சூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது (2)

This entry is part [part not set] of 27 in the series 20091113_Issue

சி. ஜெயபாரதன், கனடா


ஆண்டுகள் பலவாய் ஓடி ஓடி
இறுதியில்
(பதவி உயர்வென்னும்)
அந்த ஏணியை அடைந்தேன்!
கூரிய கற்களும் கொடிய முட்களும்
குத்திக் கிழித்தும்
(உயர்ச்சி நோக்கி ஆவலாய்)
ஓடிய கால்கள் .!
ஏணியின் உயரம்
அயர்ச்சியை அளிக்க .
புத்துயிர் பெற்றுக்
கண்களைத் திறந்தேன்!
காலை எடுத்து
முதற்படி வைப்பதற்குள் .
என்னைத் தாண்டிச்
(சென்றன) சில காகங்கள் .
கழுத்தில் சலங்கையுடன்,
காலில் எலியுடன்,
ஏணியைத் தள்ளி
(என்னையும் மிதித்துக் கொண்டு)
இடத்தை நிரப்பின!
என்று மனவேதனைப் படுகிறார்!
‘பலி ‘ என்னும் கவிதையில் ஒரு பெண்மேல் விழும் பழிகளைப் பற்றி வர்ணிக்கிறார். பெண்ணின் உடல் உழைப்பும், வேலை ஊதியமும் பிறருக்கு அனுதினமும் பயன்பட்டாலும், புகழ் கிடைப்பதற்குப் பதிலாகப் பழியும் பாவமும், வலியும் வருவது யாருக்கு ? அதே அந்தப் பெண்களுக்குத்தான்!
‘நானிட்ட புள்ளிகளில் யார் யாரோ கோலமிடுகிறார்! நான் வரைந்த ஓவியத்துக்கு யார் யாரோ வண்ணம் தீட்டுகிறார்! நான் வடித்த சிற்பத்தில் யார் உளியோ மெருகேற்றுகிறது! நான் படைத்த கவிதைக்கு யார் யாரோ அர்த்தம் சொல்கிறார், ‘ என்று குற்றங்கள் சாட்டி அவரது அம்மிக் கவிதை தொகுப்பின் மீது ஆய்வுக் கட்டுரை எழுதும் எனக்குப் பாராட்டை அளிக்கா விட்டாலும், பதிலாக என் முதுகில் ஓங்கி இப்படி அடிக்காமல் விட்டிருக்கலாம்!
என் வீட்டு ரோஜாப்பூ
யாருடைய வீட்டு மேஜையிலோ ?
நான் கோர்த்த மணிமாலை
எந்தப் பொம்மை கழுத்திலோ ?
என் தோட்ட மருதாணி
யாருடைய விரல்களிலோ ?
என் வீட்டுத் தென்னங் கீற்று
யார் வாசல் தோரணமோ ?
ஆனால்
யார் யாருக்கோ வரவேண்டிய
வலியும், துக்கமும்
ஒட்டுமொத்தமாய்
(வருவது)
எனக்கு மட்டும்தான்!
பாரத நாட்டில் பல நூற்றாண்டுகளாகப் புற்றுநோயாய்ப் பரவித் துயர்ப்படுத்தும் ஜாதி, மத, இன, மாநில வேறுபாடுகள், ஏற்றத் தாழ்வு நிலைகள் மக்களிடையே உண்டாக்கிப் பேரளவில் பிளவு படுத்திக், குழுவினங்கள் ஒன்றுக் கொன்று போரிட்டும், தீயிட்டும், கொன்றழித்தும் பழிவாங்கும் படலங்களைப் பல கவிதைகளில் காட்டுகிறார், வைகைச் செல்வி.
காஷ்மீர் முதல் கன்னியா குமரி முனைவரை இந்திய மக்களுக்கு இராமன் மீதுள்ள பற்றுபோல, பாரத நாட்டின் மீது பற்றுமில்லை, பாசமுமில்லை, பரிவுமில்லை. சுமார் 200 ஆண்டுகளாக இந்தியாவை அடிமை பூமியாக மிதித்து வந்த ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதற்காக 50 கோடி மக்கள் ஒன்றாகச் சேர்ந்து புரட்சி செய்தோம், போராடினோம், முடிவில் வெற்றி பெற்றோம். விடுதலை பெற்றோம். ஆனால் இப்போது அனைவரும் மீண்டும் பிளவுபட்டு சுயநலக் குழுக்களாய் பிரிந்து கொண்டு யார் பலசாலி என்று நிரூபிக்க ஒருவரை ஒருவர் வேட்டையாடிக் கொண்டிருக்கிறார்.
‘நமக்குள் ஓர் வல்லரசு ‘ என்னும் படைப்பில் நாட்டில் நச்சுப் பாம்புகளாய் முளைத்து நாசம் செய்துவரும் மூர்க்க மதவாதிகளின் அநீதிக் கொலைகளைக் கேட்டு கொதிப்படைகிறார். பாரத நாட்டின் பெரும்பான்மையாக இருக்கும் இந்துக்களின் தீவிர அடிப்படை மதவாதிகள் சீக்கியர், இஸ்லாமியர், கிறித்துவர், தலித்துகள் போன்ற அப்பாவிச் சிறுப்பான்மை மக்களை தீயிலிட்டும், கத்தி, கம்புகளால் காயப் படுத்தியும், கோயில்களை இடித்தும், அவமானப் படுத்தியும், கொலை செய்தும் வருவது விடுதலைப் பாரதத்தில் அநீதியான, சட்ட விரோதமான கோரக் கொடுஞ் செயல்களே!
என்னைப் பார்த்து
ஊர் கூடிச் சொல்கிறது:
‘நான் பள்ளத்தில் இருக்கேனாம் ‘
அவர்கள் எல்லாரும் ஏறி நிற்கையில்
என் தட்டு மட்டும்
தாழ்ந்தி ருக்கிறது!
நான் மறைந்து விட்டேனாம்!
கட்டைகள் மிதக்கையில்,
கல்லொன்று ஆழத்தில் உறங்குகிறது!.
மலைதான் என்னை இடறிற்று,
கூழாங்கற்கள் அல்ல!
ஏறிக் கொண்டிருக்கையில்
ஏணியை எடுத்திருந்தால்
ஏற்றுக் கொண்டிருப்பேன்!
மேலேறி வந்து மூச்சிரைக்க நிற்பதற்குள், எட்டி உதைக்கின்ற நெஞ்சங்கள் ஏராளம் என்று பெருமூச்சு விடுகிறார்! ‘கீழே விழுந்தாலும் சருகல்ல நான் சாவதற்கு ‘ என்று கூறி வீறுகொண்டு எழுந்து தாக்கத் தயாராகிறார். ஆணவத் தேரில் பவனிவரும் ஆதிக்கவாதிகளைக் கவிதையில் சுட்டிக் காட்டுகிறார், வைகைச் செல்வி.
ஆணவத் தேரேறி
(என்னை)
ஒடுக்கப் பார்த்தாலும்,
கண்ணாடிக் குப்பிக்குள்
(வெடித்து விடும் பெண்மை எனும்)
புயல்காற்று ஒடுங்குமோ ?
என்று பெண்ணென்பவள் ஒரு புயல் என்று ஆணவச் செவியில் அறைகிறார், வைகைச் செல்வி.
‘நாணமும், அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம், நங்கையர்க்கு அல்ல ‘ என்று பாரதியார் அழுத்திச் சொல்வதை வைகைச் செல்வி முத்திரை அடித்து வெளியிடுகிறார்.
அச்சம் எனக்கில்லை!
தாழ்வும் எனக்கில்லை!
எதிராளி பலம் பார்த்து (நான்)
போருக்கு வரவில்லை!
இந்நெருப்பில் கைவைக்க
எவர் வந்தால் என்ன ? .
தொடர்ந்து விழுகின்ற
சம்மட்டி அடிகள்…
உலைக் களத்தில் புரள்கையில்
வலியின் கீற்றுகள்
உடலெங்கும் பரவும் !
சிறகுகளை விரித்து நான் எழும்பிப்
பறக்கையில்
எனக்கெதற்கு மரக்கால்கள் ?
என்று கனல் தெறிக்கும் வரிகளில் அதிகாரக் கோலோச்சி ஆணவத் தேரேறி ஒடுக்கப் பார்க்கும் ஆதிக்கவாசிகள் மீது ஆவேசமாய்க் கணைகளை வீசி எறிகிறார்.
ரயில்பெட்டி எரித்துச் சவப்பெட்டி செய்யலாமா ?
‘இமயம் முதல் குமரி வரை மண்ணும் மாறவில்லை! விண்ணும் மாறவில்லை! ஆனால் அவற்றிடையே வாழும் மனிதர் மாறிவிட்டார்! பல்வேறு மரபினர், சாதியினர், மொழியினர், மதத்தைச் சார்ந்தவர் பாரதத்தில் உள்ளார். மனம் விட்டுச் சிரித்தாலும், அவரது நெஞ்சிக்குள் பல்லாண்டு காலம் பகையுடன் புகையும் ஒரு நச்சுத்தீ உருவாகிக் கசிகிறது!
உணர்ச்சி முழக்கங்கள்
தீக்குச்சி போலாகி,
மனத்தை உரசுகையில்
(கனல் பற்றி எரிந்து விளைபவை)
ஆறாத ரணங்கள் அம்மா!
சமுதாய இருட்டிற்கு
வெளிச்சம் தேவைதான்!
அதற்காக
உன்னை நானும்,
என்னை நீயும்
எரிக்கும் முயற்சியில் இறங்குவதா ? .
ரயில்பெட்டி எரித்துச்
சவப்பெட்டி செய்யலாமா ?
என்று டெல்லி ரயில் நிலையத்தில் எரிந்த ரயில் பெட்டிகளில் கரிந்துபோன மனிதர் மீது, மனமுருகி மரணக் காவியம் படைக்கிறார்.
புத்தருக்கு அசோக மன்னர் எழுப்பிய கற்தூண்கள் போல எந்த மன்னனும் இராமனுக்கு பிறந்த மண்ணான அயோத்தியா புரியில் தூண்கள் கட்டவில்லை. அங்கே மசூதி யிருந்த தளத்தில் கோயிலிருந்ததாக ஒரு புனைகதை. இராமன் தன்னை அவதார நாயகனாக் கருதவில்லை என்று வால்மீகி ராமாயணம் மூலம் தெரிய வருகிறது. ஆனால் இந்து மதவாதிகள், அரசாங்க ஆதிக்கவாதிகள் இராமனைத் தேவனாக நம்பிக் கொண்டு, இந்த்துக்களையும் நம்ப வைத்துச் சட்டத்துக்கு விரோதமாய், புதியதோர் ஆலயம் கட்ட இஸ்லாமியரின் மசூதியை ஓரிவில் இடித்துத் தள்ளினார்கள். புனிதன் இராமன் பிறந்த புண்ணிய பூமியே முதலில் இந்து முஸ்லீம் கலவரத்துக்கு அடித்தளமாகி, பிறகு அது குஜராத்தில் கொந்தளிப்பாகி, டெல்லியில் ரயில்பெட்டி எரிப்பாகி இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தீயிட்டுக் கொளுத்தி தற்காலத்து முற்போக்கு மாந்தர், கற்காலத்தை நோக்கிப் பிற்போக்கில் சென்று, அரசியல் வாதிகளின் தூண்டுகோலில் மாட்டி நாட்டிலெங்கும் வினை விதைத்தார்கள்.
