பிரஞ்சிலக்கியம் பேசுகிறேன் – அல்போஃன்ஸ் தெ லமர்த்தின் (Alphonse de LAMARTINE (1790 – 1869)

This entry is part [part not set] of 44 in the series 20031113_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


‘நாடென்பது எனக்கு எப்போதும் மனிதர்களன்றி வேறல்ல ‘ – லமர்த்தின் (-கிராஸியெல்லா)

லமர்த்தின் 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரான்சு நாட்டின் புகழ்பெற்ற கவிஞர், அரசியல்வாதி. ஆங்கிலக் கவிஞன் பைரன் பிரபுவின் சமகாலத்தவர். அக்டோபர் 21 1790ல் மாக்கோனில்( Macon) பிறந்து பிப்ரவரி 28 1869ல் பாரீஸில் இறந்தவர். லாமர்த்தீன் என்ற பெயருக்குப்பின்னே அழகன், வசீகரன், கண்ணில் நீர்ச்சுரக்க கவிதை பேசுபவன் என்கின்ற அடைமொழிகளுண்டு. அவரது கவிதைகள் கற்பனை வளமும், மயக்கும் செளந்தர்யமும் கொண்டவையெனவும், மனதிற் சலனமூட்டக் கூடியவையெனவும் கொள்வோருண்டு. அதற்கு மாறாக, நெகிழ்ச்சியுடன் கூடிய இணக்கமும், பிரவாகமெடுக்கும் உணர்வும், கண்களைக் குளமாக்கும் குணமும் உடையவையென கொண்டாடுவோருமுண்டு. தலைக்குக் கிரீடமோ ? கழுத்திற்கு மாலையோ ? எதுவென்றால் என்ன ? இரண்டிற்குமான தகுதிகள் ஏராளமாக இவரிடம் உள்ளன.

பிரபுக்கள் குடும்ப அடையாளம் பிறப்பிலிருந்ததால் வறுமை அறியா இளமை. ஆறு தங்கைகளுக்குச் சகோதரன். அன்னையின் முலைப்பாலில் மொழிப்பாலுமிருந்தது. இலக்கியக் கல்வியை இயேசு சபையிடமிருந்து (Jesuites) பெற்றார். பின்னர் முதன்முறையாகஇத்தாலிக்குச் சென்று பாரீஸுக்குத் திரும்பியவுடன் அக்காலத்தில் பிரஞ்சு நாடக உலகில் புகழ்பெற்றிருந்த ‘தல்மா ‘ என்கின்ற நாடகக் கலைஞருக்காக ஒரு துன்பவியல் நாடகமொன்றை எழுதினார். ஆனால் அந்நாடகம் இறுதிவரை மேடையேறவில்லை. மீண்டும் இத்தாலிக்குச் சென்றபோது, நப்போலித்தேன் நங்கையொருத்தியைச் சந்திக்க நேரிடுகின்றது, அவளையே நாயகியாக உருவகித்து ‘கிராஸியெல்லா ‘ (Graziella) என்கின்ற காதற்புதினத்தைப் படைக்கின்றார். மத்தியதரைக் கடற்பகுதி மீனவப் பெண் ‘கிராஸியெல்லா ‘ கதையின் நாயகி. கவிஞர்களுக்கேயுரிய முழுக்க முழுக்கக் கவித்துவமிக்க உரைநடை.. இங்கே பிரான்சில் அரசியல் மாற்றம். முதலாம் நெப்போலியனின் வீழ்ச்சிக்குப் பிறகு ஆங்கிலேயர்களின் உதவியோடு பதவியேற்ற பதினெட்டாம் லூயியின் தொடக்கக் கால ஆட்சியான ‘முதலாவது ஆட்சி சீரமைப்பு ‘ (La Premiere Restauration) காலத்தின்போது இவருக்கு மெய்காப்பாளர் பணி. இலக்கியம் மீண்டும் அவரை ஈர்க்கிறது. மீண்டும் அரசியலுக்குள் நுழையும் முதலாம் நெப்போலியனின் இஇறுதி நூறுநாட்ககளில் (Cent-jours 20 mars 1815 – 22 juin 1815) தலைமறைவு வாழ்க்கை.. 1816 செப்டம்பரில் ‘நீராவிக் குளியலுக்காக ‘ சென்றவிடத்தில் ‘பூர்ழெ ஏரிக்கரையில் ‘ (Le lac du Bourget) சந்திக்க நேர்ந்த ழூலி ஷார்ல் (Julie Charles) என்கின்ற மணமான பெண்ணிடம் ‘லமர்த்தினுக்கு ‘ ஏற்பட்ட நெருக்கமான உறவு, அவளது எதிர்பாராத இறப்பின்காரணமாக முடிவுக்கு வந்துவிடுகிறது. இவ்வனுபவத்தின் வழித்தடமே ‘l ‘Elvire du Lac ‘ என்கின்ற கவிதை. அதனைத் தொடர்ந்து எழுதப்பட்டக் கவிதைகள் அனைத்துமே ‘லமர்த்தினின் ‘ சுய அனுபவங்கள். அப்படைப்புக்களில், கவிஞரின் மனத்துள் எழுந்த கேள்விகளும் அவற்றுக்கான பதில்களும் அடர்த்தியாய் ஆக்ரமித்துள்ளன. உணவுர்கள் கவிதைகளுக்கான ஊற்றுகண்களாக உடைத்துக்கொண்டு பீரிடுகின்றன. 1817ல் எழுதப்பட்ட ‘ஏரி ‘ மற்றும் ‘ நித்யம் ‘ (le Lac et l ‘immortalite) 1818ல் வெளிவந்த ‘ஏகாந்தம் ‘ (l ‘Isolement), 1819ல் எழுதப்பட்ட ‘மாலை நேரம் ‘ (Le soir), ‘ஞாபகம் ‘ (le Souvenir), ‘பள்ளத்தாக்கு ‘ (le Vallon), இலையுதிர்காலம் (L ‘automne) ஆகியவை, செறிந்த உணர்வுகளின் ஆழத்தை வெளிப்படுத்தும் அவரது நேர்த்தியான கவிதைகளில் அதிமுக்கியத்துவம் பெற்றவை. ஆரம்பகாலத்தில், பாரீஸிலிருந்த அப்போதைய பிரபல பதிப்பகங்கள், அவரது பதிப்புகளை நிராகரிக்கின்றன.. பின்னர் 1820ல் முதலாவது கவிதைத் தொகுப்பான ‘தியானம் ‘ (Meditations Poetiques et religieuses) பதிப்பிக்கபடுகிறது. பதிப்பிக்கபட்ட நான்காண்டுகளில் 45000 பிரதிகள் விற்றதென்பது, பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஓர் இமாலயச் சாதனை. 1820 ஜூன் 5ல் ‘மேரி -ஆன் ‘ என்ற ஆங்கில நங்கையை மணம் புரிகிறார். 1823ல் ‘தியானம் ‘ இரண்டாவது தொகுதி வெளியீடு. பிறகு வெளிவந்த கவிதைகளில் அவரின் முதிர்ச்சியைக் குறிக்கும் ஆன்மீக வெளிப்பாடுகள் தெளிவாகவுள்ளன. அவற்றுள் ‘சாக்ரடாஸின் இறப்பு ‘, ‘ஷில்து ஹரோல்டின் புனித யாத்திரை இறுதிப் பாடல் ‘ (La Mort de Socrate, Le Dernier Chant du pelerinage de Child Harold – இக்கவிதை ‘கவிஞர் பைரனுக்கான ‘ அஞ்சலி)) முக்கியமானவை. இத்தாலிக்கும், புழுதிமனிதர்களுக்குமான ஒரு நிறுத்தற்குறி ( Une apostrophe a l ‘Italie et a la ‘Poussiere humaine ‘) என்கின்ற கவிதையினால் கோபமூண்ட இத்தாலிய தளபதி ஒருவனால் மோசமாகத் தாக்கப்பட, ஆபத்தான நிலையில் பிரான்சுக்குத் திரும்ப நேரிடுகிறது. பிரான்சு மன்னனான பத்தாம் சார்லஸ் ‘லமர்த்தினை கெளரவிக்கும் பொருட்டு, படைவீரர்களுக்கு அளிக்கப்படும் மிகப்பெரிய சிலுவைப் பதக்கத்தை ( La Croix de la Legion d ‘honneur) அளிக்கிறான். 1829 நவம்பரில் பிரபுவாக தேர்வு செய்யபட்டு அரசியற் பிரவேசம். இத்தொடர்பு 1848 வரை நீண்டது. தன்னுடைய அரசவை பிரநிதித்துவ காலத்தில் இவராற்றிய உரைகள் பிரசித்தி பெற்றவை. அவற்றுள் குறிப்பாக மரண தண்டனை ஒழிப்பு, கீழ்த்திசை நாடுகள் பிரச்சினை, இலக்கியக் கல்வியைப் பாதுகாக்கவேண்டிய அவசியம், சமூக நலன் உதவிகள் ஆகியவற்றுக்கான உரைகள் மெச்சத் தகுந்தவை. 1830ல் ‘இணக்கம் ‘ (Harmonies poetiques et religieuses – 2volumes) பதிப்பித்து வருகிறது. இத்தொகுதி ‘லமர்த்தினின் கவிதைகளில் மிகவும் உன்னதமானப் படைப்புகளென பாராட்டபடுபவை. 1832ல் தனது மனைவி மற்றும் ஒரே மகளுடன் மேற்கொண்ட பயணத்தில் மகளை இழக்க, கசந்த அனுபவங்கள் எழுத்துகளாக பரிணமிக்கின்றன. ‘கீழ்த்திசை பயணம்: ஞாபகங்கள், எண்ணங்கள், நினைவுகள்,காட்சிகள் ‘( Voyage en Orient: Souvenirs, Impressions, Pensees et paysages – 1835, 4volumes) 1836ல் வெளிவந்த ‘ஜோஸ்லன் ‘*(Jocelyn) மிகச் சிறப்பான மேலுமொரு கவிதைத் தொகுப்பு. இவற்றுள் உள்ள கவிதைகள் எக்காலத்துக்கும், எந்நாட்டவர்க்கும் பொருந்தக்கூடியவை. இவ்வரிசையில் தொடர்ந்து படைக்கப்பட்டதே ‘தேவதூதனின் வீழ்ட்சி ‘(La Chute d ‘un ange). 1839ல் மீண்டுமொரு கவிதைத் தொகுப்பு.. இத்தொகுப்புக்கான முன்னுரையில் கவிஞனின் சமூகக் கடமைகளை வெளிபடுத்தியிருந்தார். இந்த நேரத்தில் – அரசியலில், இவரது கவனம் மெல்லமெல்ல பழமைவாதிகளிடமிருந்து மீண்டு சோஷலிஸ்டுகள் பக்கம் திரும்புகிறது. 1847ல் படைத்த ‘ழிரோந்தன்களின் வரலாறு ‘ (l ‘Histoires des Girondins) அப்போதைய ஆட்சியை ஆட்டம் காண வைக்கிறது. அதேசமயம் அடுத்து உருவான புதிய குடியரசு நிருவாகத்தில் வெளிவிவகார அமைச்சருக்கானப் பதவி இவரைத் தேடி வருகிறது. எனினும் அடுத்துவந்த அதிபர் தேர்தலில் மிகக்குறைவான வாக்குகள் பெற அவரது அரசியல் வாழ்வு முடிவுக்கு வருகிறது. இந்தச் சூழலில் ஏராளமான கடனும் சேர்ந்துகொள்ள ஓய்வில்லாமல் உழைக்கவேண்டியிருக்கிறது. அவரது வாழ்க்கையிலேற்பட்ட இன்னலும், போராட்டமும் கவிதை அவதாரமெடுக்கின்றன. 1851ல் ‘ழேன்வியேவ் ‘ (Genevieve – ஒர் எளிய வேலைக்காரனின் தலைவிதி பற்றியதான படைப்பு) மற்றும் ‘கல்லுடைப்பவன் ‘ (Le tailleur de pierre de Saint-Point) அந்த வகையிலடங்கும் சில உதாரணங்கள். இது தவிர ஏராளமான வரலாற்று நூல்களும் இவற்றுள் அடங்கும். ஆனால் இறுதிக்காலத்தில் எழுதியவை அனைத்தும் பணத்தேவைக்காக எழுதபட்டவையேயொழிய, மனத்தேவைக்காக எழுதபட்டவை அல்ல என்பது இலக்கியவாதிகளின் விமர்சனம்.

* 1836ல் வெளிவந்த ஜோஸ்லன்(Jocelyn). ஜோஸ்லன் அவனது காதலி லொரான்ஸ்(Laurence) எனச் சுற்றிவரும் காதல் இலக்கியம். 8000 வரிகளைக்கொண்டு, ஒன்பது பகுதிகளாலானது.. ஆன்மீகத்தையும் காதலையும் உள்ளீடாகக் கொண்ட இக்கவிதைத் தொகுப்பு சமூகநலம் சார்ந்தவை.

நாடோடி மனிதர்கள் ( La Caravane humaine)

நீண்டுச் சரிந்த நதிக்கரையை

நெருங்கி நின்ற காடொன்றில்

முகாமிட்டிடும் நாடோடிக் கும்பலொன்று.,

கருவாலி மரங்கள்

பயணம் தொலைத்த மனிதரை

வாயுவும் ஞாயிறும் வாட்டாமற் காத்திடும்;

கயிற்றைக் கிளைகளிற் பிணைத்து

கட்டியெழுந்தக் கூடாரங்கள்,

சிற்றூர், பேரூராய் மரத்தடிகளில்

எட்டி பெருகிட,

நிழல்தேடி அடர்ந்த புல்வெளிகளில்

அமர்ந்து, உண்டு

அமைதியாய்ப் பேசிடும்மனிதர்.

கணத்தில், சினமென்னும் குன்றேறிநின்று

கோடரி வீசிட காலடிவீழும்

கூடுகள் நிறைந்த கதியற்றமரங்கள்;

மரவளை தோன்றும் விலங்கும்

மரக்கிளை நீங்கும் பறவையும்

அழிவைக்கான, அச்சம் விழிகளில்,

விளங்காச் செயலை இஇதயம் சபித்திடும்.

மூட மனிதர், அவரழிவைத் தேடும் மனிதர்

இருட்டில் மூழ்கிட வான்வரை அழிப்பர்!

இவர்களது இரவுக்காக மரங்களில்

உறைந்த உயிர்கள் இரக்கம்காட்டின

இயற்கை நியதியால் அமைதிகாத்தன

ஆழ்குழிமுழுக்க மரங்களையெறிந்து

அழிவுப் புனிதம் தொடர்ந்திடும் மனிதன்

வீழ்ந்துக் கிடக்கும் மரங்களினூடு

சூழ்ந்து கடக்கும் நதி,

அமைதியாய் தொடர்ந்திடும் நித்யப்பயணம்

நாடோடிமனிதர்களின் வெற்றியில்

மற்றுமொரு நதிக்கரை

– Alphonse de Lamartine, Jocelyn (Huiteme epoque)

—————-

Na.Krishna@wanadoo.fr

Series Navigation

author

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts