பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம்

This entry is part [part not set] of 35 in the series 20070705_Issue

எஸ் மெய்யப்பன்


பகவத் கீதையின் அமைப்பு முறை

குருச்சேத்திரத்தில் கௌரவர் படைகளும் பாண்டவர் படைகளும் போரிட ஆயத்தமாய் அணிவகுத்து நிற்கின்றன.

அஸ்தினாபுரத்தில் அரண்மனை முற்றத்தில் துரியோதனனின் தந்தை திருதராஷ்டிர மன்னன் அமர்ந்துள்ளான். அவன் கண்பார்வையற்றவன். அருகில் அமைச்சன் சஞ்சயன் இருக்கிறான்.

அப்போது வியாச முனிவர் அங்கே தோன்றி, ‘திருதராஷ்டிரா… குருச்சேத்திரப் போரைப் பார்க்க விரும்பினால்… உனக்கு ஞான திருஷ்டி தருகிறேன்!” என்றார்.

‘உறவினர்கள்; கொல்லப்படுவதை நான் காண விரும்பவில்லை” என்ற திருதராஷ்டிரன், ‘இருந்தாலும், போரின் தன்மையை அறிய விரும்புகிறேன்” என்றான்.

‘அப்படியானால் இதோ.. இந்த அமைச்சன் சஞ்சயனுக்கு ஞானதிருஷ்டி அளிக்கிறேன்! இவன் உனக்குப் போர்க்கள நிகழ்ச்சிகளை அப்படியே கூறுவான்!“ என்று அருகில் அமர்ந்திருந்த அமைச்சன் சஞ்சயனுக்கு ஞானக்கண் அருளிவிட்டு வியாச முனிவர் மறைந்து போனார்.

பிறகு அமைச்சன் சஞ்சயன் போர்க்கள நிகழ்ச்சிகளை ஞானக்கண்ணால் கண்டு, மன்னவன் திருதராஷ்டிரனுக்கு 1விளக்கிக் கூறுகிறான்.

இவ்விதம் அமைச்சன் சஞ்சயன் விளக்கும் வகையில்தான் பகவத் கீதை அமைந்து, பதினெட்டாம் அத்தியாயத்தின் இறுதியில் அவன் வாய்மொழி மூலமாகவே நிறைவெய்துகிறது.

அமைப்பு முறையில் எடுத்துக் கொண்டால் இது ஓர் அற்புதமான உத்தி என்று தான் சொல்ல வேண்டும்.

இடைப்பட்ட அத்தியாயங்களில் பல இடங்களில் அமைச்சன் சஞ்சயன் பேசுகிறான். இவ்விதம் அவன் பேசுவதெல்லாம், தெளிவு கருதி, இப்புதிய மொழிபெயர்ப்பில் அடைப்புக் குறிக்குள் தரப்பெற்றுள்ளன.

(1. வாரியார் சுவாமிகளின் ஸ்ரீமகாபாரதம் – பக். 303 – 305

இதையே உரையாசிரியர் அண்ணா கீழ்கண்டவாறு விவரித்துள்ளார். : பத்தாவது நாள் போரில் பீஷ்மர் தேரினின்றும் வீழ்த்தப்பட்டு அம்புப் படுக்கையில் சயனித்து மரணத்தை எதிர் நோக்கியிருந்தார். இச்செய்தியை அமைச்சன் சஞ்சயன், மன்னவன் திருதராஷ்டிரனிடம் கூறிய போது, மன்னவன் மிகவும் துக்கித்து, யுத்தச் செய்திகளை விவரமாய் வர்ணிக்கும்படிக் கேட்டான். வியாசருடைய அருளால் தூரத்தில் நடப்பவற்றை மனக்கண்ணில் காணும் சக்தி பெற்றிருந்த அமைச்சன் சஞ்சயன் போர் ஆரம்பித்தது முதல் வர்ணிக்கத் தொடங்கினான்!
– ஸ்ரீமத் பகவத் கீதை, பக். 4)அத்தியாயம் ஒன்று
அர்ஜுன விஷாத யோகம்

விஷாதம் என்றால் துயரம். அர்ஜுனன் துயரமடையும் பகுதி இது. குருச்சேத்திரத்தில் கௌரவர்களும் பாண்டவர்களும் போர் புரிய, நால்வகைப் படைகளுடன் அணிவகுத்து நிற்கின்றனர். பாண்டவர்களில் ஒருவனான அர்ஜுனன் எதிரிப்படையை நோட்டம் விடுகிறான். எதிரிகள் அனைவருமே அவனது உற்றார் உறவினர்களாயும், ஆசிரியன்மார்களாயும் இருக்கக் கண்டு உயிரினும் இனிய அவர்களைக் கொல்லுவதா என்று துயரம் மிகுந்தவனாய் வில்லையும் அம்பையும் வீசி எறிகிறான். இந்நிகழ்ச்சிகள் இதில் விளக்கப் பெறுகின்றன.

இதில் 47 சுலோகங்கள் அடங்கியுள்ளன.

——-

(அஸ்தினாபுரம் அரண்மனை முற்றத்தில் திருதராஷ்டிர மன்னவன் அமர்ந்திருக்க, அமைச்சன் சஞ்சயன் அருகில் இருக்கிறான்)

திருதராஷ்டிரன்: ஓ சஞ்சயா, குருச்சேத்திரத்தில் போர் செய்யத் திரண்ட என் மைந்தர்களும் பாண்டவர்களும் என்ன தான் செய்தார்கள்?

அமைச்சன் சஞ்சயன்1: மாமன்னவரே‚ இதோ2… தங்கள் மைந்தன் துரியோதனன் அணிவகுத்து நிற்கும் பாண்டவர் படையைப் பார்த்த பின்பு, குருதேவர் துரோணாச்சாரியாரிடம் செல்கிறான்.. இவ்வாறு சொல்லுகிறான்‚
(என்று அமைச்சன் சஞ்சயன் ஆரம்பித்து வைக்க குருச்சேத்திர யுத்தகளத்திற்குக் காட்சி மாறுகிறது.)

துரியோதனன்3: குருதேவரே, தங்களது சீடனும் துருபதன் மகனுமான திருஷ்டத்யுமனன்4 அணிவகுத்திருக்கும் அதோ.. அந்தப் பெரிய பாண்டவ சேனையைப் பாருங்கள், அங்கே வீராதி வீரர்களும் விற்போர் வித்தகர்களும் இருக்கிறார்கள். விராடன், துருபதன், வீரமிக்க காசிராஜன், யுயுதானன், சேகிதானன், குந்திபோஜன், சைவியன்.. அபிமன்யு, யுதாமன்யூ, உத்தமவுஜா, புருஜித்து, திருஷ்டகேது மற்றும் திரௌபதி மைந்தர்களான உபபாண்டவர்;களும் இருக்கிறார்கள். இவர்கள் அத்தனை பேருமே மகாரதர்கள்5. ஓ பிராமண குல திலகமே.. இப்போது6 நமது படைப் பெருமை கூறுவேன், நமது தளநாயகர் வரிசையை நினைவு கூர்வேன், தாங்களும் பீஷ்மரும் கர்ணனும், கிருபரும், விகர்ணனும், அச்வத்தாமனும், தத்தன் மகன் பூரிசிரவசும் இருக்கிறீர்கள், மேலும் எனக்காக உயிரும் கொடுக்கத் துணிந்த சூரர்கள் பலர் இருக்கிறார்கள், அத்தனை பேருமே போரிலே வல்லவர்கள்.. பற்பல ஆயுதம் உள்ளவர்கள், பீஷ்மரால் காக்கப்படும் நமது சேனை அளவுகடந்து7 அலை மோதுகிறது. பீமனால் காக்கப்படும் பாண்டவர் படையோ அளவுக்கு உட்பட்டு நிற்கிறது. (வீரர்கள் பக்கம் திரும்பி) ஓ, சேனா வீரர்களே, அவரவர்குரிய இடத்திலிருந்து கொண்டு நமது பீஷ்மரைக் காத்து நின்று போர் புரியுங்கள்.

(இவ்விதம் கூறிய துரியோதனனுக்கு உற்சாகம் தோன்றும் படியாக, குருவம்சப்பெருவீரர் பீஷ்மர் சிம்மம் போல் கர்ஜித்து, சங்கை ஊதினார். உடனே சங்குகளும் பேரிகைகளும், பறைகளும் கொம்புகளும் மற்றும் தம்பட்டங்களும் முழங்கப் பேரொலி எழுந்தது.
பாண்டவர் படையில் வெள்ளைக் குதிரைகள் பூட்டி.. கொள்ளை அழகு காட்டி ஓர் இரதம் நின்றது. அதில் சாரதியாக அமர்ந்திருந்த கண்ணன் பாஞ்சஜன்யம் என்ற தெய்வீக சங்கை ஊதினான். அருகிலிருந்த அர்ஜுனன் தேவதத்தம் என்ற சங்கை நாதித்தான். பீமசேனன் பவுண்டரம் என்ற பெரிய சங்கை ஒலித்தான். தருமன் அனந்தவிஜயம் என்ற சங்கையும், நகுலனும் சகதேவனும் முறையே சுகோஷம், மணிபுஷ்பகம் என்ற சங்குகளையும் ஊதினார்கள். மற்றும் காசிராஜன், சிகண்டி8, திருஷ்டத்யுமனன், விராடன், சாத்யகி, துருபதன், திரௌபதி மைந்தர்கள் மற்றும் அபிமன்யு ஆகிய அனைவரும் தனித்தனியே தத்தம் சங்குகளை முழக்கினார்கள். இந்தப் பெருமுழக்கம் வானை அதிரடித்தது… மண்ணில் எதிரொலித்தது… துரியோதனாதியர் கூட்டத்தைக் கதிகலங்க வைத்தது.
போர் துவங்கும் இந்த நேரத்தில் காண்டீபமும் கையுமாக நின்ற அனுமக்கொடி அர்ஜுனன், ஹிருஷிகேசனான9 கண்ணனிடம் சொல்லுகிறான்)

அர்ஜுனன்: அச்சுதா, இரு படைகளுக்கும் நடுவே என் தேரை நிறுத்துக, போரிலே ஆசை கொண்டு நிற்கும் வீரர்களை நான் பார்க்க வேண்டும், துன்மதி படைத்த துரியோதனனுக்குக்காகப் போரிட வந்துள்ளவர்களை நான் காண வேண்டும்.

கண்ணன்: அப்படியே ஆகட்டும் அர்ஜுனா, அணி திரண்டு நிற்கும் கௌரவர்களை நீ பார்க்கலாம்.
(என்றவாறு பரந்தாமன் அழகிய தன் சிறந்த ரதத்தைப் படை நடுவே நிறுத்தினான். அர்ஜுனன் கண்களை மலர்த்தி இருபுறமும் பார்த்தான். எதிரில் தந்தையர் நின்றனர், பாட்டன்மார் நின்றனர், ஆச்சாரியரும் அண்ணன் தம்பியரும் நின்றனர், மக்களும் மாமன்மாரும் நின்றனர், தோழரும் பேரன்மாரும் நின்றனர், இதைப் பார்த்த அர்ஜுனன் குமுறும் துயரத்துடன் கண்ணனைப் பார்த்துச் சொல்லுகிறான்.)

அர்ஜுனன்: கண்ணா, இவர்களுடனா நான் போர் செய்ய வேண்டும்? என் உடல் சோர்வடைகின்றதே, வாய் வறள்கின்றதே, நடுக்கமும் மயிர்க்கூச்சமும் எழுகின்றதே, கையிலிருந்து காண்டீபம் நழுவுகின்றதே, மேலும் தோலும் பற்றி எரிகின்றதே, மனது சுழல்கின்றதே, என்னால் நிற்கவும் முடியவில்லையே.

கேசவா10, கெட்ட சகுணம் தோன்றுகின்றதே, ஆச்சாரியர்களும் பாட்டன்மார்களும் தகப்பன்மார்களும், பேரன்மார்களும் பிள்ளைச் செல்வங்களும், மாமன்மார்களும் மாமனார்களும், சம்பந்திகளும் மைத்துனர்களும் என் எதிரில் நிற்கிறார்களே, இச்சுற்றத்தைக் கொன்று, கொற்றத்தை வென்றிட நான் விரும்பவில்லை, அதில் எந்த நன்மையும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை, ராஜ்ஜியம், ரம்மிய சுகவாழ்வு இவற்றில் பயன் இருப்பதாகவும் எனக்குத் தெரியவில்லை, அரச போகம் எதற்காக, ஆசாரியர்களும் அன்பான உறவினர்களும் அக மகிழ்வதற்காக, அத்தனை பேரும், இதோ உயிரையும் துறக்கச் சித்தமாய் யுத்த பூமியில் நிற்கிறார்களே, இவர்களைக் கொன்றா இன்பம் அனுபவிப்பது?

மதுசூதனா, 11 நான் கொல்லப்பட்டாலும் கவலை இல்லை… இவர்களை கொல்ல நான் விரும்பவில்லை, மூவுலகுமே பரிசாகக் கிடைத்தாலும் சரி.. முன் நிற்கும் இவர்களை நான் கொல்ல மாட்டேன், மேலும் கொடும் பாவிகளான 12கௌரவர்களைக் கொல்லுவதால் பாவமே வந்து சேரும். சுற்றத்தை அழித்துவிட்டு சுகத்தைப் பெற்றிட முடியுமா? குல நாசத்தாலும், மித்திர துரோகத்தாலும் விளையும் கேடுகளை, ஆசை மிகுதியால் அறிவிழந்த இவர்கள் உணராவிட்டாலும், அதை உணர்ந்த நாம், அந்தப் பழி பாவத்திலிருந்து ஏன் விலகிக் கொள்ளக் கூடாது.

ஜனார்தனா, 13 குலம் அழிந்தால் குலதர்மம் வீழும் அதர்மம் சூழும் அதர்மத்தின் மிகுதியால் மாதர் கற்பு கெடும் இது வர்ணக் கலப்பில்14 கொண்டு போய்விடும்; இதனால் ஜாதி தர்மங்களும் குலதர்மங்களும் நிலைகுலையும்; இதற்குக் காரணமானவர்களுக்கும் அவர்களின் சந்ததியார்களுக்கும் நிச்சயம் நரகமே ஏற்படும் அவர்களின் பித்ருக்கள்15 சோறும் நீரும் இழந்து வீழ்ச்சியடைவார்கள். குலதர்மத்தை இழந்தவர்கள் நரகத்தில் வீழ்வார்கள்; அதனால் சுற்றத்தைக் கொல்லுவது பாவம், அதை நான் செய்ய மாட்டேன். ஆயுதமின்றி இருக்கும் என்னை அவர்கள் கொல்லட்டும்; அதுவே எனக்குப் பெரும் பாக்கியம்.

(இவ்விதம் கூறிய அர்ஜுனன் வில்லையும் அம்பையும் வீசி எறிந்து விட்டு, துயரம் மிகுந்தவனாய் இரதத்தின் பீடத்தில் அமர்ந்து விட்டான்)

(முதல் அத்தியாயம் நிறைவு பெற்றது)

1. சஞ்சயன் – விருப்பு வெறுப்பு ஆகியவற்றை வென்றவன்.

2. அமைச்சன் சஞ்சயன் ஞானக்கண்ணால் பார்த்து விவரிக்க ஆரம்பிக்கிறான். அக்காலத்திலும் தொலைக்காட்சி இருந்திருக்குமோ‚ தற்காலத் தொலைக்காட்சியில் நேர்முக வர்ணனையாளர், நிகழ்ச்சி நடக்கும் களத்திலேயே இருக்கிறார். அமைச்சன் சஞ்சயன் களத்திலே இல்லாமல், அரண்மனை முற்றத்திலிருந்து கொண்டு, ஞானக் கண்ணால் காண்பதை வர்ணனை செய்கிறான்.

