பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 11(அத்தியாயம் 14,15)

This entry is part [part not set] of 38 in the series 20071018_Issue

எஸ் மெய்யப்பன்


அத்தியாயம் பதினான்கு

குணத்ரய விபாக யோகம்
குணத்ரய என்பது குணங்கள் விபாகம் என்பது பாகுபாடு. குணங்களின் பாகுபாடுகள் என்பது பொருள்.
சத்வகுணம், ரஜோ குணம், தமோகுணம் ஆகிய மூன்றின் தன்மைகளும் இதில் விளக்கப்படுகின்றன.
இதில் 27 சுலோகங்கள் அடங்கியுள்ளன.

கண்ணன்: தடந்தோள் தனஞ்சயா, ஞானங்களில் உன்னதமான மற்றோரு ஞானத்தைப் பற்றி இப்போது உனக்குச் சொல்வேன், பல முனிவர்கள் இதைப் பின்பற்றி நற்கதி அடைந்துள்ளனர். இதைக் கடைப்பிடிப்பவர்கள் எனக்கே சமமானவர்கள் ஆகின்றனர். அவர்கள் மீண்டும் பிறப்பதில்லை. ஊழிக்காலத்தில் அழிவதும் இல்லை.
மகா இயற்கையே எனது கர்பப்பை. அதில் நான் விதைகளை விதைக்கிறேன். அதிலிருந்து உயிர்களெல்லாம் உற்பத்தியாகின்றன. கர்ப்பத்தில் தோன்றும் அனைத்து வடிவங்களுக்கும் மகா இயற்கையே தாய். நான்தான் விதையைத் தூவும் தந்தை. இந்த இயற்கையிலிருந்து தோன்றியவைதான் சத்துவம், ரஜசம், தமசம், என்னும் மூன்று குணங்கள். இந்த குணங்கள்தான் அழிவற்ற ஆத்மாவை அழியும் உடம்புடன் இறுகப் பிணைத்து விடுகின்றன. இதில் சத்துவகுணம் என்பது பரிசுத்தமானது. ஒளி மிகுந்தது. இடர்ப்பாடற்றது. இது ஆத்மாவுக்குச் சுகத்திலும் ஞானத்திலும் பற்றுதலை உண்டாக்கும். ரஜோகுணம் என்பது ஆசை வடிவானது. இது ஆத்மாவுக்குக் காரியங்களின் மேல் பற்றுதலை உண்டாக்கும். தமோகுணம் என்பது அறியாமையால் தோன்றுவது. எல்லா உயிர்களையும் மயங்கச் செய்வது. இது அசட்டை, சோம்பல், உறக்கம் ஆகியவற்றுடன் ஆத்மாவைப் பிணைக்கும். சுருங்கச் சொன்னால், சத்துவ குணம் சுகத்தில் சேர்க்கும். ரஜோகுணம் செயலைத் தூண்டும். தமோகுணம் கவனமின்மையால் தள்ளும். சிலநேரங்களில், சத்வகுணம் ரஜசையும் தமசையும் அமுக்கி மேலோங்கி நிற்கும். சில சமயங்களில் ரஜோகுணம் சத்துவம், தமஸ் இரண்டையும் அமுக்கித் தலைதூக்கி நிற்கும். இன்னும் சில நேரங்களில் தமோகுணம், சத்துவம், ரஜஸ் இவைகளை அமுக்கி உச்சத்தில் நிற்கும். உடம்பின் ஒன்பது வாயில்களிலும் ஞானி ஒளி வீசும்போது சத்துவ குணம் ஓங்கியுள்ளது என்பதை அறியலாம். பேராசை, பிறன்பொருள் விரும்பல், வினை விருப்பம், வினைப் பெருக்கம், துடிதுடிப்பு, பரபரப்பு இவை ரஜோகுணம் மேலெழும்போது உண்டாகின்றன. விவேகமின்மை, முயற்சியின்மை, அசட்டை, மதிமயக்கம் ஆகியவை தமோகுணம் மேலிடும்போது உண்டாகின்றன.
சத்துவகுணம் ஓங்கி நிற்கும்போது உயிர்விடுபவன், உத்தம ஞானிகள் வாழும் உலகத்தை அடைகிறான். ரஜோகுணம் ஓங்கி நிற்கும் போது இறப்பவன், தொழிற்பற்று கொண்டவர் குலத்தில் பிறக்கிறான். தமோகுணம் ஓங்கி நிற்கும் போது மரிப்பவன், மூடர்களிடையில் பிறக்கிறான்.
சாத்துவிகத்தின் பலன் நன்மைƒ இதிலிருந்து ஞானம் பிறக்கிறது. ரஜசின் பலன் துன்பம். இதிலிருந்து பேராசை தோன்றுகிறது. தமசின் பலன் மடமைƒ இதிலிருந்து சோம்பல், மயக்கம், அறியாமை உண்டாகிறது.
சத்வ குணத்தார்; மேலெழுந்து சொர்க்கமடைகின்றனர். ரஜோகுண மனிதர்கள் மீண்டும் மனிதர்களாகவே மண்ணில் பிறக்கிறார்கள். தாமச மூடர்கள் பறவை மற்றும் பிற ஜந்துக்களாகப் பிறந்து தாழ்நிலை அடைகிறார்கள். இம்மூன்று குணங்களையும் கடந்தவன் பிறப்பு, மூப்பு, துக்கம், இறப்பு இவற்றிலிருந்து விடுபட்டு மரணமிலாப் பெருவாழ்வு பெறுகிறான். அத்தனை செயல்களையும் குணங்களே இயக்குகின்றன என்பதையும் அவற்றைத் தவிர வேறொரு கர்த்தா இல்லை என்பதையும், குணங்கள் வேறு.. தான் வேறு என்பதையும் கண்டு கொண்டவன் என் சொரூபமாகவே மாறிவிடுகிறான்.
அர்ஜுனன்: பிரபோ, ஒருவன் இந்த முக்குணங்களையும் கடந்துவிட்டான் என்பதற்கு அடையாளம் என்ன? அவன் எப்படி நடந்து கொள்வான்? அவன் எவ்விதம் இந்த முக்குணங்களையும் கடக்கிறான்?
கண்ணன்: பாண்டவனே, முக்குணங்களைக் கடந்தவன் தெளிவு, செயல், மயக்கம், ஆகியவை தோன்றும்போது அவற்றை வெறுக்கவும் மாட்டான். தோன்றாத போது தேடித்திரியவும் மாட்டான். எல்லாம் குணங்களின் இயக்கமே என்பதை உணர்ந்து எதிலும் அக்கரை இல்லாதவன் போல் காட்சியளிப்பான். குணங்களின் தாக்குதலுக்கு அசைந்து கொடுக்கமாட்டான். தன்னிலை தவறமாட்டான். இன்ப துன்பங்களைச் சமமாகக் கருதுவான். இகழ்ச்சியும் புகழ்ச்சியும் இன்முகத்துடன் ஏற்பான். மான அவமானங்களை நிகராக நினைப்பான். நண்பன் பகைவன், பிடித்தவன் பிடிக்காதவன் இவர்களை இணையாகக் காண்பான். பொன்னையும் மண்ணையும் ஒன்றுபோல் பார்ப்பான். தனக்கென வேண்டிய தொழில் எதும் செய்யான். இத்தகையவனே1 குணங்களைக் கடந்தவன் என்று கூறப்படுகிறான்.
அர்ஜுனா, ஒப்பற்ற சுகத்திற்கும் அழிவற்ற தர்மத்திற்கும் நானே இருப்பிடம். அப்படிப்பட்ட என்னைச் சலனமிலா பக்தியோகத்தால் வழிபடுகிறவன், முக்குணங்களையும் கடந்து2, பிரம்மம் ஆவதற்குத் தகுதியடைகிறான்.
(பதினான்காம் அத்தியாயம் நிறைவு பெற்றது)
1. உதாரணம் சுகர், ஜடபரதர் முதலியவர்கள்.
2. பிருஹத் என்ற சொல்லினின்றும் பெறப்படும் பிரம்மம் என்றால், நிறையுள்ள, பரிபூரணமான குணங்களுடன் கூடிய அரும்பொருள் என்று பொருள்படும். -ஸ்ரீ இராமாநுஜர்



அத்தியாயம் பதினைந்து
புருஷோத்தம யோகம்
புருஷர்களில் உத்தமமானவன் என்பது பொருள். இயற்கை, ஆத்மா இரண்டையும் தன்வசப்படுத்திக் கொண்டு நிற்கும் இறைவன், அவற்றிலும் மேலானவர். அதனால் புருஷோத்தமன் எனும் பெயர் பெறுகிறான். சம்சாரம் என்பது அசுவத்த மரம் போன்றது. பற்றைத் துறப்பது என்ற வாளால் தான் அதை வெட்டிச் சாய்க்க முடியும்.
இதில் 20 சுலோகங்கள்அடங்கியுள்ளன.

