ச.ஜயலக்ஷ்மி
.
”பூ ஒன்று புயலானது” இந்தத் தலைப்பில் சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு தமிழ்த்திரைப்படம் வெளிவந்தது,அதன் கதாநாயகி பூப்போல் மென்மையானவளாகவும்,வெளி உலகில் நடக்கும் ஊழல்களையும்,அக்கிரமங்களையும் அறியாத பெண்ணாக இருந்தவள் தன் வாழ்க்கையில் எதிர்ப்புகளும், பிரச்சனைகளும் வந்தபோது எப்படி புயலாக மாறி சீற்றம் கொண்டு வெற்றி பெறுகிறாள்என்பது தான் கதை.அந்தத்தலைப்பு என் மனதில் பதிந்து விட்டது.
திருமதி ராஜம்கிருஷ்ணனின் ”பாதையில் பதிந்த அடிகள்” நாவலில் வரும் மணலூர் மணியம்மாள் என்னை மிகவும் பாதித்தாள்.இப்படியெல்லாம் ஒரு பெண் அந்தக்காலத்தில் நிஜமாகவே நகமும் சதையுமாக வாழ்ந்திருப்பாளா என்று நம்புவதே கடினமாக இருந்தது.என் சிநேகிதிகள்,என் உறவுக்காரப் பெண்கள் என்று பலபேரிடம் அந்தப் புத்தகத்தைக் கொடுத்துப் படிக்கச் சொல்லி
யிருக்கிறேன்.அப்புத்தகம் என்னைப்போல் பலரையும் பாதித்தது.பூப்போன்றிருந்த மணியம்மாளால் எப்படிப் புயலாக மாறமுடிந்தது என்பது பற்றி எங்களுக்குள் விவாதம் எழுந்தது”.ஏன்? நம் இதிகாச புராண காப்பியத் தலைவிகள் பூவாகயிருந்து புயலாக மாறவில்லையா?சீதை, கண்ணகி இருவரும் எப்படிப் புயலாக மாறிப் பேசினார்கள்” என்பதைச் சுட்டிக் காட்டினேன்.”நீங்கள் ஏன் இது பற்றி எழுதக்கூடாது?” என்றார்கள் அதனால் எழுந்தது இந்தக் கட்டுரை.
மன்மதனாலும் எழுதமுடியாத அழகும் மென்மையும் உள்ள சீதையை முதன் முதலாகக் கன்னிமாடத்தில் சதகோடி மின்னல் களுக்கு நடுவே ஒரு மின்னலாகப் பார்க்கிறோம். வில் முறித்த இராமன் கைப்பிடித்து அயோத்தி வருகிறாள் சீதை.இராமனின் மகுடாபிஷேகம் தடைபட்டு இராமன் வனம் செல்லப் போகிறான் என்ற சேதி அறிந்ததும் அவனுக்கு முன்பாக மரவுரி உடுத்திக் கிளம்பி விடுகிறாள்.மகாராணிப் பட்டம் பறி போனது பற்றி இவள் கொஞ்சமும் கவலைப் படவில்லை.காடு எப்படியிருக்கும்எவ்வளவு தொலைவில் இருக்கும் என்பதையெல்லாம் இவள் அறியவில்லை.ஏதோ வெளியூருக்குச் செல்வது போல் கிளம்பி விடுகிறாள்.ஆனல் அயோத்தியைவிட்டு வெளியேறிய உடனேயே காடு வந்துவிட்டதா என்று கேட்கும் குழந்தை உள்ளம்!சிறு குழந்தைகள் ரயில்,பஸ் கிளம்பியதுமே ஊர் வந்தாசா?எப்போ வரும்?என்று கேட்பார்களே, அதே ரகம்.
அயோத்தி எல்லையில் இராம,சீதா,இலக்குவன் மூவரையும் விட்டு விட்டு ஊர் திரும்பும் சுமந்திரன் அயோத்தியில் உள்ளவர்களுக்கு என்ன சேதி சொல்ல வேண்டும் என்று கேட்கிறான்.சீதை என்ன சொல்கிறாள்?
