சோதிப் பிரகாசம்
‘உரித்துப் பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இல்லை ‘ என்பது எல்லோருக்கும் தெரியும்.
நமது அனுபவ அறிவிற்கு உட்பட்ட ஒரு பொதுப் படையான உண்மை இது! இத் தகு பொதுப் படையான உண்மைகளை எல்லாம் மெய்ப் பொருண்மைக் கூற்றுகளாகப் பலரும் கருதிக் கொண்டு வந்து இருக்கிறார்கள் என்பது வேறு விசயம்! நமது பொதுவான ஓர்மையின் (common sense), அல்லது உலக அறிவின் கூற்று என்றும் இதனை நாம் குறிப்பிடலாம்.
எனினும், 02-12-2004 அன்று திண்ணையில் வெளி வந்து இருந்த கார்ல் பாப்பரின் ஒரே ஒரு கட்டுரையை மட்டும் வைத்துக் கொண்டு, வெங்காயம் என்று எல்லாம் அவரை நாம் கிண்டல் அடிப்பது சரியாக இருக்குமா ? என்பதுதான் எனக்குத் தெரிய வில்லை. அதே நேரத்தில், கார்ல் பாப்பரின் இந்தக் கட்டுரையைப் பொறுத்த வரை, அது ஒரு வெங்காயம்தான் என்பதில் யாருக்கும் எந்த ஓர் ஐயமும் ஏற்பட்டு விட வேண்டியதும் இல்லை.
‘அரசியல்-பொருளாதாரத்தின் திறனாய்விற்கு ஒரு பங்களிப்பு ‘ என்னும் தமது நூலின் முன்னுரையில் தமது ஆய்வு முடிவுகளை மொழிகிறார் கார்ல் மார்க்ஸ்! இவற்றைப் புரிந்து கொள்கின்ற எனது முயற்சிதான் வரலாற்றின் முரண் இயக்கம்: பாகம் ஒன்று என்றால் அது மிகை ஆகாது. இந்த முயற்சியில், கார்ல் மார்க்சின் ஒரு சில கருத்துகளை நான் வளப் படுத்திக் கொள்ளவும் நேர்ந்து இருந்தது.
இது போல, தமது ஆய்வு முடிவுகளாகக் கார்ல் பாப்பர் மொழிகின்ற ஒரு கட்டுரையாக இதனை நாம் எடுத்துக் கொண்டால், கார்ல் பாப்பரின் இறுதி முடிவுகள் என்று இவற்றை நாம் கொள்வதில் எந்தத் தவறும் இல்லை; எனவே, அவரது வெங்காயமாக இதனைக் கொண்டு, அவரை நாம் உரித்துப் பார்ப்பதிலும் தவறு எதுவும் இல்லை; என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.
ஈ. வெ. ரா. பெரியார் என்ன, உரித்துப் பார்த்திட முடியாத ஒரு வெங்காயமா ? என்று புதிய கோடாங்கியில் ஒரு கேள்வியினை எழுப்பி இருந்தார் கவிஞர் (பிரதிபா) ஜெயச் சந்திரன்! இவரைப் பார்க்கின்ற பொழுதுகளில் எல்லாம் எனது கண்களைக் கைகளால் நான் பொத்திக் கொள்வேன்—-இவர் உரிக்கின்ற வெங்காய நெடியில் எனது கண்கள் கடுத்துக் கண்ணீர் வந்து விடலாம் என்னும் அச்சத்தினை நான் வெளிப் படுத்துவது போல!
ஆனால், கார்ல் பாப்பரின் வெங்காயமோ நெடி இல்லாத ஒரு வெங்காயம், அதுவும், பந்தத் தனமான ஒரு வெங்காயம்! எனவே, இதனை உரித்துப் பார்ப்பதால் நமக்குக் கண்ணீர் வருவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. அதே நேரத்தில், ஒரு குழம்பு வைப்பதற்குக் கூட யாருக்கும் இது பயன் படப் போவதும் இல்லை!
மொழி பெயர்ப்பு
இந்தக் கட்டுரையின் ‘திண்ணை ‘ மொழி பெயர்ப்பாளர் யார் ? என்பது நமக்குத் தெரிய வில்லை; அவரது பெயர் குறிப்பிடப் படாதது ஏன் ? என்பதும் புரிய வில்லை. எனினும், தெளிவான சில சொற்களை இவர் பயன் படுத்தி இருப்பதனைப் பாராட்டாமல் நாம் இருந்திட முடியாது.
‘Science as Falsification ‘ என்னும் கார்ல் பாப்பரின் கட்டுரையை ‘விஞ்ஞானக் கோட்பாடு—-தவறென நிரூபிக்கும் தன்மை ‘ என்று இவர் மொழி பெயர்த்து இருக்கிறார். ‘prediction ‘ என்பதைக் ‘கணிப்பு ‘ என்றும் ‘risky ‘ என்பதைத் ‘துணிச்சலான ‘ ஈடுபாடு என்றும் குறிப்பிட்டு நமக்கு ஒரு வழியினையும் இவர் காட்டி இருக்கிறார்.
இவரைப் பின் பற்றி, ஒரு சில சொற்களின் பொருள்களைத் தெளிவு படுத்திக் கொள்ளாமல் கார்ல் பாப்பரை நாம் புரிந்து கொள்வது முடியாது என்பதில் ஐயம் இல்லை.
அதே நேரத்தில், மா பெரும் சிந்தனைகளை உள்ளடக்கி இருக்கின்ற ஒரு பெரிய வெங்காயமாகக் கார்ல் பாப்பரின் வெங்காயம் கருதப் பட்டு வந்து இருப்பதால்—-கண்கள் கடு-கடுக்கக் கண்ணீர் சிந்தாமல் இதனை உரித்துப் பார்ப்பதற்கு யாராலும் முடியாது என்று ஆங்கில வழித் தமிழ்ச் சிந்தனையாளர்களால் சூள் உரைக்கப் பட்டும் வந்து இருப்பதால்—-கொஞ்சம் பகட்டுத் தனமாக இந்த வெங்காயத்தை நாம் உரித்துப் பார்ப்பதுதான் ஏற்புடையதாக இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது.
மொழியின் அதிகாரம்
‘மொழியின் அதிகாரம் ‘ பற்றி என்னத்தை எல்லாம் ஈரோப்பியச் சிந்தனையாளர்கள் தெளிவு படுத்தி இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரிய வில்லை. இது பற்றித் தெரிந்து வைத்து இருப்பவராகத் தம்மை வெளிப் படுத்திக் கொண்டு வந்து இருக்கின்ற அ. மார்க்சோ மொழியின் அதிகாரம் பற்றி அவ் அப்போது பேசிக் கொண்டு வருகிறார்.
தாலி:பான் படைகளுக்கும் அமெரிக்கக் கூட்டணிப் படைகளுக்கும் இடையே ஆஃப்கானிஸ்தானில் நடை பெற்றுக் கொண்டு வந்து இருந்த போரினைக் கூட ஒரு ‘மொழிப் போர் ‘ என்றுதான் இவர் சித்தரித்து இருந்தார். ‘மொழிப் பணம் ‘, ‘மொழிச் சோறு ‘, என்று எல்லாம் எவையாவது இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்றும் நமக்கு எண்ணிடத் தோன்றுகிறது.
அதே நேரத்தில், இப்படி எல்லாம் பேசி நம் ஊர்ப் பாமரனைக் கூட எந்த ஒரு மேதாவியாலும் ஏமாற்றி விட முடியாது என்பதுதான் நமது கவலை! ஏனென்றால், ‘நெருப்பு என்றால் வாய் சுட்டு விடாது ‘ என்று பழ மொழி பேசியே இந்த மேதாவிகளை எல்லாம் குப்பை மேட்டில் அவன் தூக்கி எறிந்து விடுவான்.
எப்படியும், மொழி பற்றிய மாய்மை எதுவும் நம் ஊர்ப் பாமரனுக்கு இல்லை. எந்த ஊர்ப் பாமரனுக்கும் இந்த மாய்மை இருந்திட முடியாது என்று நாம் எடுத்துக் கொள்வதிலும் தவறு இல்லை.
ஆனால், இந்த அறிவாளர்கள் இருக்கிறார்களே, இவர்களுக்கு மட்டும்தாம் இம் மாதிரியான மாய்மைகள் அதிகம்! பேசுவது என்பதே மெய்யைப் பகிர்ந்து கொள்வதற்காகத்தான் என்ற போதிலும், பொய்யைப் பேசியே உலகத்தை ஏமாற்றி விடலாம் என்று கருதுபவர்கள் ஆயினரே, இவர்கள்!
எனினும், மொழியைப் பற்றிய இம் மாதிரியான மாய்மைகள் எப்படி உருவாகி இருந்து இருக்கக் கூடும் ? என்பது பற்றிச் சிறிது நாம் எண்ணிப் பார்ப்பதில் தவறு இல்லை.
சொற்களின் மாய்மை
நமது செயல்களைக் குறிக்கின்ற வினைச் சொற்களில் இருந்துதான் பல் வேறு சொற்களும் கிளைத்துக் கொண்டு வந்து இருக்கின்றன என்பது மாக்ஸ் முல்லரின் கருத்து!
எடுத்துக் காட்டாக,
‘உ ‘ என்னும் ஒலிப்பில் இருந்து விளர்ந்து கொண்டு வந்து இருக்கின்ற ஒரு வினைச் சொல்தான் ‘உய் ‘ என்பது ஆகும். இதனை ஏற்றுக் கொள்வதில் நமக்குக் கடினம் எதுவும் இல்லை.
ஆனால், இந்த ‘உய் ‘ என்னும் வேரில் இருந்துதான் ‘குதி ‘, கொதி ‘, முதலிய பல் வேறு சொற்கள் விளர்ச்சி அடைந்து கொண்டு வந்து இருக்க வேண்டும் என்று நம்மிடம் யாராவது கூறினால், அவர் மீது நமக்கு ஓர் ஐயம் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இத் தகு விந்தைகள் மட்டும் அல்ல, இவை போன்ற ஐயங்களும் மாய்மைகளும் நிறைந்ததுதான் மொழி என்பதும் ஆகும்.
ஏனென்றால், இந்த ‘உ—உய் ‘ என்னும் வினைச் சொல்லில் இருந்துதான்,
சில கிளைகளாக,
‘உயரம் ‘, உயர்ச்சி ‘, ‘உசத்தி ‘, ‘ஒஸ்தி ‘—-
‘உதி ‘, ‘உதை ‘, ‘உத்தமன் ‘, ‘உத்தரவு ‘—-
‘எழு ‘, ‘எடு ‘, ‘எகிறு ‘, ‘ஏகு ‘—-
‘ஓடு ‘, ‘ஒட்டகம் ‘, ‘ஓலம் ‘, ‘ஏலம் ‘—-
முதலிய சொற்களும்
மற்றும் சில கிளைகளாக,
‘உதி ‘, ‘கொதி ‘, ‘குதி ‘, ‘குத்து ‘—-
‘சுதி ‘, ‘சூழ் ‘, ‘சுழல் ‘, ‘சுற்றம் ‘—-
‘தூக்கு ‘, ‘தூபம் ‘, ‘துதி ‘, ‘தூது ‘—-
‘புகு ‘, ‘புகை ‘, ‘பூ ‘, ‘பூதம் ‘—-
முதலிய சொற்களும்
இன்னும் சில கிளைகளாக,
‘கொம்பு ‘, ‘கூப்பு ‘, ‘துப்பு ‘, ‘தும்பி ‘—-
‘உரு ‘, ‘குரு ‘, ‘கிரி ‘, ‘குருத்து ‘, —-
‘புரை ‘, ‘பொங்கு ‘, ‘புல் ‘, ‘புத்தி ‘—-
‘உடு ‘, ‘மடு ‘, ‘கொடு ‘, கோடு ‘—-
முதலிய சொற்களும்
கிளைத்துக் கொண்டு வந்து இருக்கின்றன!
சொல் ஆய்வாளர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இது இருந்திடலாம் என்ற போதிலும், மற்றவர்களுக்கு மாயமாக இது தோன்றிடலாம் என்பதில் ஐயம் இல்லை. இதனைக் கொஞ்சம் தெரிந்து வைத்துக் கொண்டு தற் பெருமை அடித்துக் கொண்டு வருகின்ற தமிழ்ப் புலவர்களுக்கோ நாட்டில் பஞ்சமும் இல்லை.
இந்த மாய்மையில் இருந்து விடு பட்டிட விரும்புபவர்கள் அனைவரும், இம் மாதிரியான சொல் ஆய்வுகளில் ஈடு பட்டுக் கொள்ளலாம். ஒரு சில அகராதிகளைக் கொஞ்சம் நாம் புரட்டிப் பார்த்துக் கொண்டால் போதும், நமது மாய்மைகளை எல்லாம் எளிதில் நாம் அகற்றிக் கொண்டும் விடலாம்; ஒரு மொழிப் பயிற்சியாகவும் நமக்கு இது இருந்திடக் கூடும்.
நமது உணவினைப் பற்றி—-உடைகளைப் பற்றி—-உறவுகளைப் பற்றி—-தெரிந்து கொள்வதற்கு நாம் விரும்புவதைப் போல, பேசியும் எழுதியும் நாம் பயன் அடைந்து கொண்டு வருகின்ற நமது மொழியைப் பற்றியும் கொஞ்சம் நாம் தெரிந்து வைத்துக் கொள்வதில் தவறு என்ன ?
சொற்களின் விளர்ச்சியில்தான் இத் தகு மாய்மைகள் என்றால், சொற்களின் மூலமாக அவற்றின் பொருள்களிலும் சில மாய்மைகள் புகுந்து விடுவது உண்டு.
சொற் பொருள்களின் மாய்மை
‘ஒரு மொழியின் இலக்கணத்திற்கும் சமயக் கொள்கைகள் மற்றும் மெய்ப்பொருண்மைக் கருத்துகளுக்கும் இடையே உள்ள உறவுகளை நோக்கிடும் முகத்தான், ‘நான் ‘ என்னும் ஒரு சொல்லை எடுத்துக் கொண்டு இங்கே சற்றுச் சொல் விளையாட்டில் நாம் ஈடு பட்டுப் பார்க்கலாம்.
‘நான் ‘ என்பது திண்மையான ஒரு பதம். ஏனென்றால், ‘நான் ‘ என்று நம்மைத் தனித் தனியாக நாம் ஒவ்வொருவரும் சுட்டிக் கொள்ளலாம். இந்த வகையில், பொதுப் படையான ஒரு பதமும் இது ஆகும். ஆனால், சமயம் சார்ந்த ஒரு பொருளில் இந்தச் சொல்லினை நாம் பயன் படுத்துகின்ற பொழுது, நம்முள் அடங்கி இருக்கின்ற கடவுளைக் குறிக்கின்ற—-உள்முகமான மனிதனைக் குறிக்கின்ற—-நுண்மையான ஒரு கருத்தமைவாகவும் இது மாற்றம் அடைந்து விடுகிறது!
‘அவன், அவள், அது எனும் அவை ‘ என்று மெய்மையினை—-உலகத்தினை—-சித்தரிக்கின்ற மெய் கண்ட தேவ நாயனார்,10 ‘மூவினை ‘யினை இந்த ‘அவை ‘ ‘உடைமை ‘யினை, அதாவது, தோன்றி, நின்று, அழிகின்ற மூன்று வினைகளை உடைய அதன் தன்மையினை நமக்கு எடுத்துக் கூறி, தமது வாதங்களைத் தொடர்கிறார்.
—-
10 பார்க்க: சிவஞான போதம்.
—-
இங்கே, ஆண்களைப் பொதுப் படையாகக் குறிக்கின்ற ஒரு பிறதிப் பெயர்தான் ‘அவன் ‘ என்பதும் பெண்களைப் பொதுப் படையாகக் குறிக்கின்ற ஒரு பிறதிப் பெயர்தான் ‘அவள் ‘ என்பதும் பிற எல்லாப் பொருள்களையும் பொதுப் படையாகக் குறிக்கின்ற ஒரு பிறதிப் பெயர்தான் ‘அது ‘ என்பதும் தெளிவு. இப்படி, அவனாகவும் அவளாகவும் அதுவாகவும் இருக்கின்ற மெய்மைகளின் தொகுப்பினை ‘அவை ‘ என்று பொதுப் படைக்கும் பொதுப் படையான ஒரு பிறதிப் பெயரால் அவர் சுட்டுகிறார்.
இப்படித்தான், பொழிலன், முகிலன் முதலிய திண்மையான, குறிப்பிட்ட, ஆண்களைப் பொதுப் படையாக ‘அவன் ‘ என்று நாம் சுட்டுகிறோம். ‘நான் ‘ என்று தங்களைத் திண்மையாகவும் தனித் தனியாகவும் இவர்கள் ஒவ்வொருவரும் சுட்டிக் கொள்கிறார்கள்.
‘நான் பொழிலன் ‘ என்னும் தொடரின் மூலம், ‘நான் ‘ முகிலன் அல்லேன் என்னும் கருத்தினை நான் வெளிப் படுத்துகிறேன்.
இது போல, ‘நான் முகிலன் ‘ என்னும் தொடரின் மூலம், ‘நான் ‘ பொழிலன் அல்லேன் என்னும் கருத்தினை நான் வெளிப் படுத்துகிறேன்.
அப்படி என்றால், ‘நான் ‘ யார் ?
பொழிலனுக்கு ‘நான் ‘ முகிலன் இல்லை; முகிலனுக்கு ‘நான் ‘ பொழிலன் இல்லை.
உங்களுக்கு நான் ‘நான் ‘ இல்லை; எனக்கு நீங்கள் ‘நான் ‘ இல்லை.
அப்படி என்றால், இந்த ‘நான் ‘ என்பது என்ன ?
எனக்கு ‘நான் ‘ யார் ? உங்களுக்கு ‘நான் ‘ யார் ?
‘என் ‘ நிலையில் உங்களில் இல்லாத ‘நான் ‘ யார் ? உங்கள் நிலையில் என்னில் இல்லாத ‘நான் ‘ யார் ?
‘என் ‘ உயிரில் இல்லாத ‘நான் ‘ என் உடலா ? அல்லது ‘என் ‘ உடலில் இல்லாத ‘நான் ‘ என் உயிரா ?
‘என் ‘ உயிர் என்கின்ற பொழுது ‘என் ‘ என்று என் உயிருக்கு உரிமை கொண்டாடுகின்ற ‘நான் ‘ யார் ?
‘என் ‘ உடல் என்கின்ற பொழுது ‘என் ‘ என்று என் உடலுக்கு உரிமை கொண்டாடுகின்ற ‘நான் ‘ யார் ?
இப்படி, என் உடலிலும் ‘இல்லாமல் ‘ என் உயிரிலும் ‘இல்லாமல் ‘ ‘இருக்கின்ற ‘ அந்த ‘நான் ‘ யார் ?
அந்த ‘நான் ‘தான் ‘கடவுள் ‘!
அப்படி என்றால், பொழிலன் கடவுளா ?
முகிலன் கடவுளா ?
இல்லை, ‘நானே ‘ கடவுள்!11
—-
11 பார்க்க: கார்ல் மார்க்ஸின் முதல்: தமிழாக்கங்கள் பற்றிய திறனாய்வு, சங்கொலி, 25-9-1998.
—-
இங்கே, ‘நான் ‘ என்பது கடவுள் நிலைக்கு உயர்த்தப் பட்டு நுண்மைப் படுத்தப் பட்டு இருப்பதை நாம் காண்கிறோம். ஆனால், ஒரு முதலாண்மைச் சமுதாயத்தில் மட்டும்தான் இத் தகு சொல் விளையாட்டுகளை நாம் ஆடிக் காட்டிட முடியும் என்பதுதான் உண்மை. ஏனென்றால், இயற்கை முறையில் பொதுப் படையாக ‘நான் ‘ என்று தங்களைச் சுட்டிக் கொள்கின்ற ‘திண்மை ‘யான மனிதர்கள், சமுதாய முறையில் ‘நுண்மை ‘யானவர்களாகவும் இங்கே நிலவிக் கொண்டு வருகிறார்கள். ‘ (பார்க்க: ஆரியர் வரலாறு: பாகம் இரண்டு: பக்.194-95.)
எனினும், ஆங்கிலத்தில் இருந்து தொடங்கிச் சொற்களின் மாயத்தைப் புரிந்து கொள்வதற்கு நாம் முயல்வதுதான் சிந்தனைச் சிறப்பாகத் தமிழ் நாட்டு அறிவாளர்களுக்குத் தோன்றிடக் கூடும் என்பதால், ஆங்கிலத்தில் இருந்து ஒரு சொல்லை நாம் எடுத்துக் கொள்வோம்.
(தொடரும்)
17-12-2004
sothipiragasam@yahoo.co.in
- அறிவியல் கதை – வீடு/மனைவி/காதல் (மூலம் : வால்டர் ஜான் வில்லியம்ஸ்)
- இறைநேசர் இமாம் ஜாஃபர் சாதிக்(ரலி)அவர்கள்
- மூன்றாம் பக்கம் ( 3)
- நேற்று வாழ்ந்தவரின் கனவு – பாவண்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது
- கார்ல் பாப்பரின் வெங்காயம்-1
- பாவங்கள்(SINS) & பாடம் ஒன்னு ஒரு விலாபம் – இரு திரைப்படங்களும், தொடரும் சர்ச்சைகளும்
- ஓவியப் பக்கம் – பதினாறு – டிம் ஹாக்கின்ஸன் (Tim Hawkinson) – வாழ்வின் இசையை வடிக்கும் கலை
- ஹிப்பாங்… ஜிப்பாங்
- நேர்காணல் : வசந்த்
- ‘சே ‘
- உலகத்தின் மிக உயரமான டென்னிஸ் கோர்ட்
- உலகத்தில் பார்க்கவேண்டிய இடங்கள்
- ‘புனரபி ஜனனம் புனரபி மரணம் ‘ – சில மலின பிரச்சாரங்களுக்கும் தான்
- அருண் வைத்தியநாதனின் குறும்படம் திரையிடல்
- வெளி.காம் (vezhi.com) இலக்கிய இதழ் -அறிமுகம்
- ஸ்த்ரீ கானம்
- பனியுகத்தின் தோற்றமும், மாற்றமும்!கடற்தளங்களின் உயர்ச்சியும், தாழ்ச்சியும்!(Ice Age, Sea-Floor Rise & Fall) [3]
- பெரியபுராணம் – 31 -18. மானக்கஞ்சாற நாயனார் புராணம்
- வன்முறை
- தீண்டப்படாத சீதா (சீதாயணம்) (ஓரங்க நாடகம்) காட்சி இரண்டு : வால்மீகி ஆசிரமத்தில் சீதா அடைக்கலம்
- ஜப்பானிய பூகம்பம் – எர்னெஸ்ட் ஹெமிங்வே
- கண்ணாடிக் கண்கள்
- சிறகுகள் முளைத்து..
- து ணை – குறுநாவல் -பகுதி 5
- விலங்கு நடத்தைகள்..
- சிந்திக்க ஒரு நொடி – எல்லோரும் இந்நாட்டு மன்னர் [ஒரு சினிமா நடிகருக்கும் அரசியல் கருத்து தொிவிக்க பிரஜா உாிமை உண்டு ]
- சிந்திக்க ஒரு நொடி : நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே…
- தமிழகத்தைக் காப்பாற்றிய மூன்று பேர்கள் – சோ, ஜெயகாந்தன், கண்ணதாசன்
- ஆஸ்ரா நொமானியின் புதிய புத்தகமும் பெண்கள் தலைமையில் இஸ்லாமிய தொழுகையும்
- கடலை வசக்குதல்
- சிலுவையில் மலருமா ரோஜா ? மார்க்ரட் ஸ்டார்பர்ட்டுடன் சில கேள்வி பதில்கள்
- பருந்துகள்
- வாய்திறந்தான்
- ஒரு மரத்தின் இறப்பு!
- குமுதம் அரசுவின் பேனா மையில் கலந்திருப்பது என்ன ?