கண்ணன்: சம்சாரம் என்ற 1அசுவத்த மரம் மேலே 2வேரும் கீழே கிளைகளும் கொண்டது, அது அழிவில்லாதது. வேதங்களே அதன் இலைகள். கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து உற்றறியும் நலன்களின் செயல்களே அதன் தளிர்கள். சத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களால் செழித்து வளர்ந்த அதன் கிளைகள் கீழ்நோக்கிப் பரவியுள்ளன. மனித உலகில் பரவலாய்க் காணும் தொழிலின் தொகுப்புகள் தான் பல்கிப் பெருகும் அதன் வேர்கள். இவ்வாறு வேதங்களே கூறுகின்றன. இதை அறிந்தவனே வேதத்தை அறிந்தவன்.
ஆதியும் அந்தமும் இல்லாத இந்த அசுவத்த மரம் கண்ணுக்குத் தெரிவதில்லை. இதற்கு அடியுமில்லை.. முடிவுமில்லை.. இருப்புமில்லை. வேரூன்றிய இந்த அசுவத்த மரத்தைக் கூரூன்றிய பற்றிலாமை எனும் உறுதியான 3வாளால் வெட்டித் துணிந்திட வேண்டும். பிறகு அடைந்தவர் திரும்பாத இனிய உலகைத் தேடத் துணிந்திட வேண்டும். முடிவில் அந்த மரத்தையே உண்டு பண்ணிய ஆதிபுருஷனை அடைந்து பணிந்திட வேண்டும். பற்றுதல் என்னும் குற்றத்தைப் போக்கி.. இன்ப துன்ப இரட்டைகளை நீக்கி.. கர்வம், மோகம், காமம் இவற்றை விலக்கி.. ஆத்மஞானத்தைத் துலக்கி ஆத்மாவின் உண்மை வடிவத்தை அறிந்தவர்கள் அந்த அழிவிலா இடத்தை அடைகின்றனர். அந்த அற்புத இடத்தைச் சூரியனோ சந்திரனோ அல்லது பெரு நெருப்போ பிரகாசிக்கச் செய்வதில்லை. அது தானாகவே பிரகாசிக்கிறது. அதுவே எனது பரமபதம்.
அநாதியான என்னுடைய அம்சங்களில் ஒன்றான ஆத்மாதான் உலகெங்கும் உலாவிக் கொண்டிருக்கிறது. அதுவே உடம்பிலுள்ள மனம் முதலான 4ஆறு புலன்களுக்கும் தலைமை தாங்கி இங்குமங்கும் இழுத்துச் செல்லுகிறது. மலர்களின் மணத்தைக் காற்று எடுத்துச் செல்லுவதைப் போல், அந்த ஆத்மா உடல் எடுக்கும் போதும் அதை விடுக்கும் போதும் புலன்களைத் தன்னுடனே எடுத்துச் செல்லுகிறது. அது உடம்பிலுள்ள கண்ணால் பார்க்கிறது. காதால் கேட்கிறது. நாவால் சுவைக்கிறதுƒ நாசியால் நுகர்கிறது. சதையால் உணர்கிறது. மனத்தால் நினைக்கிறது. அந்த ஆத்மா உடலை விடுவதையும் உடலில் படுவதையும், புலன்கள் மூலம் அனுபவிப்பதையும், குணங்களுடன் கூடி மிளிர்வதையும் மூடர்கள் அறிய மாட்டார்கள். ஞானக்கண் கொண்டவர்களே அறிவார்கள். அந்த ஞானிகள் ஆத்மாவைத் தங்களுக்குள்ளாகவே காண்பார்கள். மூடர்கள் எவ்வளவு தான் முயன்றாலும் அந்த ஆத்மாவை காண மாட்டார்கள்.
