லதா ராமகிருஷ்ணன்
‘எனி இந்தியன்’ பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள ‘வெளி இதழ்த் தொகுப்பு குறித்த கலந்துரையாடல் கூட்டமொன்று 29.12.2007 மாலை சென்னையிலுள்ள தக்கர் பாபா வித்யாலயாவைச் சேர்ந்த வினோபா அரங்கில் நடந்தேறியது. நூல் குறித்த பலதரப்பட்ட கருத்துக்கள் கூட்டத்தில் வைக்கப்பட்டாலும் இதை விமர்சனக் கூட்டமென்று சொல்வதைக் காட்டிலும் கலந்துரையாடல் கூட்டமென்று சொல்வதே அதிகம் பொருத்தமாகப் படுகிறது. காரணம், கலந்து கொண்டவர்கள் தீவிர இலக்கியம் பற்றியும், நாடக இயக்கம் குறித்தும் அறிவும், அக்கறையும் கொண்டவர்களாய் இருந்ததோடு, மாற்றுக் கருத்துக்களையும் பரஸ்பர மரியாதையோடு முன்வைக்கும் பண்பும், புரிதலும் கொண்டவர்களாயும் இருந்தார்கள்.வெவ்வேறு பார்வைகளுக்கு இடமுண்டு என்ற அடிப்படை மனிதநேயத்தோடும், புரிதலோடும் இயங்கி வருபவர் என்பதால் எழுத்தாளரும், நவீன நாடக இயக்கத்தில் முனைப்போடு இயங்கி வருபவருமாகிய திரு. வெளி ரங்கராஜன் தமிழின் சிறுபத்திரிகையாளர்களால் மிகவும் மதிக்கப்படுபவர். அவரை ஆசிரியராகக் கொண்டு 1990 முதல் ஏறத்தாழ ஒன்பது ஆண்டுகள் வெளியாகி வந்த ‘வெளி’ இதழ் நவீன நாடகம் குறித்த விழிப்புணர்வையும், ரசனையையும் பரவலாக்குவதையும், இயல், இசை, நாடகக் கலைஞர்களுக்கிடையே ஒரு தொடர்புப் பாலம் ஏற்படுத்துவதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது என்பதை இன்றைய தலைமுறையினருக்கு எடுத்துக் காட்டவும், தமிழ் நாடகவெளியில் அன்றும், இன்றும் இயங்கி வருவோருக்கான ஒரு நினைவுகூரலாகவும், நினைவுபடுத்தலாகவும் இந்தத் தொகுதி அமைந்திருப்பதாக கூட்டத்தில் பேசிய அனைவரும் ஒருமனதாகக் கருத்து தெரிவித்தனர்.வட்டமாக எல்லோரும் அமர்ந்து இறுக்கமின்றி கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்கள்.
எந்த ஒரு கலை, கலாச்சாரச் செயல்பாட்டிற்கும் முறையான ஆவணப்பதிவு அவசியம் என்று குறிப்பிட்டார் கூட்டத்தை ஆரம்பித்து வைத்துப் பேசிய வெளி ரங்கராஜன். ஒரு காலகட்டத்தில் நாம் செயல்பட்ட விதத்தை காலத்தால் விலகி வந்த பின் அவதானிப்பதும், அசைபோடுவதும் இனிமையான, அதே சமயம், செறிவான அனுபவம் என்று கூறியவர், வெளி என்ற இதழ் சிறுபத்திரிகையுலகின் ஒரு அங்கமாக இருந்த போதிலும் பொதுவாக இலக்கியச் சிறுபத்திரிகைகள் நவீன நாடகத்திற்கு போதுமான பங்களிப்பு செய்யவில்லை என்பதே வருத்தத்திற்குரிய உண்மை என்றார். நாடகத்தை வெறும் பிரதியாக மட்டும் பார்க்கும் பார்வை மாறி ராமானுஜம், நா.முத்துசாமி போன்றவர்களால் அதன் மற்ற அழகியல்கூறுகள் குறித்தும் கவனம் கூர்மைப்படுத்தப்பட்டது என்ற வெளி ரங்கராஜன், கடந்த இருபது வருடங்களாக அவர்கள் நவீன நாடகத் துறக்கு ஆற்றி வரும் பணி மிகவும் குறிப்பிடத்தக்கது என்றார். அதேபோல், நவீன தமிழ் நாடக வளர்ச்சிக்கு அல்லயன்ஸ் ·ப்ரான்சேஸ் ஆற்றி வரும் பங்கும் முக்கியமானது என்றார். தமிழ் செவ்விலக்கியங்களில் மிக நவீன நாடகக் கூறுகள் இருப்பதாகக் குறிப்பிடவர் வெளி இதழ் இந்திய நாடகங்கள் மற்றும் உலக நாடகங்கள் குறித்த பரிச்சயத்தை உண்டாக்கி நாடக ரசனை வளர்ச்சிக்கு வித்திட்ட விதங்களைப் பற்றியும் எடுத்துரைத்தார்.
கூட்டத்தில் பேசிய திரு.வெ.ஸ்ரீராம் அல்லயன்ஸ் ·ப்ராங்சேஸ்’ல் ஆரம்பத்தில் ஆங்கில நாடகங்களும், பிரெஞ்சு மொழி நாடகங்களும் தான் அரங்கேற்றப்பட்டு வந்ததாகவும், ஆனால், பிரெஞ்சு மக்களுக்கு தமிழ் இலக்கியம், கலாச்சாரக் கூறுகளைப் பற்றியெல்லாம் அறிந்து கொள்ள விருப்பமிருந்ததாகவும், ஆனால், நம்மிடம் கதை, கட்டுரை, கவிதைகள் இருந்த அளவு நாடக முயற்சிகள் இருக்கவில்லை என்றும், நாடகப் பிரதிகள் இருந்த அள்வு நாடக நிகழ்த்துதல் நடந்தேறவில்ல்லை என்றும், அந்த சமயத்தில் தான் நவீன தமிழ் நாடகங்களுக்கு வெளி அமைத்துத் தர வேண்டும் என்ற முயற்சியில் தான் முனைப்போடு இறங்கியதாகவும் தெரிவித்தார். ·பிரான்ஸ் போன்ற நாடுகளில் தரமான நாடகங்களுக்கு உள்ள வரவேற்பையும், நவீன நாடக முயற்சிகளுக்கு உள்ள ஆதரவையும் சுட்டிக் காட்டினார்.
1980 களில் நவீன நாடகம் பற்றிய பிரக்ஞையும், உத்வேகமும் மிகவும் வளமாக இருந்ததாகக் குறிப்பிட்டார் திரு.அ. மங்கை. தமிழ் நாடக வரலாறு குறித்து ஆங்கிலம் போன்ற பிறமொழிகளில் முறையான ஆவணப் பதிவு இல்லை என்று வருத்தத்தோடு தெரிவித்தவர் வெளி தொகுப்பில் வெளி காலகட்டத்திற்குப் பிறகான நாடகத்துறை சார் மாற்றங்கள், வளர்ச்சிகள், முயற்சிகள் குறித்தும் இத்தொகுப்பில் மேலதிக விவரங்கள் தரப்பட்டிருந்தால் இன்னும் சிறப்பாயிருந்திருக்கும் என்றார். நவீன நாடக் வெளியைச் சேர்ந்தவர்களே நாடகம் பற்றிய விவாதத்தை நடத்த முனைப்பு காட்டுவதில்லை என்று குறிப்பிட்டவர் இந்தத் தொகுப்பை வாசிப்பது நம்மை நாமே திரும்பிப் பார்த்துக் கொள்ளச் செய்கிறது என்றும் நெகிழ்வோடு கூறினார்.
நாடகத்திற்கு ஆவணப்பதிவு மிகவும் குறைவு என்று குறிப்பிட்ட திரு.அம்ஷன்குமார், எம்.ஆர்,ராதாவினுடைய ரத்தக்கண்ணீர் நாடகத்தின் ஒரு ஸ்டில் கூடக் கிடைக்காமல் தான் சிரமப்பட்டதையும், பின் ரத்தக்கண்ணீர் திரைப்பட ஸ்டில்லை வைத்து ஒப்பேற்றியதையும் எடுத்துரைத்தார். தி.மு.க மாநாடுகளில் அக்காலத்தில் போடப்பட்ட நாடகங்களுக்குக் கூட ஆவணப்பதிவு இல்லையென்றும் தெரிவித்தார். பெரும்பத்திரிகைகள் இலக்கியப் பத்திரிகைகளை நடத்துவதை இலக்கியத்தின் வெற்றியென்றே கருத வேண்டும் , திரைப்படங்களிலும் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன, ஆனால், நவீன நாடகத் துறையில் மட்டும் அத்தகைய ஆக்கபூர்வமான வளர்ச்சிப்போக்கு அரிதாகவே காணப்படுவதற்குக் காரணம் என்ன என்ற அவர் கேள்விக்கு, நவீன நாடகத் துறையிலும் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன, ஆனால், அவை முறையாக ஆவணப்படுத்தப்படவில்லை என்ற எதிர்வினை பெறப்பட்டது. திரு. இளைய பத்மநாபன் முன்பு நவீன நாடக இயக்கத்தைச் சேர்ந்தவர்களிடம் ஒரு முனைப்பும், பற்றுறுதியும் அதிகமாக இருந்தது என்றார். 15 பேர் நடிப்பார்கள், 2 பேர் மட்டுமெ பார்க்க வரக் கூடும். என்றாலும், நடிப்பவர்கள் அதே முனைப்போடு, உத்வேகத்தோடு நடிப்பார்கள்’ என்று குறிப்பிட்டார். அன்றைய தினத்தோடு ஒப்பிட்டு பார்த்தால் ந.முத்துசாமி கண்டிப்பாக வெற்றி பெற்றிருக்கிறார் என்று சொல்ல முடியும் என்ரவர் ‘நம்மிடம் நாடகப் பாரம்பரியம் இருக்கிறது, ஆனா, நாடகப் பிரக்ஞையோ, வரலாறோ குறைவு என்று குறிப்பிட்டார்.
கவிஞர். சங்கர ராம சுப்ரமணியன் வழக்கம் போல் காத்திரமான கட்டுரை ஒன்றை வாசித்தார். பழந்தமிழ்க் கலைகள் எப்படி அதிகாரப் பதவியிலிருப்பவர்களால் போலித்தனமாக, மேம்போக்காகக் கையாளப்படுகின்றன, பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பற்றிப் பேசியது அவருடைய ஆழமான கட்டுரை( அந்தக் கட்டுரை முழுமையாக திண்ணையில் இடம்பெறலாம் என்பதால் அது குறித்து இங்கே நான் அதிகம் பேசவில்லை).
உடல்நலம் சரியில்லாத காரணத்தால் திரு.ந.முத்துசாமியால் கூட்டத்தில் கலந்து கொள்ள இயலவில்லை. கூட்டத்தில் வெளி இதழ்களைப் பற்றி ஆய்வு மேற்கொண்டிருக்கும் தோழர் ஒருவர் தமிழ் நாடகம் பற்றியும், நவீன நாடகம் பற்றியும் எந்த பாடபுத்தகத்திலும் இல்லாத அளவு வெளி இதழ்களில் தகவல்கள் தனக்குக் கிடைத்ததாக மகிழ்ச்சியோடு தெரிவித்தார். தீவிர கலை, இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டு வரும் படைப்பாளிகள், ஆர்வலர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் பரிச்சயங் கொள்ளவும், கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும் ஏதுவாக நிகழ்வுகள், கருத்தரங்குகள் தொடர்ந்தரீதியில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்ற கருத்து பெறப்பட்டது.
வெளி இதழ்த் தொகுப்பு குறித்த இந்தக் கூட்டம் நவீன நாடகம் பற்றிய ஒரு விழிப்பை, அதற்கான அவசியம் பற்றிய புரிதலைத் தருவதாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
படங்கள் உதவி : ஜி சாமிநாதன்
ramakrishnanlatha@yahoo.com
- ‘எழுத்துக்கலை’ பற்றி இவர்கள் – 6 அகிலன்
- குளிர்ந்து விட முடியா சந்திரமதி தாலி
- மறைந்து கொண்டிருக்கும் ரசனைகள் !!!
- நிராகரிப்பை போர்த்திக் கொண்டவனின் மரணம்
- தாகூரின் கீதங்கள் – 10 என்னுடன் இருக்கிறாய் எப்போதும் !
- அக்கினிப் பூக்கள் – 10
- வாசனை
- வெளி இதழ்த் தொகுப்பு (ஒரு அரங்கியல் ஆவணம்) – நூல் குறித்த கலந்துரையாடல் கூட்டம் குறித்து…
- டா(Da) — திரைப்பட விமர்சனம்
- கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 14 கடல் கடந்து பரவிய இந்திய பண்பாடு
- சம்பந்தமில்லை என்றாலும் – பெரியார்
- பேராசிரியர் சே ராமானுஜம் பற்றிய ஆவணப்படம் திரையிடல்
- ஹென்டர்ஸன் பட்டிமன்றம் – 6 ஜனவரி 2008
- முரண்களரி ஐந்து நூல்கள் வெளியீடு
- ஜெகத் ஜால ஜப்பான் -5 சுமிமாசென் தொடர்ச்சி
- உன்னத மனிதன்(வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 1
- கீழ்க்கட்டளை தனலஷ்மி!
- அசுரன் இழப்பு வருத்தம் அளிக்கிறது
- பனிப்புலத்தை கவிப்புலமாக்கிய கலைப்பிரமங்களின் கவிதாநிகழ்வு!!!
- அரிமா விருதுகள் 2006
- உயிர்மை பதிப்பகம் நூல் வெளியீட்டு அரங்கு சாருநிவேதிதாவின் மூன்று நூல்கள்
- கனடாவில் ‘உனையே மயல் கொண்டு’…..
- 27வது பெண்கள் சந்திப்பு கனடா ரொறொண்டோவில் 2008ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 12,13,14ம் திகதிகளில்
- எழுத்தாளருக்கு எழுத்தாளர்கள் எடுத்த விழா – மலர்மன்னன் சொன்னதாக நான் குறிப்பிட்டதில் பிழை
- டீன் கபூரின் “திண்ணைக் கவிதைகள்”
- அநாதி சொரூபக் கவிதை – அநாதி சொரூபக் கவிதை
- மாத்தா ஹரி – அத்தியாயம் -43
- தைவான் நாடோடிக் கதைகள் 7. கிணற்றுத் தவளை
- தரிசு நிலத்தில் பட்டாம்பூச்சி
- ‘இயல்’ விருதின் மரணம்
- முகமதிய பயங்கரவாதிகளுக்கு அழைப்பு விடுக்கும் அரசியல் விமர்சகர்கள்
- ராக்போர்ட் சிட்டி ஆகஸ்ட் 14
- Last Kilo byte – 4 வாசக ரசனைகள் – ஒப்பீடுகள் – எதிர்வினைகள்
- என் தடத்தில்…
- கவிதைகள்
- தவளை ஆண்டு 2008
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! நியூட்ரான் விண்மீன் ! துடிப்பு விண்மீன் ! (கட்டுரை: 10)
- லா. ச. ரா. வுக்கு எழுத்தாளர்கள் எடுத்த எடுப்பான விழா
- எழுத்துக்காரத் தெருவிலிருந்து ஒரு கவிஞர்
- அசுரன் அவர்கள் இயற்கை எய்திய செய்தி