலாறு)
நாவல்கள் மற்றும் குறுநாவல்கள்
· வாழ்க்கை அழைக்கிறது (ஆகஸ்ட் 1957)
· கைவிலங்கு (ஜனவரி 1961)
· யாருக்காக அழுதான்? (பெப்ரவரி 1962)
· பிரம்ம உபதேசம் (மே 1963)
· பிரியாலயம் (ஆகஸ்ட் 1965)
· கருணையினால் அல்ல (நவம்பர் 1965 )
· பாரீசுக்குப் போ! (டிசம்பர் 1966)
· கோகிலா என்ன செய்துவிட்டாள்? (நவம்பர் 1967)
· சில நேரங்களில் சில மனிதர்கள் (ஜூன் 1970)
· ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (ஜனவரி 1971)
· ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் (ஏப்ரல் 1973)
· ஜெய ஜெய சங்கர… (செப்டம்பர் 1977)
· கங்கை எங்கே போகிறாள் (டிசம்பர் 1978)
· ஒரு குடும்பத்தில் நடக்கிறது… (ஜனவரி 1979)
· பாவம், இவள் ஒரு பாப்பாத்தி ! (மார்ச் 1979)
· எங்கெங்கு காணினும்… (மே 1979)
· ஊருக்கு நூறு பேர் (ஜூன் 1979)
· கரிக்கோடுகள் (ஜூலை 1979)
· மூங்கில் காட்டினுள்ளே (செப்டம்பர் 1979)
· ஒரு மனிதனும் சில எருமை மாடுகளும் (டிசம்பர் 1979)
· ஒவ்வொரு கூரைக்கும் கீழே…(ஜனவரி 1980)
· பாட்டிமார்களும் பேத்திமார்களும் (ஏப்ரல் 1980)
· அப்புவுக்கு அப்பா சொன்ன கதைகள் (ஆகஸ்ட் 1980)
· இந்த நேரத்தில் இவள்… (1980)
· காத்திருக்கா ஒருத்தி (செப்டம்பர் 1980)
· காரு (ஏப்ரல் 1981)
· ஆயுத பூசை (மார்ச் 1982)
· சுந்தர காண்டம் (செப்டம்பர் 1982)
· ஈஸ்வர அல்லா தேரே நாம் (ஜனவரி 1983)
· ஓ, அமெரிக்கா! (பெப்ரவரி 1983)
· இல்லாதவர்கள் (பெப்ரவரி 1983)
· இதய ராணிகளும் ஸ்பெடு ராஜாக்களும் (ஜூலை 1983)
· காற்று வெளியினிலே…(ஏப்ரல் 1984)
· கழுத்தில் விழுந்த மாலை (செப்டம்பர் 1984)
· அந்த அக்காவினைத்தேடி… (அக்டோபர் 1985)
· இன்னும் ஒரு பெண்ணின் கதை (ஜூலை 1986)
· ரிஷிமூலம் (செப்டம்பர் 1965)
· சினிமாவுக்குப் போன சித்தாளு (செப்டம்பர் 1972)
· உன்னைப் போல் ஒருவன்
· ஹர ஹர சங்கர (2005)
சிறுகதைகள்
· ஒரு பிடி சோறு (செப்டம்பர் 1958)
· இனிப்பும் கரிப்பும் (ஆகஸ்ட் 1960)
· தேவன் வருவாரா (1961)
· மாலை மயக்கம் (ஜனவரி 1962)
· யுகசந்தி (அக்டோபர் 1963)
· உண்மை சுடும் (செப்டம்பர் 1964)
· புதிய வார்ப்புகள் (ஏப்ரல் 1965)
· சுயதரிசனம் (ஏப்ரல் 1967)
· இறந்த காலங்கள் (பெப்ரவரி 1969)
· குருபீடம் (அக்டோபர் 1971)
· சக்கரம் நிற்பதில்லை (பெப்ரவரி 1975)
· புகை நடுவினிலே… (டிசம்பர் 1990)
· சுமைதாங்கி
· பொம்மை
கட்டுரைகள்
· பாரதி பாடம்
· இமயத்துக்கு அப்பால்
திரைப்படமாக்கப்பட்ட இவர் கதைகள்
· சில நேரங்களில் சில மனிதர்கள் (இயக்குநர் : பீம்சிங்)
· ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (இயக்குநர் : பீம்சிங்)
· ஊருக்கு நூறு பேர் (இயக்குநர் : லெனின்)
· உன்னைப் போல் ஒருவன்
· யாருக்காக அழுதான்
· புதுச் செருப்பு
ஜெயகாந்தன் இயக்கிய திரைப்படம்
· உன்னைப் போல் ஒருவன்
· யாருக்காக அழுதான்
விருதுகள்
· சாகித்ய அகாதெமி விருது
· 2002-ம் ஆண்டுக்கான ஞான பீட விருது
· 2009-ம் ஆண்டின் இலக்கியத்துறைக்கான பத்ம பூஷன் விருது
தகவல்

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D (கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.)

++++++++++

Seethaalakshmi Subramanian (seethaalakshmi@gmail.com) February 9, 2010

Series Navigation

author

சீதாலட்சுமி

சீதாலட்சுமி

Similar Posts