3. துரியோதனன் – யுத்தத்தில் எளிதில் வெல்லப்படாதவன்.

4. திருஷ்டத்யுமனன் – எவராலும் எதிர்க்க முடியாதவன்.

5. மகாரதர்கள் – தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் பகைவரின் ஆயுதங்களிலிருந்து காத்துக் கொண்டு, பதினாயிரம் வில்லாளிகளை நடத்துபவன் மகாரதன்.

6. துரியோதனனும் அவனைச் சேர்ந்தவர்களும் மனிதனின் கீழ்த்தர உணர்வுகளையும் அர்ஜுனனும் அவனைச் சேர்ந்தவர்களும் மனிதனின் மேன்மையான உணர்வுகளையும் பிரதிபலிப்பதாகக் கருதுகிறேன். நமது உடம்பு தான் போர்க்களம். மேற் சொன்ன இரு வகை உணர்வுகளுக்கும் இடையில் முடிவில்லாத போராட்டம் நடந்து வருகிறது; இதுவே கீதையில் தெளிவாக விளக்கப் பெற்றுள்ளது. கண்ணனே உடம்பினுள் உறைபவன், தூய்மையான இதயத்தில் அவன் குரல் ஒலித்துக் கொண்டே உள்ளது. கடிகாரத்திற்குப் போலவே இதயத்திற்கும் தூய்மை எனும் சாவி தேவை இல்லாவிட்டால் இதயத்திற்குள் அவன் பேச்சு நின்றுவிடுகிறது.
– காந்தியடிகள்: யங் இந்தியா – நவ 12, 1925.

7. சில உரையாசிரியர்கள் இதில் வரும் “பர்யாப்தம்” என்ற சொல்லுக்கு, “பூரணமான” என்ற பொருளையும் “அபர்யாப்தம்” என்ற சொல்லுக்கு “பூரணமற்ற” என்ற பொருளையும் கொண்டு, துரியோதனன் சேனையை விட, பாண்டவர் சேனை அதிகமாயுள்ளது என்று பொருள் கொண்டுள்ளனர். துவாரகைக்குச் சென்ற அர்ஜுனன் கண்ணனுடைய சகாயத்தையும், துரியோதனன் கண்ணனுடைய படை உதவியையும் பொறுக்கி எடுத்தனர் என்பதால் துரியோதனன் சேனை அபரிமிதமாக இருந்தது என்று பொருள் கொள்வதே பொருத்தமுடையதாகும்.

8. சிகண்டி – முகத்தில் மீசை இல்லாதவன். துருபத ராஜனுக்குப் பெண்ணாகப் பிறந்து, பிறகு ஆண் தன்மை பெற்றவன். இவன் பீஷ்மருக்கு எதிரில் நின்ற போது, அவர் போர் புரியாமல் நிற்கவே, அவருக்குத் தோல்வியுண்டாயிற்று.

9. ஹிருஷிகேசன் – இந்திரியங்களுக்கு ஈசன்.

10. கேசவன் – அழகிய முடியுடையவன், கேசிகன் என்ற அசுரனைக் கொன்றவன், மும்மூர்த்திகளை வசப்படுத்தி வைத்திருப்பவன்.
11. மதுசூதனன் – மது என்ற அசுரனை அழித்தவன்.

12. தீ வைப்பவன், விஷம் வைப்பவன், ஆயுதம் கொண்டு ஆயுதம் இல்லாதவனைக் கொல்பவன், பொருளை அபகரிப்பவன், பிறர் பூமியை அபகரிப்பவன், பிறர் மனைவியை அபகரிப்பவன் என்று ஆறு வகையான கொடும் பாவிகள்.

13. ஜனார்தனன் – மக்களால் துதிக்கப்படுபவன்.
14. “வர்ணலங்கர” என்ற வார்த்தைக்கு “குலங்களின் கலப்பு” என்றே பலரும் பொருள் கொண்டுள்ளனர். ஸ்ரீ பக்தி வேதாந்த ஸ்வாமி பிரபுபாதா இதற்கு “தேவையற்ற மக்கள் கூட்டம்” என்ற பொருள் கொண்டுள்ளார்.

15. இறந்தவர்கள் சிறிதுகாலம் பித்ருலோகத்தில் வசிக்கின்றனர் என்பதும் அவர்களை,அவர்களைச் சார்ந்தவர்கள் நினைத்துப் பார்க்கும் நல்லெண்ணம் அவர்களுக்குச் சகாயம் செய்கிறது என்பதும் ஐதீகம். இவ்விதம் நினைத்துப் பார்க்கும் சொல்லுக்கு சிராத்தம் என்று பெயர். இதில் முன்னோர்களுக்காகப் பிண்டம் மற்றும் நீர் கையாளப்படுகின்றன. அவர்களைச் சூழ்ந்துள்ளவர்களுக்காக, வறியோர்க்கு சிராத்த காலத்தில் உணவளிக்கப் படுகிறது.

அத்தியாயம் இரண்டு

ஸாங்கிய யோகம்

ஸாங்கியம் என்பது ஆராய்ச்சியால் வரும் ஞானம். அழியக்கூடியது உடல் அழிவற்றது ஆத்மா. ஆகவே உடலைக் கொன்றாலும் ஆத்மாவை கொன்றதாகாது. கடமைகளைச் சரிவரச் செய்தால் ஆத்மஞானம் கிட்டும். அதனால் நற்கதியடையலாம். இக்கருத்துக்கள் இதில் விளக்கப்படுகின்றன.

இதில் 72 சுலோகங்கள் அடங்கியுள்ளன.

————-

(1மருகித் துயருற்ற அர்ஜுனனுக்கு மதுசூதனன் தேறுதல் வார்த்தைகள் கூறலானான்)

கண்ணன்: அர்ஜுனா, உன் செயல் 2ஆரியனுக்கு அடாதது! சொர்க்கத்தைக் கொடாதது, புகழின்பால் படாதது! இந்த நெருக்கடி நிலையில் இத்தகைய மனச்சோர்வு உனக்கு எங்கிருந்து வந்தது? 3பேடியைப் போல் வாடி நில்லாதே, போரிடேன் எனும் வார்த்தையைச் சொல்லாதே, எழுந்திடு, எதிரிகள் மேல் பாணத்தைப் பொழிந்திடு.
அர்ஜுனன்: மதுசூதனா, பூஜைக்குரிய பீஷ்மரையும் மகாத்மா துரோணரையும் பாணங்களால் எப்படி அடிப்பேன். இவர்களைக் கொன்றால், இவர்களின் இரத்தம் தோய்ந்த இன்பங்களைத் தான் நான் இம்மையில் அனுபவிக்க வேண்டும். அதைவிட நான் யாசகம் பண்ணலாம்… அதிலே கிடைக்கும் உணவை உண்ணலாம். வானகமும் இந்த வையகமும் ஒருங்கே கிடைத்தாலும், என் புலன்களில் அலை பாயும் இந்தத் துயரம் என்னை விட்டு நீங்காது. எவரைக் கொன்றபின் நான் உயிர் வாழ விரும்ப மாட்டேனோ, அந்தத் திருதராஷ்டிர மைந்தர்களல்லவா எதிரே நிற்கிறார்கள். ஒன்று.. இவர்களை நாம் கொல்லப் போகிறோம், அல்லது அவர்கள் நம்மை வெல்லப் போகிறார்கள், இவற்றில் எது மேலானது என்பது எனக்கு விளங்கவில்லை. கண்ணா! 4கார்ப்பண்யம் என்ற சிறுமையால் கலங்கி நிற்கும் நான் உன் சீடன். உன்னையே சரணடைந்தவன். அறம் எது என்பதை எனக்கு அறிவுறுத்துக, அலைபாயும் என் மனத்தை நிலை நிறுத்துக.

(இவ்விதம் போர் புரியேன் என்று சொன்ன அர்ஜுனனுக்கு புன்முறுவல் பூத்தவாறு கண்ணன் கூறுவான்)

கண்ணன்: அர்ஜுனா, வீணாக நீ துயரப் படுகிறாய். பேச்சிலே அறிவாளி போல் உயரப் பறக்கிறாய். இறந்தவர் அல்லது இருப்பவருக்காக அறிஞர்கள் துயரப்பட மாட்டார்கள். நானும் நீயும்… இந்த அரசர்களும் இதற்கு முன்பு இல்லாமல் இருந்ததில்லை, இனியும் நாம் இல்லாமலிருக்கப் போவதில்லை. உடலுக்கு இளமையும் மூப்பும் வருவது போல், ஆத்மாவுக்கு வேறு உடல் வருகிறது. கிழிந்த துணிகளைக் களைந்து விட்டு மனிதன் புதிய துணிகளை அணிவது போல், சிதைந்த உடம்பினை நீத்து விட்டு ஆத்மா புதிய உடம்பினுள் நுழைகிறது. எனவே இறப்பிற்காக உண்மையான வீரன் கலங்கமாட்டான்;5. 6ஐம்புலன்களின் திருவிளையாடலில்..குளிர் வெப்பம், இன்பம் துன்பம் ஆகியவை தோன்றுகின்றன. இவை வரும் போகும்.. நிலைத்து நிற்பதில்லை. இந்த இன்ப துன்பங்களை எவன் சமமாகக் கருதுகிறானோ அந்த வீரனுக்கு மரணமே இல்லை.

இன்னும் சொல்வேன் குந்தியின் மைந்தா, இல்லாததற்கு இருப்புக் கிடையாது, இருப்பது இல்லாமல் போக முடியாது. உலகெல்லாம் ஊடாடி நிற்கும் ஆத்மா அழிவற்றது என்பதை அறிந்து கொள், இதை அழிக்க எவராலும் முடியாது. ஆத்மாவால் தாங்கப்படும் ஸ்தூல வடிவங்களே அழியக் கூடியவை. இவன் கொல்வான், இவன் கொலையுண்டான் என்று எண்ணும் இருவருமே அறியாதவர்கள். ஆத்மா கொல்வதும் இல்லை, கொலையுண்பதும் இல்லை, அது பிறப்பதும் இல்லை, இறப்பதும் இல்லை, அது இல்லாதிருந்து பிறப்பதும் இல்லை, அது தேய்வதும் இல்லை, வளர்வதும் இல்லை, உடல் கொல்லப்படும் போதும் ஆத்மா கொல்லப்படுவதில்லை. ஆயுதங்கள் அதை அறுக்காது, தீ அதை எரிக்காது7, நீர் அதை நனைக்காது, காற்று அதை உலர்த்தாது, அது8 அறுக்க முடியாதது‚ எரிக்க முடியாதது, நனைக்க முடியாதது, உலர்த்த முடியாதது, அது நிரந்தரமானது9, நிறைவானது, நிலையானது, உறுதியானது, முடிவற்றது, மாறுபடாதது, சிந்தனைக்கு எட்டாதது, பொறிகளுக்குத் தென்படாதது, இன்னும் என்றும் புதியது, ஆகவே அர்ஜுனா, இவ்வுண்மைகளை அறிந்து துயரத்தைக் கைவிடு.