சூரியனின் ஒளியும், சந்திரனின் கிரணமும், நெருப்பின் ஜுவாலையும் என்னுடைய பிரகாசம் தான். நான் தான் சந்திரனாக அமுத மழை பொழிந்து பயிர் பச்சைகளையெல்லாம் வளர்க்கிறேன். என் பலத்தினால் பூமிக்குள் புகுந்து எல்லா உயிர்களையும் தாங்குகிறேன். மேலும், உயிருக்கு ஆதாரமான உள்மூச்சு, வெளி மூச்சு, ஆகியவற்றின் துணை கொண்டு, உதரக் கனலாக மாறி, 5நான்கு வகை உணவுகளையும் ஜீரணிக்கிறேன். அனைவரது இதயங்களிலும் நிறைந்து, நான் தான் நினைக்கவும் செய்கிறேன்… மறக்கவும் செய்கிறேன். அறிவை ஆக்கவும் செய்கிறேன்.. பிறகு நீக்கவும் செய்கிறேன். வேதங்கள் விளக்கும் உட்பொருள் நான் தான்ƒ வேதாந்தத்தைச் செய்தவனும் நான் தான். முற்றும் அதை அறிந்தவனும் நான் தான்.
ஆத்மாவில் இரண்டு வகையுண்டு. ஒன்று அழியக் கூடியது, மற்றொன்று அழிவில்லாதது. எல்லா உயிர்களும் அழியக் கூடிய ஆத்மாவின் வடிவங்களே ஆகும். வடிவத்தில் உறைவதே அழியாத ஆத்மாவாகும். இவை இரண்டையும் விட மேலான மற்றொரு ஆத்மா இருக்கிறது. அது அழிவற்ற ஈசனாய் மிளிர்ந்து, மூன்று உலகிலும் பரிணமித்து, அவற்றைத் தாங்குகிறதுƒ அது தான் பரமாத்மா. அந்த பரமாத்மா நான் தான். அதனால் தான் 6புருஷோத்தமன் என்று எல்லோரும் என்னைப் போற்றுகிறார்கள். அப்படிப்பட்ட என்னை உள்ளபடி அறிந்தவன், எப்பொழுதும் என்னையே தொழுவான்.
குற்றமற்ற அர்ஜுனா, குவலயத்தில் இரகசியமான சாஸ்திரத்தை இது வரை உனக்குச் சொன்னேன். இதை அறிந்தவனே அறிஞன். அவனே செய்ய வேண்டியதைச் செய்ய வேண்டிய முறைப்படி செய்தவனாவான்.
(பதினைந்தாம் அத்தியாயம் நிறைவு பெற்றது)
1. அசுவத்த மரம்: அச்வத்தம் என்றால் இன்றிலிருந்து நாளை இல்லாதது என்று பொருள்.
2. படைப்புக் கடவுளான நான்முகனே மேற்புறம் உள்ள வேர். பூவுலக மானிடர் முதலியவர் கிளைகள். மனிதர்கள் செய்யும் செயல்களால் உண்டாகக் கூடியவை கீழ் நோக்கிப் பரவிய கிளைகள். – ஸ்ரீ ராமாநுஜர்
அசுவத்தம் என்பது அரச மரம். அரசமரம், ஆலமரம் இரண்டும் ஒரே இனத்தைச் சேர்ந்தவை. ஆலம் விழுது மற்ற வேர்களுக்கு நேர் மாறாக வேலை செய்கிறது. வேர் கீழே பூமியில் சத்தை வாங்கி, மேலே எடுத்துச் செல்கிறது. ஆலம் விழுதோ மேலே கிளையில் சத்தை வாங்கிக் கொண்டு கீழ் நோக்கி வருகிறது. மாயப் பிரபஞ்சம் மேலே பரமபொருளிடத்தில் இருந்து சத்தை வாங்கிக் கொண்டு கீழே பிரகிருதியாக பரிணமித்து வருகிறது.
3.வந்த வரவை மறந்துமிக்க மாதர் மயக்கத்தி லாழும் இந்த மயக்கத்தை அறுக்க – எனக் கெந்தை எழில்வாள் கொடுத்தான். – தாயுமானவர்
4.ஐம்புலன்களுடன் மனமும் சேர்ந்து ஆறு புலன்கள் ஆயிற்று.
5.ப~;யம் – கடித்து உண்பவை, போஜ்யம் – கடிக்காமல் விழுங்குபவை, லேஹ்யம் – நாக்கால் நக்குபவை, சோஷ்யம் – வாயல் உறிஞ்சக் கூடியவை என்று உணவு நால் வகைப்படும்.
6.புஷ்பேசு ஜாதி புரு ஷேசு விஷ்ணு நாரீசு ரம்பா நகரேசு காஞ்சி. – காளிதாசர்.


Series Navigation

author

எஸ் மெய்யப்பன்

எஸ் மெய்யப்பன்

Similar Posts