இனிய இந்தியனே!
பிறனை நேசித்துப்
பிறனைப் புரிந்து கொண்டால்
(உறுதியாய்) நமக்குள்
ஓர் வல்லரசு தோன்றாதா ?
இவ்வாறு வல்லரசு என்னும் வார்த்தையை இரட்டைப் பொருளில் விளக்குகிறார்.
‘உயிரின் ஒலியில் ‘ என்னும் காதல் கவிதை அந்திம வேளையில் உயிர் அணையப் போகும் மங்கை ஒருத்தியின் நேசத்தை கல்லும் உருகும்படி அன்பனுக்குக் கனிவாகச் சொல்கிறது. இங்கே ஒரு சிறுகதை உருவாகிறது. துன்ப முடிவை நோக்கிப் பயணம் செய்யும் அன்பின் அத்தமன நாடகம்!
உயிர் ஊசலாடுகிறது, அந்தி நேரத்தில் மங்கி அணைந்திடும் வெளிச்சம் போல். ஆயினும் என் நேசத்தை நீ யின்னும் அறியவில்லை என்பது என்னை உறுத்துகிறது! அணையப் போகும் விளக்கின் உயிர்த் துடிப்பு உன் செவியில் கேட்கிறாதா ? அன்பனே! எத்தனை முறைகள் மீண்டும், மீண்டும் சொல்லி யிருக்கிறேன், உன்னை நேசிக்கிறேன் என்று. மரணத்தின் வாசலில் நுழைந்தாலும் என் நேசம் வலியது. எமனது இரும்புக் கரங்கள் என்னை இழுத்துச் செல்வதற்குள், உன் விரல்களைப் பற்றி அவ்வார்த்தைகளை ஒருமுறைச் சொல்ல என் ஆன்மா துடிக்கிறது. ஆனால் சொற்கள் உதடுக்குள் உறைந்து போய் விட்டன! சொற்கள் குஞ்சுகள் போல் ஓட்டை உடைத்து வெளிவரத் துடிக்கின்றன. என் அன்புக்குரியவனே! இனி நேரமில்லையே அதற்கு ? உறுதி படைத்த நம்பிக்கை அது என்பதை ஐம்புலன்கள் உணருமா ? வெண்ணிறத்தில் பன்னிற வானவில் மறைந்துள்ளது ஏன் உனக்கு தெரியாமல் போயிற்று ?
இப்ப்போது உடலும், உணர்வும் மெளனச் சமாதியில், நிரந்தரமாய்ச் சங்கமம் அடையப் போகின்றன! மூழ்கும் படகின் மூச்சுப் நின்று பயணம் முடியப் போகிறது! உடலுக்கு நங்கூரம் பாய்ச்சி உயிருக்கு விடுதலை! அந்திப் பொழுதோ கண்மூடப் போகிறது! …தீபம் அணையும் சமயம்! .. கொஞ்ச நேரந்தான். பிறகோ ஓசையும், ஒளியுமில்லா உலகில் மூழ்கிப் போவேன். அதற்குள் அறைக்குள்ளே அசைந்தாடும் உன் நிழலை மட்டும் எனக்குக் காட்டுவாயா ? என்று அணையும் விளக்கு அதன் துணையிடம் துன்ப நாடகம் போடுகிறது!
பந்தக்கால் வேண்டாம்! சொந்தக்கால் போதுமடா!
‘என்ன விலை காதலே ‘ என்னும் கவிதையில் காதலர் இல்லறத் தம்பதிகளாய் ஆகும்போது ஏற்படும் தொல்லைகளை எடுத்துக் காட்டுகிறார். காதல் புரியும் ஆண், பெண் இருவர் திருமணம் புரிகையில் அவரது இருதரப்புக் குடும்பத்தாருடன் அடிக்கடி உறவாடி ஒட்டிக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் நேருகிறது. ஆனால் காதலிக்கும் ஆணும் பெண்ணும் கல்யாணம் செய்தபின் தனியாக ஓர் உல்லாசத் தீவில் வாழத் திட்ட மிடுகிறார்! ஆனால் உல்லாசத் தீவில் அன்னை, தந்தை, தமையன், தமக்கை இல்லாமல் தனியாக வாழ முடியுமா ? தற்காலக் குடும்பங்களில் முக்கியமாக தம்பதிகளின் வயோதிகப் பெற்றோர் பாரமாகிக் கண்காணிக்கப் படாமல் புறக்கணிக்கப் படுகிறார். சகோதர, சகோதரிகள் உறவாட முடியாதபடி விலக்கப் படுகிறார். தம்பதிகளின் வீட்டுப் பிரச்சனையே கைவச நிதிப் பற்றாக்குறைக்குப் பிறகு, வயோதிகப் பெற்றோரைப் பேணும் பொறுப்புதான்! பொறுப்பு யார் மீது விழுகிறது என்னும் தீராத போரே! பெண்ணின் பெற்றோர் அறவே வரவேற்கப் படுவதில்லை! ஆனால் ஆண்டுதோறும் வேண்டும் தீபாவளிச் சன்மானங்கள் பெண் வீட்டார் கொண்டு வந்தால் பேரானந்தம், பெருமதிப்பு, பெரு வரவேற்பு! தீபாவளி விளக்குகள் அணைந்த பிறகு மறுபடியும் அவர்மீது பெருவெறுப்பு, அருவருப்பு, கடுகடுப்பு! இவை யாவும் வீடுகளில் மீண்டும் மீண்டும் நிகழ்பவை.
பெண்ணின் பெற்றோருக்குக் கணவன் தரும் வெறுப்பு வெகுமதி போல், பலரது வீடுகளில் மனைவியும் கணவனின் பெற்றோரை வரவேற்பதில்லை. புற்று நோயுடன் மருத்துவம் பெற, ஊரிலிருந்து அழைத்து வந்த வயோதிகத் தாயைப் படியிலே நிறுத்தி ‘வீட்டுக்குள் அழைத்து வரக் கூடாது, மருத்துவ மனைக்குக் கொண்டு செல், ‘ என்று கணவனுக்கு கட்டளை யிட்ட ஒரு கருணையற்ற மாதை நான் அறிவேன்.
‘சென்ற நிமிடம் வரை
நீயும் நானும் காதலித்தது.
உண்மை!
(திருமணம் புரிய ஒப்புக் கொண்டோம்)
இப்போது நீ சொல்கிறாய்,
அண்ணன் ஒரு தண்டச் சோறு,
அவன் வேண்டாமாம்!
அணியணியாய்க் கழற்றி
(பொன் நகைகள்)
அத்தனையும் விற்று
என்னைப் படிக்க வைத்த
என்னருமை அம்மா வேண்டாமாம்!
எட்டு விரல்களைத்
தட்டச்சில் தாரை வார்த்து (உதவிய)
என் அக்காள் வேண்டாமாம்!
ஓய்வு பெற்ற பின்னும்
ஒன்னே கால் லட்சத்தை
அன்பளிப்பாய்த் தந்த
(என்னருமை)
அப்பாவும் வேண்டாமாம்!
‘அன்பனே! என்னைக் காதலித்த காலத்தில் அப்பாவை, அம்மாவைத் தப்பாமல் தரிசித்தாய்! அக்கா, தங்கையிடம் சிரிப்போடு பேசினாய், பழகினாய்! வெள்ளித் திரைக்கு அண்ணன்தான் உன் கூட்டாளி! திருமணம் என்றவுடன் அத்தனை பேர்களையும் அறுத்தெறியும் பாதகனே!
கேளடா அறிவு கெட்டவனே!
கல்யாணம் ஆகிவிட்டால்,
கல்லாகி விடுவேனா ?
கயவர்கள் உலகத்தில்
சுயநலமே வாழ்க்கை யெனில்
எனக்குப்
பந்தக்கால் தேவை யில்லை!
சொந்தக்கால் போதுமடா!
என்று காதலன் கன்னத்தில் பளாரென்று சொற்களால் வைகைச் செல்வி அறைவது நம் நெஞ்சில் இடிச் சத்தம் போல் எதிரொலிக்கிறது! தன்னை மட்டும் நேசித்து தன்னுடன் பிறந்தாரைத் தூசிக்கும் காதலன் உண்மையான காதலனா என்று ஐயுற்று அவனைப் புறக்கணிக்கிறார். திருமணம் புரியும் ஒருவன் தன்னை நேசிக்கும் ஒரு தனிப் பெண்ணை மணப்பதாகத் தெரிந்தாலும், மெய்யாக அவன் மணம் புரிவது ஒரு கூட்டுறவுப் பண்பில் வளர்ந்த குடும்பப் பெண்ணைத்தான். ஆக திருமணச் சந்திப்பு நிலையத்தில் சேரும் இரயில் தொடர்கள் இரண்டு. இருதரப்பு எஞ்சின்கள் ஒரே பாதையில் ஒதுங்கி ஓய்வெடுக்கும் போது மோதிக் கொள்ளாமல் இருப்பது அபூர்வம். சந்திக்கும் போது அடுத்தடுத்த பாதைகளில் இணையாக இயங்கி, மோதாமல் போதல் அறிவுடைமை.
வனம்பாடி, வானம்பாடி, வனராணி
வைகைச் செல்வியை ஆரம்பித்திலேயே ‘சூழ்வெளிக் காப்பாளர் ‘ என்று நான் சுட்டிக் காட்டினேன். தற்போது சென்னையில் உள்ள தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் ஓர் மேலதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். பணிபுரிந்து வரும் சூழ்வெளிக் கண்காணிப்புத் துறையின் துப்புரவு குறிக்கோள்களைப் பல கவிதைகளில் வைகைச் செல்வி எளிதாகத் தெளிவாக எடுத்துக் காட்டி யிருக்கிறார். தமிழகத்தின் சிறந்த கவிஞர்கள் 66 பேர் சூழ்வெளித் தூய்மைப்பாடு பற்றி எழுதிய 70 கவிதைகளை ‘நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே ‘ என்னும் தலைப்பில் தொகுத்து 2003 டிசம்பரில் வெளியிட்டிருக்கிறார். 2003 இல் தமிழ்நாடு பல்கலைக் கழகத்தில் பாட நூலாக எடுத்துக் கொள்ளப் பட்டது அந்நூலின் ஒப்பில்லாத் தகுதிக்கும், உயர்வுக்கும் சான்றாக நிற்கிறது. வானம்பாடியான வைகைச் செல்வி ஒரு வனம்பாடி, ஒரு வானகம்பாடி, ஒரு வனராணி!
