பிரஞ்சிலக்கியம் பேசுகிறேன் – மிலன் குந்தெரா (Milan Kundera)

This entry is part [part not set] of 42 in the series 20031030_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


‘எழுத்தாளனின் பணி சத்தியத்தைப் போதிப்பதல்ல, சத்தியத்தை அறிவது ‘ – மிலன் குந்தெரா.

‘ குந்தெரா ‘ எனவழைக்கப்டும் ‘ மிலன் குந்தெரா ‘ அனிச்சமலர் ஜாதி. மிதமிஞ்சிய உணர்வாளி. இன்றைய தேதியில் பிரஞ்சு இலக்கியவாதி. பிறந்தது அன்றைய செக்கோசுலோவாக்கியா. புலம் பெயர்ந்து, கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருப்பது பிரான்சு நாட்டில். பிறந்த ஆண்டு 1929. கலை, இலக்கியம், சினிமா, அரசியலென அனைத்திலும் ஏட்டறிவும் பட்டறிவும் உண்டு. பேராசிரியர், பத்திரிகை ஆசிரியர், அரசியல்வாதி, எழுத்தாளெரென பஞ்சவதாரி. மேற்கு ஐரோப்பிய வாசகர்களுக்கு, கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் இலக்கிய கூறுகைளை அறிமுகப் படுத்திவரும் இன்றைய படைப்பாளி.

பெரும்பான்மையான இளஞர்கைளைப் போலவே, இளமையில் கம்யூனிஸத்தில் நாட்டம். இவரது தனி மனித உணர்வுகள் பொதுவுடமைவாதிகளைச் சீண்ட 1950ல் கட்சியிலிருந்து நீக்கம். இருந்தபோதிலும் இலக்கியப் பணியில் தொய்வில்லை. இங்கே அருபதுகளின் தொடக்கத்திலிருந்தே செக்கோஸ்லாவிய நாட்டு கம்யூனிஸ்டு கட்சியிலும் சரி, இலக்கியம், கலாச்சார அமைப்புகளிலும் சரி சுதந்திர போக்கு நிலவியதைக் கருத்திற் கொள்ளவேண்டும். சோஷலிச அரசியல் அமைப்பினையும், நிர்வாகத்தினையும் கண்டிப்பதற்குப் படைப்பாளிகள் தயங்கவில்லை. ‘ குந்தெராவும் ‘ சூழலுக்கேற்ப மூன்று தொகுதிகள் (1963 -65 -68) கொண்ட கதைகளாக ‘ Laughable Loves ‘ வெளியிட்டார். பரவலாகப் பேசப்பட்டது. இதற்கிடையில் தனது நியோ- ஸ்டாலினிஸ்ட் மனதை வெளிபடுத்துகின்ற வகையில் 1967ல் ‘ The Joke ‘ என்கின்ற முதல் நாவல். எதிரியை வீழ்த்த அவனது மனைவிக்குக் கடலை போடும் கதை. ஒருவாராக அவளைத் தன் வசப்படுத்த முயன்று, ஹீரோ வெ.ற்றிகொள்ள நேரும்போது, எதிரி இவள் தொலைந்தால் போதுமென்ற மனத்துடன் இருப்பது தெரியவருகிறது. ஹீரோ வில்லனுக்குக் கொடுத்தது உபத்திரவமல்ல உதவி என்று அறிகிறான். இறுதியில் கதைநாயகி புருஷன் வேண்டாமென்று ஹீரோ மீது காதல்கொள்ள அதனை அவன் மறுக்க, அவள் தற்கொலைக்கு முயற்சிக்கிறாள். சுபம்.

1968ல் Alexander Dubcek அதிபராகப் பொறுபேற்றவுடன் செக்கோசுலோவாகியா அரசியலில் மிகப்பெரிய மாற்றம். நம்ம கொர்பச்சேவுக்கு அண்ணன் அவர். மனித உரிமைகள், சுதந்திரம் என நிருவாகத்தில் நிறைய சீர்திருத்தங்கள் கொண்டுவருகிறார். Ludvic Vacucik, குந்தெரா பொறுப்பு வகிக்கும் இலக்கிய ஏடான ‘Literarin Noviny ‘ ல் ‘2000 சொற்கள் ‘ என்ற கட்டுரை அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது ‘ தீமையென்று கருதப்படுபவை போராட்டத்திற்குரியவை ‘, ‘ தங்கள் வாழ்வினை மக்கள் மட்டுமே தீர்மானிக்க வேண்டும் ‘ என்பதான வாசகங்களைக்கண்டு பக்கதிலிருந்த கம்யூனிஸ நாடுகள் ‘ ஆபத்து ‘ என அலறின. ‘ பிராகு வசந்தம் (Prague Spring) ‘ என வருணிக்கபட்ட இவ்வியக்கத்தினை அடக்காவிட்டால் ஆபத்தென உணர்ந்த சோவியத் அரசுவின் தலமையிலான வார்சா உடன்படிக்கைப் படைகள், செக்கோசுலோவாக்கியாவை ஆக்ரமித்தன. சோவியத்யூனியன் தன் பொம்மை அரசாங்கத்தை நிறுவியது. ‘ பிராகு வசந்தம் ‘ இயக்கதிற்குக் காரணமானவர்கள் ஒடுக்கப்பட்டார்கள். ‘ குந்தெரா ‘ வின் அரசுப்பணி பறிபோனது. அவரது நூல்களுக்குத் தடை விதிக்கப்பட்டன. புதிய புத்தகங்கள் வெளியிடவும் தடை. இந்தச் சூழலில் பிரான்சு பல்கலைக்கழகமொன்றில் பகுதிநேர பேராசிரியர் பணி. எனவே 1970ல் குந்தெராவின் இரண்டாவது நாவல் ‘ La vie est ailleurs ‘ (Life is elsewhere) பிரான்சில் பதிக்கப்பட்டு வெளிவருகிறது. 1979ல் ‘ Le Livre du rire et de l ‘oublie ‘ ( Book of Laughter and forgetting) ‘பிராக் வசந்தம் ‘ முடிவு குறித்துப் பேசும் படைப்பு. ‘ Dubeck ‘ ற்குப் பிறகு பொம்மை அதிபராகப் பொறுப்பேற்கும் ‘ Gustav Husak ‘ன் கிரீடத்தில் எஞ்சியிருப்பதென்ன ? என்கின்ற கேள்வியை ‘குந்தெரா ‘ எழுப்புகிறார். நினவுகள்கூட தொலைந்துபோனதை வலியோடு சொல்கிறார். இந்நாவலின் வெளியீட்டிற்குப் பிறகு, செக்கோஸ்லோவாக்கிய அரசு அவரது குடியுரிமையை பறித்துவிட, நிரந்தரமாகப் பிரான்சுக்கு குடியேற்றம். 1984ல் பிரசுரமான ‘ L ‘Insoutenable legerete de l ‘etre ‘(The Unbearable Lightness of Being). 1988ல் பிரஞ்சு மொழியிலே எழுதிய அவரது முதல் நாவல் ‘ L ‘Immortalite ‘ ( ‘Immortality ‘). 1998ல் ‘ L ‘Identite ‘ (Identity). பின்னர் 2000ல் வெளிவந்த L ‘Ignorance. இவற்றைத் தவிர ‘ குந்தெரா ‘வின் கட்டுரைகளும் நாடகங்களும் புகழ்பெற்றவை. குறிப்பாக ‘ The Art of the Novel ‘, essay in 7 parts, 1985 (essay about literature and the tradition of the novel in European culture) Testaments Betrayed, essay in 9 parts, 1992

மிலன் குந்தெராவின் படைப்பில் ‘ அடையாளம் ‘ (Identity) மற்றும் பேதமை ( Ignorance) என்னை அதிகமாக ஈர்த்தவை எனக் கொள்ளலாம்.

அடையாளம்: (Identity): ழான்-மார்க் – ஷாந்த்தால் இருவரும் தம்பதிகள். தங்கள் அடையாளத்தைப் பற்றிய கேள்வியை இருவருமே எழுப்புகின்றனர். குறிப்பாக கணவன் ழான்-மார்க்கிர்க்குத் தன் மனைவியின் முகம் மறந்துபோய்விடுகிறது. தன்னிடமுள்ள மனைவியின் முகத்திற்கும், அயலில் தன் மனைவிக்குள்ள முகத்திற்குமுள்ள வேறுபாட்டினைக் காணநேரிடுகின்ற அடையாள பயம். எங்கே அவளை இழந்துவிடுவோமா என்கின்ற இன்றைய நகர ஆண்களின் அன்றாட பயம். கணவன் நிழலானபெயரில் மனைவிக்குக் காதற் கடிதங்கள் எழுதுகிறான். ஷாந்தால், ‘நல்ல தகப்பனாய் பட்டம் விடுவதில் காட்டுகின்ற ஆர்வத்தினை ஒரு பெண்ணை வளைத்துப்போடுவதில் இக்கால ஆண்கள் காட்டமறுக்கின்றார்களே என்கின்ற ஏக்கத்திலிருப்பவள். பிரியமாக எழுதப்படும் கடிதங்களை நம்பி, அக்கடிதம் எழுதியவனைத் தேடி அலைகிறாள். நிஜமென்று நிழலைத் தேடும் மனைவி. இறுதியில் நிஜக் கணவனின் நிழல் முகம் அடையாளம் காட்டப்படுகின்றது மேற்கத்திய தம்பதிகளின் சந்தேக வாழ்க்கைமுறையை கணவன் மனைவி இரு தரப்பிலிருந்தும் அணுகுகிறார். நிஜத்தினை நிழலென்றும், நிழலை நிஜமென்றும் நம்பியே இன்றைய தம்பதிகளின் வாழ்க்கை நகருகிறது என்பதை மேற்கத்திய வாசகன் மட்டுமல்ல மேல்தட்டு வாசகன் எந்த நாட்டவனாக இருப்பினும் ஏற்கின்ற நீதி. நட்பு, தம்பதிகளின் வாழ்வு முறை, வாழ்க்கைக்கான அடையாளம் என அனைத்தையும் தெளிவானச் சொற்களால் சுட்டுகிறார். ‘நாம் நேசிக்கப் படுகிறோம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றபோது நாம் நேசிக்கப்படுவதில்லை ‘ என்ற அவரது சொல்லாடலில் குழப்பங்களில்லை. வாழ்க்கையில் எதனைத் தேர்வு செய்கிறோம் ? ‘நமக்குள்ள ஒரே சுதந்திரம், சந்தோஷமோ ? துக்கமோ ? இரண்டிலொன்றை தேர்வு செய்வது. (Notre seule liberte est de choisir entre l ‘amertume et le plaisir) என்கின்ற அவரது கூற்றையும் மறுப்பதற்கில்லை.

பேதமை (Ignorance): சொந்தமண்ணைப் பிரிந்து வாழுகின்ற எவருக்கும் இப்படைப்புப் பொருந்தலாம். புலம்பெயர்ந்துவாழும் மனிதர்களுக்கான அனுபவங்கள் இது. சில இலக்கிய விமர்சகர்கள் ‘ குந்தெரா ‘வினது முந்தைய படைப்பான அடையாளத்தை (Identity) விமர்சித்தவர்கள், அவரது பிரஞ்சுமொழி ஞானத்தையும் குறைகூறியிருந்தார்கள். பிரஞ்சு மண்ணோடு ஒட்டாத குந்தெராவை இப்படைப்பில் சந்திக்கிறோம். கதாநாயகி ‘இரெனா ‘ 1969ல் ‘பிராகு ‘ (Prague) மீதான சோவியத் படையெடுப்பிற்குப் பிறகு தன் கணவனுடன் பாரிஸில் குடியேறி அவனது இறப்பிற்குப் பிறகு ஒரு சுவீடன் நாட்டவனோடு வசிப்பவள். அவளது பிரஞ்சுத் தோழி சில்வி ‘ஏன் இன்னும் இங்கே இருக்கிறாய் ? உங்கள் ஊர் பிரச்சினைதான் முடிந்துவிட்டதே! ‘ என்று கேட்பதில் உள்ள நியாயத்தைக் கருதி இன்றைய ‘செக் ‘ குடியரசுக்கு இருபது ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு திரும்ப நினைக்கிறாள். இதேச் சூழலில் மனைவியை இழந்த ஜோசப் டென்மார்க்கிலிருந்து வருகிறான். இருவரும் விமான நிலையத்தில் சந்திக்க நேரிடுகிறது. அவனைமுதன்முதலில் சந்தித்த இனிய தருணங்களை நினைத்துப் பார்க்கிறாள். அவன் அவனது இறந்துபோன மனைவியின் நினைவில் வாழ்ப்வன். முந்தைய சந்திப்பு . அவனது கவனத்திலில்லை. ‘பிராகில் ‘ இருவரும் அவரவர் உறவினர், அவரவர் நண்பர்கள் எனச் சந்திக்க விழைய, எவரிடத்தும் இவர்களில்லாததை உணருகின்றார்கள். இவர்கள் மனதிலிருக்கும் பிராகு (Prague)

அங்கில்லை. சமூகம், கலாச்சாரம், மொழி அனைத்தும் தன் வழக்கொழிந்து போயிருந்தன. இம்முக்கிய கதை கருவோடு வேறு சிலபாத்திரங்களும் அவர்களது விருப்புகளும் கசப்புகளும், அவர்களது ஏமாற்றமும், நிறைவும் எளிமையான வாக்கியங்களில் சிக்கலில்லாமல் சொல்லபட்டிருக்கின்றன.

சொந்த மண்ணாகக்கூட இருக்கட்டும், காலம் கரைத்துவிட்ட நமது சுவடுகளை, நமது நினைவுகளை, நமது அடையாளங்களை எங்கே தேடுவது ? யாரிடம் கேட்பது ? புலம்பெயர்ந்துள்ள ஒவ்வொருவருக்கும் எழுகின்ற சந்தேகம் இது. படைப்பு முழுக்க குந்தெரா தன் புலம்பெயர்ந்த மனதின் அனுபவங்களை, துயர்களை, ஏக்கங்களை, இழப்பை ஓடும் நீராக உலவ விட்டிருக்கிறார்.

எளிமையான சொற்களை, தகுதியான இடங்களில் கையாளும் குணம். நீண்ட வாக்கியங்கள் இல்லை. கண்களை மூடிக்கொண்டு குந்தெராவின் படைப்புகளை நாம் வாங்கலாம்.. வாசிக்கவில்லையே என்கின்ற கவலைவேண்டாம். அவர் நம்மை வாசிக்க வைப்பவர். ஒரு முறை அல்ல பலமுறை. அவர்தான் ‘ குந்தெரா ‘. அதுதான் இலக்கியம்.

===========

Na.Krishna@wanadoo.fr

Series Navigation

author

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts