வே.சபாநாயகம்
திருப்பத்தூர்.வ.ஆ.
24-11-67
பிரிய நண்பருக்கு,
நமஸ்காரம். உங்கள் கடிதம் வந்தது. வையவனிடமிருந்து இன்று கடிதம் வந்தது. தங்களுக்குப் ‘பெரிசான ஒரு கடிதம்’ அனுப்பி வைத்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
நாளை நாங்கள் எல்லோரும் ஏலமலைக்குப் போகிறோம். நாளை இரவு அங்கு தங்கி, ஞாயிறன்று திரும்பி அவரவர் ஊருக்கு ருவோம். அது ஒரு ஒரு நல்ல இடம். எதிர்காலத்தில் ஒரு மிகச் சிறந்த கோடைவாசஸ்தலமாகும். பனிக்காலம் அல்லவா? எங்கும்
பசுமையும் மூடுபனியுமாய் பார்ப்பதற்கு அருமையாய் இருக்கும்.
விந்தன் ‘நாலாவது கதை’ என்று ஒன்று எழுதியிருந்தாரே, படித்தீர்களா? உயரங்களி லிருந்து விழுந்த பிறகு, மனிதர்களுக்குப் படக்கூடாத இடங்களில் எல்லாம் அடிபட்டு விடுகிறது போலும். என்னென்னவோ வயிற்றெரிச்சல்களில் உளறியிருந்தார்.
உங்களுக்கு அனுப்பவென ஒரு புத்தகம் வாங்கி வைத்திருக்கிறேன். லெர்மான்தவ் எழுதிய “நம்காலத்து நாயகன்” (Hero of the age). ஏற்கனவே என்னிடம் ஒரு பிரதி அந்தப் புத்தகம் இருக்கிறது. இப்பொழுது, தங்களுக்கு அனுப்பவென, என்னிடம் இருக்கிற பிரதியை இழக்க விரும்பாமல், இன்னொரு பிரதியை வாங்கினேன். அதன் இலக்கியத்தரத்தை இதிலிருந்து தாங்கள் உணரலாம். டால்ஸ்டாய் லெர்மான்தவ் பற்றிக் குறிப்பிடுகையில், “சகல அதிகாரங்களும் ஒரு மனிதனுக்கு வழங்கப்பட்டால் எப்படி எழுதுவானோ,
அப்படிஎழுதினார் லெர்மான்தவ்” என்று சொல்லியிருக்கிறார். இன்னொரு இடத்தில், “Pushkin is a literary man. Turgenev is ‘cent percent’ literary man. Mr X and Mr.Y(பெயர் மறந்து போயிற்று) are more than literary men. Lermentov and I are not at all literary men” என்று சொல்லிவிட்டு, சாதாரண எழுத்தாளன், கலைஞன் எனும் நிலைக்கு மேம்பட்ட எதையோ மாற்றிப் பார்க்க வேண்டும், தலைகீழாய்ப் புரட்டிப் புதிது செய்ய வேண்டும்’ என்று அவா கொண்ட “scholars” அல்லது reformers என்கிற மாதிரி சொல்லியிருக்கிறார்.
நட்ஹாம்சனின் “சிதைந்த கூடு” படித்தேன் என்று எழுதியிருந்தேன் அல்லவா? அது ஒரு புதுமையான நல்ல கதை. பௌருஷமும், வீரமும் மற்றும் பல பெருங்குணங்களும் கொண்ட ஒரு ராணுவக் கர்னல். வடதுருவப் பிரதேசம் ஒன்றில் ஒரு தீவில், சின்னஞ்சிறு குடிசையில், தனது தாயின் துணையுடன், அருகில் உள்ள காடுகளில் வேட்டையாடி, காடுகளை நேசித்து, காட்டு மரங்களை நேசித்து, இலை கிளைகளையெல்லாம் நேசித்து, சின்னஞ்சிறு பாறைகளையும் பெரிய பெரிய பாறைகளையும் காட்டின் ஒற்றையடிப் பாதைகளையும் நேசித்து, சூரியனின் உதயாஸ்தமனங்களில் லயித்துப்போய், பறவைகளை நேசித்து, ஆனால் அவைகளை வேட்டையாடி, பசிக்காக மட்டுமே வேட்டையாடி, மிகுந்த நன்றியுணர்வுடன் வேட்டையாடி ………..
– இப்படி எல்லாம் ஒர் உயர்ந்த, சிறந்த, நல்ல வாழ்க்கையை வாழ்ந்து வருகிறான். அவனைவிட எவ்வளவோ வயது சின்னவளான ஒரு சின்னப் பெண்ணின் உறவு அவனுக்கு ஏற்படுகிறது. அவளுடன் அவனுக்கு ஏற்பட்ட நேசம்- முழுமைவாய்ந்த அவனது ஆத்மாவையே எங்ஙனம் சிதைக்கிறது என்பதுதான் கதை. இந்த ஆத்மச் சிதைவின் காரணமாக,
அங்கிருந்து மாறி, அவளை விட்டு அடியோடு பிரிந்து வேற்றூருக்கு வந்துவிட்ட பின்பும், ரிடையர் ஆன பின்பும், அவன் வாழ்க்கையை எவ்வளவு அக்கறையின்றி, ஒரு பழிதீர்க்கும் பாங்கில் வாழ்கிறான் தெரியுமா? கடைசியில் இந்தியாவின் காடு ஒன்றில், ஒரு நெருங்கிய
நண்பனையே வலிய வாய்ச் சண்டைக்கு இழுத்து, அவனை சுடச் செய்து அந்தக் கதாநாயகன் செத்துப் போகிறான்.
– இந்தக் கதையின் களம்: ஒரு வட துருவப் பிரதேசத்தைச் சார்ந்த நார்வேதேசக் காட்டுப்புற கிராமம். காலம்: ஓர் அரை நூற்றாண்டுக்கும் முந்தையதாய் இருக்கும். பாத்திரங்கள்: ஒரு Middle aged ராணுவக் கர்னல், அந்தக் காட்டுப்புறக் கிராமத்தின் தலைவன் போலும் ஒருவனின் மகள். இந்தக் கதையிம் ‘தீம்’: முழுமை வாய்ந்ததாயிருக்கிற ஒரு மனிதனின் ஆத்மா, அந்தச் சிறுபெண்ணின் நேசத்தால் எப்படிச் சிதறிப் போகிறது- சிதைந்து போகிறது என்பதே!
– இப்படியொரு கதை எனக்குத் தெரிந்தும் உண்டு. களம்: சர்வசாதரணமாய் நாம் கண்டு கண்டிருக்கிற களம்தான். காலம்: தற்காலம். பாத்திரங்கள்: அந்த ராணுவக் கர்னலுக்கும் இவனுக்கும் தன்மைகளிலும் வாழ்க்கைகளிலும் ஏகப்பட்ட வித்யாசங்கள் உண்டு எனினும் இவனது ஆத்மாவும், ஏறக்குறைய அந்தக் கர்னலின் ஆத்மாவைப்போலவே முழுமை வாய்ந்தது. அதேமாதிரி இங்கும் ஒரு சின்னஞ்சிறு பெண். தீம்: அதேதான். ஒருவனின் ஆத்மா சிதைந்து போகிற விதம்.
இலக்கியம் எத்தகைய அபூர்வமான, மந்திர சக்திவாய்ந்த கண்ணாடியாயிருக்கிறது? வடதுருவம் எங்கே, வடாற்காடு எங்கே? ஆனால் வாழ்க்கையின் இந்த ஒருமித்த தன்மை! என்ன விசித்திரம்! இந்த விசித்திரங்களையும் அற்புதங்களையும் கண்டு கொண்டே –
வாழ்க்கயில் solid ஆக வேறு எவ்வித லாபமும் இல்லாவிடினும் கூட – வாழ்ந்து விடலாம் போல் இருக்கிறது.
என்ன எழுத்வது என்று தெரியாமல் இந்தக் கடிதத்தைக் கையிலெடுத்தேன். ஆனால் திருப்பிப் பார்க்கும்போது, நிறையவே எழுதியிருக்கிறேன் என்று தோன்றுகிறது. திங்கள் அல்லது செவ்வாய் தபாலில் உங்களுக்கு ‘நம் காலத்து நாயகனை’ அனுப்புகிறேன்.
