‘எழுத்துக்கலை பற்றி இவர்கள்………….13 புதுமைப் பித்தன்

This entry is part [part not set] of 41 in the series 20080221_Issue

வே.சபாநாயகம்



1. இலக்கியத்தின் ஜீவநாடி உணர்ச்சியும் சிருஷ்டி சக்தியும். இந்த இரண்டும் இல்லாவிட்டால் அது வெறும் குப்பை.

2. எழுத்துக்குக் கைப்பழக்கம் மிகவும் அவசியம். முடுக்கிவிட்ட யந்திரம் மாதிரி தானே ஓரிடத்தில் வந்து நிற்கும்.

3. ஒரு தனிச் சம்பவம் அல்லது உணர்ச்சி அல்லது குணவிஸ்தாரம் அல்லது வர்ணனை எடுத்தாளப்படும் லிரிக் என்ற கவிதைப் பகுதி போல் சிறுகதை. சிறுகதையின் ரூபம் எழுதுபவனின் மனோதர்மத்தைப் பொறுத்தது.

4. சிறுகதைப் பின்னலில் ஆரம்பம், மத்திய சம்பவம், அதன் வளர்ச்சி அல்லது வீழ்ச்சி என்ற மூன்று பகுதிகள் உண்டு. இம்மூன்றும் படிப்படியாக வளர்ந்து கொண்டே போகும். சமீபத்தில் எழுதப்பட்ட அமெரிக்கச் சிறுகதைகளில் பழைய சம்பிரதாயமான ஆரம்பம், முடிவு என்ற இரண்டு பகுதிகளும் கிடையவே கிடையாது. கதை திடீரென்று மத்திய சம்பவத்தின் உச்சஸ்தானத்தில் ஆரம்பிக்கிறது. அதிலேயே முடிவடைகிறது. இன்னும் வேறு விதமான கதைகளும் உண்டு. அவற்றில் முடிவு என்பதே கிடையாது. அதாவது, கதையை வாசிப்பது நமது சிந்தனையின் சலனத்தை ஊக்குவிப்பதற்கு ஒரு தூண்டுகோல். கதை முடியும் போது அதைப் பற்றிய சிந்தனை முடிவடைந்து விடாது. இப்படிப் பட்ட கதைகள் முடிந்த பிறகுதான் ஆரம்பமாகிறது என்று சொன்னால் விசித்திரமாகத் தோன்றும். ஆனால் அதுதான் உண்மை. கடவுள் வாழ்க்கையின் கடைசிப் பக்கத்தை எழுதி விடவில்லை. அவரால் எழுதவும் சாத்யப் படாத காரியம்……கதைகளுக்குச் சம்பவம் அவசியமா? இப்படிப்பட்ட விகற்பங்கள் இருக்கலாமா? என்று பலர் கேட்கிறார்கள். கதைகள் அவரவருடைய சுவையையும் ரசனையையும்தான் பொறுத்தது. அவரவருடைய அனுபவத்திற்கும், ரசனைக்கும் ஏற்றபடிதான் கதைகளைப் படிக்க முடியும்.

5. பலர் இலக்கியத்தில் இன்னதுதான் சொல்ல வேண்டும், இன்னது சொல்லக்கூடாது என்று ஒரு தத்துவம் இருப்பதாகவும், அதை ஆதரித்துப் பேசுவதாகவும் மனப்பால் குடித்துக் கொண்டிருக்கலாம். உண்மை அதுவல்ல. சுமார் இருநூறு வருஷங்களாக ஒருவித சீலைப்பேன் வாழ்வு நடத்தி விட்டோம். சில விஷயங்களை நேர்நோக்கிப் பார்க்கவும் கூசுகிறோம். அதனால்தான் இப்படிச் சக்கரவட்டமாகச் சுற்றிப் பேசுகிறோம். குரூரமே அவதாரமான ராவணனையும், ரத்தக் களரியையும், மனக் குரூரங்களையும், விகற்பங்களையும் உண்டாக்க இடமிருக்குமேயானால் ஏழை விபச்சாரியின் ஜீவனோபாயத்தை வர்ணிப்பதாலா சமூகத்தின் தெம்பு இற்றுப்போகப் போகிறது? இற்றுப் போனது எப்படிப் பாதுகாத்தாலும் நிற்கப் போகிறதா? மேலும், இலக்கியமென்பது மன அவசத்தின் எழுச்சிதானே?

6. நாலு திசையிலும் ஸ்டோர் குமாஸ்தா ராமன், சினிமா நடிகை சீதம்மாள், பேரம் பேசும் பிரம்மநாயகம் இத்தியாதி நபர்களை நாள் தவறாமல் பார்த்துக் கொண்டிருந்து விட்டு இவர்களது வழ்க்கைக்கு இடமளிக்காமல் காதல், கத்தரிக்காய் பண்ணிக் கொண்டிருப்பது போன்ற அனுபவத்துக்கு நேர் முரணான விவகாரம் வேறு ஒன்றும் இல்லை. நடைமுறை விவகாரங்களைப் பற்றி எழுதுவதில் கௌரவக் குறைச்சல் எதுவும் இல்லை.

7. பயன் கருதாது தன்மயமாகி லயித்து ஒட்டிப் புளுகுவதுதான் கதை.

8. சிறுகதை வாழ்க்கையின் சிறிய சாளரம்.வாழ்வுக்குப் பொருள் கொடுப்பதுதான் கலை. சிறுகதை வாழ்வின் பல சூட்சுமங்களையும் எழுத்தில் நிர்மாணித்துக் காண்பிக்கிறது.

(இன்னும் வரும்)
E mail ID : < v.sabanaya...@gmail.com >

Website: < http://www.ninaivu.blogspot.com >

Series Navigation

author

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்

Similar Posts