கில்காமெஷ் : மரணமின்மையின் இரகசியத்தை தேடிய இதிகாச வீரன் [2]

This entry is part [part not set] of 25 in the series 20061130_Issue

எஸ்.அரவிந்தன் நீலகண்டன்


கில்காமெஷ் காவியம் மேற்கின் அதி பழமையான முழு காவியமாக கருதப்படுகிறது. அது மட்டுமல்லாமல் ஒரு முக்கிய தொன்மப் படிவத்தை அது உள்ளடக்கியுள்ளது. மரணத்தை
வெல்ல முயலும் மானுடத்தின் தேடல் அது. நிரந்தர வாழ்வின் இரகசியத்தை தேடும் பயணம். இறப்பிலிருந்து விடுதலை. மரணம் குறித்த அச்சம். தனது மரணத்தை அமைதியாக ஏற்கிறான் என்கிடு. ஆனால் என்கிடுவின் மரணத்தின் சாட்சியாக விளங்கும் கில்காமெஷ¤க்கு அதுவே தூண்டுதலாக அமைகிறது. அதுவே அவனது மரணத்தை காட்டுகிறது. அண்மையில் வெளியான ஸ்டார்வார்ஸ் திரைப்படத்தில் ஜெடை வீரனான அனாகின் ஸ்கைவாக்கர் டார்த் வாடராக மாற அவனை தூண்டுவது மரணத்த்தின் அச்சமே. ஹாரி பாட்டரில் வரும் லார்ட் வோல்டர்மார்ட் அஞ்சுவது மரணத்தையே. பிரபு டிராகுலாவின் மாற்றம் அவன் மனைவியின் மரணத்தை தொடர்ந்து நிகழ்வதாகும். மரணமற்ற நித்தியவாழ்விற்கு இரத்தம் அருந்தும் இத் தொன்ம பதிவு மேற்குலகில் இரு துருவங்களிலும் இயங்குவதாகும்.

எதுவாயினும் மேற்கின் பிரக்ஞையில் மரணத்தை வெல்லும் மகா இச்சையின் தூண்டுதலின் வேர்களை கில்காமெஷிலிருந்து காணமுடியும். அது போலவே மூன்றில் ஒருபாகம் இறைத்தன்மையும் ஒரு பாகம் மானுடத்தன்மையும் கொண்ட மேய்ப்பனாகவும் அரசனாகவும் திகழும் புராண நாயகன் வழக்கு மேற்கத்திய பிரக்ஞையில் இருப்பதை காட்டுவது இது. ஏசுவின் உடலில் இருந்து இரத்தமும் நீரும் வெளிவந்த (யோவான் 19:34) கூற்று இதிலிருந்தே எழுந்ததாகும். கிரேக்க புராண மரபில் கடவுளரின் உடலில் ஓடுவது நீரே ஆகும். ஏசு மனிதகுமாரன் தேவகுமாரன் ஆகிய இரண்டும் என்பதால் அவரது உடலிலிருந்து இவை இரண்டும் வெளிவந்ததாக கூறப்படுகிறது. இந்த விவிலிய கதையாடலின் வேர்கள் கிறிஸ்தவ சகாப்தத்திற்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பாபிலோனிலிருந்தன.

என்கிடு வந்த பின் ஏன் கில்காமெஷ் மாறிவிட்டான்? ஷெல்டன் கோப் மனநல சிகிட்சையாளர். மனநல சிகிச்சையை ஒரு புண்ணிய யாத்திரையாக காண்பவர். அவர் தன்னுடைய புகழ்பெற்ற ‘If you meet Buddha in the road kill him’ எனும் நூலில் ஒரு அத்தியாயம் கில்காமெஷ¤க்கு ஒதுக்குகிறார். “ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது என்கிடு இருக்கிறான் – அவனது மறுபாதி அவனது மறைந்திருக்கும் சுயம். எந்த அளவுக்கு ஒரு மனிதன் இந்த மறைவான சுயத்திடமிருந்து தன்னை விலக்கி வைத்துள்ளானோ அந்த அளவு அவது வாழ்க்கை வெறுமையும் பிடிப்பும் இல்லாத கேலிக்கூத்தாகவே அமைந்திருக்கும். என்னிடம் வரும் அத்தகைய ஒரு யாத்திரீகனுக்கு (மனசிகிச்சை பெற வருபவனுக்கு) நான் அருரு தேவியைப் போலவே அவனது மறைவான சுயத்தினை அறிமுகப்படுத்த முயல்கிறேன்.” என விளக்குகிறார் ஷெல்டான்.பி.கோப் (‘If you meet Buddha…’ பக்.22) அதே நேரத்தில் சுயத்தின் இருமைத்தன்மை என்பது கில்காமெஷ் கதைக்கு நடுவோட்டமாக இருப்பினும் சுயத்தின் இருகூறுகளின் பாலியல் தன்மையைக் குறித்து அது அறியாமையுடனேயே இருப்பதாக கருதுகிறார் கோப். பெண் அதில் ஒரு மயக்கும் பொருளாகவே அமைந்துள்ளாள். (அதே, பக்..23) இறுதியாக கில்காமெஷின் முக்கியத்துவம் என்ன?

