மக்கள்தெய்வங்களின் கதைகள் 3-தோட்டுக்காரி அம்மன் கதை

This entry is part [part not set] of 42 in the series 20040930_Issue

அ கா பெருமாள்


நாஞ்சில் நாட்டில் கன்னியாகுமரி அருகே முட்டப்பதி என்ற ஊர் அக்காலத்தில் கோட்டை கோபுரங்களுடன் செழிப்புடைய ஊராக இருந்தது . அவ்வூரில் கோனாண்டி ராசா கொந்தளிப்ப ராசா என்னும் இருவரும் தனித்தனியே கோட்டைக் கட்டி வாழ்ந்தார்கள். அவர்கள் இருவரும் வேறு வேறு சாதியைச் சேர்ந்தவர்கள்.

கோனான்டி ராசாவின் கோட்டைக்குள் சிறிய மண்டபங்கள் பல இருந்தன. அந்தப்புரம் உண்டு. கரிபரி கனத்த ரதம் காலாள் வீரர்கள் இருந்தனர். எந்நேரமும் வீரர்களின் கலகலப்பு அங்கு இருக்கும். எப்போதும் ஆரவாரம் மிகுந்திருக்கும். கோட்டைக்குள் மூத்த நயினாருக்குக் கோவில் இருந்தது. அதில் ஆண்டுக்கு இரண்டு திருவிழாக்கள் நடந்தன.

கோனான்டி ராசனுக்குக் குழந்தைச் செல்வம் இல்லை. அவன் மனைவி மந்திரப்பூமாலை குழந்தை வேண்டி நேராத கோவில்கள் இல்லை . அவள் தானங்கள் செய்யாத கோவில்கள் இல்லை. தோழிகளுடன் கோவில் கோவிலாகத் தவமிருக்கப் போனாள்.

ஒருநாள் கோனான்டிராசனின் கோட்டைக்குள் மலைக்குறத்தி ஒருத்தி வந்தாள். கோனான்டி ராசன் அவளுக்கு சீர்வரிசைகள் செய்தான். என் மனைவிக்குக் குறி சொல்லுவாய் எனப் பணித்தான். குறத்தி மந்திரப்பூ மாலையின் கையைப் பிடித்து நல்லகுறி சொன்னாள். ‘ ‘உன் குலதெய்வம் மூத்த நயினாருக்கு நல்ல வழிபாடு செய். ஒரு பெண் குழந்தை பிறக்கும். அதற்குத் தோட்டுக்காரி என்று பெயரிடு. அவளின் 12ஆம் வயதில் குமரப்பராசன் அவளை சிறைகொண்டு செல்வான். அதனால் பெரும் போர் வரும். எல்லோருமே மாண்டுபோவீர்கள் ‘ ‘ என்றாள்.

குறத்தி சொன்ன குறி அச்சமளித்தாலும் அவர்களால் குழந்தை ஆசையை அடக்க முடியவில்லை. குறத்தி சொன்னபடி மந்திரப்பூமாலை கர்ப்பமுற்றாள். அவள் குழந்தை பெற ஈத்துப்புரை [பேற்றுக்கான அறை ] கட்டினான் கோனான்டி. இறைவனின் பெயரைச்சொல்லி அவ்வறையில் நுழைந்தாள் அவள். அவளது பேறுகாலத்துக்கு உதவ பொன்னுருவி என்ற மருத்துவத்தாய் வந்தாள். குறத்தி சொன்ன நேரத்தில் மந்திரப்பூமாலை ஒரு பெண் குழந்தை பெற்றாள். அதற்குத் தோட்டுக்காரி எனப் பெயரிட்டனர். இதே நேரத்தில் முட்டப்பதியின் இன்னொரு பக்கத்தில் கோட்டை கட்டி வாழ்ந்த கொந்தளப்பராசனுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு குமரப்பன் எனப் பெயரிட்டனர்.

தோட்டுக்காரிக்கு வயது 12 ஆனது. அவள் அழகுடன் திகழ்ந்தாள். குமரப்பனுக்கும் வயது 12ஆனது. வாள் , வில் , வேல் போன்ற ஆயுதங்களை, இயக்குவதில் வல்லவனாக இருந்தான். ஒருமுறை அவன் தோட்டுக்காரியின் கோட்டைவழியாகச் சென்றான். கோட்டைவாசலில் பந்தடித்து விளையாடிக்கொண்டிருந்த தோட்டுக்காரியைப் பார்த்து அவள் அழகில் தன்னை இழந்தான். காதலால் கருத்தழிந்து அறிவிழந்தான்.

குமரப்பன் தன் அரண்மனைக்கு வந்து மஞ்சத்தில் விழுந்தான். கொந்தளப்ப ராசன் மகனின் நிலைகண்டு பதறினார். மகனின் மனம் சடைவைக்குக் காரணம் என்ன என மகனைக் கேட்டான். மகன் தோட்டுக்காரியைக் கண்டதைப் பற்றியும் அவளை மணம் செய்யவேண்டும் என்றும் அவளின்றி வாழமுடியாது என்றும் கூறினான். தந்தை ‘ ‘மகனே கவலை வேண்டாம். அவளை உனக்கு மணம் பேசி வருவேன். பெரும்படை நமக்கு உண்டு ‘ ‘ என்றான்.

கொந்தளப்பன் தோட்டுக்காரியைத் தன் மகனுக்கு மணம் செய்ய விரும்புவதாக கோனான்டி ராசனுக்கு ஓலை எழுதி ஒட்டனிடம் கொடுத்து அனுப்பினான். ஒட்டன் கோனான்டியிடம் ஓலையைக் கொடுத்தான். செய்தியைப் படித்த கோனான்டி துள்ளிக் குதித்தான். ‘ ‘என்ன நினைத்தான் இந்த அற்பப்பதர். இவன் என் முறைமாப்பிள்ளையா ? என் சாதியா ? ஒட்டனே ஓடிவிடு. நாக்கை அறுத்துவிடுவேன் ‘ ‘ என்றான்.

ஒட்டன் கொந்தளப்பனிடம் சென்று நடந்ததைச் சொன்னான். அவன் கண்கள் சிவந்தன. ‘ ‘அற்பன் என் படைகளுக்கு முன் அவன் தூசு. என்னை இகழ்ந்தவனை நான் வாழவிடமாட்டேன். வீரர்கள் இன்னும் ஏன் மெளனம் சாதிக்கவேண்டும். படைகள் தயாராகட்டும் ‘ ‘ என்றான்.

அப்போது மகன் குமரப்பன் ‘ ‘தந்தையே என் வஞ்சத்தை நானே தீர்ப்பேன். தோட்டுக்காரியை நானே சிறையிட்டு வருவேன் .நீங்கள் படையுடன் செல்வது என் ஆண்மைக்கு உகந்ததல்ல ‘ ‘ என்றான்.

குமரப்பன் தன் படையுடன் சென்றான். கூட்டப்புளி என்ற இடத்தில் கூடாரம் அடித்தான். தோட்டுக்காரியை சிறையெடுக்க தருணம் பார்த்திருந்தான்.

இந்த நேரத்தில் தோட்டுக்காரி சீயக்காய், நெல்லிப் பருப்பு எண்ணெயுடன் தோழிகள் சூழ சுனையில் நீராட வந்தாள். அப்போது தீய சகுனங்கள் தோன்றின. அவள் அவற்றைக் கண்டாலும் கூட விதி அவள் கண்ணை மறைக்க அவள் சுனைக்கு வந்தாள்.

தோட்டுக்காரி சுனையில் குளித்துக்கொண்டிருக்கும் செய்தியைக் குமரப்பனிடம் ஒருவீரன் வந்து சொன்னான். குமரப்பன் அவளைக் காரணம் இன்றிச் சிறையெடுப்பது சரியல்ல , அதனால் பழி வரும் என்று எண்ணினான். ஒட்டனிடம் ‘ நீ போய் தோட்டுக்காரி நீராடும் சுனையில் நீர் மொண்டுகொண்டு வா ‘ ‘ என்றான்.

ஒட்டன் சுனையில் நீர் மொண்டான் . அதைக்கண்ட அழகி தோட்டுக்காரி வெகுண்டு ‘ ‘கயவனே யாரிடம் கேட்டுக்கொண்டு இங்கே வந்தாய் ? பெண்கள் குளிக்கும் படித்துறையிலா நீ மொள்ளுவாய் ? ‘ ‘ என்று கேட்டாள்.

ஒட்டன் ‘என் தலைவன் குமரப்பனுக்கு நீர்வேண்டி வந்தேன் ‘ என்றான். தோட்டுக்காரி கோபம் கொண்டு குமரப்பனைப் பழித்துப் பேசினாள். அவள் தோழிகள் ஒட்டன்மீது கற்களை எறிந்தனர். அடிபட்ட ஒட்டன் குமரப்பனிடம் ஓடினான். குமரப்பன் இதோ தோட்டுக்காரியைச் சிறைப்படுத்தக் காரணம் கிடைத்தது என மகிழ்ந்து படையுடன் புறப்பட்டான்.

தோட்டுக்காரியைக் குமரப்பன் நெருங்கினான். சுனைக்கரையில் நின்ற அவள் ‘ ‘பெண்ணால் இறந்த அரசர்கள் பலர் உண்டு. வள்ளியூர் அரசன் பெண்ணால் இறந்த கதை தெரியாதோ, அழிந்து போவாய் ‘ ‘ என்றாள்.

காமமும் அகந்தையும் தலைக்கேறிய குமரப்பன் அதைப்பொருட்படுத்தாமல் தோட்டுக்காரியைத் தூக்கி யானை மேல் வைத்தான். தன் கோட்டைக்குள் நுழைந்தான். அவளை மாடப்புரைக்குள் வைத்துப் பூட்டினான்.

மகனின் திறமையைக் கண்ட தந்தை மகிழ்ந்தான். காவலை அதிகரித்து கோட்டையைப் பலப்படுத்தினான்.

குமரப்பன் தன் மகளைச் சிறைப்பிடித்த செய்தி கேட்ட கோனான்டி ராசன் மனம் பதைத்தான். பெரும்படையுடன் கொந்தளப்பனின் கோட்டைக்கு வந்தான். இருவரின் படைகளும் மோதின. பெரும்போர் நடந்தது. வீரர்கள் பலர் மடிந்தனர். குமரப்பன் மட்டும் வடுப்படாமல் நின்றான். குமரப்பனின் கோட்டை அழிந்தது. உறவினர்களும் வீரர்களும் இறந்தனர்.

தோட்டுக்காரி தன்னைச் சார்ந்தவர்கள் எல்லோரும் இறந்துவிட்டதை அறிந்தாள். இனிமேல் உயிரோடு இருப்பது பாவம் என உணர்ந்தாள். ஆதிசிவனையும் ஸ்ரீரங்கனையும் வேண்டினாள். நெருப்புக்குழி உடனே பிறந்தது. அதில் பாய்ந்தாள். அப்போது அங்கே வந்த குமரப்பன் இனி தானும் வாழ்வதில் அர்த்தமில்லை என்று முடிவு செய்தான். தோட்டுக்காரி பாய்ந்த நெருப்புக்குழிக்குள் பாய்ந்து உயிரை விட்டான். இருவரும் சேர்ந்து எரிந்தார்கள்.

குமலமானத்துக்காக உயிர் விட்ட தோட்டுக்காரி கைலாசநாதன் அருளால் தெய்வமாகி கோவில்கொண்டாள். அவள் குலங்கள் அவளுக்கு கொடை கொடுத்து பூசை செய்தார்கள். இன்று அவள் ஆலயம் முட்டப்பதியில் உள்ளது.

1. தென்குமரியின் கதை 2 . தெய்வங்கள் முளைக்கும் நிலம் [தமிழினி பதிப்பகம்] கவிமணியின் படைப்புகள் முழுத்தொகுப்பு [செண்பகா ஒபதிப்பகம்]

Series Navigation

author

முனைவர் அ.கா.பெருமாள்

முனைவர் அ.கா.பெருமாள்

Similar Posts