உன்னதம்

0 minutes, 11 seconds Read
This entry is part [part not set] of 28 in the series 20060106_Issue

பாலா


சென்ற வார திண்ணையில் உன்னதம் குறித்த அறிவிப்பு படிக்க கிடைத்தது. ‘உன்னதம் ‘ புரட்டியவுடன் முன்பு எழுதிய பதிபைஇங்கு பகிர்ந்து கொள்கிறேன்:

கெளதம சித்தார்த்தனை ஆசிரியராகக் கொண்டு ‘உன்னதம் ‘ வெளிவருகிறது. எளிமையான வடிவம். ஆசிரியரின் சிறுகதைகள். நிறைய கவிதைகள்.

எனக்குப் பிடித்த பகுதிகளில் இருந்து சில:

1. ‘மாதங்கன் ‘ எழுதிய புத்தக மதிப்புரை. அ.மார்க்ஸ் எழுதிய ‘புத்தம் சரணம் ‘ தொகுப்புக்கு அறிமுகம்.

‘ஆன்மாவே நிலையான ஒளியாகும் என வலியுறுத்தும் வேத/உபநிடத சிந்தனைகளுக்கு எதிராக ‘நீயே உன் கைவிளக்கு ‘ என மாற்றுச் சிந்தனையை பெளத்தம் வழங்கியது. சித்தார்த்தர் தான் புத்தராக உருபெற்றதை பிரம்மத்தில் கரைந்து அமைதியாதல் என்கிற பிராமண மதக் கோட்பாட்டிற்கு நேர்மாறாக ‘எழுச்சிபெறுதல் ‘ – விழிப்படைதல் எனப் பகர்கிறார். சித்தார்த்தன் துறவுநிலை மேற்கொண்டதற்கு பல்வேறு புனைவுகள் காராணமாக்கப் பட்டுள்ள இலையில், ரோகினி நீர்ப்பங்கீட்டுப் பிரச்சினையில் சாக்கியர்க்கும் கோலியகுலத்தோர்க்குமிடையே உருவாகவிருந்த போரைத் தடுப்பதற்காகவே சித்தார்த்தர் துறவுபூண முடிவு செய்தார் என்று அம்பேத்காரின் கூற்றிலிருந்து அ.மா. முன்வைக்கும் பகுத்தற்வு சார்ந்த காரணம் கவனத்திற்குரியது. ‘

2. விக்ரமாதித்தக் கவிஞனுக்கு யதார்த்த வேதாளம் சொன்ன கதைகள்

‘எதிர்வரும் அக்டோபர் மாதம் குற்றாலத்தில் தமிழ் இலக்கிய உலகின் புகழ்பெற்ற கவிதைப் பட்டறை நடக்க இருக்கிறது என்ற செய்தியை அறிந்தபோது மட்டற்ற மகிழ்ச்சியடைந்தேன். அக்டோபர் 1988ல் நடந்த இப்பதிவுகள் ஏழு வருடம் கழித்து இப்போது நடக்கப் போகிறது என்பது மிகவும் முக்கியமான அம்சம். இந்தக் கருத்தரங்கில்தான் எவ்வளவோ நவீன விசயங்கள் அறிமுகமாயின. விமர்சகத் திலகங்களின் புகழ்பெற்ற அடிதடிகளும், சிலம்பாட்டங்களும் நடந்தேறினாலும், சிந்தனைக்கு விருந்தும் இங்கேதான் திகட்டத் திகட்டக் கிடைக்கும்.

அந்தப் பட்டறையில் நடந்த நிகழ்வுகளை வைத்து அப்போது எழுதிய parody இது. ‘

3. ‘யாத்திரை ‘ – முத்துமகரந்தன்

சென்ற இதழில் சோ தர்மனின் ‘கூகை ‘ நாவலில் இருந்து ஒரு முக்கியமான பகுதி வெளி வந்திருந்தது. இந்த இதழில் அய்யப்ப மலை பயணத்தின் பகுதிகளை விவரிக்கும் பகுதி. வெளிவர இருக்கும் இந்த நாவல், சுலபமான நடையில் அமைந்திருக்கிறது. அலங்காரம் இல்லாத யதார்த்தத்தில் சாமிமார்களின் சம்பவங்களை உள்ளது உள்ளபடியே சுவாரசியமாக சொல்லியிருந்தார்.

இது தவிர உதயசங்கரின் ‘கண்ணாடிச் சுவர்கள் ‘, கால பைரவனின் ‘புலிப்பானி ஜோதிடர் ‘, ஆர் பி ராஜநாய ?ம் எழுதிய மகுடேஸ்வரனின் ‘காமக் கடும்புனல் ‘ கவிதை புத்தக விமர்சனம், தொ பரமசிவனின் பண்பாட்டு வாழ்வியல் பத்தி, நானாவதி அறிக்கை குறித்து ரவிக்குமர் ஆகியவையும் பதிப்பித்திருக்கிறார்கள்.

குஷ்வந்த சிங், பியூசிஎல், தார்குண்டே, ழாக் தெரிதா என்று பலவற்றை அடிப்படையாகக் கொண்டு ‘நவம்பர் கலவர ‘த்தையும் தமிழகப் பின்னணிகளையும் சுருக்கமாக கொடுக்கும் ரவிக்குமாரின் கட்டுரை படிக்க வேண்டிய ஒன்று.

கொசுறு மேற்கோள்கள்:

அ) ‘இந்தப் படுகொலைகளைப் பற்றிப் பேசுவது இந்துத்துவ ஆதரவாக மாறிவிடுமோ என்ற அச்சத்தில் நமது மதச்சார்பற்ற அறிவுஜீவிகள் சீக்கியர்களைக் கைகழுவினர். இதுதான் இங்கே பேசப்படுகிற ‘கம்யூனிஸ்ட் ப்ராண்ட் மதச் சார்பின்மையின் ‘ நகைமுரணாகும். – ரவிக்குமார்

ஆ) விக்ரமாதித்யன் – தில்லாலங்கிடி கவிதைகள்

அனுபவங்கள் கவிதையாகின்றன

உணர்வுகள் கவிதையாகின்றன

வார்த்தைகள் கவிதையாகின்றன

புனைவுகள் கவிதையாகின்றன

என்னென்னவெல்லாமோ

கவிதையாகின்றன

நிற்கத்தான் வேண்டும் கதவு

கிடக்கத்தான் வேண்டும் கட்டில்

இருக்கத்தான் வேண்டும் அடுப்பு

தொங்கத்தான் வேண்டும் கயிறு

நானூறு பேருக்குள்தான்

நவீன இலக்கியம்

துண்டு போடுகிறவர்கள்

துண்டு போடுகிறார்கள்

முண்டாசு கட்டுகிறவர்கள்

முண்டாசு கட்டுகிறார்கள்

இடைக்கிடை அப்போதைக்கப்போது

எல்லாமும் மாறுகிறது.

இ) சட்டத்தைக் கட்டுடைப்பு செய்வதற்கு மேம்படுத்துவதற்கு தூண்டுதலை, ஊக்கத்தை, நம்மிடம் உண்டாக்குவதுதான் நீதி – ழாக் தெரிதா

Series Navigation

author

பாலா

பாலா

Similar Posts