சமீபத்தில் வாசித்த நூல்கள் 5 – மூவாலூர் ராமாமிர்தத்தம்மாள் , ராஜமார்த்தாண்டன் , எர்னெஸ்ட் ஹெமிங்வே (தமிழ் எம் எஸ்) , சுஜாதா

This entry is part [part not set] of 48 in the series 20040610_Issue

ஜெயமோகன்


தாசிகள் மோச வலை அல்லது மதிபெற்ற மைனர்

மூவாலூர் ராமமிர்தத்தம்மாள்

மறுபதிப்பு சிவசக்தி பதிப்பகம் நாகப்பட்டினம்

கும்பகோணத்தில் தாசி குலத்தில் பிறந்த மூவாலூர் ராமமிர்தத்தம்மாள் அக்குலம் சார்ந்த வாழ்வை வெறுத்து வெளியேறி சுயமரியாதை இயக்கத்தின் முக்கியமான பிரச்சாரகராக ஆனார் . தாசிப்பழக்கத்தை ஒழிப்பதற்காகவும் பெண்கல்விக்காகவும் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தார். தமிழ் பண்பாட்டு வரலாற்றில் அவருக்கு முக்கியமான இடம் உண்டு. 1935ல் வெளிவந்த இந்நாவல் இலக்கியம் சார்ந்த இயல்புகள் எதுவும் இல்லாத தட்டையான பிரச்சார ஆக்கம். எளிமையான வாசகனுக்குரிய சாதாரணமான கதையோட்டம் கூட இதில் இல்லை. ராமமிர்தத்தம்மையாரின் மனதில் இருந்த முன்மாதிரி வடிவம் அன்று பரவலாக வாசிக்கப்பட்ட அக்கப்போர்த் [polemics] தன்மை கொண்ட நாவல்களே என்ற எண்ணம் ஏற்படுகிறது. ஆகவே பழைமையான நடையையும் தாண்டி இந்நாவலை வாசிப்பது மிகவும் சலிப்பூட்டும் அனுபவமாகவே உள்ளது.

இந்நாவலில் அனைவருமே ஒன்றுபோல பிரசங்கக் குரலில் பேசுகிறார்கள். அனைத்துக் கதாபாத்திரங்களுமே ஒரு குறிப்பிட்டக் கருத்துநிலையின் அடையாளங்களாக ஒற்றைப்படையாக காட்டப்பட்டுள்ளனர். கதை மாந்தரின் பெயர்களே குணநலன்களைக்காட்டும்படியாக உள்ளன– போகசிந்தாமணி , ஞானசுந்தரி , குணபூஷணி என்றெல்லாம். மைனர்களும் வீணர்களும் நல்ல கதாபாத்திரங்களின் சுயமரியாதைப் பிரசங்கத்தைக் கேட்டத்துமே திருந்தி சுயமரியாதை இயக்கத்தில் இணைந்து விடுகிறார்கள். கதை என்பது ஒரு தீய கதாபாத்திரத்தைப் பற்றி சொல்லி அவனை ஒரு சுயமரியாதைப் பிரச்சாரகரின் கைகள் நோக்கி வசமாகத் தள்ளிக் கொண்டு செல்வதாகவே உள்ளது. குணபூஷணியை தற்செயலாகக் கண்ட மைனர் அவளாது நீண்ட பேச்சைக் கேட்டதுமே மனம் திருந்தி அவளை சகோதரியாக எண்ணத்தலைப்பட்டு விடுகிறான். கதையில் நம்பவே முடியாத ‘ வடுவூர் துரைசாமி அய்யங்கார் பாணி ‘ மாறுவேடங்கள் , நாடகம்போட்டுத்திருத்துதல் ஆகியவையும் மர்மங்களும் நினைத்தபோது வருகின்றன. உதாரணமாக ஞானசுந்தரி ஆண்வேடமிட்டு தன் கணவனிடமும் பிற தாசிகளிடமும் ஜமீன்தாராக நடிக்கிறாள்.

ஆசிரியையின் நோக்கில்கூட இன்றைய வாசகர்கள் பல சிக்கல்களைக் காணலாம் . உதாரணமாக இசையை கேளிக்கைக்கும் ஒழுக்கமின்மைக்கும் கொண்டுசெல்லும் தேவையற்ற ஓர் ஆடம்பரமாகவே அவர் எண்ணுகிறார். இசைக்கச்சேரிகள் வைப்பது, கேட்பது ஆகியவற்றை இழிவானதாக கூறுகிறார். பெண்கள் நல்ல உடைகள் அணிவதையும் பொது இடங்களில் நின்று பேசிச் சிரிப்பதையும் தவறானதாகவே என்ணுகிறார். இந்நாவலில் சோமசேகரன் காந்தாவைத்தேடிச்சென்று ஒரு சாதாரண குடும்பப்பெண்ணை தாசி என்று எண்ணி விடுகிறான். அவள் கணவனிடம் இது தாசி வீடுதானே என்று கேட்டுவிடுகிறான். அதற்கு அப்பெண் நகைகள் அணிந்து வீட்டுமுற்றத்தில் நின்று பேசிச் சிரித்தமையே காரணம் என்று ஆசிரியை சொல்லி அவள் கணவன் வாயால் நீண்ட அறிவுரைகள் சொல்லவைக்கிறார். ‘மாமா ‘ வேடமிட்ட இலட்சியவாதியான நடராஜன் தாசிகளை திருத்தும்பொருட்டு அவர்களுடன் தங்கும்போது அவர்களிடம் தாராளமாகவே உறவு கொள்கிறான். அது தவறாக சொல்லப்படுவதில்லை .

ஆயினும் இந்நாவல் ஒரு சமூக ஆவணமாக இன்றும் மிக முக்கியமானது. இதில் நாம் ஏறத்தாழ முற்றாக மறந்துபோன ஒரு காலகட்டத்தின் எளிய சித்திரம் உள்ளது. தாசிகள் , அவர்களின் தாய்மார்கள், டாபர் மாமாக்கள், மைனர்கள், கிரிமினல் வக்கீல்கள் அடங்கிய ஓர் உலகம். ‘தில்லானா மோகனாம்பாள் ‘ [கொத்தமங்கலம் சுப்பு] போன்ற நாவல்களில் நாம் ஓரளவு கலைப்பூர்வமாகவும் விரிவாகவும் காணும் உலகம்தான் அது. அந்தக் கோணத்தின் மறுபக்கம் இந்நாவலில் உள்ளது. தாசிவாழ்க்கையில் உள்ள இழிவுகள் அனைத்தையுமே தார்மீகமான கோபத்துடன் ஆசிரியை சொல்லிச்செல்கிறார். அவ்விழிவை உருவாக்கி நிலைநிறுத்தும் சமூக நம்பிக்கைகள், மதநம்பிக்கைகள், அதை வைத்து சுரண்டிப் பிழைக்கும் தனவந்தர் மற்றும் புரோகிதர் சோதிடர்க் கும்பல், அதன் பொருளியல் உள்ளடக்கங்கள் என ஒர் அர்ப்பணிப்புள்ள சமூக சேவகியின் சீற்றம்கொண்ட குரலை நாவல் நெடுகிலும் கேட்க முடிகிறது.

இரண்டாவதாக இந்நாவலின் சிறப்பாகச் சொல்லவேண்டியது இதில் தாசிகளின் உலகின் தந்திரங்கள் சொல்லப்பட்டிருக்கும் விதத்தில் நுட்பமான உளவியல் அவதானிப்பு உள்ளாது என்பதுதான். உதாரணமாக காந்தா, கானவதி இருவரும் பயணம் செய்யும் ரயில்பெட்டியில் அவர்கள் தளுக்காக பேசி அருகே வந்தும் ஊடிவிலகியும் பாவனைப்பேச்சு பேசியும் கேலிசெய்தும் மைனரை கவர்ந்து அலைக்கழித்து சுழற்றி அடிமைப்படுத்தும் காட்சி நுட்பமானது. குணபூஷணி செய்யும் நீண்ட சொற்பொழிவில்கூட தாசிகள் செய்யும் தந்திரங்கள் விவரிக்கப்படுகையில் ஆண் பெண் உறவின் ஆழங்களும் ஜாலங்களும் வெளிவருகின்றன. உதாரணமாக பெரியமனிதர்களை நக்கல்செய்து பேசி இழிவு செய்தும், குற்றேவல்கள் செய்யவைத்தும் அவர்களுடைய உள்ளார்ந்ந்த மசோக்கிய இயல்பைத்தூண்டி விசித்திரமான இன்பங்களை அளிக்கிறார்கள். தங்கள் வீடுகளில் அடிமைமனைவிகளைக் கண்டு பழகிய அவர்களுக்கு இது பிரம்மானந்தமாக இருக்கிறது. பொதுவாகவே ஏமாற்றப்படுவதற்குரிய மனநிலைகளுக்கு அவர்களை தாசிகள் தள்ளுகிறார்கள், ஏமாற்றப்படுவதையே அவர்கள் இன்பமாக எண்ணும்படிச்செய்கிறார்கள். வீட்டில் மனைவி கற்புடன் இருப்பது குறித்து இவ்வாசாமிகளுக்கு எவ்வித ஐயமும் இல்லை. ஆகவே அதில் ஆர்வப்பரபரப்பும் இல்லை. தாசி கற்புடன் தன்னையே நினைத்து உருகி வாழ்வதாகக் கற்பனைசெய்ய விழைகிறார்கள். அதை அவர்கள் உள்மனம் நம்புவதில்லை. ஆகவே மனப்போராட்டம், அலைக்கழிப்பு. இந்த மன அலைகளே அவ்வுறவின் முக்கியக் கவர்ச்சியாக அமைந்து அவர்களை மூழ்கடிக்கின்றன. இத்தகைய நுட்பங்கள் இன்றும் ஒருவாசகனுக்கு மிக முக்கியமானவையே. உண்மையில் இன்று இந்நாவலின் முக்கியத்துவம் இந்த ஆழ்தள உளவியல் அவதானிப்பு மூலம் உருவாவதேயாகும்.

மூலநாவலின் தலைப்பு இப்பதிப்பாளரால் மதிபெற்ற மைனர் என்று சுருக்கப்பட்டுள்ளது. இது நல்ல வழக்கமல்ல. கூடவே ஒரு நல்ல சமகால ஆய்வு எழுதிச்சேர்க்கப்பட்டிருக்குமென்றால் இன்றைய வாசகனுக்கு உதவியாக இருந்திருக்கும். இதை மறுபிரசுரம் செய்ய முயற்சி எடுத்துக்கொண்ட நாவலாசிரியர் சோலை சுந்தரப்பெருமாள் பாராட்டுக்கு உரியவர்

****

தமிழ்ப் புதுக்கவிதை வரலாறு [ இலக்கிய வரலாறு]

ராஜமார்த்தாண்டன்

தமிழினி

தமிழ் புதுக்கவிதையின் வரலாறு குறித்துப் பேசும் நூல்களில் முக்கியமாக இதுகாறும் குறிப்பிடப்பட்டது வல்லிக் கண்ணன் எழுதிய ‘புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் ‘[ இந்நூலுக்காக அவர் சாகித்ய அக்காதமி விருது பெற்றார்] . அக்கினிபுத்திரன் [ கனல் மைந்தன்] எழுதிய புதுக்கவிதைவரலாறு மிதமிஞ்சி வானம்பாடி இயக்கப் புகழ்பாடுவதாகையால் பொது வரலாறாகப் பொருட்படுத்தப்படுவதில்லை. சி சு செல்லப்பாவே புதுக்கவிதை குறித்து எழுதியிருக்கிறார் . அது எழுத்து இதழ் சார்பான பார்வை. வல்லிக்கண்ணனின் நூல் சமநிலையுள்ள நுட்பமான பார்வையும் ஏராளமான தகவல்களும் கொண்டது. வல்லிக்கண்ணன் தமிழ்புதுக்கவிதையுடன் சேர்ந்தே வளர்ந்தவர் என்பதனால் அத்தகைய ஒருநூலை அவர் எளிதாக எழுதமுடிந்தது. ஏறத்தாழ ராஜமார்த்தாண்டனும் வல்லிக்கண்ணன் போன்றவர். எழுத்து காலகட்டத்துக்குப் பிறகான புதுக்கவிதை இயக்கத்துடன் சேர்ந்தே முப்பதாண்டுகாலமாக வளார்ந்தவர். கொல்லிப்பாவை இதழில் முக்கியமான கவிதைகளையும் விவாதங்களையும் வெளியிட்டவர். ஏற்கனவே சி மணி , பசுவய்யா , நகுலன் போன்றவர்களைப்பற்றிய விரிவான ஆய்வுக்கட்டுரைகளை அவர் எழுதியுமுள்ளார். ஆகவே இந்நூல் அடிப்படையான தகவல்பலமும் சீரான விமரிசனநோக்கும் கொண்ட முக்கியமான வரலாற்று ஆவணமாக உள்ளது.

ராஜமார்த்தாண்டனின் நோக்கு எழுத்து இதழ் உருவாக்கிய கவிதைவடிவம், பொதுவான கலைநோக்கு ஆகியவற்றை பெரிதும் சார்ந்துள்ளது. அவரது பார்வையில் அதிக முக்கியத்துவம் பெறுபவர்களும் எழுத்து காலகட்ட முன்னோடிகளான ந.பிச்சமூர்த்தி, நகுலன், சி மணி, பிரமிள், பசுவய்யா ஆகியோரே. இது இயல்பானதே. இன்றைய புதுக்கவிதையில் எழுத்து உருவாக்கிய வடிவமும் நோக்கும்தான் மேலோங்கி உள்ளது. ஆனந்தவிகடன் குமுதம் ஆகிய இதழ்களில்கூட எழுத்து உருவாக்கிய வடிவத்தைக் கொண்ட ஆக்கங்களையே நாம் காண்கிறோம். எழுபதுகளில் வானம்பாடி இயக்கம் உருவாக்கிய வடிவமும் நோக்கும் இன்று மிகச்சில கவிஞர்களின் தனிப்பட்ட கைப்பழக்கமாக மட்டுமே எஞ்சியுள்ளன.

1950களில் சி சு செல்லப்பாவால் வெளியிடப்பட்ட எழுத்து இதழ் உருவாக்கிய கவிதைநோக்கின் இயல்புகளாக கீழ்க்கண்ட அம்சங்களைச் சொல்லலாம். 1] கவிதையின் மறைபிரதிக்கு [subtext] முக்கியத்துவம் தந்து வாசகனின் கற்பனையை தூண்டும் விதமாக எழுதுவது 2] கவிதைமொழியை ஆர்ப்பாட்டமில்லாமல், அணிகளோ அலங்காரங்களோ இல்லாமல், முடிந்தவரை எளிமையாக, பேச்சுமொழிக்கு அருகேவரும்விதமாக அமைப்பது 3] கவிதைவடிவில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைவாக சொற்களை பயன்படுத்துவது 4] இசையமைதியைத் தவிர்த்துவிடுவது 5] கவிஞனின் அந்தரங்கமான குரலையே கவிதையில் வெளிப்படுத்துவது. பொதுவான கருத்துக்களையும் குரல்களையும் தவிர்த்துவிடுவது .

இதற்கு மாறான அமைப்பாக உருவானது வானம்பாடி இயக்கம். அப்துல் ரகுமான், சிற்பி, மு மேத்தா, நா காமராசன், மீரா ஆகியோர் இவ்வியக்கத்தின் முக்கிய கவிஞர்களாக உருவாகிவந்தார்கள்.வைரமுத்து இவ்வியக்கத்தின் அடுத்தகட்ட நீட்சியே. இதில் எழுதினாலும் அபி எழுத்து அழகியலைக் கொண்டவர். எழுபதுகளில் அக்கினிபுத்திரன் , ஞானி, சி ஆர் ரவீந்திரன் ஆகியோரால் நடத்தப்பட்ட வானம்பாடி இதழ்மூலம் உருவான நோக்கு இது. இது 1] வெளிப்படையான, நேரடியான, மறைபிரதி ஏதும் இல்லாத குரல் 2] தளர்வான கட்டுப்படில்லாத வடிவம் 3] பொதுவான அரசியல் சமூகக் கருத்துக்கள் மற்றும் அறைகூவல்கள் 3] அணிகள் சொல்விளையாட்டுக்கள் கொண்ட மேடைப்பேச்சு நடை ஆகியவை கொண்டது.

ராஜமார்த்தாண்டன் தமிழ்ப்புதுக்கவிதை வரலாற்றை இருவகையான முரணியக்கமாக சரியாகவே சித்தரித்துள்ளார் என்றே நான் எண்ணுகிறேன். அது முதலில் சத்தற்ற செய்யுளியக்கத்துக்கு எதிராகவும் பிறகு வான்ம்பாடிகளின் உரத்த குரல்களுக்கு எதிராகவும் செயல்பட்டு அதன் விளைவாகவே தன் இயல்புகளை அடைந்தது. அதை நுட்பமாகப் பகுத்துப் பார்த்தால் இப்படிச் சொல்லிவிடலாம் — மொழியை உதாசீனமாகவும் சாரமற்றும் பயன்படுத்துவதற்கு எதிரான போரே தமிழின் புதுக்கவிதை இயக்கமாகும்.

அதேசமயம் ராஜமார்த்தாண்டன் இந்நூலில் வானம்பாடி இயக்கத்தை சற்று கடுமையாகவே விமரிசனம் செய்துள்ளார் என்பதையும் மறுக்க இயலாது. இன்று புதுக்கவிதைவடிவம் துணுக்கு வடிவில் சீரழிய அவர்களே காரணம் என்று அவர் எண்ணுகிறார். வானம்பாடிகள் வெறுமே அரசியல் கோஷங்களையும் சொல்லலங்காரங்களையும் மட்டுமே எழுதினர் என்கிறார்.

வானம்பாடிகளின் முன்னோடி கவிதை வடிவம் கலீல் கிப்ரான், ரூமி, நெரூதா ஆகியோரின் கவிதைகள் . அமூலக் கவிதைகள் அறிக்கைத்தொனியும் வெளிப்படையான வேகமும் கொண்ட ஆக்கங்களே. அதுவும் கவிதையின் வடிவ இயல்புகளில் ஒன்றே. அத்தகைய கவிதைகள் உலகம் முழுக்க எழுதப்பட்டும் வருகின்றன. அது எழுத்து உருவாக்கிய ‘நவீனத்துவ ‘ Modernism] வடிவுக்கு எதிரானது . ராஜமார்த்தாண்டன் எளிதாக அதை திறனற்ற வடிவம் என்றும் அதை வானம்பாடிகள் உருவாக்கினர் என்றும் சொல்லிவிடுகிறார். அவர் அவ்வடிவை வானம்பாடிகள் எந்த அளவுக்கு ஆத்மார்த்தமாகவும் நேர்த்தியாகவும் கையாண்டனர் என்பதை அளவையாகக் கொண்டிருக்கவேண்டும்.

வானம்பாடி இயக்கம் சில சாதகமான விளைவுகளுக்கும் காரணமாக அமைந்தது என்பதே என் எண்ணமாகும்.1] அது புதுக்கவிதை வடிவை எளிமைப்படுத்தி பரவலாகக் கொண்டு சென்றது. தமிழ்ச்சமூகத்தின் அனைத்து தரப்பினரும் புதுக்கவிதையை தங்கள் ஊடகமாகக் கொள்ள வழிவகுத்தது .அதன்மூலமே பலவகையான மக்கள்தரப்பிலிருந்து கவிதைகள் உருவாயின. அவற்றில் பெரும்பாலானவை வெற்று வெளிப்பாடுகளாக இருந்தாலும் பல அசல் கவிதைக்குரல்களும் உருவாகி வந்தன. 2] பரவலாக ஆனதன் மூலம் புதுக்கவிதை சார்ந்த நுண்ணுணர்வை வானம்பாடி இயக்கம் பொதுமக்களிடையே உருவாக்கியது. எழுத்துவகை புதுக்கவிதை இன்று பரவலாக வாசிக்கப்படுகிறதென்றால்கூட அதற்குக் காரணம் இந்த நுண்ணுணர்வுதான். இன்று திரைப்படப் பாடல்களில்கூட புதுக்கவிதையின் நுண்ணுணர்வு இடம் பெற்றுள்ளதென்றால் காரணம் வானம்பாடி இயக்கமே. [உதா; காற்றே என் வாசல் வந்தாய் / மெதுவாகக் கதவு திறந்தாய்/ காற்றே உன் பேரைக்கேட்டேன் காதல் என்றாய் ] இந்தப் பங்களிப்புகளை கருத்தில் கொண்டபிறகே விமரிசனங்கள் அமையவேண்டும்.

இன்று நாம் புதுக்கவிதையின் சாதனைகளையும் சரிவுகளையும் தொகுத்துப்பார்க்கவேண்டிய காலத்தில் நிற்கிறோம். அதை பலகோணங்களிலான விவாதம் மூலமே நிகழ்த்த முடியும். இத்தகைய பலவகையான அவதானிப்புகளுக்கு உரிய முக்கியமான வரலாற்று ஆவணம் இந்த நூல். இந்நூலில் பிற்காலக் கவிஞர்களைப் பற்றிய மதிப்பீடுகள் சற்று சுருக்கமாக செய்யப்பட்டுள்ளன. விவாதம் அவற்றை வளர்க்கக் கூடும்.

****

கிழவனும் கடலும் [மொழிபெயர்ப்பு நாவல்]

தமிழில் எம் எஸ்

காலச்சுவடு பதிப்பகம்

எர்னஸ்ட் ஹெமிங்வேயின் உலகப்புகழ்பெற்ற சிறிய நாவலின் இரண்டாவது தமிழாக்கம் இது. ச து சு யோகியாரின் மொழிபெயர்ப்பு அக்காலத்தில் பாராட்டப்பட்டது. அதில் பல வரிகள் விடுபட்டுள்ளான என்று கண்டு நவீன மொழியில் இது மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. எம் எஸ் வரிக்கு வரியும் , சரளமாகவும் மொழியாக்கம் செய்துள்ளார். ஆகவே சரளமாக படிக்க முடிகிறது.

இந்நாவல் முற்றிலும் ஓர் ஐரோப்பிய மதின் படைப்பு. ஐரோப்பிய மனதுக்கு உகப்பது. இயற்கையை ‘வெல்லும் ‘ மனிதனை அவர்கள் மீண்டும் மீண்டும் எழுதுகிறார்கள். இந்நாவலைப்பற்றி வைக்கம் முகமது பஷீர் சொன்னதாக எம் டி வாசுதேவன் நாயர் ஓரிடத்திலே எழுதினார் . ‘ அது ஒரு சோட்டா நாவல். கடல் வெறும் தண்ணீராக உள்ளது ‘ ஒருவேளை இந்நாவல் குறித்து முன்வைக்கப்பட்ட மிகப்பெரிய விமரிசனம் இதுவாக இருக்கலாம். கடல் என்ற விரிவை, ஓய்வின்மையை, ஒளியிருள் வெளியை நாம் இந்நாவலில் காணாமுடியாது. சாண்டியாகோ காண்பது வெறும் கடலை. மீனவன் அப்படிக் காணாலாம். நாவலாசிரியன் காணும் மீனவனுக்கு அப்படி மட்டும் காணமுடியாது.

இந்நாவல் அமெரிக்க இலக்கிய விமரிசகர்களால் உலக இலக்கியமாக தூக்கப்பட்டபோது இங்கே எழுந்த எதிர்வினைகளை இப்போது படித்தால் சிரிப்பு வருகிறது. இந்நாவலை போலிசெய்யும் ஆக்கங்கள் எல்லா மொழியிலும் எழுதப்பட்டன.நம் அறிவுஜீவிகள் எந்த அளவுக்கு வெள்ளைத்தோலுக்கு பக்தியுடன் இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள் என்பதற்கான ஆதாரம் இது. அக்காலகட்டத்திலேயே பஷீர் தன் தனித்துவம் கொண்ட குரலை முன்வைத்தார். இன்று சாதாரண வாசகன் கூட ஹெமிங்வேயை பெரிதாக எண்ண மாட்டான். நம் இலக்கியம் விமரிசகர்கள் மற்றும் வாசகர்களை மீறி பஷீர் போன்ற மூலப்படைப்பாளிகளை நம்பியே தன் தனித்தன்மையை நிலைநிறுத்தி வந்துள்ளது.

****

தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

சுஜாதா

உயிர்மை பதிப்பகம்

சுஜாதாவுக்கு தமிழ்ச் சிறுகதையில் முக்கியமான இடம் உண்டு என்று 1990களில் நான் சொன்னபோது தனிப்பேச்சில் அதை ஒப்புக் கொண்ட பலர் [உதா; சுந்தர ராமசாமி , எம் யுவன்]எங்குமே அதை பதிவுசெய்தது இல்லை. நான் அதை எழுதி விவாதத்துக்கு உள்ளாகியிருக்கிறேன். இப்போது அத்தகைய விவாதத்துக்கு இடமில்லாமலேயே அவ்விஷயம் பரவலாக ஏற்கப்பட்டுள்ளதை நேர்ப்பேச்சுக்களில் காண்கிறேன். சுஜாதாவின் நடை சிறுகதைக்கு உரியது. சுருக்கம் , நேர்கோட்டில் வேகமாகத் தாவிச்செல்லும் இயல்பு ஆகியவை காரணம். இவ்வியல்புகள் நாவலுக்கு தடையாக அமைவதை ரத்தம் ஒரே நிறம் முதலிய ஆக்கங்களில் காணலாம். சிறுகதையின் செவ்வியல் [ ஓ ஹென்றி பாணி] வடிவில் நம்பிக்கை கொண்டவர் சுஜாதா. சம்பவங்களை நம்பியே கதையை அமைத்தல், குறைவான கதைமாந்தரும் சிறிய கால அளவும், மையமுடிச்சு இறுதித் திருப்பத்தால் அவிழ்க்கப்படுதல் ஆகிய இயல்புகள் கொண்டது அது. அவரது கதைகள் வலுவான வடிவ உணர்வுடனும் நேர்த்தியான மொழியுடனும் அமைக்கப்பட்டவை.

சுஜாதாவின் கதைகளின் பலவீனம் இரண்டு . ஒன்று பெரும்பாலான கதைகளில் அவரது கதைமுடிவுகள் இதழியல் எழுத்துக்கு உரிய எளிய உத்திவிளையாட்டாகவோ அல்லது பொதுவான நியாயம் சார்ந்த முடிவுகூறலாகவோ உள்ளன. முதல்வகைக்கு உதாரணமாக ஒரே ஒரு மாலை, வழி தெரியவில்லை,சென்ற வாரம் முதலிய கதைகளைச் சொல்லலாம். இரண்டாம் வகைக்கு அம்மா மண்டபம் ,கள்ளுண்ணாமை ,கால்கள் , கரைகண்ட ராமன் முதலிய கதைகளை. இக்கதைகள் வாசக ஆர்வத்தை தக்கவைத்துக் கொள்ளும் வேகம் மற்றும் மேல்தள நுட்பம் கொண்டவை. சுஜாதா ஒரு கைதேர்ந்த சித்தரிப்பாளார் என்பதிலிருந்து உருவாகும் இயல்புகள் இவை. ஒரு காட்சியை அல்லது நிகழ்வைச் சொல்ல அவர் தேவையற்ற எதையுமே சொல்வதில்லை. ஆகவே வேகம் . சித்தரிப்பில் எப்போதுமே நுட்பமான அவதானிப்புகள் உள்ளன. ஆனால் இத்தகைய கதைகள் வாசிப்புமுடிவில் சட்டென்று இல்லாமலாகிவிடுகின்றன.

இங்கே முக்கியமாக ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். சுஜாதாவின் கதைகள் உணர்ச்சிகரத்தன்மை இல்லாதவை. நெகிழ்வை நோக்கிச் செல்பவையோ, மன எழுச்சிகளை உருவாக்குபவையோ அல்ல. சுஜாதாவின் தொடக்கம் தமிழில் தி ஜானகிராமன், அசோகமித்திரன் ஆகியோரில் இருந்து. ஆங்கிலத்தில் ஹெமிங்வே முதல் ரே பிராட்பரி வரை பலர். ஜானகிராமனில் இருந்து அவர் பெற்றுக் கொண்டது நுட்பமான தகவல்களை அடுக்கி கதை சொல்லும் முறை. அசோகமித்திரனில் இருந்து கறாரான விலகலை. இருவரில் இருந்தும் அவர் வேறுபடுவது உணர்வுரீதியாக வாழ்க்கையில் ஈடுபடாத அறிவுஜீவியின் அங்கதம் கொண்ட நோக்கு மூலம். ஆகவே அவரது கதைகள் ‘ நெஞ்சைத் தொடுவது ‘ இல்லை — இதை பல வாசகர்கள் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள்.

சுஜாதாவை முக்கியச் சிறுகதைக்காரர் ஆக்குபவை இத்தொகுதியில் உள்ள பலவகையான நல்ல கதைகள்.அவரது கதைகள் நான்குவகை. நம் நினைவுகளை நுட்பமான தகவல்கள் மூலம் தூண்டி நடுத்தர வற்கவாழ்வின் செறிவான சித்திரம் ஒன்றை அளிப்பவை. உதாரணம் : மகன் தந்தைக்கு ,வீடு, சிலவித்தியாசங்கள் ,செல்வம் ,எல்டொராடோ , ரேணுகா. நம் தர்க்கபுத்தியை புனைவாட்டம் மூலம் சற்றே அசைத்து மேலே கற்பனைசெய்ய வைப்பவை. ஒருவகையான விடையின்மையை உணரச்செய்பவை. இதை அவர் அறிவியல்சிறுகதைகளைச் சார்ந்து உருவாக்கிக் கொண்ட எழுத்துமுறை எனலாம். உதாரணம்: பார்வை, ரஞ்சனி ,நீர் ,நிபந்தனை, நிதர்சனம், சாரங்கன். மூன்றாவதாக உற்சாகமான கதைசொல்லல் மூலம் நம்மை புன்னகைக்க வைக்கும் கதைகள். சுஜாதாவின் தலைசிறந்த கதையாக நான் எண்ணும் ‘குதிரை ‘ இவ்வகையை சார்ந்தது. மாமாவிஜயம், சார் இந்த அக்கிரமத்தை போன்ற கதைகளை இவ்வகையில் சேர்க்கலாம். நான்காவது வகை ஒரு வகையான பகீரடலை உருவாக்கும் கதைகள். கரிய நகைச்சுவை கொண்டவை. தார்மீக உணர்வை தொட்டு சீண்டுபவை. இத்தொகுதியில் நகரம், முரண், நிலம் ,நொ ப்ரொப்ளாம், எப்படியும் வாழலாம்,பாரீஸ் தமிழ்ப்பெண் முதலிய கதைகள் இவ்வகை.

இந்த நான்குவகை கதைகளுக்கும் வாசகன் கதைகளுடன் உணர்வுரீதியாக ஒன்றவேண்டிய தேவை இல்லை என்பதைக் காணலாம். சிறுகதைவாசிப்பை ஒருவகை விளையாட்டாக மேற்கொண்டாலே இவை தங்கள் விளைவை நிகழ்த்திவிடுகின்றன. இத்தகைய கதைகள் தமிழுக்கு ஏன் முக்கியமென்றால் தமிழில் பெரும்பாலான பிற எழுத்தாளர்கள் — நான் உள்பட — தீவிரமாக வாசகனை ஈடுபடச்செய்யும் ஆக்கங்களையே எழுதிவருகிறோம் என்பதனால்தான். ஆகவே சுஜாதாவின் ஆக்கங்களை ஒருவகை விளையாட்டுகளாக எடுத்துக் கொண்டு அவ்விளையாட்டு உருவாக்கும் அனுபவங்களை வாசிக்க முயலவேண்டும். மற்ற கதைகளின் அளவுகோல்களைப் போடலாகாது.

சுஜாதாவின் இக்கதைகளை விட மேலாக நான் புதுமைப் பித்தன், லா.ச.ராமாமிருதம், கு அழகிரிசாமி, தி ஜானகிராமன், அசோகமித்திரன் , ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி , கி ராஜநாராயணன் ஆகியோரின் ஆகங்களை முன்வைக்க நான்கு காரணங்களைச் சொல்வேன். 1] சுஜாதா சிறுகதைக்குள் கவித்துவத்தை அடைவதே இல்லை . மேலான சிறுகதை ஒருவகை கவிதை – சுந்தர ராமசாமியின் பல்லக்குதூக்கிகள் போல. 2] சுஜாதா தீவிரமான அறஎழுச்சியை அடைவதில்லை, உருவாக்குவதில்லை. மேலான கதைகள் காலத்தால் பழமைகொள்ளாத அறவேகம் கோண்டவை– அழகிரிசாமியின் ராஜா வந்திருக்கிறார் போல. 3] சுஜாதா கதையில் ஒருபோதும் அவரை விலக்கிக் கொள்வதில்லை. மேலான கதைகள் எழுத்தாளனைவிட பெரியவை. அவனது அறிவையும் மனதையும் மீறி ஆழ்மனம் வெளிப்படுபவை. ஜெயகாந்தனின் அக்கினிப்பிரவேசம் போல. 4] சுஜாதாவிடம் நம் மரபின் நேர் அல்லது எதிர் விளைவுகள் இல்லை. மேலான ஆக்கங்கள் மரபின் நீட்சியாக நின்று மரபை மறு ஆக்கம் செய்கின்றான. கி ராஜநாராயணனின் பேதை போல.

ஆயினும் சமகால சிறுகதை இலக்கியம் சுஜாதா இல்லாமல் முழுமைபெறுவது இல்லை. இந்த முதல் தொகுப்பு அதை உறுதி செய்கிறது. நூலின் அட்டை எனக்கு பிடிக்கவில்லை. நேர்த்தி அற்ற அபத்தமான கோடுகள்.

—-

jeyamoohannn@rediffmail.com

Series Navigation

author

ஜெயமோகன்

ஜெயமோகன்

Similar Posts