எஸ் வையாபுரிப் பிள்ளையின் ‘தமிழின் மறுமலர்ச்சி ‘ – 3

This entry is part [part not set] of 51 in the series 20041007_Issue

பி.கே.சிவகுமார்


(தமிழின் மறுமலர்ச்சி – நூற்களஞ்சியம்: தொகுதி – 2 – பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை – வையாபுரிப்பிளளை நினைவு மன்றம், ‘வையகம் ‘, 2, 4-வது குறுக்குச் சாலை, இராஜா அண்ணாமலைபுரம், சென்னை – 28.)

தமிழின் மறுமலர்ச்சி என்ற தலைப்பிலான கட்டுரையின் தொடர்ச்சி…

வடமொழிவாதம்:

பிறமொழிகளின் சார்பு பற்றித் தோன்றியுள்ள வாதங்களில் முதலாவதாகக் குறிப்பிடத்தக்கது இவ்வாதம். தமிழர்கள் இருபிரிவாக உள்ளார்கள். ஒரு பிரிவு, வடமொழிச் சொற்களை அறவே ஒழிக்க வேண்டும் அல்லது மிகச் சுருங்கிய அளவில் வேறுவழி இல்லாதபோது பயன்படுத்த வேண்டும் என்கிறது. அடுத்த பிரிவு, வடமொழிச் சொற்களைப் புழங்குவதில் எந்தக் கட்டுப்பாடும் கூடாது என்கிறது. இரு பிரிவுகளும் தத்தம் சார்பாகக் கூறுவதை வடமொழிவாதம் எனலாம்.

இவ்வாதம் இரண்டு காரணங்களால் தோன்றியுள்ளது: 1. வகுப்புத் துவேஷம், 2. அரசியல்கட்சித் துவேஷம்.

ஆனால், துவேஷங்களை ஒதுக்கி, தமிழின் நலத்தை மட்டும் கருத்தில் கொண்டு இவ்வாதத்தை ஆராய வேண்டும். வடமொழியை முற்றிலும் அழிக்க முடியாது. அது தேவையும் இல்லை. வேண்டுமளவு, தேவையறிந்து தமிழில் ஏற்கனவேயுள்ள வடமொழிச் சொற்களைப் புழங்குதல் வேண்டும். வடமொழி அந்தணர்களுக்கு மட்டும் உரியதன்று. அந்தணர்களும் அப்படிக் கருதக்கூடாது. மற்றவர்களும் அப்படிக் கருதக் கூடாது. இந்தியர்கள் அனைவருக்கும் பொதுவானது வடமொழி. வைதிகர்கள் மட்டுமின்றிப் பிறரும் அம்மொழியை வளர்த்துள்ளனர். ஐரோப்பாவில் லத்தீனைப் போல வடமொழியை நாம் கொள்ள வேண்டும். சமயமுழு முதல் நூலான வேதங்கள் வடமொழியில் உள்ளன. ஆங்கிலம் லத்தீனைப் பயன்படுத்திக் கொண்டதுபோல நாம் வடமொழியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த இரண்டு பிரிவுகளைத் தவிர மூன்றாவது பிரிவும் உண்டு. அது, தமிழர்களாகப் பிறந்தும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டும் தமிழை இகழ்ந்து வடமொழி மட்டுமே கற்பது. இவர்களால் வடமொழிக்கும் பயனில்லை. அதற்கும் இவர்கள் கேடே விளைவிக்கிறார்கள். சில இடங்களில் வடமொழிக்குச் சிறப்பு கொடுத்து வடமொழியின் கீழ் தமிழ்போன்ற தாய்மொழிகள் இருக்க வேண்டிய நிலை இருக்கிறது. இது நாட்டுக்கும் மொழிக்கும் பல தீங்குகளை விளைவிக்கக் கூடியது. தமிழ்மொழி இப்படிப்பட்டதை எதிர்த்து தனக்குரிய கெளரவத்தைப் போற்றிக் கொள்ளுதல் முக்கியமானது.

ஆங்கில வாதம்:

புராதன சரித்திரத்தின் விளைவு வடமொழிவாதம். நவீன சரித்திரத்தின் விளைவு ஆங்கிலவாதம். இவ்வாதம், தாய்மொழியைப் பேணாமல், ஆங்கிலத்தில் பயின்று அதன் மூலம் அறிவு வளர்ச்சி பெறவேண்டும் என்கிறது. ஆங்கில மோகம் ஒரு சாராரிடையே அதிகரித்து வருகிறது. ஆனால், ஆங்கிலம் அறிந்தவர்கள் அனைவரும் இப்படியில்லை. பெரும்பாலோர் தாய்மொழியின் வளர்ச்சி அதன்மூலம் கல்வி கற்பதிலேயே நிகழும் என்று நம்புகிறவர்கள். ஆனால், அரசாங்கம் இவ்விஷயத்தில் உதாசீனமாக இருக்கக் கூடும். தாய்மொழியில் கற்பதில் தடைகள் இருக்கக் கூடும். இவ்வாதத்தை எதிர்க்க தமிழ் தற்கால அறிவியல் அறிவு அனைத்தையும் உட்கொள்ள வேண்டும். பழமையும் புதுமையும் தாங்கி வலிமையுற வேண்டும்.

ஹிந்தி வாதம்:

ஆங்கிலத்தை எதிர்ப்பதற்கு தேசாபிமானிகள் எழுப்பிய புதிய வாதம் ஹிந்திவாதம். அந்நிய தேச மொழியான ஆங்கிலத்தைவிட, இந்தியா முழுமைக்கும் பொதுவான மொழியாகப் பெரும்பாலோர் புழங்குகிற ஹிந்திக்குத் தகுதியும் உரிமையும் உள்ளதென்று இவர்கள் கூறுகிறார்கள். தமிழுக்கு இதனால் கெடுதி சிறிதும் வருமென்று தோன்றவில்லை. உண்மையிலேயே கெடுதி விளைவிக்குமானால், இவ்வாதத்தைத் தமிழ் எதிர்க்க வேண்டும். ஹிந்தியினாலும் தமிழ் உரம் மிகுந்து வளரும் என்பதுதான் உண்மை. தமிழ் மக்கள் இந்தியா முழுமைக்கும் சென்று அனுபவத்தைப் பெருக்கிக் கொண்டால், அவ்வனுபவம் மூலமாகத் தமிழும் சிறப்பெய்தும். கல்வித் திட்டம் சீரமைக்கப்படும்போது இவ்வாதம் தக்கவர்களால் நன்கு ஆராயப்படலாம்.

சமயவாதம்:

சமயங்களும் புராணங்களும் பொய்கள் நிரம்பின, மக்களுக்குக் கேடு விளைவிப்பன. ஆகையால் இவற்றை ஒழிப்பது அவசியமென்று இவ்வாதிகள் கூறுவர். முதலாவதாகத் தமிழில் உள்ள இதிகாசங்களை ஒழிக்க வேண்டும் என்று இவர்கள் முயற்சி செய்கிறார்கள். சமயம் பற்றிய வாதத்தை இப்போது ஒதுக்கி வைத்துவிட்டு, முதலில் புராணம் முதலிய இலக்கியங்களை நோக்குவோம். இலக்கியங்கள் அவை தோன்றிய காலத்துச் சமுதாய நிலையைப் பொறுத்தன. அவற்றை ஒழிப்பதால் மொழிபற்றிய சரித்திரமும் மக்களின் சரித்திரமும் காணாமல் போய்விடும். இலக்கியங்களில் பழங்கதைகள், பழமைவாத கருத்துகள் இருந்தால் அவற்றை ஒதுக்கிவிடக் கூடாது. கிரேக்க கதைகள் இருக்கின்றன. அவை கிரேக்க மொழியில் மட்டுமின்றி ஐரோப்பிய மொழிகள் பலவற்றிலும் புகுந்துள்ளன. இக்கதைகளின் பொருட்டு அவ்விலக்கியங்களை ஐரோப்பியர்கள் ஒதுக்கிவிடவில்லை. மூன்றாவதாக, இக்கதைகள் நம் கவிதைச் செல்வத்தை வளப்படுத்தி, அதன் நயத்தை வளர்த்துள்ளன. பெரும்பாலோர் காவிய நயம் கருதியே இராமாயணம் போன்றவற்றைக் கற்கின்றனர். இவற்றை ஒழிக்க வேண்டும் என்று சொல்கிற கட்சியோடு போராடுவது தமிழ் மக்களின் கடமையாகும்.

முடிவுரை:

தமிழின் மறுமலர்ச்சிக்குத் தடையாக இருப்பன சிலவற்றைப் பார்த்தோம். மொழியின் சிறப்பு அதனைப் பயில்வோர் சிறப்பு. எனவே, தமிழுக்கும் தமிழைத் தாய்மொழியாகப் பயில்வோருக்குமுள்ள நெருங்கிய தொடர்பை உணர வேண்டும். தமிழின் குறைகள் நம் குறைகள். அதன் சிறப்பு நம் சிறப்பு. நம் தாய்மொழி மாறாத இளமையோடும் குறையாத வலிமையோடும் என்றும் நிலவுவதற்கு நாம் உழைக்க இறைவன் அருள் புரிக.

(இத்துடன் தமிழின் மறுமலர்ச்சி என்ற தலைப்பிலான கட்டுரை நிறைவுறுகிறது.)

விடுதலை வேண்டும்!

இந்தத் தலைப்பிலான கட்டுரை – தமிழுக்கு விடுதலை வேண்டும் என்கிற கூக்குரலும் உழைப்பும் மிகவும் அவசியமாகும் என்கிறது. சிலர் இந்த அவசியத்தை உணர்ந்துள்ளார்கள். ஆனால், அதற்கு அவர்கள் கையாள்கிற முறைகள் சரியில்லை. இலக்கண விதிகளிலிருந்து தமிழ் விடுதலை பெற்றால் போதுமென்று நினைக்கிறார்கள். இலக்கணம் கற்றவர்கள் கடினமானத் தமிழ் எழுதுகிறார்கள் என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால், கடுமையான தமிழ் வேறு. வழக்கொழிந்த தமிழ் வேறு. இந்த இடத்தில் பேராசிரியர் கடுமையான தமிழுக்கும் வழக்கொழிந்த தமிழுக்கும் உதாரணங்கள் தருகிறார். வழக்கொழிந்த தமிழில் புழங்குவது தமிழைச் சிறையிலிடுவதாகும். இதிலிருந்து தமிழ் விடுதலை பெற வேண்டும். இதைப் போலவே, சொற்களின் உண்மை வடிவம் தெரியாமல் மனம் தோன்றியபடி எழுதுவதும் தவறாகும். உதாரணம், ஒற்றுழையாமை என்ற சொல். இது போலி இலக்கணம். இதிலிருந்தும் தமிழுக்கு விடுதலை வேண்டும்.

இன்னும் சிலர், தமிழுக்கு அலங்காரம் செய்கிறோம் என்று நினைத்து எதுகை மோனைகளை மிகவும் பயன்படுத்தி, தமிழன்னையை சேற்றில் அழுந்தக் கிடத்தி விடுகிறார்கள். உதாரணம் – சீற்றத்தினால் ஊற்றமுற்றுக் கூற்றமுட்க ஏற்றெழுந்து ஆர்ப்பரித்தான். அருவருக்கத்தக்க இப்படுகுழிச் சேற்றிலிருந்து தமிழ் விடுதலை பெற வேண்டும்.

தமிழ்நாட்டில் எந்தக் கிளர்ச்சி தோன்றினாலும் அது தமிழ் மொழியில் வந்து பாய்ந்துவிடுகிறது. ஓர் இயக்கத்தால் வடமொழி வெறுப்பும் வளரத் தொடங்கியுள்ளது. வடமொழி அந்தணர்களுக்கு மட்டும் உரியதல்ல. அந்தணரல்லாதவர்களும் பெளத்த ஜைன சமயத்தவரும் அம்மொழியை வளர்த்திருக்கிறார்கள். மற்றவர்களுக்குப் போலவே அந்தணர்களுக்கும் தமிழ் தாய்மொழியாக இருந்தபோதிலும் அவர்களுக்கும் தமிழுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் வாதிடப்படுகிறது. அந்தணர்களுள் ஒருசிலர் அதற்கு இடம் கொடுக்கவும் செய்கிறார்கள். தமிழ் தங்கள் தாய்மொழியல்ல என்பதுபோல் ஒதுங்கி விடுகிறார்கள். தங்களை ஆரியரென்றும் மற்றவரைத் திராவிடரென்றும் சொல்கிறார்கள். ஆரிய திராவிட வாதம் அர்த்தமற்றது. தனிப்பட்ட தூய ஆரியரும் தனிப்பட்ட தூய திராவிடரும் இல்லை என்பது வரலாற்று உண்மை.

இவையல்லாமல் தூய தமிழ்வாதம், புராண இதிகாச இலக்கிய எதிர்ப்பு வாதம் என்கிற வாதங்களும் தலைதூக்கியுள்ளன. இப்படிப்பட்ட எல்லா வகுப்புவாதக் கொள்கைகளிலிருந்தும் தமிழ் விடுதலை பெற வேண்டும். அதற்கு வள்ளுவர், இளங்கோ, கம்பன், இராமலிங்க சுவாமி, பாரதி, தேசிக விநாயகம் பிள்ளையின் நூல்களை மாணவர்கள் படிக்க வேண்டும். படித்து வந்தால் தமிழ் மொழிக்கு மாணவர்களே விடுதலை வாங்கித் தந்து விடுவார்கள்.

(இத்துடன் விடுதலை வேண்டும் என்கிற கட்டுரை நிறைவுறுகிறது.)

தமிழும் சுதந்திரமும்

திராவிட இயக்கத்தால் தமிழ் நாட்டிலும் சமீப காலமாகத் தமிழ் இணையத்திலும் கட்டமைக்கப்படுகிற பிம்பம் – தமிழுக்கும் சமயத்துக்கும் தொடர்பில்லை. சமயமும் மதமும் பிறர் நம்மீது திணித்தவை என்கிற வாதம். இவ்வாதத்தை முன்வைப்பவர்கள் தங்கள் உள்ளக் கிடக்கையைச் சொல்கிறார்களே அல்லாமல், தங்கள் வாதத்துக்கு வலு சேர்க்கிற வரலாற்று அல்லது சமூகவியல் சான்றுகளை முன்வைப்பதில்லை. கிரேக்க மற்றும் ரோம நாகரிகத்திலிருந்து எல்லா நாகரிகங்களிலும் மதமும் கடவுள் வழிபாடும் இருந்து வந்துள்ளன. இதைச் சொல்வதால் ஒருவர் மதவாதி ஆகிவிட மாட்டார். மதவாதத்தை எதிர்க்கிறவர்கள் கூட வரலாற்றை உள்ளது உள்ளபடிதான் சொல்ல வேண்டும். இன்றைக்கு இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளும் மதத்தை அரசியலாகவும், சமூக நல்லிணக்கத்துக்கு உதவாத வெறுப்பை வளர்க்கிற ஸ்தாபனமாகவும், அதிகாரமாகவும் கட்டமைத்துக் கொண்டிருப்பதை முழுமூச்சுடன் எதிர்க்கிற அதே நேரத்தில், மதத்தை இவர்களிடமிருந்து மீட்பதுடன் மதம் குறித்த செழுமையான மற்றும் முன்னெடுத்துச் செல்லத்தக்க விஷயங்களைச் சொல்வதும் ஒருவரின் கடமையாகிறது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்தியாவின் இடதுசாரிகள் மதம் பற்றிப் பேசுவதே பிற்போக்கு என்கிற முற்போக்கு கொள்கையுடையவர்களாக இருக்கிறார்கள். ஆனால், இடதுசாரிகளே மதவாதத்துக்கு எதிரான அயராத போராட்டத்தையும் நடத்தி வருபவர்கள் என்பதும் உண்மை. புராதன தமிழ்ச் சமூகத்தில் சமயத்துக்கும் வேதத்துக்கும் இருந்த இடம் பற்றி தமிழும் சுதந்திரமும் என்ற கட்டுரையில் சான்றுகள் தருகிறார் பேராசிரியர்.

(தொடரும்)

http://pksivakumar.blogspot.com

Series Navigation

author

பி.கே. சிவகுமார்

பி.கே. சிவகுமார்

Similar Posts