நாகரத்தினம் கிருஷ்ணா
‘One never describes something that happened before the labour of writing, but really what is being produced… during this labour, in its very ‘present, ‘ and results not from the conflicts between the very vague initial project and the language, but on the contrary from a result infinitely richer than the intent… Thus, no longer prove but reveal, no longer reproduce but produce, no longer express but discover. ‘ (from Claude Simon ‘s Nobel lecture)
இன்றைய பிரெஞ்சிலக்கியவாதிகளில் மொழியை மிகச்சரியாகக் கையாளும் திறன்கொண்ட குளோது சிமோன் 1985ம் ஆண்டுக்கான நோபெல் பரிசைப்பெற்ற பிரெஞ்சிலக்கியவாதி. ‘இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்கு குளோது சிமோனின் தேர்வென்பது துணிச்சலானது ‘ என்று ஒரு சிலராலும், ‘குளோது சிமோனைத் தேர்ந்தெடுத்தன்மூலம், நோபெல் பரிசு களங்கம் தேடிக்கொண்டதென ‘ மற்றவர்களாலும் விமர்சனம் செய்யப்பட்டவர். ‘பின் நவீனத்துவ படைப்பாளிகளுள் உறுதியானவர், மனப்பூர்வமாகத் தன் எழுத்துப்பணியில் ஈடுபாடுகொண்டிருந்தவர் ‘, என்பது வெர்ஜீனியப் பல்கலைக்கழக பிரெஞ்சுமொழிப் பேராசிரியர் ரோஜர் ஷட்டக் தெரிவித்த கருத்து.
‘படைப்பின் நோக்கம், படைப்பாளியின் மனதை, உணர்வினை, அனுபவங்களை மற்றும் அபிப்ராயங்களை முடிந்தமட்டும் வாசகனிடம் சேர்ப்பித்துவிடுவதல்ல, அதற்கும் மேலாக ‘. என்பது குளோது சிமோனின் எண்ணமாக இருந்தது. படைப்பினுடைய மொழியும் கட்டமைப்பும், ஒலியும் வண்ணமும் வாசகனைத் தட்டி எழுப்பவேண்டும் என்கின்ற வகையிலேயே அவரது படைப்புக்களிருந்தன.
வாசிப்பில் மூன்று நிலைகள் உள்ளன: வாசித்த மாத்திரத்தில் நேரடியாக புரிந்துகொள்ளக்கூடிய முதல் நிலை. வாசித்ததைத் தன்னறிவோடு பொருத்திப் பொருள்கொள்ளும் இரண்டாவது நிலை. அவ்வாறு புரிந்துகொண்டபின் வாசிப்புப் பொருளின்மீது நமக்கேற்படுகின்ற உறவையோ பகையையோ தீர்மானிக்கின்ற மூன்றாவது நிலை. இம்மூன்று நிலைகளும் ஒன்றோடொன்று இணைந்தவை, பிரிக்க முடிக்காதவை. குளோது சிமோன் படைப்புக்களைப் பொறுத்தளவில், அவரது படைப்புகள் முதல்வாசிப்பிலேயே இராண்டாவது நிலையையும், மூன்றாவது நிலையையும் நமக்குள் (உதாரணமாக ‘பர்சால் யுத்தம் ‘) ஏற்படுத்திவிடுகின்றன. கிரேக்க நாட்டிற்கு விடுமுறைக்குச் சென்ற படைப்பாளியின் நினைவுகளின் தாக்கத்திலிருந்து படிக்கின்றபோதும் படித்துமுடித்தபோதும் நம்மால் விடுபடமுடிவதில்லை. சாதாரண மொழிகள் ஏற்படுத்துகின்ற புரிதலைவிட, வடிவங்களும், ஓசைகளும் வாசகனிடம் ஏற்படுத்துகின்ற ‘புரிதலுக்கு ‘ பாரியவீச்சு அதிகமென்பது இங்கே நிரூபணமாகிறது. அம்மாதிரியான மொழிநடைகள் அரங்கேற்றம் செய்யும் ‘கூத்து ‘கள்; உடல்சார்ந்த உளம்சார்ந்த விளைவுகளை வாசகனிடம் மிகச் சுலபமாய் ஏற்படுத்திவிடுகின்றன என்பதனை, இவர் படைப்புகளை அறிந்தவர்கள் மறுப்பதில்லை.
பொதுவாக நல்ல படைப்புகளை ஆழ்ந்து வாசிக்கிறோம். இவ்வாழ்ந்த வாசிப்பு மட்டுமே ஒரு வாசகனை, படைப்பாளியின் பக்கத்திற் செல்லவும், அவனது அட்ஷயபாத்திர விநியோகத்தை கைநீட்டிப்பெறவும் வகைசெய்கின்றது. ஆனால் ஆழ்ந்த வாசிப்பென்பது அமைதியான வாசிப்பின் கூட்டாளி. அவ்வாறான அதாவது, ஒரு அமைதியான ஆழ்ந்தவாசிப்பில் குளோது சிமோன் கட்சிக்காரர்கள் மேடையேற்ற விழையும் வடிவங்களும், ஓசைகளும் உயிர்பெறும் சாத்தியமுண்டா ? என்ற கேள்வியும் நம்முள் எழாமலில்லை. மெளன வாசிப்பில் ஓசைகளேதுமில்லை, ஓசைகளில்லையேல் வடிவங்கள் இல்லை. வடிவங்கள் இல்லையேல் இயக்கமில்லை. இயக்கமில்லையேல் அங்கு படைப்பில்லை, என்கின்ற தட்டையான அபிப்ராயம் இலக்கியங்களைப் பொறுத்த அளவிற் பொய்யாகின்றது.
வாசிப்புத்தன்மையில் ஒரு கருத்தில் அறிவுலகம் தீர்மானமாகவுள்ளது. ஒன்றை வாசிக்கும்போது உடனடியாக வாசகன் உள்வாங்கிக் கொள்வது அவ்வவாசிப்பின் நேரடி பொருளேயன்றி அதன் உள்ளடக்கமோ, உருவகமோவல்ல. இந்தவகையில் இங்கே ‘ஸ்ற்றூப் ‘ (Stroop) என்பவரின் கூற்றினைக் கணக்கிற் கொள்ளவேண்டும். அவரது கருத்துப்படி ‘நீலம் ‘ என்ற சொல்லை சிவப்பு மையினால் எழுதினாற் கூட, வாசிப்பில் உடனடியாகக் கிடைக்கக்கூடிய முதல் புரிதல், அச்சொல்லின் பொருளான நீலமேயன்றி, அவ்வார்த்தையின் வண்ணமான சிவப்போ அல்லது அதன் வடிவமோ அல்ல. அதாவது வாசிப்புப்பொருளின் உண்மைநிலை முதலாகவும், அப்பொருளின் மீதான கற்பனைகள், வாசிப்பவனின் அறிவைப்பொறுத்து அடுத்தும் ஏற்படுகின்றன. ஆனால் இலக்கியங்களின் பொதுவான நோக்கம், தளைகளில் கட்டுண்டு கிடப்பதல்ல, முதல்புரிதலோடு முற்றுபெறுவதல்ல என்பது மிக்காயெல் ரிஃபாத்தெர் (Michael Riffaterre) கருத்து.
‘ இதோ விரிந்து வளரும் மரம்
பட்டப் பகலில் இரவைக் காட்டும் அதன் நிழல்.
மரத்தடியில் ஒரு கழுகு –
ரத்தம் செத்த சோனிக் கழுகு.
ஒளியின் அழைப்பு – ந. பிச்சமூர்த்தி கவிதைகள்
இக்கவிதையை ஒருமுறை மெளனமாக வாசித்துப் பாருங்கள். இங்கே கவிஞன் முதற் புரிதலிலேயே தன் எண்ணத்தை வாசகனிடம் கொண்டு செல்வதில் ஓரளவு வெற்றிபெற்றிருக்கிறான். எனினும் அவன் வாசகனிடம் வேறொன்றை எதிர்பார்க்கிறான். எதனையோ தேடிச்செல்ல உத்தரவிடுகிறான். இக்கவிதையில் முதல் மூன்றுவரிகளிலேற்பட்ட காட்சிப் புரிதல், நான்காவது வரியில் ‘இனியில்லை ‘யென முடிந்துபோகிறது. ‘ரத்தம் செத்துப்போன சோனிக் கழுகிடம் ‘ எஞ்சியிருப்பது முடிந்துபோன வாழ்க்கை. இந்தநிலையி
ல் அதன் எதிர்காலம்பற்றிய கேள்விகளேதும் நம்மிடமில்லை. மாறாக அதன் இறந்தகாலத்தைப் பற்றிய கேள்வி நமக்குள் வருகின்றது. ‘ சோனியாகிப் போனதன் காரணமென்ன ? ‘ என்ற கேள்வி நம்மிடம் எழாமலில்லை. அதற்கான பதிலைத்தேடி வாசகன் மனம் அலைய ஆரம்பித்துவிடுகிறது. இது வாசகனுக்கு இலக்கியங்களிற் கிடைக்கின்ற புலன் கிரகித்தல் (Perception ‘Sensorielle ‘). கண்ணுக்குத் தெரிகின்ற உண்மைக்குமேலாக, உணர்ந்துமட்டுமே அறியக்கூடிய சத்தியமது. எந்தவொரு வாசகமும் சொல்லப்படும் பொருளில் அல்ல, சொல்லப்படும் உத்தியில் பெருமை பெறுகிறது. எதைச் சொல்வதென்பதைவிட எப்படிச் சொல்வதென்பது முக்கியத்துவம் பெறுகிறது. குளோது சிமோன் சொல்லப்படும் உத்தியில் மாறுபட்டிருக்கிறார். அவர் கதைசொல்லும் உத்தியில் ஒரு பன்முக வெளிப்பாடுண்டு. வாசகனின் அறிவுபூர்மான புரிதலுக்கு: எழுத்து, சொல், குறியீடுகளை எடுத்தாளும் நம்பிக்கைக்கொண்டவர். பெரும்பாலான இடங்களில், வாக்கியங்கள் பிரவாகமாக குறியீடுகளில்லாமல் பயணிக்கின்றன. ஒரு சில வாக்கியங்களில் ஆயிரம் சொற்கள்வரை உபயோகித்திருக்கிறார்; எனினும் அவற்றைப் புரிந்துகொள்வதில் குழப்பங்களேதுமில்லை. எந்தவிதத் திட்டமிடலின்றி இயல்பாய்ச் சொல்லப்படுகின்ற அவரது எழுத்துக்களுக்கு கீழ்க்கண்ட பகுதி உதாரணம்.
‘மரம் (L ‘arbre): திறந்திருந்த சன்னலெதிரில் உட்கார்ந்து பின்னிரவுவரை எழுதிக்கொண்டிருக்கும்போது, அவைகளிலொன்று கிட்டத்தட்ட வீட்டை தொட்டுக்கொண்டிருப்பதை அல்லது குறைந்தபட்சம் விளக்கின் வெளிச்சத்தில் பிரகாசிக்கும் கடைசிக் கொம்பினை, அப்போதைகப்போது குஞ்சம்போன்று மெல்லவசைந்து, கரும்பச்சைவண்ணத்தில் பொய்யாய் நனைத்தெடுத்த முட்டைவடிவ இலைகுழைகள், இருட்டின் பின்னணியில் இறகுகளாய்த் எழுந்தமர்வதையும் பின்னர் அவை ஓர் ஒழுங்கான இயக்கமாகி ( அவற்றின் பின்புல-இருட்டில், இலைகளடர்ந்த கிளைகள் அரிதானதும் மென்மையானதுமான பரமரகசியத்தை ஒன்றுக்கொன்று தமக்கடுத்துள்ள மற்றொன்றிடம் குசுகுசுக்கும்) ஏதோ மரமுழுவதும் விழிப்பதும், உதறுவதும், உதறிக்கொள்வதுமாக காரியமாற்றிவிட்டு, பின்னரடங்கி மீண்டும் அசைதலற்று, நேரடியாக மின்சாரபல்பின் ஒளியின் வீச்சுக்குள்ளாகி, முன்வரிசையில் விலகிநிற்கின்ற தோற்றத்துடனும், பின்னேச் செல்ல செல்ல ஒளியிடமிருந்து சிறிதுசிறிதாக விலகி, இடைவெளிகைளைக் குறைத்துக்கொண்டு, அடுக்கடுக்காயிணைந்து அவ்விலைகள் இறுதியில் தோற்றமிழக்க, இருட்டில் திடுக்கிட்டும், நடுங்கியும், விம்மியும் எழுப்பும் பறவைகளின் தூக்கக்குரல் வரிசைவரிசையாய்தொடரும். ‘1967ல் வெளிவந்த ‘வரலாறு ‘ படைப்பில் உள்ள இப்பகுதி மொழியை ஓவியமாக கையாளும் அவரது திறனுக்குச் சான்று.
‘டிராம்வண்டி ‘ (Le Tramway) ஒரு ஞாபக (Souvenir) நூல். சிறுவனாக இருந்தகாலத்து நினவுகளுக்குச் சென்று திரும்பும் ஒரு முதியன்மனம். அந்திமக்காலம் ஆரம்பத்தைத் தேடிச்சென்று விசாரித்துவிட்டுத் திரும்பவும் கட்டிலில் விழுகிறது. நாவலின் ஆரம்பப்பக்கங்களிலெயே, ஆசிரியர் தனது இளம்வயதில் வாழ்ந்த பெர்ப்பிஞ்ஞான் (PERPIGNAN) நகருக்கு வந்துவிடுகிறார். அக்காலத்தின் அவர்பயன்படுத்திய டிராம்வண்டி இறந்தகாலத்திற்கும் நிகழ்காலத்திற்குமாக மீண்டும் மீண்டும் சென்று திரும்பும் ரயில்வண்டியாக உருவகப்படுத்தப்படுகிறது. இவ்விறந்தகாலத்தை நோக்கிய பயணம் அறைவாசத்திற்கும் கடந்தகாலத் தோற்றங்களுக்குமிடையிற் பயணித்து, படுக்கையிற் கிடக்கும் கிழவனை (குளோது சிமோனை ?) இரு புள்ளிகளுக்குமிடையிற் தள்ளாடவைக்கிறது.
குளோது சிமோன் சிறுவயதிலேயேப் பெற்றோர்களையிழந்தவர். இரண்டாம் உலகப்போரின்போது ஜெர்மானியர்களால் சிறையில் வைக்கப்பட்டு பின்னர் தப்பி, பிரெஞ்சு மக்களின் ‘ஜெர்மன் எதிர்ப்பு ‘ இயக்கத்திற் சேர்ந்து பங்காற்றிய போர்வீரர். கட்டுரையின் தொடக்கத்திற் கூறியதைப்போன்று இலக்கியத்திற்கான நோபெல் பரிசைவென்ற பிரெஞ்சிலக்கிய உலகின் பின் நவீனத்துவவாதி. படைப்புகள் அனைத்துமே சொந்தவாழ்க்கையின் நகல்கள். நினைவுகளை எழுதுவதென்பது மறக்கப்பட்டவைகளை திரும்ப அழைப்பதாகும். சுயவாழ்க்கையை இலக்கியமாகச் சொல்வதில் எத்தனைபேர்கள் வெற்றிபெற்றிருப்பார்களோ ? இவர் வெற்றிபெற்றிருக்கிறார். நானறியேன். தன் வாழ்க்கையைத் திரும்பிப்பார்த்து, பதித்தத் தடங்களை மண்ணோடு பறித்து, காற்கோளிட்டு, காட்சிகளாய் விவரித்துப் படைத்திருக்கிறார்.
1957 ல் வெளிவந்த ‘காற்று ‘ (Le Vent)அவரது படைப்பின் நோக்கத்தை வெளிப்படுத்துகின்றது: சமகால வரலாற்றின் திடார்மாற்றங்களுக்குத் தாக்குப்பிடித்து ஜீவிக்கும் மானுடத்தையும் அதன் நோக்கங்களையும் கண்டுணர்வதும், காலத்தின் கூறுகளை எதிர்கொள்வதுமென அதில் வரையறுக்கின்றார். ஸ்பெயின் உள்நாட்டுச் சண்டைகளை ‘முறுக்கிய கயிறு ‘( LA CORDE RAIDE -1947)வில் பயன்படுத்திக்கொண்டார். அவ்வாறே ஜெர்மாணியர்களிடம் பிரான்சு வீழ்ந்த சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு படைக்கப்பட்டது ‘ஏமாற்றுப் பேர்வழி ‘ (Le Tricheur -1940). ‘புல் ‘ (L ‘HERBE -1958), ‘ஃபிளாந்தருக்கான வழி ‘ ( LA ROUTES DES FLANDRES -1960), ‘மாளிகை ‘ (LA PALACE – 1962), ‘வரலாறு ‘ (HISTOIRE – 1967) இவரது படைப்புக்களில் முக்கியமானவை. இப்பட்டியலில் ‘பர்சால் யுத்தம் ‘ (LA BATAILLE DE PHARSALE -1969), மூன்று படிவம் (TRIPTYQUE -1973) ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
‘குளோது சிமோன், சந்தேகத்திற்கிடமின்றி இன்றைய இலக்கிய உலகில் வாழ்ந்துகொண்டிருக்கிற மிகப்பெரிய ஓவியர் ‘
( ‘ IL EST SANS DOUTE LE PLUS GRAND PEINTRE VIVANT DE LA LITTERATURE D ‘AUJOUR ‘HUI ‘ – FABRICE GABRIEL) என்று புகழப்படும் வசனத்தில் உண்மைமட்டுமல்ல சத்தியமும் இருக்கின்றது.
****
- அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்திநான்கு
- உருளைக்கிழங்கு கோழி உருண்டைகள்
- உருளைக்கிழங்கு குண்டுகள்
- பிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன் – குளோது சிமோன் (Claude Simon)
- எனக்குப் பிடித்த கதைகள் – 97 – ஓங்கியொலிக்கும் குற்றஉணர்ச்சியின் குரல்- எட்கர் ஆலன்போவின் ‘இதயக்குரல் ‘
- பெரியபுராணம் காட்டும் பெண்கள்
- திரைப்படத்தில் பாலுறவுச் சித்தரிப்புகள்: அறவியல் அழகியல் பிரச்சினைகள்
- நல்ல புத்தகங்களை தேடுவது
- மா ‘வடு ‘
- மீண்டும்
- எனக்கு வரம் வேண்டும்
- மரணம்
- பிரியம்
- பிறிதொரு நாள்
- ஏழையின் ஓலம்
- குமுறிக் கனல் கொப்பளிக்கும் இத்தாலியின் எரிமலைகள்
- எம காதகா.. காதலா!
- கவிதைகள்
- நீலக்கடல் – தொடர் – அத்தியாயம் – 5
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -10)
- விடியும்!- நாவல்- (34)
- பழையபடி நடந்திடுவேன்..
- கடிதங்கள் – பிப்ரவரி 5, 2004
- இது என் நிழலே அல்ல!
- ஒரு காமெடி சாமியாரின் டிராஜெடி நாடகம்.
- வள்ளி திருமணம் (பால பாடம்)
- மீண்டும் சந்திப்போம்
- உருகி வழிகிறது உயிர்
- அன்புடன் இதயம் – 6 – வெள்ளிப் பெளர்ணமியே
- நேற்றின் சேகரம்
- நானோ
- பேரனுக்கு ஒரு கடிதம்…
- காதலுக்கு என்ன விலை ?