பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 2

This entry is part [part not set] of 36 in the series 20070809_Issue

எஸ் மெய்யப்பன்அத்தியாயம் மூன்று

கர்ம யோகம்

கர்மம் என்பது செய்யும் தொழில்.

தொழில் செய்வது இயற்கையானது மேன்மையானது. செய்வது அனைத்தையும் பரம்பொருளுக்கே அர்ப்பணிந்து விட வேண்டும். ஞானயோகம் தத்துவ ஞானிகளுக்கே பொருந்தும் மற்றவர்களுக்குக் கர்ம யோகமே சிறந்தது. இக்கருத்துக்கள் இதில் விளக்கப்படுகின்றன.

இதில் 43 சுலோகங்கள் அடங்கியுள்ளன.


அர்ஜுனன்: ஜனார்த்தனா, கர்மத்திலும் சிறந்தது ஞானமே என்பது உனது கொள்கையானால், ஏன் என்னை இந்தக் கொடும்போரில் ஈடுபடுத்துகிறாய்? முன்னுக்குப் பின் முரண்படுவது போல் தோன்றும் உன் உபதேச மொழிகள், எனக்குக் குழப்பத்தை உண்டாக்குகின்றன. இப்போது இரண்டிலே ஒன்றைச் சொல், எது எனக்கு நல்லது? அதைப் பின்பற்றி நான் பயன் பெறுகிறேன்.

கண்ணன்: குற்றமற்ற அர்ஜுனா, குவலயத்தில் மனிதனாகப் பிறந்தவன் மேற்கொள்ள வேண்டிய தவநெறிகளை நெடுங்காலத்திற்கு முன்பே நான் சொல்லியிருக்கிறேன். ஒன்று தத்துவ ஞானிகளுக்குரியது. ஞானயோகம், இன்னோன்று மற்றவர்களுக்குரியது கர்மயோகம்.

ஒருவன் கர்மங்களைச் செய்யாமல் இருப்பதாலேயே 1செயலற்ற நிலையை அடைவதில்லை. இன்னொருவன் துறவியாவதால் மட்டுமே பரம்பொருளை அடைவதும் இல்லை. உலகில் பிறந்த எவனும் கணப்பொழுதும் கூட இயங்காமல் இருப்பதில்லை. இயற்கைக் குணமே அவனை இயங்கத் தூண்டுகிறது. எவனொருவன் உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு, உள்ளத்தால் அவற்றை நினைத்துக் கொண்டிருக்கிறானோ.. அவன் மகா மூடன்‚ ஒழுக்கமற்றவன்‚ 2வேஷக்காரன்‚ கட்டுக்குள் உணர்வுகளை வைத்துக் கொண்டு, கர்மயோக காரியங்களில் ஈடுபடுகிறவனே உயர்ந்தவன். அதனால், உனக்கு விதிக்கப்பட்ட கருமத்தைச் செய்வாயாக, இல்லையெனில் உடம்பே உனக்குப் பாரமாகும். சும்மா இருப்பதைக் காட்டிலும், ஏதாவது ஒரு3 கருமம் செய்வதே வாழ்வின் சாரமாகும். கர்மத்தை எப்படிச் செய்வது என்பதைச் சொல்லுகிறேன். எந்தத் தொழிலையும் ஈசுவரக் கடமை என்றே செய்ய வேண்டும். பயன் கருதிச் செய்யும் தொழில் தான் உலகைப் பிணித்திருக்கும் விலங்கு. சிருஷ்டித் துவக்கத்தில் பிரம்மதேவன் ஒருயாகம் நடத்தி, மனிதர்களைப் படைத்து, அவர்களைப் பார்த்துச் சொன்னான்: 4‘பலுகிப் பெருகுங்கள், யாகம் உங்கள் ஆசைகளை நிறைவேற்றும் 5காமதேனுவாக இருக்கட்டும்;‚ நீங்கள் தேவர்களை வழிபடுங்கள், அவர்கள் உங்களுக்கு வளங்களைப் பொழியட்டும், இவ்விதம் பரஸ்பரம் பேணி பெருநன்மை அடையுங்கள், 6யாகம் செய்து தேவர்களைப் பேணுங்கள். நீங்கள் விரும்பும் சுகங்களை அவர்கள் தருவார்கள் அவர்கள் கொடுத்ததை அவர்களுக்கு நிவேதனம் செய்யாமல் உண்பவன் திருடன், எனவே யாகத்தில் மிஞ்சியதை உண்ணும் நல்லவர்கள் பாவங்களிலிருந்தும் விடுபடுகின்றனர். ஆனால் 7தமக்கு மட்டுமே சமைத்துண்ணும் பாவிகள், பாவத்தையே உண்கிறார்கள்.”

