பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 8

This entry is part [part not set] of 35 in the series 20070927_Issue

எஸ் மெய்யப்பன்


அத்தியாயம் 11

அத்தியாயம் பதினொன்று
விசுவரூப தரிசன யோகம்

விசுவரூபம் என்பது நெடிது பரந்த தோற்றம். கண்ணனின் அருளால் ஞானக்கண் பெறும் அர்ஜுனன், அந்தக் கண்ணனின் விசுவரூபத்தைத் தரிசிக்கிறான். பிறகு அர்ஜுனனே அதை விளக்கியுரைக்கிறான். கண்ணனின் விசுவ ரூபத்தில் உலகங்கள் அனைத்தும் அடங்கியுள்ள தன்மை இதில் விவரிக்கப் பெற்றுள்ளன.

இதில் 55 சுலோகங்கள் அடங்கியுள்ளன.
————-
அர்ஜுனன்: தாமரைக் கண்ணா, ஆத்மாவைப் பற்றிய உன் அற்புதமான விளக்கத்தால் என் மனமயக்கம் மறைந்து விட்டது. உன் அழிவற்ற மகிமைகள் பற்றியும் உலகின் தகைமைகள் பற்றியும் விரிவான உன் விளக்கம் கேட்டேன். அனைத்தும் உண்மையே, இப்போது உன் விசுவரூப1 வடிவத்தைக் காண விரும்புகிறேன். அதை நான் காணக் கூடும் என்று நீ கருதுவாயானால், அழிவில்லாத அந்த வடிவத்தைக் காட்டியருள்க.
கண்ணன்: அப்படியே ஆகட்டும் அர்ஜுனா, ஆனால், உனது ஊனக் கண்ணால் அதைக் காண முடியாது. ஆகையால் உனக்கு ஞானக்கண் தருகிறேன். எனது யோகக் காட்சியைப் பார், தொகை தொகையாகப் பெருகும் என் வடிவங்களைப் பார், வகை வகையான வண்ணங்களுடன் ஒளி வீசி நிற்கும் என் உருவங்களைப் பார், ஆதித்யர்களையும்2, அஷ்ட வசுக்களையும், அசுவினி தேவதைகளையும்3, பதினொரு ருத்ரர்களையும், ஏழு மருத்துக்களையும் அத்துடன் இதுவரை நீ பார்த்திராத பல அற்புதங்களையும் பார், இன்னும், உலகமெனும் அரங்கில் எந்நெந்தக் காட்சிகளைப் பார்க்க விரும்புகிறாயோ, அவை அனைத்தையுமே என் மேனியிலே பார்.
(இவ்விதம் உரைத்த கண்ணன் தன் மேலான விசுவரூபத்தை அர்ஜுனனுக்குக் காட்டினான். அடடா, முகங்கள் தான் எத்தனை, விழிகள் தான் எத்தனை, அற்புதக் காட்சிகள் தான் எத்தனை, அணிந்த ஆபரணங்கள் தான் எத்தனை, அலங்கார ஆடைகள் தான் எத்தனை‚ தெய்வீக மாலைகள் தான் எத்தனை, தாங்கிய ஆயுதங்கள் தான் எத்தனை, இது மட்டுமா, சந்தனப் பூச்சுடன், ஒளிக்கதிர் வீச்சுடன் அதிசயமானதும், காலத்தைக் கடந்ததும், எல்லாத் திசைகளிலும் முகங்கள் கொண்டதுமான தன் அற்புத வடிவத்தைக் காட்டினான் கண்ணன்.
அது 4ஓராயிரம் சூரியர்கள் வானில் ஒரே நேரத்தில் உதித்தது போல் இருந்தது. பலவிதமாய்ப் பிரிந்துள்ள உலகின் காட்சிகள் அந்தத் தெய்வத் திருமகனின் மேனியில் ஒன்று கூடியிருந்ததை அர்ஜுனன் கண்டான். பிறகு அவன் வியப்பு மேலிட, மெய்சிலிர்த்தவனாய் தலையால் வணங்கினான், கை கூப்பிக் கூறத் தொடங்கினான்.)
அர்ஜுனன்: தேவா, உன் தெய்வீக மேனியில் தேவர்கள் அனைவரையும் காண்கிறேன். ஜீவராசிகளின் கூட்டங்களையும் காண்கிறேன். தெய்வ நாகங்களையும், திவ்ய முனிவர்களையும், கமலாசனக் கடவுள் பிரம்மாவையும் காண்கிறேன்.
உலகநாதா, கணக்கிலாக் கைகளையும், வயிறுகளையும், முகங்களையும், கண்களையும் கொண்ட உன் முடிவிலா உருவத்தை எங்கும் காண்கிறேன். உன் வடிவத்தின் அடியையோ, முடியையோ, நடுவையோ நான் காண முடியவில்லை. சந்திர சூரியர்களைக் கண்களாகவும், செந்தழல் நெருப்பை முகமாவும் கொண்டு, ஒளி வெள்ளத்தால் இந்த உலகையே எரிப்பவனாய்க் காட்சியளிக்கிறாய். தலைக்கு மகுடம் தரித்து, கதையும் சக்கரமும் கைகளில் தாங்கி, எட்டுத்திசையும் ஒளியுமிழும் உன் உருவத்தை எங்கும் காண்கிறேன்.
உலகிற்கே உயர்ந்த ஆதாரம் நீ, உத்தம தர்மத்தின் ரட்சகன் நீ, அறிந்திட வேண்டிய அழிந்திடாப் பரம்பொருள் நீ, பழமைக்கும் பழமையான பழம் பொருள் நீ, எல்லாவற்றையும் நான் நேரில் காண்கிறேன்.
அற்புதம்மிக்க உன் வடிவம் விண்ணையும் மண்ணையும் அடைந்து நிற்கிறது, உக்கிரம் மிக்க உன் உருவம் திக்குகள் அனைத்திலும் பரவி நிற்கிறது, மூவுலகும் இது கண்டு நடுங்கி நிற்கிறது.

இதோ வானவர் பல்லோர் உன்னுள் நுழைகின்றனர், பயத்தால் அதில் சிலர்5 கைகூப்பித் தொழுகின்றனர், மகா முனிவர்களும் சித்தர்களும் “வாழ்க, வாழ்க” என்று பாடிப் புகழ்ந்து பரவுகின்றனர். உருத்திரர், ஆதித்யர், சாத்தியர்6, 7வசுவதேவர், அசுவினி தேவர், வசுக்கள், மருத்துக்கள், ஊஷ்மபர், கந்தர்வர், ய~ர், அசரர், சித்தர் என்ற வித்தகர் அத்தனை பேருமே வியப்புடன் உன்னையே பார்க்கிறார்கள்.

பலப்பல முகங்களும், கண்களும், கைகளும் தொடைகளும், பாதங்களும் வயிறுகளும், பயமுறுத்தும் வளைந்த பற்களும் கூடியவுடன் நெடிய உருவங்கண்டு மூவுலகங்களும் நடுங்குகின்றன. வான்வரை நீட்டி, வண்ணங்கள் தீட்டி, பிரகாசம் கூட்டி, திறந்த வாயினைக் காட்டி, அகன்ற கண்களில் ஒளியினை நாட்டியுள்ள உன்னைக்காணும் போது என் அமைதியும் வீரமும் ஒடுங்குகின்றன. கோர பயங்கரப் பற்களுடன் ஊழிக்காலத்துப் பெருந்தீ போன்ற உன் முகத்தைப் பார்த்ததுமே எனக்குத் திக்குத் திசை தெரியவில்லை, ஒன்றும் புரியவில்லை.
நீ எனக்கு அருள் புரிக.
திருத்ராஷ்டிரன் மைந்தர்களும், பாராளும் வேந்தர்களும், பீஷ்மர், துரோணர், கர்ணன் ஆகியவர்கள் மட்டுமல்ல… நம் பக்கத்துப் படைத் தலைவர்களும் கூட, பயங்கரமான உன்னுடைய வாய்களில் நுழைகின்றனர். சிலர் பொடிபட்ட தலைகளோடு உனது பல்லிடுக்குகளில் அடிப்பட்டுச் சிக்கியிருப்பதைக் காண்கிறேன். கடலை நோக்கி ஓடும் நதிகளின் வெள்ளங்களைப் போல், இந்த மானிட வீரர்கள் சுடர் விட்டு எரியும் உன் வாய்க்குள்ளே ஓடுகிறார்கள். விட்டிற் பூச்சிகள் கொழுந்து விடும் நெருப்பில் வேகமாக வந்து விழுவதைப் போல் நாசமடைவதற்காகவே இந்த ஜனங்கள் அதிவேகத்துடன் உன் வாய்க்குள்ளே நுழைகிறார்கள். வெந்தழல் வாய்களால் சகல உலகங்களையும் சாப்பிட்டு முடித்து, நாக்கைச் சுழல விட்டு நக்கிச் சுவைக்கிறாய். உனது கொடுஞ் சுடர்களால் உலகையே எரிக்கிறாய். தேவ தேவனே, உன்னை வணங்குகிறேன். உன்னைப் பற்றி அறிய விரும்புகிறேன். உன் செயலை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. பயங்கர மூர்த்தியாகிய நீ யார் என்று கூறுயருள்க.
உலகை அழிக்கவல்ல காலன் நான். அழிக்கும் அந்தக் காரியத்தைத்தான் தொடங்கியுள்ளேன். இதோ.. களத்திலே அணிவகுத்து நிற்கும் வீரர்கள், நீயில்லாவிட்டாலும் அழியத்தான் போகிறார்கள். இவர்களெல்லாம் ஏற்கனவே என்னால் கொல்லப்பட்டவர்கள், துரோணரும், பீஷ்மரும், கர்ணனும், கெயத்ரதனும் கூட ஏற்கனவே கொல்லப்பட்டவர்களே, இப்போது என் பொருட்டு நீ 8கருவியாக மட்டும்தான் இருக்கப் போகிறாய். எனவே இணையிலா இடது கை வீரா, கவலையை விட்டுப் போரிடு, எதிரிகளை வென்று புகழுடன் வாழ்வாயாக, இணையிலாத இந்த நாட்டை ஆள்வாயாக.

(இந்த வார்த்தைகளைக் கேட்ட அர்ஜுனன் கை கூப்பி, நடுநடுங்கி வணங்கி எழுந்து, மீண்டும் நடுக்கத்துடன் வணங்கி, நாக்குழறக் கண்ணனிடம் நவில்கிறான்)
அர்ஜுனன்: ஹிருஷீகேசனே, உன் புகழ் பாடுவதில் உலகம் மகிழ்ச்சி அடைகிறது. அரக்கர்கள் எல்லாம் அஞ்சி நாலா பக்கமும் ஓடுகிறார்கள்ƒ சித்தர்கள் எல்லாம் வணங்கிப் பாடுகிறார்கள். இது மிகவும் சரி தான், ஏனெனில் பிரம்மாவுக்கும் பெரியவனான உன்னை எப்படி வணங்காமல் இருக்க முடியும்? மூவுலகிலும் உனக்குச் சமமானவனே இல்லை என்றால், உயர்ந்தவன் எங்கே இருக்க போகிறான். பிரபஞ்சம் அனைத்திற்கும் நீயே தந்தை, நீயே வணக்கத்திற்குரியவன், உண்மையும் பொய்யும் கடந்த உன்னதமானவன், அழிவிலாப் பரம் பொருளானவன், ஆதிதேவன், புராண புருஷன், குரு சிரேஷ்டன், உலகைத் தாங்குபவன், அறியத் தகுந்தவன். அனைத்தும் அறிந்தவன். பரம பதமானவன். எண்ணிலா வடிவம் கொண்டவன். எங்கும் நிறைந்தவன். வீரத்தில் உறைந்தவன். ஆற்றிலில் உயர்ந்தவன். காற்றும் நீயே… காலனும் நீயே, மழையும் நீயே.. தண்மதியும் நீயே, மேலும் நீயே பிரஜாபதி. நீயே பிரம்மனின் தந்தை. உன்னை ஆயிரம் தடவையும் அதற்கு மேலும் வணங்குகிறேன். முன்புறமும் வணங்குகிறேன். பின்புறமும் வணங்குகிறேன், எல்லாப் பக்கங்களிலும் வணங்குகிறேன்.
அச்சுதா, உன் பெருமையறியாமல் அன்பினாலும் அறியாத்தனத்தாலும், உன்னைத் தோழனாய்க் கருதி “அடடே கண்ணா, அடே யாதவா, அடே நண்பா” என்றெல்லாம் ஏக வசனத்தில் அழைத்திருக்கிறேன். உண்ணும் போதும், உறங்கும் போதும், உவந்து விளையாடும் போதும், ஏகாந்தமாய் இருக்கும் போதும், எத்தனையோ பேர் இருக்கும் போதும் ஏளனம் செய்து உன்னை நான் அவமதித்திருந்ததால், அருள்கூர்ந்து அவற்றையெல்லாம் மன்னித்தருள்க, நெடுஞ்சாண்கிடையாக விழுந்து நான் கேட்டுக் கொள்கிறேன். மகனுக்குத் தந்தை போலவும், தோழனுக்குத் தோழன் போலவும், காதலனுக்குக் காதலி போலவும், பிழை பொறுத்தருள்க.
தேவதேவா, இது வரை எவரும் கண்டிராத உன் தெய்வீக உருவைக் கண்டு நான் மட்டிலா மகிழ்ச்சியடைகிறேன். இருந்தாலும் என் மனம் பயத்தால் நடுங்குகிறது. மகுடம் தரித்து, 9கதையும் சக்கரமும் கையில் ஏந்திய உன் பழைய உருவத்தைப் பார்க்க விரும்புகிறேன். நான்கு கை கொண்ட அந்த நாயக உருவத்துடன் சேவை தர வேண்டுகிறேன்.
கண்ணன்: அர்ஜுனா, நான் உள்ளம் குளிர்ந்து என்னுடைய யோகத்தினால் உனக்கு இந்த விசுவரூபத்தைக் காட்டினேன். வேதம் கற்றாலும், வேள்வி நடத்தினாலும், தவம் புரிந்தாலும், தானம் செய்தாலும் எவருமே காண முடியாத என் தெய்வீக வடிவத்தை இப்போது நீ கண்டு கொண்டாய். 10உன்னைத் தவிர வேறு யாரும் இதற்கு முன் இதைக் கண்டதில்லை. இந்த கோர வடிவத்தை கண்டு நடுங்க வேண்டாம், பயப்படாதே, மறுபடியும் மகிழ்ச்சியோடு என் பழைய வடிவத்தைப் பார்.

(இவ்வாறு கூறிய கண்ணன் பயங்கரமான அந்த விசுவரூபத்தை மறைத்து, சாந்த மயமான தன் இனிய வடிவத்தை மீண்டும் காட்டினான். அச்சத்தால் நடுங்கிய அர்ஜுனனைத் தேற்றினான்)
அர்ஜுனன்: ஜனார்தனா, இப்போது தான் எனக்கு நிம்மதி. சாந்தமயமான உன் மோகன வடிவைக் கண்ட பிறகு தான் எனக்கு ஆறுதலாக இருக்கிறது.
கண்ணன்: பாண்டவா, எப்போது காண்போம் என்று ஏங்கி நிற்கும் தேவர்களும் காண முடியாத விசுவரூபத்தை நீ கண்டுவிட்டாய், வேதம் பயின்றும், தவமியற்றியும், தானம் செய்தும் காண முடியாத தெய்வீக ரூபத்தைக் கண்களால் உண்டுவிட்டாய், மாறாத பக்தி ஒன்றின் மூலமாகத்தான் இந்த நிலையில் என்னை காண முடியும், உள்ளபடி என்னை அறிய முடியும். அடைய முடியும்‚ எனக்கு பலன் வேண்டாம், எல்லா உயிர்களுக்கும் நலன் வேண்டும் என்ற எண்ணத்துடன் என்னையே நினைந்தவனாய், எனக்காகவே செயல்படும் பக்தனே என்னை அடைகிறான்.
(பதினொன்றாம் அத்தியாயம் நிறைவு பெற்றது)

1.ஆக்கல், அழித்தல், காத்தல், ஆளுதல், தாங்குதல், கல்யாண குணங்களுடன் இருத்தல், எதிலும் உயர்ந்ததாக இருத்தல், எல்லாவற்றைக் காட்டிலும் வேறாக இருத்தல் என்று எல்லா நிலைகளிலுமுள்ள உன் வடிவம். – ஸ்ரீ ராமாநுஜர்
2.ஆதித்யர்கள் 12, வசுக்கள் 8, ருத்ரர்கள் 11, மருத்துக்கள் 7, இவை முன்பே விளக்கப் பெற்றுள்ளன.
3.அசுவினி தேவதைகள் இருவர்: அசுவினி குமாரர் இரு சகோதரர். விஷ்ணு புராணத்தில் இவர்கள் சூரிய புத்திரர்களாகவும், இராமாயணத்தில் கசியபரின் புத்திரர்களாவும், வாயு புராணத்தில் பிரம்மாவின் காதில் உதித்தவர்களாகவும் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு இவர்கள் வௌ;வேறு கல்பத்தில் தோன்றினர் எனக் கொள்ளுதல் வேண்டும். இவர்கள் ததீசி முனிவரிடத்தில் ஞானோபதேசம் பெற்றனர்.

– உரையாசிரியர் அண்ணா
4.ஆயிரம் கண்கள் உண்டு உனக்கு. இருப்பினும் கண்ணென்று ஏது உனக்கு. உனக்கு ஆயிரம் வடிவங்கள் உண்டு. இருப்பினும் வடிவமென்று ஏது உனக்கு? உனக்கு ஆயிரம் தாமரைப் பாதங்கள் உண்டு. இருப்பினும் பாதமென்று ஏது உனக்கு? ஆயிரம் நாசிகள் உண்டு உனக்கு. இருப்பினும் நாசி என்று உனக்கு உண்டோ? வியப்பிலும் வியப்பே, நீ எங்கும் நிறைந்துள்ளாய்.
– குரு நானக்
5.ஓடிப்போகவும் முடியாதவர்களாய் – ஸ்ரீ சங்கரர்
6.சாத்யர்: தட்ச கன்னிகையான சாத்தையிடம் பிறந்த தருமரின் புத்திரர்கள் சாத்யர்கள்.

1.விசுவதேவர்: தட்ச கன்னிகையான விசுவா தேவியிடம் தருமரின் புத்திரர்கள் பதின்மர் விசுவ தேவர்கள்.
2.வாள் தன்னை ஆக்கச் சொல்லவில்லை. தன்னைப் பயன் படுத்துபவரைத் தடுக்கவில்லை. தான் உடைந்து போனாலும் ஒதுக்கி வைக்கப்பட்டாலும் வருந்தவில்லை. ஆக்கப்படுவதிலும் ஆனந்தமுண்டு. பயன்படுத்தப்படுவதிலும் ஆனந்தமுண்டு. அந்தச் சமமான ஆனந்தத்தைக் கண்டு கொள்வாய்.
– ஸ்ரீ அரவிந்தர்.
3.இந்தப் போரில் கண்ணன் ஆயுதம் எடுப்பதில்லை என்ற விரதங்கொண்டு கையில் சவுக்கும் லகானும் பிடித்திருந்தார். திவ்ய ஆயுதங்கள் தாங்கிய வடிவையும் காண விரும்புகிறான் அர்ஜுனன்.
4. நான் அளித்த திவ்யதிருஷ்டியால் நீ கண்டவாறு என் விசுவரூபத்;தை வேறு யாரும் கண்டதில்லை. மண் திறந்த வாயில் யசோதை கண்டதும், கௌரவர் சபையில் துரியோதனதியர் கண்டதும் நீ கண்டதற்கொப்பாகாது.
– உரையாசிரியர் அண்ணா.

( திரு எஸ் மெய்யப்பன் உலக மக்கள்தொகைத் திட்டத்தின் உறுப்பினராய் தமிழ் நாட்டு அரசுப் பணியில் இருந்தவர்.சௌடீஸ்வரி மலர் என்ற மாத இதழின் ஆசிரியராய் இருந்தவர். )

Series Navigation

author

எஸ் மெய்யப்பன்

எஸ் மெய்யப்பன்

Similar Posts