கார்ல் பாப்பரின் வெங்காயம்-2

This entry is part [part not set] of 46 in the series 20050311_Issue

சோதிப் பிரகாசம்


மயக்கும் சொற்கள்

‘Conceive ‘ என்னும் ஆங்கிலச் சொல்லுக்குக் ‘கருத்தில் கொள்ளுதல் ‘ என்றும் ஒரு பொருள் உண்டு என்பது நாம் அறிந்தது.

இது ஒரு வினைச் சொல்! இந்த வினைச் சொல்லின் அடியாக விளர்ந்து கொண்டு வந்து இருக்கின்ற ஒரு வினை அடிப் பெயர்ச் சொல்தான் ‘conception ‘ என்பது! இந்த வினையின் விளைவான பெயர்ச் சொல்லோ ‘concept ‘ என்பது ஆகும்.

இப்படி,

வினை—-வினை அடிப் பெயர்—-வினை விளைவுப் பெயர்

என்பதாகக்

conceive—-conception—-concept

என்னும் சொற்கள் விளர்ந்து கொண்டு வந்து இருப்பதை நாம் காண்கிறோம்.

இந்தச் சொற்களில் மாய்மை எதுவும் இல்லை. பாமரர் முதல் படித்தவர் வரை எல்லோரும் இவற்றைத் தெரிந்து வைத்து இருக்கிறார்கள் என்பதிலும் ஐயம் இல்லை.

ஆனால், concept என்னும் பெயர்ச் சொல்லில் இருந்து உருவாக்கப் பட்டு இருக்கின்ற conceptualize என்னும் வினைச் சொல்லோ சற்று மாய்மை ஆனது. இந்த வினைச் சொல்லில் இருந்து உருவாக்கப் பட்டு இருக்கின்ற conceptualization என்னும் பெயர்ச் சொல்லோ இன்னும் மாய்மை ஆனது.

ஏனென்றால், இவை போன்ற சொற்களை அறிவாளர்கள் மட்டும்தாம் பயன் படுத்திக் கொண்டு வருகிறார்கள். எனவே, மேலும் அதிகமான மாய்மையுடன் இதனை நாம் புரிந்து கொள்வதுதான் நல்லது.

அதாவது, conceive என்னும் சொல்லில் இருந்து தொடங்கி conception என்னும் வினைப் பெயராக நீடித்துக் கொண்டு வந்து concept என்னும் பெயர்ச் சொல்லாக, ஒரு நிகழ்வினை (phenomenon)க் கருத்துப் படுத்திக் கொள்கின்ற நமது சிந்தனைச் செயல் ஒரு முடிவினை எய்தி விடுகிறது.

ஆனால், concept-ஐ மீண்டும் conceptualize செய்கின்ற அறிவாளர்களுக்கு இது போதாது. ஏனென்றால், பகட்டுத் தனம் வாய்ந்ததாகவும் மாய்மை ஆனதாகவும் மற்றவர்களுக்கு இது தோன்றாது! எனவேதான்—-தங்கள் சிந்தனைச் செயலின் பகட்டுத் தனத்தினை வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொள்கின்ற வகையில்—-conceptualize என்னும் சொல்லைப் பயன் படுத்துவதற்கு அவர்கள் முற் படுகிறார்கள்.

சரி, conceive என்பதற்கும் conceptualize என்பதற்கும் இடையே உள்ள வேறுபாடுதான் என்ன ?

எதுவும் இல்லை.

ஏனென்றால், Concept என்பதைத் தவிர வேறு விளைவு எதுவும் இதில் இல்லை.

ஒரு வேளை, அனுபவ அறிவு நிலையில் எதையும் நாம் கருத்துப் படுத்திக் கொள்வதை conception என்றும் காரண அறிவு நிலையில் அதனை நாம் கருத்துப் படுத்திக் கொள்வதை conceptualization என்றும் குறிப்பிடுவதற்காகத்தான் இச் சொற்களை அறிவாளர்கள் உருவாக்கிக் கொண்டு இருக்கிறார்களோ ? என்றால், அதுவும் இல்லை.

ஏனென்றால், மாய்மை இல்லாமல் இவ் வேறுபாடுகளை வெளிப் படுத்துவதற்கு வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இல்லை. அனுபவ அறிவு முறையான கருத்தமைவினை emprical concept என்றும் காரண அறிவு முறையான கருத்தமைவினை reasonal concept என்றும் மாய்மை இல்லாமல் நாம் சுட்டிக் காட்டிக் கொள்ள முடியும்.

(குறிப்பு: at the level of reason என்பதை, அதாவது, concept at the level of reason என்பதை ‘reasonal concept ‘ என்று நான் குறிப்பிட்டு இருக்கிறேன். ஆங்கிலத்தில் இப்படி ஒரு சொல், அதாவது, reasonal என்னும் சொல் இல்லை என்று எனது நண்பர் ஆர். காசிலிங்கம் ஒரு முறை என்னிடம் குறிப்பிட்டார்; எனினும், இல்லாமல் இருந்திட முடியாது என்னும் நம்பிக்கையில் இந்தச் சொல்லை நான் பயன் படுத்திக் கொண்டு வந்து இருக்கிறேன்; விளக்கம் அளித்திட வேண்டியது ஆங்கில வாணர்தம் பொறுப்பு!)

சரி, conceive என்னும் சிந்தனைச் செயலின் விளைவுதான் concept என்றால் conceptualize என்னும் சிந்தனைச் செயலின் விளைவு என்ன ?

Conceptualization என்பதாக இந்த விளைவு இருந்திட முடியாது. ஏனென்றால், conception என்பதைப் போன்ற ஒரு வினை அடிப் பெயர்தான் conceptualization என்பதும் ஆகும்!

அதாவது,

conceive—-conception—-concept

என்றால்,

conceptualize—-conceptualization—-என்ன ?

என்பது கேள்வி.

conceptualism என்பதாக இந்தச் சொல் இருந்திட முடியாது. ஏனென்றால், ஒரு கொள்கையைக் குறிக்கின்ற கோட்பாட்டு முறையான ஒரு சொல் இது!

அதே நேரத்தில், conceptuality என்று இதனை நாம் குறிப்பிடலாம் என்றால், அதுவோ ஒரு பண்பினைக் குறிக்கின்ற ஒரு பெயராக மாறி விடுகிறது. அதாவது, conceptual என்னும் பண்பினை, அல்லது தன்மையினை! Conceptualness என்பது கூட கருத்தமைவான ஒரு கருத்தின் தன்மையினைக் குறிப்பதாகத்தான் இருந்திடவும் கூடும்.

சரி, Conceptualcept என்று ஒரு சொல்லை உருவாக்கி,

conceieve—-conception—-concept

என்பது போல,

conceptualize—-conceptualization—-conceptualcept

என்று நமது கேள்விக்கு ஒரு மொழி இயல் ஆய்வாளர் விளக்கம் அளிக்கிறார் என்று நாம் வைத்துக் கொள்ளுவோம்.

எவ்வளவு மாய்மையாக நமக்கு இது தோன்றும்!

Conceptualization என்பதே ஒரு மாய்மை என்றால், conceptualcept என்பது மாய்மையினும் மாய்மைதானே!

இப்படிப் பட்ட மாய்மையான ஒரு பான்மையில்தான் testability, falsifiability மற்றும் refutability ஆகிய சொற்களைக் கார்ல் பாப்பர் பயன் படுத்தி இருக்கிறார். இந்த மாய்மைகளோ இச் சொற்களினது பொருள்களின் மாய்மை என்பதுதான் இங்கே நமக்கு முக்கியம்!

ஏனென்றால், கார்ல் பாப்பரின் சொல் ஆட்சியில் இந்த மூன்று சொற்களுக்கும் இடையே எந்த ஒரு வேறுபாடும் இல்லை.

முதலில், நமது சொல்லாட்சிகளை நாம் துல்லியப் படுத்திக் கொள்வது நல்லது.

சொற் பொருள்கள்

False என்பதைத் ‘தவறு ‘ என்று நமது மொழி பெயர்ப்பாளர் தமிழ்ப் படுத்தி இருக்கிறார்.

எனவே, falsification என்பதைத் ‘தவறு என நிருபித்தல் ‘, அல்லது, ‘பிழை என்று ஆக்கிக் காட்டுதல் ‘ என்று எடுத்துக் கொண்டு, அதனைப் ‘பிழையாக்கம் ‘ என்று நாம் துல்லியப் படுத்திக் கொள்ளலாம். கூடவே, falsify செய்கின்ற ability-யினைப் ‘பிழையாக்கும் இயன்மை ‘ என்றும் நாம் பொருள் படுத்திக் கொள்ளலாம்.

இது போல, refute என்பதைத் ‘தவறு என்று எடுத்துக் காட்டுதல் ‘, அல்லது ‘தவறு என்று மறுத்தல் ‘ என்று கொண்டு, refutation என்பதைத் ‘தவறாக்கம் ‘ என்றும் refutability என்பதைத் ‘தவறாக்கும் இயன்மை ‘ என்றும் நாம் மொழி பெயர்த்துக் கொள்ளலாம்.

Risk எடுத்து ஒரு காரியத்தில் ஈடு படுவதைத் ‘துணிச்சலுடன் ‘ செயல் படுவது என்று நமது மொழி பெயர்ப்பாளர் தமிழ்ப் படுத்தி இருக்கிறார்.

எனவே, துணிச்சலை முன்னிலைப் படுத்துகின்ற வகையில் ‘துணிவம் ‘ என்றோ அல்லது நமது துணிச்சலினால் நாம் எதிர் கொள்ள வேண்டிய இடர்களை முன்னிலைப் படுத்துகின்ற வகையில் ‘இடரம் ‘ என்றோ இதனை நாம் குறிப்பிட்டுக் கொள்ளலாம்.

இங்கே, ‘துணிவம் ‘ என்பதை மட்டும் நாம் தேர்வு செய்தும் கொள்ளலாம். துணிவத்துடன் செயல் படுவது என்பது இடரத்துடன் செயல் படுவதுதானே! கூடவே, வருவது-உரைக்கின்ற prediction என்பதை ‘முற் கூற்று ‘ என்றும் astrology என்பதைக் ‘கோளியம் ‘ என்றும் நாம் வைத்துக் கொள்ளலாம்.

பிழையாக்கம் என்னும் சொல் மிகவும் குழப்பம் வாய்ந்தது என்று ஓர் எதிரீட்டினை (objection) எழுப்புகிறார் நண்பர் குடியரசு! ஒரு தேற்றத்தைப் ‘பிழையாகப் புரிந்து கொள்ளுதல் ‘ அல்லது ‘பிழையாகக் குறிப்பிடுதல் ‘ என்றுதான் இந்தச் சொல் பொருள் பட்டிட முடியும் என்றும் அவர் வாதிடுகிறார்!

எனினும், ‘பிழை ‘ என்னும் ஒரு சொல்லே இதற்குப் போதும் ஆனது என்று எனக்குத் தோன்றுகிறது. வேண்டும் என்றால், ‘பிழையான புரிவு ‘ (fallacy) என்று இதனை நாம் குறிப்பிட்டுக் கொள்ளலாம்.

இப் பொழுது, கார்ல் பாப்பரின் இறுதி முடிவினை இங்கே நாம் பார்ப்போம்—-அதாவது, அவரது முடிபுகளுக்கு எல்லாம் இறுதியான முடிவினை!

கார்ல் பாப்பரின் இறுதி முடிவு

‘One can sum up all this by saying that the criterion of the scientific status of a theory is its falsifiability, or refutability, or testability. ‘

அதாவது, ‘சுருக்கமாகக் கூறுவது என்றால், ஒரு தேற்றத்தின் பிழையாக்கும் இயன்மை, அல்லது தவறாக்கும் இயன்மை, அல்லது பரிசோதிக்கும் இயன்மைதான் அதன் விஞ்ஞானத் தன்மையினது அளவு கோல் ஆகும். ‘

இதுதான் கார்ல் பாப்பரின் இறுதி முடிவு. இங்கு இருந்து நமது அலசலினை நாம் தொடங்குவோம்.

பரிசோதனை

பிழை என்று ஒரு தேற்றத்தை நாம் நிருபிப்பது எப்படி ? அதாவது, பிழை ஆக்கிக் காட்டுவது எப்படி ? அதாவது, பிழையாக்குவது எப்படி ?

பரி சோதனையின் மூலம்!

ஒரு தேற்றத்தைத் தவறு ஆக்கிக் காட்டுவது எப்படி ?

பரி சோதனையின் மூலம்!

அப்படி என்றால், தவறாக்கம் என்பதற்கும் பிழையாக்கம் என்பதற்கும் இடையே ஏதேனும் வேறுபாடு இங்கு உள்ளதா ?

இல்லை; அணுவளவும் இல்லை!

பின்னர் ஏன், பிழையாக்கம் என்றும் தவறாக்கம் என்றும் இரண்டு சொற்களை இங்கே கார்ல் பாப்பர் பயன் படுத்துகிறார் ?

பகட்டுக் காட்டி நம்மை மயங்கிட வைப்பதற்காகவா ? அல்லது, தெளிவாக அவரை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவா ?

தெளிவினை நமக்கு ஊட்டுவதுதான் அவரது நோக்கம் என்றால், இவற்றுள் ஏதேனும் ஒரு சொல்லை மட்டும் நாம் எடுத்துக் கொண்டால் போதும்! எனவே, பிழை ஆக்கம் என்பதை மட்டும் இங்கே நாம் எடுத்துக் கொள்வோம்.

சரி, ஒரு தேற்றத்தைப் பிழை ஆக்கி நாம் காட்டுவது எப்படி ?

பரி சோதனையின் மூலம்!

ஒரு தேற்றத்தைப் பரி சோதிப்பது எதற்காக ?

அது பிழையா ? சரியா ? என்பதை நாம் தெரிந்து கொள்வதற்காக!

பரி சோதிக்காமல் ஒரு தேற்றத்தை நாம் பிழை ஆக்கிட முடியாது. எதையும் பிழை ஆக்கிக் காட்டிட வேண்டும் என்றால் அதனை நாம் பரி சோதித்துதான் ஆக வேண்டும்.

இப்படி, பரிசோதனை இல்லாமல் பிழையாக்கம் இல்லை; பிழையாக்கத்திற்குத் தேவை இல்லாமல் பரிசோதனையும் இல்லை.

எனவே, ‘பிழையாக்கம் ‘ என்னும் செயலினை மட்டும் இங்கே நாம் எடுத்துக் கொண்டால் போதும், கார்ல் பாப்பரின் இறுதி முடிவினை நாம் அலசிப் பார்த்து விடலாம்.

பிழை ஆக்கும் இயன்மை

ஒரு நிகழ்வினைப் பற்றிய ஒரு தேற்றத்தினைப் பிழையாக்கும் இயன்மைதான் அத் தேற்றத்தின் விஞ்ஞானத் தன்மைக்கு அல்லது நிலைமைக்கு உரிய அளவுகோல் என்று கார்ல் பாப்பர் கூறுகிறார்.

அப்படி என்றால், பிழை ‘ஆக்கும் இயன்மை ‘ என்பதுதான் அவர் கூறுகின்ற அளவுகோல் என்பதில் ஐயம் இல்லை.

ஆனால், இந்த அளவுகோல், அதாவது, பிழை ஆக்கும் இயன்மை, யாரிடம் அல்லது எங்கே இருந்திட வேண்டும் ? என்று அவர் கருதுகிறார் என்பதுதான் நமது சிக்கல்!

அதாவது, ஒரு தேற்றத்தினைப் பிழை படுத்திக் காட்டுகின்ற, அல்லது பிழை பாடானது என்று நிருபிக்கின்ற இயன்மை என்பது அத் தேற்றத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கின்ற இன்னொரு தேற்றக் காரரிடம் இருந்திட வேண்டும் என்று அவர் கருதுகிறாரா ? அல்லது, அத் தேற்றத்திற்கு உள்ளேயே அந்த இயன்மை இருந்திட வேண்டும் என்று அவர் கருதுகிறாரா ? என்பதுதான் சிக்கல்!

முதலாவதாக, முன்னதை நாம் எடுத்துக் கொள்வோம்.

ஒரு தேற்றத்தைப் பிழை ஆக்குகின்ற இயன்மை, அதனை மறுக்கின்ற மற்றும் ஒரு தேற்றக் காரரிடம் இருந்திட வேண்டும் என்று கார்ல் பாப்பர் கருதுவார் என்றால், அந்த அவரது திறமையினை இங்கே அவர் குறிப்பிடுகிறார் என்று பொருள்!

எனவே, அனைத்துத் தேற்றங்களையும் ஒதுக்கித் தள்ளி விட முற் படுகின்ற தம்மைத் தாமே அவர் குறிப்பிட்டுக் கொள்கிறார் என்றும் கூட ஒரு பொருள்!

எனினும், கார்ல் பாப்பரின் திறமை மற்றும் அறிவாண்மை ஆற்றல் ஆகிய வற்றை எதிர் பார்த்துக் கொண்டு எந்த ஒரு தேற்றக் காரனும் தனது தேற்றத்தினை வடிவு ஆக்குவது (formulate) இல்லை; அதே நேரத்தில், தனக்குத் தெரிந்த எதிர்க் கருத்துகளைக் கருத்தில் கொள்ளாமலும் அவன் இருப்பது இல்லை.

ஏனென்றால், பழைய தேற்றங்களின் புதியது ஒரு வளர்ச்சிதான் புதிய தேற்றம் என்பது ஆகும்.

எனவே, தமது இயன்மையைத்தான் கார்ல் பாப்பர் இங்கே குறிப்பிடுகிறார் என்று நாம் கொள்வதில் எந்தத் தவறும் இல்லை.

அப்படி என்றால், கார்ல் பாப்பரது திறமையின் அளவுகோல் என்ன ? என்னும் கேள்வி இங்கே எழுந்து விடுகிறது என்பது உண்மைதான்.

எனினும், இங்கே இது நமது நோக்கம் அல்ல.

இப் பொழுது, இரண்டாவதாக, பின்னதை நாம் எடுத்துக் கொள்வோம்.

ஒரு தேற்றத்தினைப் பிழையாக்கும் இயன்மை அந்தத் தேற்றத்திற்கு உள்ளேயே அடங்கிக் கிடந்திட வேண்டும் என்று கார்ல் பாப்பர் கருதுவார் என்றால், அந்தத் தேற்றத்தின் மொழிபினைப் பற்றி அவர் பேசுகிறார் என்று பொருள்!

எனவே, தமக்கு முந்திய எதிர்க் கருத்துகளையும் இனி மேல் எழுந்திடக் கூடிய மாற்றுக் கருத்துகளையும், தமது கருத்தில் அந்தத் தேற்றக் காரன் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கார்ல் பாப்பர் கருதுகிறார் என்றுதான் பொருள்!

இங்கே, மாக்ஸ் முல்லரை நாம் எடுத்துக் கொள்வோம்.

(தொடரும்)

19-12-2004

sothipiragasam@yahoo.co.in

Series Navigation

author

சோதிப் பிரகாசம்

சோதிப் பிரகாசம்

Similar Posts