பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 6

This entry is part [part not set] of 34 in the series 20070906_Issue

எஸ் மெய்யப்பன்



அத்தியாயம் ஒன்பது ராஜவித்யா, ராஜகுஹ்ய யோகம்
ராஜ என்பது உயர்ந்தது வித்யா என்பது வித்தை குஹ்ய என்பது இரகசியம். வித்தைகளில் சிறந்தது என்பதும் இரகசியங்களில் உயர்ந்தது என்றும் பொருள்.

வித்தைகளில் சிறந்ததும், இரகசியங்களில் மேலானதுமான பக்தி யோகத்தின் தன்மைகளும் மேன்மைகளும் அவற்றின் பலன்களும் இதில் விளக்கப் பெற்றுள்ளன.

இதில் 34 சுலோகங்கள் அடங்கியுள்ளன.

—————-

கண்ணன்: அர்ஜுனா‚ அமங்கலத்திலிருந்து நீ விடுபடப் பயன்படும் அறிவு மற்றும் அனுபவம் பற்றிய இரகசியத்தைக் கூறுவேன். இது வித்தைகளில் ராஜா போன்றது சுத்தங்களில் உன்னதமானது இரகசியங்களில் பரமரகசியமானது, தர்மத்தை விட்டுப் பிறழாதது, கடைப்பிடிக்க மிகவும் சுலபமானது கண்கூடாகக் காணக் கூடியது. காலாகாலத்திற்கும் அழிவில்லாதது.

வெளிப்படையாய்க் கண்களுக்குப் புலப்படாத நான், மாயத்தோற்றத்தில் உலகமெல்லாம் பரவி இருக்கிறேன். என்னுள் எல்லா உயிர்களும் அடங்கியுள்ளனவே தவிர, அவற்றிற்குள் நான் அடங்கியிருக்கவில்லை. எந்தப் பொருளும் அந்தப் பொருளாக என்னிடம் இருப்பதில்லை. ஆனால் என்னுடைய ஆத்மா அவற்றைத் தாங்கி நிற்கிறது, அவற்றை உண்டு பண்ணுகிறதுƒ ஆனால் அது அந்தப் பொருட்களில் தங்குவதில்லை1.

வானத்தில் சஞ்சரிக்கும் காற்றைப் போல், பரந்து விரிந்த என்னுடைய தோற்றத்திற்குள் எல்லா உயிர்களும் சஞ்சரிக்கின்றன. பிரளய காலத்தில் உலகமும் எல்லா உயிர்களும் அழிந்து என்னோடு கலந்து விடுகின்றன. பிறகு படைப்புத் தொழிலைத் தொடங்கும் பொழுது மறுபடியும் அவற்றைத் தோற்றுவிக்கிறேன். இயற்கையில் கலந்த இவ்வுயிர்த்திரள் அனைத்தையும் நான் தான் மீண்டும் மீண்டும் உற்பத்திச் செய்கிறேன். அப்படைப்புத் தொழிலில் பற்று வைக்காமல் ஒதுங்கியே நிற்கும் என்னை அந்தக் கருமம் கட்டுப்படுத்துவதில்லை. இயற்கையில் அமைந்த இயக்கம் தான், என்னை சாட்சியாக வைத்து உலகத்தைப் படைக்கிறதுƒ உலகமும் இயங்குகிறது. இந்த என் உண்மைச் சொரூபத்தை அறியாத மூடர்கள் „இவன் மனிதன்… என்று என்னை அவமதிக்கிறார்கள்ƒ விவேகமற்ற அவர்கள் அர்த்தமற்ற கோரிக்கைகளை முன் வைக்கிறார்கள்ƒ வீணான காரியங்களில் ஈடுபடுகிறார்கள்ƒ மதியை மயக்கும் ராட்சச மற்றும் அசுர இயல்புகளையே அடைகிறார்கள்.