”அரசர்க்கு,அத்தையர்க்கு என்னுடை வணக்கம் முன் இயம்பியானுடைப்
பொன்நிறப் பூவையும் கிளியும் போற்றுக என்று உன்னும் தங்கையர்க்கு
உணர்த்துவாய்
ராஜ்ஜியத்தையும்,பட்டம் பதவியையும், தங்க வைர நகைகளையும், பட்டாடைகளையும்,வாழ்க்கை வசதிகளையும் இழந்தது கூடப் பெரிதாகத் தோன்றவில்லை.ஆனல் அவளுடைய பொன்னிற நாகணவாய் பறவைகளையும், கிளிகளையும் பாதுகாப்பதே முக்கியுமாகப் படுகிறது!அவ்வளவுசூதுவாது அறியாத உள்ளம்! இவள்14 ஆண்டு வனவாசத்திற்குக் கிளம்பி விட்டாள் வனவாசம் தான் இவளுக்கு வாழ்க்கை அனுபவங்களைக் கற்றுக் கொடுக்கப் போகிறது.
பஞ்சவடியிலே ஜடயுவின் பாதுகாப்பில் இருக்கிறார்கள்.இந்நிலையில் சூர்ப்பனகை வருகிறாள்.சீதையின் அழகைக் கண்டு வியந்தவள், இவள் இருக்கும்வரை இராமன் தன்னை ஏறெடுத்தும் பார்க்கமாட்டான் என்பதைப் புரிந்து கொள்கிறாள்.எனவே சீதையை அரக்கி என்றும்மாயை வடிவெடுத்து இங்கு வந்திருக்கிறால் என்றும் இராமனிட்டமே சொல்கிறாள்.சூர்ப்பனகையைக் கண்டித்து அடக்காமல், சீதை பயந்து நடுங்கி இராமனை வந்தணைகிறாள்.சூர்ப்பனகை மூலம் சீதையினழகைக் கேள்வியுற்ற இராவணன் பொன்மான் மூலம் சீதையை,இராம இலக்குவனிடமிருந்து பிரித்து விடுகிறான்.ச்£தை தனிமையில் இருக்கும் பர்ண்சாலைக்கு சந்யாசி வேடத்தில் வருகிறான்.இராவணன்.பொய்மானை,நிஜமான் என்று நம்பிய சீதை போலி சந்யாசியை நிஜ சந்யாசி என்று நம்பி உபசரிக்கிறாள்.வந்தவர் இலங்கையிலிருந்து வருவதாகச் சொன்னவுடன்,அறநெறியில் நிற்க்காத அரக்கர்களோடு ஏன் இருந்தீர்கள் என்கிறாள்.இப்பொழுது தான் சீதை தைரியமாகப் பேச ஆரம்பிக்கிறாள்.இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்படுகிறது. இராவணனுடைய கோபம் வெளிப்படுகிறது.
மேருவைப் பறிக்க வேண்டின் விண்ணினை இடிக்க வேண்டின், நீரினைக் கலக்க வேண்டின்
நெருப்பினை அவிக்க வேண்டின் பாரினைப் பறிக்க வேண்டின் இராவணற்கு அரிதென்?
என்கிறான்.
அவியை வேட்ட நாய்:
இராவணைப் பற்றிப் பேசும் சந்யாசியிடம் எதிர்வாதம் செய்கிறாள் சீதை.அரக்கர்களைப் பற்றி கொஞ்சம்,நிறையவே தெரிந்து வைத்திருக்கிறாள் சீதை.பத்துத் தலைகளும் இருபது தோள்களும் இருந்தால் போதுமா? அந்தப் பத்துத்தலை இராவணனை ஆயிரம் தோள்களுடைய கார்த்தவீர்யார்ச்சுனன் சிறை வைத்தான்.அவனை பரசுராமன் தன் மழுவினால் எறியவில்லையா?என்று எதிக்கேள்வி
போடுகிறாள் இப்படி சீதையால் மடக்கப்பட்ட இராவணன் சுயரூபம் கொள்கிறான்.ஆனால் சீதையிடம் காதல் பிச்சை கேட்கிறான்.சீதை
வெகுண்டு
”பொங்கு எரி,புனிதர் ஈயும் அவியை நாய் வேட்டதென்ன என் சொன்னாய் அரக்க?”
ராமபாணம் உன்னைச்சுடும் முன் உயிர் பிழைத்துப்போ” என்று வெகுண்டு பேசுகிறாள்.பூ மெல்லப் புயலாகிறது.தன்னை வேள்வியில் இடும் புனித அவிசோடு ஒப்பிட்டவள் இராவணனை நாய் என்று சொல்லவும் தயங்கவும் இல்லை.ஆனாலும் சீதை சிறைபிடிக்கப்பட்டு அசோகவனத்தில் அரக்கியர் நடுவில் சிறை வைக்கப்படுகிறாள்.
இராவணனை மடக்கும் சீதை
சிறையில் இருக்கும் சீதையைப் பார்க்க வருகிறான் இராவணன்.அவளை மூன்று உலகங்களுக்கும் சக்கரவர்த்தினியாக்குவதாகவும்,ராஜ்ஜியத்தோடு தன்னையும் அடிமையாக ஏற்றுக்கொள்ளும்படி அவள் காலில் விழுகிறான். இராவணன் கொண்டுவந்த அக்கினிக்குஞ்சு கொஞ்சம் கொஞ்சமாகக் கனன்று எரி உமிழ ஆரம்பிக்கிறது.கபட சந்யாசியாக வந்தபோது இராவணன் தன் பலத்தைப் பற்றி பெருமையடித்துக் கொண்டது நினைவுக்கு வருகிறது அவனுடைய வார்த்தைகளைக் கொண்டே அவனை மடக்கி இராமனின்ஆற்றலைப் பேசுகிறாள், எச்சரிக்கிறாள்.
”மேருவை உருவல் வேண்டின் விண்பிளந்து ஏக வேண்டின்
ஈரெழு புவனம் முற்றுவித்திடில் வேண்டின்
ஆரியன் பகழி வல்லது அறிந்திருந்தும் அறிவிலாதாய்
வீரிய அல்ல சொல்லி தலை பத்தும் சிந்துவாயோ?”
இவள் ஆத்திரம் இன்னும் அடங்கவில்லை. தன்னை வஞ்சகமாகக் கவர்ந்ததை ஏளனமாகப் பேசுகிறாள்.இராவணா நீ ஒரு கோழை.
”அஞ்சினை! ஆதலான் அன்று ஆரியன் அற்றம் நோக்கி
வஞ்சனை மான் ஒன்று ஏவி மறைந்து வந்தாய்”
என்று சாடுகிறாள்.முன்பு போல் சீதை நடுங்கவில்லை.அவனுடைய பத்துத் தலைகளையும் பார்த்த சீதைக்கு ஒரு காட்சி நினைவுக்கு
வருகிறது.அம்பு போட்டுப் பழக சிறுவர்களுக்கு இந்தத்தலைகள் தான் எவ்வளவு செளகரியமாக இருக்கும்!
பத்துள தலையும் தோளும் பல பல பகழி தூவி
வித்தக வில்லினார்க்கு திருவிளையாடற்கேற்ற
சித்திர இலக்கம் ஆகும்”
என்ன கிண்டல்! என்ன கேலி! என்ன துணிச்சல்!மறுபடியும் இராவணன் இருபது தோள்களையும் பற்றி வாய் வழியாக இரத்தம் வரும்
படியாகக் கார்த்தவீர்யார்ச்சுனன் குத்தியதையும் நினைவூட்டி அந்தக் கார்த்தவீர்யார்ச்சுனனை பரசுராமன் ஜெயித்ததையும் சொல்லிக்
காட்டுகிறாள்.அப்பேர்ப்பட்ட பரசுராமன் இராம பாணத்துக்கு இலக்காகத் தன் தவம் முழுவதையும் தொலைத்ததையும் சொல்லி அவனைக் குத்திக் காட்டுகிறாள்.அயோத்தியை விட்டு வந்ததுமே காடு எங்கே என்று கேட்ட சீதை எங்கே? இப்பொழுது புலியாகச் சீறும் இந்தச் சீதை எங்கே?