தவறி தாமதமானாலும் மன்னிக்க. பதில் போடுங்கள். நாம் ஒருவருக் கொருவர் எழுதிக் கொள்ள மறுதரப்பின் பதில்கள் அவசியமா என்ன? எனவே என் கடிதமோ, உங்கள் கடிதமோ வரட்டும் என்று நாம் காத்திருக்க வேண்டியதில்லை. தோன்றினால் உட்கார்ந்து எழுதுவோம். அவ்வளவுதான். எழுதுங்கள்.
நிறைய எழுதுங்கள். வாழ்க்கையின், உணர்ச்சிகளின் வெள்ளத்தில் வெறுமனே மிதந்து போய்க் கொண்டு இருந்து விடாதீர்கள். அது சிறப்புத்தான். ஆனால் எழுதினால் தான் அந்தச் சிறப்புக்குப் பிரயோசம் உண்டு. இல்லையேல் வீண்தான். பாத்திரச் சிருஷ்டிக்கு உதாரணமாக உங்கள் முன்னே ‘தேவனை’ வைத்துக் கொள்கிறீர்களா என்ன? வேண்டாம் அது ஆபத்து. பு.பி போன்றவர்களாயின் பரவாயில்லை. ஆனால் அவர்க:ளையே கூட, எப்படி என்று ஆழம் பார்த்து ரசித்து, பிறகு ஒதுங்கிக் கொண்டு, நம் பார்வையில்,
நம் போக்கில் பாத்திரங்களை உருவாக்க வேண்டும்.
– பி.ச.குப்புசாமி.
- 20 ஆண்டுகள் கடந்தும் சமாதி கட்டிய செர்நோபில் அணு உலையில் கதிரியக்கக் கசிவுகள்-1
- சீதாயணம் (நெடுங்கவிதைத் தொகுப்பு ) வெளியீடு
- மலைகளும் மலர்களும் – ஒரு புகைப்படத் தொகுப்பு
- சில பரிசுப்படங்கள்: சில குறிப்புகள்
- பாவேந்தர் பாரதிதாசனின் குடியானவன் – பாரதிதாசன் வாரம் (ஏப்ரல்21-29)!
- அழகி
- கம்பனில் சாபங்களும் மீட்சிகளும்
- காற்றில் உன் கைவிரல்கள்
- கடித இலக்கியம் (‘சந்திரமௌலி’ என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்) -கடிதம் – 2
- காவ்யா என்ன செய்து விட்டார் ?
- அணிகலன் பெருக்கும் அக்ஷய த்ரிதியை
- வளர்ந்த குதிரை – 1
- கலைஞர், கமல் மற்றும் தேவன்
- தமிழில் தொழுகை : தொடரும் உரையாடல்
- கடிதம்
- அடூர் கோபாலகிருஷ்ணன் திரைப்படவிழா, கருத்தரங்கு – ஏப்ரல் 29 – மே 1 2006
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 18
- காபா ( Gamma aminobutyric acid ) : ஸென்னும் தாவோவும் இணையும் புள்ளி ?
- ஹ¤ருல்ஈன் தேவதையின் மடி
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-18) (Based on Oscar Wilde’s Play Salome)
- பெண் பனி
- எடின்பரோ குறிப்புகள் – 13
- சூழலும்,மனித இடைச்செயலும்!
- இஸ்லாமியர் இட ஒதுக்கீடும், வீரமணியின் கருத்துக்களும் – ஒரு விமர்சனம்
- மஹாத்மாவைப் பற்றி ஒரு ஜீவாத்மா எழுதும் வேளையில்: மாப்ளா கலகம்,இந்து மகாசபையும், பாகிஸ்தானும்
- கீதாஞ்சலி (70) ஆனந்தத் தாண்டவம்…! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- கனவுகளைத்தின்னும் இரவுகள்……..
- இரண்டு கவிதைகள்
- நாளை
- ஞானத்தங்கமே
- அப்பாவின் மரணம்
- பெரியபுராணம் – 86 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- கொலை செய்யும் குரங்கினம்
- கடிதம்