ஆனால் மகாத்மாக்கள் „அழிவற்ற ஆதி முதல்வன் இவனே… என்று என்னை அறிந்து கொண்டு என்னையே வழிபடுகிறார்கள். அவர்கள் எப்பொழுதும் என்னையே நினைத்து ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் இருக்கிறார்கள்ƒ கடுமையான விரதங்களால் சதா என்னைத் தேடிக் கொண்டும், யோக முறைகளால் உள்ளத்தால் என்னையே சூடிக் கொண்டும் இருக்கிறார்கள்ƒ சிலர் என்னை அறிவைக் கொண்டு தேடுகிறார்கள்ƒ மற்றும் சிலர் என்னை ஒரே வடிவத்தில் தேடுகிறார்கள்ƒ இன்னும் சிலர் பல்வேறு வடிவங்களிலும் கண்டு புகழ்ந்தேத்திப் பாடுகிறார்கள். இவ்விதம் தன்னிலிருந்து என்னை வேறாக நினைக்காமல், அல்லும் பகலும் அனவரதமும் என்னையே தொழுகின்றவர்களின் யோக N~மங்களை2 நானே கவனித்துக் கொள்ளுகிறேன்.

அர்ஜுனா‚ நானே கர்மம்‚ நானே யாகம்‚ நானே ஆகுதி‚ நானே மருந்து‚ நானே மந்திரம்‚ நானே நெய்‚ நானே நெருப்பு‚ நானே ஆவி‚

மேலும் கேள், அர்ஜுனா‚ அன்னையும் நானே‚ அப்பனும் நானே‚ பாட்டனும் நானே‚ பூட்டனும் நானே‚ அழுக்கெடுப்பவனும் நானே‚ ஆதார சுருதியும் நானே‚ „ஓம்… எனும் ஓங்காரமும் நானே‚ ரிக், யஜீர், சாம வேதமும்3 நானே‚ ஆள்பவனும் நானே.. அறியத்தக்கவனும் நானே‚ கதியும் நானே.. சாட்சியும் நானே‚ வித்தும் நானே.. சத்தும் நானே‚ தஞ்சமும் நானே.. தாங்குபவனும் நானே‚ இருப்பிடம் நானே.. பிறப்பிடம் நானே‚ பின்னிடம் நானே.. புகலிடம் நானே‚ நண்பனும் நானே.. நாயகனும் நானே‚ வெயிலும் நானே.. மழையும் நானே‚ கொடுப்பவன் நானே.. தடுப்பவன் நானே‚ இறப்பும் நானே.. இறவாமையும் நானே‚ இருப்பும் நானே.. இல்லாமையும் நானே‚ எங்கும் எதிலும்.. என்றும் இருப்பவன் .. நானே நானே‚

எல்லா உயிர்களிடமும் நான்4 சமமாய் இருக்கிறேன். எனக்கு நண்பனும் இல்லை, பகைவனும் இல்லை, என் பக்தர்கள் என்னிடம் இருக்கிறார்கள்.. நான் அவர்களிடம் இருக்கிறேன். எனக்கு நீ எதைக் கொடுத்தாலும் பக்தியுடனும் பரிசுத்த மனத்துடனும் கொடு‚ இலை கொடுத்தாலும் சரியே… மலர் கொடுத்தாலும் சரியே‚ கனி கொடுத்தாலும் சரியே.. எதுவும் இல்லையென்றால் கொஞ்சம் தண்ணீராவது கொடு‚ மகிழ்ச்சியுடன் நானதை உண்பேன்‚ நீ உண்பது, படைப்பது, தானம் செய்வது, தவம் செய்வது, எதுவாக இருந்தாலும் எல்லாவற்றையும் எனக்கே அர்ப்பணம் செய்துவிடு‚ அப்படிச் செய்தால் மங்கலம் அமங்கலம் முதலிய கரும பந்தங்களிலிருந்து விடுபடுவாய்.. என்னுடனே முடிபடுவாய்‚

சொர்க்க நாட்டம் கொண்டவர்கள் சோமபானம் செய்து, மூன்று வேதங்களையும் முறையாகக் கற்று, வேள்விகளில் வழிபட்டால் பாவநீக்கம் பெற்று, விரும்பியபடியே தேவலோகம் நுழைகிறார்கள். திகட்டாத இன்பங்களில் இழைகிறார்கள், செய்த புண்ணியம் தீர்ந்ததும், மீண்டும் உலகப் பிறப்பில் வீழ்கிறார்கள், போகப்பித்தர்களாய் வாழ்கிறார்கள், இவ்வித தர்மத்தைப் பின்பற்றுகிறவர்கள் மீண்டும் மீண்டும் பிறக்கிறார்கள்.. இறக்கிறார்கள்.

வேறு தேவதைகளிடம் பக்தி கொண்டு பூஜை செய்கிறவர்களும், தவறான முறையில் என்னையே தான் வணங்குகிறார்கள். என்னை உள்ள படி அறிந்து கொள்ளாத அவர்களின் பூசனையை நான் ஏற்றுக் கொண்டாலும், அதன் பலனை அவர்கள் அடைவதில்லை.

முன்னோரை வழிபடுவோர் அந்த முன்னோரை அடைகின்றனர். தேவர்களுக்காக விரதம் பூணுவோர் அந்தத் தேவர்களை அடைகின்றனர். பேய் பூதங்களை வணங்குவோர் அவற்றையே அடைகின்றனர். என்னைத் தொழுவோர் என்னையே அடைகின்றனர். ஒழுக்கமற்றவனும் கூட பிற தெய்வங்களை விட்டு என்னையே வணங்கினால், நல்ல முடிவுக்கு வந்த அவனை நல்லவனென்றே கருத வேண்டும். ஏனெனில் விரைவில் அவன் விவேகியாக மாறி விடுவான், அமைதி நிலையில் ஊறிவிடுவான். அது மட்டுமல்ல அர்ஜுனா‚ தாழ்ந்த பிறவி5 என்று கருதப்படுபவர்களும், மாதர்களும், வணிகர்களும், சூத்திரர்களும் கூட என்னை வணங்கினால் நற்கதி அடைவார்கள். அப்படி இருக்கும் போது அந்தணர்களைப் பற்றியும், அருந்தவர்களான ராஜரிஷிகளைப் பற்றியும் சொல்லத்தான் வேண்டுமோ? அதனால் என் பக்தனுக்கு என்றுமே அழிவில்லை என்பதை உறுதி செய்து கொள்‚ என்னையே நினைத்து.. என்னையே வணங்கி.. என் திருவடிவளையே சேர்ந்து கொள்‚

(ஒன்பதாம் அத்தியாயம் நிறைவு பெற்றது)

1.அலைகள் நுரைகளை உண்டாக்குகின்றன. ஆனால் தான் உண்டாக்கிய நுரையில் தண்ணீர் உட்காருவதில்லை. – கண்ணதாசன்

2.ஒருவன் அடைய முடியாததை விரும்பி அடைதல் யோகம். அடைந்ததைக் காப்பாற்றுதல் N~மம். பக்தன் அடைய விரும்புவது பக்தி ஒன்றே. ஆகையால் அதற்கு அவசியமான வஸ்துக்களையும் சாதனங்களையும் அடைதலே யோகம.; அதற்கேற்படும் இடையூறுகளிலிருந்து காக்கப்படுதலே N~மம். – உரையாசிரியர் அண்ணா.

3.அதர்வண வேதம் குறிக்கப்படவில்லை. ஒரு வேளை அது கீதைக்குப் பிறகு தோன்றியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

4.அக்கினியைப் போல் நான் உள்ளேன். எட்டி நிற்பவர் குளிரை அக்கினி போக்குவதில்லை. அருகில் நெருங்குவோர் குளிரை அது போக்குகிறது. இது அக்கினியின் பாரபட்ச மற்ற தன்மை. இது போலவே தான் பக்தர்கள்; என் அருள் பெறுவதும்.. மற்றவர்கள் பெறாததும். – ஆதி சங்கரர்.

5.‘விருத்ராசுரன் பிரகலாதன், விருஷபர்வா, பலி, பாணன், மயன், விபீஷணன், சுக்ரீவன், ஹனுமான், ஜாம்பவான், கஜேந்திரன், ஜடாயு, வியாதன், கோபிகைகள், யக்ஞ பத்தினிகள் என்று பலரும் அந்தந்த யுகங்களில் சாதுக்களின் சேர்க்கையால் நன்னிலை பெற்றனர். இவர்கள் வேதங்களைப் பயின்றவர்களல்லƒ பெரியோர்களை உபாசித்தவர்களல்லƒ விரதங்களை அனுஷ்டித்தவர்களல்ல, தவம் செய்தவர்களில்லைƒ சாதுக்களின் சேர்க்கையினால் மட்டுமே என்னை அடைந்தவர்கள்.” – பாகவதம்.


(காலஞ்சென்ற திரு எஸ் மெய்யப்பன் உலக மக்கள்தொகைத் திட்டத்தின் உறுப்பினராய் தமிழ் நாட்டு அரசுப் பணியில் இருந்தவர்.சௌடீஸ்வரி மலர் என்ற மாத இதழின் ஆசிரியராய் இருந்தவர். )

Series Navigation

author

எஸ் மெய்யப்பன்

எஸ் மெய்யப்பன்

Similar Posts