பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 5

This entry is part [part not set] of 37 in the series 20070830_Issue

எஸ் மெய்யப்பன்


அத்தியாயம் ஏழு
விஞ்ஞான யோகம்

விஞ்ஞானம் என்பது அனுபவம். மாயை இறைவனின் உண்மைத் தன்மையை மறைக்கிறது. அதை நீங்க வல்லவன் அந்த இறைவனே‚ நான்கு வகையான பக்தர்களில் ஈசுவர தத்துவத்தை உணர்ந்த ஞானியே சிறந்தவன். தேவதைகளை வணங்கும் பக்தர்களும் இறைவன் அளிக்கும் பலன்களைப் பெறுகின்றனர்.ஆனால் அவை அழியக் கூடியவை. இக்கருத்துக்கள் இதில் விளக்கப் பெறுகின்றன.

இதில் 30 சுலோகங்கள் அடங்கியுள்ளன.

———-

கண்ணன்: மேலும் கேள் 1பார்த்தா, என்னையே மையப்படுத்தி அறியும் வழியை, ஐயத்திற்கு இடமின்றி இப்போது கூறுவேன். ஆன்மீக ஞானம், அனுபவம் காட்டும் அகண்ட 2விஞ்ஞானம் இரண்டைப் பற்றியும் முழுமையும் அறிந்தவன், உலகினில் அனைத்தும் முற்றும் கற்றவன்.

ஆயிரக்கணக்கான மக்களில் யாரோ ஒருவர் தான் சித்தியடைய முயல்கிறான்ƒ அவ்விதம் சித்தியடைய முயல்பவர்களில் எவனோ ஒருவன் தான் 3என்னை உள்ள படி அறிகிறான். எனது இயற்கையானது பூமி, நீர், நெருப்பு, காற்று, வானம், மனம், புத்தி, அகங்காரம் என்று எட்டு வகையாய்ப் பிரிந்துள்ளது. எனது இயற்கையில் இதுவே தாழ்ந்ததுƒ உயர்ந்த இயற்கையும் ஒன்றுண்டு அர்ஜுனா‚ அதுவே ஜீவன் என்பது. அதன் மூலம் தான் நான் இந்த உலகைத் தாங்குகிறேன். இவ்விரு வகை இயற்கையிலிருந்து தான் எல்லா உயிர்களும் தோன்றுகின்றன. உலகங்களின் தோற்றத்திற்குக் காரணம் நானே‚ அவற்றின் அழிவுக்கும் காரணம் நானே‚

தனஞ்ஜயனே, என்னை விட உயர்ந்தது, உலகில் வேறொன்றும் இல்லை. நூலில் கோர்த்த மணிகள் போல் உலகம் முழுவதும் என்னையே பற்றி நிற்கிறது. நீரினில் சுவையும் நானே‚ நெருப்பினின் சுடரும் நானே, சூரிய சந்திரரில் ஒளியும் நானே, 4வானிலே ஓசையும் நானே, வேதங்களில் ஓம்காரம்5 நானே, பூமியில் நறுமணம் நானே, பூதங்களின் வித்தும் நானே, உயிர்களில் உயிரும் நானே‚ முனிவர்கள் தவமும் நானே‚ அறிஞரின் அறிவும் நானே‚ மனத்தில் ஆண்மையும் நானே‚ வீரரின் வீரம் நானே‚ பலவானின் பலமும் நானே‚ தர்ம விரோதமற்ற ஆசையும் நானே‚

சாத்விகம், ராஜசம், தாமசம் என்ற குணங்களுடன் உலகில் உள்ள அனைத்துப் பொருள்களும் என்னிலிருந்து தோன்றியவை தான். அவற்றிற்கு 6நான் அடங்கியவனல்ல, அவை அனைத்துமே என்னுள் அடக்கம். இந்த மூன்று குணமக்கள், அந்தக் குணங்களுக்கு நான் அப்பாற்பட்டவன் என்பதையும், அழிவற்றவன் என்பதையும் அறிந்து கொள்வதில்லை. முக்குண மயமான இந்த தேவமாயை வெல்லற்கரியது, என்னைச் சரண் அடைந்தவர் மட்டுமே அதை வெல்ல முடியும். ஆனால் பாவிகள் 7என்னைச் சரணடைவதில்லை. அவர்கள் மூடர்கள், மானிடப் பதர்கள், அறிவிழந்தவர்கள் அரக்கத் தன்மை கொண்டவர்கள்.