உணவிலிருந்து உயிர்கள் உண்டாகின்றன. மழையிலிருந்து உணவு உற்பத்தியாகிறது. மழை வேள்வியினால் உருவாகிறது. யாகம் மனிதனின் செயலால் உண்டானது. இந்தச் செயல் வேதத்தில் உதித்தது. வேதம் என்பது பிரம்மத்தில் தோன்றியது. எங்கும் நிறைந்த இந்தப் பிரம்மம். யாகத்தில் நிலைபெற்றுள்ளது. இந்தச் சங்கிலித்தொடர் சக்கர வட்டத்தைப் பின்பற்றாதவன் பாவியிலும் பாவியாவான். ஆனால் ஆத்மஞானத்தில் திளைத்து திருப்தி அடைகிறவனுக்கு தொழில் செய்யும் கடமை இல்லை அப்படிச் செய்தாலும் யாதொரு பயனுமில்லை, எவ்வுயிருடனும் அவனுக்கு உறவுமில்லை, ஆகவே பற்றைத் துறந்து பாங்குடன் பணிகளைச் செய்‚ இப்படிச் செய்பவன் பரம்பொருளை அடைவது மெய்‚ ஆம்.. 8ஜனகன் முதலானோர் கடமையைச் செய்தே முக்தியடைந்தார்கள். உனக்காக இல்லையென்றாலும் உலக நன்மைக்காக காரியத்தில் நீ ஈடுபட்டாக வேண்டும். ஏனெனில், தலைவன் செய்வதையே மற்றவர்கள் செய்கிறார்கள். அவன் நியாயம் என்பதையே மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளுகிறார்கள். என்னைத்தான் எடுத்துக் கொள்ளேன். மூவுலகிலும் எனக்கு கடமைகள் இல்லை. இனி அடைய வேண்டிய உடமைகள் இல்லை. ஆனாலும் நான் விடாமல் இயங்கிக் கொண்டே இருக்கிறேன். ‘எனக்கென்ன‚” என்று நான் எதுவுமே செய்யாமல் இருந்தால் என்ன ஆகும்? என்னைப் பின்பற்றி எல்லா மனிதர்களும் எதுவுமே செய்யாமல் சும்மாவே இருப்பார்கள். இதனால் உலகங்களெல்லாம் அழிந்து போகும். 9ஜாதிகளெல்லாம் கலந்து போகும் மனித இனமே குலைந்து போகும்.

பரதகுமாரா‚ பாமரமக்கள் பொருளாசையில் தொழில் செய்கிறார்கள்ƒ அறிவாளன் உலக நன்மைக்காக ஆசையற்றவனாய் தொழில் செய்ய வேண்டும். அப்பாவி மக்கள் உள்ளத்தில் அவன் தடுமாற்றத்தை உண்டாக்கக் கூடாதுƒ அனைத்துத் தொழில்களிலும் அவன் ஈடுபட்டு, மற்றவர்களையும் ஈடுபடுத்த வேண்டும். இயற்கையின் உந்துதல் தான் உலகின் தொழில்களை இயக்குகிறது. ஆனால் ஆணவ மனிதனோ, 10’நான் செய்தேன்‚ நான் செய்தேன்‚” என்று குதிக்கிறான். உண்மை அறிஞன் தான் அது இயற்கையின் செயல் என்றுணர்ந்து ஆசையைத் துறக்கிறான். ஆசை மிகுதியால் தொழில் செய்யும் மந்த புத்திக்காரர்களை அறிஞன் குழப்பக்கூடாது. இந்த என் மதக் கோட்பாட்டைப் பின் பற்றுகிறவர்கள் வினைகளிலிருந்து விடுபடுவார்கள். பொறாமையால் இதைப் பின்பற்றாமல் இகழும் மூடர்கள் அழிந்து படுவார்கள்.

அனைத்து உயிர்களுமே இயற்கையின் நியதிப்படியே இயங்குகின்றன. அறிஞனும் கூட தன் இயல்புப்படிதான் நடக்கிறான். அதைத் தடுப்பதில் பயனில்லை. அந்தந்தப் புலனுக்கு அந்தந்த நுகர்ச்சிகளில் விருப்பு வெறுப்புகள் இருக்கின்றன. இந்த விருப்பு வெறுப்புகள் கட்டுக்குள் இல்லையென்றால், அவையே அவனை அழிக்கும் எதிரிகள். மேலும் பிறனுக்குரிய தொழிலை நன்கு நுட்பத்துடன் செய்வதைக் காட்டிலும், தனக்குரிய தொழிலைத் தரங்குன்றவே செய்தாலும் கூட, அதுவே உயர்ந்தது. சுயதர்மத்தை நிறைவேற்றுவதில் ஒருவன் இறந்தாலும் அதுவே சிறந்தது. பரதர்மத்தைச் செய்வதோ மிகவும் ஆபத்தானது.

ஆகையால் அர்ஜுனா, நீ செய்யும் காரியத்தை எனக்கே அர்ப்பணித்து விடு, அது உன்னுடையது என்ற எண்ணத்தை நீக்கிவிடு;;‚ குழப்பங்கள் அனைத்தையும் போக்கிவிடு, பொங்கியெழுந்து போரிடப் புறப்படு.

அர்ஜுனன்: விருஷ்ணிகுலக் கிருஷ்ணா, மனிதன், தான் விரும்பாவிட்டாலும், பலவந்தமாக ஏவப்பட்டு, பாவப்பட்டச் செயல் செய்கின்றானே , அது ஏன்?

கண்ணன்: காமமும் குரோதமும் தான் அதற்குக் காரணம். அது மயக்கத்தில் பிறக்கிறது. பெருந்தீனி தின்கிறது. அது தான் உனக்குப் பகை என்பதைத் தெரிந்து கொள்‚ நெருப்பைச் சூழ்ந்திருக்கும் புகையைப் போல்;, கண்ணாடியில் படிந்திருக்கும் கறையைப் போல், கருவை மூடியிருக்கும் கர்ப்பப் பையைப் போல் ஆசையானது ஞானத்தைச் சூழ்ந்திருக்கிறது. ஆசையே ஞானத்தின் நித்திய வைரி. அது 11காம வடிவம் கொண்டது. 12நிரப்பவே முடியாதது. புலன்களும், புத்தியும், மனமும் தான் இந்த ஆசையின் இருப்பிடம். இவை அறிவை மறைத்து மனிதனை மயங்க வைக்கின்றன.

ஆகவே பரதகுலச் செல்வா, முதலில் நீ புலன்களை அடக்கிக் காமத்தை அழித்துவிடு, உடம்பைக் காட்டிலும் புலன்கள் உயர்ந்தவை தான். ஆனால் அவற்றிலும் மேலானது மனம், அறிவோ மனத்தை விடச் சிறந்தது, அறிவை விட உயர்ந்தது ஆத்மா, இந்த ஆத்மாவை அறிந்து கொண்டு, ஆத்ம சக்தியால் உள்ளத்தைத் திறந்து கொண்டு, வெல்லற்கரிய காமம் எனும் பகையைக் கொன்றுவிடு. வென்றுவிடு.

(மூன்றாம் அத்தியாயம் நிறைவு பெற்;றது)

1. கர்மம் செய்யாமல் இருந்தாலே முக்தி கிடைக்கும் என்றால் தாவரப் பொருட்களுக்கும் முக்தி கிடைக்க வேண்டும். – ஸ்ரீ மத்வர்

2. நீ ஜபமாலை உருட்டலாம்ƒ நெற்றியில் திருநீறு அணியலாம்ƒ நீண்ட ஜடை தரிக்கலாம்; ஆனால் உள்ளத்தில் கடும் நஞ்சு இருக்கும் போது, நீ எவ்விதம் கடவுளைக் காண முடியும்? -கபீர்தாஸ்

உண்மையை அறியாத வேஷதாரிகளுக்கு நற்பெயரும் இல்லை, கவுரமும் இல்லை. அவர்கள் அசுத்தமான காக்கைக்குச் சமமானவர்கள். கூண்டில் அடைபட்டுப் பெருமித நடை போடும் பறவையைப் போன்ற அவர்களுக்கு விடுதலையே கிடையாது. – குரு நாநக்

3. சுலோகம் 8 முதல் 16 வரை:

இந்தச் சுலோக வரிகளில் தான் இன்றைய இந்தியாவிற்கு, கைராட்டினமே உடனடித்தேவை என்ற உண்மை அடங்கியுள்ளது என்று கருதுகிறேன். இங்கே “கருமம் செய்” என்றது சந்தேகத்திற்கிடமின்றி உடலுழைப்பைத்தான் குறிக்கிறது. “பயன் கருதாத உழைப்பு” என்பது பொது நன்மைக்காக எல்லாரும் ஏற்கும் உழைப்பாகும். அத்தகைய பயன் கருதாத உழைப்பு, இந்த நூற்புப்பணியாகத் தான் இருக்க முடியும். கண்ணபெருமான் இங்கே கைராட்டினத்தைத்தான் குறிப்பிடுகிறார் என்று நான் சொல்லவில்லை. அவர் இங்கே ஓர் அடிப்படைத் தத்துவத்தைக் கோடிட்டுக் காட்டியுள்ளார். இந்தியக் கண்ணோட்டத்தில் இந்த வரிகளைப் படிக்கும் போது, நூற்புப்பணியைத் தான் மிகப் பொருத்தமான உழைப்பாக என்னால் எண்ணிப் பார்க்க முடிகிறது. இதை விட மேன்மையான நாட்டுப்பற்று மிக்க ஒன்றை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. ஏனேனில் ஏழைகளைப் போலவே நாம் அனைவரும் உழைப்பதன் மூலம் தான் அந்த ஏழை மக்களுடனும், அவர்கள் மூலமாக மனித சமுதாயத்துடனும் நாம் நம்மை இணைத்துக் கொள்ள முடியும். ஏழைகளுக்காக உழைப்பதை விடப் பெரியதோர் தொழுகையை என்னால் எண்ணிப் பார்க்க இயலவில்லை. கைராட்டினம் தான் பூமித்தாயின் செல்வங்களைச் சமமாகப் பகிர்ந்தளிக்க வழி செய்கிறது.
– மகாத்மா காந்தி, யங் இந்தியா, அக்டோபர் 20, 1921

4. “பலுகிப் பெருகுங்கள்” என்ற பைபிள் வாசகம் இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.

5. இது ஒரு தெய்வீகப்பசு. கேட்டதெல்லாம் தரவல்லது என்பது புராணம். கற்பக தரு, அட்சயப் பாத்திரம் போன்றது இது.
6. யாகங்கள் ஐந்து: தேவ யக்ஞம், ரிஷி யக்ஞம், பித்ரு யக்ஞம், நர யக்ஞம், பூத யக்ஞம். இங்கு கூறப்பட்டது தேவ யக்ஞம்.
7. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. – திருவள்ளுவர்
8. ஜனகன், இவாகு, ரகு, திலீபன், அச்வபதி, பிரகலாதன், அம்பரீஷன் முதலியவர்கள்.
9. ஒவ்வொருவனுடைய வகுப்பு அல்லது ஜாதி, அவன் புரியும் கர்மத்தினின்று விளங்குகிறது. ஆக வினையாற்றாவிடின் வாழ்வு குன்றுகிறது. பகவான் பிரகிருதிகளைச் செயலில் தூண்டாவிடில் இத்தகைய சீர்கேடுகள் வந்தமையும். – ஸ்ரீ சித்பவானந்தர்.

10. எதிரில் நிற்கும் ஓர் ரயில் வண்டித் தொடரைப் பார்த்துக் கொண்டிருப்பவன், அவ்வண்டி ஓட ஆரம்பித்ததும், தானிருக்கும் ரயில் வண்டியே ஓடுவதாக மயங்குதலை ஒத்தது இது. – ஸ்ரீ சித்பவானந்தர்.
11. யமனுக்கும் காமனுக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு. யமன் பிரியமற்றவனைப் போலிருந்து மனிதனுக்கு நன்மை செய்கிறான். காமன் பிரியமுள்ளவனைப் போலிருந்து தீமை செய்கிறான்.
12. ஓட்டைச் சட்டியில் நீர் வார்த்து நிரப்ப முடியாது. ஆசையையும் நிரப்பி ஒரு முடிவுக்குக் கொண்டு வர முடியாது. – ஸ்ரீ சித்பவானந்தர்


(காலஞ்சென்ற திரு எஸ் மெய்யப்பன் உலக மக்கள்தொகைத் திட்டத்தின் உறுப்பினராய் தமிழ் நாட்டு அரசுப் பணியில் இருந்தவர்.சௌடீஸ்வரி மலர் என்ற மாத இதழின் ஆசிரியராய் இருந்தவர். )

Series Navigation

author

எஸ் மெய்யப்பன்

எஸ் மெய்யப்பன்

Similar Posts