ரவி சுப்பிரமணியன் கவிதைகள்

This entry is part [part not set] of 53 in the series 20040827_Issue

சுகுமாரன்


கவிதையை முன்னிருத்தி நாம் கட்டமைக்கும் விமரிசனங்களும் கவிதைக்குள் மறைந்திருக்கும் அனுபவங்களும் பெரும்பான்மையான தருணங்களில் ஒன்றுக்கொன்று முரண்பட்டவையாகவே தோன்றுகின்றன. மிக அரிதான சந்தர்ப்பங்களில் மட்டுமே விமரிசனம் சுட்டிக்காட்டும் புள்ளியும் கவிதையின் மையமும் வேறுபாடில்லாமல் ஒன்றிணைந்து வெளிப்படுகின்றன. விஸ்தாரமான இசைக் கச்சேரியில் கலைஞனின் கொடையும் நுகர்பவனின் ஏற்பும் ஒன்றாகிற கணங்கள் தொடர்ந்து நிகழ்கின்றன. ஆனால், கவிதையில் இந்த இணைவு அரிது. காரணம் கவிதை மொழி சார்ந்தது. மொழி சார்ந்தது என்ற அடிப்படையில் மனம், சிந்தனை,கருத்துருவங்கள்,இடம், காலம்,வரலாறு,மரபுகள், தொன்மங்கள் என்று விரிந்து செல்லும் இயல்பு கொண்டது. கவிதையின் இந்த உயிரியல்புதான் விமர்சனத்தின் பிடிக்குள் சிக்காமல் சுதந்திரமான இருப்பை நிறுவுகிறது. கவிதை உள்ளடக்கியிருப்பதும் விமரிசனம் துப்பறிந்து வெளிப்படுத்துவதும் வெவ்வேறாகப் பொருள்படுவதன் சூட்சுமமும் இதுவென்று கருதுகிறேன்.

‘சொல்லாமல் இருப்பது போலவே

தோன்றுகிறது

சொல்லிய பின்பும் ‘

என்ற ரவி சுப்பிரமணியனின் கவிதை வரிகள் மேற்சொன்ன கருத்துக்களை மீண்டும் யோசிக்க இடமளித்தது என்ற முன்னுரையுடன் தொடர்ந்து செல்ல விரும்புகிறேன்.

ரவி சுப்பிரமணியன் ‘ஒப்பனை முகங்கள் ‘ தொகுப்பு மூலம் தொண்ணூறாம் ஆண்டு நவீன தமிழ்க்கவிதையில் தனது வருகையைப் புலப்படுத்தியவர். இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள் ஏறத்தாழ புத்தக வெளியீட்டுக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டவையாக இருக்கவேண்டும். அப்போது நடைமுறையிலிருந்த கவிதை வடிவங்களையும் கவிதையாக்க முறைகளையும் விசுவாசமாகப் பின்பற்ற முயன்றிருப்பதன் சான்றுகளைத் தொகுப்பில் காணமுடிகிறது. கொஞ்சம் கலாப்ரியா காட்சிகள்- உதாரணம்: நாக்குகள் (ஒப்பனை முகங்கள் பக்-48), கொஞ்சம் கல்யாண்ஜி நெகிழ்வு- உதாரணம்: சுதந்திரம் (பக்-40), கொஞ்சம் விக்ரமாத்தியன் விடம்பனம்- உதாரணம்: மனிதாபிமானம் (பக்-21), கொஞ்சம் ஜனரஞ்சக சாதுரியம்- உதாரணம்: ஹைக்குகள் (பக் 57-60) என வேறுவேறு பாதிப்புகளுக்கு ரவி சுப்பிரமணியன் ஆரம்பகட்டத்தில் ஆளாகியிருக்கிறார்.

இந்த பாதிப்புகளை மீறி ரவி சுப்பிரமணியன் தனது கவிதைமொழியின் அடிப்படைக்கூறாகக் கண்டடைந்த ஒன்றையும் முதற்கட்ட முயற்சிகளில் காணமுடியும்.கவிதையை உரையாடலாக நிகழ்த்த இவரால் சிரமமின்றி முடிகிறது. ‘கட்டில் வாழ்க்கை ‘, ‘பாஞ்சாலி ‘, ‘என் காலம் சரியில்லை ‘ போன்ற செறிவு கூடாத கவிதைகளில் இடம்பெறும் உரையாடல்தன்மையின் தீவிர வடிவங்களே இவரது கவிதை என்று கணிப்பது தவறாக இராது என்று நம்புகிறேன். தன்மை-முன்னிலை இடங்களில் உச்ச,மந்தர தொனிகளில் நிகழும் உரையாடல் படர்க்கை இடங்களில் தார ஸ்தாயியில் நிகழ்கிறது. ‘காலாதீத இடைவெளியில்… ‘ என்ற தொகுப்பிலுள்ள கவிதைகளை இந்த அவதானிப்பின் சான்றாகக் காணவிரும்புகிறேன். உரையாடலின் இன்னொரு பக்கத்தை வாசகன் முழுமையாக்கிக் கொள்ள அனுமதிப்பது இந்த பிரத்தியேகத் தன்மைதான். ‘காத்திருப்பு ‘ தொகுப்பிலுள்ள ‘நினைவுக்குமிழிகள் ‘ கவிதையை இவ்வகையில் பொருள்கொள்ளும்போது பன்முகத்தன்மை பெறுகிறது.

கவிதையில் இரண்டு மொழிகள் இயங்குவதாக ஓர் அனுமானம் எனக்கிருக்கிறது. ஒன்று: கவிதையின் பொதுமொழி (Common Idiom). மற்றது: கவிஞனின் தனிமொழி (Personal Idiom).

காலங்காலமாக பெயர்பெற்றவர்களும் பெயரற்றவர்களுமான கவி ஆளுமைகள் இயங்கி உருவானது இந்தப் பொதுமொழி. புதிய கவிஞன் இந்த மொழியின் நிகழ்காலக் கண்ணி.அவன் விரும்பினாலும் விலகினாலும் இந்தப் பொதுமொழியின் தொடர்ச்சியாகிறான். நதி என்று இன்றைய கவிஞன் எழுதுகையில் அது காலத்தின் ஓட்டம் என்றும் பறவை என்று எழுதுகையில் அது சுதந்திரம் என்றும் பொருள்படுவது இந்தப் பொதுமொழியால்தான். இன்றைய ரவி சுப்பிரமணியனின் கவிதையை அன்றைய மருதன் இளநாகனின் வரிகளோடு ஒப்பு நோக்க ஞானக்கூத்தனுக்கு இடமளிப்பதும் இந்தப் பொதுமொழிதான்.

இந்தப் பொதுமொழியை உள்வாங்கிக் கொண்டு செயல்படும்போதே ஒரு கவிஞன் தனது தனிமொழியையும் உருவாக்கிக்கொள்ள நிர்ப்பந்திக்கப் படுகிறான். தனது அனுபவம் சார்ந்து அவன் உருவாக்கும் இந்த கவிமொழியே வாசக கவனத்தில் கவிஞனின் அடையாளமாகிறது. ரவி சுப்பிரமணியனின் முதல் தொகுப்பு இந்த அம்சத்தில் பலவீனமானதாகப் படுகிறது. வாசக நோக்கில் ஒரு புதிய கவிஞனை அறிமுகம் கொள்வதற்குப் பதில் முன் நடந்தவர்களின் உருவத்தைச் சுமந்து நகர்கிற பாரந்தூக்கியையே காணமுடிகிறது. பாதிப்புகள் தவிர்க்கவியலாததுதாம்.ஆனால் அவற்றிலிருந்து விடுபடுவதன் மூலமே கவிஞன் தன்னை நிறுவிக்கொள்ள முடிகிறது.

ரவி சுப்பிரமணியன் வளர்ந்து ரவி சுப்ரமணியன் ஆவதற்குள் தனது கவிமொழியை இனம்பிரித்துக் கண்டடைந்திருக்கிறார் என்பது மகிழ்ச்சியானதாக புலப்படுகிறது. ‘பழைய வீட்டில் பரண் இருக்கும் ‘, ஒரு மரமும் மூன்று தலைமுறைகளும் ‘,நினைவுக்குமிழிகள் ‘ போன்ற ‘காத்திருப்பு ‘ தொகுப்பின் கவிதைகளும் ‘பால்யத்தில் சேர்ந்தான் ப்ரந்தாமன்… ‘ அணிற்பிள்ளை பழம் தின்னும் அழகே… ‘ ‘ரயில் நிலைய இருக்கைகள் ‘ போன்ற ‘காலாதீத இடைவெளியில்… ‘ தொகுப்பின் கவிதைகளும் ரவி சுப்ரமணிய அசல்கள்.

சமகால வாழ்க்கையின் ஒழுங்கும் கோளாறுகளும், ஒழுங்குக்கான போற்றுதலும் கோளாறுக்கான காரணம் தேடலும் இன்றைய கவிதையின் மையம். விரிந்த அர்த்தத்தில் எல்லாக் காலத்திலும் எல்லாக் கவிதையின் மையமும் இதுதான். நிகழ்காலத்திலும் நிகழ்களத்திலுமே கவிதை தொடர்ந்து இயங்குகிறது. இந்த நுட்பத்தை ரவி சுப்ரமணியன் வசப்படுத்திக் கொண்டதன் சான்றுகளாக குறிப்பிடத்தகுந்த சில கவிதைகளச் சொல்லலாம். முன்பே எடுத்துக்காட்டிய கவிதைகளுடன் ‘ ரயில் ஓடிக்கொண்டிருந்த தடத்தில்… ‘ ‘திரையரங்க உள் இருட்டில்… ‘ ‘புத்தர் சிரித்தார் ‘ ஆகிய கவிதைகளையும் சேர்க்க வேண்டும். இதில் ‘புத்தர் சிரித்தார் ‘ கவிதையை கவிஞர் குலைத்துவிட்டார் என்று விமர்சிப்பது நியாயமாகவே இருக்கும். தலைப்பையோ, இறுதிவரிகளையோ தவிர்த்திருக்கலாம். கூறியது கூறல் கவிதையை உதாசீனப்படுத்துகிறது.

ரவி சுப்ரமணியனின் பிரதான கவிதையுணர்வு நெகிழ்ச்சி. இருப்பின் கழிவிரக்கம்,காதலின் துக்கம், இயற்கைமீதான பரிவு, சகமனிதர்பால் கரிசனம் – என மனதின் வெவ்வெறு நிலைகளை நெகிழ்ச்சியுடனேயே இவரால் சித்தரிக்க முடிகிறது.இந்த பிரத்தியேகத்தன்மையால் வாசகன் அனுபவித்து கவிதைக்குள் தன்னைப் பொருத்திக்கொள்ளும் மெளனவெளிகளை உருவாக்கிக் கொள்வது எளிதாகிறது. அதே சமயம், இந்த நெகிழ்வை நம்பி அடுக்கப்படும் ‘அமிலச் சொட்டாய் இறங்குது வார்த்தைகள் ‘ போன்ற பாசாங்குகள் கேலிக்குரியனவுமாகின்றன.

அனுபவங்களின் நேர்க்காட்சிகள் ரவி சுப்ரமணியன் கவிதைகள். அவற்றின் மீதான விசாரணைகளையோ அவை பற்றிய விமரிசனங்களையோ கவிதைகள் பெரும்பாலும் முன்வைப்பதில்லை. அநேக உயிர்களைப் பறித்த மகாமக நீராடல் விபத்து பச்சாத்தாபக் கண்ணீராக உறைந்து நிற்கிறது. இவரது கவிதையின் பொது இயல்பு இது.

ரவி சுப்ரமணியனின் கவிதைகளை முன்னிருத்தி நடத்திய வாசிப்பில் வேறு ஒரு கருத்து நிலையை அடைய முடிந்தது. ‘நினைவுக்குமிழிகள் ‘ போன்ற புனைகதை சாத்தியமுள்ள ஆக்கங்களை கவிதையாகக் கொள்வது சாத்தியமா ? ஓர் அனுபவம் என்பது உண்மை. புனைகதை, கவிதை இரண்டுக்கும் இது பொருந்தும். எனில், கவிதையைக் கவிதையாக்குவதும்,கதையைக் கதையாக்குவதும் எது ? கவிதை ஓர் அனுபவ உண்மையைப் படிமமாக்குகிறது. விளக்கங்களையும் விவரணங்களையும் மறைமுகமாக்கி அனுபவத்தைப் படிமமாக்குகிறது. புனைகதை அனுபவத்தை வரலாக்குகிறது. அனுபவத்தின் நிகழிடம்,காலம்,பாத்திரங்கள் என்று சகலத்தையும் விவரிக்கிறது. இந்த இரு வகையும் இணைந்த கவிதைகளும் அபூர்வமாக நிகழ்கின்றன – நினைவுக் குமிழிகளும் தாமஸ் கவிதையும் போல.

சுகுமாரன்

24 ஆகஸ்டு 2004

n_sukumaran@rediffmail.com

Series Navigation

author

சுகுமாரன்

சுகுமாரன்

Similar Posts

2 Comments

Comments are closed.