ஹெப்சிபா ஜேசுதாசனுக்கு விருது விழா.

This entry is part [part not set] of 30 in the series 20021230_Issue

ஜெயமோகன்


திருவனந்தபுரம் தமிழ் சங்கத்தின் கட்டிடத்தில் விளக்கு விருது பேராசிரியர் ஹெப்சிபா ஜேசுதசனுக்கு வழங்கும் விழா 29.12.2002 அன்று மாலை ஆறு மணிக்கு நடைபெற்றது. வெளி ரங்கராஜன் கூட்டத்துக்கு தலைமை வகித்தார் . சுந்தர ராமசாமி முக்கிய விருந்தினராக வந்து கலந்துகொண்டு விருதை வழங்கினார். புதுமைப்பித்தனின் படத்தை தமிழ்சங்க கட்டிடத்திலும் அவர் திறந்து வைத்தார் .

ரங்கராஜன் விளக்கு அமைப்பு சார்பில் வழங்கப்படும் இவ்விருது எளிமையான ஒன்று என்றாலும் முக்கியமான இலக்கிய படைப்பாளிகளுக்காக மட்டுமே இதுவரை வழங்கப்பட்டுள்ளது என்றார். சி சு செல்லப்பா, பிரமிள், நகுலன், பூமணி ஆகியோருக்கு இது ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது . ஹெப்சிபா அவர்களுக்கு வழங்கப்பட்டது இப்பரிசுக்கு பெருமைசேர்க்கிறது என்றார் .

சுந்தர ராமசாமி தன் உரையில் பேராசிரியை ஹெப்சிபா அவர்களை பேராசிரியர் ஜேசுதாசன் அவர்களிடமிருந்து பிரித்துபார்க்க முடியாது என்றார். பேராசிரியர் ஜேசுதாசன் தமிழ் இலக்கியத்தில் ஆழ்ந்த புலமையும் ரசனையும் உடைவராக இருந்தும் கூட தன் மனைவியை முன்னிறுத்தி அவரது திறமைகளை வெளிகொணர்வதை மட்டுமே தன்னுடைய முதல் நோக்கமாக கொண்டிருந்தார். ஹெப்சிபா ஜேசுதாசன் அவர்களின் முக்கியமான பெரும் நூலான Count down from Solomon னின் ஆக்கத்தில் பேராசிரியர் ஜேசுதாசனுக்கும் முக்கியமான பங்கு உண்டு. எழுதாத நூல்களிலேயே கூட தன் பெயரை போட்டுக் கொள்ளும் இந்நாட்களில் தன்னுடைய பங்கு உள்ள நூலிலேயே தன் பெயரை போட்டுக் கொள்ளாத பேராசிரியர் மிக அபூர்வமான ஒரு ஆளுமை என்றார் .

புத்தம் வீடு மிக முக்கியமான ஒரு நூல்,அந்நூல் வெளிவந்தபோது பரவலான கவனத்தை அது பெறவில்லை.விமரிசகர்கள் அதை பேசி முன்னிறுத்தவுமில்லை.ஆயினும் அந்நூல் தன் அழகியல் குணத்தாலேயே இலக்கிய முக்கியத்துவத்தை பெற்று ஏறத்தாழ நாற்பது வருடங்களுக்கும் மேலாக தன்னுடைய இடத்தை தக்கவைத்துகொண்டுள்ளது . Count down from Solomon அடிப்படையில் ஒரு இலக்கியவரலாறு என்றாலும் நுட்பமான முறையில் அது தமிழிலக்கியம் மீது விமரிசனங்களைமுன்வைக்கிறது.

ரங்கராஜன் குறிப்பிட்டது போல இப்பரிசு எளிய ஒன்று அல்ல. இன்று தமிழில் வழங்கப்படுவதிலேயே மிக முக்கியமான இலக்கிய பரிசு இதுதான். இதனுடன் ஒப்பிடுகையில் சாகித்ய அகாதமி விருது மதிப்பிற்குரியதல்ல. காரணம் தரமான படைப்பாளிகளுக்கு மட்டுமே இப்பரிசு இதுவரை வழங்கப்பட்டுள்ளது . சாகித்ய அகாதமியால் புறக்கணிக்கப்பட்ட படைப்பாளிகளுக்கு மட்டுமே இது வழங்கப்பட்டுள்ளது . இதை பெற்றுக் கொண்ட ஒருவர் சாகித்யதாகாதமி விருதை புறக்கணிக்கவேண்டும். சாகித்ய அகாதமி விருது தமிழ் எழுத்தாளர்களை சிறுமைப்படுத்தி வருகிறது. சிலர் அதை பெற போட்டியும் சிபாரிசும் செய்கிறார்கள் என்றார் சுந்தர ராமசாமி.

நீலபத்மநாபன் ஹெப்சிபா ஜேசுதாசன் அவர்களின் புத்தம்வீடு தமிழில் ஒரு முக்கியமான திறப்பை உருவாக்கியது என்றார் . வட்டார வழக்கு என்றும் கொச்சைமொழி என்றும் முத்திரை குத்தி மண்ணின் மணம் கொண்ட படைப்புகளை நிராகரித்து வந்த காலகட்டத்தில் வெளிவந்த புத்தம்வீடு ஒரு முக்கியமான முன்னுதாரணமாக அமைந்து இலக்கிய வளர்ச்சிக்கு வித்திட்டது .பொதுவாக தமிழில் ஒதுங்கி இருப்பவர்களைபுறக்கணிக்கும் போக்குதான் உள்ளது.அதற்கு மாறாக ஹெப்சிபா ஜேசுதாசன் போன்ற ஒரு அமைதியான சாதனையாளருக்கு விருதுதர விளக்கு அமைப்பு முன்வந்தது பாராட்டுக்கு உரியது என்றார் .

ஆ.மாதவன் தமிழில் ஆர் ஷண்முக சுந்தரத்தின் நாகம்மாள் , சுந்தர ராமசாமியின் ஒரு புளிய மரத்தின் கதை , ஹெப்சிபா ஜேசுதாசன் னின் புத்தம்வீடு ஆகியவை முக்கியமான முன்னோடி இலக்கியமுயற்சிகள் என்றார். அதுவரை தமிழிலக்கியத்தில் மொழ பற்றி உருவாக்கியிருந்த பிரமைகளை உடைத்து அசலான வாழ்க்கையை எழுத்தில் வைத்த முக்கியமான இலக்கிய படைப்புகள் இவை. ஏறத்தாழ முப்பது வருடங்களுக்கு பிறகு புத்தம்வீடு மறுபதிப்பு வந்திருப்பதும் மற்ற நூல்கள் மறுபதிப்பு வராததும் தமிழின் உதாசீன மனநிலையை காட்டுபவை . விளக்கு விருது முக்கியமான சேவையை செய்துள்ளது என்றார்.

ஜெயமோகன் தமிழ் இலக்கியத்தில் அறுபதுகள் வரை யதார்த்தத்துக்கு இடமில்லாத நிலை இருந்தது என்றார் . ஒன்று கற்பனாவதப் பண்பு கொண்ட மிகையான கதைகள். மறுபக்கம் சீர் திருத்த நோக்கம் கொண்ட விமரிசன யதார்த்ததை முன்வைக்கும் படைப்புகள். இரண்டுமே அப்பட்டமான உண்மையை பேசும் தன்மை இல்லாதவை. கற்பனாவாதப்பண்பு கொண்ட இலக்கியங்கள் ஒரு சமூகத்துக்கு அவசியம் தேவை. அவை இல்லையேல் சமூகம் தன் கனவுகாணும் திறனை இழந்து விடும். ஆனால் அவை யதார்த்தவாத இலக்கியத்தால் சமநிலைப்படுத்தப் பட்டிருக்கவேண்டும். மேலான இலக்கியம் யதார்த்தத்திலிருந்தே துவங்கும்.ஆனால் அதில் நின்றுவிடாது. அதன் உச்சம் கற்பனையின் உச்சமே.