நான்கு விதமானவர்கள் நாடி என்னை வழிபடுகின்றனர். துயரமடைந்தவர்கள், நற்கதியை நாடுகின்றவர்கள், ஈசுவர தத்துவம் அறிய விரும்புகிறவர்கள், ஈசுவர ஞானம் கைவரப் பெற்றவர்கள் என்ற இந்த நான்கு வகையினரும் உயர்ந்தவர்கள் தான். இவர்களில் எப்பொழுதும் என்னிடம் தொடர்பு கொண்டு, என்னை மட்டுமே வணங்குபவன் தான் உயர்ந்த ஞானி. மனத்தை அடக்கி என்னில் கலந்துவிட்டவனே என்னுடைய ஆத்மா8 பற்பல பிறவிகளின் பயனாய் ‘எல்லாம் கண்ணனே” என்ற ஞானம் பெற்றவனே மகாத்மா, அவன் கிடைத்தற்கரியவன், அவன் என்னை நேசிக்கிறான், நானும் அவனை நேசிக்கிறேன்.

அது வேண்டும் இது வேண்டும் என்று ஆசைப்படும் மக்கள் விரதங்கள் மேற்கொள்ளுகிறார்கள், தேவதைகளை வணங்குகிறார்கள். அந்த வழிபாட்டையும் நான் ஏற்றுக்கொள்ளத் தான் செய்கிறேன். அது மட்டுமல்ல.. அத்தேவதைகள் மூலமாகவே, அவர்கள் விரும்பிய பலனை நானே அவர்களுக்குத் தருகிறேன். ஆனால் அந்தப் பலன் அழித்துவிடக் கூடியது. தேவர்களை வழிபட்டால் தேவர்களை அடையலாம், என்னை வழிபட்டால் என்னையே அடையலாம். இணையற்ற, அழிவற்ற என் பரமாத்ம வடிவத்தை அறியாத மூடர்கள், பிறவியற்ற என்னை 9பிறந்தவன் என்று எண்ணுகின்றனர். மாய சக்தியால் மறை பொருளாக விளங்கும் நான் அனைவருக்கும் வெளிப்படையாகத் தெரிவதில்லை. ஆனால் தெளிவற்ற மக்கள், ஆதியும் அந்தமும் இல்லாதவன் நான் என்பதை அறிந்து கொள்வதில்லை. நடந்தவை, நடப்பவை, நடக்க இருப்பவை அனைத்தையும் நான் அறிவேன். ஆனால் என்னைத் தான் யாரும் அறிந்ததில்லை.

சுகம் துக்கமாகிய இருவகை உணர்வுகளால், எல்லா ஜீவராசிகளும் பிறக்கும் போதே மயங்கி விடுகின்றன. ஆனால் புண்ணியத்தால் பாவத்தை விரட்டுகிறவர்கள் இந்த இரட்டைகளின் பிடியிலிருந்து விடுபட்டு, உறுதியான விரதம் பூண்டு என்னையே வணங்குகிறார்கள். ஆத்மயோக கர்மயோகம் அனைத்தையும் அறிந்து கொண்டவர்கள், மூப்பு மரணம் ஆகியவற்றிலிருந்து பிடியிலிருந்து விடுபடுவதற்காக என்னையே சரணடைந்து வணங்குகிறார்கள். பூதங்கள் பற்றிய அறிவும், தெய்வங்கள் பற்றிய உணர்வும், கேள்விகள் பற்றிய தெளிவும் பெற்றவர்கள், அவர்கள் இறக்கும் காலத்திலாவது எனது உண்மைச் சொரூபத்தை அறிகிறார்கள்.

(ஏழாம் அத்தியாயம் நிறைவு பெற்றது)

1.பிரிதாவின் மகன்.

2.விஞ்ஞானம் என்பது ஒரு பொருளை நன்றாய் அறிவதாம். „பால்… எனும் ஒரு பொருளை எடுத்துக் கொள்வோம். அதைப் பற்றிக் காதால் மட்டும் கேட்டவன் அஞ்ஞானிƒ பார்த்தவன் ஞானிƒ ருசி கண்டவன் விஞ்ஞானி. பகவானைக் கண்டு அவனுடன் உறவு கொண்டாடுவது தான் விஞ்ஞானம்.

3.அத்தகையவன் ஒருவனுமில்லை என்பது பொருள். – ஸ்ரீ ராமாநுஜர்

4.கண்ணால் சூரியனைப் பார்க்கிறோம். கண்ணும் அவனே, ஞாயிறும் அவனே, இந்தத் தொடர்பும் அவனே. – ஸ்ரீ ராமாநுஜர்

5.எல்லா வேதங்களிலும் பீஜமந்திரமாய் இருப்பது ஓங்காரம். – சுவாமி சித்பவானந்தர்

„ஓம்… அதாவது „அவும்… என்பது ஒலிகளுக்கெல்லாம் ஆதார வார்த்தை. முதல் எழுத்து “அ” நாக்கால் வாயின் உள் பகுதியைத் தொடாமலே ஒலிப்பது. “ம” என்ற கடைசி ஒலி உதடுகளை மூடுவதால் உண்டாக்கப்படுவது. “உ” என்பது இவ்விரண்டுக்கும் இடையில் வாய் முழுவதும் உருள்வது. எனவே “ஓம்” என்பது அனைத்து ஒலிகளுக்கும் அடிப்படை நாதம். – சுவாமி விவேகானந்தர் “அ” என்ற எழுத்து எட்டு என்ற தமிழ் எண்ணைக் குறிக்கும். இந்த அகரம் எண் சாண் உடலாய்ப் புறத்தே உருவம் பெறுகிறது. “உ” என்ற எழுத்து இரண்டு என்ற தமிழ் எண்ணைக் குறிக்கும். இந்த உகரம் இருவகை மூச்சாகி நித்ய மூச்சாகவும், அநித்ய மூச்சாகவும் செயல்படுகிறது. எண் சாண் உடம்பில் நித்திய மூச்சு, அருவமாயும் அநித்ய மூச்சு உருமாயும் செயல்படுகின்றன. “ம்” என்ற மகர மெய்யே உயிருக்கு ஆதாரமாகிறது. உண்மை ஞான அனுபவத்துக்குக் காரணமாகிறது. காண்பதற்கு அரிய அருவமாய் இருந்து ஆட்சியும் செய்கிறது. – சுவாமி சரவணானந்தா

6.அலைகள் சமுத்திரத்தில் இருப்புடையனவேயன்றி சமுத்திரம் அலையில் இருப்புடையதன்று. – ஆதி சங்கரர்.

7.பாவிகள் அவர்கள் செய்யும் பாவங்களுக்கு ஏற்ப மூடர்கள்,, மானிடப் பதர்கள், அறிவிழந்தவர்கள், அரக்கத் தன்மை கொண்டவர்கள் என்று நான்கு வகையாகப் பிரிக்கப்படுவார்கள். – ஸ்ரீ ராமாநுஜர்.

