முகங்கள் – அலென் வியோம் – கவிஞர் வைத்தீஸ்வரன்

This entry is part [part not set] of 53 in the series 20031127_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


ஓடும்மனம் நம்மினுடன் உறவுசெயுமாகில்

உள்ளநிலை மெல்ல உணர்வு ஆகிவரு மாகில்

நாடும்இடம் எங்கும் அறிவு ஆகிவிடு மாகில்

நல்லகுரல் நல்லதிசை சொல்லுசிறுபல்லி -(பல்லிப்பாட்டு – தத்துவராயர்)

முகமற்ற உயிரை கற்பனை செய்ய இஇயலுமா ? எல்லைகற்கள் பிடுங்கப்பட்டு, வரப்புகள் கொத்தப்பட்டு, தடைகள் நீக்கப்பட்டு கைகுலுக்க உதவும் பொதுமொழி முகம். அது முழுமையான ஒரு நாடகமேடை. நமது உறவும் பகையும் முகங்களில் உள்ளன. ஏற்பதும் இகழ்வதும் முகத்தால் மட்டுமே மொழிபெயர்க்கபடுகின்றன.

முகமென்ற சொல்லுக்கு அகராதியில் ஆயிரக்கணக்கில் பக்கங்கள் ஒதுக்கலாம் அல்லது அகராதியே எழுதலாம். உருவம், சுரூபம், பிரதிமை, பாவனை, வடிவு, சாயல் நிழல் அனைத்துமே முகத்தில் முடிந்துவிடுகின்ற பிம்பம் என்ற சொல்லின் பலபொருள். கி.மு ஆறாம் நூற்றாண்டின் ‘பர்மேனிட் ‘(Parmenide) இப்பிரபஞ்சத்தை இரு எதிரெதிர் கொள்கைகளில் (ஒளி -இருட்டு, கடுமை-மென்மை வெப்பம் -குளிர்..) தளத்தில் நிறுத்தியதைப் போன்று பிம்பத்தையும் உணமை – பொய்யென்று கிள்ளிபோடலாம். இந்தப் பிம்பம் அரூபமாக மனதிற்மட்டுமே முடிந்துபோகலாம்(Image Mentale) அல்லது காட்சியாகக் கொண்டுவரச் செய்யலாம் (Image Virtuelle). எப்படியிருப்பினும் பிம்பம் என்பது ஒன்றை உள்வாங்கி வெளிப்படுத்தும் பிரதி. மனமோ, தொலைக்காட்சிப் பெட்டியோ, புகைபடக் கருவியோ…….அல்லது வேறு எதுவாகவிருப்பினும்.

நான்காண்டுகள் இந்தியாவில் காலம்தள்ளிவிட்டுத் திரும்பியிருக்கும் பிரபல பிரான்சு புகைபடக் கலைஞர் அலென் வியோம் (Alain Willaume)னின் புகைப்படக் கண்காட்சியை சென்ற வாரம் எனது Strasbourg நகரில் பார்க்க நேர்ந்தது. தலைப்பு ‘படுகுழியின் விளிம்புகள் ‘ (Bords du Gouffre). அவரது கடந்த பதினைந்து ஆண்டுகால புகைப்படநிபுணத்துவத்தின் பின்னோக்கிய பார்வை. பார்த்தேன்-ரசித்தேன்-தரிசித்தேன். அப்புகைப்படங்கள், பல்வேறு உணர்வுகளோடு பார்வையாளர்கள் மனங்களைக் கைப்பிடித்து அழைத்து செல்கின்றன. புகைபடங்களின் கரு – முகங்கள். முகத்திரையிட்ட மூகங்கள். அவற்றுள் புனேவில் அசுத்தகாற்றினின்று தப்பமுயலும் முகத்திரையிட்ட முகங்களும் அடக்கம்.

முகங்கள் அவற்றின் பார்வைகள். பார்வைகள் வெளிபடுத்தும் பயங்கள். முகங்கள் பார்வைகளில் மட்டுமல்ல, அவற்றின் பின்புலக் காட்சியின்

நிர்மலமான வெற்றிடத்திலும் அச்சம் படிந்திருப்பதை உணரமுடிகின்றது. இருட்டைப் புரிந்து கொள்ளும் முயற்சி. பல நேரங்களில்:

‘கருத்தை மருட்டியது கவலை

கிட்டாத கசப்பும்

நெஞ்சைக் குமட்டிவர

முகத்தின் முக்கால் பரப்பும்

இருள்மண்டி விளிம்புகட்ட

விழியை வெறுவெளியில்

குத்தி நின்றேன்…. (பொன் வேட்டை)

எனச் சொல்கின்ற கவிஞர் வைதீஸ்வரனின் கவிதைமுகம்.

அம்முகப்பிம்பங்கள் வெளிபடுத்தும் அமைதியும் அபயக்குரலும் மனதிமட்டுமல்ல உடலிலும் ஒரு வித சிலிர்ப்பை ஏற்படுத்திவிட்டுதான் ஓய்கின்றன. அம்முகங்களில் ஏதோ ஒருவித இறுக்கம், நடுக்கத்துடன் விலகமுயற்சிக்கும் விட்டில் பூச்சியின் இயல்பு. அச்சத்திற்கும் அமைதிக்குமிடையில் ஊசலாடும் தன்மை முகத்திரையிட்ட அனைத்து முகங்களிலும் வெளிப்படுகிறது. நடைமுறையோடு ஒட்டாத முகங்கள் அவை. உலகவாழ்விலுருந்து தப்பிக்கவிழையும் சன்னியாசப் பார்வை அக்கண்களில். அம்மாதரியான முகங்களில்தான் இவ்வுலகத்தின் இயக்கமும் முடக்கப்படுகிறது என்பதனை உணர்த்தும் புகைப்படங்கள். அனைத்துமே பதுங்கும் தன்மை கொண்ட, தப்பிக்க விழையும் முகங்கள். ஒளிவதற்கு உபகரணங்களாக முகத்திரைகள், துவாலைகள், கண்களை மறைத்த கண்ணாடிகள். அம்முகங்களுக்குள் வேற்றுமையின்றி வெளிப்படும் அபூர்வ அன்னியப் பார்வை. அப்பார்வைகளில் நிறைந்திருப்பது வெற்றிடம்- இருட்டு – சூன்யம். அப்பார்வையை பொருள் கொள்ள நமக்கு இயலாமை. அல்லது விருப்பமில்லாமை. அப்பார்வைகளில் ‘ஒரு தொலைநோக்கு ‘ இருந்திருக்கலாம். ‘குறுகிய பார்வை தவிர்த்திருக்கலாமென்பதான ‘திடார் ‘ அபிப்ராயங்கள் பார்வையாலர்களுக்குத் தோன்றக்கூடும். நம்முகங்களைபற்றிய பிரக்ஞையற்று, அடுத்தவர் முகங்களில் மட்டுமே காணவிழைகின்ற எதிர்பார்ப்புகள். சூன்யத்தில், இருட்டைச் சுமந்து எதிர்காலத்தின் அவநம்பியற்றிருக்கும் பார்வை. இந்த அவநம்பிக்கை நம்மிடமும் இருக்கிறது. இந்த அவநம்பிக்கையில் நமக்கும் பங்கிருக்கிறது. நம்மைப்போலவே அவைகளும் காத்திருக்கின்றன. நாம் எதற்காகக் காத்திருக்கிறோம் என்பதையும் அவை அறிந்திருக்கிந்றன. வெளிச்சத்திடமிருந்து திரையிட்டு மறைந்துகொள்ளும் இக்குணத்தின் மூலமென்ன ? நெடுநாளாக கருப்பை இருட்டிற்குப் பழகிப்பழகி, திடுமென்று யோனியளித்த வெளிச்ச மிரட்சி நமது ஒளிசேர்ந்த வாழ்விற்குத் தடையாக வந்து சேர்ந்திருக்குமோ ?

நமது பகுத்தறியும் வல்லமையை எப்போதேனும் இம்மாதரியான முகங்களில், அவற்றின் பார்வைகளிற் பிரயோகிப்பதுண்டா ? அம்மாதரியான பார்வைகளில் வட்டமிடும் பயம் எவரிடம் ? ‘விளிம்பைத்தொட்டால் சூழலில் சிக்கிப் புதைந்துவிடுவோம் ‘ என்கின்ற சமூக அச்சமா ? எதற்காக அம்முகங்களுள் எட்டிப்பார்த்து ஒதுங்கும் பயம் ?. எதற்காக இந்த விளிம்பு வாழ்க்கை ? இவ்வச்சச் சூழலில் விடுபடும் எண்ணமேதும் அக்கண்களுக்கும் அவை சார்ந்த முகங்களுக்கும் இல்லையா ? இவைகளுக்கான பதில் நம்மிடத்திலில்லை. மாறாக ‘முடிந்தபோதெல்லாம அகழ்ந்தெடுத்து படுகுழியின் விளிம்பில் அவர்களை நிற்கவைத்து பயம் வேண்டாம் என்றால் எப்படி ? ‘ என்ற கேள்வியே பதிலாக நமக்குள்.

‘ஓடு

இருட்டுக்கு, காட்டுக்கு,

வானுக்கு… மூலைக்கு

எங்காகிலும் ஓடு,

உலகத்தை விட்டு! ‘ (மைலாய்வீதி -கவிஞர் வைதீஸ்வரன்) என எச்சரிக்கைபெற்ற இருபதாம் நூற்றாண்டு முகம்.

அலென் விய்யோம் இருட்டுப் படுகுழியை ஒட்டி நிற்கின்ற பிம்பங்களை புரிய, அவற்றின் பார்வையை அறிய. நம் கண்களை இருட்டிற்குப் பழகிக்கொள்ளவேண்டும். உங்களைச் சுற்றிய வெளிச்சத்தை குறைத்துக் கொண்டு முகங்களை தரிசியுங்கள்

எத்தனை முகங்கள்.. எத்தனை முகங்கள்..

நேற்றைய கனவில் நீங்கா முகமும்

நெடுநாளாக தேடும் முகமும்

சோற்று வாழ்வில் சுகப்படும் முகம்

சொந்தம் வேண்டாம் சொல்லிடும் முகமும்

ஏக்கக் கேணியில் இறங்கிய முகமும்

ஏப்பம் கண்களில் நிறுத்திய முகமும்

எல்லாம் எனக்கே என்றிடும் முகமும்

எல்லாம் தனக்குள் பேசிடும் முகமும்

கூடும் முகமும் குலவும் முகமும்

குறைகளை நிறைவாய்க் காட்டும் முகமும்

வாடும் முகமும் வனங்கும் முகமும்

வாழ்வுக்காக ஏங்கும் முகமும்

எத்தனை முகங்கள் எத்தனை முகங்கள்….

இன்றைக்கொன்று நாளைக்கொன்று

எந்தமுகத்தை சொந்தம் இழக்கும்

முகத்தினைத் தேடி மொய்க்கும் கண்களை

உதறும்போது உள்ளம் சிலிர்க்கும்!

மனத்தின் நிறத்தை முகத்தில் தெளிக்கும்

மந்திரத் தூரிகை மகிமையிற் சிரிக்கும்

எத்தனை முகங்கள்… எத்தனை முகங்கள்..

———————————————————————————–

Na.Krishna@wanadoo.fr

Series Navigation

author

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts