எழுத்துக்கலை பற்றி இவர்கள் – 17 வி.ஆர்.எம்.செட்டியார்.

This entry is part [part not set] of 36 in the series 20080327_Issue

வே.சபாநாயகம்


எழுத்துக்கலை பற்றி இவர்கள் – 17
—————————–
– வே.சபாநாயகம்.

வி.ஆர்.எம்.செட்டியார்.
===================

1. சிறுகதையை யாரும் நல்ல முறையில் எழுதிவிடலாம் என்று நினைப்பது தவறு; வாழ்க்கையில் நிறைந்த அனுபவமுடையவர்கள், மொழியின் நுட்பங்களை நன்கு உணர்ந்தவர்கள், சம்பாஷணையின் அவசியத்தையும் வேகத்தையும் உணர்ந்தவர்கள், சமூக முரண்பாடுகளை அறிந்தவர்கள், நிறைந்த கதைநூற்பயிற்சியுடையவர்கள் இவர்கள்தான் நல்ல முறையில் சிறுகதைகளைச் சிருஷ்டிக்க முடியும்.

2. வாழ்க்கையைக் கண்டு அதைப் போட்டோ படம் பிடிப்பது சிறுகதை அல்ல;வாழ்க்கையை, இயற்கையின்
நிறைந்த நுட்பத்துடன், இயற்கையின் நிறைந்த வர்ண வளர்ச்சியுடன், பார்வை யின் கூர்மையால் சித்திரம் வரைய வேண்டும். ஒரு சிறு நிகழ்ச்சியும் சிறந்த சித்திரமாக சிறுகதை மாளிகையில் அமைந்து விடுகிறது. நிகழ்ச்சியின் நுட்பநிறைவே சொற்சித்திரமாக,பொற்சித்திரமாக, பேசும் சித்திரமாக வளர்கிறது.

3. சிறுகதையை எப்படி எழுதுவது என்று தயங்குவதில் யாது பயன்? வாழ்க்கையை நன்றாய்க் கவனிக்க
வேண்டும். மனித இயல்பு எப்படி நிமிஷத்துக்கு நிமிஷம் மின்சார வேகத்துடன் புரட்சியடைகிறது என்பதைக்
கவனிக்க வேண்டும்; மனித குணமும் விதியின் குணமும் எப்படிப் போரிடுகின்றன என்பதையும் நன்கு ஆராயவேண்டும்; உலகத்தின் சூழ்ச்சிகள் எப்படி உலகத்தையே யுத்த அரங்கமாக்குகின்றன என்பதையும் கவனிக்க வேண்டும்; எழுதும்
நடைக்கும் பேசும் நடைக்கும் உள்ள வித்தியாசங்களை நுட்பமாக அறிய வேண்டும்; கதையில் வரும்
பாத்திரங்கள் எப்படி உயிர்ப் பாத்திரங்களாக, மெய்யுருவங்களாக அமைய வேண்டு மென்பதையும் ஆராய
வேண்டும்.இவைகளே நல்ல சிறுகதையின் லட்சணங்களாகும்.

4. சிறுகதை எழுதுபவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் நடந்த சிறு நிகழ்ச்சிகளைச் சற்று
ஞாபகப்படுத்திப் பார்த்தால் அதிலிருந்து குறைந்தது இருபது சிறுகதைகளை எழுதிவிடலாம். நல்ல ஞாபகத்துடன், நிறைந்த நுட்பத்துடன் ஞாபக டைரியைப் புரட்ட வேண்டும். பல நண்பர்களுடைய சுயசரிதையினின்றும், நியூஸ்பேப்பரில் கண்ட நிகழ்ச்சிகளிலிருந்தும், கடைத்தெருவிலும், ரயில்வே ஸ்டேஷனிலும், துறைமுகத்திலும், டிராமாக் கொட்டகைகளினின்றும், குடும்பங்களில் நிகழும் குறிப்புகளிலிருந்தும் மிகமிக அருமையான சுவைமிகுந்த சிறுகதைகள் எழுப்பலாம். ஒரு சிறுகுழந்தை அம்புலிக்கு அழுவது முதல், வறுமையால் வாடித்துடிக்கும் பிச்சைக்காரன் ரயில்வே தண்டவாளத்தில் விழுந்து மடிவதுவரை எதுவும் சிறுகதைச் சரக்குதான்; எம்.ஏ படித்துவிட்டு வேலைக்கு அலைந்து கதறுவது முதல் தன் சர்டிபிகேட்டை நெருப்பில் போடுவதுவரை எதுவும் சிறுகதையின் சீற்றம்தான். எல்லாம் எழுதும் சொல்வன்மையிலே சிறுகதைச் சித்திரம் இன்பமாய் வளர வேண்டும்.

5. கதையின் நடை விறுவிறுப்புடன் பாய வேண்டும். சிறுசொற்கள் காவிய வேகத்துடன் மனநிலையைச் சித்தரிக்க வேண்டும். இயற்கையின் சௌந்திரியத்தையும் மொழியின் இதயத்தில் எழுப்ப வேண்டும். சொற்கள் கதிர்களாகவும், வர்ணங்களாகம்,அழகு கூட்டங்களாகவும் மின்ன வேண்டும். இதய ஒலியும், இதய ஒளியும், உள் இயற்கையும், வெளி இயற்கையும் மொழியின் மர்மத்தில் பிரதிபலிக்க வேண்டும்.

(V.R.M Chettiar B.A ஆயிரத்துத் தொளாயிரத்து முப்பதுகளில் பிரபலமாய் இருந்த அறிஞர்;
ஆங்கிலத்திலும் தமிழிலும் நிறைய எழுதியவர்; சிறந்த விமர்சகர்; ‘My Shelly’, ‘Oscar Wilde’s de profundis – An Appreciation’,’Lyric festoons’, ‘Tagore and
Arabindo’, ‘Lucid Moments’, ‘Gems from Montaigne’ ஆகிய நூல்களை எழுதியவர். திருச்சிக்காரர். நிறைய தமிழ் நூல்களும் எழுதி தானே வெளியிட்டவர்.)

(இன்னும் வரும்)

Series Navigation

author

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்

Similar Posts