கிழட்டு ஈர நதி, வறண்ட மணல் மற்றும் எழுந்திருக்கும் கான்கிரிட் காடுகள் – 1

This entry is part [part not set] of 28 in the series 20081218_Issue

கே. ஆர். மணி



1.

அந்தத்தாத்தா எங்களுக்கு தூரத்து சொந்தம். சங்கீத விற்பன்னர். பாட்டி கூனல்
விழுந்த முதுகு, வாழாவெட்டி பெண், விளங்காத பேரன், ஒழுகும் வீடு, சம்சாரி
கொண்டு கொடுக்கும் நெல்தான் வயிற்றுக்கும் மற்றவற்றிகும். ஏழ்மை தவிர
வேறென்றுமில்லையென்றபோதிலும் அவர் வாயில் எப்போதும் சங்கீதமழை, வயசு
காரணமாய் இலேசாய் தெரிக்கும் எச்சிலோடு – சங்கீத மழை பொழி, பொழியும். என்
அப்பா அவரை சித்தப்பா என்று பெருமதிப்பு கொடுப்பார். எனக்கென்னவோ அந்த
சின்னவயசில் அந்ததாத்தா மீது மதிப்பெதுவுமில்லை.

“ச, ரி க..ம…. சொல்லுடா..” தாத்தா இம்சிப்பார்.
“ச்ச்ச..ர்ரிரி..க்ககா” மிகப்பெரிய மல்லுக்கட்டு.
“தா.. வயிலு தர்ப்பைபுல்ல வச்சித்தான் தேய்க்கணும்போல .. சித்தப்பா..” அப்பா சத்தமிடுவார்.
“அப்படி சொல்லாதடே.. குழந்தைடா..பெரியவன் நன்னா பாடறானே”
என் தலை தடவுவார்.

அப்பாவிற்கு ஆறுதலாயிருக்கும். எனக்கு கோபம் கோபமாய் வரும். ஆறு வயசில் சங்கீதம்
வரவில்லையென யாரு அழுதார்கள். அவர் தலை தடவியபிறகு அந்த கோபம் எப்போதும்
எங்கு போகுமென தெரியாது. பாட்டிகள் மற்றும் தாத்தாக்கள் கைகளில் ஏதோ மயக்கப்
பசையிருக்கவேண்டும், மயிர்க்கால்கள் தாண்டி மூளை கடந்து அவர்களால் இதயம் தொட
முடிகிறது.

அப்பாவிடம் மணிக்கணக்காய் பேசுவார். அப்பாவின் பவ்யமும், மரியாதையும் ஆச்சரியப்படுத்தும்.
அப்படியென்ன இந்த “மேலாத்து தாத்தாவிடமிருக்கும் ?” சுரண்டும் கேள்விகளுக்கு விடை
கிடைப்பதேயில்லை.

” என்ன சித்தப்பா.. எப்படியிருக்கு.. நெல்லெல்லாம் ஒழுங்கா வருதா..”
“எங்கடா வரது.. பொன் வைக்கிறயிடத்துல பூ மாதிரி ஏதோ வச்சிண்டிருக்கான்..
ஏதோ படியளந்திண்டிருக்கான்.. இப்பல்லாம் அவன் தான் இந்தாத்துக்கு பகவான்..”

மெளனம்..ஓழிந்துபோன நிலவுடமைச்சட்டத்தின் கடைசிதலைமுறையின் மெளனம்.
தாத்தாவிற்கு தன்வீடு போலவே தலைமுறையும் ஓழுகி தேய்ந்துகொண்டேயிருக்கிறதே
என்பதை நினைக்க நினைக்க நீண்ட மெளனம். அதைத்தான் சரளி வரிசைகொண்டு
நிரப்பிக்கொண்டிருப்பாரோ. பிரவாகமெடுத்து ஓடிய நதி, வறண்டு போய் மெளனமாய்
காலத்தை கடத்திக்கொண்டிருந்ததோ..

