பிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன் – ழான் தர்தியெ (Jean Tardieu 1903 – 1995)

This entry is part [part not set] of 40 in the series 20031204_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


‘I have the impression to have turned in round all my life, so that I do not know at all if I am a child or an old man. Or a child who speaks already about his old age, or an old man who still speaks about his childhood ‘

– Jean Tardieu

கடந்த நவம்பரில் ‘ழான் தர்தியெ ‘வுக்கு நுற்றாண்டுவிழா எடுத்திருந்தார்கள். இவரை எங்கே நிறுத்துவதென்பது இன்றளவிலும் குழப்பம் உண்டு. நாடக ஆசிரியர், கட்டுரையாளர், மொழி பெயர்ப்பாளர், வானொலிக் கர்த்தா, ஓவிய விமர்சகர், கவிஞர் என எந்தக் கிரீடத்திற்கும் இவரது தலை பொருந்தும். கிட்டத்தட்ட இருபதாம் நூற்றாண்டு முழுக்க (1903 -1995) வாழ்ந்து மறைந்த ‘தர்தியெ ‘ ஒரு காட்டாறு வெள்ளமென சீறிப் பயணித்து, எந்தவெல்லைக்கும் பிடிபடாமல், தன் பயணமெங்கும் கலைப் பிரவாகமாய் வடிந்து முடிந்திருக்கிறார்.

பிறப்பு நவம்பர் 1, 1903. தந்தை ஓவியர், தாயார் இசைக்கலைஞர். அவரது படைப்புக்கள் ஓவியத்தையும், இசையையும் இணைக்கும் முயற்சி. விளைவு, படைப்புகளில் இசையின் இனிமையும், ஓவியத்தின் அழகும் புணர்ந்த நிலை. இஇவரது பதினேழாவது வயதில் ஒருநாட் காலை நிலைக்கண்ணாடி முன்நின்று முகச்சவரம் செய்ய, ஆடியில் தெரிந்த இஇவரது பிம்பம் கேள்வியெழுப்புகின்றது.. அன்றிலிருந்து அவருக்குள்ளிருந்த ‘நகல் ‘ அவரிறக்கும்வரை பின்தொடர்ந்து வருவதை 1920 வெளிவந்த ‘அந்நிய விசாரம்(INQUIETANTE ETRANGETE-LE FLEUVE CACHE, LA PART DE L ‘OMBRE) படைப்பிலும், 1990ல் வெளிவந்த அவரது இளமைக்கால நினைவு தேடுதலான ‘திருவாளர் ழானைத் தேடிவிட்டு வருகிறோம் ‘( ON VIENT CHERCHER MONSIEUR JEAN) படைப்புகள்வரை காணமுடிகின்றது. நாஜிகள் இரண்டாவது உலக யுத்தத்தின்போது பிரான்சை ஆக்ரமித்த சூழலில், தலை மறைவு வாழ்க்கை மேற்கொண்டு அவர்களுக்கெதிராக இயங்கிய படைப்பாளிகளுள் ஒருவர். பின்னர் பிரெஞ்சு வானொமியிற் பணியாற்றத் தொடங்கி, பிரெஞ்சு தேசிய வானொலியை இசை இலக்கியம் என பேசவைத்த கலை இலக்கிய அபிமானி.

ஐம்பதுகளில் நவீன நாடகங்களின் பரிசோதனைகள் செய்யப்பட்ட காலம். மேல்தட்டு மக்களின் மரபுவழி நாடக ரசனைகளுக்கு மாறாக, சாமனிய மக்களுக்கென நாடகங்கள் எழுதப்பட்டன. மேடையேற்றபட்டன. ‘மற்றவர்கள் சொல்லாதது, மற்றவிடங்களில் மேடையேறாதது ‘ (ON VEUT FAIRE CHEZ NOUS CE QU ‘ ON PEUT PAS FAIRE AILLEURS)என முன் அறிவிப்போடு மேடையேற்றப்பட்ட ‘புதிய நாடகவியலாலர்கள் ‘ வரிசையில் இவரது நாடகங்கள் அமைந்தன. நல்லதோ கெட்டதோ பார்வையாளர்களுக்கு அவற்றுள் ஆச்சரியங்கள் காத்திருந்தன. ஒவ்வொரு முறையும் ‘அட இன்னும் என்ன சொல்லப்போகின்றார்கள் ? (QU ‘ EST-CE QU ‘ ILS ONT ENCORE INVENTE ?) எனக் கேள்விப் பசியோடு வந்தவர்களுக்குச் சுடச் சுடப் பதில்கள்பரிமாறபட்டன. ஐம்பதுகளில் எழுதபட்ட இவரது குறுநாடகங்களில் வெளிப்படுத்தபட்ட வார்த்தை ஜாலங்களின் வெற்றி அப்போதைய நவீன நாடகவியலாளர்கள் வரிசையில் இவருக்கென தனி இடத்தைக் கொடுத்தது. தார்தியே நாடகமென்பது ‘இழுத்துக் கட்டிய வாத்தியக் கருவியின் நரம்பின் ஓசை ‘ ( PRATIQUE A LA MANIERE D ‘UN CLAVECIN BIEN TEMPERE) என வருணிக்கபடுகிறது. அவரது நாடகங்கள் உணர்வு மற்றும் வடிவங்களின் ஆய்வுக்கூடம். அவ்வாய்வுகூடத்தில், மேல்தட்டு மற்றும் நடுத்தர மக்களுக்கான மரபுவழி நாடகங்களில் சொல்லப்பட்ட, நகைச்சுவை என அறியபட்ட அபத்தங்களுக்கு முடிவுகட்டபட்டன. ‘தர்தியே ‘ வின் நாடகங்கள் சமூகங்களின் அவலங்களை வார்த்தை அலங்காரங்களில் கிண்டல் செய்தன. இவரது குறுநாடகங்கள் அனைத்துமே (உ.ம் ‘அடுத்தவருக்கான வார்த்தை ‘ (un mot pour un autre), ‘சொல்லி.. முடித்துவிடு. ‘.( Finissez vos phrases), சமூக அக்கறை கொண்டவை.. எளிமைக்காகவும், சொல்லப்பட்ட செய்திகளுக்காகவும் பலமுறை மேடையேற்றபட்டவை.

இவரது நாடக உலக வெற்றிகள் நன்கு அறியபட்டபோதும், உரைநடை உலகிலும் நாற்பதுகளிலிருந்தே அறியப்பட்டவர். சொற்களின் ஆற்றலை உணர்ந்து, உரிய இடத்தில் கையாளும் திறன் கொண்ட சொலல் வல்லான். ஒரு சொல்லுக்கு ‘அகர முதலிகள் ‘ எழுத்து வடிவில் கொடுக்கும் புரிதலைவிட அவரது எழுத்தோவியங்களான உரைநடைகள், கவிதைகளில் கிடைக்கும் புரிதலில் தெளிவு அதிகம். ஒருவேளை அவை உள்ளடக்கத்தைவிட வடிவில் காட்டியுள்ள அக்கறையா ? (PLUTOT VERS L ‘ASPECT PHYSIQUE QUE L ‘ ASPECT INTELLECTUEL) என்பது தெளிவாக்கிக் கொள்ளவேண்டிய கேள்வி. இச்சிறப்பம்சங்களால் அவரது கவிதைகள் எல்லாதரப்பு மக்களாலும் அறியப்பட்டு தொடர்ந்து பலபதிப்புகள் இன்றளவும் வந்தவண்னமுள்ளன. அவரது எளிமையான பெரும்பாலான கவிதைகளில், முகமற்ற பெயரற்ற எதிரிகளிடம் நமது சித்தர்களுக்குண்டான பயம் வெளிப்படுகிறது. அவரது கவிதைகளில் ‘ஒரு புதுவெள்ள வேகம் ‘. எதிர்ப்படுகின்ற எவற்றையும் வேறோடு பிடுங்கி எறிகின்ற ஆற்றல். பாரதிதாசனின் ‘இயற்கைத் தேவியின் கோபம் ‘ இயல்பாய் பொருந்துகின்றது. கூடுதலாக தனது படைப்புகளில் சொற்களுக்கு மெட்டி அணிவித்து ‘தர்தியெ ‘ எழுத்தினை எல்லா வடிவத்திலும் பிரசவித்து மகிழ்ந்தவர், மகிழவைத்தவர். கட்டுரைகளானாலும் சரி, கவிதைகளானாலும் ஒவ்வொரு முறையும் ஏதோவொன்றை புதியதாய் இணைத்து விடுகிறார். அங்கே ‘சொல் புதிது, பொருள் புதிது ‘ என்பதோடு ‘வடிவமும் புதிது ‘ என்பதனை அவரது எழுத்துக்குரிய அடைமொழிகளாக கொள்ளவேண்டும். Vers Libres (Free Verse) வகையைச் சார்ந்த அவரது அனைத்துக் கவிதைகளுமே வித்தியாசமானவை. அவற்றுள் ‘வலது கைகளுக்கான கவிதைகள் ‘ தலைப்பில் வரும் ‘மேசைமேல் இருத்திய கருவிகள் ‘ (OUTILS POSES SUR UNE TABLE) ‘பிக்காசோ ‘ வின் ஓவியத்துடன் ஒப்பிடப்படுகின்றது. இங்கே படைப்புக்கலைஞனின் கருவிகளாக வினைச்சொல், உரிச்சொல் பெயர்ச்சொல்…. ஆகியவை உருவகமாகக் கொள்ளப்படுகின்றன. இவனது பணிக்கூடம் காகிதம். இறுதியில் படைத்து முடித்த படைப்பாளி கால வெள்ளத்தில் கரைந்து போகலாம், ஆனால் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு அவனது படைப்பு என்றுமழியாமல் சிறக்கும். மரணமிலா பெருவாழ்வு அதற்கு விதியாகிப்போகுமென, படைப்பின் பெருமையை அழுந்தச் சொல்கிறார்.

நாடகங்கள், கட்டுரைகளைவிட கவிதைகளே ‘தர்தியெ ‘ வின் இலக்கியத் தகுதியை நிர்ணயித்தன. 1972ல் பிரெஞ்சு அகாதெமி தனது மிகப்பெரிய பரிசை(GRAND PRIX DE L ‘ACADEMIE FRANCAISE) 1976ல் பிரெஞ்சு விமர்சகர்களின் பரிசு(PRIX DE LA CRITIQUE). 1993ல் பிரெஞ்சு இலக்கிய உலகின் பரிசு(GRAND PRIX NATIONAL DES LETTRES) ஆகியவை அவற்றுள் குறிப்பிடத் தகுந்தவை.

இவரது படைப்புகளில் நன்கு அறியப்பட்டவை: 1951ல் ‘ ஐயா.. ஐயா.. ‘ (MONSIEUR.. MONSIEUR) 1955 ல் ‘அறையின் நாடகம் ‘(THEATRE DE CHAMBRE, 1978ல் பேராசிரியர் ஃப்ர்பெல் (PROFESSEUR FRPPEL) 1991ல் எழுத்தின் மூலம் இன்பம் துய்க்கிறேன்: முன்பொருமுறை, இரண்டு முறை, மூன்றுமுறை (JE M ‘AMUSE EN RIMANT: IL ETAIT UNE FOIS, DEUX FOIS, TROIS FOIS)

‘ஏதுமற்ற சிறுபிள்ளை ‘ ( LA MOME NEANT)

ஏதேனும் ‘அவன் ‘ சொன்னானா ?

‘அவன் ‘ ஏதும் சொல்லவில்லை.

ஏதேனும் ‘அவன் ‘ செய்தானா ?

‘அவன் ‘ ஏதும் செய்யவில்லை

எது பற்றியது ? ‘அவன் ‘ சிந்தனை ?

அவனுக்கேது சிந்தனை

ஏன் ‘அவன் ‘ ஏதும் சொல்வதில்லை ?

ஏன் ‘அவன் ‘ ஏதும் செய்வதில்லை ?

ஏன் ‘அவன் ‘ எதுபற்றியும் சிந்திப்பதில்லை ?

‘அவன் ‘ ஏதுமற்ற சிறுபிள்ளை. -ழான் தர்தியெ (Jean Tardieu)

———————————————–

Na.Krishna@wanadoo.fr

திண்ணை பக்கங்களில் பிரெஞ்சிலக்கியம் பற்றி நாகரத்தினம் கிருஷ்ணா

  • அல்போன்ஸ் தெ லமர்த்தின்

  • மிலன் குந்தெரா

  • மிஷெல் ஹுல்பெக்

  • பஸ்கால் கிஞ்ஞார்

    Series Navigation

  • author

    நாகரத்தினம் கிருஷ்ணா

    நாகரத்தினம் கிருஷ்ணா

    Similar Posts