எழுத்துக்கலைபற்றி இவர்கள்………(9) – இந்திராபார்த்தசாரதி.

This entry is part [part not set] of 40 in the series 20080124_Issue

வே.சபாநாயகம்



1. ஒரு நல்ல சிறுகதையை எழுதுவது எப்படி என்பதற்கு ‘யூரிடைன்யனாவ்’ என்ற ரஷ்ய எழுத்தாளர் ‘கோடுகள் போடாத நீண்ட வெள்ளைத் தாளில் எழுதாதீர்கள். வடிவத்தில் மிகச் சிறிய குறிப்புப் புத்தகத்தில் எழுதுங்கள்’ என்று யோசனை சொல்கிறார். மாப்பசானின் சிறுகதைகள் காகிதப் பற்றாக்குறை காலத்தில் எழுதப் பட்ட காரணத்தால்தான் சிறப்பாக இருக்கின்றன என்று ஒரு விமர்சகர் சொல்கிறார்.

2. ஒருவன் வாசகன்மீது நம்பிக்கை வைக்காமல் தனக்குத்தானே சமுதாயத்தைப் பற்றிய பிரக்ஞை இல்லாமல் உரக்கச் சிந்தித்துக் கொண்டிருந்தானானால் அது இலக்கியமன்று.

3.செயலூக்கத்துக்கு உதவி செய்யாமல் வெறும் ஏமாற்றத்தை மட்டும் சொல்லிச் செல்லும் கதைகள் எனக்கு உடன்பாடன்று. சமூகச் சிந்தனையில் ஆக்கபூர்வமான மாற்றங்களை விளைவிக்க முற்படாத ஏமாற்றங்கள் இலக்கியமாவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.

4. ஒரு நல்ல சிறுகதை, எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் இடையே நிகழ்கிற உரையாடலாக இருக்க வேண்டும். வாசகன் அக்கதையைப் படித்து முடித்த பிறகு
அவன் சிந்தனையைத் தூண்டும் முறையில், அதன் கருத்து எல்லை அதிகரித்துக் கொண்டு போதல் அவசியம். ஒரு பிரச்சினையை மையமாக வைத்துக் கொண்டு எழுதப்படும் கதைகளுக்குத்தாம் இந்த ஆற்றல் உண்டு. பிரச்சினையை நேரடியாகச் சுட்டிக்காட்டுவது தினசரிப்பத்திரிகைகளின் வேலை. இலக்கியத்தின் பரிபாஷையா கிய அழகுணர்ச்சியோடு பிரச்சினையைச் சொல்வதுதான் ஒரு சிறந்த படைப்பாளி யின் திறமை.

5. ஒரு கதை தன் உள்ளடக்க வலுவிலேயே ஒரு பிரச்சினையின் தீவிரத்தை உணர்த்த வேண்டுமே தவிர, அக்கதையை எழுதுகிறவனுடைய இலக்கியப் புறம்பான கட்சி அல்லது குழுச்சார்பினால் விளைகின்ற உரத்த குரலினால் அல்ல. உரத்த குரல் இடைச்செருகலாய் ஒலித்துவிடக்கூடிய வாய்ப்புண்டு. வெறும் ஏமாற்றத்தையும், விரக்தியையும், தோல்விமனப்பான்மையையும் இலக்கியமாக்கி விடக்கூடாது.

6. ஒரு எழுத்தாளன் எழுத முனையும் போது தன்னை நேரடியாகப் பாதித்த விஷயங்கநளை எழுதுகிறான். அவன் எந்த அளவு பாதிக்கப் பட்டிருக்கிறான் என்பதை அவனது கல்வி, வளர்ந்த சூழ்நிலை, பண்பாட்டுச்சூழல், மனப்பரிமாணம் ஆகியவைகளே முடிவு செய்கின்றன. அவன் எப்படி உருவாகி இருக்கிறானோ அந்த அளவிலிருந்து பிரதிபலிப்பு செய்கிறான். தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறான்.
வெளிப்படுத்திக் கொள்கிறபோது அது பகிர்ந்துகொள்ள வேண்டிய விஷயமாகிறது. பகிர்ந்துகொள்ளல் வருகிறபோதே வடிவம் வந்து விடுகிறது. உரையாடல் தேவையாகிறது. அது தனிமொழியாக இருக்க முடியாது.

7. புரியாமல் எழுதுவதை ஒரு ஸ்டைல் என்று கொள்ளமுடியாது. ”பத்து பேருக்கு மேல் புரிந்து கொண்டால் அது எழுத்தே இல்லை” என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். ‘ஆயிரம் பேருக்கு மேல் தனது பத்திரிகையை படித்தால் நிறுத்தி விடுவேன்’ என்று யாரோ சொன்னாராம். ஒரு கஷ்டமான விஷயத்தைச் சுலபமாகச் சொல்ல முடியாதா? பெட்ரண்ட் ரஸ்ஸலைப் படித்தால் சாதாரண மனிதன் கூட புரிந்து கொள்ளலாம். அறிவிலே தெளிவு உள்ளவர்கள் எந்த விஷயத்தையும் எளிமையாகச் சொல்ல முடியும். அது இல்லாதவர்கள் குழப்புகிறார்கள்.

8. இலக்கியம் இலக்கியத்துக்காக, கலை கலைக்காக என்பதெல்லாம் பித்தலாட்டம். பழைய காலச் சிந்தனை. பத்தொன்பதாம் நூற்றாண்டில் Walter parter ஆரம்பித்தான் Art for art sake என்று. தூய இலக்கியம் என்ற ஒன்று கிடையாது. அடுத்த வீட்டுக்காரனைப்பற்றி நான் எழுதும்போதே அது ஒரு சமூகச் செயலாகிவிடுகிறது.

(இன்னும் வரும்)


E mail ID : < v.sabanayagam@gmail.com >

Website: < http://www.ninaivu.blogspot.com >

Series Navigation

author

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்

Similar Posts