“தா.. இந்தப்பய சாகாமயிருந்தா.. ” தாத்தாவிற்கு கண்ணீர் மல்கும். அவரது பையனுக்கு
அப்பா வயதுதான். சாகாமலிருந்திருந்தால் நன்றாகத்தானிருக்கும். தோளுக்கு மேலே வளர்ந்த
பையனை தீக்கு வாரியிறைக்கும் புத்திரசோகம் போல கொடுமையானது எதுவுமில்லை என்கிறது
வேதம்.

அப்பாவிற்கு இலேசாய் கண்கலங்கும். அப்பா கொஞ்ச நேரத்திற்கு பிறகு கேட்பார்.
“சித்தப்பா. அந்த ஸீரி சக்ர ராஜ பாட்டுபாடேன்..”
ஒழுகும் வாயை துடைத்துக்கொண்டு மேலாத்துதாத்தா பாட ஆரம்பித்தார். அது தாத்தாவை
திசை திருப்பத்தானிருக்கவேண்டும்.
“..ஸ்ரீ லலிதாம்பிகையே.. அம்மா..” பாட்டு நெய்விட்டு, பருப்புபோட்ட ரச சாதம்போல குழையும்.

பாட்டு முடிந்து வெளிப்படையாய் அழுதிருப்பார் தாத்தா. யாருக்கும் தெரியாமல் அழுதிருப்பார்
அப்பா. புத்திரசோகத்தை ஒன்றும் செய்யமுடியாவிட்டாலும் கொஞ்சநேரமாவது அந்தயிடத்தை
சித்தாப்பாவிற்கு நிரப்ப முயற்சிக்கிற செயலாக அது அமைந்திருக்கலாம். இருவர்களின் கணமும்
குறைந்து நிகழ்காலத்திற்கு வருவார்கள்.

கண் தெரியாத கூனல் முதுகோடு தவழந்துவருகிற பாட்டி தலை தடவி என்னை அணைப்பாள்.
.( ச்சீ. ஒரே நாத்தம்.ஓவ்வே..) அப்பா முகத்திலும், முதுகிலும் எதையோ தொலைத்ததை தேடுவதைப்போல தேடுவாள்.
தனது தொலைந்த பையனின் முகவரி தேடுகிறாளா.. அந்தவயதில் ஒழுகும் தாத்தாவையும், நாத்தப்பாட்டியையும்
எனக்கு பிடிக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். எனது இமேஜைப்பற்றி கவலைப்பட்டுக்கொண்டு புரியவில்லை
அதனால் பிடிக்கவில்லை என்று வேணாலும் திருத்திக்கொள்ளலாம்.

ஏதாவது பண்ணவா..” அப்பா.
” ஒன்னும் வேணாண்டா. கோந்த.. சந்தோசமா வந்து என்கிட்ட ஆசீர்வாதம் வாங்கிட்டு
போனா போதும்..”

ராமயணக்கதைகள் முடிந்து வாழ்க்கையை நாமே ஆரம்பிக்கும்போதுதான் நமது
குடும்பக்கதைகள் கண்ணிற்கு படுகின்றன. கொஞ்சம் கொஞ்சமாய் புகட்டப்பட்ட தாத்தாவின்
ஆளுமைச்சித்திரம் இப்போதுதான் புரிந்துகொள்ளமுடிகிறது.

அந்தக்கால விழுமியங்கள், நிலப்புரப்புத்துவ சமூகத்தின் கடைசிகாலத்தின் பிரஜையான
அந்தத்தாத்தாவின் விழுமியங்கள் மெல்ல மெல்ல புரிய ஆரம்பிக்கும்போது எப்படியிருந்த
குடும்பம், எப்படியிருந்த மனிதர்கள், எப்படியிருந்த சமூகம் – மிகப்பெரிய ஆச்சரியத்தையும்,
பயத்தையும் ஓரு சேர கொடுக்கிறது.

மாறிய சமூகம், கைவிட்டுப்போன விவசாயம், தொடர முடியாத தொழில், மற்றவன்
போடும் விளைநெல்லை நம்பியே வாழ்க்கை ஜூவனம், வாழ்க்கை கொடுக்கிற சில இழப்புகள்,
சிலுவையாய் போன ஜாதி நிர்பந்தங்கள், விந்திலே கலந்த சங்கீத ஆசை, கண்ணெதிரே விழுந்து
போகிற தன் கனவுகள், கொடுத்த சொல் தவறாமை, உயிரினும் ஓம்பப்படும் ஒழுக்கம், மயிர் நிப்பின் வாழா
கவரிமான் – இதெல்லாம் புரியாத, புரிந்து கொள்ள முயற்சிக்காத அடுத்த தலைமுறை, அந்த தலைமுறையின் புரிதல்
வேறுபாடுகள், அதைவிட முற்றிலும் வேறுபட்ட வாழ்க்கை முறைகொண்ட பேரன்
தலைமுறைகள் – இத்தனை நிகழ்வுகளும் ஒரு இரண்டு, மூன்று தலைமுறைக்குள்.

இது ஏதோ ஒரு சில குடும்பங்களுக்கு மட்டுமான நிகழ்வல்ல. எல்லா குடும்பங்களுக்கும் கிட்டத்தட்ட
இத்தகைய நிகழ்வுகள். மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்று சொல்வது வேணாலும் இனிப்பாயிருக்கலாம்.
உண்மையில் அது அவ்வளவு இலகுவானதில்லையோ.. சிறப்பில்லையோ.. வேறு வழியில்லையோ..

மேலாத்து தாத்தாவும், அப்பாவையும் புத்தகத்தில் பார்த்ததுபோல அட.. ஆனால் என்ன திணை, நிலம், இடம், பொருள்,
தளம், நிறம், கொஞ்சம் வேறுவேறாய்.. ஆனால் அதே நிறத்து கவலை மற்றும் கண்ணீராய் – பாவண்ணனின் தலைமை
கதாபாத்திரங்கள். நாயக்கர் தாத்தா(ஒரு மனிதரும் சில வருசங்களும்), பாய்மரக்கப்பலின் கவுண்டர் தாத்தா,
வாழ்க்கை விசாரணையின் சேரி காளியப்பனும், கோவில்தாத்தாவும், சிதறல்களின் முருகேசனும் அவன் அப்பாவும் மற்றும்

அவர்கள் வறண்ட நதியாய் வாழ்கிறார்கள். இவர்கள் ஓயாது மானிட குலத்தின் நம்பிக்கைகளை மீட்டெடுக்கிறார்கள்.
யார் கண்டது, ஒழுகு வாய் தாத்தாவையும், எங்கப்பாவையும் நான் மறுவாசிப்பு செய்யலாம்,
ஒரு கான்கிரிட்(கணிப்பொறி) காடாய்.

சுருக்கமாக, ஓவ்வொரு தலைமுறையும் தனது பழைய தலைமுறையின் வேர்களை உணர்ந்து கொண்டு அதிலிருந்து
பிரியும் நிர்பந்தத்தை, வளரும் கட்டாயத்தை பதிவு செய்யும் தரிசனத்தை தான் பாவண்ணனின் நாவல் படைப்புலகம் காட்டுகிறது.

**
2.

2.1 பாய்மரக்கப்பல் – அம்புப்படுக்கை
(பிதாமகர், பிரபிதாமகர், பிரபிதாமகர்)

“இந்த இடத்தில மூணு தர்ப்பை, மரிச்சாப்பல ஒண்ணு. எதிதாப்பில ஒண்ணு. நடு செண்டரல ஓன்ணு. வைங்கோ..
வைச்சாச்சா…மமன்னு சொல்லிங்கங்கோ”

அது ஏதோ பாடை கட்டப்பட்ட தோற்றம் கொடுத்தது. மூன்று பிண்டங்கள் ஒரு வரிசை. எதிர்த்த வரிசையில் மூன்று. நடுவில் ஓன்று.
சொல்லுங்கோ. தேவபாசை தொடங்கிற்று. அது இரேழு உலகம் கடந்து மூதாதையர்களை சென்றடைய வேண்டும். அப்பா, தாத்தா,
கொள்ளுத்தாத்தா.. அதுபோல அவர்களின் பத்தினி வகையறாக்கள்.

“தீர்த்தத்தை மரிச்சாப்பால மொத்தமா விட்டிருங்கோ” பிண்டம் நசநசத்து, கலங்கி, உடைந்து , யாரது வெளியே வருவது.
பிதாமகர், பிதிர் பிதாமகர், பிதிர் பிரபிதாமகர். அவர்களுக்கு பின்னாடி பிதாமகி, பிதிர்பிதாமகி, பிதிர்பிரபாதமகி.
நான் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

“அவ்வளவுதான் எல்லாம் பேஷா பண்ணிட்டேள்..சந்தோசம்..”

பிண்டம் உடைந்து வெளியே வந்த பிதாமகி வகையறாக்கள் எனக்குள்ளே உட்கார்ந்து கொண்டார்கள். நான் கான்கீரிட் சைபர்
காடுகளுக்குள் என் மெர்சீடிஸை அழுத்தினேன். அது ஏற்கனவே உள்ளீடப்பட்ட கூகிள் வரைபட உதவியோடு முன்நகர்ந்தது.
காக்கைக்கூட்டத்தோடு கனமற்று வீடு திரும்பினேன்.

**
2.2

என்னை புதைத்தார்கள்.

உள்ளே போனபோது என்
உருவச்சிலையை
செதுக்கிக்கொண்டிருந்தார் – அப்பா.

மேலும் உள்ளே மூழ்கியபோது
மற்றொரு உருவச்சிலை.
அதுவும் முந்தையதுபோலவே
பாதியில் நின்றுபோனது -அப்பாவினுடையது.
செதுக்கிக்கொண்டிருந்தது நான்
பார்த்திராத தாத்தாவாகத்தானிருக்கும்.

இன்னும் கொஞ்சம் மூழ்கிப்பார்க்க
மற்றொரு உருவச்சிலை. யாருடையது ?
முகம்வரைக்கும் மட்டுமே –
செதுக்கிய கொள்ளுத்தாத்தா
எனக்காக காத்திருந்தார்.
என் முகம் அதிலிருந்தது.
மீதியை முடிக்க என் கையில்
உளி கொடுத்து என்பையனாய் உருமாறிப்போனார்.

எழுதியது : யாரோ ஒரு புதுக்கவிஞன்.

****
2.3

‘மூன்று தலைமுறையில் எல்லாம் மாறும்’ – என்கிறது ஒரு மார்வாடி காகவத் ( பழமொழி). அதை அப்படியே நம்பவும்
செய்கிறார்கள் மார்வாடிகள். செய்யும் தொழில், குடும்ப விழுமியங்கள், சார்புநிலை ஆளுமைகள், இடம், தத்துவம்,
தெய்வ வழிபாடு – இவையெல்லாம் கூட மெல்லிய மாறுதல்களுக்கு உட்படும் என்று நம்புகிறார்கள் மார்வாடிகள்.
அதற்காக தங்களை மனதளவில் தயார் செய்தும் வைத்துக்கொள்கிறார்கள். இது அறிவியல் சம்பந்தப்பட்ட
கண்டுபிடிப்பாயிருக்க முடியாது. யுக யுகமாய் மனிதனின் பட்டறிவால் விழைந்த உணர்வுப்பூர்வமான அறிதலாக
மட்டுமேயிருக்கமுடியும்.

இந்தியாவை பொறுத்தவரையில் ஆங்கிலேயருக்காக அவர்களது படிப்பு முறையிலிருந்து உருவாக்கப்பட்ட நடுத்தர
வர்க்கம் தோன்ற ஆரம்பித்தபிறகுதான், அது நிலவுடமை சமூகத்திலிருந்து தொழில் உடமை சமூகத்திற்கு தங்களை
மாற்றிக்கொள்கிறது. விவசாய வேலையைவிட மற்ற அறிவுசார் தொழில்கள் லாபகரமானதாகவும், உயர்வாகவும்,
சித்தரிக்கப்பட்டு வேறுவித வர்ணக்கலவைகள் தோன்ற ஆரம்பிக்கின்றன. ஏராளமான சமூக மாறுதல்களும், விழுமிய
மாறுதல்களையும் முரண்பாடுகளையும் இந்திய சமூகம் இந்தப்புள்ளியில்தான் சந்திக்கிறது.

ஒரு 80-90 வருடங்களுக்கு முன்புஅக்கிரகாரத்து நிலங்கள் விவசாய பிடிப்பின்மையால் வளர்ந்துவிட்ட தங்களின்
பையன்களோடு சேர்ந்து வாழும் ஆசையோடும் மற்றவர் சாதிக்காரர்களுக்கு விற்கப்படுதல் ஒரு சாதாரண நிகழ்வாயிருந்தது .
விவசாயம் – இந்தியாவின் முதுகெலும்பு என்று சொல்லப்படுகிற தொழில் – மூன்று தலைமுறையில் எவ்வாறெல்லாம்
கண்ணோட்டம் பெறுகின்றது என்கிறது சரட்டை கொண்டு நெய்த புடவையாகத்தான் பாய்மரக்கப்பல் என்கிற நாவல்
தோற்றமளிக்கிறது. நாமே நம் தலைமுறை நெய்த புடவைதானே.

தான் உயிரினும் பெரிய விவசாயம் தன் கண்முன்னே தனது தலைமுறையால் தொடரமுடியாத நிலையில் எப்படியாயினும்
அது தொடரப்படவேண்டும் என்கிற வெறியோடு, தனது பிள்ளைதான் அதை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்காமல்,
சாதி கடந்து அந்த உயிரினும் மேலான விவசாயத்தை யார் செய்தாலும் அவனே தன் மகன், எப்போதுமே தனது
வாழ்க்கை விவசாயத்தோடு தான் என்று எழுந்து நிற்கிற முத்துசாமி கவுண்டர் கிழட்டு நதி.
(ஜெயகாந்தனின் பிரம்மபோதசம் நினைவுக்கு வரலாம்)

முன்னால் இந்த நதி குட்டையாயிருந்து, பெருக்கெடுத்து வலிமை பெற்று நதியாக எத்தனை வலிகளை, கசடுகளை சுமந்து
இவ்வளவு தூரம் வந்திருக்கிறது. கடலோடு கலக்கும் முன்னே வற்றிப்போய் தன் கண்ணெதிரே வறண்ட மணலாய் தான்
மாறுவதை பார்ப்பதுதான் எத்தனை கொடூரம். ‘சரி ஏதோ கஸ்டகாலம்.. ஈர மணலிருக்கில்ல.. ஊத்து வந்திரும். நதியில்லைனாலும்
குட்டையாவாவது எழுந்து ஊர்ந்திரலாம்’ என்று நினைத்து பார்த்தால், அந்த மணல்கள் மறைந்து முளைக்கின்றன கான்கீரிட்
காடுகள். திக்கற்று, விக்கித்து நிற்கும் மூத்த தலைமுறை. எல்லா தலைமுறை பிதாமகர்களுக்கும் எப்பவும் அம்புப்படுக்கைகள் தான் போலும்.

பக்கவாதம் வந்து படுக்கும் தன் மகன், விவசாயம் கெட்ட வார்த்தையாய் மாறி, அதை தொட விரும்பாது 80களின் அரசியல்,
சாராய கலாச்சாரத்தில் உடல், பொருள், ஆவி தொலைக்கும் தன் பேரன். கான்கீரிட் காடு. அதில் ஈரமில்லை. நதிக்கும்
அதற்கும் சம்பந்தேமேயில்லை. அது தான் நதியின் தொடர்ச்சி, சுரண்டல் என்றெல்லாம் நினைப்பதுமில்லை.

இவையெல்லாம் வெறும் மூன்று தலைமுறைக்குள்.

*’ம்.. ஆளுக்கொரு கன்ன எடுத்து நடுங்க .. பிச்சாண்டி நீயும் நடுடா.. இனிமே இதான் புள்ள.. பேரன்.. பேத்தி
எல்லாம்..” பிச்சாண்டி – கிழட்டு நதியின் ஒடுங்கிய கால்வாய் நம்பிக்கை. புதுத்தண்ணீரில் நனைந்த இளங்கன்றை பார்த்து
நெஞ்சு குளிர்ந்து, முகம் நெகிழ்ந்த, குழைந்த குழந்தைத்தனமான, நிலம் மீது பற்று கொண்ட கிழட்டு நதி, அதன் வறளாத
நம்பிக்கை ஊற்று. இழப்பதற்காகவே பிறந்த பிறவி அவர் என்றாலும் எந்த இழப்பிலும் கண் கலங்கியதில்லை. தேங்கியதுமில்லை.
பாறைகளோடு மோதி துடிப்போடும் விலகி நீண்டு பாய்கிற நதி அவர்.

