தாமரைச்செல்வியின் “வன்னியாச்சி” சிறுகதைத் தொகுப்பு

This entry is part [part not set] of 38 in the series 20071018_Issue

கே.எஸ்.சுதாகர்



தாமரைச்செல்வி – இலங்கையின் பெண் எழுத்தாளர்களில் குறிப்பிட்டுக் கூறக்கூடிய இவர் 1973 இல் இருந்து எழுதி வருகின்றார். தேசிய சாகித்திய விருது, வடக்கு கிழக்கு மாகாண இலக்கிய விருது, வடக்கு கிழக்கு மாகாண ஆளுநர் விருது போன்றவற்றைப் பெற்றவர். சுமைகள், விண்ணில் அல்ல விடிவெள்ளி, தாகம், வேள்வித் தீ, வீதியெல்லாம் தோரணங்கள், பச்சை வயல் கனவு என்ற நாவல்களையும் ஒரு மழைக்கால இரவு, அழுவதற்கு நேரமில்லை போன்ற சிறுகதைத்தொகுப்புகளையும் தந்துள்ளார்.

இவரது ‘அழுவதற்கு நேரமில்லை’ சிறுகதைத் தொகுதி 1995 இல் ஏற்பட்ட வடபுலப்பெயர்வின் தாக்கம் பற்றி எழுதப்பட்ட சிறப்பான ஒரு தொகுதி. வன்னிக்கான இந்தப் புலப்பெயர்வில் மக்கள் படும் வேதனைகள், போரின் அவலங்கள், அகதிப் பிரச்சினை என்பன பற்றிக் கூறப்பட்டிருந்தன.

“வன்னியாச்சி” அவரது ஒன்பதாவது நூல். ‘மீரா’ பதிப்பகமாக வந்துள்ளது. இதில் – ஆனையிறவுத் தாக்குதல் மற்றும் அதனைத் தொடர்ந்த காலப்பகுதியை நினைவூட்டும் எட்டுச் சிறுகதைகள், சுனாமி மற்றும் பெண்ணியச் சிறுகதைகளென மொத்தம் பத்து உள்ளன. “அவரவர் வாழ்வுக்கு அவரவரே பொறுப்பு” என்பதை உணர்ந்தவர்களாய் தமது வாழ்வோடு போராடியவர்வகளின் கதை என்று ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.

பதிப்பாசிரியர் தடித்த எழுத்தில் ஒரு கருத்தை – கணிப்புக்குரிய ஒரு தொகுதியாக அமையத்தக்க தகைமையைக் கொண்ட இந்நூலில் உள்லடக்கப்பட்டுள்ள கதைகளுள் குறைந்தது மூன்றிற்கு மேற்பட்ட கதைகளாவது நிறைவான வாசகானுபவத்தைத் தரவல்லன – என்பது தேவையற்றது.

தொகுப்பின் முதல் சிறுகதை ‘பார்வை’. மனிதர்களில் ஒரு சிலருக்கு ‘ஒரு முகம்’, பலருக்கு ‘பல முகங்கள்’. இந்தக் கதையில் வரும் நாயகனும் – தன்னுடைய நண்பனின் மனைவியின் ‘ஒரு முகத்தை’ தரிசித்துவிட்டு – தன்னுடைய மனைவி அப்படியில்லையே என்று ஏங்குகின்றான். பிறிதொரு சந்தர்ப்பத்தில் நண்பனின் மனைவியின் இன்னொரு கொடூர முகத்தை கண்டு கொள்கின்றான். அந்த சந்தர்ப்பத்தில் தன்னுடைய மனைவி நடந்து கொண்ட முறையினால் மகிழ்வுற்று, தனது மனைவி பரவாயில்லை என்ற நிலைக்கு வருகின்றான். இயல்பான அவளது அந்தத் தன்மையினை – 12 வருட குடும்ப வாழ்க்கையில் அறியாமல் போனதற்கு – பார்வைதான் காரணம் என்கின்றது இந்தச் சிறுகதை.

கதையில் வரும் பெயர்க்குழப்பத்தை (கணேசன், கோபாலன்) தவிர்த்துவிட்டு கதையைப் பார்ப்போம். இது ஒரு உள்ளக இடப்பெயர்வைக் குறிக்கும் கதை. இடப்பெயர்வு. கொஞ்சக்காலம் அங்குமிங்கும் அலைந்துவிட்டு மீண்டும் சொந்தக் கிராமத்தில் இருப்பதற்கு கோபாலனும் மனைவியும் முடிவு செய்கிறார்கள். சுவர் இருந்தால்தானே சித்திரம் வரையலாம். நகை நட்டை வித்து மீண்டும் ஒரு மண்வீட்டைக் கட்டிக் கொண்டிருக்கையில் மீண்டும் ‘ஷெல்’ விழுந்து வீடு தவிடு பொடியாகின்றது. அவனும் தனது ஒரு கையை இழந்து கொள்கின்றான். இருப்பினும் வாழ்வின் மீது நம்பிக்கை கொள்கின்றார்கள் என முடிகின்றது ‘சுவர்’ என்ற இந்தக்கதை.

ஜேர்மனியில் இருக்கும் மகனுக்கு பெற்றோர் அழகும் பணமும் கொண்ட ‘ஜேர்மனிக்குக் கூட்டிக் கொண்டு போகக்கூடிய’ ஒரு மணமகளைத் தேர்ந்தெடுக்கின்றனர். அவனோ நாட்டுப் பிரச்சினைகளால் தனது நண்பனின் குடும்பம் படும் பாதிப்புகளில் வேதனை கொள்கின்றான். நண்பனும் நாட்டுக்காகப் போரிட்டு இறக்கின்றான். இறுதியில் தனது நண்பனின் தங்கையை மணம் முடிக்கின்றான். கடிதங்களால் வரையப்பட்டுள்ள இந்தச் சிறுகதை ‘விழிப்பு’.

இடம்பெயர்ந்து வந்து வீட்டில் குடியிருக்கும் ஒரு குடும்பத்தினரின் பிள்ளைக்கு சுகமில்லாமல் வரும்போது – ஆண்டவனுக்கு நேர்ந்து வைத்திருந்த செவ்விளநீர் மரத்தின் முதற்குலையை வெட்டி மருந்துக்காகக் குடுக்கும் தயாள சிந்தையுள்ள ஒரு குடும்பத்தின் கதையாகிறது ‘காணிக்கை’ என்ற கதை.

இடப்பெயர்வால் அலைந்து, வறுமையில் உழன்று, நோய் பீடித்து விறகு வெட்டிப் பிழைக்கும் ஒருவன் – தனது வயது முதிர்ந்த தாயாவது சுகமாக வாழ வேண்டும் என நினைத்து முதியோர் இல்லத்தில் கொண்டு வந்து விட்டுச் செல்கின்றான். அங்கிருந்த படியே தனது பழைய வாழ்வையும் பிள்ளையையும் நினைத்து ஏங்கும் ஒரு பெண்ணின் கதை ‘அம்மா’.

வாழ்ந்த வாழ்வை நினைத்து ஏங்கும் வன்னிநாச்சியாரின் கதை “வன்னியாச்சி”. அதுவே புத்தகத்தின் தலைப்பும் ஆகின்றது. வன்னிவிளாங்குளம் என்ற ஊரைச் சுற்றிப் படருகின்றது இந்தக்கதை. வாழ்க்கையில் தனது சொந்த ஊரை விட்டு என்றுமே பிரியாத 82 வயது வன்னியாச்சியையும் இடப்பெயர்வு விட்டு வைக்கவில்லை. இடம்பெயர்ந்த அவசரத்தில் தன்னிடமிருந்த 100 ரூபா தாளை வீட்டில் வைத்துவிட்டு வருகின்றாள். வீட்டின் மீது ‘ஷெல்’ விழுந்து எல்லாமே எரிந்து போகின்றது. அந்தப் பணம் இருந்திருந்தால் தன்னுடன் இடம் பெயர்ந்து வந்தவர்களுக்கு இரண்டு நாட்களுக்கு பசியைத் தீர்த்திருக்கலாமே எனக் கவலை கொள்கிறாள்.

ஊரிலே தன்னைச்சுற்றி என்ன நடக்கின்றது என்பது தெரியாமலே, தானுண்டு தன்பாடு என வயல் வேலையிலே மூழ்கி வளரும் ஒருவனுக்கு, திடீரென எல்லாமே புரிய வருகின்றது. கடைசியில் திடீரெனவே செத்துப் போகும் அவனை “முகமற்றவர்கள்” என்ற சிறுகதையிலே காணுகின்றோம்.

குடித்துவிட்டு மனைவிமாரை துன்புறுத்தும் ஆண்வர்க்கத்திற்கு படிப்பினையாக “சில நிமிட மெளனம்” என்ற சிறுகதை அமைகிறது. சற்றும் எதிர்பாராத முடிவைக் கொண்ட ‘பெண்ணியச்’ சிறுகதை இது.

இறுதிக் கதை “தூரத்து மேகங்கள்” சுனாமி பற்றியது. புத்தகத்தின் முகப்பு ஓவியம் சொல்லும் கதை. இடப்பெயர்வின் துயரம் ஆறுவதற்கு முன், முல்லைத்தீவில் வந்த சுனாமி அவனின் தம்பி குடும்பத்தை அழித்து விடுகிறது. அவர்களின் ஒரு மகன் கஜேந்திரன் தப்பிப் பிழைக்கிறான். அவனைக்கூட்டிக் கொண்டு வந்து தங்களுடன் வளர்க்கின்றார்கள். கஜேந்திரனைப் பள்ளிக்கூடம் சேர்த்துவிட்டால் அவனது மன நிலை மாறும். ஆனைப் படிப்பிப்பதற்கும் வறுமை இடம் தரவில்லை. கனடாவில் இருக்கும் அந்தப் பள்ளிக்கூடத்தின் பழைய மாணவி ஒருத்தி உதவி செய்ய முன்வருகின்றாள். ‘எங்கேயோ தூரத்தில் மேகம் திரண்டிருந்தாலும் கூட இங்கே வந்ததும் அது மழையாய் பெய்யக் கூடும்’ – கதையில் அப்படி ஒரு வாசகம் வருகின்றது. முகம் தெரியாத பெண். அவளின் செய்கை. கனடா எங்கே இருக்கிறது? அவனுக்கு அதன் திசை வழி நோக்கி கும்பிட வேணும் போல இருக்கிறது என்று கதை முடிகிறது.

பார்வை, அம்மா, வன்னியாச்சி, சில நிமிட மெளனம், தூரத்து மேகங்கள் மிகவும் அருமையான சிறுகதைகள். வன்னிப்பிரதேசத்தில் ஏற்பட்ட போரின் அவலங்களைக் கூறும் ஆவணம் இது.


kssutha@optusnet.com.au

Series Navigation

author

கே.எஸ்.சுதாகர்

கே.எஸ்.சுதாகர்

Similar Posts