ஆறடி அறைகளின் குரல்கள்

This entry is part [part not set] of 47 in the series 20050120_Issue

பாவண்ணன்


(மேன்ஷன் கவிதைகள் – பவுத்த அய்யனாரின் கவிதைகள் அறிமுகம்)

பவுத்த அய்யனாரின் 45 கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன. தொகுப்பின் தலைப்பு மேன்ஷன் கவிதைகள் என்று வரம்பிட்டுக்கொண்டிருந்தாலும் உண்மையில் பாதிக்கும் குறைவானவே மேன்ஷன் அனுபவமுள்ள கவிதைகள். கிராமம், வாழ்வின் கசப்புகள், கையறு நிலை, இசைவான உறவில்லாததன் வலி, வாழமுடியாத தவிப்பு என்ற களங்களில் இயங்குபவை மற்ற கவிதைகள். 1984ல் அய்யனார் எழுதிய ஒரு வரி ‘எனக்குரிய காற்றை எனக்குப் பிரித்துத்தாரும் ‘ என்பதாகும். 2002ல் அவரே எழுதிய இன்னொரு வரி ‘காற்று அழிந்துபோன இந்த நகருக்குள் வந்தேன் ‘ என்பதாகும். இடைப்பட்ட பதினெட்டு ஆண்டுகளாக சுதந்தரத்தின் அடையாளமாக விளங்கும் காற்றைக் கண்டடைந்து துய்க்கும் ஆவலில் அலைந்த அலைச்சல்களையும் நீண்ட பயணத்தின் தவிப்புகளையும் தனிமைத் துயரங்களையும் பதிவுசெய்த வரிகளே இத்தொகுப்பில் கவிதைகளாக உள்ளன. பவுத்த அய்யனாரின் கவிதைப்பயணத்தில் இதுவே வலிமையின் அடையாளமாக உள்ளது. இலகுவான கவிதைமொழியை அடையமுடியாத தடுமாற்றமும் அழுத்தமான கவிதைச் சித்திரத்தை உருவாக்க இயலாத பதற்றமும் பலவீனங்களாகப் படுகின்றன.

காற்று அழிந்துபோன நகரில் அய்யனார் வசிப்பதற்குத் தேர்ந்தெடுத்த இடம் மேன்ஷன். சுதந்தரத்தை அறியும் வாய்ப்பைத் தராவிட்டாலும் வாழ்வின் மற்ற முகங்களை அறிந்துகொள்ளும் வாய்ப்புகளைக் கொடுக்கிறது மேன்ஷன் அறை. எளிமையாக துாக்கத்தில் மூழ்க வழியற்றஇடம் அது. கனவுகளின் வெப்பத்தில் கொதிப்பேற்றும் இடம். தெரிந்த பெண்களின் முகங்களை மனப்பரப்பில் நெளியவைக்கும் இடம். ஓர் இரவுத் துாரத்தில் வசிக்கும் மனைவியின் ஞாபகத்தை வரவழைக்கும் இடம். சந்தேகங்களாலும் ரகசியங்களாலும் ஆளை உருட்டிஉருட்டி விளையாடும் இடம். இலக்கியப் பரப்பில் சிற்றில் என்றொரு சொல்லாட்சி உண்டு. குழந்தைப் பருவத்தில் விளையாடுவதற்காக மணல்வீட்டில் கட்டப்படும் வீட்டுக்குத்தான் சிற்றில் என்ற பெயர். கதவு, வாசல், ஜன்னல், தோட்டம் எதுவுமே இல்லாத ஒன்று அது. ஆனால் எல்லாமே இருப்பதைப்போன்று பாவிக்கப்படுகிற வடிவம். ஓடி உழைத்து உயிர்த்திருக்க பெருநகரைநோக்கி வருகிற ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு உடனடித் தங்குமிடமாக அமையும் அறைகள் இத்தகு சிற்றில்வகைப்பட்டவை. எல்லாமே உருவகித்துக்கொள்ளப்படவேண்டிய இடம். அன்பையும் நட்பையும்கூட இருப்பதைப்போல உருவகித்துக்கொள்ளுமாறு அமைந்துவிடுவதுதான் மிகப்பெரிய துரதிருஷ்டம். அப்படிப்பட்ட ஒரு கணத்தில் எழும் கேள்விதான் ‘அறை என்பது வீடாகுமா ? ‘ என்பது.

அறை வீடாக மாறுவதற்கு என்னென்ன தேவை என்னும் கேள்வியை முன்வைத்து விடைகளைத் தொகுத்துப் பார்க்கும் மனத்தால் உடனடியாக ஒரு மிகப்பெரிய பட்டியலைத் தயாரித்துவிடக்கூடும். இப்பட்டியலில் உள்ளவற்றின் இன்மையே அறை தரும் தவிப்புக்கும் அறையின் வெப்பத்துக்கும் காரணம் என்று உணரவும்கூடும். ஆறடி அறைக்குள் என்னும் கவிதையில் ‘எந்தப் பராக்குக்கும் சமனப்படாத இந்த வெறியை என்ன செய்வது ? ‘ என்றொரு துயர்நிறைந்த கேள்வி சகஜதொனியில் முன்வைக்கப்படுவதை இத்துடன் பொருத்திப்பார்க்கலாம்.