அவரை ஒரு கேள்வி உலுக்கிப்போடுகிறது. தனது பேரன் போன்ற ஒரு சிறுவனிடமிருந்து அந்த நதியில் அந்த கேள்விக்கல் விழுகிறது.
‘என்ன தாத்தா, மூணு மாசமோ, ஆறு மாசமோ பயிர் வளர்த்தாதா பலன் பாக்க முடியும். ஒரு காணில பயிர் வச்சி அறுத்தா
எவ்ளோ கெடைக்கும் ? நாப்பது மூட்டை கெடைக்குமா ? மூட்டைக்கு ஐநூறு ரூபா போட்டாலும் என்னா வரும் ? இருபதாயிரம்,
அவ்ளோதான். அதுவும் ஆறுமாசம் கழிச்சி, செலவு போவ பத்தாயிரம் மிஞ்சுமா கைல ? நா பத்து சண்டை போட்டா பத்தாயிரம் கையில..”

நதி விக்கித்துபோகிறது. மாறும் காலத்து நுணுக்கத்தை வாங்கத்தெரியாதவனாகிவிட்டோமா என்று சந்தேக களைகள் பரவ ஆரம்பிக்கின்றன.
அவருக்கே பதில்கள் புரிவதில்லை.

* மண்ண வளச்சி வளச்சி ஊடு கட்டிக்கிட்டே போனா சட்டியிலயா நெல் வளத்து சாப்டுவானுங்க ?
* காலம் ஏன் மாறிவிட்டது, பெண் மீது மண் மீது ஆசையில்லை.. கூரான பாறையாக மனிதர்கள் ஏன் மாறுகிறார்கள்?

அவருக்கும் மார்க்ஸிம், அத்வதைமும், தொழிற் சூத்திரங்களும் எல்லாமும் நிலந்தான். வெள்ளந்தியாய் கேள்வி கேட்கிறார்.
தம் நிலத்துக்காகவே தம்வாழ் நாள்களை ஓப்படைத்துக்கொண்ட விவசாயிகள் தலைமுறை அது. பயிரிடுவதைத்தவிர வேறு எந்த ஞானமும்
இல்லாதவர்கள். தன் செல்வத்தைத்தானே அறியாத அஞ்ஞானிகள். பயிரிடுவதில் இருக்கும் எளிய பிரச்சனைகளில் மட்டுமே உழன்று
உழன்று மீண்டு விடுபவர்கள். அவரது பேரன் தலைமுறை பெரிய சவால்களுக்கு ஆசைப்படும் தலைமுறை. வேறு திசை நோக்கி
வளரும் மரங்கள். அவைகளை நோக்கி கேள்வி கேட்டுக்கொண்டேயிருக்கிறார்.

*”பணம் பணம்னு அலஞ்சா சோத்துக்கு என்னா பண்ணுவ ? ”
“அதான் கடையில இருக்குதே ?”
“வெளைக்கிறவன் இல்லன்னா, விக்கிறவன் எங்கேர்ந்துடா கொண்டாருவான் ?”
“அது கவுர்மெண்ட் கவலா தாத்தா.”

அரசாங்கம் கவலைபடவில்லை. நமது நாட்டுக்கு தேவையான கோதுமையைக்கூட அடுத்தநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் துர்பாக்கியம்.

அடுத்த தலைமுறை வேறுவகையான மரங்களாகயிருந்தாலும் பரவாயில்லை. நிலத்தோடியிருக்கிறதே என்று சந்தோசப்பட்டிருப்பார். இவைகள்
கான்கீரிட் காடுகளா அல்லவா வளர்ந்திருக்கின்றன. தனது நதிமூலம், ரிஸிமூலம் அறியாத, அறிந்து கொள்ள, அறிந்தாலும் தொடர விழையாத
புதிய தலைமுறை. இவர்கள் புதிய சவால், புதிய வாழ்க்கை என்று நொண்டிச்சாக்குகள் சொல்லித் தங்களை தாங்களே ஏமாற்றிக்கொள்கிறார்களோ
என்று கவலைப்படுகிறது அந்த கிழட்டு நதி.

முதல் தலைமுறை – கிழட்டு நதி :
நதிகள் இரவு பகல் பார்ப்பதில்லை. வெயில் மழையை பொருட்படுத்துவதில்லை. தன் போக்கில் வந்து கலந்துவிடும் எந்த களங்கத்துக்கும்
அது கலங்குவதுமில்லை. களங்கங்களே தன் ஆகிருதியை மறைத்துப்போலி தோற்றம் காட்டினாலும் அவற்றின் அடியில் அமைதியாய்
ஓடிக்கொண்டிருக்கும் அவை. அவற்றின் எழுச்சியான தோற்றமோ, பொங்குதலோ, எந்த வசீகரத்தையும் புலப்படுத்டுவதற்காக அல்ல. அதன்
போக்கிலேயே நேரும் காட்சிகள் அவை. அதன் பாய்ச்சலும் ஓட்டமும் எதையும் யார்க்கும் நிருபீத்துகாட்டுகிற துடிப்பில் உருவாகுபவை அல்ல.
நதிகளின் சுபாவமே அதுதான்.

இரண்டாம் தலைமுறை – வறண்டமணல் :
பக்கவாதம் வந்து தனது தந்தையின் கனவுகளை முன்னெடுத்து செல்ல இயலாமை கொண்ட இரண்டாம் தலைமுறை. இயற்கையோ,
இயலாமையோ ஏதோவென்று முன் தலைமுறை போலன்றி கனவுகளை இழக்கவும், தொலைக்கவும், வீரியம் அழியவும் காரணமாகிறது.
‘அப்பா ஒரு மகாநதி, நான் ஒரு தேங்கிப்போன குளம் அல்லது குட்டை’

மூன்றாம் தலைமுறை : கான்கீரிட் காடு
சாரயக்கடையில் வெள்ளைச்சட்டை போட்டு உட்கார்ந்து காசு பார்ப்பதைவிட வயலில் இறங்கி எதற்கு வேலை பார்க்கவேண்டும்
பெரியன கேட்போம். ஏதோ வழியில் பெரியதாய் செய்யவேண்டும் என்கிற பழயன ஓதுக்கி எழுந்திருக்கும் கான்கிரிட் காடுகள்:
மரபிலிருந்து தங்களை பிய்த்துக்கொண்டு ஒடும் இலைகளாகவும், தழைகளாகவும் புதிய தலைமுறைகள்.

பழைய நினைவும், புது நிகழ்வும் மாறி மாறி ஊடாடும் கதையொழுக்கு இது புதிதல்லதென்றாலும், பாந்தமாய் பொருந்தியிருக்கிறது.

திவசத்தின் மூன்று தலைமுறைகள் :(பிதாமகி, பிதிர்பிதாமகி, பிதிர்பிரபாதமகி – பிதாமகி, பிதிர்பிதாமகி, பிதிர்பிரபாதிமாகி)
ஓவ்வொரு தலைமுறையும் தனது பழைய தலைமுறையின் வேர்களை உணர்ந்து கொண்டு அதிலிருந்து பிரியும் நிர்பந்தத்தை,
வளரும் கட்டாயத்தை பதிவு செய்யும் தரிசனத்தை தான் பாவண்ணனின் நாவல் படைப்புலகம் காட்டுகிறது.

கிழட்டு நதி, வறண்ட மணல், எழுந்திருக்கும் கான்கிரிட் காடுகள்.

**
2.4

வீட்டுக்குள் வந்தேன். என் மொபைலிருந்து குதித்து வெளிவந்தார்கள்,
பிதாமகர்,
பிரபிதாமகர்
பிரபிதாமகர் மற்றும் அவர்களின் சகபத்தினிகள்.

என் சைபர் காட்டிலும் ஈரமாய் நெல்வாடையடிக்க ஆரம்பித்தது.

***

Series Navigation

author

கே ஆர் மணி

கே ஆர் மணி

Similar Posts