பிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன் – மொரிஸ் ப்லான்ஷொ (Maurice Blanchot – 1907 -2003)

This entry is part [part not set] of 46 in the series 20031218_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


‘..But we must also admit that the literature, currently at least, constitutes not only an experiment personel, but a fundamental, blaming all, including itself, dialectical (…) the art is infinite dispute. –

– Maurice Blanchot

‘மொரிஸ் ப்லான்ஷொ ‘ படைப்பெனில் முகம் சுளிக்கும் வாசகர்கள் அனேகம். மொழிக் கடினம் என்றில்லாவிட்டாலும் கூட, அவரது ஆக்கங்களிலிருந்த அதிகபட்ச ‘கற்பு ‘ வாசகனின் பிரியத்தை ஏற்காமல் செய்தது. எனினும் சமகால பிரெஞ்சு படைப்பாளிகளில், அவருக்கிருந்த முக்கியத்துவம் எந்தவிதத்திலும் குறைந்தது அல்ல.

பொதுமக்களால் குறைவாக அறியபட்டவர். தன் ‘இருப்பை ‘ மேடையேற்ற விரும்பாத படைப்பாளி. எப்படியாவது தாங்கள் பேசப்படவேண்டுமென்பதற்காக ‘அறிக்கைகள், மறுப்புகள் ‘ எனக் கூவிவிற்று தன் ‘இருப்பை ‘ கடைபரப்பும் எழுத்தாளர்கள் வாழ்கின்ற இந்த நூற்றாண்டில் ஓசையின்றி தனது படைப்பில் மட்டுமே கவனம் செலுத்தியவர். ‘படைப்பினால் படைப்பாளியேயன்றி, படைப்பாளியால் படைப்பல்ல ‘ என்று உறுதியாக நம்பியதால் ஒளிந்து வாழ்ந்தார். இறக்கும் வரை அவரது புகைப்படங்களை பிரசுரிக்க அனுமதித்ததில்லை. தன்வாழ்நாளில் ஒருமுறைமட்டுமே நேர்காணலுக்கு (1960 – அல்ஜிரிய போர் காலத்தில்) சம்மதித்திருக்கிறார். அந்நேர்காணலைக் கூட சம்பந்தப்பட்ட பிரெஞ்சு வாரஇதழ் அவரது கோட்பாட்டிற்குத் தங்களால் பங்கம் நேர்ந்துவிடக்கூடாதென நினைத்து, பிரசுரம் செய்யாமல் தவிர்த்துவிட்டது. இப்படி ‘மொரிஸ் பிளான்ஷொ ‘ ஓடி ஒளிந்தாலும் பிரெஞ்சு அறிவு ஜீவிகளால் தேடிப் போற்றப்பட்டார். இவரை ஆராதனைச் செய்தவர்களை ழான்-போல் சார்த்ரு(Jean-Paul Sartre), ரெனே ஷர் (Rene Char), மிஷெல் ஃபுக்கோ (Michel Foucault) என வரிசைப்படுத்தலாம்.

1907ம் ஆண்டு பிறந்த ‘மொரிஸ் பிலான்ஷொ ‘, பள்ளி இறுதிவகுப்பின்போது வயிற்றில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சையினால் நேர்ந்த மருத்துவ குளறுபடியால் தன் இறுதிநாட்கள்வரை, உற்ற உடற் கேடுகள் அதிகம். அவ்வருத்தங்களின் வெளிப்பாடே ‘இறப்பின் எழுத்தாணி ‘ (LE FEUTRE DE LA MORT), ‘மரண தண்டனை ‘(L ‘ARRET DE MORT) போன்ற ஆக்கங்களுக்கு காரணமாயின. தவிர காசநோயும் தன்பங்கிற்கு இறக்கும்வரை இம்சித்தது. ஜெர்மானிய இலக்கியமும், தத்துவமும் படித்துத் தேர்ந்தவுடன் 1930-40களில் தீவிர வலதுசாரி அபிமானியாகவிருந்தார். இக்காலகட்டத்தில் வலதுசாரி இதழ்களிலும் பணிபுரிந்ததன் விளைவாக, அவரது படைப்புகளில் இலக்கியமும், அரசியலும் சமபங்கிற்கு இருந்தன. போர் முடிந்தபிறகு உடல் நிலை காரணமாக, தீவிர அரசியல்சார்பினை விடுவித்துக்கொண்ட நிலையிலும், சமூக நிகழ்வுகளிலிருந்து தன்னைவிலக்கிக்கொண்ட பார்வையாளனாக ஒருபோதும் கருதியதில்லை. இளமைக் காலத்தில் கொண்டிருந்த கொள்கைக்கு முற்றிலும் முரண்பட்டவராய் இடதுசாரிகளின் குணத்துடன் பிரெஞ்சு அரசின் ‘அல்ஜீரியப் போரினை ‘ எதிர்த்த்வர்களின் அணியிலும், பிரசித்திப்பெற்ற ‘மே 1968 ‘ மாணவர்கள் எழுச்சிக்கு, ஆதரவாளர்கள் தரப்பிலும் செயல்பட்டவர்.

