மனத்தின் மறுபக்கம்-த்வீபா -கன்னடப்படத்தை முன்வைத்துச் சில குறிப்புகள்

This entry is part [part not set] of 49 in the series 20040101_Issue

பாவண்ணன்


கிரீஷ் காசரவள்ளி இந்திய அளவில் பெரிதும் பேசப்படக்கூடிய முக்கியமான கன்னடத் திரைப்பட இயக்குநர். கடசிரார்த்தா, மனெ, தபரன கதெ, பன்னத வேஷ என அவர் இயக்கிய படங்கள் எல்லாமே ஏற்கனவே வெளிவந்த கன்னடச் சிறுகதைகள் அல்லது குறுநாவல்களை மூலமாகக் கொண்டவை. நவீனச் சிறுகதைகளின் உள்ளோட்டமாக அமைந்திருக்கும் படிமத்தை அவருடைய கலைமனம் கச்சிதமாக உள்வாங்கி அதைத் திரையில் மீண்டும் நிகழ்த்திக்காட்டுகிறது. சமீபத்தில் வெளிவந்துள்ள ‘த்வீபா ‘ என்கிற திரைப்படமும் நா.டிசோஜ் என்னும் சிறுகதை எழுத்தாளர் எழுதிய நீள்கதையின் திரைவடிவமாகும்

‘த்வீபா ‘ என்னும் கன்னடச்சொல்லின் பொருள் தீவு என்பதாகும். நாலுபுறமும் தண்ணீரால் சூழ்ந்த இடத்தைத்தான் தீவு என்று குறிப்பிடுகிறோம். தீவு என்னும் பெளதிக இருப்பைப் படிமமாக உள்வாங்கும் ஒரு கலைமனம் அச்சொல்லை விரிவுபடுத்திப் பார்க்கும் தளங்கள் ஆச்சரியமானவை. சந்தேகங்களால் சூழப்பட்ட வாழ்வும் ஒரு தீவுதான். அன்பின்மைக்கு நடுவே அமைந்துவிடுகிற வாழ்வும் ஒரு தீவுதான். தோல்விகளுக்கும் அவமானங்களுக்கும் இடையே வாய்த்துவிடுகிற வாழ்வும் ஒரு தீவுதான். இப்படி இதன் பொருளை விரிவடையவைத்துப் பார்க்கும் விதம் நல்ல அனுபவத்தைக் கொடுக்கிறது. அருகில் கூடுதலாக்கப்படுகிற ஒரு அணைக்கட்டின் உயரத்தால் தவிர்க்கமுடியாதபடி தீவாகிவிடுகிற ஒரு கிராமத்தில் தங்கிவிடுகிற ஒரு குடும்பத்தின் வாழ்க்கைப்போக்கையும் மனப்போக்கையும் சித்தரிக்கிறது திரைக்கதை. ஒருபுறம் உண்மையாகவே மெல்லமெல்ல தீவாகி வருகிற மலைக்கிராமம். கணவனும் மனைவியுமான இருவரே வாழ்கிற சின்னஞ்சிறிய குடும்பத்தில் எண்ணங்களாலும் உணர்வுகளாலும் தீண்டிக்கொள்ள இயலாத வகையில் ஒவ்வொருவருமே தீவாக வசிக்கும் நிலை மறுபுறம். இரண்டையும் மாற்றிமாற்றித் தொட்டுக் காட்டியபடி திரைப்படம் முன்னோக்கி நகர்கிறது.

நெருங்கியிருக்கும் மணவாழ்வில் மனத்தின் எல்லாக் கதவுகளும் திறந்தே இருக்கின்றன. அல்லது கதவுகளே இல்லாத சுதந்தர அவளியாக அமைந்துவிடுகிறது. ஒருவரிடம் ஒருவர் தன்னை வழங்கி இன்பத்தில் திளைக்கும் வாழ்வில் எவ்விதமான புகாரும் இல்லை. ஆனால் நெருங்கமுடியாத ஒரு கரிய தருணம் வாய்த்து அதுவே ஒரு பெரிய மதிலாக உருமாறும்போது மனத்தின் கதவுகள் ஒவ்வொன்றும் மூடிக்கொள்கின்றன. அல்லது காற்றும் புகமுடியாத குகையாக அமைந்துவிடுகிறது. அந்த நிலையில்தான் மனம் தீவாகிவிடுகிறது. மனிதர்களும் தனித்தனி தீவுகளாகி விடுகிறார்கள். சீரான அருவிப்பெருக்கில் எதிர்பாராத விதமாக பெருகிவழியத் தொடங்கும் முரட்டுவெள்ளத்தைப்போல ஏதோ ஒரு காரணத்தையொட்டி ஒருவர்பால் மற்றொருவர் கொள்ளும் அவநம்பிக்கை, அலட்சியம், சந்தேகம், உயர்வு மனப்பான்மை எனப்பலவிதமான காரணங்களால் கூடிவாழும் ஆணும் பெண்ணும் தனித்தனி தீவுகளாகிவிடுகிறார்கள். இணைந்து வாழக்கூடிய எல்லாச் சாத்தியப்பாடுகளும் இருந்தபோதிலும் இணையமுடியாத அளவுக்கு மனம் தனிமைப்பட்டு விடுகிறது. அத்தகு மனம் கோடிக்கணக்கான மக்களைக்கொண்ட கூட்டத்திடையே இருந்தாலும் தீவாகவே நிலைபெற்றுவிடுகிறது.

அருகில் உயர்த்தப்படும் அணைக்கட்டின் உயரத்தால் மலைசார்ந்த ஒரு கிராமமே பாதிக்கப்படுகிறது. தேக்கிவைக்கப்படும் அணைநீர் விரிவடைந்து பரவுகையில் கிராமம் மூழ்கிப்போகும் சாத்தியப்பாடுகளால் கிராமமக்கள் வெளியேற்றப்படுகிறார்கள். குறித்த காலத்தில் தொடங்கிவிடும் மழைக்காலம் மக்கள் அச்சத்தை அதிகரிக்கிறது. அணையின் நீர்மட்டம் உயரஉயர கிராமம் தண்ணீரால் வேகவேகமாகச் சூழப்பட்டுக்கொண்டே வருகிறது. வெளியேற்றப்படும் மக்களுக்கு கிராமத்தில் இருக்கிற சொத்து மதிப்பு அளக்கப்பட்டு அதற்குரிய நஷ்டஈடு கொடுக்கப்படுகிறது. ஊர்மக்கள் எல்லாரும் வெளியேறினாலும் ஒரு குடும்பம் மட்டும் கிராமத்திலேயே தங்கியிருக்கிறது. அக்குடும்பம் கோயிலில் பூசைசெய்தும் பக்தர்களுக்குக் குறிசொல்லியும் தட்டில் விழும் தட்சணைப்பணத்தைக்கொண்டு வாழ்க்கையை நடத்தும் பூசாரியுடையது. தந்தை, மகன், மருமகள் என மூவரை மட்டுமே கொண்ட குடும்பம். நஷ்டஈட்டைப் பெற்றுக்கொள்ள அவர்கள் தயங்குவதற்கான காரணம் மிக எளிமையானது. அவர்கள் அந்தக் கிராமத்தில் தனக்குச் சொந்தமானது என்று சுட்டிக்காட்டும் எதுவும் அவர்களுக்கே உரிமையுள்ளது என்று நிறுவ எவ்விதமான எழுத்துபூர்வமான சான்றுகளும் இல்லை. வெறுமனே அனுபவபாத்தியதையால் இருக்கும் சொத்துகள். அவற்றுக்கு நஷ்டஈடு தரமுடியாது என்று கைவிரிக்கிறார் அதிகாரி.

மழை வலுக்கவலுக்க ஊர் மூழ்கத் தொடங்குகிறது. கிராமம் தீவாகிறது. கட்டாயமாக அக்குடும்பம் ஊரைவிட்டு வெளியேற்றப்படுகிறது. ஆனால் ஒருசிலநாள்களில் பூசாரித் தந்தையின் பிடிவாதத்தால் யாருக்கும் தெரியாமல் மீண்டும் தீவுக்கே வந்து சேர்கிறது அக்குடும்பம். அவர்களுக்கு உதவியாக இருக்க நகரிலிருந்து வந்துசேர்கிறான் உறவுக்கார இளைஞன் ஒருவன்.

நாள்கணக்கில் தொடர்ந்து பொழியும் ஐப்பசி அடைமழையில் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. தனிமையில் தெய்வத்திடம் முறையிடச் சென்ற தந்தை கோயிலுக்குள் புகுந்துவிடும் வெள்ளத்தில் அகப்பட்டு மூழ்கி இறக்கிறார். சொந்த வீடு மூழ்கிப்போகிறது. தீவில் மேட்டுப்பகுதியில் இருந்த வேறொரு வீட்டுக்குக் குடியேறிச் செல்கிறார்கள். பழைய வீட்டிலிருந்து கன்றுக்குட்டியைப் புதிய இடத்துக்கு அழைத்துவரும் முயற்சியில் வெள்ளத்தில் அகப்பட்டுப் போராடி மீள்கிறான் இளைஞன். தாளமுடியாத குளிரில் அகப்பட்டு நடுநடுங்குகிறவனுடைய உள்ளங்காலிலும் கையிலும் மார்பிலும் தைலத்தைத் தேய்த்துவிடும் மனைவிமீது கணவனுக்குச் சந்தேகம் எழுகிறது. அக்கணம் முதல் அந்த இளைஞனை விஷமாக வெறுக்கிறான் அவன். அவனுடைய பேச்சு, நடத்தை எல்லாமே மாறிப்போகிறது. விழுங்கவும் முடியாத துப்பவும் முடியாத ஒரு நரகவேதனையில் அவன் மனம் கணந்தோறும் நலிகிறது. மனைவியின் ஒவ்வொரு அசைவையும் அவன் கண்காணித்து, கற்பனையில் அதை ஊதிப்பெருக்கி, இல்லாத உருவத்தைத் தந்து தன்னையே இம்சைப்படுத்திக்கொள்கிறான். அவன் வேதனைக்கான காரணத்தை நுட்பமாக உணரும் மனைவி இளைஞனுடான பேச்சையும் பழக்கத்தையும் உடனே முற்றிலுமாகத் துண்டித்துக்கொள்கிறாள். வெள்ளத்தால் சூழப்பட்ட தீவைப்போல அமைதியின்மையால் அவர்கள் மனம் சூழப்பட்டுவிடுகிறது. அந்த அமைதியைச் சகித்துக்கொள்ள இயலாதவனாக அங்கிருந்த படகை எடுத்துக்கொண்டு புறப்பட்டுவந்த இடத்துக்கே சென்றுவிடுகிறான். இதன்பிறகும் மனம் தணியாதவனாகவே இருக்கிறான் கணவன். நெருங்கமுடியாத தீவுகளாகவே கடும்மழையில் ஒவ்வொரு நாளையும் கழிக்கிறார்கள்.

சாயங்காலம் மேயப்போன மாடு இரவு கவிந்தபிறகும் வீடு திரும்பவில்லை. திடாரென காற்றும் மழையும் வலுக்கிறது. கன்றுக்குட்டி கட்டப்பட்டிருந்த கொட்டகை சரிந்து விழ அபயக்குரல் எழுப்புகிறது கன்று. தொலைவில் எங்கோ புலி உறுமும் குரல் கேட்கிறது. எதுவும் அவனை அசைப்பதில்லை. வழக்கமாக அவள் பார்த்துப் பழகும் கணவனல்ல அவன். கற்சிலையைப்போல உட்கார்ந்திருக்கிறான். மீண்டும்மீண்டும் தன்னை இம்சைக்குட்படுத்திக்கொள்ளும் ஆவலோ அல்லது அவள் அந்த இளைஞனுடன் உரையாடுவதில் உணர்ந்த ஆனந்தத்துக்கு நேர்எதிரான புள்ளியில் அவஸ்தையில் தத்தளிப்பதை ஆசைதீரப் பார்க்கும் குரூர ஆவலோ அவனைத் துளியும் அசையவிடவில்லை. எல்லாப் பிரச்சனைகளையும் தனியே சமாளிக்கிறாள் மனைவி. மழையில் விழுந்த கொட்டகைக்கூரையை விலக்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் கன்றைக் காப்பாற்றுகிறாள். புலி நெருங்கிவிடாமல் இருக்க கதவுப்பலகையை உடைத்து வீட்டைச் சுற்றி வைத்து நெருப்பை மூட்டி எரிய வைக்கிறாள். அலுப்பில் எப்போது உறங்கினோம் என்றே தெரியாமல் உறங்கிப் போகிறாள்.

மறுநாள் காலையில் மழை நின்றுவிடுகிறது. நீரின் போக்கும் வேறு திசையை நோக்கிச் செல்கிறது. வெளியேவரும் கணவனுடைய முகத்தில் முதல்முதலாக மலர்ச்சி தோன்றுகிறது. மனைவியை அழைத்துக் காட்டுகிறான். இருவரும் மாட்டைத் தேடிச் செல்கிறார்கள். மாட்டைப் புலி அடித்துக் கொன்றிருப்பது தெரிகிறது. அவள் மனம் குலைந்துபோகிறாள். மழை நின்றுபோனது அவனுக்கு நல்ல நிமித்தமாகத் தோன்றுகிறது. எல்லாச் சிரமங்களிலிருந்தும் தெய்வம் விடுதலையை வழங்கியதாகச் சொல்கிறான். அவளையும் அவளது கடும்உழைப்பையும் முயற்சிகளையும் குறைத்துப் பேசி மனம் சுருங்கவைத்துத் தவிப்பதைக் காணும் ஆவலே அவனிடமிருந்து வெளிப்படுகிறது. இரவு முழுக்கத் தான் பட்ட அவஸ்தைகளையெல்லாம் கொட்டக்கொட்ட விழித்தபடி பார்த்திருந்தவன் தன் உழைப்பையோ சிரமங்களையோ ஒரு பொருட்டாக எண்ணாமல் எல்லா மீட்சியும் தெய்வத்துணையால் வந்ததாகச் சொல்வதைக் கேட்டு அவள் மனம் வாடுகிறாள்.

கணவன் தீவாகச் சுருங்கி ஒடுங்க முனைந்தபோது அவனை மீட்டுத் தன்னோடு இணைத்துக்கொள்ளும் ஆவலில் அக்கணம் வரையில் படாத பாடுபட்டவள் அவனுடைய வார்த்தையில் அடிபட்டவளைப்போலத் துடித்துப் போகிறாள். எல்லாத் திசைகளிலிலும் திறந்துவைக்கப்பட்டிருந்த அவள் மனக்கதவுகள் மூடிக்கொள்கின்றன. அவள் தன்னைத்தானே தனித்ததொரு தீவாக மாற்றிக்கொள்கிறாள்.

தொட்டுத்தொட்டு விரிவடைகிற நிலப்பகுதிகளைப்போல மானுட உறவும் ஒருவரையொருவர் சார்ந்திருப்பதால் விரிவடையக்கூடிய ஓர் உறவாகும். சார்ந்திருத்தல் என்பது இயலாமையின் காரணமாக அல்ல, மாறாக, அன்பின் காரணமாகவே நேர்கிறது. அன்பை வழங்குவதற்குத் எவ்விதமான தடைகளுமற்ற மனத்துக்கு, மூழ்கித்திளைக்க எல்லையற்ற அன்பு சதாகாலமும் எங்கிருந்தோ ஊற்றெடுத்துச் சுரந்தபடி இருக்கிறது. மானுட உறவு இப்படி இருப்பதே இனிய சமூக வாழ்வின் அடையாளமாக இருக்கும். ஆனால் இவ்விதமாக அன்பை வழங்கியும் அன்பில் திளைப்பதுமான வாழ்வு ஓர் லட்சியக் கனவாகவே நின்றுபோவது துரதிருஷ்டவசமானது. விரிவடைவதைத் தடுக்க ஒவ்வொரு கணமும் புதுப்புதுத் தடைகள் உலகில் உருவானபடி உள்ளன. சாதி, மதம், போட்டி, ச்முக அந்தஸ்து என ஏராளமான அம்சங்கள் புறவாழ்வில் தடுத்தபடி உள்ளன. அகவாழ்வில் சந்தேகம் அல்லது பொறாமை இரண்டில் ஒன்றே போதும் தடைகளை உருவாக்க. தான் தடுக்கி விழுவதற்குக் காரணமான இத்தடைக்கற்களைப்பற்றி அறியாதவனல்ல மானுடன். மற்றவர்கள் தடுக்கிவிழுவதைப் பார்க்க நேரும்போது இரக்கப்படுவதும் காரணத்தைச் சுட்டிக்காட்டிப் பேசுவதும் அவன்தான். ஆனால் அவனையும் அதே கல்லில் தடுக்கிவிழவைத்துத் தீவாகச் சுருங்கவைத்து வேடிக்கை பார்க்கிறது வாழ்க்கை. இதுதான் வாழ்வின் முரண். இந்த முரணை அடையாளப்படுத்துவதில் காசரவள்ளியின் இப்படம் வெற்றியடைந்திருக்கிறது என்றே சொல்லவேண்டும்.

படம் முழுக்க ஒலித்தபடி இருக்கும் மழையின் ஓசையையும் ஆற்றின் ஓசையையும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். ஆறு பெருக்கெடுத்து வரும்போதுதான் அவன் மனம் குமுறத் தொடங்குகிறது. ஒரே இரைச்சல். ஆறு விலகி வேறொரு திசையில் பாய்ந்தோடும் அடங்கிய ஓசை எழும்போது அவன் மனம் அமைதியடைகிறது. கிராமம் தீவாகத் தொடங்கும்போது அவனும் தீவாகிவிடுகிறான். தீவுத்தன்மையிலிருந்து கிராமம் வெளிப்படும்போது அவனும் இறுக்கத்தைத் தளர்த்திக்கொள்கிறான். மழையையும் வெள்ளத்தையும் மனஉணர்வுகளின் படிமங்களாக வடிவமைக்கப்பட்டிருப்பதைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்.

மனைவியாக நடிக்கும் செளந்தர்யாவின் நடிப்பு மிகவும் பாராட்டுக்குரியது. இரவு முழுக்கத் துாங்காமல் வேகமும் துடிப்புமாக செயல்படும்போது வெளிக்காட்டும் உணர்வுகளையும் ஒரே கணத்தில் ஒரே வார்த்தையால் கணவனால் வீழ்த்தப்பட்டு மெளனமடையும்போது வெளிக்காட்டும் உணர்வையும் ஒப்பிட்டுப்பார்க்காமல் இருக்கமுடியாது. ஒரு விளிம்பிலிருந்து இன்னொரு விளிம்புக்கு நொடிநேரத்தில் மாறிவிடுகிறது முகஉணர்வு. இறுதிக்காட்சியில் கிடுகிடுவென கணவன் மேட்டில் ஏறிப்போவதும் தன்னைத் தாழ்த்திப்பேசும் அவன் வார்த்தைகளால் மனம் குன்றிச் சோர்ந்துபோகும் மனைவி சரிவிலேயே நின்றுவிடுவதும் கவித்துவமான காட்சி. அக்காட்சி பல கதைகளைச் சொல்லாமல் சொல்கிறது.

—————————–

paavannan@hotmail.com

Series Navigation

author

பாவண்ணன்

பாவண்ணன்

Similar Posts