8.என்னை விட்டு உயிர்வாழ முடியாத அவனைப் போலவே, அவனை விட்டு நானும் உயிர் வாழ முடியாதென்று முடிவு கொண்டுள்ளேன். – ஸ்ரீ ராமாநுஜர்

9.இறைவன் நியமிக்கப் படாதவன், சிருஷ்டிக்கப்பட்டவனும் அல்ல, தானே இயங்குபவன், நிர்மலன்.
– குருநானக்
அத்தியாயம் எட்டு

அ~ரப் பிரம்ம யோகம்

அ~ரம் என்றால் அழியாதது, பிரம்மம் என்றால் பரம்பொருள். அறிவற்ற பரம்பொருள் பிரம்மம். உடலில் இருந்து ஆத்மா விடுபடும்போது, அந்தப் பரம்பொருளையே நினைத்திருந்தால், அந்த ஆத்மா பரம்பொருளையே அடையும். அதனால் எப்பொழுதும் பரம்பொருளை நினைத்தே தொழிலில் ஈடுபடுதல் சிறந்தது. இறுதியில் ஆத்மா செல்லும் வழி இரண்டு. இருள் வழி பிறப்பில் தள்ளும். ஒளி வழி பரம்பொருளில் சேர்க்கும். இக்கருத்துக்கள் இதில் விளக்கப்பெறுகின்றன.

இதில் 28 சுலோகங்கள் அடங்கியுள்ளன.

————

அர்ஜுனன்: ஓ புருஷோத்தமா, பிரம்மம் என்பது எது?

கண்ணன்: அழிவற்ற பரம்பொருளே பிரம்மம். அது எல்லாம் வல்லது‚ பழமைக்கும் பழமையானது‚ உலகனைத்தும் படைத்தது‚ அனைத்தையும் ஆள்வது, அணுவுக்குள் அணுவானது‚ நினைவிற்கு எட்டாதது‚ நெடிய உருவம் கொண்டது‚ ஆதவன் போல் பிரகாசிப்பது‚ அஞ்ஞான இருளை அகற்றுவது‚ அதுவே பிரம்மம்‚

அர்ஜுனன்: அப்படியென்றால் ஆத்மஞானம் என்பது என்ன?

கண்ணன்: பிரம்மத்தின் இயல்பை அறிந்து கொள்ளுவதே ஆத்ம ஞானம்.

அர்ஜுனன்: கர்மம் என்பது என்ன?

கண்ணன்: அசையும் பொருள் அசையாப் பொருள் என்று உயிர்களை உண்டாக்குவதற்காகச் செய்யப்படும் அர்ப்பண ரூபமான செயலே கர்மம் எனப்படும்.

அர்ஜுனன்;: அதிபூதம் என்று எதைச் சொல்கிறார்கள்?

கண்ணன்: அழியும் தன்மை கொண்டதற்குப் பெயர் அதிபூதம்.

அர்ஜுனன்: அதி தைவம் என்று சொல்லப்படுவது எது?

கண்ணன்: உடலில் உறையும் புருஷனே அதிதைவம்.

அர்ஜுனன்: அதியக்ஞம் என்பது எது?

கண்ணன்: அந்த உடலில் இருக்கும் நானே அதியக்ஞம்.

அர்ஜுனன்: அது எவ்விதம் இந்த உடலில் அதியக்ஞம் ஆயிற்று? மனதைக் கட்டுப்படுத்தியவர்கள் அந்திமக் காலத்திலாவது பரம்பொருளை அடைவதற்கு வழி என்ன?

கண்ணன்: குந்தி மகனே, பிராணனைப் புருவங்களின் மத்தியில் நிறுத்தி, மனத்தை ஒருமுகப் படுத்தி, சிந்தனையைப் பரம்பொருள் மேல் நிலைநிறுத்துவதை அன்றாடப் பழக்கமாக்கிக் கொள்ளுகிறவன் ஒளிப் பிழம்பான பரம்பொருளையே அடைகிறான் 1மரண காலத்திலாவது இப்பழக்கத்தை மேற் கொண்டாலும் அவன் பரம்பொருளையே அடைகிறான், அதாவது அந்திமக் காலத்தில் என்னையே நினைத்தவனாய் உயிர் துறப்பவனும் நிச்சயம் என்னையே அடைகிறான். வேறு எதையாவது நினைத்துக் கொண்டே இறப்பவன், எதை நினைத்தானோ அதையே அடைகிறான்.

ஆகையால் அர்ஜுனா, நீ போரிடும் போதெல்லாம் என்னையே நினைத்துக் கொண்டு போரிடு‚ மனத்தையும் அறிவையும் எனக்கே அர்ப்பணித்து விட்டுப் போரிடு, நீ என்னையே அடைவாய், இதில் சந்தேகமில்லை.

பற்றற்ற துறவிகள் பிரம்மச்சரிய விரதம் மேற்கொண்டு எதை அடைகிறார்களோ, வேதவிற்பன்னர்கள் எதை அழிவுற்றது என்று எண்ணுகிறார்களோ அதைப்பற்றி இப்போது சுருங்கச் சொல்லுகிறேன் கேள்‚

உயிர் மூச்சை உச்சந்தலையில் வைத்து, ஒருமுகப்பட்ட மனதை இதயக்கமலத்தில் வைத்து என்னையே நினைத்து “ஓம்”என்ற பிரணவ மந்திரத்தை நாவிலே வைத்து உடலைத் துறப்பவன் உயர்கதி அடைகிறான். இத்தகைய யோகி எளிதில் என்னைக் கண்டு கொள்கிறான். அப்படி என்னைக் கண்டு கொண்ட மகாத்மா மறுபடியும் பிறப்பதில்லை. பிரம்மலோகம் வரையுள்ள அழியக் கூடிய எல்லா உலகங்களிலும் மறுபிறப்பு உண்டு. ஆனால் என்னை அடைந்தவர்களுக்கு மறுபிப்பே கிடையாது.

பார்த்தா‚ பகல் இரவு இரண்டின் நிலை குறித்து இப்போது பகர்வேன்‚

ஆயிரம் யுகங்கள் பிரம்மாவுக்கு ஒரு பகல் 2இன்னும் ஒரு ஆயிரம் யுகங்கள் ஓர் இரவு. பிரம்மாவுக்குப் பகல் வரும் போது உலகில் மறைந்திருக்கும் பொருட்களெல்லாம் காட்சிக்கு வருகின்றன. இரவு வரும் போது அவை பழைய உலகத்திலேயே மறைந்து விடுகின்றன3. மறுபடியும் பகல் வரும்போது அப்பொருட்கள் மீண்டும் பிறக்கின்றன. மறுபடியும் இரவு வரும்போது மீண்டும் மறைகின்றன. இயக்கத்திற்கெல்லாம் அப்பாற்பட்டு அழியாதது ஒன்று இருக்கிறது. அதை அடைந்து விட்டால் அங்கிருந்து திரும்புவது என்ற பேச்சுகே இடமில்லை. அது தான் என்னுடைய திருவடிகள். எங்கும் பரவி நிற்கும் பரம்பொருளான என்னிடம் எல்லாம் பொருட்களுமே அடங்கியுள்ளன. என்னையே நினைத்து என் திருவடிகளை அடைந்தவனுக்குப் பிறகு என்றுமே பிறப்பு என்பது இல்லை.

பாரதச் செல்வா, எந்தக் காலத்தில் மரணமுற்றால் யோகிகளுக்கு மறுபிறவி இல்லையோ, எந்தக் காலத்தில் மரணமுற்றால் அவர்கள் மீண்டும் பிறப்பார்களோ, அந்தக் காலங்களைப் பற்றி இப்போது சொல்லுவேன்.

நெருப்பு, வெளிச்சம், பகல், வளர்பிறைக் காலம், உத்திராயணக் காலம்4 இவற்றில் இறக்கும் ஞானிகள் பிரம்மத்தை அடைந்து பிறப்பை அறுத்துவிடுகிறார்கள். புகை, இரவு, தேய்பிறைக் காலம், தச்சிணாயனக் காலம்5 இவற்றில் மரணமுறும் ஞானிகள், சந்திரனுடைய ஜோதியை அடைந்து மீண்டும் பிறக்கின்றனர். ஒளியும் இருளும் உலகில் என்றும் நிலையானவை. ஒளி வழியில் செல்பவன் திரும்புவதில்லை. இருள் வழியில் போனவன், போன வேகத்தில் திரும்பவும் பிறக்கிறான். இந்;த இரு வழிகளையும் அறிந்து கொண்டவன் மயங்குவதில்லை. ஆகவே அர்ஜுனா, நீ எப்பொழுதும் யோகத்திலேயே நிலைத்திரு‚
( எட்டாம் அத்தியாயம் நிறைவு பெற்றது)

1.அஜாமிளன் என்பவன் பெரும் பாவங்களைச் செய்தவன். எனினும் அவன் இறக்கு முன் „நாராயணன்… என்ற தன் மகனைக் கூவி அழைத்ததால் காக்கப்பட்டான் என்பது பாகவதக் கதை.

2.கிருத, திரேதா, துவாபர, கலி ஆகியவை சேர்ந்தது சதுர் யுகம். ஆயிரம் சதுர் யுகம் கொண்டது பிரம்மாவின் ஒரு பகல். இன்னும் ஆயிரம் சதுர் யுகம் கொண்டது ஓர் இரவு. ஒரு பகலும் ஓர் இரவும் ஒரு நாள். 365 நாள் ஓர் ஆண்டு. இத்தகைய நூறு ஆண்டுகள் பிரம்மாவின் பூரண ஆயுள் என்பது மரபு.

முந்தையோர் கூரிய காலவரையறை: 15 நாள் (சுக்லப~ம்) வளர்பிறைƒ 15 நாள் (கிருஷ்ண ப~ம்) தேய்பிறை. இரண்டு ப~ம் கூடியது ஒரு மாதம். 6 மாதம், தைமுதல் ஆடி வரை உத்தராயணம். 6 மாதம், ஆடி முதல் தை வரை த~pணாயனம். தேவர்களுக்கு உத்திராயணம் பகல், த~pணாயனம் இரவு. இந்தப் பகலும் இரவும் சேர்ந்து, தேவர்களுக்கு ஒரு தினம். இம்மாதிரி 360 தினம், அதாவது 360 மனித வருஷம் ஒரு தேவ வருஷம்;. 1200 தேவ வருஷம் கலியுகம்ƒ 2400 தேவ வருஷம் த்வாபர யுகம். 3600 தேவ வருஷம் த்ரேதா யுகம். 4800 தேவ வருஷம் க்ருத யுகம். ஆக 12000 தேவ வருஷம் ஒரு சதுர் யுகம். 1000 சதுர் யுகம் பிரம்மதேவரின் பகல்ƒ 1000 சதுர்யுகம் பிரம்மதேவரின் இரவு. ஆக 2000 சதுர் யுகம் பிரம்மாவின் ஒரு நாள். இம்மாதிரி அவர் வயது 100. இதற்கும் பரம்… என்று பெயர். – உரையாசிரியர் அண்ணா.

3.இதுவே பிரளயம் எனப்படும். இது நான்கு வகைப்படும்.தோன்றிய பொருள்கள் அவ்வப்போது அழிவதும், இரவு தோறும் நமது உறக்கத்தில் உலகம் நம்மிடம் ஒடுங்குவதும் நித்யப் பிரளயம். பிரம்மாவின் ஓர் இரவான 1000 சதுர் யுகத்துக்கு ஒரு முறை அவரிடம் உலகம் ஒடுங்குவது நைமித்தியப் பிரளயம். ஒரு பிரம்மாவின் 100 வயது ஆயுள் முடிவில், அந்த பிரம்மாவும் அனைத்து உலகங்களும் ஆதி நாராயணனிடம் ஒடுங்குவது மகாப்பிரளயம். முடிவாக முக்தியடைவதே ஆந்யந்திகப்பிரளயம். – விஷ்ணு புராணம்

4.சூரியன் வடதிசை பயணம் செய்யும் ஆறு மாதங்கள்.

5.சூரியன் தென் திசைப் பயணம் செய்யும் ஆறு மாதங்கள்.


Series Navigation

author

எஸ் மெய்யப்பன்

எஸ் மெய்யப்பன்

Similar Posts