மக்கள் தெய்வங்களின் கதைகள் 11 கட்டிலவதானம் கதை

This entry is part [part not set] of 53 in the series 20041125_Issue

அ கா பெருமாள்


கட்டிலவதானம் கதை

திருவிதாங்கூரின் தலைநகரமாக இருந்த பத்மநாபபுரத்தை அடுத்த ஊர்களில் குறுப்புகள் என்னும் சாதியினர் வாழ்ந்து வந்தார்கள். [இவர்கள் வேளிமலையை ஒட்டிய பகுதிகளில் வாழ்ந்த இடையர் சாதியினராக இருந்திருக்கலாம். கிருஷ்ணன்வகையினர் என்று இவர்களுக்குப் பெயர் உண்டு. கேரளத்த்தில் ஆயுதப்பயிற்சிகாரணமாகக் நாயர்களுக்கு வழங்கப்படும் குலப்பட்டமாகிய குறுப்பு ‘க்கும் இதற்கும் தொடர்பு இல்லை]

இவர்களின் தலைவர் பெரி பண்டாரம் என்பவருக்குச் சொந்தமாக நிதிராணிமலையில் பெரிய தோட்டம் இருந்தது. அந்தத் தோட்டத்தில் குறுப்புமார்கள் வேலை செய்து வந்தனர். ஒருமுறை அந்தத் தோட்டத்தில் வாழைப்பயிர் செய்ய தீர்மானித்தார்கள். அதற்காக வேலையை ஆரம்பிக்க நல்ல நாளைத் தெரிவு செய்ய பத்மநாபபுரத்திலிருந்த இல்லத்துப் போற்றியை அணுகினர். அவர் சொன்ன நேரத்தில் வாழைக்கன்றை நட்டனர்.

வாழைகள் செழிப்பாய் வளர்ந்தன. நன்றாய்க் காய்த்தன. அப்போது பத்மநாபபுரத்தை அடுத்த மேலாங்கோடு என்ற ஊரிலிருந்த இயக்கியம்மை அந்தத் தோட்டத்திற்கு வந்தாள். பச்சை பச்சையாய் காய்த்துக் கிடந்த காய்களைப் பார்த்தாள். உடனே பெரிய கிளியாக உருமாறினாள். மொந்தன் குலை ஒன்றைக் கொத்தி அறுத்தாள். நிதிராணிமலை குகை ஒன்றில் அதை மறைத்து வைத்தாள்.

குறுப்புகள் வாழைக்குலையை அறுத்துச் சென்ற ராட்சதக் கிளியைப் பார்த்து அதிசயித்தனர். பெரிய குறுப்பு எசமானிடம் அந்தச் செய்தியைச் சொன்னார்கள். பெரிய குறுப்பு கிளியைக் கொல்ல குகையின் வாசலில் தீ வைத்து மூட்டம் போடச் சொன்னான். தோட்டத்து வேலைக்காரர்களான குறுப்புகளும் அப்படியே செய்தனர். இதனால் கோபம் கொண்ட இயக்கியம்மை மந்திரமூர்த்தி வாதைகளை அழைத்துக்கொண்டு குறுப்புகள் வாழ்ந்த ஊர்களுக்குச் சென்றாள். அங்கு ஆண்களையும் பெண்களையும் அடித்தாள். வீட்டின் மேல் கல்லை எறிந்தாள். நடுநிசியில் ஆரவாரம் செய்தாள்.

ஊரில் நடந்த ஆதாளிக்குக் காரணத்தை அறிய மந்திரம் அறிந்த போத்தி ஒருவரை வரவழைத்தார் பெரிய குறுப்பு. போத்தியும் மந்திரம் போட்டுப் பார்த்து காரணம் கண்டுபிடித்தார். போத்தி ஊருக்குச் சாந்தி செய்ய பெரிய சடங்குகள் செய்தார். ஊரைச் சுற்றி மந்தற்றமேற்றிய முளையடித்து வாதைகளை விரட்டினார். ஊர்க்காரர்கள் போத்தியைக் கொண்டாடி உமக்கு என்ன பரிசு வேண்டும் எனக் கேட்டனர். போத்தி மரத்தால் ஆன பெரிய கட்டில் வேண்டும் எனக் கேட்டார். பெரிய குறுப்பும் மலையிலிருந்து காஞ்சிரமரம் வெட்டிக் கொண்டுவந்து ஒரு பெரிய கட்டிலைச் செய்து கொடுத்தார்.

காட்டில் வாழ்ந்துவந்த மலையிசக்கியம்மை அந்த மரத்தில்தான் வாசம் செய்தாள். அவள் அக்கட்டிலிலேயே ஊருக்கு வந்துசேர்ந்தாள். போத்தி கட்டிலைத் தன் வீட்டிற்குக் கொண்டு சென்றார். உறவினர்கள் எல்லோரும் கட்டிலை அதிசயத்துடன் பார்த்தனர். அன்று இரவு போத்தி கட்டிலில் படுத்த கொஞ்ச நேரத்தில் அவருக்கு மார்பை அடைதத்தது. அவரைச்சுற்றி இயக்கி ஆதாளி செய்தபடி வந்தாள். போத்தியை அடித்தாள். உறவினர்கள் பார்த்துக்கொண்டிருந்தபோதே அவர் மூச்சுத்திணறி துடித்து கட்டிலில் கிடந்துஇறந்தார். அவர் கட்டிலில் குடிகொண்டிருந்த இயக்கியம்மையால் தான் இறந்தார் என்பதை அறியாத உறவினர்கள் சிலர் போத்திக்கு உரிமையான அக்கட்டிலில் உரிமை கொண்டாட ஆரம்பித்தனர். கட்டிலை அவர்கள் ஒவ்வொருவராக தங்கள் வீடுகளுக்குக் கொண்டுசென்றனர். அதில் படுத்த ஒவ்வொருவராக உயிர்விட்டனர். இயக்கி அவர்களையும் கொன்றாள்.

போத்தியின் உறவினர்கள் தங்களின் குடும்பத்துக்கு யமனாக இருக்கும் கட்டிலை விற்றுவிட முடிவு செய்தனர். இரணியல் சந்தையில் யாருக்கும் தெரியாமல் கட்டிலைக் கொண்டு சென்றனர். அங்கு ஒரு நாடார் வியாபாரியின் மூலம் கட்டிலை விற்க ஏற்பாடு செய்தனர். அப்போது புத்தளத்தைச் சார்ந்த முத்துவேலன் என்பவர் அச்சந்தைக்கு வந்திருந்தார். அவர் கட்டிலின் அழகைப் பார்த்து ஆசைப்பட்டார். நல்ல விலை கொடுத்து வாங்கிச் சென்றார்.

முத்துவேலன் கட்டிலை வீட்டிற்கு கொண்டு சென்று பாதுகாப்பான அறையில் வைத்தான். அன்று இரவு அவர் அதில் படுத்ததுமே மூச்சுத்திணறி துடித்தார். அவரை சூழ்ந்து இசக்கியும் பேய்களும் ஆதாளியிட்டன. அவர் இறந்துபோனார். அவரது உறவினர்கள் புத்தளத்திலிருந்த சோதிகிரி என்ற மந்திரவாதியை அழைத்து கட்டிலில் மை போட்டுப் பார்த்தனர். சோதிரி அக்கட்டிலில் இசக்கி அம்மை உறைந்திருப்பதைக் கூறினான். உடனே வேலவனின் மக்கள் கட்டிலை ஊர்ச் சுடுகாட்டுக்குக் கொண்டுசென்று குழியில் வைத்து எரித்துவிட்டனர். உறவினர்களும் சுடுகாட்டிலிருந்து வீடு திரும்பினர்.

சுடுகாட்டுக் குழியிலிருந்து எரிந்த கட்டிலின் கால் ஒன்று தீயின் வேகத்தால் தெறித்து விழுந்தது. அது ஒரு வேலிச்செடியின் மீது விழுந்து தொங்கியது. மறுநாள் சுடுகாட்டுப் பக்கம் வந்த நாடாத்தி ஒருத்தி, வேலியில் கிடந்த கட்டில் காலை விறகு என்று எடுத்துச் சென்றாள். அவள் அதை வீட்டிற்குக் கொண்டு சென்று வீட்டில் வைத்ததும் இயக்கி அந்த நாடாத்தியைக் கொன்றாள்.

அவளது உறவினர்கள், நாடாத்தியின் இறப்பிற்குக் காரணம் தெரியாமல் இருந்தபோது ஊர்கோவில் சாமியாடி ‘ ‘ காட்டு இயக்கி கட்டில் கால் வழியே இங்கு வந்துவிட்டாள். அவளுக்குக் கோவில் எடுத்து வழிபடுங்கள் ‘ ‘ என்றார். ஊர்க்காரர்களும் உண்மையை உணர்ந்து அம்மையை இறக்கி கோயில் கட்டி வழிபட ஆரம்பித்தனர். அவள் அங்கே உறைந்து அவர்களுக்கு அருள்பாலித்தாள்.

Series Navigation

author

முனைவர் அ.கா.பெருமாள்

முனைவர் அ.கா.பெருமாள்

Similar Posts