இந்தப்புலி இன்னும் சீறப்போகிறது! சீதையை வசப்படுத்துவதற்காக மாயா ஜனகனைக் கட்டியிழுத்து வருகிறார்கள்.”தேவேந்திரன் தலையிலுள்ள கிரீடத்தைப் பறித்து ஜனகனுக்கு இந்திரபதவி சூட்டி தேவமகளிர் எல்லோரும் சூழ்ந்து வணங்கித் துதிக்கும் போது,நானும் என்கடன் பணிசெய்து கிடப்பதே என்று பணிசெய்வேன்.நீ மட்டும் சரி என்று ஒரு வார்த்தை சொன்னால் போதும்” என்று காதல் ஜுரவேகத்தில் பிதற்றுகிறான்.இதைக் கேட்ட சீதை ஊழிக்கால நெருப்பெனப் பொங்கி எழுகிறாள். ”இந்திர பதவியா கொடுக்கப் போகிறாய்?பொய்த்திருவான இந்த இல்ங்கையே உன்னுடையதாக இருக்கப் போவதில்லையே!கோதண்டத்தின் பயங்கர முழக்கங்களுக்கிடையே காகங்கள் உன் கண்களைத் தோண்டித் தின்னப்போகின்றன.உன் உடலைப் பேய்கள் ஆவலோடு பிடுங்கித் தின்னும்”.பேசுவது சீதையா?அல்லது காளியா?மேலும் சீறுகிறாள்.
புன்மககேட்டி!கேட்டற்கு இனியன, புகுந்த போரில்
உன்மகன் உயிரை,எம்மோய் சுமித்திரை உய்ய ஈன்ற
நன்மகன் வாளிநக்க, நாய் அவன் உடலை நக்க
என்மகன் இறந்தான் என்ன நீ எடுத்து அரற்றல்
சீதையின் சீற்றத்தில் இந்திரஜித்து, இலக்குவனால் கொல்லப்படுவான் என்ற ஆரூடமும் வெளியாகிறது.அவன் உடலை நாய்கள் கடித்துக் குதற,இராவணன் என் மகன் இறந்தானே என்று அளறப் போகும் காட்சியையும் கண்முன்னே கொண்டு வருகிறாள்.
மாயாஜனகன்சீதைக்கு உபதேசம் செய்கிறான்
”ஆவிபோய் அழிதல் நன்றோ,அமரர்க்கும் அரசன் ஆவான்
தேவியாய் இருத்தல் தீதோ?”
என்று உபதேசம் செய்ய ஆரம்பிக்கிறான்.இது கேட்ட சீதை”நீ ஜனகன் தானா? என் தந்தை ஒருக்காலுமிவ்வாறு சொல்லவே மாட்டான். ஒருவேளை நீ ஜனகனாகவே இருந்தாலும் தான் என்ன?நீயும் உன் சுற்றமும் இருந்தால் என்ன அல்லது இறந்தால் தான் என்ன?அல்லது உலகமே மாண்டால் தான் என்ன?
அரியோடும் வாழ்ந்த பேடை அங்கணத்து அழுக்குத் தின்னும்
நரியோடும் வாழ்வதுண்டோ? நாயினும் கடைப்பட்டோனே
முன்பு இராவணனை நாயோடு ஒப்பிட்டவள் இப்பொழுது அதை விடக் கேவலமான நரியோடு ஒப்பிடுகிறாள்.இராம,இலக்குவர் இல்லாத நேரம்,நரித்தனமாக்ச் வந்தானல்லவா?தகாத வார்த்தை சொன்ன ஜனகனையும் விட்டுவைக்கவில்லை.ஆக்ரோஷத்தின் உச்ச கட்டமாக ”இறந்து தீர்தி என்று ஜனகனுக்கும் சாபமிடுகிறாள். இராவணன் மாயா ஜனகனைக் கொல்வது போல் வாளை ஓங்குகிறான்.இப்படி பயமுறுத்தினால் சீதை வசப்படுவாள் என்ற எண்ணம்! ஆனால் அதற்குள் காவலாளி£கள் அலறிக் கொண்டே வந்து கும்பகர்ணன் போரில் மாண்ட செய்தியைத் தெரிவிக்கிறார்கள்.செய்தி கேட்ட இராவணன் கதறுகிறான். சீதை கனிவாய் துடிக்க மயிர் பொடிக்க உள்ளே கிளுகிளுக்கிறாள். புயல் அமைதியடைகிறது.
தொடரும்
(குறிப்பு
எனது இக்கட்டுரை ”பாரத மணி” என்ற மாத இதழில் பிரசுரமாகி உள்ள்து.அதன் ஆசிரியரின் அனுமதி பெற்று இக்
கட்டுரையை திண்ணை வாசகர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.
இப்படிக்கு
ச.ஜயலக்ஷ்மி)
:
- Toronto International Film Festival 2007
- பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 12(அத்தியாயம் 18)
- I, BOSE presented by AGNI KOOTTHU (THEATRE OF FIRE)
- வாஸந்தி அவர்களின் கட்டுரையைப் பற்றி ஜெயராமன் எழுதிய கடிதம்
- மலர்மன்னன் உண்மையிலேயே திண்ணைக்கு நாட்டாமைதானா ?
- மை கவிதைத் தொகுப்பு
- தாகூரின் கீதங்கள் -1 புவியில் வாழ விரும்புகிறேன் !
- நேற்று இன்றல்ல நாளை : ஆசிரியர் : எஸ் சங்கரநாராயணன்
- இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தால் இந்தியாவிற் தொடர்ந்து, நடத்தப்படும் பத்தாவது பெண்கள் சிறு கதைப்போட்டி
- மறுமலர்ச்சிக்கவிஞர் புதுவைச்சிவம்(23.10.1908-31.08.1989)
- 26 வது பெண்கள் சந்திப்பு பற்றிய குறிப்பு
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 3 காட்சி 1
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர் விந்தைகள் பிரபஞ்சத்தின் வயதென்ன ? (கட்டுரை: 1)
- “மாறிப் போன தடங்கள்”
- பூ ஒன்று (இரண்டு) புயலானது
- 1/4 என்னும் சிற்றிதழில் பிரஞ்சுப் பண்பாட்டுத் தாக்கம் பெற்ற தமிழர் பற்றிய காரை சிபியின் அரிய கருத்துகள்
- கால நதிக்கரையில் – அத்தியாயம் – 30 (நாவல் – நிறைவுப் பகுதி)
- படித்ததும் புரிந்ததும் – (8) அந்நியன் – அஞ்சா நெஞ்சன் – வலைப் பூக்கள் – இலக்கணக் குறிப்பு
- தண்ணீர்
- லா.ச.ரா என்கிற கைவினைஞர்
- லா.ச.ரா. குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் – முதல்வர் தகவல்
- தமிழ்படித்தோரைக் காப்போம்
- தமிழ்வாணன் – மூ ட் டா த அ டு ப் பை மூ ட் டி ய வ ர்
- “ததிங்கிணதோம்”
- கதைகளுக்குள் நர்த்தனமாடும் கதைகளும் கதையாசிரியர்களும்
- குள்ளநரி
- தண்ணீரைப் போன்றது வெளிச்சம்
- மாத்தா ஹரி -அத்தியாயம் – 34
- கடிதம் – தவிர்க்க முடியாத இருளின் குறிப்புகள்
- பெஞ்சமின் லெபோ, சர்சல் (பிரான்சு) அவர்களின் ‘பாரதியார் வரைந்த பாஞ்சாலி யார்?’ கட்டுரை
- மெல்லச் சுருங்கும் மேற்கத்திய உலகம்
- கவிதைகள்
- கவிதைகள்
- ஏன் இந்தத் தலைக்குனிவு
- வழக்கம் போல் இருப்பதில்லைதான் வழக்கமான மழை
- லா.ச.ரா. (92) சொற்களின் சூத்ரதாரி
- புத்தனுக்கு போதி மரம்………..
- ஊர்விலக்கு கண்டனத்திற்குரியது
- அந்த நாள் ஞாபகம் : அதோ அந்தப் பறவை போல….
- திரைப்படம் : ஆப்ரிக்காவின் துண்டு வளையல்கள்