பிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன் – கிறிஸ்தோஃப் தர்க்கோஸ் ( Christophe Tarkos)

This entry is part [part not set] of 50 in the series 20040226_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


Tarkos ‘ texts engage with the evanescent essence of reality through the perfidious nature of language. An encounter, that leaves behind it, fragile traces, volatile evidences of a constant effort to escape the closure of a world. A world where everything is for sale, where we are bombarded by colourful images, bodies are heavy, thoughts enslaved, and souls tormented. This recurrent and evanescent perspective on the world haunts the numb love between language and being. What could otherwise be named poetry ‘ – Christian Prigent, Le Monde

கே: வசனத்தில் கவிதை வருமா ?

ப: ஓ! வசனத்தில் கவிதை வரும்: கவிதையில் வசனம் வரும். இரண்டிலும் வசன கவிதை வரும். ரெண்டுங்கெட்டான் தமிழர்களுக்கு எதுதான் வராது. ( சரஸ்வதி -1959) ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகும் தமிழழனுக்கெதிராக தமிழன் குரைப்பது இன்றைக்கும் தொடருகிறது. நல்லவேளை கி.தர்க்கோஸ் பிரான்சில் பிறந்திருக்கிறார்.

ஆறுவருடத்திற்கு முன்னால் ஒருநாள்மாலை, உள்ளூரிலுள்ள பிரசித்திபெற்ற புத்தகக் கடைக்குச் சென்றிருந்தேன். பிரெஞ்சு இலக்கியங்களின் முகவரி தெரியாத நாட்களவை. இன்னும் சொல்லப்போனால், தமிழ் உட்படச் சமகாலப் படைப்புக்களின் கற்பூரவாசனையை நானறியாத காலம். அப்புத்தகக் கடையில் ஒரு வசதியுண்டு. ஒவ்வொருமாதமும் அதற்கு முந்தையமாதத்தில் வெளியிடப்பட்ட நூல்களின் பெயர்கள், ஆசிரியர்பற்றிய குறிப்புகள், நூல்களைப் பற்றிய சுருக்கமான விமர்சனக் குறிப்புகள், விற்பனை வரிசை, தரவரிசையென தகவல்களை உள்ளடக்கிய கையேடுகள், இலவசசேவையிற் கிடைக்கும். அக்கையேட்டைப் புரட்டிக்கொண்டிருந்தபோது தற்செயலாகக் கவிஞர் கி. தர்கோஸ் என்பவரின் அறிமுகம். அவர் எழுதுவதற்கான காரணமாகக் கொடுத்திருந்தக் குறிப்புச் சற்று வித்தியாசமாகயிருந்தது: ‘ என்மீதும் பிரியமில்லை. எனது படைப்புகள்மீதும் பிரியமில்லை. எனவேதான் புதிதுபுதிதாய் எழுதவேண்டியிருக்கிறது. ‘ ( ‘Je ne m ‘aime pas, je n ‘aime pas mes textes, c ‘est pouquoi j ‘en fait des autres). தனது படைப்புகள் மீதான சுயவிமர்சனத்தை முற்றிலும் புதிய தளத்தில் வாசகனின் பார்வைக்கு வைத்திருந்த அவரது வரிகள் வெகுசுலபமாய் என்னை ஈர்த்தன என்றே சொல்லவேண்டும். கையேட்டில் குறிப்பிடப்பட்டிருந்த அவருடைய ‘பேழைகள் ‘ (Caisses) என்கின்ற கவிதைத்தொகுப்பு அன்றைய தேதியில் ஓரிரு பக்கங்களுக்கு மேலாக எனது வாசிப்பு ஆர்வத்தைக் கூட்டவில்லை என்பது உண்மை. குறை அவரது படைப்பிலில்லை உன்னிடமென்றது காலம்..

அவரது படைப்புகள்: கவிதைகளா அல்லது உரைநடையா ? படித்தமேதையின் கருத்துக்களா, பித்தனின் உளறல்களா ? வேதாந்தமா ? சித்தாந்தமா ? உளவியற் தேடல்களா ? உறுதியற்ற வார்த்தைச் சந்தங்களா ? எப்படிச் சொல்வது எங்கேவைப்பது ? என்பதானக் குழப்பம் இன்றைக்கும் நீடிக்கிறது. உருப்பெற்று உயிர்பெற்று, எழுந்து தன் இருப்பினைத் தெளிவாக்கிய நிறைவுடன், அடுத்துவருகின்ற எழுத்துப்பிறவிகளுக்கு இடமளித்து தன் முடிவினைத் தேடும் உயிரியல்விதி இவரது சொற்களுக்கு எதிர்வினைகளுக்கு இடமில்லாமல் மிகச் சுலபமாய்ப் பொருந்துகின்றது. மிக அற்பமான காலஅளவில் மேடையேறும் வார்த்தைகளும் அவற்றின் ஓரங்க நாடகங்களும் பார்வையாளர்களின் செவிக்கு உணவு. மெய்யினைப் பொய்யிலிருந்து பிரித்தெடுக்கும் பகுபதச் சொற்கள். முடிவற்ற வார்த்தைகள். வரிசைவரிசையாய் சொல்மணிகள் நூலினிற் கோர்த்ததுபோல அவரது கவிதைகளில் அடங்கிப் பயணிக்கின்றன. தவளைக்குஞ்சு நீரில், ஒரு நேர்க்கோட்டில் நீந்திச் செல்லுக்கின்ற அமைதியும், அடுத்த உலகத்தைப் பற்றிய அக்கறையின்மையும். இரவு நேர, ஒற்றைக்குரல் ஒப்பாரியாக ஓங்கியும், உடைந்தும் பின்னர் சன்னமாகத் தேய்ந்தும் அடங்குகின்ற குரல். ஆனால் அச்சொற்களுக்குள் – அக்குரலுக்குள் இருப்பதென்னவோ மோகினிப் பிசாசின் வசீகரம். இழுத்துச் சென்று புணரும் குணம். பொதுவாகப் படைப்பின் வெளித்தோற்றத்தில் வெள்ளந்தியானச் சொற்குவியல், உண்மையில் மிக உன்னத நவீன படைப்பு. சொற்களைக் கலைத்துப்போட்டு, அவற்றின் இருப்பிற்கும், ஓசைக்கும் புதிய வகையிற் பொருள்சொல்கிறார். கூறியதையே கூறலுக்கு ஓர் புதிய இலக்கணம். அடுக்கடுக்காய்ச் சொற்கள், மீண்டும் மீண்டும் தனது ஊற்றுக்கண்ணிலிருந்து புதிதுபுதிதாய் சுரந்துவருகின்றது. ஒன்று மற்றொன்றிலிருந்து வேறுபடுகிறது. ஓரிடத்தில் திடமாய் நிற்பது மற்றோரிடத்தில் திரவமாய் வழிகிறது. ஓரிடத்தில் நகலாய் நிற்கின்ற சொல் மற்றோரிடத்தில் அசலாய் உருமாற்றம் கொள்கிறது. உண்மையில் இவரது கவிதைகளில் கரு இல்லை, அலங்காரமில்லை, நோக்கமில்லை ஆனால் கற்பனையில்லாத பொருட்கள் பற்றி விவாதிக்கின்றது. நிதர்சனமான உண்மைகள்மீது அக்கறை கொள்கின்றது. சொற்களை வரிசைப்படுத்திவிட்டுப் இருப்பிற்கும் ஓசைக்குமிடையே வாதப் பிரதிவாதங்களை நம்முன் நடத்துகிறார். ஒருசொல்லிலிருந்து மற்றொன்றிற்கு ஒற்றையடிப்பாதையில், ஓசைநயத்தோடும் தோற்றவனப்போடும் நடத்திச் செல்லும் செவ்விய உரைநடை. கட்டுப்பாடற்ற அவர் சொற்கள் நீர்நிலைகளின் மேற்பரப்பில் வெடிக்கும் குமிழ்களாய், உள்மன விசாரணைகளாக, ஒன்றையொதுக்கிவிட்டு மற்றொன்று தொடர்ச்சியாய் நாம் ஓயும்வரை வந்துபோகின்றன. துண்டுப் பிரசுரமென்று ஒதுக்கமுடியாத புனிதவாசகங்கள். உரைநடையிலானப் படிவங்கள் (Prosaic blocks), தோற்றத்திலொரு வார்த்தைச் சதுரங்கம். அவ்விளையாட்டில் நமக்குள்ள இடம் எக்கணத்திலும் மாறலாம். ஏதாவதொரு செய்தியை (Message)ச் சொல்லிடவேண்டும் என்கின்ற கட்டாயமேதும் இக்கவிதைகளுக்கில்லை. உள்ளடக்கத்தைவிட அச்சொற்கள் சுமந்து நிற்கும் ஒசைநயம் இருவேறு நிலைகளில் இயங்குகின்றன. ஓரிடத்தில் அசைவற்று, இறுக்கமாய், திடமாய், அடைத்துக்கொண்டு நிற்கின்ற சொற்கள், மற்றோரிடத்தில் தவழ்ந்து, தளர்ந்து, மென்மையாய், திறந்து வழிவிடுகின்றன. சதுரத்தில் சொற்களை அடைத்து உட்காரவைப்பது, பட்டியில் அடைக்கப்படும் ஆடுகைளை ஞாபகப்படுத்துகின்றன. படுத்திருக்கும் ஆடுகள் ஒவ்வோன்றும் அசைபோட்டபடி அசைவின்றி, இடையன் திறப்பில் கவனம் வைத்திருப்பதைப்போல. சொற்களைப் பிசைந்து பிசைந்து அவர் பிடித்தவற்றில் பொய்யான பிள்ளையாரும் உண்டு, மெய்யான குரங்கும் உண்டு. சிறுபிள்ளைகள் மணல்வீடுகளைக் கட்டியும் இடித்தும், மீண்டும் எழுப்பியும் அழகுபார்ப்பதுபோல கி. தர்க்கோஸ் சொற்களோடு விளையாடுகின்றார். கட்டுச்சாதத்துடன் வைளையவருகின்ற ஏகாந்தியாக நாம் கவிதை முழுக்கப் பயணிக்கின்றோம். ‘ உண்மையில் சிந்தனையில் நான் நெகிழ்ச்சிகொண்டவன் ‘ (Je suis tout a fait elastique par la pensee) என்பதனை அவரது படைப்பின்மூலம் நிரூபணம் செய்கின்றார்.

1964ம் ஆண்டு பிறந்த கி. தர்க்கோஸ் பிரான்சின் மர்செய் (Marseille) கடற்கரைப் பட்டினத்தைச் சேர்ந்தவர். கடந்த பத்து வருடங்களில் மூன்றுமுறை மனவியல் மருத்துவமனைகளில் அனுமதிக்கபட்டு மாதக்கணக்கில் சிகிச்சை பெற்றவர்.

கீழ்க்கண்ட அவரது வாக்குமூலங்கள் அவரின் மறுபக்கத்தை நமக்கு முன்வைக்கின்றன

‘நான் மிகவும் மந்தம், சோம்பேறி. நான் எழுத்தாளனல்ல. அதற்கு அதிக நேரம் பிடிக்கும். ‘

‘என்னை நம்பாதீர்கள். நான் என்னை நம்புவதில்லை, நான் நீங்களாகவிருந்தாலும் நம்பிக்கைவந்திருக்காது ‘.

‘எனது சகோதரி ஓரினச்சேர்க்கயை விரும்புகின்றாள். எனது நெருக்கமான நண்பன் ழெரார், ஓர் அலி. ‘

‘எனக்கு மனைவியோ பிள்ளகளோ இல்லை. ஏனெனில் நான் பாலுறவில் முரண்பாடுடையவன் ‘

‘புனித ஆன் மருத்துவமனை காப்பிப்பாரில் என்னை மற்றவர்கள் சந்திப்பதையே விரும்புகிறேன் ‘

‘எனது இருப்பு ஒரு பொய். நான் கவிதைகளைக் கற்பிதம் செய்கிறேன் படைப்பதில்லை ‘

கி. தர்க்கோஸின் முக்கிய படைப்புகள்:

Anachronisme, POL,2201

Pan, PoL 2000

Le Signe=, POL,2000

Caisses, POL 1998

La Valeur sublime, Le grand Os, 1998

Ma Langue est Poetique, Electre 1997

L ‘Oiseau Vole, L ‘evidence 1995

Le baton , Al Dante 1998

Le damier, Aiou 1996

Le train, SUEL 1996

அவரது பேழைகள் அல்லது பணப்பெட்டிகள்(Caisses) தொகுப்பிலிருந்து:

‘அதிஷ்டவசமாக அவனிறந்திருக்கிறான். மகிழ்ச்சி. அவன் மறைந்துவிட்டான். எப்போதும் நடப்பதுதான். ஓருயிர் பிரிந்திருக்கிறது, இன்றைக்கு, புண்ணியம் செய்தவன் இறந்துவிட்டான். அவன்மறைந்துவிட்டான். ஒன்று குறைகிறது, மகிழ்ச்சி, யார் செய்த புண்ணியமோ இறந்துவிட்டான் இல்லையெனில் நமக்கெதுவும் புரியாது. இறப்புக்கு நன்றி. இவைகளெல்லாம் இடைக்கிடை நடந்தாகவேண்டும், அன்றேல் அவைகளின் இருப்புகள் அவசியமில்லாமற்போகும். யாரது பக்கத்தில் வீழ்ந்தது, அது அவனுடைய குற்றமல்ல, இப்போது எண்ணிக்கையில் ஒன்று குறைவு, அதற்கான காரணம் தெரியாதுபோனாலும், அதனை மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகின்றது, இப்படித் தொடருவது மிகவும் நல்லது, எண்ணிக்கையில் ஒன்றினை குறைத்துக் கொள்வோம், இப்போது அதனைத் தெளிவாய்ப் பார்க்கிறோம். யார் செய்தபுண்ணியமோ ஓரிறப்பு ஏற்பட்டிருக்கிறது, காரணங்களேதுமில்லை, இருந்திருந்தால் முற்றிலும் அபத்தமாகத் தோன்றும். அதிஷ்டவசமாக, நம்மிடமிருந்து தொலைந்துபோகும் ஒருவனை நாம் மீண்டும் காணப்போவதில்லை. சிலர் தொலைந்துபோகின்றார்கள். அதிர்ஷ்டவசமாக அவன் இறந்துபோனதும் ஒருவகையில் நல்லதே, அவன் செய்த குற்றமென்ன, அங்கேயொரு படுகுழி திறந்திருக்கத் தள்ளப்படுகிறான், அதற்காகவே குழிகள் பறிக்கப்பட்டதுபோல. நல்லதாய்ப் போயிற்று, ஏதோ படுகுழிகளாவதிருக்கின்றதே. இறப்பு, இறப்பாயிருப்பதற்கு நன்றி. படுகுழிகள் உண்மையிலிருக்கின்றன. அவனிறப்பது நியாயமல்ல. அதிஷ்டவசமாக அவள் இறந்திருக்கிறாள். அவ்விறப்பு எண்ணிகையில் ஒன்றை குறைத்திருக்கிறது. வழக்கத்திற்கும் மேலானது மகிழ்ச்சி. அவள் குற்றமேதுமிழைக்கவில்லை, மறுபடியும் அவளைச் சந்திக்க ஒருவரும் காத்திருக்காததுபோல குதித்துவிடுகிறாள், இறப்பிற்கு நன்றி, மறைந்துபோனாளென்றால் அவளுடைய தவறால் அல்ல, அவள் மறைந்துபோய்விட்டாள், இப்படித் தொடர்வது நல்லது, படுகுழிகளின் பொருள் மிகத் தெளிவாய்ப் புரிகின்றது, பேதமையுடனும், மகிழ்ச்சியோடும் இறந்திருக்கிறாள், மிகவும் இயல்பானது, இல்லையெனில் இவையனைத்தும் பொருளற்றதாகிவிடும். ‘ – பேழைகள் (Caisses – Page 16)

இறுதியாககொரு வார்த்தை:

புதுக்கவிதைகள் என்றவுடன் நம்மவர்களை மறந்துவிட்டு எலியட், விட்மன் பொதலேர், ரெம்போ என்று சொல்வதில் நமக்குக் கூடுதல் மகிழ்ச்சி. கி. தர்க்கோஸ் படைப்புகளில் பாரதியின் ‘சக்தி ‘ வசனகவிதைகள் நினைவுக்கு வருகின்றன. பாரதியின் கவிதைகளைப்போலவே கி. தர்க்கோஸ் கவிதைகளிலும் எளிமையும் தெளிவும் இருக்கின்றன. இல்லாதது நமது பாரதியின் வேகம்.

—-

Na.Krishna@wanadoo.fr

ஃப்ரெஞ்ச் இலக்கியம் பற்றி நாகரத்தினம் கிருஷ்ணா

  • குளோது சிமோன்
  • ஒனொரே தெ பல்ஸாக்
  • மொரிஸ் ப்லான்ஷோ
  • மிலன் குந்தேரா
  • மிஷல் ஹுல்பெக்
    Series Navigation

  • author

    நாகரத்தினம் கிருஷ்ணா

    நாகரத்தினம் கிருஷ்ணா

    Similar Posts