அவரது எழுத்துக்களில் ஒரு தனித்தன்மை இருந்தது. மரபுவழி படைப்புமுறைகளில் விலகியவரெனினும் கட்டுடைத்தல், பிரதி, உள்பிரதி, பின் நவீனத்துவம் போன்ற கூண்டுகளுக்குள் சிக்கியவரல்ல. அவ்வாறே அவரது சிந்தனையில் தத்துவம் (NIETZSCHE, HEGEL, HEIDEGGER, LEVINAS…), இலக்கிய விசாரணை(MALLARME, KAFKA, LAUTREAMONT, SADE…), புராணக் கதைகள் என அனைத்தும் சங்கமித்துள்ளன.. அவரது எழுத்துக்கள் சராசரி வாசிப்புக்கு உட்பட்டதல்ல என விமர்சனம் செய்யபட்டபோதிலும்,. பெரும் வாசிப்புக்கு உட்படுத்த நினைக்கும், இலக்கியவாதிகளின் உபாயங்களை அவர் கையாண்டவரல்லர். பிரபல இலக்கிய விமர்சகர் ‘ரொழெ லாபோர்த் ‘ ( ‘L ‘IMPOSSIBILITE DE PARLER DE LUI ‘ – ROGER LAPORTE)சொல்வதுபோன்று, ‘அவரது படைப்புகளை மட்டுமே முன்நிறுத்தபடுவதால் ‘அவரை ‘ச் சிலாகிக்க விஷயமில்லை ‘ என்பதனை ஒப்புக்கொள்ளவேண்டும்.

கஃப்கா (KAFKA)கொடுத்த உத்வேகத்தில் எழுதிய கற்பனை புதினங்களை விட அவரது கட்டுரைகள் முற்றிலும் வித்தியாசமானவை. சமூகம், நீதி, வெளி, நித்யம், அநித்யம் என கதையளக்காமல், பொய்யான நம்பிக்கைகள் பற்றி பேசாமல், நிதர்சனம் குறித்த தெளிவைநோக்கி அழைத்துச் செல்பவை அவை. இக்கட்டுரைகளில் பிலான்ஷொ முற்றிலும் புதிய கோளில் வாசகனை நிறுத்தி, ‘காத்திருப்பு ‘, ‘இன்மை ‘, தடங்கல், மறதி, அமைதி அனுபவங்கைளை ஏற்படுத்தித் தருகிறார். நம்மை வருத்துவதற்கெனவே சொற்களும், கேள்விகளுமாக தொடருகின்ற அவரது படைப்பு, நம்மை அந்தரத்தில் நிறுத்திவிட்டு வேடிக்கை பார்க்கிறது.

‘இலக்கிய வெளி ‘ (L ‘ESPACE LITTERAIRE) அவரது மிகச்சிறந்த படைப்புகளிலொன்று. பதில்களைவிட ‘கேள்விகளே ‘ இங்கே அதிகபட்சமாக எடுத்தாளப்படுகின்றன… அக்கேள்விகளில் வெளிப்படுகின்ற எளிமையின் ஊடாக அடுக்கடுக்கான படிமங்களையும், உருவங்களையும் உய்த்துணருகிறோம். அவரைப் பொறுத்தவரை இலக்கியத்தின் தொடக்கமே, கேள்வியாக வடிவெடுப்பதில் உள்ளதென (LA LITTERATURE COMMENCE AU MOMENT OU LA LITTERATURE DEVIENT QUESTION) நம்புகிறார். ‘ஓர் உயிர் (UN ETRE) ஏன், எப்படி படைப்பாளியாகின்றது ? ‘, ‘ எழுத்தென்பது ஓர் அனுபவம், எவ்வாறு ? ‘, ‘மொழி, படைப்பின் பொருள், சொல், படைப்பு – படைப்பாளி இவற்றுக்கிடையே, உயிருக்குள்ள பந்தமென்ன ? ‘ இக்கேள்விகளின் தோற்ற எளிமையும், அவற்றின் வாசிப்பில் நம்மிடமெழும் முடிவில்லா பதில்களும் ‘மொரிஸ் பிலான்ஷொ ‘ எழுத்துக்களுக்கே உரிய குணங்கள். படைப்புகளில் செயற்கை செளந்தர்யங்களின்றி, உணர்ச்சி அரிதாரங்களைத் தவிர்த்து, ஆழ்மனநிலைகளை மிக நுணுக்கமாக ஆராய்வதை இஅவரது படைப்புகளில் குறிப்பாக ‘படைப்புக்கும் – உயிருக்குமுள்ள பந்தங்களில் காணமுடிகிறது. ‘மறுப்பும் – ஏற்பும் ‘ வாழ்வைப் பற்றிய மதிப்பீடுகளாக நம்முள் வலம் வருகின்றன. வாசகனை எதிரே வைத்துகொண்டு ‘நான் தனியொருவன் ‘ என வாதிடும் அவரது முரண்பாடே ஏனைய படைப்பாளிகளிடமிருந்து வேறுபடுத்த உதவுகிறது.

அவரது படைப்புகளில் 1941ல் வெளிவந்த ‘தெளிவற்ற தொமா (THOMAS, L ‘OBSCUR ‘- மிகவும் புகழ்பெற்ற புதினம்- வெற்றிடத்தைத் தேடும் ஒர் அன்னியனின் கதை), ‘அமினதாப் ‘(AMINADAB -1942), ‘உச்சி ‘ (LE TRES-HAUT -1948), ‘மரண தண்டனை ‘ (L ‘ARRET DE MORT -1948), ‘இலக்கிய வெளி ‘(L ‘ESPACE LIITRAIRE-1955), ‘பதிப்பில் உள்ள நூல் ‘(LE LIVRE A VENIR-1959), ‘முடிவில்லா உரையாடல் ‘( L ‘ENTRETIEN INFINI -1969) ஆகியவை முக்கியமானவை.

AGNES PEGORIER சொல்வதுபோன்று ‘பிலான்ஷோவின் உரை அல்லது கட்டுரையை வாசிப்பதென்பது ஒரு கடினமான அனுபவம் மட்டுமல்ல களிப்பான அனுபவம் கூட ‘ ( PLONGER DANS UN RECIT OU UN ESSAI DE BLANCHOT, EST UNE EXPERIENCE ARDUE ET PASSIONNANTE)

————–

Na.Krishna@wanadoo.fr

Series Navigation

author

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts