மக்கள் தெய்வங்களின் கதைகள் 16. ஆந்திரமுடையார் கதை

This entry is part [part not set] of 57 in the series 20050106_Issue

அ கா பெருமாள்


16. ஆந்திரமுடையார் கதை

களைக்காட்டூர் என்ற ஊரில் மாடன் நாயர் என்பவர் வாழ்ந்து வந்தார். அந்த ஊரில் எருக்கலை, புல்புதர்களை வெட்டி சீர்திருத்திப் பயிர் செய்து செல்வந்தனாக வாழ்ந்தார் அவர். அவரது மனைவி பொன்னிலங்கி என்பவள். அவ்விருவருக்கும் பிறந்தவர் ஆந்திரமுடையார். அவர் குழந்தையாய் இருந்தபோதே எல்லோரையும் கவர்ந்தார். சிறந்த கல்வியும் ஆயுதப்பயிற்சியும்பெற்று அழகும் வீரமும் அறிவும் கொண்டவராக விளங்கினார்.

ஆந்திரமுடையாரின் வீரத்தையும் அழகையும் கேள்விபட்ட களைக்காட்டூர் மணியக்காரர் பல்லக்கைக் கொடுத்தனுப்பி ஆந்திரமுடையாரை வரவழைத்தார். அவரைக் கம்பிளி போர்வையின் மேல் அமரச் சொன்னார். அவருக்குத் தலைப்பாகையும் பட்டும் கொடுத்தார். காதுக்குக் கடுக்கனும் கைக்குக் கைவளையும் போட்டார். விலைமதிப்பற்ற துப்பட்டியும் கொடுத்தார்.

மணியக்காரர் ஆந்திரமுடையாரை தனக்கு துணையாக இருக்கும்படிக் கோரி களைக்காட்டுப் பகுதியில் சில இடங்களை ஆந்திரமுடையாருக்குப் பதித்துக் கொடுத்தார். இந்தப்பகுதியில் நீர் அரசாளலாம், ராணுவம் வைத்துக்கொள்ளலாம் , பவனி வரலாம் என்றார். ஆந்திரமுடையாரும் அவரை வணங்கிவிட்டு பல்லக்கிலே பவனி வந்தார். அப்போது அவரைப் பார்த்த இளம்பெண்கள் அவர்மீது ஆசைப்பட்டனர்.

ஆந்திரமுடையார் பெற்ற பேற்றை அறிந்து களைக்காட்டூர் ஒன்பதுகுறிச்சி ஜனங்கள் அவருக்கு மரியாதை செய்தனர். முப்பது பொன் காணிக்கை கொடுத்தனர்.

ஆந்திரமுடையார் தன் ஆளுகைக்கு உட்பட்ட ஒன்பது குறிச்சி பகுதிகளில் குதிரைமேல் பவனி வந்தார். அப்போதெல்லாம் அப்பகுதியில் பெண்கள் அவரை ஆசையோடு பார்த்தனர். அன்னம் தண்ணீர் குடியாமல் மோகித்து நின்றனர். ஆந்திரமுடையாரோ அவர்களை ஆசையோடு பார்ப்பது தவறு என்ற வைராக்கியத்தில் இருந்தார்.

தனக்குத் திருமணம் ஆகாமல் இருப்பதால் அல்லவா இப்படி எல்லோரும் ஆசைப்படுகிறார்கள். திருமணம் செய்துகொண்டால் இப்பெண்களின் பார்வையிலிருந்து தப்பிவிடலாம் என்று நினைத்தார். தன் தாயிடம் சென்றுஇ ‘ அம்மா எனக்குத் திருமணம் செய்யவேண்டும் ‘ என்றார். பொன்னிலங்கித் தாயாரோ ‘ ‘அப்பா உனக்குப் பெண் தர போட்டி போட்டுக்கொண்டு ஆட்கள் காத்திருக்கிறார்கள். என் அண்ணன் கரிகாலன் மகளை நீ கட்டிக்கொள்ளவேண்டும் ‘ ‘ என்றாள்.

ஆந்திரமுடையார் அதற்கு முதலில் கொஞ்சம் தயங்கினாலும் பிறகு இணஙகினார். பெரியோர்கள் திருமண நாளை நிச்சயித்தனர். பாக்கும் வெற்றிலையும் பரிமாறினர். ஆந்திரமுடையாருக்குக் கலியாணம் என அறிந்த அரண்மனையார் சரப்பளிமாலை கொடுத்தனுப்பினார். சுமங்கலிப்பெண்கள் குரவை முழங்கத் திருமணம் இனிதே நடந்தது.

திருமணம் முடிந்து சில நாட்கள் கழிந்தன. ஆந்திரமுடையார் களைக்காட்டு மலைக்கு வேட்டைக்குப் போனார். பலவகை ஆயுதங்கள் தாங்கிய வீரர்கள் அவருடன் சென்றார்.ஆந்திரமுடையார் வேட்டையாடிவிட்டு வீடு திரும்பியபொழுது அவரது மனைவி தோழிகளுடன் பகடை ஆடிக்கொண்டிருந்தாள். அந்தப் பாவிக்கு முடிவுகாலமோ என்னமோ ? கணவனைக் கவனிக்காமல் பகடை ஆடிக்கொண்டிருந்தாள். ஆந்திரமுடையார் அதைக்கண்டு மிகவும் கோபமுற்றார். தன்னைக் கவனியாமல் ஆணவத்துடன் உட்கார்ந்திருந்தாள் எனத் தவறாக நினைத்துவிட்டார். கடுமையான கோபம் கொண்டு அவளுக்குத் தண்டனை கொடுக்க நினைத்தவராக தன் கனத்த மர மிதியடியை எடுத்து அவள் மீது வேகமாக எறிந்தார். அவள் தலையி அடிபட்டு உடனே மயங்கி விழுந்தாள். துடிதுடித்து இறந்தாள்.

சுற்றியுள்ள பெண்கள் ‘ ‘சண்டாளா பெண்பாவம் உன்னைப் பிடிக்காமல் விடாது ‘ ‘ என்றார்கள். ஆந்திரமுடையாரோ ‘ ‘உங்களுக்கும் மிதியடிச்சாவு வேண்டுமா ? ஓடிவிடுங்கள் ‘ ‘ என்றார். அவர்கள் அவரைத் திட்டிக்கொண்டே ஓடினார்கள்.

மனைவியைக்கொன்ற பாவம் ஆந்திரமுடையாரைப் பிடித்தது. அவரது செல்வம் வந்தது போலவே போக ஆரம்பித்தது. அரண்மனையில் கூட இடம் கொடுப்பாரில்லை. ஊரிலே வாங்கிய கடனுக்கு அளவில்லை. மறைந்து வாழவேண்டிய நிலைக்கு ஆந்திரமுடையார் ஆளாயினார்.

களைக்காட்டூரில் இருந்தால் தனக்கு அவமானம் ஆகும் என்று நினைத்து வள்ளியூரில் குடியேற விரும்பினார். தன் பரிவாரங்கள் புடைசூழ வள்ளியூருக்கு வந்தார். அங்கு ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்துக் குடியமர்ந்தார்.

ஒருநாள் ஆந்திரமுடையார் வள்ளியூரில் உள்ள மடத்தின் வழி சென்றார். களைப்பாக இருந்ததால் அந்த மடத்தில் இளைப்பாற விரும்பினார். மடத்தின் பண்டாரம் அவரின் தோற்றத்தைக் கண்டு பெரும் மரியாதை செலுத்தினான். ஆந்திரமுடையார் மடத்துத் திண்ணையில் அமர்ந்தார். மடத்துப் பண்டாரத்திடம் குடிக்கத் தண்ணீர் கேட்டார். பண்டாரம் மடத்தின் உள்ளே சென்று மகள் சின்னம்மாளிடம் ‘ ‘ முக்கிய விருந்தாளி வந்திருக்கிறார். ஒரு தட்டில் வங்காளச் சீனியும், செம்பு நிறைய தண்ணீரும் எடுத்து வா ‘ ‘ என்றார்.

அவளுக்கு அந்நிய ஆடவர் முன் வர தயக்கமாக இருந்தது. என்றாலும் தந்தையின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு தண்ணீர் கொண்டுவந்தாள். ஆந்திரமுடையார் பண்டாரத்தின் மகளைப் பார்த்தார். இவனுக்கு இப்படி ஒரு அழகிய மகளா எனத் திகைத்தான். தண்ணீரை எடுத்துக் குடித்தார். சுருட்டு பிடிக்கக் கனல் வேண்டுமே எனக் கேட்டார். சின்னம்மாளும் சீக்கிரமாக நெருப்பை எடுத்துக் கொடுத்தாள். அந்தப் பெண்ணைப் பார்த்து ‘ ‘ஒரு சிரட்டையில் நெருப்பு கொண்டு வா பெண்ணே ‘ ‘ என்றார். அவளும் முனங்கிக்கொண்டே நெருப்பு கொண்டு வந்தாள். ஆந்திரமுடையார் மீண்டும் ஒருமுறை அவளைப் பார்த்தார். அவருக்கு அவள்மீது ஆசை பிறந்தது.

