இலக்கிய சந்திப்பு: கனடா – பகுதி – ஒன்று

This entry is part [part not set] of 35 in the series 20030518_Issue

சுந்தர ராமசாமி


அன்பார்ந்த நண்பர்களே,

முதலில் ஒரு பதினைந்து நிமிடங்கள் என்னுடைய கருத்துக்களை நான் பேசலாம் என்றும் அதற்கு பின் நண்பர் மகாலிங்கம் அவர்களின் கவிதைத் தொகுப்பை வெளியிடலாம் என்றும் அதையடுத்து நான் ஆரம்பத்தில் பேசிய கருத்துகளைப் பற்றி விவாதிக்கலாம் என்றும் நண்பர் மூர்த்தி அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதற்கேற்ப ஒரு பதினைந்து நிமிடங்கள், ஒரு விவாதத்தை துவங்கி வைக்கும் முகமாக, ஒரு தூண்டுகோலாக ஒரு சில விஷயங்களைச் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

அதற்கு முன்னால் நான் இங்கு வந்து சேர்ந்த விஷயத்தைப் பற்றி ஒருசில வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன். சமீபத்தில், வாழ்க்கையில் சற்றும் எதிர்பாராமல் வெளிநாட்டு பயணம் ஒன்று யு.எஸ். ஏ. க்கு வரும்படி கிடைத்தது. யு. எஸ். ஏ. வில் மருத்துவராக இருக்கும் என் மகளுடன் ஒரு மூன்று மாத காலம் அமைதியாக இருந்துவிட்டு, முடியுமானால் அந்தக் காலத்தைப் படிப்பதற்கு பயன்படுத்திவிட்டு, வேறு எங்கும் அதிகமாகச் செல்லாமல் திரும்பிப் போகவேண்டும் என்பதே என்னுடைய எண்ணமாக இருந்தது. இந்தியாவைச் சேர்ந்த தமிழ் அன்பர்கள் பலர் யு. எஸ். ஏ. யில் இருக்கிறார்கள் என்று தெரியும். அவர்களில் சிலர் என்னுடைய நண்பர்களும்கூட. இருந்தும் யு. எஸ். ஏ.வுக்கு வரும் விஷயத்தை நான் ஒருவருக்கும் தெரிவிக்கவில்லை. அவர்கள் என்னை அழைத்தால் நான் பலவிதமான பயணங்களை மேற்கொள்ள வேண்டிவரும்; என்னுடைய காலம் வீணாகும். மேலும், என்னுடைய நோக்கம் பயணம் செய்வது அல்ல. அமைதியாக ஒரு இடத்தில் ஒதுங்கியிருந்து என்னுடைய குழந்தைகளுடன் பொழுதை செலவழித்து, மிச்சம் கிடைக்கக்கூடிய நேரங்களில் புத்தகங்களைப் படித்துவிட்டு ஊர் திரும்ப வேண்டும் என்ற எண்ணம்தான்.

இந்த யோசனையில் வந்த எனக்குத் தொடர்ந்து ஈழத்து நண்பர்களிடமிருந்து தொலைபேசிகள் வரத்தொடங்கின. இது நான் சற்றும் எதிர்பாராத ஒரு விஷயமாக இருந்தது. என்னைத் தொலைபேசியில் அழைத்தவர்கள் எவரும் எனக்கு நேரடியாகப் பழக்கம் உள்ளவர்களும் அல்ல. கனடாவைச் சேர்ந்த நண்பர்கள்-முக்கியமாக செல்வம், மகாலிங்கம் போன்ற நண்பர்கள் – என்னைத் தொலைபேசியில் அழைத்து, இங்கு வரும்படி கூறியபோது முன்பின் தெரியாத நண்பர்கள் வாசகர்கள் என்றாலும் இந்த அளவுக்கு ஆர்வத்துடன் அழைக்கிறார்களே, என்று ஒரு மனநெகிழ்ச்சி ஏற்பட்டது. அவர்களுடைய அழைப்பைத் தட்டுவதற்கான தெம்பு இல்லாமல், ‘நான் வருகிறேன்’ என்று சம்மதித்தேன். அதன் மூலம் இங்கு வருவதற்கான ஒரு வாய்ப்பும் உங்களைச் சந்திப்பதற்கான ஒரு சந்தர்ப்பமும் எனக்குக் கிடைத்தன. இங்கு வாழும் தமிழர்களின் வாழ்க்கை பற்றி தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களாக நண்பர் மகாலிங்கம் அவர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஏற்கனவே தமிழகத்தில் இங்கு இருக்கக்கூடிய ஈழத் தமிழர்களுடைய பிரச்சினைகள் பற்றிப் பரவலாக எங்களுக்குத் தெரிய வந்திருக்கின்றன. என்றாலுங்கூட அவர்கள் வாழும் இடத்திற்கே வந்து அவர்களுடைய வாழ்க்கையைப் பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது ஒரு மிகப் பெரிய அனுபவம் என்று நினைக்கிறேன். ஒவ்வொருவரையும் தனித்தனியாகப் பார்ப்பதற்கும் பழகுவதற்கும் சந்தர்ப்பம் இல்லையென்றாலுங்கூட மொத்தமாக எல்லோரையும் அல்லது ஒரு சிறு பகுதியினரை முக்கியமாக இளைஞர்களைப் பார்ப்பது சந்தோஷமாகவும் மனநிறைவாகவும் இருக்கிறது.

தமிழில் நவீன இலக்கியத்தின் நிலை பற்றி சில எண்ணங்களைப் பகிர்ந்துகொள்கிறேன். இவை இறுதியான முடிவுகள் அல்ல. இதைப் பற்றிப் பலரும் பல கோணங்களில் சிந்திக்கலாம். இந்தக் கருத்துக்கள் சார்ந்தும் அல்லது மனதில் இருக்கும் வேறு பல கருத்துக்கள் சார்ந்தும் நீங்கள் வெளிப்படையாக விவாதிக்கலாம்.

என்னுடைய சிந்தனைகளில் ஒன்று, முக்கியமாக, இந்த நூற்றாண்டு இலக்கியம் சார்ந்ததாக இருக்கிறது. அதற்கான காரணம் இந்த நூற்றாண்டைத்தான் என்னால் உணர்வுபூர்வமாக உணர முடிகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டு இலக்கியம், பதினெட்டாம் நூற்றாண்டு இலக்கியம், அதற்கு முந்தைய காலகட்டங்களைச் சேர்ந்த இலக்கியங்கள் இவற்றையெல்லாம் புத்ததகங்கள் மூலமாகப் படித்துத் தெரிந்து கொள்ள முடிகிறது என்றாலும் கூட, அவை சம்பந்தப்பட்ட தகவல்கள், கருத்துக்கள் என் மனதில் இருக்கின்றனவே தவிர, அவற்றோடு என் அளவில் உணர்வுபூர்வமாக ஒட்ட முடியாத நிலையே இருக்கிறது. பாரதியிலிருந்து இன்று வரையிலான காலகட்டத்தைத்தான் உணர்வுபூர்வமாகப் பார்க்க முடிகிறது. இந்தக் காலகட்டத்தில் நாம் அடைந்திருக்கும் உயர்வு தாழ்வுகளைப் பரிசீலனை செய்து உலகின் பிற நாடுகளில் என்னென்ன மாற்றங்கள் நடந்திருக்கின்றன என்பதைக் கண்டறிந்து, இனிமேல் நாம் செல்ல வேண்டிய பாதை என்ன என்பதைப் பிரக்ஞைபூர்வமாக வரையறுக்க வேண்டும் என்ற துடிப்போடு நான் இருந்து கொண்டிருக்கிறேன். இந்தக் கோணத்தில்தான் தமிழ் இலக்கியத்தின் இன்றைய நிகழ்வுகளை நான் பார்க்கிறேன்.

இந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து தமிழ் இலக்கியத்தில் இரண்டுவிதமான, ஒன்றுக்கொன்று எதிரான போக்குகள் இருந்து வந்திருக்கின்றன. ஒரு போக்கு, வாழ்க்கை சார்ந்து சிந்திக்கும் எழுத்தாளர்களுடைய போக்கு. இன்னொன்று வணிக மனோபாவம் கொண்ட எழுத்தாளர்களுடைய போக்கு.

இந்த நூற்றாண்டில் இதுவரைக்கும் மாபெரும் உந்து சக்தியாக இருந்து கொண்டிருப்பவர் சுப்பிரமணிய பாரதி. அவரைத் தாண்டிய பெரும் கலை வீச்சு, படைப்புத்திறன் தமிழகத்தில் தோன்றிவிடவில்லை என்பது என்னுடைய கணிப்பு. அவர் கொடுத்த உத்வேகம், உந்து சக்திதான் பல்வேறுபட்ட காரியங்கள் இந்த நூற்றாண்டில் தமிழ் இலக்கியத்தில் நடப்பதற்கு அடிகோலியிருக்கிறது. அவர் முழுக்க முழுக்க இலக்கியத்தை வாழ்க்கையோடு இணைப்பதற்கான ஒரு கண்ணோட்டத்தை உருவாக்கிக் கொண்டவர். பாரதிக்கு முற்பட்ட காலத்தில் 1850 அதாவது 1860 கால கட்டத்தில் இருந்த தமிழ் இலக்கியத்திற்கும் அப்போது இருந்த உலக இலக்கியத்திற்கும் இடையே இருந்த மிகப் பெரிய இடைவெளியானது பாரதி என்ற தனிமனிதனால் வெகுவாகக் குறைந்துவிட்டது.

வசனம் சார்ந்தும், கவிதை சார்ந்தும், சிந்தனை சார்ந்தும், பத்திரிகை தொழில் சார்ந்தும், இசை சார்ந்தும், அரசியல் சார்ந்தும், சமூக முன்னேற்றங்கள் சார்ந்தும், பாரதி வெளிப்படுத்திய கருத்துகள் ஒரு இருபது ஆண்டுக்குள்ளாகவே தமிழுக்கும் உலகத்தின் படைப்புத்திறன் சார்ந்த தரத்திற்கும் இருந்த இடைவெளியை மிகவும் குறைத்துவிட்டது என்பது ஒரு விந்தையான நிகழ்ச்சியாக இருக்கிறது. அவர் வாழ்ந்திருந்த காலமோ நாற்பதாண்டுகள் தான். செயல்பட்ட காலங்கள் இருபதாண்டுகள். ஊக்கமாகச் செயல்பட்டது பத்தாண்டுகள் என்று சொல்லலாம். இந்த காலகட்டத்திற்குள்ளேயே பாரதி மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்திவிட்டுப் போயிருக்கிறான். அவனுக்குப் பின்னால் இன்று – 1993 வரையும் – அவருடைய தீவிரமான மனோபாவத்தையொட்டி வாழ்க்கையைப் பற்றி சிந்திக்கிறவர்கள் – இவர்கள் எல்லோருமே ஒரேவிதமான சிந்தனையைக் கொண்டவர்கள் அல்ல; பல்வேறுபட்ட கருத்து வேற்றுமை கொண்டவர்கள்- அடிப்படையில் இலக்கியத்திற்கும் வாழ்க்கைக்குமான உறவைக் கெட்டிப்படுத்த வேண்டும் என்ற நம்பிக்கை கொண்டவர்கள். வாழ்க்கையின் துக்கங்கள் மறைந்து புதிய வாழ்க்கை ஒன்று தோன்ற வேண்டும் என்ற கனவை மனதில் தக்க வைத்துக் கொண்டிருப்பவர்கள், பாரதி காலத்திலிருந்து இன்றுவரைத் தொடர்ந்து தமிழில் இருந்து வந்திருக்கிறார்கள். பாரதிக்குப் பின்னால் வ.வே.சு. ஐயர் தோன்றி முதன்முதலாக நவீன இலக்கிய விமர்சனத்தை உருவாக்கி கம்ப ராமாயணத்தை மதிப்பிட்டுக் காட்டினார். உலகத்தில் இருப்பதிலேயே மிகச் சிறந்த காவியம் கம்பராமாயணம் தான் என்று, பழம் பெருமை பேசும் மனோபாவத்தை விட்டுவிட்டுத் தர்க்க ரீதியாக காவியத்தின் அடிக்கோடுகள் என்ன என்றும் கவிஞனின் பார்வைகள் எந்த அளவுக்கு இதில் வெளிப்பட்டிருக்கிறது என்பதையெல்லாம் நவீன இலக்கிய விமர்சனக் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு அலசி ஆராய்ந்து, உலகக் காவியங்களுடன் ஒப்பிட்டுக் கம்ப ராமாயணம் மிகப் பெரிய ஒரு காவியம் என்று நிறுவியது, குன்றிக் கிடந்த தமிழ் மனங்கள் நிமிருவதற்கு ஒரு முக்கியமான காரணமாக அமைந்திருக்கிறது.

அதைத் தொடர்ந்து ‘மணிக்கொடி’ என்ற இதழ் 1930வாக்கில் தமிழில் தோன்றியது. அந்தப் பத்திரிகையின் மூலமாக உருவானவர்களில் மிக முக்கியமானவர் புதுமைப்பித்தன். ஒரு மேதை என்று கருதத்தக்கவர். அதற்குப் பின் அவரையொட்டி மெளனி, பி.எஸ். ராமையா, க.நா. சுப்பிரமணியம், சி.சு. செல்லப்பா, பிச்சமூர்த்தி, கு.ப. ராஜகோபாலன் என்று மிகக் குறுகிய காலப் பகுதியில் – இவ்வளவு சிறந்த எழுத்தாளர்கள் தோன்றுவது உலக இலக்கியங்களில்கூட மிக அபூர்வமான ஒரு நிகழ்ச்சியாக தோன்றக்கூடிய அளவுக்கு – தோன்றி வாழ்க்கை சார்ந்த இலக்கியங்களை அதிக அளவுக்கு உறுதிப்படுத்திக் கொண்டு போயிருக்கிறார்கள். அதற்குப் பின்னாலும் இன்று வரையிலும் நீங்கள் பார்த்தீர்கள் என்றால் லா. ச. ராமாமிர்தம், ஆர். சண்முகசுந்தரம், தி. ஜானகிராமன், கு. அழகிரிசாமி, ஜெயகாந்தன், ஜி. நாகராஜன் என்று பலரும் உருவாகி இந்த இயக்கமானது தொடர்ந்து தமிழில் இருந்து கொண்டிருக்கிறது. புதிதாக யார் யார் என்னென்ன எழுதுகிறார்கள், என்னென்ன பணிகள் செய்கிறார்கள் என்பதை விவாதத்தின்போது சந்தர்ப்பம் கிடைத்தால் விரிவாகப் பார்க்கலாம்.

பாரதியால் வலுப்பெற்ற இந்தப் போக்குக்கு எதிர் நிலையில் 1910லிருந்தே மற்றொரு போக்கு செயல்பட்டு வந்திருக்கிறது. அதை வணிகப் போக்கு, கலாச்சாரச் சீரழிவுப் போக்கு, மனிதர்களை வாழ்க்கையைப் பற்றிச் சிந்திக்க விடாமல் கனவுகளை அவர்கள் மனதில் புகுத்தி, பிரச்சனைகளை மழுங்கடிக்கும் போக்கு என்று சொல்லலாம் – இதை முன்னெடுத்துச் சென்றவர்களை பிரக்ஞைபூர்வமாக தமிழ் சமுதாயத்தைக் கெடுக்க நினைத்தவர்கள் என்று நான் சொல்லவில்லை – ஆனால், அவர்கள் உருவாக்கிய இலக்கியம் வாழ்க்கை சார்ந்த நெறிகளுக்கு எதிராக, சுவாரஸ்யமே மிக முக்கியமானதாக, சுவாரஸ்யத்தைத் துண்டக்கூடிய கனவுகளே மிக முக்கியமானதாகக் கருதக்கூடிய, தமிழ் வாழ்க்கை பற்றிய மிகச் செயற்கையான கற்பனைகளை அப்பட்டமாக சொல்லக்கூடிய இலக்கிய நெறியை ஒரு இலக்கிய போக்கை உருவாக்கி வந்திருக்கிறது. அப்போக்கை மிக வெற்றிகரமாக வளர்த்தவர் கல்கி என்கிற ரா. கிருஷ்ணமூர்த்தி. நாற்பதில் தோன்றி கிட்டதட்ட ஒரு பதினைந்து வருடங்கள் தமிழ் இலக்கியத்தில் ஒரு புயல்போல் வாழ்ந்துவிட்டுப் போனவர். மிகத் திறமையான ஒரு எழுத்தாளர். எந்த அளவுக்கு திறமையான எழுத்தாளராக இருந்தாரோ, அந்த அளவுக்கு அதீதமான மனோபாவங்களை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளும் அவருக்கு இருந்தன.

அவரைத் தொடர்ந்து காலப்போக்கில் பல எழுத்தாளர்கள் வாழ்க்கை சார்ந்த பிரக்ஞை எதுவுமே இல்லாமல், தமிழ் வாழ்வுடைய நிலைமைகள் நெருக்கடிகள் மிக மோசமாக இருக்கக்கூடிய நேரத்திலும் கூட அது பற்றிய எந்த அக்கறையும் இன்றி, உலகின் பிற பகுதிகளில் ஏற்படும் மாற்றங்கள், புதிய போக்குகள் இவற்றைத் தமிழ் வாழ்க்கை பிரதிபலிக்காமல் இருக்கக்கூடிய நிலைமைகளைப் பார்த்து எந்த விதமான வேதனைகளும் இல்லாமல் தமிழ் மக்களை ஒரு கனவுலகில் ஆழ்ந்து கிடப்பதற்கான காரியங்களைத் தொடர்ந்து செய்து கொண்டு வந்திருக்கிறார்கள். இந்த வணிகப் போக்கைப் பற்றியும் வாழ்க்கை நெறி சார்ந்த போக்கைப் பற்றியும் நாம் விவாதத்தில் அதிக அளவுக்குப் பேச முடியும் என்று நம்புகிறேன்.

இந்த இரண்டு போக்குகள் தமிழ் இலக்கியத்தில் மட்டுமல்ல, உலகத்தில் உள்ள எல்லா மொழிகளிலும் இருக்கின்றன. எல்லா முதலாளித்துவ நாடுகளிலும் வாழ்க்கை நெறி சார்ந்த இலக்கியப் போக்கும் வணிகப் போக்கும் இருக்கின்றன. இருந்தும் உலகம் பூராவும் இருக்கக்கூடிய ஒரு பொதுநிலையைத் தாண்டி தமிழகத்தைப் பற்றிய அதிகப்படியான ஒரு அக்கறையும் கவலையும் நாம் கொள்ள வேண்டியதற்குக் காரணம் அங்கெல்லாம் இந்த இரு போக்குகள் இருந்தும்கூட அவை இரு வேறு பிரிவுகளாக மதிக்கப்படுகின்றன. வணிகப் போக்கு ஒன்றாகவும், வாழ்க்கை நெறி சார்ந்த தீவிர இலக்கியப் போக்கு மற்றொன்றாகவும் இருக்கிறது. விமர்சகர்கள் தெளிளத் தெளிவாக இரண்டின் வேற்றுமையைச் சொல்லிக் கொண்டு வருகிறார்கள். தேர்ந்த வாசகர்கள் இந்த இரண்டு போக்கையும் தனியாகப் பிரித்துப் பார்க்கிறார்கள். பல்கலைக் கழகங்கள் இந்தப் போக்கைப் பிரித்துப் பார்க்கின்றன. சமூக அங்கீகாரம் என்பது எப்போதுமே இலக்கியப் போக்குக்குத்தான் அளிக்கப்படுகிறது. வியாபாரப் போக்குக்கு அளிக்கப்படுவதில்லை. வேறு முதலாளித்துவ சமுதாயங்களில் இந்த இரு போக்குகளும் மதிப்பீடுகள் சார்ந்த பிரச்சினைகளையோ குழப்பங்களையோ உருவாக்கவில்லை. கீழான எழுத்தாளர்களுக்கு அல்லது வணிக எழுத்தாளர்களுக்கு சமூகம் சார்ந்து எந்தவிதமான செல்வாக்கும் இல்லை. அவர்கள் புத்தகங்கள் அதிக அளவுக்கு விற்கலாம். அவர்கள் பணக்காரர்களாக இருக்கலாம். அதிகப் புகழ் கொண்டவர்களாக இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு அங்கு மரியாதை கிடையாது. அவர்கள்தான் வாழ்க்கை நெறிகளை மதிப்பீடுகளைத் தீர்மானிக்கக் கூடியவர்கள் என்ற எண்ணம் அங்குள்ள மக்களிடையே கிடையாது.

தமிழ் சமுதாயத்திலோ யார் வெற்றி பெற்றிருக்கிறார்களோ, யார் வணிக நோக்கில் எழுதிக் கொண்டிருக்கிறார்களோ, யார் மிக மோசமான காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறார்களோ, யார் தரக் குறைவான காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறார்களோ, யாருக்கு இந்த உலகில் நடந்து கொண்டிருக்கும் காரியங்களைப் பற்றி எந்தவிதமான பிரக்ஞையும் இல்லாமல் பிழைப்பு ஒன்றே பிரதானமாக இருக்கிறதோ அவர்கள்தான் இன்று தமிழ் வாழ்க்கையைத் தீர்மானித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் மற்ற சமுதாயங்களிலிருந்து தமிழ்ச் சமுதாயத்தை முற்றிலும் பிரித்துக் காட்டுகிறது. இதைத்தான் நான் பிரச்சனையின் மையமாக முன்வைக்கிறேன். மற்றபடி வணிகப் போக்கு என்பதும் வாழ்க்கை நெறி சார்ந்த இலக்கியப் போக்கு என்பதும் யு.எஸ்.ஏ. உட்பட கனடா உட்பட பிரெஞ்சு, இத்தாலி உட்பட எல்லா தேசங்களிலும் இருக்கக்கூடிய ஒன்றுதான். ஆனால் மற்ற தேசங்களில் எல்லாம் இந்தப் போக்குகளை ஒன்றுக் கொன்று குழப்பாமல் மதிப்பீடுகளைத் தெளிவாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் தீவிரமான இலக்கியங்கள் புறக்கணிக்கப்பட்டு வணிக இலக்கியங்கள் ஆட்சியில் கோலோச்சிக் கொண்டிருக்கின்றன என்பதைத்தான் நான் மிக முக்கியமான பிரச்சனையாகச் சொல்கிறேன்.

இந்த விஷயத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ? இது போன்ற சிந்தனைகள் உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறதா ? இது போன்ற நிலை தமிழகத்தில் ஏற்படுவதற்கு வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா ? எப்படி அந்த நிலையை மாற்ற முடியும். அதற்காக நாம் என்ன செய்ய வேண்டும் ? இந்தியாவை விட்டு, தமிழகத்தை விட்டு, ஈழத்தை விட்டு வெளியே வந்திருக்கும் தமிழர்கள் இந்த விஷயங்களை மாற்ற, செம்மைப்படுத்த, மேல் நிலைக்குக் கொண்டுவர ஏதேனும் பங்கை ஆற்ற முடியுமா ? இது பற்றிய உங்கள் கருத்துக்களை நீங்கள் வெளிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டு என்னுடைய பேச்சை முடித்துக் கொள்கிறேன்.

என். கே. மகாலிங்கம் (கனடா) அவர்களின் உஞூளொO கவிதைத் தொகுதியை வெளியிடுவதற்கு முன்னால் ஒரு சில வார்த்தைகள் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். முக்கியமாகச் சொல்ல வேண்டியது மகாலிங்கம் அவர்களுடைய எழுத்துகளைப் படிப்பதற்கான சந்தர்ப்பம் எனக்குக் கிடைக்கவில்லை. அவருடைய ஒரு சிறுகதைத் தொகுதி தமிழகத்தில் வந்திருந்தும்கூட அந்தப் புத்தகத்தைப் படிப்பதற்கான வாய்ப்பை இழந்து விட்டிருக்கிறேன். பல புத்தகங்களை நான் தேடிப் படிப்பேன் என்று மகாலிங்கம் சொன்னார். அது ஓரளவுக்கு உண்மைதான். ஆனால் அவருடைய புத்தகத்தை நான் படிக்காமல் விட்டிருக்கிறேன் என்பது மகாலிங்கம் அவர்களை நேரில் சந்தித்த பின்புதான் எனக்குத் தெரிய வந்தது. ‘பூரணி’ என்றொரு இதழைப் பற்றி எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. அந்த இதழில் வந்த இலக்கியச் சர்ச்சைகள்- அந்தச் சர்ச்சைகளில் நான் நேரடியாகப் பங்குபெறவில்லை என்றாலுங்கூட – அவை நடந்த காலங்கள், அதில் வந்த விஷயங்கள் எல்லாம் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. இப்போது இவருடன் நான் தங்கியிருந்தபோது இவரது சில கதைகளையும் கவிதைகளையும் படித்துப் பார்த்தேன். இவரைப் போன்ற கலைஞர்கள் இன்றையச் சூழலில் தங்களுடைய எழுத்துப் பணியைத் தொடராமல் இருப்பது மிகப் பெரிய குற்றம் என்று சொல்லத் தோன்றுகிறது. அந்த அளவுக்கு இவர்களுக்கு விஷயங்கள் தெரிந்திருக்கின்றன. தங்களுடைய ஆற்றலை எழுத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். நிலைமையோ மிக மோசமாக இருக்கிறது. ஓரளவிற்கு விஷயம் தெரிந்தவர்கள், வெளிநாடுகளுக்குச் சென்று பல அனுபவங்களைப் பெற்றவர்கள், ஆங்கிலம் வாயிலாக உலக இலக்கியத்தை மிக நன்றாகவோ அல்லது ஓரளவுக்கோ படித்தவர்கள் எல்லோருமே பங்காற்ற வேண்டிய சூழ்நிலை இருந்து கொண்டிருக்கிறது. அதை உணர்ந்து அவர் மிகுந்த அளவிற்குத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டு பல்வேறுபட்ட படைப்புகளை தொடர்ந்து படைக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொண்டு இந்தக் கவிதைத் தொகுதியை வெளியிடுகிறேன்.

தலித் இலக்கியம் என்று சொல்கிறார்களே, அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள் ?

தலித் இலக்கியம் என்பது இந்திய இலக்கியங்களில் சமீப காலமாக வேகம் பெற்று வரக்கூடிய ஒரு இலக்கியம். இந்தியாவிலுள்ள ஜாதிமுறைகளைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஏறத்தாழ அதே ஜாதிக் கட்டுமானந்தான் யாழ்ப்பாணத்திலும் அமைந்திருக்கும் என்று நினைக்கிறேன். இந்தியாவில் மிக முக்கியமான சமூகப்பணி செய்து கொண்டிருக்கும், வாழ்வுக்கு அடிப்படையான ஒரு பணி ஆற்றிக் கொண்டிருக்கும் விவசாயிகள் காலங்காலமாக ஒதுக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் நீண்ட வரலாறு ஒன்று இருக்கிறது. பல்வேறு புரட்சிகளில் அவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். அந்தப் புரட்சிகள் ஒடுக்கப்பட்டிருக்கின்றன. 2000 வருடங்களாக ஒரு நீண்ட போராட்டத்தின் தொடர்ச்சியாக இன்றும் சில காரியங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. தத்துவப் போக்குகள் உருவாகியிருக்கின்றன. இன்று சமீப காலமாக மராட்டியில் தலித் இலக்கியம் என்பது வகை உருவாகி வந்துள்ளது. தலித் என்கிற சொல் ஒரு மராட்டிய சொல். தலித் என்றால் பஞ்சமர்கள் என்று பொருள். அங்கு சமூக சிந்தனை கொண்ட சில எழுத்தாளர்கள் – அவர்கள் தலித்தாகவும் இருக்கலாம், தலித்தாக இல்லாமலும் இருக்கலாம் – தலித்துகளுடைய வாழ்க்கை சார்ந்த சில பிரச்சினைகளை முன்னெடுத்துக் கொண்டு வருகிறார்கள்.

இதற்கு முன்னாலும் தலித்துகள் பற்றி நவீன இலக்கியத்தில் வேறு எழுத்தாளர்களால் பேசப்பட்டிருந்தாலும்கூட அவர்கள் தலித்துகளைப் பற்றி பேசுவதற்கும் இன்று தலித்துகள் தங்களைப் பற்றி பேசிக் கொள்வதற்கும் அடிப்படையில் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது. இதற்கு முன்னால் பேசிய எழுத்தாளர்கள் அதிகமும் மேல்ஜாதி எழுத்தாளர்கள். தலித் வாழ்க்கையைப் பற்றி நேரடியான அனுபவம் இல்லாதவர்கள். மேல்ஜாதி எழுத்தாளர்கள் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளக்கூடிய சமூகப் போக்குகள் இருந்தாலும் எப்போதுமே தலித்துகள் ஊரைவிட்டே விலக்கப்பட்டு, பொது வாழ்க்கையில் எந்த முனையிலும் கலந்து கொள்ள முடியாமல், பொது வாழ்க்கையில் எந்த முனையையும் தொட முடியாமல் ஒதுக்கிவைக்கப்பட்டிருந்தார்கள் என்பதால் பெரும்பாலும் மேல்ஜாதி எழுத்தாளர்கள் சொன்ன விஷயங்கள் அனுதாபம் சார்ந்த விஷயங்களாக இருந்திருக்கின்றன. இப்போது தலித்துகள் அந்த அனுதாபம் தங்களுக்குத் தேவையில்லை என்பதைத் தீர்மானித்திருக்கிறார்கள். மேல்ஜாதி எழுத்தாளர்களின் அனுதாபம் தங்களுடைய வாழ்க்கையை மேம்படுத்தாது என்பது தெளிளத் தெளிவாக இப்போது அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. தங்களுடைய வாழ்க்கை எந்த நிலையில் இருக்கிறது என்பதை அவர்கள் மதிப்பிட்டு சுயவிமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்திய அரசியலில் முப்பது நாற்பது வருடங்களாக சகல கட்சிகளும் தங்களைச் சுரண்டியிருக்கிறார்கள், ஏமாற்றி இருக்கிறார்கள் என்பதெல்லாம் இப்போது தலித்துகளில் எல்லோருக்குமே புரிந்துவிட்டது. இப்போது முதன்முறையாக தங்களுடைய வாழ்க்கையைத் தாங்கள்தான் தீர்மானித்துக் கொள்ளவேண்டும், அரசியலில் கலாச்சாரத்தில், இலக்கியத்தில், கலைகளில் தங்களுடைய ஆற்றல்களை தாங்களேதான் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

தங்களுடைய இயக்கமானது ஒரு போராட்டம் சார்ந்த இயக்கம். அது நீண்ட காலத்திற்கு தொடர வேண்டிய ஒரு இயக்கம். அந்த இயக்கத்தை விஞ்ஞான பூர்வமாக கோபமின்றி சமூக மாற்றங்களுக்கு உரிய கூறுகளை ஒன்றாக கற்றறிந்து செய்ய வேண்டும் என்கிற ஒரு பிரக்ஞை தலித் மக்களிடையே இந்தியாவில் ஏற்பட்டிருக்கிறது. இதன் மூலம் தலித் இலக்கியம் மராட்டியில் ஓரளவிற்கு கலை வெற்றியோடும் அதே சமயத்தில் முற்போக்கான உள்ளடக்கத்தோடும் வர ஆரம்பித்தது. அதனுடைய பாதிப்புகள் இந்திய மொழிகளில் இப்போது ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. மராட்டிய இலக்கியத்திலிருந்து தலித் இலக்கியத்தைச் சார்ந்த பகுதிகள் தமிழிலும் மற்ற மொழிகளிலும் மொழிபெயர்க்கப்படுகிறது. தலித் மக்கள் இந்தியாவில் பல மொழிகளிலும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அவர்கள் இந்த மொழிபெயர்ப்புகளில் இருந்தும் அவர்களுடைய கோட்பாடுகளில் இருந்தும் உத்வேகம் பெற்று தங்களுடைய மொழிகளில் புதிய இலக்கியங்களைப் படைக்க முயன்று கொண்டிருக்கிறார்கள். அதுபோல் தமிழ் எழுத்தாளர்களும் படைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் தமிழில் இன்று கோட்பாடுகள் சார்ந்த பிரக்ஞை எந்த அளவிற்கு வளர்ந்திருக்கின்றதோ அந்த அளவுக்கு படைப்புகள் சார்ந்த பிரக்ஞை இன்னும் தோன்றவில்லை. இனிமேல் தோன்றலாம். மிகப் பெரிய தலித் படைப்புகள் என்று எதுவும் தமிழில் தோன்றவில்லை. சிறுகதைகள், கவிதைகள் ஒரு சில பார்க்கக் கிடைக்கின்றன. அதிக அளவில் கவிதைகள் வெளிவந்திருக்கின்றன. தலித் பத்திரிகைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தலித் படைப்புகள் போகப்போக வலுப்பெறும் என்று நம்புகிறேன்.

இதுதான் தமிழ் சார்ந்து தலித் இலக்கியத்தைப் பற்றி சொல்ல வேண்டிய விஷயம் என்று நினைக்கிறேன்.

தாங்கள் கூறியதுபோல் பத்திரிகைத் துறையும் சினிமாத் துறையும் வாழ்க்கை சார்ந்த பார்வையின்றி வணிக இலக்குடன்தான் இயங்கி வருகிறது. இதைப் பார்க்கும்போது விரக்தியும் அதிருப்தியும் தான் ஏற்படுகிறது. இதே நிலை தொடர்ந்து போனால் எதிர்காலம் எப்படி இருக்கும் ? தங்களைப் போன்ற முதல்தர படைப்பாளிகள் ஏதாவது ஆக்கபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ள உத்தேசித்திருக்கிறீர்களா என அறிய விரும்புகிறேன்.

இதற்கு எதிரான ஒரு போக்கு இந்த நூற்றாண்டில் 93 வருடங்களாகத் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது என்று நான் சொல்கிறேன். இந்தப் போக்கில் தீவிர எழுத்தாளர்கள் அடைந்திருக்கக்கூடிய வேதனைகள், சங்கடங்கள், அவமானங்கள், பிரச்சினைகள் இவற்றினுடைய கூட்டுத்தொகையை நீங்கள் நினைத்துப் பார்ப்பீர்கள் என்றால் உலகத்தில் எந்த எழுத்தாளர்களும் எந்த காலகட்டத்திலும் இந்த அளவு சோதனைக்கு ஆளானதில்லை என்று என் அளவில் கருதுகிறேன். அவ்வளவு மோசமான விஷயங்கள் நடந்திருக்கின்றன. ஏனென்றால் முதன்முதலாக எப்பொழுது நீங்கள் தீவிர இலக்கியத்தில் ஈடுபாடு கொள்கிறீர்களோ அப்போது ஒன்று தீர்மானமாகி விடுகிறது. உங்களுக்குப் போதுமான அளவுக்கு வாசகர்கள் கிடைக்க மாட்டார்கள். உங்களுடைய படைப்புகளை வெளியிட பத்திரிகைகள் இல்லை. வருமானம் கிடையாது. சமூக அந்தஸ்து கிடையாது. ஊடகங்கள், கல்வித்துறை ஆகியவை உங்களைக் கண்டுகொள்ளாது. நிலைமை இப்படியிருக்க, இதை மீறித்தான் ஒரு எழுத்தாளன் செயல்பட வேண்டும் என்பது மிகவும் வேதனையான விஷயம். இதனால் அந்த எழுத்தாளனுடைய குடும்பத்தில் பல்வேறுபட்ட பிரச்சினைகள் உருவாகின்றன.

எப்பொழுது ஒருவன் தீவிர இலக்கியத்தில் ஈடுபட முடிவெடுக்கிறானோ அப்போது அவன் அதிக நேரம் படிக்க வேண்டியவனாகி விடுகிறான். அதிக நேரம் சிந்திக்க வேண்டியவனாகிவிடுகிறான். அவன் அதற்கான முயற்சிகளில் ஈடுபடும் பொழுது அவனுடைய காலமும் நேரமும் வீணாகின்றன என்று குடும்பத்தினர் கருதுகிறார்கள். இது இயற்கையான ஒரு விஷயம். எழுத்தாளர்கள் திருமணமாவது வரையில் தாய் தந்தையரோடும், திருமணம் முடிந்த பின் மனைவியோடும், பின்னால் குழந்தைகளோடும் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். பதினைந்து வருடம் அல்லது இருபது வருடம் எழுதும் தமிழக எழுத்தாளர்களுக்கு ஐந்நூறு அல்லது ஆயிரம் வாசகர்கள்தான் இருக்கிறார்கள். மலையாளத்தில் ஒரு சாதாரண எழுத்தாளன் அல்லது ஒரு சுமாரான கவிஞன் ஒருவனை எடுத்துக் கொள்வோம் – மிகச் சிறந்த கவிஞன் அல்ல, ஒரு சுமாரான கவிஞன் – அவன் 23 அல்லது 24 வயதில் எழுத ஆரம்பிக்கலாம். அநேகமாக எழுத ஆரம்பித்த ஒன்றரை அல்லது இரண்டு வருடங்களுக்குள் அவன் இரண்டு லட்சம் வாசகர்களைச் சென்றடைகிறான். ஒரு உதாராணம் சொல்கிறேன், பாலசந்திரன் சுள்ளிக்காடு என்றொரு மலையாளக் கவிஞர். அரவிந்தனுடைய படத்தில்கூட அவர் நடித்திருக்கிறார். இங்கிருக்கும் ஒரு சிலர் அந்தப் படத்தைப் பார்த்திருக்கலாம். அவர் இப்போது மிகப் பெரிய கவிஞர் அல்ல. வளர்ந்து வரும் கவிஞர். தமிழ்நாட்டில் அவரைவிட மிகச் சிறந்த கவிஞர்கள் பலர் இருக்கிறார்கள். உதாரணத்திற்கு, அவரோடு ஒப்பிடத் தகுந்த கவிஞர் என்று சுகுமாரன் என்ற தமிழகக் கவிஞரைச் சொல்லலாம். சுகுமாரன் நிறைய வாசிக்கக்கூடியவர். சுயவிளம்பரம் தேடிக் கொள்ளாதவர். சுகுமாரனும் மூன்று நான்கு வருடங்களாகத் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார். சுமார் ஆயிரம் வாசகர்களைச் சம்பாதித்திருப்பாரா என்பதே சந்தேகம். பாலச்சந்திரன் சுள்ளிக்காடிற்குக் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் வாசகர்கள் இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

சுகுமாரனின் கவிதைத் தொகுப்பு நாற்பது அல்லது ஐம்பது பக்கங்கள் கொண்டதாக இருக்கும். விலை, உங்களுடைய நாணயத்தில் சொன்னால் அரை டாலர். இருந்தும் விற்பனையாவதற்கு சுமார் இரண்டு வருடங்கள் ஆகும். அப்படியே அது விற்பனையானாலும் அந்தப் பணமும் அவருக்குக் கிடைக்கும் என்பதற்கு எந்த விதமான உத்திரவாதமும் கிடையாது. அவர் வெளியீட்டாளர்களிடம் அந்தப் பணத்தைக் கேட்க முடியாது. ஏனென்றால் வியாபாரத்திற்கான கூறுகள் ஒன்றும் அங்கு உருவாகவில்லை. வெளியீட்டாளர்கள் இதுபோன்ற புத்தகங்களை வெளியிடும்போது எந்தப் பொறுப்பும் ஏற்றுக்கொண்டு வெளியிடுவதில்லை. ஒரு உபகாரம், ஒரு உதவி என்ற அளவில்தான் செய்கிறார்கள். தனக்கு உதவி செய்த வெளியீட்டாளர்களிடம் ஒவ்வொரு எழுத்தாளரும் தங்களுடைய பணத்தைக் கேட்பதற்குக் கூச்சப்படுகிறார்கள். இந்த நிலைமைதான் தமிழகத்தில் பொதுவாக இருந்து கொண்டிருக்கிறது.

நான் 1950இல் எழுத ஆரம்பித்தேன். ரொம்பத் தீவிரமாகச் செயல்படவில்லை என்றாலும் தொடர்ந்து இந்தப் பின்னணியில் இருந்து கொண்டிருக்கிறேன். 1993 வரையிலான இந்த நாற்பத்திமூன்று வருடங்களில் தமிழகத்தை மட்டுமல்ல ஏறத்தாழ உலகம் முழுவதையும் கணக்கிலெடுத்துக் கொண்டால் எனக்கு 5000 வாசகர்கள் இருப்பார்கள். ஆனால் என்னுடைய தரத்திற்கு இணையாக நாற்பத்திமூன்று வருடங்கள் செயல்பட்ட, செயல்படக்கூடிய ஒரு வங்காள எழுத்தாளருக்கு அல்லது ஒரு மலையாள எழுத்தாளருக்கு, ஒரு கன்னட எழுத்தாளருக்கு ஒரு ஹிந்தி எழுத்தாளருக்கு, ஒரு ஆங்கில எழுத்தாளருக்கு, குறைந்த பட்சம் இரண்டு லட்சம் வாசகர்களேனும் இருப்பார்கள். இதுதான் தமிழுடைய நிலையாக இருந்து கொண்டிருக்கிறது. ஆனால், இதற்கு எதிரான போராட்டங்கள் நூறு வருடங்களாகத் தமிழில் தொடர்ந்து நடந்து கொண்டுதான் வந்திருக்கின்றன.

பிற மொழியைச் சேர்ந்தவர்கள் இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து எப்படி நடத்திக் கொண்டிருக்கிறோம் என்று மிகுந்த ஆச்சரியத்திற்கு ஆளாகிறார்கள். தமிழ்நாட்டில் நிலவக்கூடிய இந்த நிலையைப் பற்றியும், எழுத்தாளர்கள் நடத்திக் கொண்டுவரும் போராட்டத்தைப் பற்றியும் மலையாள விமர்சகர்கள் தங்கள் வியப்பைக் கட்டுரைகளில் தெரிவித்திருக்கிறார்கள். ஆக, வணிகப் போக்கிற்கு எதிரான நிலை ஒன்று தமிழில் வலுவாக இருந்து வருகிறது. சிறு பத்திரிகைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதுபோன்ற தீவிர எழுத்தாளர்களுடைய புத்தகங்களை வெளியிடக்கூடிய பதிப்பகங்கள் இருக்கின்றன. எழுத்தாளர்களே தங்களுடைய புத்தகங்களை அச்சிட்டு நண்பர்களுக்கு விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள். சிறு பத்திரிகைகள் இதுபற்றி விமர்சனங்கள் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. கூட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அந்தக் கூட்டங்களில் விவாதங்கள் நடைபெறுகின்றன.

வாழ்க்கை குறித்த தீவிரமான பார்வையுடைய இவர்களுக்கு பல்கலைக்கழகத்திற்குள்ளோ, ரேடியோவுக்குள்ளோ, டி.வி.க்குள்ளோ, அரசாங்கத்தைச் சார்ந்த நிறுவனங்களுக்குள்ளோ உரிய இடம் தரப்படவில்லை. சினிமாவுக்கு வசனங்கள் எழுதக்கூடிய அல்லது பாடல்கள் எழுதக் கூடிய வாய்ப்புகள் கிடைப்பதில்லை. இருந்தாலும், நிறுவனங்கள் சார்ந்த எல்லாவிதமான புறக்கணிப்புகளையும் எதிர்கொண்டு அதுபற்றி கவலைப்படாமல் இருக்கக்கூடிய ஒரு விஷயமும் அங்கு இருந்து கொண்டிருக்கிறது.

‘சுபமங்களா’ அல்லது ‘இந்தியா டுடே’ தமிழ்ப் பதிப்பு போன்றவை இந்த வணிகப் போக்கைப் பாதித்திருக்கிறதா ?

சுபமங்களா வைப் பொறுத்தவரை அது வணிகப் பத்திரிகைகள் மீது ஒரு தாக்கத்தை உண்டாக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. உண்டாக்கவும் இல்லை. ஆனால் சுபமங்களா தன்னளவில் நிற்பதற்கான ஒரு சூழல் உருவாகிக் கொண்டிருக்கிறது. அந்தப் பத்திரிகையை கோமல் திறமையாக நடத்திக் கொண்டு வருகிறார். ‘சூழலில் இருக்கக்கூடிய பல்வேறு போக்குகளை கணக்கிலெடுத்துக் கொண்டு, பத்திரிகை தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்தால் ஒரு சில நல்ல காரியங்களையேனும் செய்ய முடியும்; ஆகவே சில சமரசங்களை மேற்கொள்வது தவறல்ல’ என்ற ஒரு கருத்தை உருவாக்கிக் கொண்டு அவர் இந்தப் பத்திரிகையை நடத்திக் கொண்டு வருகிறார். அது நிலைப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்று நம்புகிறேன்.

அந்தப் பத்திரிகை, பிரபல பத்திரிகைகள், வணிக பத்திரிகைகள் மீது எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது. வணிகப் பத்திரிகைகளின் ஒரேவிதமான நோக்கம் எப்படி லாபம் சம்பாதிப்பது என்பதுதான். அதிகபட்சமான லாபத்தை எப்படி சம்பாதிப்பது. அது தொழில் சம்பந்தப்பட்ட விஷயம். அதை நான் குறை சொல்லவில்லை. ஆனால் வணிக பத்திரிகைகள் நடத்தக் கூடியவர்கள், வணிகப் படங்கள் எடுக்கக் கூடியவர்கள், வணிகத்தையே முக்கியமானதாகக் கருதக்கூடிய அரசியல்வாதிகள், வணிக மனோபாவம் கொண்ட டிவிக்காரர்கள், வணிக மனோபாவம் கொண்ட ரேடியோக்காரர்கள் தமிழ்க் கலாச்சாரம் சார்ந்த மதிப்பீடுகளை மிக மோசமாகப் பாதித்து தமிழ் வாழ்க்கைச் சார்ந்த கீழான நெறிகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதைத்தான் முக்கியமான பிரச்சினையாகக் கொள்ள வேண்டும்.

வியாபாரிகள் லாபம் சார்ந்து செயல்படுவது இயற்கையான விஷயம். ஆனால் அவர்கள் சமுதாயத்தினுடைய மதிப்பீடுகளைக் குழப்பக் கூடாது. வாழ்க்கை நெறிகளை அவர்கள் உருவாக்கக் கூடாது என்று நான் நினைக்கிறேன். அதற்கான ஒரு தடுப்பு, ஒரு பாதுகாப்பு தமிழ் சமுதாயத்தில் இன்று இல்லை. அதுதான் மிக மோசமான பிரச்சினையாக என்னுடையப் பார்வையில் இருந்து கொண்டிருக்கிறது

சிறுபத்திரிகை ஆயிரத்திற்கு மேல் விற்காது. சுபமங்களா அதை தாண்டி இருக்கிறதா ?

சுபமங்களா பல ஆயிரம் பிரதிகள் விற்பனை ஆகலாம் என்று நினைக்கிறேன். இடதுசாரி வாசகர்களின் ஆதரவு அதற்கு இருக்கிறது.

இது வளர்ச்சியா ?

நிச்சயமாக வளர்ச்சிதான். குறைந்தபட்சம் சுபமங்களா விற்கான ஒரு பிரதியை மூன்று நான்கு பேர் படிப்பதற்கான வாய்ப்பு உண்டு. மிகச் சிறந்த கவிதைகளையோ, மிகச் சிறந்த சிறுகதைகளையோ அதிக அளவு அவர் வெளியிட்டுவிட்டதாக நான் நினைக்கவில்லை. ஆனால் ஒரளவு நல்ல கட்டுரைகளை, கருத்துகளை, சிந்தனைகளை அவர் வெளியிடுகிறார். நேர்காணல்களை வாசகர்கள் விரும்பிப் படிக்கிறார்கள். முக்கியமாக நல்ல புத்தகங்களுடைய நல்ல மதிப்புரைகளை அவர் மிகக் கவனமாக வெளியிடுகிறார். குறைந்தபட்சம் நல்ல புத்தகங்கள் வெளியாகிற செய்தியாவது வாசகர்களுக்குப் போய் சேர்கிறது. இந்த புத்தகங்களை ஒரு சிலர் படிக்கலாம். அந்த புத்தகத்தின் தாக்கங்களை அவர்கள் பெறலாம். இதற்கான வாய்ப்பு இருக்கிறது. அந்த openning ஒரு நல்ல விஷயமாக எனக்கு தோன்றுகிறது.

எழுத்தாளர்கள் கூட்டு சேர்ந்து ஒரு அமைப்பு உருவாக்கி இன்றைய இளைய தலைமுறையினருக்கு சிறந்த படைப்புகளை அறிமுகம் செய்து வைத்தால் அது எந்த அளவுக்கு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் ?

அதாவது வாசகர்களை தரமான வாசகர்களாக எப்படி உருவாக்குவது என்பதுதான் முக்கியமான பிரச்சனை. தரமான வாசகர்கள் இருந்தால் அவர்களில் ஒரு பகுதியாவது இந்த பத்திரிகைகளுக்கு அவர்களுடைய ஆதரவு கிடைக்கும். ஆனால் தரமான வாசகர்கள் உருவாவதற்கு எதிரான நடவடிக்கைகள் பரிபூர்ணமாக தமிழ் சமுதாயத்தில் செயல்படுகின்றன. தமிழ் குடும்பங்களை இன்று வரையிலும் புத்தகங்கள் வாங்கக்கூடிய பழக்கம் கொண்ட குடும்பங்கள் என்று சொல்ல முடியாது. அந்த பழக்கம் ஒரு நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முன்னாலேயே ஒரு விதத்தில் அழிக்கப்பட்டுவிட்டது என்று சொல்லலாம். ஆனால் தமிழ் குடும்பங்கள் எதை எதையோ படிப்பதற்காக இன்றும் காசு செலவழிக்கின்றன. அத்தனையும் சஞ்சிகைகள். அவற்றை வாங்குகிறார்களே ஒழிய புத்தகங்களை அவர்கள் வாங்குவதில்லை.

ஆக ஒவ்வொரு தமிழ் குடும்பத்திற்குள்ளும் இன்று ஏதாவது ஒரு வணிக பத்திரிகை, ஒன்றல்ல குறைந்தபட்சம் மூன்று அல்லது நான்கு போகும் என்று நினைக்கிறேன். ஏனெனில் காலப்போக்கில் ஒரு இடைவெளி ஏற்படுகிறது. குடும்பங்களில் வயதானவர்கள் படிக்கக்கூடிய பத்திரிகையும் இளைஞர்கள் படிக்கக்கூடிய பத்திரிகையும் வெவ்வேறு ஆகிவிடுகின்றன. இளைஞர்களுக்காக ஒரு சில பத்திரிகைகள், குழந்தைகளுக்காக வேறு பத்திரிகைகள் என்று குடும்பங்களுக்குள் குறைந்தது இரண்டு அல்லது மூன்று பத்திரிகைகள் வருகிறது. சாரசரி ஒரு குடும்பம் மாதம் ஒன்றுக்கு கணிசமான தொகை, ஐம்பதிலிருந்து நூறு ரூபாய் வரையிலும் செலவழிக்கக்கூடிய நிலை இருந்தாலும்கூட அந்தப் பணம் வணிக சஞ்சிகைகளுக்குப் போய் சேருமே ஒழிய தரமான புத்தகங்களுக்கோ, தரமான பத்திரிகைகளுக்கோ போய்ச் சேராது.

குழந்தைகள் தங்களுடைய மூன்று வயது, நான்கு வயது, ஐந்து வயதிலிருந்து தொடர்ந்து ஆரம்பத்தில் வணிக பத்திரிகைகள் வெளியிடும் குழந்தை பத்திரிகைகளைப் படிக்க ஆரம்பித்து தொடர்ந்து அவர்களுடைய வயதிற்கேற்பப் படிக்கும் பத்திரிகைகளை மாற்றிக்கொண்டே வருகிறார்கள். கடைசியில் பக்தி இதழ்களுக்கு வந்து சேருகிறார்கள். ஆனால் ஒன்று : அவர்கள் படித்த பத்திரிகைகள் எல்லாமே வணிக பத்திரிகைகள்தான். இதன் மூலம் அவர்களுடைய மதிப்பிடு வெகுவாக நிர்ணயிக்கப்படுகிறது.

ஒரு சிறுகதை என்றால் என்ன ? ஒரு நாவல் என்றால் என்ன ? ஒரு கட்டுரை என்றால் என்ன ? யார் சிறப்பாக எழுதுகிறார்கள் ? சமுதாயத்தை எப்படிப் பார்க்க வேண்டும் ? அரசியல்வாதிகளைப் பற்றி நாம் எந்தவிதமாக சிந்திக்கவேண்டும் என்பது போன்ற பல்வேறு விஷயங்களையும் இந்த பத்திரிகைகள் அவர்களுடைய மூளைகளில் உருவாக்கிவிடுகின்றன. இவர்கள் பள்ளிகளுக்குப் போகிறவர்களாக இருக்கிறார்கள். தொடர்ந்து கல்லூரிகளுக்குப் போகிறவர்களாக இருக்கிறார்கள். இதன்மூலம் வேறுவிதமான பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருந்தும்கூட, சாதாரண வாசகர்கள் எப்படி வணிக பத்திரிகைகளுக்கும் வணிகக் கலாச்சாரத்திற்கும் அடிமைப்பட்டிருக்கிறார்களோ அதே மாதிரிதான் தமிழ் ஆசிரியர்களும், அவர்கள் ஆரம்ப பள்ளி ஆசிரியராக இருந்தாலும் சரி கல்லூரி ஆசிரியராக இருந்தாலும் சரி, முனைவர் பட்டம் பெற்றவர்களாக இருந்தாலும் சரி, வணிகப் பத்திரிகைகளுக்குதான் ஆட்பட்டிருக்கிறார்கள். ஆக, இந்தக் காலக்கட்டத்தில் இந்த கூண்டிலிருந்து வாசகர்கள் வெளியே வந்து, தீவிரமான சிந்தனைகளை வெளிப்படுத்தக்கூடிய எழுத்துக்களையோ, சிறுபத்திரிகைகளையோ, பத்திரிகைகளையோ, புத்தகங்களையோ, படிப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவாக இருக்கிறது.

நூலகங்களை எடுத்துக்கொண்டால் நூல்நிலையங்களில் பெரும்பாலும் வெகுஜன எழுத்தாளர்களுடைய புத்தகங்கள்தான் குவிந்து கிடக்கின்றன. மிகக் குறைவாகவே தீவிரமான எழுத்தாளர்களுடைய புத்தகங்கள் கிடைக்கின்றன. அப்படி ஒரு எழுத்தாளனின் படைப்பைப் படித்தாலும்கூட வாசகர்கள் அதுவரையும் அந்த பெயரை கேள்விப்படாத காரணத்தினாலும், தொடர்ந்து சிறுவயதிலிருந்தே வணிக பத்திரிகைகள் மூலமாக வணிக எழுத்தாளர்களுடைய பெயர்களை கேள்விப்பட்டிருக்கிற காரணத்தினாலும், அந்த பிரிவைச் சார்ந்த எழுத்தாளர்களின் புத்தகங்களே பாடப்புத்தகங்களாக இருப்பதாலும், அவனுடைய ஆசிரியர்கள் அந்த எழுத்தாளர்களைப் பற்றி உயர்வான எண்ணம் கொண்டிருப்பதாலும், அரசாங்கம் சார்ந்த பரிசுகளை அவ்வகையான எழுத்தாளர்களே பெற்றிருப்பதாலும் அவர்கள் சினிமாவிற்கு கதை வசனம், பாடல்கள் எழுதி வருவதாலும் சராசரி வாசகர்களின் தேர்வு எப்போதும் வணிக படைப்புக்களாகவே இருக்கிறது. இதுபோன்ற எண்ணற்ற அவலங்கள் தமிழகத்தில் இருந்து கொண்டிருக்கின்றன.

தமிழ் இலக்கியத்தை மலையாளத்துடன் ஒப்பிட்டால் இன்றைய நிலை என்ன ?

தமிழகத்தில் கல்லூரிகள் மலையாளத்தைவிட பல மடங்கு அதிகம். இரண்டு இடத்திலும் கல்வி இன்னும் அதன் உயர்ந்தபட்ச அளவுகளை அடையவில்லை. ஆனால் கேரளாவோடு ஒப்பிட்டு பார்க்கக்கூடிய சமயத்தில் பல விஷயங்களில் தமிழ் நாடு பின்தங்கி இருக்கிறது. வணிக இலக்கியம் என்று நாம் அழைக்கிற இலக்கியம் கேரளாவிலும் இருக்கிறது. தமிழகத்தைவிட மோசமாக இருக்கிறது. ஆபாசமாக, வணிக நோக்கங்களுக்காக, வணிக வெற்றி பெறுவதற்காக, பெயர் பெறுவதற்காக, பணம் பெறுவதற்காக எவ்வளவு கீழ்தரமாக அல்லது பாலியல் சார்ந்து ஒரு தமிழ் எழுத்தாளன் எழுதுவானோ அதைவிடத் துணிவாக எழுதக்கூடிய பல மலையாள எழுத்தாளர்கள் இருந்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அங்கே அத்தகைய எழுத்தாளர்களுக்கு எழுத்தாளர்கள் என்ற கெளரவமில்லை. அவர்கள் வியாபாரிகளாகத்தான் கருதப்படுகிறார்கள். கேரளக் கலாச்சாரத்தில் மதிப்பீடுகளைத் தீர்மானிக்கும் மக்களிடையே அவர்களுக்கு எந்த விதமான பாதிப்பையும் செலுத்த முடிவதில்லை. ஒரு தேர்ந்த வாசகனைக் கேட்டால் நான் பல வணிகப் பத்திரிகைகளை படிக்கிறேன். ஆனால் சிறந்த எழுத்தாளர் என்று எடுத்துக்கொண்டால் தகழி சிவசங்கரன் பிள்ளைதான் சிறந்த எழுத்தாளர், அல்லது கேசவதேவ்தான் சிறந்த எழுத்தாளர், அல்லது வைக்கம் முகம்மது பஷீர்தான் சிறந்த எழுத்தாளர் என்றுதான் சொல்வார். வணிக எழுத்தாளர்கள் சிறந்த எழுத்தாளர்கள் இல்லை என்றும், அவர்கள் பொழுதுபோக்குக்காக எழுதக்கூடியவர்கள் என்றும், இவர்களுக்கும் வாழ்க்கைக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது என்றும் தெளிவாகச் சொல்லுவான்.

ஒரு இலக்கிய மாநாடு நடக்கிறது என்றால் அந்த மாநாட்டில் வணிக எழுத்தாளர்கள் அதிகச் செல்வாக்குச் செலுத்த முடியாது. சமுதாய நன்மை சார்ந்த கருத்துக்களை எல்லாம் அவர்கள் பேசி வேஷம் போட முடியாது. மொழி சார்ந்த கருத்துகளை எல்லாம் அவர்கள் கட்டவிழ்த்துவிட முடியாது. சமுதாய மாற்றத்திற்காக அவர்கள் துடித்துக் கொண்டிருப்பதாகக் காட்டிக் கொள்ள முடியாது. அரசாங்கம், நிறுவனங்களின் பரிசுகள் பெறமுடியாது. இவர்களுடைய புத்தகங்களைப் பல்கலைக்கழகங்களில் பாடப்புத்தகங்களாக வைக்கமாட்டார்கள். இப்புத்தகங்கள் பற்றி ஆராச்சிகள் பெரும்பாலும் நடைபெறாது. அங்கு மதிப்பீடு தெளிவாக இருக்கிறது என்று நான் சொல்கிறேன். இந்த நிலை தமிழகத்தில் இல்லை. வணிக எழுத்துத்தான் தமிழ் சமுதாயத்தைப் பாதித்துக்கொண்டிருக்கிறது. வணிக எழுத்தாளர்களைச் சார்ந்துதான் ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. இவைகளைப் புகழ்ந்துதான் கல்லூரி தமிழ் விரிவுரையாளர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். மாணவர்கள் அவர்களுடைய எழுத்தைத்தான் படிக்கிறார்கள். இந்த எழுத்துக்கள்தான் சிறந்த எழுத்துக்கள் என்று நினைக்கிறார்கள். இதன் நீட்சியாக மோசமான சினிமா, மோசமான அரசியல், மக்களை ஏமாற்றும் சமயம் எல்லாம் ஒன்றோடு ஒன்று இணைந்து ஒரு கூட்டு வியாபாரம் செய்து கொண்டிருக்கிறது.

***

Series Navigation

author

<b>சுந்தர ராமசாமி</b>

சுந்தர ராமசாமி

Similar Posts