ஆழ்வார் பாசுரங்களில் பக்தி ரஸம்

0 minutes, 6 seconds Read
This entry is part [part not set] of 59 in the series 20041223_Issue

பாலா


திராவிட வேதம் என்று அழைக்கப்படுகிற திவ்யப்ரபந்தத்தில் வரும் பல பாடல்களில் காணப்படும் பக்தி ரஸமும் வைகுந்தன் மேல் ஒருவித அதிதீவிர அன்பும் பூரண சரணாகதி தத்துவமும் தமிழில் வெறெந்த பக்தி இலக்கியத்திலும் இவ்வளவு அழகாகவும், எளிமையாகவும் சொல்லப்படவில்லை என்று தோன்றுகிறது.

கீழுள்ள ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரங்களில் ‘நாராயணனே யாதுமாய் நிற்கிறான், அவனே எனக்கு சகலமும்! ‘ என்ற கருத்து எவ்வளவு அருமையாகக் கூறப்பட்டுள்ளது என்று பாருங்கள்!

கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்*

அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க் குலத்து உன்தன்னைப்*

பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்*

குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா* உன்தன்னோடு-

உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது*

அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை*

சிறு பேர் அழைத்தனவும் சீறி அருளாதே*

இறைவா நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்

பதவுரை:

‘பசுக்களை மேய்த்தபடி, காடு சென்று, அங்கு ஒன்று கூடி உண்ணும், சொற்ப அறிவு படைத்த நாங்கள், ஆயர்குலத்தினில் பிறந்த உன்னை எங்கள் குலத்தவனாக பெற்றடைய பெரும் புண்ணியத்தை செய்துள்ளோம். யாதொரு குறையும் இல்லாத, ‘கோவிந்தன் ‘ என்னும் பெயரினைக் கொண்ட கண்ணனே! உன்னுடன் எங்களுக்கு ஏற்பட்ட உறவை, யாராலும் அழிக்க முடியாது. அற்ப அறிவுடைய சிறுமியரான நாங்கள், உன்னிடம் கொண்டுள்ள மிகுந்த அன்பினால் உன்னை (நாராயணன், மாயன், மாதவன் போன்ற) சிறிய பெயர்களினால் ஒருமையில் அழைத்தமைக்கு கோபித்துக் கொள்ளாமல், நாங்கள் வேண்டி வந்த பொருட்களைத் தந்து அருள வேண்டுகிறோம். ‘

சிற்றம் சிறு காலே வந்து உன்னை சேவித்து* உன்-

பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்*

பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து *நீ-

குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது*

இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா*

எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் *உன் தன்னோடு-

உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்*

மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்

பதவுரை:

‘விடியற்காலையில் உன்னை வழிபட்டு, உனது தாமரை மலர் போன்ற மென்மையான திருவடிகளைப் போற்றும் காரணத்தை உன்னிடம் சொல்ல விழைகிறோம். பசுக்களை மேய்த்து, ஜீவனம் செய்யும் ஆயர்குலத்தில் எங்களைப் போன்றே அவதரித்த நீ, எங்களிடமிருந்து சிறு சேவையாவது பெற்றுக் கொள்ளாமல் செல்லுதல் கூடாது. உன்னிடமிருந்து, பறை வாத்தியம் போன்ற பொருள்களைப் பெற்றுக் கொண்டவுடன், உன்னை விட்டு அகல நாங்கள் இங்கு வரவில்லை. காலம் உள்ளவரை, மீண்டும் மீண்டும் பிறவியெடுப்பினும், உன்னுடைய உறவினர்களாகவே இருப்போம். உனக்கே நாங்கள் பணி செய்து கிடப்போம். உன் மீது அளவிலா பற்று கொண்டுள்ள எங்களுக்கு, மற்ற பொருள்களின் மீது ஏற்படும் ஆசையை தவிர்த்தருள வேண்டும். ‘

****

அடுத்து திருப்பாணாழ்வாரின் (நாலாயிரத்தில் அவர் அருளியது பத்து, அத்தனையும் நல்முத்து!) அமலனாதிபிரானில் வரும் 3 அற்புதமான பாசுரங்களைத் தந்திருக்கிறேன். அரங்கனின் பேரெழில் அவர் உள்ளத்தை நிறைத்ததையும், அரங்கன் அவருள் புகுந்து அவரை ஆட்கொண்டதையும், அமுதை ஒத்த அரங்கனைக் கண்டபின் வேறெதையும் காணும் ஆசை அவரை விட்டு அகன்று விட்டதையும் ஆனந்தப் பெருக்கோடு சொல்லியிருக்கிறார்!

பாரமாய* பழவினை பற்றறுத்து,* என்னைத்தன்-

வாரமாக்கி வைத்தான்* வைத்ததன்றி என்னுள் புகுந்தான்,*

கோர மாதவம் செய்தனன் கொல் அறியேன்* அரங்கத்து அம்மான்,*திரு-

வார மார்பதன்றோ* அடியேனை ஆட்கொண்டதே.

பதவுரை:

என்னுடைய முற்பிறவியின் பந்தங்களை நீக்கி, என்னை ஏற்றுக்கொண்டதோடு, என்னையும் ஆட்கொண்டவனும் ஆகிய திருவரங்கத்தில் வாழும் எம்பெருமானே! உன் திருமார்பில் அடியவனை சேர்த்துக் கொண்டதற்கு, என்ன பெருந்தவம் செய்தேன் என்று நான் அறியேன்!

ஆலமா மரத்தின் இலைமேல்* ஒரு பாலகனாய்,*

ஞாலம் ஏழும் உண்டான்* அரங்கத்து அரவின் அணையான்,*

கோல மாமணி ஆரமும்* முத்துத் தாமமும் முடிவில்ல தோரெழில்*

நீல மேனி ஐயோ. * நிறை கொண்டது என் நெஞ்சினையே.

பதவுரை:

ஆலிலைக் கண்ணனாய், சிறுவனாய், ஏழு உலகங்களையும் விழுங்கியவனும், சர்ப்பத்தில் பள்ளி கொண்டிருப்பவனும் பெரிய மணிகளால் ஆன ஆரமும், முத்து மாலையும் தன் நீலமேனியில் அணிந்தவனும் ஆகிய அரங்கநாதனின் ஒப்பற்ற/முடிவற்ற பேரழகு என் உள்ளத்தை முழுதும் வசப்படுத்தி விட்டதே!

கொண்டல் வண்ணனைக்* கோவலனாய் வெண்ணெய்-

உண்ட வாயன்* என்னுள்ளம் கவர்ந்தானை,*

அண்டர் கோன் அணி அரங்கன்* என் அமுதினைக்-

கண்ட கண்கள்,* மற்றொன்றினைக்* காணாவே.

பதவுரை:

கொண்டல் பூக்களின் நிறத்தை உடையவனும், ஆயர்பாடியில் வெண்ணெயை திருடி உண்டவனும், அண்டசராசரத்திற்கு அதிபதியும் ஆன அமுதத்தை ஒத்த அரங்கநாதனை தரிசித்த எனது கண்கள் வேறெதையும் காண விரும்பாதே!

****

அடுத்து திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழியிலிருந்து, திருவேங்கடமுடையான் தரிசனத்தால் உண்டான பேருவகையோடு எழுதப்பட்ட 2 எளிய பக்திப் பாடல்களைத் தந்திருக்கிறேன்.

தெரியேன் பாலகனாய்ப்* பலதீமைகள் செய்துமிட்டேன்*

பெரியேனாயினபின்* பிறர்க்கே உழைத்து ஏழையானேன்*

கரிசேர் பூம்பொழில்சூழ்* கனமாமலை வேங்கடவா.,*

அரியே. வந்தடைந்தேன்* அடியேனை ஆட்கொண்டருளே.

பதவுரை:

அறியாமல் சிறுவயதில் தவறுகள் பல செய்தேன், வளர்ந்தபின் ஏனையோர்க்கு பொருள் வழங்கி வறுமையில் உழன்றேன். பூஞ்சோலைகளால் சூழப்பட்ட பெருமலையில் வீற்றிருக்கும் வேங்கடமுடையானே! அரிநாமம் கொண்டவனே, உன்னிடம் சரணடைந்த என்னை ஏற்று ஆட்கொள்வாயாக!

வந்தாய் என்மனம் புகுந்தாய்* மன்னிநின்றாய்*

நந்தாத கொழுஞ்சுடரே* எங்கள் நம்பீ.*

சிந்தாமணியே* திருவேங்கடம்மேய எந்தாய்.*

இனியான் உன்னை* என்றும் விடேனே.

பதவுரை:

எனக்கு நம்பியாக விளங்கும் நீ, என் உள்ளத்தில் புகுந்ததோடு, என்னுள் முழுதும் வியாபித்தும் இருக்கிறாய்! அணையாப் பெருஞ்சுடர் போன்றவனும், சிந்தாமணி போல் பிரகாசம் கொண்டவனும் ஆகிய திருவேங்கடப் பெம்மானே, உனை விட்டு இனி என்றும் விலக மாட்டேன், ஐயனே!

****

அடுத்து ஸாம வேதத்தின் சாரம் என்றுணரப்படும் நம்மாழ்வாரின் திருவாய்மொழியிலிருந்து சில பக்திப் பரவசமான பாசுரங்களைக் காணலாம். மாறன் மற்றும் சடகோபன் என்றழைக்கப்பட்ட நம்மாழ்வார் வைகுண்டத்தின் தலைமைத் தளபதியாகக் கருதப்படும் விஸ்வக்ஷேனரின் அவதாரம் என்று கூறுவர். அவர் இப்பூமியில் 35 வருடங்களே வாழ்ந்தார்.

அவரைப் பற்றிய ஒரு சுவையான நிகழ்வு ஒன்று இதோ! நம்மாழ்வார் குருகூரில் வாழ்ந்த காலத்தில், வட இந்தியாவில் இருந்த புண்ணிய ஸ்தலங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த மதுரகவி, அயோத்தியின் தெற்கு வானத்தில் ஒரு அற்புதமான ஒளியைக் கண்டார். அவ்வொளியின் மூலத்தை அறியும் விருப்பத்தில் தெற்கு நோக்கி பயணப்பட்டார். திருவரங்கத்தை அடைந்து இன்னும் சற்றே தெற்கில் உள்ள குருகூரை சென்றடைந்தபோது அவ்வொளி ஒரு புளிய மரத்தடியில் தவமிருந்த நம்மாழ்வாரின் திருமேனியில் கலந்திருப்பது மதுரகவிக்கு புலப்பட்டது! அன்றிலிருந்து, மதுரகவி அங்கேயே தங்கி, நம்மாழ்வாரின் பிரதான சீடராகி நம்மாழ்வர் அருளிய பாடல்களை பதிவு செய்ததும், அவருக்கு தொண்டு புரிந்ததும், நாம் அறிந்ததே.

வைகுந்தா மணிவண்ணனே* என்பொல்லாத் திருக்குறளா என்னுள்மன்னி,*

வைகும் வைகல்தோறும்* அமுதாய வானேறே,*

செய்குந்தா வருந்தீமை உன்னடியார்க்குத் தீர்த்து* அசுரர்க்குத் தீமைகள்-

செய்குந்தா* உன்னைநான் பிடித்தேன் கொள் சிக்கெனவே.

பதவுரை:

வைகுந்தன், மணிவண்ணன் என்ற நாமங்களைக் கொண்ட, குறும்புகள் பல செய்த, கோள்கள் பல சொன்ன, பொல்லாதவனே! வான் அரசனே! என் வாழ்வின் ஒவ்வொரு நாளும் என்னுள் நிறையவும், உன்னை சரணடைந்தவர்களின் துயர் நீக்கவும், அரக்கர்களை அழிக்கவும் உனை வேண்டினேன். உன்னிடம் வந்தடைந்த என்னை அழுத்தமாகப் பற்றிக் கொள்வாயாக!

வந்தாய் போலே வாராதாய். வாரா தாய்போல் வருவானே,

செந்தா மரைக்கண் செங்கனிவாய் நால்தோ ளமுதே. எனதுயிரே,

சிந்தா மணிகள் பகரல்லைப் பகல்செய் திருவேங் கடத்தானே,

அந்தோ! அடியேன் உன்பாதம் அகல கில்லேன் இறையுமே.

பதவுரை:

வருவாய் என எண்ணும்போது வரமாட்டாய், வரமாட்டாய் என எண்ணும்போது வந்தருள்வாய்! தாமரை போன்ற கண்களும், சிவந்த இதழ்கள் கூடிய வாயும், அகண்ட தோள்களும் கொண்ட என் உயிருக்கு ஒப்பானவனே! இருள் போன்ற என் அல்லல்களையும், பாவங்களையும் துடைக்கும் ஒளியான வேங்கடேசனே! நான் உன் பாதங்களை விட்டுப் பிரியாமல் இருக்கும் நிலையை வேண்டினேன் ஐயனே!

அகல கில்லேன் இறையும் என் றலர்மேல் மங்கை யுறைமார்பா,

நிகரில் புகழாய். உலகமூன் றுடையாய். என்னை ஆள்வானே,

நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே,

புகலொன் றில்லா அடியேனுன் அடிக்கீழமர்ந்து புகுந்தேனே.

பதவுரை:

அலர்மேல் மங்கை எனும் இலக்குமி குடி கொண்டிருக்கும் திருமார்பனே! உன்னை விட்டு பிரியா நிலை வேண்டினேன். வானுலகம், பூமி, பாதாளம் ஆகிய மூன்று உலகங்களுக்கு அதிபதியே! என் அரசனே! தேவர்களும், பூதகணங்களும் நேசிக்கும் திருவேங்கடம் வாழ் பெருமானே! உன் திருவடியைத் தவிர வேறொரு புகலிடமும் இல்லாத நான், உன்னிடம் தஞ்சமடைந்தேனே!

என்றென்றும் அன்புடன்

பாலா

balaji_ammu@yahoo.com

Series Navigation

author

பாலா

பாலா

Similar Posts