பண்டாரம் ஆந்திரமுடையாரிடம் பேச்சுவாக்கில் தன் மகளைத் திருமணம் செய்துகொடுக்க முடியாத நிலையில் தான் இருப்பதைச் சொன்னான். ஆந்திரமுடையார் அவனுக்கு ஆறுதல் சொன்னான். ‘ ‘இந்த ஊரில் ஒரு மாப்பிள்ளை இருக்கிறான். அவனுக்கு ஏற்கனவே திருமணமாகி உள்ளது. ஆனால் மனைவி இறந்துவிட்டாள். அவள் நகை 300 பவுன் உள்ளது. அந்த மாப்பிள்ளை அழகானவன், வீரன் ‘ ‘ என்றான்.

பண்டாரம ஆந்திரமுடையார் சொன்னமாப்பிள்ளை தனக்கு மருமகனாக வந்தால் நல்லது என்றான். திருமணப் பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்றார் ஆந்திரமுடையார். அடுத்தநாள் பல்லக்கில் புடைசூழ வந்தார். அந்த மடத்தின் அருகே வநததும் பண்டாரம் ஓடி வந்தான். பல்லக்கில் அமர்ந்திருந்த ஆந்திரமுடையாரைப் பார்த்து ‘ ‘மாப்பிள்ளை எங்கே ? ‘ ‘ என்று கேட்டான். ஆந்திரமுடையார் ‘ ‘நானேதான் மாப்பிள்ளை ‘ ‘ என்றார். அதை எதிர்பாராத பண்டாரம் திகைத்தான்.

பண்டாரத்தின் வீட்டில் இருந்த கிழவி ஆந்திரமுடையாரைப் பழித்தாள் ‘உனக்கு இந்த ஊரில் என்ன உரிமை இருக்கிறது ? இங்கிருந்து ஓடிப்போ ‘ என்றாள். கூடி இருந்த ஊர் மக்கள் வள்ளியூரில் வெளியூர்க்காரன் வந்து அதிகாரம் பண்ணலாமோ என்று கேட்டு கலகம் செய்தார்கள். சில மொட்டையர்கள் ‘ அன்னியன் தந்த பணத்துக்காக நீ இப்படி செய்துவிட்டாயே ! ‘ ‘ என்று கூறி பண்டாரத்தை திட்டினார்கள். அடிக்க ஆரம்பித்தார்கள்.

ஆந்திரமுடையார் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு இருந்தார். தன் வீரர்களை அழைத்தார். கலகம் செய்பவரை அடித்து உதையுங்கள் என்றார். அந்த வீரர்கள் ஆந்திரமுடையாரைப் பழித்தவர்களை ஆயுதங்களால் தாக்கினார்கள். கலகக்காரர்கள் ‘ ‘எங்களை விட்டுவிடுங்கள். பண்டாரத்தின் மகளை நாங்களே மணமுடித்து வைக்கிறோம் ‘ ‘ என்றார்கள். அவர்கள் சொன்னபடி பண்டாரம் மகளை ஆந்திரமுடையாருக்கு கைபிடித்துக் கொடுத்தார்.

மாப்பிள்ளையும் பெண்ணும் மனையறையில் புகுந்தனர். இந்த நேரத்தில் வடதமிழ் நாட்டு திருடர்கள் வள்ளியூருக்கு வந்தனர். வள்ளியூர் வீதிகளில் ஆதாளி செய்தனர். பாத்திரஙகள், அணிகலன்கள், பட்டுகள் என்று பொருள்களை அள்ளிக்கொண்டு ஓடினார்கள். ஊர் மாடுகளைப் புறத்தே விரட்டிச் சென்றார்கள். அந்தவேளையில் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்த ஆந்திரமுடையார் திருடர்களின் ஆதாளியைக் கேட்டார்.

ஆந்திரமுடையார் ஆயுதங்களைக்கூட எடுக்க நேரமின்றி வள்ளியூர் வீதிகளில் பாய்ந்து போனார். திருடர்களைத் தனியாகவே எதிர்த்தார். ஈட்டியால் குத்தினார். வல்லயத்தால் அடித்தார். திருடர்கள் பலர் மாண்டனர். எஞ்சியவர்கள் திருடிய பொருட்களை போட்டுவிட்டு ஓடினார்கள். இந்த நேரத்தில் வள்ளியூர் மக்கள் திருடர்களைப் பிடிக்கக் கூடினார்கள். அங்கு ஆந்திரமுடையார் நிற்பதைக் கண்டு திருடரை வென்றவர் அவரே என்பதை அறிந்தார். அவரை வாயாரப் புகழ்ந்தனர். பரிசுகள் கொடுத்தனர். ஆந்திரமுடையார் நீண்டநாள் வாழ்ந்து மறைந்தார்.அவரை மக்கள் தங்கள் காவல்தெய்வமாக நிறுவி வழிபட்டனர்.

Series Navigation

author

முனைவர் அ.கா.பெருமாள்

முனைவர் அ.கா.பெருமாள்

Similar Posts