ரெ.கார்த்திகேசு
அண்மையில்தான் சுஜாதாவின் ‘இரண்டாவது காதல் கதை ‘ படித்து முடித்தேன். ஆனந்த விகடனில் தொடராக வந்து திருமகள் நிலைய வெளியீடாக 2002-இல் வெளிவந்தது. (அட்டையில் மட்டும் ‘விசா ‘ என்று போட்டிருக்கிறார்கள். இரண்டும் ஒன்றா ?)
ஏழெட்டு நாள் இரவில் மட்டும் (இரண்டு மணி நேரம் போல்) படித்து முடித்தேன். அதையே ஒரு திரைப்படமாக எடுத்திருந்தால் மொத்தம் இரண்டரை மணி நேரத்தில் முடிந்திருக்கும். பல கோடிகள் போட்டு பல மாதங்கள் சிரமப்பட்டுப் பல கலைஞர்களை, பல தொழில் நுட்பர்களை, பல வியாபாரிகளை வைத்து எடுக்கும் சினிமாப் படத்திற்கும், ஓர் எழுத்தாளர் ஒண்டிக்கட்டையாக ஒரு காசும் செலவில்லாமல், சில மாதங்களில் எழுதி, ஒரு சில ஆயிரங்களில் வெளியிடும் நாவலுக்கும், ஊடக வேறுபாடு மிகப் பெரிது என்று தோன்றினாலும், அதை இறுதியில் நுகர்பவருக்கு அது ஒரு பெரிய வேறுபாடா என்று தெரியவில்லை. இரண்டு ஊடகங்களின் தாக்கங்களும் ஒரு மாதிரித்தான் இருக்கின்றன. நல்லது நல்லதுதான்; அல்லது அல்லதுதான்.
பெரும்பாலும் நாவல்கள் படமாக்கப் படும்போது நாவலை வாசித்திருப்பவர் அதன் மீது அதிருப்தியே கொள்கிறார். மாறாக அசலாகப் படமாக்கப்பட்ட எந்தக் கதையும் சிறந்த நாவலாக உருவானதாகவும் வரலாறு இல்லை. அண்மையில் ‘அன்பே சிவம் ‘ படம் பற்றிக் கமலஹாசன் பேசும்போது தானும் ஒரு நாவலாசிரியர் போலத்தான் என்றும் இந்தப் படமும் ஒரு நாவல் போலத்தான்; அத்தியாயம் அத்தியாயமாக எழுதினால் அருமையான நாவலாக வந்துவிடும் என்றும் பேசியிருக்கிறார். நான் ‘அன்பே சிவம் ‘ பார்த்தபோதும் அது ஓர் அருமையான நாவலாக ஆக்கப்பட முடியும் என்றே நினைத்தேன். ‘மகாநதி ‘, ‘அழகி ‘, ‘கன்னத்தில் முத்தமிட்டால் ‘ போன்ற படங்களிலும் ஒரு நல்ல நாவலுக்குரிய குவிமையம் சிதறாத நெடுங்கதைகள் உள்ளன. ஆனால் யாராவது இந்தக் கதைகளை நாவலாக எழுதினால் அவை தோற்கும் என்பதிலும் எனக்கு ஐயமில்லை. ஏன் ? முதலில் அது ‘அசல் ‘ நாவல் என்று மதிக்கப் படாது. இரண்டாவது இந்தக் கதையின் எல்லாப் பகுதிகளும் வாசகனுக்கு ஏற்கனவே தெரிந்து விட்டிருக்கிறது. படித்ததையே திரும்பப் படிப்பது போன்ற சோர்வு ஏற்படும்.
அது இருக்க, இந்த ‘இரண்டாவது காதல் கதை ‘ (இகாக) படித்து முடிக்கிற போதும் ஒரு சினிமா பார்த்த அனுபவமே விண்டு நிற்கிறது. இதை நான் பாராட்டும் முகமாகச் சொல்கிறேனா, பழிக்கும் முகமாகச் சொல்கிறேனா தெரியவில்லை. கதை எனக்கு விறுவிறுப்பாக, சுவையாக இருந்தது. சற்றும் சலிப்புத் தரவில்லை. இதைப் படிப்பதற்காகவே படுக்கைக்கு விரைந்து செல்லவும் உந்தியது. அப்படியானால் இது எனக்கு மிகவும் பயனுள்ள, விருப்பமான செயல்தானே!
மேலும் இந்தக் கதை ஒரு நவீன பின்னணியில் அமைகிறது. ஒரு பெரிய நிறுவனத்தின் பொறுப்புள்ள அதிகாரி, அவருடைய மிகவும் நவீனமான கல்லூரியில் ஐடி படிக்கின்ற, டூ வீலர் ஓட்டுகின்ற இளம் மகள், அவளுக்கு அவர் பாத்திருக்கும் ஐடி நிபுணனான இளைஞன், இப்படி இன்றைய நவீனத் தமிழ்நாட்டில், மேல்தட்டு சென்னை வர்க்கக் குடும்பத்தின் கதை. இப்படிப் பல் சுவைகள் நிறைந்த கதை. உரையாடல்கள் ரொம்பக் கூர்மை. சுஜாதாவின் அனுபவ, அறிவின் தெறிப்புகள் கதை முழுதும். அப்புறம் என்ன ?
அப்புறம் என்ன ? நான் முதலீடு செய்த 87 ரூபாய்க்கும், 16 மணி நேரத்துக்கும் எனக்குக் கிடைத்த நிகர லாபம் பல மடங்கு. நான் குறை சொல்ல முடியாது. 87 ரூபாய்க்கு எங்களூரில் சாப்பாட்டுக் கடையில் இரண்டு வேளை சைவ உணவு மட்டுமே சாப்பிடலாம். (அந்த 16 மணி நேரத்திற்கு எதை ஒப்பிடுவது என்று தெரியவில்லை.) ஆகவே சுஜாதா எனக்குத் திருப்பிக் கொடுத்த என் பணத்துக்கான மதிப்பு மிக மிக அதிகம்.
அப்புறம் ஏன் கொஞ்சம் செரிமானமாகாத உணர்வு இருந்துகொண்டே இருக்கிறது என்பதுதான் கேள்வி.
நான் இகாக-வின் பக்கங்களில் ஓரத்தில் எழுதிய சில குறிப்புகளை திரும்பப் பார்க்கிறேன். அதிலிருந்து சில:
1. ஏன் நிகழ்வுகளை இப்படித் தலை தெறிக்கும் வேகத்தில் ஓட்டுகிறார் ? ஏன் பாத்திரங்கள் கொஞ்சமும் நின்று தங்கள் செயல்களின் விளைவுகளைத் தங்களுக்குள் அசை போடுவதில்லை ?
இதுதான் சினிமாவுக்கும் நாவலுக்கும் உள்ள முக்கியமான வேறுபாடு என்று நினைக்கிறேன். நாவலுக்குள்ள வசதி பாத்திரங்கள் தங்களுக்குள் என்ன சிந்திக்கிறார்கள் என்பதை வாசகனுக்குச் சொல்ல முடிவது. அல்லது நாவலாசிரியரே கதை சொல்லும் சாக்கில் பலவற்றைச் சொல்லலாம். சினிமாவில் இது முடியாது. மனசாட்சி வந்து பேசுவதாக முன்பெல்லாம் சித்திரிப்பார்கள். இப்போது மனசாட்சியைக் கொன்றுவிட்டார்கள். அசரீரி பேசுவதானாலும் இக்கால ரசிகர்கள் பொறுக்க மாட்டார்கள். ஆனால் நாவலில் இதுதான் முக்கியம் போல இருக்கிறது. இதுதான் பாத்திரங்களின் செயல்களின் அர்த்தத்தை வாசகனுக்குச் சொல்லுகிறது. ஒரு வகையில் நாவலாசிரியரை அடையாளம் காட்டுவதும் இதுதான். இதை சுஜாதா அவ்வளவாக முக்கியமாக எடுத்துக் கொள்வதில்லை. ஒரு வேளை இந்தக் கதை பின்னால் சினிமாவாகக் கூடும் என்பதில் அவருக்கு ஒரு கண் இருக்கிறதோ ?
2. கதாநாயகி நிவேதா என்னும் நிதி மிக விளையாட்டுப் பிள்ளையாக இருக்கிறாள். விளையாட்டாகக் காதலிக்கிறாள்; விளையாட்டாகப் பொய் சொல்லுகிறாள்; விளையாட்டாகவே கல்யாணம் பண்ணிக் கொள்ளூகிறாள்; அதே விளையாட்டு உணர்வுடன் புருஷனிடம் ஏமாந்து, சண்டை போட்டு, வெட்டிக் கொண்டு வந்து விடுகிறாள். சரி. பாத்திரம் கொஞ்சம் இயல்பை விட அசட்டுத் தனமாக அமைந்து விட்டாலும் மாறாப் பண்புடன் இருக்கிறது. அதாவது 32 அத்தியாயங்களில் கடைசி 5 அத்தியாயங்கள் வரை. இந்தக் கடைசி 5 அத்தியாயங்களில் அவள் தன் தந்தையின் நிறுவனத்தின் அமைப்பு முறைகளைக் கற்றுக் கொண்டு, பங்கு நிர்வாக முறைகளையும் நிறுவன நிர்வாகச் சட்டங்களையும் தெரிந்து கொண்டு நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பேற்று தந்தையை அவரின் பொறுப்பிலிருந்து இறக்குகிறாள்; பழைய புருஷனை ஓட ஓட விரட்டுகிறாள்; நிறுவனத்தின் தலைவியாகிறாள். பத்திரிகைகளில் படத்துடன் அவள் பேர் வருகிறது. எல்லாரையும் கவிழ்த்து வெற்றி பெறுகிறாள்.
பெறட்டும், பெறட்டும்! ஒரு கதையை உச்ச சுருதியில் ஆக்ககரமான சிந்தனைகளோடு முடிப்பது நல்லதுதான். ஆனால் எல்லாம் ஒரு பதின்ம வயதுப் பெண், சில வாரங்களில், சில மாதங்களில்… ? இங்குதான் கொஞ்சம் மாயாஜாலக் கதை மாதிரி ஆகிவிடுகிறது.
சரி, சரி! என்ன இப்போ ? சுஜாதா ஒரு பொழுது போக்குக் கதைதானே எழுதியிருக்கிறார் ? இது என்ன ‘ஜேஜே சில குறிப்புகள் ‘ மாதிரியும் ‘விஷ்ணுபுரம் ‘ மாதிரியும் தீவிர இலக்கியம் என்றா சொன்னார் ? ஆகவே அந்தத் தளத்தில் வைத்துத்தானே பார்க்க வேண்டும் ?
சுவை இருக்கிறதா ? வாசகனை மகிழ்ச்சிப் படுத்துகிறதா ? உத்திகள் இருக்கின்றனவா ? ஆபாசம் இல்லாமல் குடும்ப ஸ்த்ரீகள் படிக்கிற மாதிரி இருக்கிறதா ? நவீனமாக இருக்கிறதா ?
ஆகா! பேஷாக இருக்கிறது!.
அப்புறம் உம் 87 ரூபாய்க்கு போதாதா ? எதிர்பார்ப்புக்கு ஓர் அளவு வேண்டாமா ? இகாக-வை படிச்சுத்தான் ஆகணும்னு யாராவது தலையப் புடிச்சி அமுக்கினாங்களா ? நல்ல நாவல் அனுபவம் வேணும்னா ‘அப்பாவின் வீட்டில் நீர் பாயும் இடங்களிலெல்லாம் செடிகள் முளைக்கின்றன ‘-ங்கிற நாவல எடுத்து முன்றாவது முறையாகப் படிச்சுப் புரிஞ்சிக்க முயற்சி செய்திருக்கலாமே!
இல்லை! இல்லை! இகாக-வை படித்து ரசிக்கவும் செய்தேன். ஆனால் இப்படித்தான் என் மனதில் எண்ணங்கள் ஓடுகின்றன என்று சொல்லக் கூடாதா என்ன ?
இறுதியில் பார்க்கப் போனால் எந்த நாவலின் வெற்றியும் தோல்வியும் இப்படி அறிவுபூர்வமாகச் சிந்தித்துச் சீர்தூக்கிப் பார்ப்பதில் இல்லை என்றே தோன்றுகிறது. அது முற்றிலும் அறிவைப் பொறுத்த விஷயமல்ல. அது உணர்வைப் பொறுத்த விஷயம். எந்த அளவு உணர்வைக் கிண்டிவிட்டு வாசகன் அறியாத படி சுரப்பிகளை இயக்கி (அதன் உச்சம் கண் நீர் சுரப்பிகள்) மனதை மென்மைப் படுத்துகிறது என்பதைப் பொறுத்துத்தான் அமையும் போலும்.
****
kgesu@pd.jaring.my
- உன்னால் முடியும் தம்பி
- சரிவின் சித்திரங்கள் (பாலச்சந்திரன் சுள்ளிக்காடுவின் சுயசரிதை நூல் அறிமுகம்)
- ஜெயகாந்தனின் இந்திய முற்போக்கு அழகியல் -1
- கலைச்சொற்களைப்பற்றி
- சுஜாதாவின் ‘இரண்டாவது காதல் கதை ‘ – நாவல். ஒரு வாசகனின் குறிப்புகள்.
- காஸ்ஸினி விண்வெளிக் கப்பலின் புளுடோனிய வெப்பமின் கலனுக்கு எதிர்ப்புகள்! [Protest against Plutonium Powered Cassini Spaceship]
- அறிவியல் மேதைகள் என்ரிகோ ஃபெர்மி (Enrico Fermi)
- நெஞ்சுக்குத் தெரியும்
- அழுக்கு
- கொள்கை ஒன்றே கூட்டணி தான் வேறு வேறு
- எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் குடும்ப நிதி அளித்தோர் பட்டியல்
- மகுடம் சரிந்தது
- பாதியில் ஒரு கவிதை
- மான மிருந்தால், மங்கையரே!
- சிற்பிகளின் கற்பனைக்கு!
- பி.கே. சிவகுமார் கவிதைகள்
- காலம் சஞ்சிகையின் வாழும் தமிழ்
- உயிர்மை பதிப்பகம்
- தகவல் பெறும் உரிமை- அன்னா ஹஸாரேயின் உண்ணாவிரதப் போராட்டம்
- பசிக்கட்டும்
- கூந்தலை முன்புறம் போடாதே!..
- அல்லி-மல்லி அலசல் (பாகம் 4)
- பெண்களுக்கு வரதட்சிணை கொடுத்துத்தான் திருமணம் செய்யவேண்டும்.
- நல்லது நாடும் கிறுஸ்துவ மதமாற்றக்காரர்களே : எங்களை விட்டுவிடுங்கள்
- அரசூர் வம்சம் – அத்தியாயம் பதினெட்டு
- அம்மா இங்கே வா வா…
- ஆண் விபசாரிகள்
- விடியும்! நாவல் – (8)
- ஃபீனிக்ஸ்
- கடிதங்கள்
- உரையாடும் கலை
- கடவுளே காதலா…
- புதிய பரிணாமம்
- ஊக்கமருந்து
- சுதந்திர தினம்.
- பசு
- கோவாவில் பொது சிவில் சட்டம்
- வேர்களைத் தேடி…. பயணக் குறிப்புகள் -2
- வாரபலன் ஆகஸ்ட் 2, 2003 ( ஆர்ச்சர், பொது சிவில் சட்டம், விவரணப்படம், இடாகினிப் பேய்)
- பணமில்லா அழகு பாழ்