சங்க இலக்கியங்களில் கையாளப்பட்டுள்ள மரபு பாலியல்

This entry is part [part not set] of 34 in the series 20090724_Issue

கே.பாலமுருகன்


“சங்க இலக்கியங்கள் கற்பனையும் கனவும் பொய்யும் புனைவும் அற்ற தமிழ்ச் சமுதாயத்தை உள்ளது உள்ளபடியே காட்டும் படிமங்கள் – கண்ணாடிகள் என்று மனோன்மணியம் சுந்தரபிள்ளையும் வரலாற்றுப் பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியும் கலாநிதி கைலாசபதியும் கூறுகிறார்கள். “– (அகநாணுரு பாகம் 1 பதிப்புரையில்)

நவீன இலக்கியங்கள் உள்ளதை உள்ளபடி சமுகத்தின் விளிம்பு சிதறல்களை சிதைவுகளைப் படிமங்களாகவும் படைப்புகளாகவும் காட்டினால், மரபைச் சார்ந்தவர்கள் பதறுகிறார்கள், ஆனால் தன் ஒழுக்கத்தைப் பெரிதுப்படுத்தி காட்ட சங்க இலக்கியங்களைக் கையில் எடுக்கிறார்கள், ஆனால் சங்க இலக்கியங்களோ அவர்களின் சிந்தைனக்கே முரண்படுகிறது.

“சங்க இலக்கியங்கள் காட்டும் நாகரிகம் சமகாலத்தில் நிலையிருந்த கிரேக்க, ரோம நாகரிங்களுடன் ஒப்பவைத்துக் கருதத்தக்கது. அசோகன் பாறைக் கல்வெட்டு (கி.மு 3ஆன் நூற்றாண்டு) சேர, சோழ பாண்டியர் அரசுகளைக் குறிப்பிடுகின்றது. கி.மு 22இல் ரோம் அரசன் அகஸ்டஸ் அரசவைக்குப் பாண்டிய தூதன் வந்திருந்ததைப் பற்றி ஸ்ட்ரோபோ என்பார் குறிப்பிடுகின்றார். பினினி (கி.பி 77) பெரிபுளூஸ் (கி.பி 54) அலெக்ஸாண்டிரியா சார்ந்த புவிநூ வல்லுநர் டாலமி (கி.பி 50) ஆகியோர் தமிழ் நாட்டுடன் துணி, முத்து, நறுமணப் பொருள்கள் வாணிபம் நடைபெற்றது பற்றிப் பேசுகின்றனர். கி.பி 1000ஆம் ஆண்டு ஆண்டதாகக் கருதப்படும் சாலமன் மன்னன், தமிழ்நாட்டிலிருந்து பொன்னும் வெள்ளியும் யானைத் தந்தமும் மனிதக் குரங்குகளும் மயில் தொகையும் இறக்குமதி செய்ததாக, ஈப்ரு மொழி விவிலிய சான்று தருவதாகக் கருதுகின்றனர்.” – சங்க இலக்கிய அகநாணுறு விளக்கவுரை)

சங்க இலக்கிய வரலாற்றில், அவர்தம் மக்களின் வாழ்வோடு ஒப்பிட்டு பார்க்கும்வகையிலேயே கிரேக்க, ரோம நாகரிகங்கள் அப்பொழுதே ஊடுருவி நுழைந்துள்ளது. பண்டம் மாற்றல் என்கிற வியாபார விழுமியங்கள் எல்லைகளைக் கடந்து விரவி, நாகரிக கலப்படங்களை அப்பொழுதே தோற்றுவித்துள்ளது. மேலை தத்துவங்களையும் நாகரிகங்களையும் கி.பி 1000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் நிலப்பரப்பில் வேற்று நாகரிகங்கள் வந்து சேர்ந்திருப்பதை, அதைத் தலைவன் என்கிற சங்க கால கதாநாயகன் பிரதிபலிக்கிறான். திருமணம் என்கிற முறைகளை வெறுத்து தலைவியோடு களவொழுக்கத்தில் இலயிக்க மட்டும் கசிந்து உணர்கிறான், பொருளீட்ட பல தேசங்கள் நாடோடியைப் போல திரிகிறான், பரத்தையர்களோடு தங்கி களவொழுக்கம் கொள்கிறான்.

இனி தொடர்ந்து சங்க அகநாணுறு பாடல்களில் எங்கெல்லாம் களவொழுக்கம் பற்றியும் பாலியல் சொல்லாடல்களையும் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதைச் சீர்தூக்கி பார்க்கலாம். சங்கமோ நவீனமோ எல்லாம் ஆதாரமென கையில் இருக்க இங்கு எதையும் மறைத்தல் ஆகாது.

நெய்தல்

நகைநனி உடைத்தால் – தோழி! – தகைமிக,
கோதை ஆயமொடு குவவுமணல் ஏறி,
வீததை கானல் வண்டல் அயர,
கதழ்பரித் திண்தேர் கடைஇ வந்து,
தண்கயத்து அமன்ற ஒண்பூங் குவளை
அரும்பு அலைத்து இயற்றிய கரும்பூஆர் கண்ணி
பின்னுப்புறம் தாழக் கொன்னே சூட்டி,
நல்வரல் இளமுலை நோக்கி, நெடிது நினைந்து,
நில்லாது பெயர்ந்தனன், ஒருவன்; அதற்கே
புலவுநாறு இருங்கழி துழைஇ, பல் உடன்
புள் இறை கொண்ட முள்ளுடை நெடுந்தோட்டுத்
தாழை மணந்து ஞாழலோடு கெழீஇ;
படைப்பை நின்ற முடத்தாட் புன்னைப்
பொன்நேர் நுண்தாது நோக்கி,
என்னும் நோக்கும், இவ் அனுங்கல் ஊரே
– கருவூர்க் கண்ணம்பாளனார்

கூற்று விளக்கம்: தலைவியைத் தன்னோடு கூட்டுவிக்கும்படித் தலைவன் தோழியை வேண்டினான்; அது கேட்ட தோழி தலைவியை அணுகி அவளைத் தலைவனுக்கு உடன்படுமாறு கூறியது: தலைவன் சிறைப்புறத்தானாக, தலைவி தான் பிரிவற்றாது வருந்தி இருத்தலையும், தன் மேனி பசலை பாய்ந்திருத்தலையும், ஊர்மக்கள் அலர் தூற்றைலையும் தலைவன் கேட்குமாறு தோழிக்குச் சொன்னது.

நவீன மொழியில் இந்தச் சங்கப் பாடலின் கூற்று விளக்கத்தை மொழிப்பெயர்த்தால்: தலைவியோட உடம்புக்கு ஆசைப்பட்ட தலைவன் (கணவன் அல்ல) அவளை அவனோடு படுக்கும்படி தோழியைத் தூது அனுப்புகிறான். தோழியும் அவனுக்காக தூது போய் அவனுடன் ஒத்துழைக்கும்படி கேட்கிறாள். தலைவியோ இருத்தலியலின் துயரத்தையும் தூற்றப்படுதலின் வலியையும் சொல்கிறாள்.

//ஐயையோ! என்ன ஒரு ஒழுக்கக்கேடு. என்ன ஒரு ஒழுக்ககேடான பிரச்சாரம் இது? திருமணம் செய்யாத பெண்ணோடு களவொழுக்கம் செய்யத் துடிக்கும் தலைவனுக்குத் தூது போகும் இன்னொரு பெண்//

உரை விளக்கம்: தோழி எம் அழகு மிதம் பொருட்டு மாலையணிந்த தோழியர் கூட்டத்தோடு குவிந்த மணல்மேட்டில் ஏறி, மலர் செறிந்த சோலையில் விளையாடினேன். அப்பொழுது ஒரு தலைவன் விரைந்தோடும் குதிரை பூட்டிய தேரினைச் செலுத்தி எம்பால் வந்தான். வந்தவன், குளிர்ந்த குளத்தே பூத்த நிறைந்த பூக்களைக் கொண்ட குவளையின் அரும்புகளை மலர்வித்துக் கட்டிய மாலையினைப் பின்னலைக் கொண்ட என் முதுகில் சூட்டினான்; பின்னர், நன்கு வளர்ந்து எழுகின்ற என் இளைய முலையை நோக்கினான்; ஏதோ நீள நினைத்தவாறு நில்லாது இடம் பெயர்ந்து போய்விட்டான்.

// பாலியல் சொல்லான இளைய முலையை சங்கப் பாடலில் பயன்படுத்தியதற்காக கருவூர்க் கண்ணம்பாளனாரரைத் தண்டிப்பதா அல்லது இந்தப் பாடலையும் வகுப்பில் சொல்லித்தரும் பேராசியர்களைத் தண்டிப்பதா? மானமிக்க தமிழனின் கோபங்கள் ஏன் இப்பொழுது எழவில்லை? அவளின் இளைய முலையை அவன் நோக்கியதைத் தலைவி வெளிப்படையாகச் சொல்லலாம் ஆனால் நான் பார்த்த போஸ்ட்டரில் யோனி காட்டியபடி அமர்ந்திருந்த பெண்ணைப் பற்றி சொன்னால் நான் ஆபாச எழுத்தாளனா?//

எல்லாவற்றுக்கும் சங்க இலக்கியங்களிலே பதில் உண்டு. சங்கத் தமிழ் நவீன தமிழ், இதன் உள்ளடக்கத்தையும் வடிவங்களையும் உணர முடியாதவன் நான் சொன்னப்படி பாலியல் மொழியையே மேய்ந்து கொண்டிருப்பான், படைப்பாளன் அதையெல்லாம் கடந்து போய்விட்டிருப்பான்.

“சங்க இலக்கியங்கள் கற்பனையும் கனவும் பொய்யும் புனைவும் அற்ற தமிழ்ச் சமுதாயத்தை உள்ளது உள்ளபடியே காட்டும் படிமங்கள் – கண்ணாடிகள் என்று மனோன்மணியம் சுந்தரபிள்ளையும் வரலாற்றுப் பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியும் கலாநிதி கைலாசபதியும் கூறுகிறார்கள். “– (அகநாணுரு பாகம் 1 பதிப்புரையில்)

கே.பாலமுருகன்
மலேசியா
bala_barathi@hotmail.com

Series Navigation

author

கே.பாலமுருகன்

கே.பாலமுருகன்

Similar Posts