தமிழில் தூய யதார்த்தவாதப் பண்புள்ள எழுத்தை முன்வைத்த மூன்று நாவல்கள் ஆர் ஷண்முக சுந்தரம் எழுதிய நாகம்மாள், நீல. பத்மனாபன் எழுதிய தலைமுறைகள் மற்றும் ஹெப்சிபா ஜேசுதாசன் எழுதிய புத்தன் வீடு. புத்தன் வீடு துவங்குவதே அழகான குறியீட்டுதன்மையுடந்தான். மண்ணை விவரித்து மனிதர்களுக்கு வருகிறது. நாகமாள் கூட அப்படித்தான். மண்ணிலிருந்து சொல்ல ஆரம்பிக்கும் ஒரு கதைகூறும் முறைஅதில் உள்ளது. மிகையே இல்லாமல்மிக மிக மென்மையாக அது வாழ்க்கையைப்பற்றி பேசுகிறது .ஆகவே அதுமுக்கியமான இலக்கிய ஆக்கம்.ரூணர்ச்சிகளை ஆரவராமே இல்லாமல் சொல்லும் அதன் போக்கு நமக்கு முக்கியமான் ஒரு முன்னோடி முயற்சியாக அமைந்தது.

Count down from Solomon இலக்கிய விமரிசனநூல் என்ற முறையில் தமிழில் மிக மிக முக்கியமானது . இன்னும் இது தமிழில் பேசப்படவில்லை. இதுவரை தமிழிலக்கிய வரலாறு ஒருவகை அதிகார நோக்கில்தான் எழுதப்பட்டுள்ளது. ரசனை மற்றும் அற மதிப்பீடுகளின் அடிப்படையில் ஆக்கப்பட்ட வரலாறு இது . இந்நூலை முன்னிறுத்தி சில கூட்டங்களை நடத்தும் நோக்கம் சொல் புதிதுக்கு உண்டு . ஹெப்சிபா அவர்களின் ஆத்மார்த்தமான இலக்கிய பணிக்கு கிடைத்துள்ள இந்த இலக்க்கிய விருது முக்கியமானது என்றார்.

ஏற்புரை வழங்கிய ஹெப்சிபா ஜேசுதாசன் தன் வாழ்க்கையின் சில நினைவுகளை பகிர்ந்துகொண்டார் . பேராசிரியரை திரும்ணம் செய்துகொண்ட நிகழ்ச்சியை பற்றி அழகான முறையில் சொன்னார். மாப்பிள்ளை தேடும் போது பெண்ணின் கருத்தை கேட்கும் வழக்கம் அன்றில்லை . ஆனால் ஹெப்சிபாவின் மனதில் ஒரு குரல் நீ பேசவேண்டும் என்று சொன்னது .அவர் தன் தந்தையிடம் தனக்கு எது முக்கியம் என்று சொன்னார். விரும்பியவரையே மணம் செய்தும் கொண்டார். அதைப்போல எழுதும் தூண்டுதலும் தனக்கு கனவில் ஒரு பேனா கிடைத்ததுபோலவே வந்தது என்றார். எல்லா தருணத்திலும் தன் அந்தரங்கமான குரலை தொடர்ந்தே தான் சென்றதாக அவர் சொன்னார். அக்குரல் எப்போதுமே அச்சமில்லாததாக , முற்போக்கானதாக, மனிதாபிமானம் கொண்டதாக இருந்தது என்பது முக்கியமான ஒன்றாக இருந்தது. தன் கணவர் தனக்கு ஆசிரியராகவும் நண்பராகவும் இருந்தார் என்றார் ஹெப்சிபா . தமிழிலக்கியம் குறித்து ஆங்கிலத்தில் எழுதவேண்டுமென்ற கனவு பேராசிரியர் ஜேசுதாசனுக்கு திருமணத்துக்குமுன்பே இருந்தது . அதை எழுபதுவயதுக்கு பிறகே நிறைவேற்றிவைக்கமுடிந்தது. நூலின் இறுதிப்பகுதியை எழுதிவிட்டேன், இனி மரணம் ஒரு பொருட்டே அல்ல என்றார் ஹெப்சிபா ஜேசுதாசன். முடிந்தால் ஆங்கிலத்தில் ஒரு சுயசரிதையை எழுதும் நோக்கம் தனக்கு உண்டு என்றார் .கிராம வழக்கில் இயல்பாக அமைந்த அவரது தன்னுரை அழகான அனுபவமாக அமைந்தது .

சிறந்தமுறையில் கூட்டத்தை அமைத்திருந்த தமிழ்சங்க தலைவர் வினாயகபெருமாள் பாராட்டுக்குரியவர்.

***

jeyamohanb@rediffmail.com

Series Navigation

author

ஜெயமோகன்

ஜெயமோகன்

Similar Posts