‘கனவு ‘ என்றொரு கவிதையில் தன்னைத்தானே விவரித்துக்கொள்ளும் அறைவாசி ஒருவனுடைய குரல் கவனிக்கத்தக்கதாக உள்ளது. தவிப்பிலும் கசப்பிலும் மனம்நொந்த அறைவாசி உறங்கியது தெரியாமல் உறங்கிவிடுகிறான். அந்த உறக்கத்திலும் நிம்மதியாக ஆழ்ந்திருக்கவிடாமல் ஒரு கனவு குறுக்கிடுகிறது. அது ஒரு பெரும்பூதமாக மாறி எங்கோ துாக்கிச் செல்கிறது. ஆறு, கிணறு, கண்மாய், கடல் என எல்லா இடங்களிலும் மாறிமாறி துாக்கிப்போடுகிறது. அர்த்தம் புரியாத ஆழத்துக்குள் போய்க்கொண்டே இருக்கும்போது விடிந்துவிடுகிறது. அப்போது பிளாஸ்டிக் வாளிக்குள் தவளையாகக் கிடக்கிறான் அவன். தன்னெழுச்சியான பயணத்தில் இக்கவிதை அழகான வரியொன்றைக் கண்டடைந்துவிடுகிறது. ஒரு குமுறல் அழகான எள்ளலாக முடிவடைவதில் கவிதை சிறப்படைந்துவிடுகிறது. ஆற்றங்கரையிலும் எரிக்கரையிலும் குளத்தங்கரையிலும் சுதந்தரமாக விளையாடி, ஆர்ப்பரித்து, விருப்பம்போல தாவித்தாவி களித்திருக்கும் ஓர் உயிரியான தவளை மேலும் சுதந்தரம் நாடி நகரத்தை அடைந்தபோது அதற்குக் கிடைத்தது பிளாஸ்டிக் வாளிமட்டுமே. ஆசையும் அடைந்ததும் வேறுவேறென்றாலும் கூர்மையான எள்ளலால் மிகப்பெரிய மனப்பாரத்தை அழகாக கடந்துவிடுகிறது கவிதை.

‘சொல்நிரப்புதல் ‘ என்னும் கவிதையும் நல்ல அனுபவத்தைக் கொடுக்கக்கூடியது. யாராலோ வீசப்பட்டுச் சென்ற ஒரு சொல் அறையை நிரப்பும் விதத்தைச் சொல்வதுபோல கவிதை தொடங்கினாலும் , கவிதை கொடுக்கிற அனுபவம் அறைவாசியைக் கொட்டிவிட்டுச் செல்கிற ஆயிரக்கணக்கான சொற்களை எண்ணிப்பார்க்கத் துாண்டுகிறது. அந்த எண்ணமே பற்பல கேள்விகளை தொகுத்துக்கொள்ளத் தொடங்குகிறது ? ஏன் இந்த மனிதர்கள் இப்படி கொடுக்குமுனை மின்னும் சொற்களை வீசிவிட்டுச் செல்கிறார்கள் ? பழகியவர்கள், பழகாதவர்கள், நல்லவர்கள், கெட்டவர்கள் என்கிற எந்த பேதமும் ஏன் இச்சொற்களுக்கு இருப்பதில்லை ? இப்படி கொட்டிக்கொட்டி எதற்காக விஷத்தைப் பாய்ச்சிக்கொண்டே இருக்கிறார்கள் ? கொட்டிக்கொட்டி சாதாரண பிள்ளைப்பூச்சிகள்கூட ஏன் குளவிகளாக மாற்றப்படுகின்றன ?எல்லாமே குளவிகளாக மாறினால் இந்த மண்ணில் வண்ணத்துப் பூச்சிகளையும் தேனீக்களையும் எங்கேபோய் கண்டுபிடிக்கமுடியும் ? இந்த மாற்றத்தால்தான் எல்லாருமே கொம்புள்ளவர்களாகவும் உளவாளிகளாகவும் உருமாறிவிடுகிறார்களா ? இப்படி ஏராளமான கேள்விகள் எழுகின்றன.

ஒருபக்கம் இதமான ஆதரவுக்கான ஏக்கம். மறுபக்கம் கையை உதறச்சொல்லும் மன்றாடல். இவ்விரண்டு புள்ளிகளுக்கிடையேயான உலகத்தையே பவுத்த அய்யனாரின் கவிதையுலகமாகக் குறிப்பிடலாம் எனத் தோன்றுகிறது. அய்யனாரின் கவிமொழியில் வலிமை கூடிவரும்போது, இந்த உலகத்தின் காண்பதற்கரிய பல சித்திரங்களைக் காணமுடியும் என்று தோன்றுகிறது. பிரபஞ்சனால் எழுதப்பட்டிருக்கும் மேன்ஷன் வாழ்க்கைபற்றிய உயிர்த்துடிப்பான சித்திரம் இத்தொகுதிக்கு அழகைச் சேர்க்கிறது.

( மேன்ஷன் கவிதைகள்- பவுத்த அய்யனார். சித்தார்த்தா வெளியீடு, விநாயகபுரம், தெற்குத் தெரு அஞ்சல், மேலுார். விலை ரூ25)

—-

paavannan@hotmail.com

Series Navigation

author

பாவண்ணன்

பாவண்ணன்

Similar Posts