‘திக்குத் தெரியாத காட்டில் ‘ சிக்கிக் கொண்டு, கடைசியில் மரத்தின் நிழலில் சுகங் கண்டு அதன் கீழ் களைப்பாறிப் பூரிப்படைகிறார்.
நிலையற்ற இன்பத்தில்
நெடுங்காலம் மூழ்கி விட்டேன்!
போதை தெளிந்த பின்னும்
புறப்பட மனமில்லை!
போதி மரத்தின் கீழ்
பொழுதெல்லாம் தூங்கியதால்
‘நான் ‘ மட்டும்
என்னில் விசுவரூபம் எடுத்தது!
நீதியும், நேர்மையும்
ஓங்கி அழைத்தாலும்,
மரத்தின் நிழலே
சுகமாய்ப் போயிற்று!
‘கத்தியின்றி, ரத்தமின்றி யுத்தமொன்று ஆரம்பம் ‘ என்னும் படைப்பில் ஒரு கவிதை நாடகத்தைக் காணலாம். தொழில் யுகத்தில் மக்கள் ஊழியத்துக்கு உதவ தொழிற்சாலைகள் ஏறக்குறைய ஆண்டு முழுவதும் ஓடுகின்றன. கழிவுத் துணுக்குகள் வாயுவாகவோ, திரவமாகவோ அல்லது திடவத் தூளாகவோ வெளித் தள்ளாத தொழிற்சாலைகள் உலகில் எங்கும் கிடையா! தொழில் நிர்வாகிகள் கழிவுத் துணுக்குகளை சூழ் வெளியைத் தொடுவதற்கு முன்பு வடிகட்டியோ, ரசயான முறையில் பிரித்தெடுத்தோ அவற்றைச் சுத்தீகரிக்க வேண்டும். அரசாங்கக் கட்டுப்பாடு ஆணையாளர் அவ்விதம் செய்யப் படுவத்துவதை அடிக்கடி உளவு செய்து, மீறித் தவறு செய்பவரைத் தண்டிக்க வேண்டும். அல்லாவிடில் அவற்றின் கழிவுப் பொருட்கள் புகையாகவும், மாசு திரவமாகவும், திடப் பொருளாகவும் வெளியேறிச் சூழ்வெளியின் நீர்வளம், நிலவளம், வாயுமண்டலம் மாசுபடுகின்றன. அதுவே அவர் கவிதையில் விளக்க வரும் புதுயுக தொழிற்துறை நச்சுக்கள் புரியும் யுத்தம்!
நான்கு திசைகளிலும்
புகை போக்கிகள்!
நச்சுக் காற்று நெளிந்து ஊடுறுவி
மனித நாற்றுகளை
மெளனமாய்த் தலைசாய்க்க
கத்தியின்றி…ரத்தமின்றி
யுத்த மொன்று ஆரம்பம்!
நாள்தோறும் பேருந்து,
வாகனங்கள், வண்டிகளின்
கரிய புகையால்
வெளியை நிரப்பும்!
ஓங்கியுயர்
மரங்களை வெட்டி விட்டார்.
மழையும்தான் பொய்க்காதோ
மண்ணுலகம் தன்னில் ?
ஆலைகள் வைத்தார், அருகில்தான் கல்விச்
சாலைகள் வைத்தார்!
ஆலைக் கழிவும், ரசாயன நீரும்
மாணவருக்கு
அங்கே இலவசமாய் அளிக்கப்படும்!
மனிதரால் மாசுபட்ட
வாயு மண்டலத்துக்கோர்
முகமிருந்தால்
அம்மைத் தழும்புகள்
நிறைந்திருக்கும்!
கத்தியின்றி…ரத்தமின்றி
யுத்த மொன்று ஆரம்பம்!
சத்தமின்றி வருவதால்
யாருக்கும் கவலை யில்லை!
ஊருக்கும் புரிய வில்லை!
சுற்றுப்புறம் என்பது
எங்கோ யில்லை!
என்னைச் சுற்றி உன்னைச் சுற்றி
நம்மைச் சுற்றித்தான்.
சுற்றுப்புறத் தூய்மையை முதலில்
கற்றுக்கொள்!
பிறகு கற்றுக்கொடு!
இல்லாவிடில்,
நம் கல்லறைகளை
நாமே கட்ட ஆரம்பிப்போம்!
வைகைச் செல்வி வனாந்திர மரங்களின் உயிர்த்தோழி! மரங்களை நேசிக்கும் வனராணி அவர். அவற்றைப் பின்வருமிரண்டு கவிதைகளில் காணலாம்.
‘மரங்களே!… ஓ மரங்களே! ‘ என்னும் கவிதையில் வனராணி தன் கனவுகளை நமக்குக் காண்பிக்கிறார்.
மரங்களை நேசிக்கிறேன்,
மனிதர்களைக் காட்டிலும் பிரியமாய்.
இனிய வசந்தத்தில்
இலைகள்
பகலில்.. பல்வேறு நிறத்தில்
மெல்லிய மஞ்சலில், ..
அரக்கு வண்ணத்தில்
கரும் பச்சையாய், இளம் பச்சையாய்
கண்சிமிட்டிச் சிரிக்கும்!
என்னை அருகே அழைக்க ..
தவம் செய்கின்றன.
அருகிருக்கையில்
தாழக்கிளை பரப்பி, (என்னைத்)
தொட்டுவிடத் துடிக்கும்!
தூரத்தி லிருந்தாலும்
கரமசைத்துக் கூப்பிடும்!
என்னைப் போல
நிமிர்ந்து நிற்கும் யூகலிப்டஸ்!
இப்படி எத்தனை எத்தனை மரங்கள்
என்னை நேசிக்கின்றன!
அதனால் சொல்கிறேன்,
மரங்களை வெட்டாதீர்!
வெட்டுகையில்
இதயத் துடுப்பு எனக்கு
மெல்ல, மெல்லக் குறையும்!
இறுதியாக ‘வரம் வேண்டும் ‘, என்னும் கற்பனைக் கவிதை அவரது அம்மிக் கவிதைத் தொகுப்பில் ஓர் உன்னதப் படைப்பு என்பது என் கருத்து. அவர் கிறித்துவ மதத்தில் நம்பிக்கை கொண்டவ ராயினும், அவர் தன்னை ஓர் இந்துவாகக் கருதிக் கொண்டு, இறைவனிடம் வரம் கேட்கிறார். வனராணி ஆயினும் வனாந்திரத்தில் பல்லாண்டுகள் முனிவர் போல் தவம் செய்யாது ஓர் வரம் கேட்கிறார்.
இறைவா! ஒரு
வரம் வேண்டும் எனக்கு.
மரமாய் மாற வரம் வேண்டும்!
அந்த மரத்தில்
ஆயிரம் கரங்கள் வரும்!
எதற்கு ? (கனிகள் பறிக்க)
ஆயிரம் ஆயிரம் பூப் பூக்கும்!
காக்கை, குருவி தேடி வரும்!
கவிதை சொல்லக் கூடு கட்டும்!
வெட்ட வெளியில் நின்றாலும்,
பட்ட மரமாய் ஆனாலும்,
பூங்கதவாய் உருவெடுப்பேன்!
வெட்ட வரும் மனிதனை
விரட்டிப் பிடித்து
உயரே தொங்க விடுவேன்!
ஏ மனிதா!
நீ ஊதித் தள்ளும் புகையால் நாற்றம்,
நீ கட்டிய ஆலைப் புகையால்
மூச்சு முட்டும்!
நீ ஓட்டும்
வாகனக் கரிப் புகையால்,
வாயு மண்டலம் மாசுபடும்!
நானோ
தென்றல் காற்றைத் தவழ விட்டுக்
கொண்டல் தொட்டு
மழை பெய்து,
சுற்றுச் சூழலைச் சீர் செய்வேன்!
இறைவன் படைத்த பூமியிது!
இதைத்
தூசுபடுத்த, மாசுபடுத்த
எவர்க்கு மிங்கே உரிமை யில்லை!
மரத்தை வளர்த்திடுவாய்,
பரம்பொருள் கட்டளை
இது வென்பேன்.
(மரத்தை)
வெட்டிப் போட எத்தனித்தால்,
கட்டிப் போடுவேன்
காலமெல்லாம்!
கடைசியில் ஒளவை மூதாட்டி அறிவுரை போல், ‘சுற்றுச் சூழல் சீர்கெட்டால், அற்றுப் போகும் மனித இனம்! ‘ என்று மனிதருக்குப் பறைசாற்றுகிறார்.
காடும் மலையும் இல்லை யென்றால்
வீடும் நாடும் இனி யேது ?
சுற்றுச் சூழல் சீர்கெட்டால்
அற்றுப் போகும் மனித இனம்!
‘காட்டு வெளியினிலே ‘ என்னும் கவிதையில் ஒரு துன்பியல் நாடகம் அரங்கேறுகிறது! காதலனை நம்பி மோசம் போன ஒரு கோதையின் சிறு கதையைக் கேளுங்கள்.
‘என்னை நீ அந்த அடர்ந்த காட்டுக்குள்ளே அழைத்துச் சென்றாய். மான் குட்டியைப் போல நானும் துள்ளி ஓடினேன். வனத்தின் மண் வாசனை முகர்ந்தேன். ஓவ்வோர் இலையாகத் தொட்டு, எல்லா மரங்களும் நம்மைச் சுற்றி மறைத்துக் கொண்ட போது, நான் உன்னைச் சுவாசித்தேன். நீ களிப்புடன் கவிதை பாடினாய் அப்போது! ‘மரங்கள் தமது கரங்களை நீட்டி, வானின் மீது எழுத ஓயாமல் போராடுகிறது! ஆனால் பூமியோ மரங்களுக்கு விடுதலை தருவதில்லை! ‘ என்று மொழிந்து ஓர் அழகிய கவிதையைப் படைத்தாய்.
உறவுக்குப் பிறகு வருவது பிரிவுதானே! அன்று சகுந்தலைக்கு அவ்விதம் நேர்ந்தது! நீ துஷ்யந்தன் பரம்பரையில் வந்தவன் தானே! பிரிந்து எங்கே போனாய் ? உன் மாளிகைப் பூங்காவுக்கு! அங்கே வசந்த காலம் காத்திருந்தது உனக்கு. ஆனால் நானோ அந்தக் காட்டு நிகழ்ச்சியை நினைத்த வண்ணம் தனியே கவலையைச் சுமந்து கொண்டு வீடு திரும்பினேன். இங்கே என்னுலகில் இலையுதிர் காலம். துக்கமுடன் தாழ்வாரத் தூணில் சாய்ந்திருக்கிறேன். என்மீது விழுந்த வேப்பமர இலையொன்று மனதைக் கலைத்தது! அது நான் கானகத்தில் மான்போல் துள்ளி விளையாடியதை மீண்டும் நினைவூட்டும். என்னை மறந்து போன கவிஞனே! அன்று காட்டிற்குள் என்னை அழைத்துச் செல்லாதிருந்தால், என் மனசும் இன்று கன்னியாக அல்லாவா வாழ்ந்து கொண்டிருக்கும் ? ‘ என்று கண்களில் வெந்நீர்த் துளிகளைச் சிந்துகிறாள் பாவை! மரத்தில் இலையுதிர் காலத்து இலைகளைப் போல், மங்கையின் கண்ணீர் துளிகள் பொலபொலவென உதிர்ந்தன வென்று உவமை காட்டுகிறார்.
என் கூடு எதுவெனத் தெரிய வில்லை!
‘கல்லும், வில்லும் புல்லாங் குழலும் ‘என்னும் கவிதையில், கூடு தேடும் இல்லறப் பறவை ஒன்று கூடு தெரியாமல் தடுமாறித் தவிக்கும் தனிமை நிலையை உருக்கமாகக் கூறுகிறார்.
எல்லாப் பறவைகளும்
கூடுகளுக்குப் போய்விட்டன!
அந்தி மயங்கும் வேளையில்
தனிப் பறவையாய் அலைந்தும்
என் கூடு எதுவென
எனக்குத் தெரிய வில்லை!
பிறிதோர் கூட்டில்
யார் என்னைச் சேர்ப்பார் ?
அத்துவானக் காட்டில்
வேடரைத் தவிர யாருமறியேன்!
உன் கையில்
வில்லையும், கல்லையும்
எதிர்பார்த்தேன்!
(ஆனால் நீ)
புல்லாங் குழலுடன்
வந்தாய்!
கூடு விட்டுக் கூடு செல்ல
காலெதற்கு ? சிறகெதற்கு ?
கலைந்த கூடுகள்
காணாமல் போய்விட்டால்,
பிறிதோர் கூட்டில்
யார் என்னைச் சேர்ப்பார் ?
நானுனக்குப் பல்லக்குத் தூக்கியல்லவா ?
‘பல்லக்குத் தூக்கி ‘ என்னும் கவிதைப் படைப்பில், திருமணமாகித் தன்மனை விட்டுப் புதுமனையில் அடிமையாய்ப் புகுந்த ஒரு பெண் படும்பாடு அழகாக எடுத்துக் காட்டப் படுகிறது!
நான் உன் நாட்டுக்குத்
திரும்பி வந்த அகதி!
உன் மூச்சுக்கள் நிறைந்த
காற்றைச் சுவாசிக்கிறேன்.
ஒரு வாய்ச் சோற்றுக்கும்,
ஒரு குவளை நீருக்கும்
கையேந்தி நிற்கையில்
கட்டிப் பிடித்தென்னை
(நீ) முத்த மிடுகையிலே,
நெஞ்சக்குழி
கண்ணீரால் நிரம்பியது!
உன் சன்னதியில்
நின்றாலும்,
தூபக் காட்டும்
(தீபப் பூசாரி) அல்ல நான்!
நாயகன் பொற்பாதம் கழுவிட
வாசற் படியோரம்
(என்னேரமும்)
காத்திருக்கும் அடிமை நான்!
என் அரசே!
கம்பீரமாக நீ உலா வருகையில்,
உன்னோ டிருப்பதற்கு
கட்டாயத் தகுதி.
(என்ன எனக்கு ?)
பட்டத்து ராணியா ?
ஆமென்று சொல்லாதே!
(பாமரனே!)
பல்லக்குத் தூக்கி யன்றோ ?
எந்நாளும் நானுனக்கு ?
அடுத்துச் ‘சுயநலக் ‘ கூட்டத்தைப் பற்றிச் சொல்லும் போது, வைகைச் செல்வி:
பக்கத்தில் வந்தால்
பல்லிளிக்கும் பச்சோந்தி…!
விரட்டிப் பயனில்லை!
ஒன்று பலவாய்ப் பெருகி
கூட்டம் கூட்டமாய் எதிர்க்கும்!
போராடிப் போராடி
எதிர்க்கப் பலமின்றிச்
சடலம் சரியும்!
காக்கையும் காத்திருக்கும்,
நிரந்தரமாய்ப் பிணந்தின்ன!

பெண்சிசுக் கொலையைப் பற்றி, சுமை ‘ என்னும் கவிதையில் வைகைச் செல்வி பனிரெண்டு வரிகளில் எழுதுகிறார்: ‘பாரமாக, யாரும் பாவமெனப் பாராத, எவரும் விரும்பாத ஓர் அழுக்குக் குப்பையாக, ஒரு மூலையில் கிடக்கிறது! கப்பலின் சுமை மிதமிஞ்சிப் போனாலும், கடலில் அதை எறிந்து விடாதே! அதன் பிணைப்புக் கயிற்றை அறுத்து விடாதே, ‘ என்று சிசுவை உண்டாக்கிய ஆண், பெண் இருபாலரையும் வேண்டிக் கொள்கிறார்.
கேட்பாரற்ற தொரு
அழுக்கு மூட்டையாக,
வேண்டாத குப்பையாகத்தான்
ஒரு மூலையில் கிடக்கிறேன்!
கப்பலிந் சுமை
மிதமிஞ்சிப் போனாலும்
என்னை.. நடுக் கடலில்
எறிந்து விடாதே! …
பிணைப்புக் கயிறை
அறுத்து விடாதே!
‘கருவில் பெண்ணை அழிப்போர்க்குக்
காட்டை அழித்தல் பெரிதாமோ ? ‘
என்றும் ‘மெல்லச் சாகுமோ மலைக் காடுகளும் ‘ என்னும் கவிதையில் பெண்சிசு அழிப்பை மேலும் கண்டிக்கிறார்.
பாரதியாரின் பிறந்த நாளைக் கொண்டாடும், ‘பாரதியின் கனவுகளே ‘ என்னும் ஒரு கவிதையில் பணக்கார வர்க்கத்தினரைப் பற்றிக் குறிப்பிடுகிறார்: பதவி ஆசை பெருகிப் பணத்தைக் கொட்டி பேராசனத்தைப் பிடித்து ஆட்சி செய்யும் ஆதிக்கவாதிகள் மக்களின் உரிமையைச் சுரண்டி, உழைப்பை உறிஞ்சி, ஊதியத்தைக் களவாடிப் பணப் பெருச்சாலியாகி வருகிறார்! அவர்களைப் பற்றி பின்வருமாறு கூறுகிறார்.
வெள்ளையனுக்கு நாம் அடிமை யில்லை என்று சொன்னாய்! ஆமாம் விடுதலை பெற்ற பிறகு, ஆதிக்கம் செலுத்தும் போது அரசியல்வாதி வெள்ளையனைப் பின்பற்றி அவனுக்குச் சமமாகி விட்டனர்! ஒரு புறத்தில் வெள்ளையன் முன்னேறி நிலவில் தடம்வைத்து ஆராச்சிக்காக அங்கே குழி தோண்டுகிறான்! ஆனால் நம் ஆட்சியாளர் கண்ணீர் விட்டு வளர்த்த அருமைச் சுதந்திர மரத்தை வெட்டிப் பூமியில் குழி தோண்டுகிறார்கள், வேரிலும் ஏதாவது மரக் கனிகள் அகப்படுமா என்ற பேராசையில்!
ஏசு பெருமான் பிறந்த நாளைக் கொண்டாடும் தினத்தை வர்ணிக்கும் கிறிஸ்துமஸ் கவிதை ஒன்று:
மனிதன் படைக்கப் பட்டதோ
தேவ சாயலில், அவன்
உருமாற்றம் ஆனதோ
ஹிட்லராய்,
முசோலினியாய்!
இன்றவன்
கடவுள் பாதி
மிருகம் பாதி
கலந்து செய்த கலவை!
மனிதன் ஆளுவது மிருக நாடாயினும், அவன் ஆளவந்த தேசம் ஓர் அன்பு நாடுதான்!
கடவுளும், மனிதனும்
ஒன்றிணைந்த அற்புதம்,
என்பதை நினை வூட்டவே
இன்று [கிறிஸ்மஸ் தினத்தில்]
மறுபடி பிறக்கிறது,
பெத்லகேம் குழந்தை.
என்று மெல்லோசையில் ஏசுவெனும் தெய்வச்சிசு பிறப்பை இனிமையாகக் கூறுகிறார்.
அம்மி நூலில் நாற்பது கவிதைகளின் தலைப்பும் அவற்றின் பக்கமும் உள்ள முகப்பு அட்டவணை ஏன் தவிர்க்கப் பட்டது என்று தெரிய வில்லை. ‘அம்மி ‘ என்னும் தலைப்பை விட கவிதை நூலுக்கு, மரத்துக்கு மதிப்பளிக்கும் ‘வரம் வேண்டும் ‘ என்னும் தலைப்பு பொருத்தமானது என்பது கட்டுரையாளர் கருத்து. அவரது சூழ்வெளிக் கண்காணிப்புப் பணியையும், சிந்தனையில் ஊறிய வேட்கையும், காவியப் கலைப் படைப்புத் திறனையும் அந்த தலைப்பு ஒன்றாக இணைக்கிறது. மண்ணில் மரம் வேண்டும் என்று கடவுளிடம் வரம் வேண்டும் வனராணி வைகைச் செல்வி.
இறுதியாகத் தமிழ்க் கவியரசி வைகைச் செல்விக்கு எனது வேண்டுகோள்! ‘நீங்கள் நட்டு நீரூற்றி வளர்த்த ‘கவிதைகள் நாற்பது ‘ ஆலமரங்களாய்ப் பெருகி விழுதுகள் விட்டுக் ‘கவிதைகள் நானூறு ‘ என்னும் சோலை வனங்களாய் விரிந்து, இல்லறத் தூசுகளையும், சூழ்வெளி மாசுகளையும், மக்களுக்கு எடுத்துக் காட்டட்டும்! நாற்பது கவிதைகளில் அவரது இன்ப, துன்ப, ஏமாற்றங்கள், இலட்சியங்கள், மனத் தாக்கல்கள் மின்மினி போல் மின்னி மின்னிப் பயணம் செய்து வரலாற்று மைல் கற்களாய் கண்ணில் படுகின்றன.
தமிழன்னை பெற்ற மாதர்குல மாணிக்கங்களில் ஒருவரான வைகைச் செல்வி, தமிழ் கூறும் நல்லுகத்தின் ‘வையகச் செல்வியாக’ வளர்ந்தோங்க என் வாழ்த்துக்கள்.
++++++++++++++++++
வைகைச் செல்வியின் ‘அம்மி ‘ காவ்யா வெளியீடு,
[முதல் பதிப்பு: டிசம்பர் 2002], விலை ரூ.40
14. முதல் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம்,
கோடம்பாக்கம், சென்னை: 600 024

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts