எஸ். வையாபுரிப் பிள்ளை – ஓர் அறிமுகம்-1

This entry is part [part not set] of 51 in the series 20041007_Issue

பி.கே. சிவகுமார்


பேராசிரியர் எஸ்.வையாபுரிப் பிள்ளை என்ற பெயர் அவரைப் பற்றி அறிந்தவர்களிடையே எழுப்புகிற மனச்சித்திரங்கள் பலவாறாக இருக்கும். குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுகிற, மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் பேசுவதில் மகிழ்கிற ஒரு சாராருக்கு அந்தப் பெயர்மீது இருக்கிற விமர்சனங்கள் வரலாறு அறிந்ததே. ‘எழுக கவி ‘ என்று மஹாகவி பாரதியாரால் வாழ்த்து பெற்ற பாரதிதாசன் கூட திரிந்துபோய் ‘பாதக்குறடெடுத்து உன்னை பன்னூறு முறை அடிப்பேன் ‘ என்று வையாபுரிப் பிள்ளையை வைதது வரலாறு. ஆனால், காய்தல் உவத்தல் அற்ற பார்வை உடையவர்களுக்கும், அறிவியல் ரீதியாக தமிழாய்வை மேற்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும், தமிழின் தொன்மையும், வரலாறும், மாற்றங்களைத் தமிழ் அரவணைத்து ஏற்றுக் கொண்ட பரிணாமமும் அறிந்தவர்களுக்கும் வையாபுரிப் பிள்ளை ஒரு லட்சினை. இப்படி அவரைப் பற்றிய இருவேறு எதிரெதிரான கருத்துகள் நிலவுகிற போதிலும், ‘தமிழாய்வில் ஒரு புதுயுகத்தினை தோற்றுவித்தவர் ‘ (தமிழின் மறுமலர்ச்சி முகவுரையிலிருந்து எடுக்கப்பட்ட மேற்கோள்) அவர் என்பதை யாரும் மறுக்க முடியாத அளவுக்கு அவர் சாதனைகளும் நூல்களும் நிற்கின்றன.

சென்னைப் பல்கலைக் கழகம் வெளியிட்ட தமிழ்ப் பேரகராதியின் பதிப்பாசிரியாக 1926லிருந்து 1936வரை சிறப்பாகப் பணியாற்றி, அந்தப் பேரகராதியை வெற்றிகரமாக வெளிக் கொணர்ந்தவர் வையாபுரிப் பிள்ளை. இன்றைக்கும் கூட இணையத்திலும் பிற இடங்களில் இந்த அகராதியே முதன்மையாகப் பயன்படுத்தப்படுகிறது என்பது அதன் பெருமைக்கும் உள்ளடக்கத்துக்கும் சான்று. 1936லிருந்து 1946 வரை சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றியவர். பின்னர், திருவிதாங்கூர் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகவும் பணிபுரிந்தார். தமிழ் தவிர, சம்ஸ்கிருதம், மலையாளம், பிரெஞ்சு, ஜெர்மன் என்று பல மொழிகள் அறிந்தவர். மனோன்மணீயம், புறத்திரட்டு, நாமதீப நிகண்டு முதலிய நிகண்டுகள், சங்க இலக்கியம், சீவக சிந்தாமணி உள்ளிட்ட 40க்கு மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்திருக்கிறார். நவீன மற்றும் புதிய இலக்கிய வடிவங்களிலும் ஆழ்ந்த அறிவும் திறமையும் உடையவர்.

1947 செப்டம்பரில் வெளியாகி மிகவும் சர்ச்சைக்குள்ளாகி, பாரதிதாசன் போன்றோரிடமிருந்து வசைகளை பதிலாகப் பெற்றுத் தந்த, அவரின் ‘தமிழின் மறுமலர்ச்சி ‘ என்ற நூலை வாசித்துக் கொண்டிருக்கிறேன். இந்தப் புத்தகம் கிடைக்காமல் அதன் ஜெராக்ஸ் காப்பி மட்டுமே கிடைத்தது. பேராசிரியரின் நூல்களைப் பதிப்பிப்பதற்கென்றே 1987ல் உருவாக்கப்பட்ட வையாபுரிப் பிள்ளை நினைவு மன்றம் இந்நூலை 1989ல் மறுமதிப்பு செய்திருக்கிறது. ஆனால் புத்தகங்கள் தீர்ந்துபோய் விட்டன என்று தோன்றுகிறது.

வெறும் உணர்வுகளின் குவியலாகிப் போகிற கண்மூடித்தனமான தமிழ்க் காதல், திராவிட கோட்பாடுகள், அவை தமிழ்ச்சூழலில் கட்டமைத்திருக்கிற பிம்பங்கள் ஆகியவற்றை அறிந்தவர்களுக்கு, வையாபுரிப் பிள்ளை இன்னொரு பக்கத்தைக் காட்டுகிறார். ஒரு விஷயத்தின் எல்லாத் தரப்பையும் அறிய வேண்டும் என்று விரும்புபவர்களும், அறிவியல்ரீதியான, ஆராய்ச்சிபூர்வமான, சான்றுகளை அடிப்படையாகக் கொண்ட நிரூபணங்களை விரும்புபவர்களும் வையாபுரிப் பிள்ளையை விரும்பிப் படிப்பார்கள். ஆராய்ச்சிகளில் கால வரையறைகள் செய்யும்போது, ‘மறு ஆராய்ச்சி வரும்வரை இம்முடிபுகளை ஏற்றுக் கொள்ளலாம் ‘ என்று வையாபுரிப் பிள்ளை எழுதுவாராம். அது அவரின் அறிவியல் மற்றும் திறந்த அணுகுமுறைக்கு உதாரணம். தான் சேர்த்து வைத்திருந்த 6000க்கும் மேற்பட்ட அரிய நூல்களைத் தன் காலத்துக்குப் பின் அவர் நூலகத்துக்கு அளித்து விட்டார் என்று எங்கோ படித்த ஞாபகம்.

திண்ணை களஞ்சியத்தில் வையாபுரிப்பிள்ளை பற்றி வெங்கட் சாமிநாதன் ஆற்றிய உரை இருக்கிறது. அதைப் பின்வரும் இடுகைகளில் காணலாம்.

  • வெ சா கட்டுரை பகுதி 1

  • வெ சா கட்டுரை பகுதி 2

    பேராசிரியரின் தமிழின் மறுமலர்ச்சி என்ற நூலில் இருக்கிற கட்டுரைகளின் உள்ளடக்கத்தையும், அவை குறித்தான என் வாசகப் பார்வையையும் முன்வைக்க இனி முயல்கிறேன்.

    பி.கு.: அவரைப் பற்றி மேற்சொன்ன விவரங்களில் பலவற்றை அவரின் நூல்களில் இருந்தே எடுத்து என் மொழியில் கொடுத்திருக்கிறேன்.

    http://pksivakumar.blogspot.com

    Series Navigation

  • author

    பி.கே. சிவகுமார்

    பி.கே. சிவகுமார்

    Similar Posts