ஒரு வேளை, இவ்வாத்மா பிறப்பும் இறப்பும் உடையது என்று நீ கருதினாலும் கூட, அதற்காக நீ வருந்துவதும் பொருந்தாது. பிறந்தவன் இறப்பதும், இறந்தவன் பிறப்பதும் நிச்சயமாக இருக்கும் போது, இதைப் பற்றி நீ வருந்தி என்ன பயன்? இதில் துன்பப்பட என்ன இருக்கிறது? உயிர்களின் துவக்கமும் முடிவும் தெளிவற்ற நிலையில் இருக்க, இடைப்பட்ட காலம் தெளிவாக இருக்கிறது. இந்த ஆத்மாவை ஒருவன் வியந்து பார்க்கிறான், இன்னொருவன் வியந்து பேசுகிறான், மற்றொருவன் வியந்து கேட்கிறான், ஆனால் யாரும் இதனை முழுமையாக அறிந்ததில்லை.

சுயதர்மத்தை எடுத்துக் கொண்டாலும், நீ அஞ்சுவது பொருந்தாது. அறப்போரைக் காட்டிலும் அரசனுக்குச் சிறந்த சுய தர்மம் இல்லை. தற்செயலாய் மூண்டிருக்கும் இந்த யுத்தம், கதவு திறந்திருக்கும் சொர்க்கம், நியாயமான யுத்தமே ~த்ரியனுக்கும் பாக்கியம்‚ இதை நீ நழுவ விட்டால் புகழை இழப்பாய், பாவத்தை அடைவாய், பயத்தால் நீ பின் வாங்கினாய் என்று பலரும் உன்னை இழித்துப் பேசுவர், பகைவர் உன் திறமையைப் பழித்துப் பேசுவர், பெருமையாகப் பேசியவர்களே அதை அழித்துப் பேசுவர், இது சிறப்பைக் காட்டிலும் இழிவானதல்லவா? இதைவிடத் துன்பம் வேறு உலகினில் உள்ளதா? போரில் நீ மடிந்தால் கிடைக்கப் போவது பொன்னுலகம், வென்றால் கிடைக்கப் போவது மண்ணுலகம், ஆகவே வெற்றி தோல்வியைச் சமமாகக் கொள், போருக்குத் துணிந்து நில், இதனால் உனக்குப் பாவம் உண்டாகாது.

அர்ஜுனா, இது வரை உனக்கு10 ஆராய்ச்சி வழியில் அறிவுரை கூறினேன்: இனி யோக வழியில் விளக்கிச் சொல்லுவேன், இந்த யோக புத்தி கர்ம பந்தங்களை நீக்கும், குற்றம் வராது காக்கும், இந்தக் கர்ம யோக முறை முழுமை பெறாவிட்டாலும், 11 வீணாகிப் போகாது, இதன் சிறு பகுதியும் கூட சம்சார பயத்தைப் போக்கும், இதில் உறுதி கொண்டவனுக்கு அறிவு ஒருமைப்பட்டு 12உயர்ந்து நிற்கும், மற்றவர் புத்தியோ கிளைவிட்டுப் பிரியும், சொர்க்கப் பயன் கூறும் வேத வாக்கியங்களில் சிலர் பற்று வைக்கிறார்கள், இவர்கள் இறுதிப் பயன் என்று சொர்க்கத்தைத் தேடுகிறவர்கள், ஆசைப் பாட்டுப் பாடுகிறவர்கள், செல்வத்தின் பின்னால் ஓடுகிறவர்கள், அதிகாரத்தை நாடுகிறவர்கள், பேச்சிலே பூப் போன்ற அடுக்குச் சொல் போடுகிறவர்கள், இவர்களின் பேச்சில் உள்ளத்தைப் பறி கொடுப்பவர்களுக்கு அறிவு என்றுமே ஒரு நிலைப்படாது.

அர்ஜுனா‚ வேதங்கள் கூறும்13 முக்குணங்களை நீ கடந்தவனாக வேண்டும்; இன்ப துன்ப இருமைகளற்று சமநிலை அடைந்தவனாக வேண்டும். ஆத்மாவை வசப்படுத்திச் சிறந்தவனாக வேண்டும்‚ அப்போது உனக்கு வேதங்கள் தேவையில்லை; பொங்கும்14 வெள்ள நீர் இருக்கும் போது, சின்னஞ்சிறு பள்ளநீர் எதற்கு?

இன்னொன்றும் கூறுவேன் அர்ஜுனா, சும்மா இருப்பதில் சுகம் காண்பது மடமை, வினை செய்வதே உன் கடமை‚ விளையும் பலா பலன்கள் உனைச் சேர்ந்தவையல்ல, பயன் கருதிக் காரியம் செய்வது பாவமானது, 15பற்றைத் துறந்து பணி செய்வதே சாலச் சிறந்தது, அதிலும் 16திறமையுடன் செயல் புரிவதே யோகம் என்பது, இது கைவரப் பெற்றவன் நன்மை தீமைகளைத் துறந்தவனாகிறான், பிறவித்தளைகளை மறந்தவனாகிறான்‚ மனிதரில் சிறந்தவனாகிறான், அறிவின் துணை கொண்டு மோகம் என்ற குழப்பத்தை அகற்றும் போது, கேட்பது, கேட்கப் போவது இரண்டாலும் நீ பற்றினை விடுவாய், அந்த அறிவை ஆத்மாவுடன் இணைக்கும் போது யோகத்தை அடைவாய்.

அர்ஜுனன்: கேசவா‚ சமாதியில் நிலைத்த புத்திமானுடைய இலக்கணம் என்ன?

கண்ணன்: ஆசைகளைத் துறந்து, தன்னிலே தானாகி, தனக்குள்ளே மகிழ்ந்தவன் நிறைஞானி ஆவான், அவனே ஸ்திதப்பிரக்ஞன்‚

அர்ஜுனன்: அவன் எப்படி இருப்பான்?

கண்ணன்: அவன் இன்பத்தில் மகிழாமல் இருப்பான், துன்பத்தில் துவளாமல் இருப்பான், ஆமை தன் அவயங்களை வேண்டும் போது ஓட்டுக்குள் இழுத்துக் கொள்வது போல், அவன் தன் ஜம்புலன்களையும் உணர்ச்சிகள் தாக்காமல் உள்ளிழுத்துக் கொள்வான்.

அர்ஜுனன்: அவன் எப்படிப் பேசுவான்?

கண்ணன்: அவன் நல்லவை நடந்தால் மகிழ்ந்துரைப்பதுமில்லை அல்லவை நடந்தால் நொந்து கொள்வதுமில்லை.

அர்ஜுனன்: அவன் எப்படி நடந்து கொள்வான்?

கண்ணன்: கொந்தளிக்கும் புலன்கள் தவமுனிவர் மனத்தையும் கொதிப்பேற்றுகின்றன. நிறை ஞானி அவற்றை அடக்கி, என்னைச் சரணடைகிறான். உணவை உண்ணாதவன் அதை ஒதுக்கி வைக்கிறான். ஆனால் அதன் சுவையை மறப்பதில்லை, பரம்பொருளைக் கண்டு கொண்டதும், அந்தச் சுவை பற்றிய நினைவும் பறந்து விடுகிறது.

இன்னும் கேள் அர்ஜுனா, பொருட்களை நினைக்கும் போது மனிதனுக்குப் பற்று உண்டாகிறது, பற்று ஆசையாய்ப் பரிணமிக்கிறது, ஆசை கோபமாய் உருவெடுக்கிறது கோபத்தால் மோகம் தோன்றுகிறது, மோகத்தால் நினைவு தடுமாறுகிறது, இத்தடுமாற்றத்தால் அறிவு கெடுகிறது, முடிவில் மனிதன் அழிந்தே போகிறான். ஆனால் புலன்களை வசப்படுத்தும் மனவேந்தன், ஆறுதலடைகிறான். அந்த ஆறுதலில் துன்பங்கள் பொசுங்கி விடுகின்றன. அதனால் அவன் அறிவு ஆத்மாவுடன் கலந்து விடுகிறது. அதே சமயம் மனம் அடங்காதவனுக்கு ஆத்ம சிந்தனை இருப்பதில்லை; ஆத்ம சிந்தனை இல்லாதவனுக்கு அமைதி இருப்பதில்லை, அமைதி இல்லாதவனுக்கு இன்பம் கிடைப்பதில்லை. அலைந்து திரியும் புலன்களை விரைந்து பின் தொடரும் மனமானது கப்பலைக் கவரும் காற்றைப் போல், அறிவை அலைக்கழிக்கிறது.

ஆகவே புலன்களை அடக்கியவன் அறிவே நிலையானது. மனிதன் தூங்கும் போது அவன் விழித்திருக்கிறான், மனிதன் விழித்திருக்கும் நேரமே அவனுக்கு இரவு. ஆறுகளின் தண்ணிரை ஆர்ப்பாட்டமின்றி வாங்கிக் கொள்ளும் 17கடல் போல் ஆசைகள் அனைத்தையும் தன்னுள் அடக்கிக் கொண்டு, அகங்கார மமகாரமின்றி நடமாடும் அவனுக்கே அமைதி சொந்தம், ஆசையுள்ளவனுக்கு அமைதி வெகு தூரம்.

இதற்குப் பெயர் தான் அர்ஜுனா பிரம்ம நிலை இதை அடைந்த பிறகு மயக்கம் என்பது இல்லை இறுதிக் காலத்திலாவது இந்நிலை அடைந்தவனுக்கு பிரம்ம நிர்வாணம் என்னும் தெய்வீக நிலை சித்தியாகும்.

(இரண்டாம் அத்தியாயம் நிறைவுபெற்றது)

1. கீதோபதேசத்தின் துவக்கம் இது தான்.

2. பண்பட்ட மனதும், சிறந்த வாழ்க்கை முறையும் எவனிடத்துளதோ அவனே ஆரியன். இது போன்று துரை, ஜென்டில்மேன், அந்தணன், சாஹிப் முதலிய சொற்கள் மேன் மக்களது பண்பைக் குறிக்கும். -சுவாமி சித்பவானந்தர்.

3. உலகில் பாவம் என்பது உண்டு என்றால் அது தான் பயமும் பலஹீனமும். இந்த ஒரு சுலோகத்தை ஒருவன் படித்தால் கீதை முழுதும் படித்த பயன் எய்துகிறான். இந்த ஒரு சுலோகத்தில் கீதையின் இரகசியம் முழுவதும் அடங்கியுள்ளது. -சுவாமி விவேகானந்தர்
4. கார்ப்பண்யம்: மனத்தின் கண் அமைந்துள்ள ஏழ்மையானது கார்ப்பண்யம் எனப்படுகிறது. பிறர் பார்த்து இரங்கி வருந்துதற்கேற்ற நிலையும் கார்ப்பண்யம். ஒரு நெருக்கடியில் மனதினுள் வருவித்துக் கொண்ட தளர்வும் துயரமும் அதன் கண் உண்டு. -சுவாமி சித்பவானந்தர்.

5. புத்தாடை உடுப்பவன் போல் மகிழ்ச்சியடைய வேண்டும். – ஸ்ரீ இராமானுஜர்
6. கண், காது, வாய், மூக்கு, மெய், இவை புலன்கள். காணல், கேட்டல், உண்ணல், உயிர்த்தல், அறிதல் என்பவை முறையே இவற்றின் செயல்கள்.

7. புகையானது சுவரைக் கரியாக்கும். ஆனால் அதனால் சூழப்பட்டிருக்கும் வெளியிடத்தைக் கரியாக்க முடியாது. – ஸ்ரீ ராமகிருஷ்ணர்

8. ஆத்மாவைப் பற்றி மீண்டும் மீண்டும் வௌ;வேறு விதமாகச் சொன்னாலாவது சம்சாரிகள் ஆத்மாவின் பெருமையறிந்து சம்சார பந்தத்திலிருந்து விடுபட முயற்சி செய்யக்கூடும் என்று பரிவுடன் கருதி, சொன்னதையே திரும்பச் சொல்லுகிறான் வாசுதேவன். – ஸ்ரீ சங்கரர்

9. கடல் இருந்தபடி இருக்க அதனுள் நீர் இடம் மாறி அமைகிறது, ஆறாக ஓடுகிறது, பனிக்கட்டியாக உறைகிறது, இது போன்றே ஆத்மாவில் மாறுதல் இல்லை, ஆதலால் ஆத்மா நித்தியமானது. – சுவாமி சித்பவானந்தர்
10. ஆராய்ச்சிக்குச் சமமான ஞானம் இல்லை, யோகத்துக்குச் சமமான பலம் இல்லை. இவ்விரண்டும் ஒன்றே என்று அறியத்தக்கது. – யாக்ஞவல்க்யர்
11. ஒரு நாள் உண்ட உணவில் அதற்கேற்ற பயன் இருப்பது போன்று, அனுஷ்டானத்திற்கு ஏற்ற அளவு யோகத்தின் பயன் உண்டு.

– சுவாமி சித்பவானந்தர்
12. தென்னை மரம்போல். – கண்ணதாசன்.
13. சத்வம், ரஜசம், தமசம் ஆகிய குணங்கள்.
14. கடலுக்கு நடுவே கிணறு எதற்கு? – கண்ணதாசன்.
அரசனுடைய காமக்கிழத்தி தெருப்பிச்சைகாரனைக் கண்ணெடுத்தும் பார்க்க மாட்டாள். – ஸ்ரீ இராமகிருஷ்ணர்.
அருட்பெருஞ்சோதி என்னும் அமுதக் கள் உண்டவன் கீழான உடல் இன்ப இச்சையில் உழன்று ஆட மாட்டான். – வடலூர் இராமலிங்க சுவாமிகள்.
15. ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள்
ஆசைப்படப்பட்ட ஆய்வரும் துன்பம்
ஆசை விட விட ஆனந்தமாமே – திருமந்திரம்.

16. சிந்தையைச் சிதறவிடும் யோகி ஒருவன் மலைக்குகையில் தியானம் செய்கிறான். கடைத்தெருவில் செருப்புத் தைக்கும் சக்கிலியன் குவிந்த மனத்துடன் திறம்படத் தன் தொழிலைச் செய்கிறான். இவ்விருவரில்
சக்கிலியனே கரும யோகத்தில் சிறந்தவன்.
– சுவாமி சித்பவானந்தர்

17. கடலைக் கலக்கிச் சேறுபடுத்த யாராலும் முடியாது. முனியின் நிறை மனது கலங்கிய மனது ஆவதில்லை. சாந்தம் அல்லது ஜீவன் முக்தி என்ற பெருநிலையும் அவனுக்கே உரியது. – சுவாமி சித்பவானந்தர்


(காலஞ்சென்ற திரு எஸ் மெய்யப்பன் உலக மக்கள்தொகைத் திட்டத்தின் உறுப்பினராய் தமிழ் நாட்டு அரசுப் பணியில் இருந்தவர்.சௌடீஸ்வரி மலர் என்ற மாத இதழின் ஆசிரியராய் இருந்தவர். )

Series Navigation

author

எஸ் மெய்யப்பன்

எஸ் மெய்யப்பன்

Similar Posts