ஜெயமோகன்
இதுதான் என்பெயர் [நாவல்]
சக்கரியா
தமிழாக்கம் சுகுமாரன்
அகரம் பதிப்பகம் சென்னை
சக்கரியா தமிழில் பஷீருக்கு அடுத்தபடியாக மதிக்கப்படும் மலையாள எழுத்தாளர். அவரது பெரும்பாலான ஆக்கங்கள் தமிழில் ஏற்கனவே வெளியாகியிருக்கின்றன. இந்த நட்சத்திர மதிப்பு காரணமாக அவரது இந்நூல் மலையாளத்தில் வெளியாகி சில நாட்களுக்குள்ளாகவே தமிழில் வெளியாகியது. அதைவிட ஆச்சரியம் ஜெயஸ்ரீ மொழிபெயர்ப்பில் ஒருமுறையும் இந்த மொழிபெயர்ப்பு பிறகுமாக இது வெளியானமைதான்.இதை ஒரு நாவல் என்று சொல்வது மிகை. ஒருவகை உருவகச்சிறுகதை இது. சரியாக அச்சிட்டால் இருபது பக்கம் வரக்கூடும். காந்தியைக் கொன்ற கோட்சேயை உளவியல், வரலாற்று ரீதியாக அணுக முயல்கிறது . காந்தியை சுட்ட பின் மடக்கிப்பிடிக்கப்பட்டு உன்பெயர் என்ன என்று வினவப்பட்ட அக்கணம் முதல் வண்டியில் ஏற்றப்படும் வரையிலான சில நிமிடங்களை கால அளவாகக் கொண்டு கோட்சேயின் வரலாற்றுப் பின்னணியைச் சொல்ல முயல்கிறது .
கோட்சேயின் உண்மையான வரலாற்றை ஆராயவோ அவரது உளச்சிக்கல்களுக்குள் செல்லவோ சக்கரியா முயலவில்லை. காந்தி உருவாக்கிய தார்மீகம் லெளகீக அரசியல் தளத்தில் ஏற்படுத்திய சிக்கல்களுக்குள் செல்லவும் இல்லை. மாறாக கோட்சேயை வரலாறெங்கும் நிரம்பியிருக்கும் மத சகிப்பின்மை, இனக்காழ்ப்பு , அழிவுநோக்கு ஆகியவற்றுடன் படிப்படியாக இணைத்து அப்போக்குகளின் நீட்சியே அவர் என்று வரையறுக்க முயல்கிறார். மூலநூலில் புதுக்கவிதைக்கு அருகே செல்லும் ஒரு நடை இருந்தது, அதை சுகுமாரன் சிறப்பாக தமிழில் கொண்டு வந்திருக்கிறார். பலவிதமான உளஎழுச்சிகளை உருவாக்கும் இந்த ஆக்கம் அதேசமயம் ஒற்றைப்படையான வேகம் மட்டுமே கொண்டது என்பதையும் மறுக்க இயலாது.
====
கொங்குத்தேர் வாழ்க்கை [மரபுக் கவிதைத்தொகைநூல்]
தொகுப்பு சிவகுமார்
தமிழினி வெளியீடு
தினமணி நாளிதழின் துணை ஆசிரியரான [மீசை] சிவகுமார் தமிழ் இலக்கியச்சூழலின் நண்பர்வட்டத்தில் அறியப்பட்ட ஆளுமை. மிக விரிவான இலக்கிய அறிமுகமும் , வியப்பூட்டும் தமிழ் மரபிசைப் பயிற்சியும் மிக்கவர் அவர். தினமணி வெளியிடும் புகழ்பெற்ற ‘இசைமலர் ‘களுக்கு பின்னால் உள்ள உழைப்பு அவருடையது. சிவக்குமாரின் முதல் நூல் இது. சங்க காலம் முதல் செய்குத்தம்பிப் பாவலர் வரை நீளும் காலகட்டத்தில் எழுதப்பட்ட கவிதைப்பெரும்பரப்பிலிருந்து தன்னைக் கவர்ந்த ஏறத்தாழ 750 கவிதைகளைச் சேர்த்து இத்தொகைநூலை உருவாக்கியிருக்கிறார். தனிக்கவிதைகள், காவியங்களில் இருந்து சிறந்த சில பகுதிகள் என தேர்வு நிகழ்ந்துள்ளது. சிவக்குமாரின் சுருக்கமான எளிய உரை பாடல்களுக்குள் செல்வதற்கு உதவியாக உள்ளது. அதேசமயம் பாடல்களை மறைக்கவுமில்லை. தமிழிலக்கிய மரபின் விரிவையும் பன்முகத்தன்மையையும் அழகையும் அறிய உதவக்கூடிய மிக முக்கியமான நூல் இது. சில பக்கங்கள் புரள்வதற்குள் கவிதையின் மொழியும் பொருளும் முகமும் ஆத்மாவும் மாறும் ஆச்சரியம் திகட்டாதது. தமிழன்றி வேறு ஒரு மொழியில் இத்தகைய பேரனுபவம் கிடைக்க முடியாது. மலைகள் மீது பறப்பதுபோல நாம் நூற்றாண்டுகள் மீது பறக்கிறோம்.
தீம்பெரும் பொய்கை ஆமை இளம்பார்ப்புத்
தாய்முகம் நோக்கி வளர்ந்திசின் ஆங்கு
அதுவே ஐய நின் மார்பே
அறிந்தனை ஒழுகுமதி அறனும் ஆரதுவே [ ஓரம்போகியார். ஐங்குறுநூறு]
இனிய நீர் பொய்கையில் வாழ்கிற ஆமை தன் குட்டிகளைப் பேணாவிடினும் அவை தாய்முகம் கண்டு அந்த ஆறுதலிலே வளரும். அதுபோல உன்னையே உன் மார்பையே பார்த்து உயிர்வாழ்கிறாள் தலைவி. ஆகவே அவள் உயிர்வாழ உதவுவதே உன் கடன்
முட்டையிட்டு மணலில் கைவிட்டுவிட்டு செல்லும் ஆமை அடைகாப்பதோ பால்கொடுப்பதோ பேணுவதோ இல்லை என்ற தகவலுடன் வாசிக்கும்போது எத்தனை நுட்பமான மறைபிரதிகொண்ட பாடல் இது என்ற வியப்பு உருவாகிறது. ஏறத்தாழ பதினைந்து நூற்றாண்டுகளுக்குப் பிறகு
செருப்புக்கு வீரர்களை சென்றுழக்கும் வேலன்
பொருப்புக்கு நாயகனை புல்ல- மருப்புக்கு
தண்தேன் பொழிந்த திரு தாமரைமேல் வீற்றிருக்கும்
வண்டே விளக்குமாறே
[காளமேகம். தனிப்பாடல் .செருப்பு தொடங்கி விளக்குமாறுக்கு பாடியது]
போர்க்களத்திலே புகுந்து பகைவர்களை கலங்கவைக்கும் வேலாயுதம் தாங்கியோனும் மலைகளுக்குத் தலைவனுமாகிய முருகனை அணைவதற்குத்துடிக்கிறது என் மனம். குளிர்ந்த தேன்பொழியும் தாமரையில் வீற்றிருக்கும் வண்டே அவனிருக்கும் இடம் எங்கே என்று விளக்கிக் கூறுவாயாக
என்றகவிதைவரை வருகையில் ரசனையின், மொழியின், ஒரு யுகமே புரண்டிருப்பதைக் காண்கிறோம்.
சிவக்குமாரின் தனிப்பட்ட ரசனையின் விளக்கமாக அவர் ஆண்டாள் பாடலுக்கு அளித்துள்ள சிறப்பு விளக்கமும் வைணவ உரைமரபு குறித்த அழகிய பின்னடைவும் உள்ளான. வைணவ உரையாசிரியர்களையும் ஒருவகை கவிஞர்களாக அவர் கொண்டிருப்பதை சிறப்பான பார்வை எனலாம்.
இந்நூலில் குறைகளாக என் வாசிப்புக்குப் பட்டவை இரண்டு விஷயங்கள். சிவக்குமாரின் ரசனை தமிழின் மொழியழகை முக்கியமாகக் கவனிப்பது. ஆகவே அறம், பெருங்கருணை ஆகியவை வெளிப்படும் ஆக்கங்களை விட மொழிநுட்பம் செறிந்த ஆக்கங்கள் முன்னிலைப்படுகின்றன. சிற்றிலக்கியங்கள் இந்நூலில் அதிக இடம் பெற்றிருப்பது இதனால்தான். ஒப்புநோக்க சங்க இலக்கியங்களின் இடம் குறைவாக உள்ளது. இரண்டாவதாக இப்போது கிடைக்காத, பொதுவாக வாசகர்கள் அறிந்தேயிராத பல ஆசிரியர்கள் அவர்களின் அபூர்வத்தன்மை காரணமாகவே நூலில் இடம் பெற்றுள்ளனர். உதாரணம் செண்பகராமன் பள்ளு. அவற்றில் சில உயர்ந்த கவித்துவம் கொண்டவை என்று சொல்ல முடியவில்லை. ஆனால் இவ்விரு இயல்புகளையும் இந்நூலின் சிறப்புகளாகச் சொல்பவர்களும் இருக்கலாம்.
====
யுரேகா என்று ஒரு நகரம் [நாவல்]
எம் ஜி சுரேஷ்
புதுப்புனல் வெளியீடு
சென்னை
எம் ஜி சுரேஷ் பின்நவீனத்துவப் பாணியில் எழுதுபவராக தம்மை அறிவித்துக் கொண்டிருப்பவர். அப்போக்கின் இயல்புகளாக அவர் காண்பவை 1 ] உணர்ச்சிகளோ அழகுகளோ நுட்பங்களோ வெளிப்படாத நேரடி சித்தரிப்பு முறை– இதை அவர் ஜீரோ நடை என்கிறார். 2] செயற்கையாக உருவாக்கப்பட்ட சிக்கலான கதைப்பரப்பு மற்றும் வடிவம். இவ்விரு இயல்புகளும் கொண்ட அவரது முந்தைய நாவல்கள் போன்றதே இந்நாவலும். அந்தமான் அருகே ஒரு நகரம் நீருக்குள் கண்டடையப்படுகிறது. அதன் வயது பத்தாயிரம் என்று சொல்லப்படுகிறது. ஜனாதிபதி அதற்கு யுரேகா என்று பெயர் போடுகிறார். அதைப்பற்றிய பரபரப்பின் ஊடாக அதனுடன் தொடர்புள்ள பலர் கொல்லப்படுகிறார்கள். இறுதியில் தங்கள் வணிக நோக்கத்துக்காக இந்திய மக்களின் கவனத்தை திசைதிருப்பும்பொருட்டு சில பன்னாட்டுநிறுவனங்கள் உருவாக்கிய போலி நகரம் அது என்று தெளிவாகிறது. சர்வ சாதாரணமான கதை. முதிராத எழுத்துமுறை .அங்கதம் கூட எந்தவகையிலும் மனதைக் கவராமல் உள்ளது. உண்மையான வரலாற்றாய்வு முறைமையைக் கவனிப்பவர்கள் வரலாற்றாய்வு இந்நாவலில் உள்ளதுபோல எளிய ஒன்றல்ல என்பதை அறிவார்கள். உண்மையில் நம் வரலாற்றாய்வில் தர்க்கத்தை சுழற்றியடிக்கும் , அபத்த உணர்வை உருவாக்கும் பற்பல புதிர்கள் இன்னும் உள்ளன. உதாரணம் சங்கம் என்பது என்ன என்ற வினா. சரியான நாவலாசிரியன் அவற்றிலிருந்துதான் நாவலைத் தொடங்குவான். உண்மையா கற்பனையா என்று வரலாற்றாய்வாளானே மயங்கும்படி மெய்யையும் பொய்யையும் கலந்து புதிய புதிய தர்க்கங்களுடன் நாவலை சுழற்றிச்செல்வான். பின்நவீனத்துவநாவல் என்பது நாம் அறிந்து தொகுத்து வகைப்படுத்தி வைத்துள்ள அறிவின் அமைப்பை குலைத்து விளையாடி நம்மை புதிய தளங்களுக்குள் செலுத்துவதாக இருக்கும். அப்படிப்பட்ட நாவல் ஏற்கனவே இருக்கும் அறிவுத்தளத்தின் உச்ச எல்லையிலிருந்து மேலே செல்லக்கூடியதாகவே இருக்கும் . அதை எழுத ஆராய்ச்சியாளனின் கடும் உழைப்பும் ஒவ்வொரு தளத்திலும் புதிய திறப்புகளும் தேவை. அப்படி போகுமிடமெல்லாம் மொழி வளைந்து கூடவே வரவேண்டும். அதாவது தர்க்கத்தை நன்கறிந்து கடந்துசென்ற ஒருவனே தர்க்கங்களை குலைத்து விளையாட இயலும். சுரேஷின் இந்நாவல் மிகவும் எளிமையானதாக உள்ளது. வரலாற்றாய்வின் எளிய அடிப்படைகளை அறிந்த ஒருவர் சற்றே ஏளனம் தெரியும் ஒரு புன்னகையுடன் இதை தாண்டிச்செல்வார். எளிய கதையாகக் கூட இதை அலுப்பூட்டுவதாகவே கொள்ள இயலும்.
====
ஆசை [திரைக்கதை]
வசந்த்
சந்தியா பதிப்பகம்
வசந்த் எழுதி இயக்கிய சினிமாக்களின் கேளடிகண்மணி , ஆசை இரண்டும்தான் அதிகமான புகழ்பெற்றவை. சினிமாவின் அழகியலை அதிகம் நெருங்கி வருபவை. இரண்டுமே வசந்துக்கு மிகவும் நெருக்கமான நகர்ப்புற மத்தியவற்க வாழ்க்கையைக் காட்டக் கூடியவை. ரிதம் உட்பட அவரது மூன்று திரைக்கதைகள் இப்போது சந்தியா பதிப்பகத்தால் நூலாக வெளியிடப்பட்டுள்ளன. ஆசை வணிகத் தமிழ் சினிமாவுக்குத் தேவையான பாடல்கள், சற்று மிகையான காதல்காட்சிகள் , சற்றே கொடூரமான வில்லன் ஆகிய அம்சங்கள் கொண்டிருந்தாலும் நேர்த்தியான திரைக்கதையும் படமாக்கலும் கொண்டது. கதை தொடங்கும்போது தெருக்கூத்து ராவணனில் இருந்து காட்சி முளைக்கும் விதம் , யமுனாவுக்கும் அவள் அக்காவுக்கும் இடையேயான சகஜமான உறவு , நிலைமீறிய காமம் மெல்ல மெல்ல மாதவன் மனதில் ஊறி அவனை மிருகமாக்கும் விதம், இயல்பான தந்திரத்தால் அவன் படிப்படியாக கட்டியெழுப்பும் வலை எல்லாம் யதார்த்தமாகவும் மனதைக் கவர்வனவாகவும் உள்ளன. நல்ல திரைக்கதைகள் காலப்போக்கின் அத்திரைப்படத்தைவிட நல்ல சினிமாவை நமக்குக் காட்டும். இதுவும் அப்படிக் காட்டுகிறது.
====
ராமாயணத் தோல்பாவைக்கூத்து [ நாட்டாரியல் பாடல்]
தொகுப்பு டாக்டர் அ. கா. பெருமாள்
காவ்யா பதிப்பகம்
தென் தமிழ்நாட்டில் பிரபலமாக உள்ள , இப்போது பெரிதும் அழிந்துவருகிற ஒரு நாட்டார் கலைவடிவம் தோல்பாவைக்கூத்து. இது மண்டிகர் என்ற மராட்டிய நாடோடிக்குழுவினரால் நிகழ்த்தபப்டுகிறது. ஒளி ஊடுருவும் எம்ல்லிய ஆட்டுத்தோலால் செய்யப்பட்ட பல வண்ணப் பொம்மைகளை வெண் துணிக்கு பின்னால் நிறுத்தி குச்சிகளால் ஆட்டுவிப்பார்கள். அதற்கு அப்பால் விளக்கு இருக்கும். வண்ண ஒளி திரையில் பிம்பங்களாக விழுந்து அசைகையில் திரைப்படம் போன்ற ஓட்டம் உருவாகிறது. பாவைகளை ஆட்டுவிக்கும் கலைஞரே கதையையும் பாடுவார். அதிகமும் புராண இதிகாசக் கதைகள். நல்லதங்காள் போன்ற கதைகளும் உண்டு.அக்காலத்தைய காட்சிக்கலைகளில் இது மிக வசீகரமானதாக இருந்துள்ளது. மண்டிகர் பெரிதும் விரும்பப் பட்ட கலைஞர்களாக இருந்துள்ளார்கள். திரைப்படம் இக்கலையை அழிக்க ஆரம்பித்தது.
நாட்டாரியல் ஆய்வாளரான அ கா பெருமாள் அவர்களின் இந்நூல் தோல்பாவைக்கூத்து ஆட்டத்தில் பாடப்படும் ராமாயணப்பாடலை நேரடியாக அவர்களின் வாய்மொழியிலிருந்தே பதிவுசெய்துள்ளது. அதில் உள்ள ‘காமிக் ‘ பகுதிகளான உச்சிக்குடும்பன் உளுவத்தலையன் உரையாடல் தவிர்க்கப்பட்டுள்ளது. காரணம் அவை அன்றாட அரசியல் நிலவரம் , உள்ளூர் செய்திகள் ஆகியவை சார்ந்தவை. மையஓட்டப் பாடல் வழிவழியாகப் பாடப்படுவது. கலைமாமணி பட்டம் பெற்ற ஜி பரமசிவ ராவ் நாகர்கோவில் தட்டான்விளை கிராமத்தில் பத்து இரவுகளாக நடத்திய தோல்பாவைக்கூத்து ஆட்டத்தின் ஒலிநாடாப் பதிவு இது. தோல்பாவைக்கூத்து குறித்த விரிவான அறிமுகம், பொதுவான ராமாயணத்துக்கும் தோல்பாவைக்கூத்து ராமாயணப்பிரதிக்கும் இடையேயான வேறுபாடு ஆகியவற்றை விளக்கி விரிவான ஆய்வுரை ஒன்றை பெருமாள் எழுதியுள்ளார். கதைச்சுருக்கத்துக்குப் பிறகு பாடல்கலந்த உரை வடிவில் நாடகம் உள்ளது.
இந்நாடக வடிவம் மிகுந்த ஆர்வமூட்டுவதாக் உள்ளது. ராமன் லட்சுமணன் எல்லாரும் வழக்கமான கதை ஓட்டத்துடன் இருந்தாலும் அவை மண்டிகர்களால் சொல்லப்படுவதானாலேயே ஒரு ‘நாடோடி ‘ பண்பாட்டுக் கூறும் அக்கதாபாத்திரங்களுக்குள் ஊடாடியிருப்பதைக் காணலாம்.
====
விடிந்தும் விடியா பொழுது [கவிதைகள்]
தேவதேவன்
தமிழினி பதிப்பகம்
தேவதேவனின் சமீபத்திய கவிதைகளின் தொகுதி. இதில் அவரது கவிதைகளுக்கு முக்கியமான ஒரு மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. முன்பிருந்த படிமத்தன்மை சற்றே விலகி நேரடியான நெகிழ்ச்சியை கவிதைகள் வெளிக்காட்டுகின்றன. வழக்கமான கவிதை உத்திகள் ஏதுமற்ற இந்த நேரடித்தன்மை அதன் ஆத்மார்த்தம் காரணமாகவே முக்கியமான கவிதையனுபவமாக உள்ளது
எத்தனை அழுக்கான இவ்வுலகின்
—-
கொட்டகை நோக்கிச்செல்லும்
காலிக்குப்பைவண்டியின் உள்ளே
ஆற அமர கால்மடித்து அமர்ந்து
வெற்றிலை போட்டுக்கொண்டு
வண்டியசைவுக்கு அசையும்
தன் ஒத்திசைவையும் அனுபவித்தபடி
ஆடி அசைந்து ஓர் அழகான தேவதைபோல
சென்றுகொண்டிருக்கும் பெண்ணே
முகஞ்சுளிக்கும் புத்தாடைகளுடன்
அலுவலம் செல்லும் வேகத்தினால்
பரபரப்பாகிவிட்ட நகரச்சாலை நடுவே…
பணிநேரம் முடிந்த ஓய்வமைதியோ
மாடு கற்பித்த ஆசுவாசமோ
இல்லை
அபூர்வமாய் ஒளிவிடும் பேரமைதியே தானோ…
எத்தனை அழுக்கான இவ்வுலகின் நடுவிலும்
நீ ஒரு மூலையை தேர்ந்தெடுத்துக்கொண்டு
வாழ்ந்தேவிடுவது கண்டு
இன்பத்தாலோ துன்பத்தாலோ
துடிக்கிறதேயம்மா என் இதயம்
====
jeyamoohannn@rediffmail.com
- மந்திர உலகின் தந்திரங்கள்
- பொன்விழாக் கொண்டாட்டம்- 3
- ஆயுத எழுத்து பற்றி
- சமீபத்தில் வாசித்த நூல்கள்- 4 -சக்கரியா(தமிழாக்கம் சுகுமாரன்), சிவகுமார் , எம் ஜி சுரேஷ் , வசந்த், அ. கா. பெருமாள் , தேவதேவன் ,
- இருதுளி கண்ணீர்
- தண்டவாளங்கள்
- மெய்மையின் மயக்கம் – 1
- ஃ –> இளமையான பழைய(ஆயுத) எழுத்து.
- நிறமற்றவனின் குரல் : சுடலை மாடன் வரை-கவிதைத்தொகுதி அறிமுகம்
- கலிங்கத்துப்பரணி- சில குறிப்புகள்
- குண்டலகேசி – சில குறிப்புகள்
- ஜஃப்ராணி ஷாமி கபாப்
- கடிதங்கள் மே 27,2004
- கடிதங்கள் மே 27, 2004
- கடிதம் மே 27,2004
- ஜெயமோகனும் ஸ்ரீரங்கத்து தேவதைகளும்….
- இல்லம்…
- அறை
- கவிதைகள்
- பூமகன்
- தீவு
- கவிக்கட்டு 8 – யார் நீ ?
- தமிழவன் கவிதைகள்-ஏழு
- பலியர்களுடன் உரையாடல்
- கிருஸ்துவ மதத்தில் புரொடஸ்டண்ட் பிரிவு தோன்றியது போல இஸ்லாமில் உருவாக வேண்டும்
- ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 4)
- Dahi pasanday
- அமெரிக்காவின் ஐம்பெரும் ஏரிகளை அட்லாண்டிக் கடலுடன் இணைக்கும் ஸெயின்ட் லாரென்ஸ் கடல்வீதி [St Lawrence Seaway Connecting The Great
- பூமித்தின்னிகள்
- தமிழ்க் கணிமை ஆர்வலர்களுக்கு ஓர் அவசர வேண்டுகோள்
- வாரபலன் மே 27,2004 – லால் சலாம் நாயனார் , இருநூற்று எட்டு டாலர் படம் , கொப்பாலாவின் எம் டி ஆர் ஹோட்டல்
- தமிழ்நாட்டு அரசியல் – என் கருத்துக்கள்
- மஸ்னவி கதை — 09சிங்கமும் முயலும்
- வள்ளி வோட்டு போட போறா!
- காத்திருப்பு
- வலை
- இலவசம்
- நீலக்கடல் -(தொடர்) அத்தியாயம் 21
- பிறந்த மண்ணுக்கு – 3
- தேர்தல் வெற்றி மக்களின் வெற்றியா ?
- ஈரோட்டுப் பாதை சரியா ? – 3
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 7
- தேனீ – மொழியும் பணியும்
- ரேடியோவின் கதை
- … உலக போலீஸ் …
- கவிதைகள்
- தாய் மனம்
- உள் நோக்கு
- கவிதைகள்
- பார்த்தசாரதியும் பகவத்கீதையும்
- நாய்கள்
- அன்புடன் இதயம் – 19 – அம்மா வந்தாள்
- வதை
- சீதைகளைக் காதலியுங்கள் !