சிவாஜியை வரவேற்போம்

This entry is part [part not set] of 27 in the series 20070712_Issue

மஞ்சுளா நவநீதன்


ரஜனி படம் வெளிவரும்போதெல்லாம், ரஜினி படம் பற்றிய எதிர்பார்ப்பும், தொடர்ந்த விமர்சனங்களும் வெளிவருவது கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டில் நடைமுறையாகிவிட்டது. ஷங்கர் இயக்கம் என்பதாலும், சுஜாதா கதை வசனம் , ஏ வி எம் மின் பிரமாண்ட தயாரிப்பு என்ற செய்திகளும் சிவாஜி என்ற பெயரும் சேர்ந்து இந்தப் படத்திற்கு இன்னமும் விளம்பரமாகி விட்டது.

தற்கால சினிமா தொழில் இந்தியாவில் குறிப்பாக மூன்று நகரங்களை மையப் படுத்தியுள்ளது மும்பை, சென்னை, ஹைதராபாத். இந்த மூன்று பெரும் மையங்கள் இல்லாமல் திருவனந்தபுரம், பெங்களூரு, கொல்கத்தா போன்ற இரண்டாம் நிலைத் தயாரிப்பு மையங்கள் இயங்கி வந்தாலும் முதல் நிலை மையங்கள் போல பெரும் பாதிப்பை ஏற்படுத்த வில்லை என்பதும் உண்மை.

அதன் காரணம் நிச்சயமாக தொழில் நுட்ப மேம்பாடும், பிரமாண்டத் தயாரிப்புகளும் தான். அதில்லாமல் மூன்று மொழிகளிலும் நடைபெறும் மொழிமாற்றங்கள் மூலம் சந்தை விரிவாக வாய்ப்புகள் இருப்பது இன்னொரு மிக முக்கியமான காரணம். சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், ரஜனி, கமல் ஹாசன் போன்ற நட்சத்திர அந்தஸ்து உள்ளவர்கள் மக்களிடையே தோற்றுவிக்கும் எதிர்பார்ப்புகள். தொலைக் கட்சியை விட்டு மக்களை நகர்த்தி திரைக் காட்சிக்கு இழுத்து வரும் காந்த சக்தி இவர்களுக்குத் தான் உள்ளது. இந்த நட்சத்திர அந்தஸ்தும், பிரபலஸ்தர்கள் பிரபலமாய் இருபபதாலேயே அவர்கள் மீது தொடர்ந்த விளம்பர வெளிச்சமும் என்னதான் மேட்டிமைத்தனமான விமர்சனத்திற்கு உட்பட்டாலும் சமகால வாழ்வில், பத்திரிகை மற்றும் தொலைகாட்சிகளால் பரப்பப் பட்டுவரும் பிரபலஸ்தர் கலாசாரம் (Celebrity Culture) யதார்த்தம்.

ரஜனியின் வாழ்க்கையே ஒரு அகில இந்தியத் தன்மை கொண்டது. கர்னாடகாவில் வளர்ந்த மராத்தியர் அவர். அவருடைய தொழில் மையம் கொண்டது தமிழ்நாடு. அவர் திருமணமும் ஒரு தமிழ்நாட்டுப் பெண்ணுடன் தான். இன்னும் சொல்லப் போனால் அகில உலகத் தன்மையை அவருடைய ஜப்பானிய ரசிகர்கள் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள்.


1. சிவாஜிக்கு 1500 ரூபாய் வரை அனுமதிச் சீட்டு விலை எகிறி விட்டது. பொது மக்களைச் சுரண்டும் முயற்சியல்லவா இது?

Demand and Supply – கருத்தாக்கத்தை இதற்குப் பொருத்திப் பார்க்கலாம். 1500 ரூபாய் கொடுத்து இப்படத்தைப் பார்க்க முன்வருபவர்கள் இருக்கும் வரையில், சட்டம் மீறப் படாதவரையில் இது பற்றி பேச ஒன்றுமில்லை. இது அத்தியாவசிய பொருட்கள் மீதான விலையேற்றம் அல்ல. ரஜினியை இதனுடன் எப்படிச் சம்பந்தப் படுத்த முடியும்? முன்பு வேறு பல பட நாயகர்களின் படங்களுக்கும் கூட கள்ளச் சந்தையில் டிக்கட்டுகள் விற்கப்பட்டதுண்டு அல்லவா?


2. 60 கோடி செலவழித்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள். இப்படி பிரமாண்டமாய் இதனை எடுக்க வேண்டிய அவசியம் என்ன? இந்தப் பணத்தை வைத்து 20 நல்ல படங்கள், குறைந்த பட்ஜெட் படங்கள் எடுக்கலாமே?

எடுக்கலாம் தான். ஆனால் மூலதன அடிப்படையாய்க் கொண்ட பொருளாதாரச் சமூகத்தில் இந்த risk taking தான் பொருளாதாரத்தை முன் நகர்த்திச் செல்கிறது. 60 கோடி முதலீடு செய்து அந்தப் படம் நட்டமும் ஆகலாம். லாபமும் ஈட்டலாம். அப்படிப் பணயம் வைக்கிற மூலதனம் வழியாகத்தான் புதிய விஷயங்கள், இங்கே புதிய சினிம முயற்சிகள் தோன்ற முடியும் தோன்ற முடியும். படங்கள் பொழுது போக்கு என்றாலும் அதன் மூலமாக ஒரு பெரும் பொருளாதாரச் செயல்பாடு உருவாகிறது. பாபா படம் அப்படி நட்டப் பட்டதையும் நாம் பார்த்தோம். மூலதனப் பொருளாதாரத்தின் அடிப்படையே இப்படிப்பட்ட நட்டங்களுக்கு அப்பால் நகர்ந்து புதிய முயற்சிகளில் ஈடுபடுகிற தொடர்ந்த இயக்கம் தான்.

அதில்லாமல் ஷங்கர் “காதல்” , “இம்சை அரசன்” போன்ற சிறு முதலீட்டுப் படங்களையும் எடுத்து புதிய முயற்சிகளில் ஈடுபடுகிறார்.


3.ரஜினி படம் என்பதால் பத்திரிகைகள், தொலைக் காட்சி நிறுவனங்கள் எல்லாம், ஏகமாக பில்டப் செய்து சிவாஜியை உயரத் தூக்கி நிறுத்த முயற்சி செய்கிறார்கள். ரஜினிக்கு இல்லாத ஒரு பிம்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். இது தவறல்லவா?

ரஜினி படத்திற்கு அவர்கள் விளம்பரம் தருகிறார்கள் என்பதைக் காட்டிலும் ரஜினியைப் பயன்படுத்தி அவர்கள் தம்முடைய விற்பனையை அதிகரிக்கிறார்கள் என்பது தான் உண்மை. ரஜினியின் பிம்பம் விற்பனைக்கு உதவுகிற முறையில் இருப்பதால் தான் ரஜினி பற்றிய செய்திகள் வருகின்றனவே தவிர இதனால் ரஜினிக்குப் பயன் குறைவே.


4. ரஜினி படத்திற்கு, ஆளுயர கட் அவுட்டிற்கு பாலாபிஷேகம், பீராபிஷேகம் செய்வது மூட நம்பிக்கை அல்லவா? மக்கள் இப்படி அறியாமையில் மூழ்கிக் கிடக்கம் காரணமாகும் ரஜினியை பொறுப்பேற்றுக் கொள்ளச் செய்வதில் என்ன தவறு?

மூட நம்பிக்கை எல்ல வடிவங்களிலும் வரும். ரஜினிக்கு பாலாபிஷேகம் , பீரபிஷேகம் செய்வது மூட நம்பிக்கை என்று சொல்கிற மகானுபாவர்கள் தம்முடைய சாதிக்காகவும், தம்முடைய குடும்பத்தினர் நலனிற்காகவும் அரசியல் பண்ணத் தயாராய் இருப்பவர்கள். இவர்கள் ரஜினி மீது எரிச்சல் படுவதன் காரணம் வெளிப் படையாய்த் தமக்கு ரஜினியின் ஆதரவு கிடைக்க வில்லை என்பதால் இருக்கலாம். அல்லது தம்முடைய கட்சிக்கும் குடும்பத்திற்கு விசுவாசமாய் ஒருக்க வேண்டிய தொண்டர் படை ரஜினி பக்கம் போகிறதே என்ற ஆதங்கத்தினால் வருகிற பொறாமை என்றே தோன்றுகிறது.

ரசிகர்கள் தங்களின் உற்சாகத்தை இந்த வழிகளில் காட்டிக் கொள்கிறார்கள் என்று எடுத்துக் கொள்வது தான் உசிதம்.

அரசியல் கட்சிகள் பேரணி என்றும், போராட்டம் என்றும், சாலைவழிகளை அடைத்து ஊர்வலம் போவதும் காண்கையில் இது ஒரு பெரிய விஷயமாய்த் தோன்றவில்லை.

இப்படிப் பட்ட அரசியல்வாதிகளின் எரிச்சல் ஒரு புறம் என்றால் , இன்னொரு புறம் ரஜினியைத் திட்டுபவர்கள் மாவோ, ஸ்டாலின் போன்ற கொலைகாரர்களின் புகழ் பரப்பும் முற்போக்காளர்கள். ஒரு புறம் மக்கள் தான் வரலாற்றைத் தீர்மானிப்பவர்கள் என்றும், இன்னொரு புறம் ரஜினியை ரசிப்பதால் மக்கள் முட்டாள்கள் என்று வாதம் செய்பவர்கள்.

ரஜினி லட்சக் கணக்கில் மக்களைக் கொல்லவில்லை. ரஜினி புரட்சி என்ற பெயரில் மக்களை ஏமாற்றி சாமானிய மக்களின் மீது வன்முறையைப் பிரயோகிக்கவில்லை. அவர் தன் பாட்டுக்கு தனக்குத் தெரிந்த தொழிலைப் பண்ணிக் கொண்டிருக்கிறார். அவ்வளவு தான்.

****
ரஜினி படத்தைப் பற்றி பெரிதாய் விமர்சிக்க ஒன்றுமில்லை. இது இன்னொரு ரஜினி பார்முலா படம் . முதல் பாதியில் வில்லனின் சதியால் இழந்து போன தன்னுடைய சொத்தை இரண்டாம் பாதியில் மீட்கிறார். ஷங்கருக்கு இந்த இரண்டு வரிக்கதையைத் தொங்கவிட கருப்புப் பணம் ஒரு சாக்கு.

ஒரு விதத்தில் சமூகவியல் ரீதியாய் பார்க்கப் போனால், கல்விக்கு தமிழ் சமூகத்தில் இருக்கும் முக்கியத்துவத்தையும், அதற்காக எதுவும் செய்யத் தயாராய் இருக்கும் மக்களின் பலவீனத்தை எப்படி பிஸினஸ் செய்பவர்கள் பயன் படுத்திக் கொள்கிறார்கள் என்றும் இதனைப் பார்க்கலாம்.

ரஜினிக்கு எப்போதுமே நகைச்சுவை கலந்த அதிரடி படங்கள் தான் ஆகி வந்தவை. அவருடைய நகைச்சுவை முகபாவனைகளும், உடல் மொழியும் எல்லாப் படங்களிலும் பாராட்டைப் பெறுபவை. இதில் விவேக்கும் இணைந்து இருப்பதால் இரட்டிப்பு நகைச் சுவை.

கூடுவான்சேரியைத் தாண்டாத மக்கலுக்கு வெளிநாடுகள் காண ஒரு வாய்ப்பு. பிரமாண்ட செட்கள் ஹாலிவுட் தரத்தை ஹாலிவுட் பணச் செலவில்லாமல் எம்மாலும் செய்ய முடியும் என்பதன் நிரூபணம்.

வன்முறை கூடாது என்று ஹீரோ உபதேசம் செய்வதற்கு முன்னால், வில்லைனைப் புரட்டி புரட்டி எடுப்பது போல், கறுப்புப்பணம் எப்படி தவறு என்று ஹவாலா மூலமாக்வும், கறுப்புப்பணத்தை கபளீகரம் செய்தும் நிரூபிக்கிறாராம். வழக்கமான சினிமாத் தனமான உபதேசம். பார்வையாளர்கள் யாரும் இதை சீரியஸாய் எடுத்துக் கொள்வதில்லை.

***

இதெல்லாம் இல்லாமல் நான் சிவாஜி போன்ற படங்களை ஆதரிக்க இன்னும் ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது. இன்று சினிமா என்பதே ஹாலிவுட் ப்டங்கள் என்றாகி இருக்கிறது. பிரிட்டிஷ் படத் தொழிலும் சரி, ஐரோப்பாவின் படத் தொழிலும் சரி ஹாலிவுட் படங்களால் கபளீகரம் செய்ய்பபட்டு விட்டன.

ஓரளவு ஹாங்காங் சினிமாவும், பாலிவுட் கோலிவுட் படங்களும் தான் ஹாலிவுட்டிற்கு மாற்றாக தொழிலைத் தக்க வைத்துக் கொண்டிருக்கின்றன. எல்லாம் ஹாலிவுட் படத்தை மொழி மாற்றம் செய்து பார்த்துக் கொள்ளுங்கள் ஏன் நீங்கள் படம் தயாரிக்கிறீர்கள் என்பது தான் ஹாலிவுட் மற்ற நாடுகளைப் பார்த்துச் சொல்லும் தாரக மந்திரம். ஏகாதிபத்தியங்கள் தங்கள் தொழில் நுட்பத்தை மீறி மற்ற நாடுகள் வளர்ச்சி பெற்று விடக் கூடாது என்று எண்ணுவது போலவே சினிமாத் துறையையும் முழுமை யாய்க் கைப்பற்றிக் கொண்டு அவற்றை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் மற்ற நாடுகளின் தொழில் முனைப்பை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு காலத்தில் மிகவும் உயிர்ப்புடன் இருந்த பிரான்ஸ், ஸ்வீடன் ஜெர்மனி போன்ற நாடுகள் கூட இன்று ஹாலிவுட் படத் தயாரிப்புகளின் தாக்குதலால் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையை தெரிந்தோ தெரியாமலோ ஊக்குவிக்கும் முகமாக், தொலைக் காட்சியிலும் ஹாலிவுட் படத்தை மொழி மாற்றம் செய்து போட்டுக் காட்டி வருகிறார்கள் நம் தொலைக் காட்சி உரிமையாளர்கள்.

இந்தப் போக்குக்கு சரியான சவாலாய் இருப்பது பம்பாய், சென்னை சினிமா மையங்கள் தான். இவை தொடர்ந்து இயங்கவும், சினிமாத் தொழில் முடங்கிப் போகாமல் காப்பாற்றவும் நட்சத்திரங்களும், பிரமாண்டத் தயாரிப்புகளும் தேவை. ரஜினி , அமிதாப் போன்ற சூப்பர் ஸ்டார்களால் தான் இது கூடும்.

****

சிவாஜியை முன்வைத்து வெளியான சிரிப்புகளில் நான் ரசிக்க முடியாத ஜோக்குகள் இரண்டு :

ஒன்று : ஹவாலாவிற்கு உதவி செய்வதாய் முஸ்லீம்களைக் காட்டுவது முஸ்லீம்களை அவமதிக்கிற செயல் என்று ஒரு முஸ்லிம் அமைப்பு கண்டனம் தெரிவித்தது. நல்லவேளை ஆதி என்று பெயர் சொண்டவர்கள், வில்லன் பெயர் ஆதி என்று இருக்கிறது அதனால் தம்மை அவமதித்து விட்டதாக குரல் எழுப்பவில்லை.

இரண்டு : சிவாஜி எப்படி இந்துத்துவா சார்பு என்று சில அறிவீன ஜீவிகள் உளறிக் கொட்டியது.

ரசித்த ஜோக்கும் இருக்கிறது:

பாவம் 60 கோடி செலவு பண்ணியிருக்காங்க படம் எடுக்க. இந்த அம்மா ஸ்ரேயாவுக்கு பாட்டுக் காட்சியிலே பத்தாத டிரஸ் போட்டு ஆட விட்டிருக்காங்களே. டிரெஸ் வாங்க பணம் இல்லாம போயிடுச்சே.


manjulanavaneedhan@yahoo.com

Series Navigation

author

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்

Similar Posts