எழுத்துக்கலை பற்றி இவர்கள் …….16 தொ.மு.சி.ரகுநாதன்

This entry is part [part not set] of 41 in the series 20080320_Issue

வே.சபாநாயகம்


1. உள்ளத்தின் நேர்மையோடு, தன்னை இழந்து , கதாபாத்திரமாக மாறி எழுதும் ஆசிரியனின் பாத்திர சிருஷ்டிகள் சரித்திரப் பிரசித்தி பெற்ற பாத்திரங்களை விட, உண்மையாக உயிர் படைத்து உலவும் நபர்களாகத் தெரிவார்கள்.

2. வாழ்க்கையின் உன்னதம் அல்லது வீழ்ச்சிகளைப் பற்றியே எழுதவேண்டும் என்பதில்லை. சாதாரண மன நெகிழ்ச்சிகளையுமே மனோதர்ம நூலில் கோர்த்து அழகிய படைப்பாக்கி விடலாம்.

3. கதைக்கு வேண்டியது – உண்மைக்கு, எதார்த்த நிலைக்குப் புறம்போகாத கதை அம்சம். அதாவது நடைமுறை விஷயங்களைப்பற்றி எழுதுவது நல்லது.

4. உருவ அமைப்பு சிறுகதைக்கு மிகவும் முக்கியமானது. இலக்கியம் என்று வந்து விட்டால் அதற்கு ஒரு வரம்பு கிழித்துக் கொள்வது நல்லது. எந்தக் கதைக்கும் ஒரு ஆரம்பம், இடையிலே சம்பவங்கள் அல்லது மனோதர்மத்தினால் ஏற்பட்ட பின்னல், ஆரோகண அவரோகண கதிகள், முடிவு முதலியவற்றை ஆசிரியன் இஷ்டம்போல் கையாண்டு ஒரு பூர்ண உருவம் கொடுக்க வெண்டும்.

5. இலக்கியம் என்பது உள்ளடக்க அம்சத்தில் சமூகத்துக்குத் தேவையான, நன்மை பயக்கக்கூடிய நல்ல பல அம்சங்களையே பிரதிபலிக்க வேண்டும். துவராடை புனைந்தவர்கள் எல்லாம் துறவிகளாவதில்லை. அது போல அழகிய கலாரூபம், உருவ அமைதி அமைந்து விட்டால் மட்டும் ஒரு சிருஷ்டி இலக்யமாகி விடுவதில்லை. மக்கள் சமுதாயத்தை மறந்து எழுதுகிறவனை மக்களும் மறந்து விடுவார்கள்.

6. எல்லா இலக்கியங்களும் வாசகர்கள் மனதில் ஒரு கருத்தையோ, பல கருத்துக் களையோ பதிய வைக்கவே எழுதப்படுகின்றன. அந்த வகையில் எல்லா இலக்கியங்களும் பிரச்சார இலக்கியம்தான். அந்தக் கருத்துக்கள் கலையழகோடு கூடிய உருவ அமைதியோடு தெரிவிக்கப்பட வேண்டியது அவசியம்தான் என்றாலும் அந்தக் கருத்து சமூகத்துக்குப் பயனளிக்கும் விதத்தில் இருக்க வேண்டியதே அவசியமானது. அழகான உருவ அமைதியும் ஆரோக்கியமற்ற உள்ளடக்கமும் ஒரு இலக்கியப் படைப்பில் இடம் பெற்றிருக்கும் என்றால் அது குஷ்டரோகிக்குப் பட்டும் பீதாம்பரங்களும் போர்த்திக் கொலு அமர்த்திய கதையாகத்தான் இருக்கும்.

7. ஆசிரியன் தான் சொல்ல வந்த கருத்தைப் பச்சையாக பிறந்தமேனியாக வெளியிட்டாலும் அது இலக்கியமாகாது; அல்லது தனது கருத்தை வலியுறுத்து வதற்காக செருப்புக்குத்தக்க காலைத்தறிக்கும் கதை போல், யதார்த்த உண்மைகளைத் திரித்தோ, மறைத்தோ, மறுத்தோ எழுதினாலும் அந்நூல் இலக்கியமாகாது.

8. ஒரு இலக்கிய ஆசிரியனுடைய கருத்து எந்த அளவுக்கு இலைமறை காய்மறையாக இணைந்து நிற்கிறதோ அந்த அளவுக்குத்தான் அதன் இலக்கியத் தன்மையில் மேம்படுகிறது என்பது ஒரு உண்மை; அவ்வாறு இலைமறை காய்மறையாக இணைந்து பிணைந்து நிற்கும் அக்கருத்து வலிந்து புகுத்திவிட்டது போன்று அமையாமல், அந்த நூலில் பிரதிபலிக்கப்படும் சம்பவங்கள், பாத்திரங்கள் முதலியவற்றிலிருந்தும் யதார்த்தத்துக்கு முரணற்ற வகையில் உருவாகி உரம்பெற வேண்டும் என்பது மற்றொரு உண்மை.

(இன்னும் வரும்)


E mail ID : < v.sabanayagam@gmail.com >

Website: < http://www.ninaivu.blogspot.com >

Series Navigation

author

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்

Similar Posts