“மிகப் பல சமயங்களில் நான் என் இறப்பு நிகழ்ந்துவருவதை -நாம் அனைவருமே இந்த மரணப்பிணியால் பீடிக்கப்பட்டவர்கள் என்பதனை- மறந்துவிடுகிறேன். அத்தருணங்களில் நினைத்திட வேணுமென்பதனை நினைந்திடாத அத்தருணங்களில் நான் ஆட்டமாடுகிறேன். எனக்கு வாழ்வின் மற்றும் மரணத்தின் மடத்தன்மை, தவறவிட்ட சாத்தியங்கள், சாகஸத்தனங்களின் நினைவுகள், தவறவிட்ட பூரணத்துவத்தின் நினைவிசை அலைகள்,…ஏன் தோழர்களின் அன்பு – இவை அனைத்துமே மரணமிழைக்கும் இகழ்வின் முன் தோற்றுவிடுவதை கில்காமெஷின் யாத்திரை எனக்கு நினைவுபடுத்துகிறது. கில்காமெஷ் – என் சகோதரன்- அவனது புண்ணிய யாத்திரை என்னை மறக்கவிடுவதில்லை.” (பக். 43)

காம்பெல்லை பொறுத்தவரையில் கில்காமெஷ் கதையில் வரும் சிதூரியின் அறிவுரையில் யூதவிவிலியத்தின் (கிறிஸ்தவர்களின் ‘பழைய’ ஏற்பாடு) பிரசங்கி பாடல்களில் பின்னாளில் எதிரொலிப்பதைக் காட்டுகிறார். உதாரணமாக “இரவும் பகலும் ஆனந்தமாக இரு. நடனமாடு விளையாடு. உன் வஸ்திரங்கள் எப்பொழுதும் தூய்மையாக இருக்கட்டும். உன் தலை சுத்தமாக இருப்பாதாக. நீ சுகந்தங்களுடன் நீராடு உன் கையினை பற்றும் குழந்தையின் ஸ்பரிசத்தில் இன்பத்தினை உணரு. உன் மனைவி உன் இதயத்தில் ஆனந்திக்கட்டும்.” இது கில்காமெஷில் சிதூரி. ” நீ போய் உன் ஆகாரத்தை சந்தோசத்துடன் புசித்து உன் திராட்சை இரசத்தை மனமகிழ்ச்சியுடன் குடி….உன் வஸ்திரங்கள் எப்போதும் வெள்ளையாயும் உன் தலைக்கு எண்ணெய் குறையாததாகவும் இருப்பதாக….நீ நேசிக்கிற மனைவியோடே நிலையில்லாத இந்த ஜீவவாழ்க்கையை அனுபவி” (பிரசங்கி 9:7-9) அடுத்த வரியை வாசிக்கையில் இதற்கு கில்காமெஷ் காவியத்துடன் இருக்கும் தொடர்பு தெள்ளத்தெளிவாகும். “நீ போகிற பாதாளத்திலே செய்கையும் வித்தையும் ஞானமும் இல்லையே.”(பிரசங்கி 9:10) மேலும் காம்பெல் இறுதியில் பாம்பு மரணமின்மையின் இரகசியத்தினை விழுங்குவதைக் குறிப்பிட்டுக் கூறுகிறார்: ” எனவேதான் சர்ப்ப சக்தி அழிவின்மையின் சக்தியாக ஒருகாலத்தில் மானுடத்திடம் இருந்தது. அது எடுக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு கீழ்நிலை அடைந்துவிட்ட தேவியின் சக்தியாக ஆகிவிட்டது. இழந்த சொர்க்கத்தில் கபடற்ற அச்சமாக.” (Occidental mythology பக்.92)

பாரத தொன்ம சித்திரங்களிலும் கில்காமெஷின் தொன்மத்துடன் ஒற்றுமை கொண்ட சில சித்திரங்களை காணமுடியும்.

அங்க நாட்டரசன் தன் நாட்டு பஞ்சம் தீர்த்திட ரிஷ்யசிருங்கரை வரவழைக்கிறான், பெண்களையே அறியாத அவரை பெண்கள் மூலம் தன் நாட்டிற்கு வரவழைத்து அவருக்கு தனது மகளான சாந்தாவை திருமணம் செய்து வைக்கிறான் ரிஷ்யசிருங்கர் மானின் கொம்புகளுடன் பிறந்தவர் என்கிறது கதை. என்கிடுவின் தொடக்கத்தன்மையுடன் ஒப்பிடத்தக்கதாக இவ்விவரணம் விளங்குகிறது. சாயாகிரகமான ராகு சர்ப்பமாக அமுதத்தை விழுங்கிய புராணக்கதையும் இங்கு நினைவுக்கு வரலாம். ராகும் கேதுவும் அமுதத்தை அடைய பயன்படுத்தப்பட்ட சர்ப்பமான வாசுகியே என்றும் அது அமுதத்தை அருந்தியததால் ராகு கேது என பிளக்கப்பட்டது எனவும் மற்றொரு வழக்கும் உண்டு.


Series Navigation

author

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்

Similar Posts