பிறவழிப் பாதைகள்

This entry is part [part not set] of 27 in the series 20020127_Issue

கோபால் ராஜாராம்


விஷ்ணுபுரம் பற்றி

விஷ்ணுபுரம் – திண்ணையின் பக்கங்களிலும் வேறு வேறு ஏடுகளிலும் மிகவும் விவாதத்திற்காளாவதைக் காண்கிறேன். இது மிக மகிழ்ச்சிகரமான விஷயம். எண்ணூற்றிச் சொச்சம் பக்கங்கள் உள்ள ஒரு நாவல் படிக்கப் படுவதும், விவாதிக்கப் படுவதும் சாதாரண விஷயமல்ல. மற்ற பல முக்கியமான நாவல்களை விடவும் கூட மிகமிகக் கூடுதலாய் இது விவாதிக்கப் பட்டிருப்பதற்கு அதன் முக்கியத்துவம் மட்டும் காரணமல்ல, அது தொடர்ந்து பிரக்ஞையில் தங்கியிருப்பதற்கான ஒரு சர்ச்சைத் தொடர்ச்சி நடந்தவண்ணம் இருக்கிறது. அதன் காரணகர்த்தர்களைப் பாராட்டியே ஆக வேண்டும்.

நான் விஷ்ணுபுரத்தை இங்கே விமர்சிக்க வரவில்லை. உடனடியாக இந்த நாவலை விமர்சித்து ஏற்றுக் கொள்ளவோ, மறுதலிக்கவோ செய்யத் தேவையில்லை. இதன் முழுப் பரிமாணமும் உள்வாங்கிக் கொள்ள ஒரு கலாசாரத்திற்கு நிச்சயமாய் நேரம் பிசிக்கும் என்று எண்ணுகிறேன். கோணங்கியின் ‘பாழி ‘ , ஜெயமோகனின் ‘விஷ்ணுபுரம் ‘ , ரமேஷ்-பிரேம் தந்த ‘கிரணம் கவிதைகள் ‘ , தமிழவன் கதைகள் மற்றும் நாவல்கள், நாகர்ஜ்உனனின் படைப்புகள் போன்றவை சமகாலப் போக்கினை மட்டும் வைத்து எடை போட வேண்டாதவை. இவை ஒப்புக் கொள்ளப்பட்ட பல கருதுகோள்களைத் தலைகீழாக்கிவிட முயல்கின்றன. இதனாலேயே பெரும் மெளனமும், அல்லது பெரும் ஆரவாரமும் இவற்றின் எதிர்வினைகளாய் முன்வருகின்றன.

இந்த நாவலைப் படிக்கையில் எனக்குப் பட்ட இரண்டு கருத்துகளை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். இந்தக் கருத்துகள் மற்றவர்களாலும் சொல்லப் பட்டிருக்கக் கூடும். நான் விஷ்ணுபுரம் பற்றிய எல்லா விமர்சனங்களையும் படிக்கவில்லையாதலால் எனக்கு இது பற்றித் தெரியவில்லை.

முதலாவது : இந்த நாவல் தமிழின் வணிக ஏடுகளில் வெளியான வரலாற்று நாவல்களின் பல உத்திகளைக் கையாள்கிறது. ஆனால் அந்த உத்திகளை , ஜெயமோகன் தன் சிறப்பான எழுத்தாற்றலால் வேறுதிசையில் திருப்பி விடுகிறார். சாண்டில்யன், கல்கி, நா பார்த்தசாரதி போன்றவர்கள் தத்துவம் தோய்ந்த வரலாற்று நாவல் எழுதினால் – வணிகப் பத்திரிகைகளின் நிர்ப்பந்தம் அற்று – இப்படித் தான் எழுதியிருப்பார்கள்.

இரண்டாவது தத்துவம் பற்றியது : கீழைத் தத்துவம் மட்டுமே உள்வாங்கப்பட்டு எழுதப்பட்டதினால் இது மிக உண்மையான மீட்புவாத நாவல் என்று சொல்ல வேண்டும். அதிலும் இன்று வரையில் வளர்ந்து வந்துள்ள ஐரோப்பியச் சிந்தனை மரபுடன் இணை சொல்லக் கூடியதாய் ஏன் இந்தியத் தத்துவம் வளர்ச்சியே பெறவில்லை என்பது ஆராயப் படவேண்டிய ஒன்று. 21-ம் நூற்றாண்டில் இருக்கிற நாம் மேலைத் தத்துவச்சாயல் படர்ந்த கருத்துலகை முற்றுமாய் மறைத்துவிட்டு தத்துவ நாவல் எழுதுவது என்பது காலத்தில் பின்னோக்கிப் போவது தான். இது ஜெயமோகனின் பரந்த உலகப் பார்வையுடன் தொடர்பு கொண்டதும் கூட என்பதால் விமர்சிக்கப் படவேண்டிய ஒன்று என்று எண்ணுகிறேன்.

திராவிட இயக்கம் அறிவியக்கம் அல்ல என்று அவர் சொல்வதும் இப்படிப் பட்ட அறியாமையால் தான் வருகிறது. இந்திய வரலாற்றில் காலனியாதிக்கத்தின் போது எழுந்த இரண்டு பெரும் தத்துவப் பரம்பரைகளின் சிக்கல் இது. ஒருபுறம் நேரு, பெரியார், வடநாட்டு இடதுசாரி இயக்கங்கள், முஸ்லீம் லீக் இவையெல்லாம் ஐரோப்பியத் தத்துவத்திற்குக் கடப்பாடு உடையவர்களாய் இருந்தார்கள். இவர்கள் ஒரு விதத்தில் இந்தியப் பாரம்பரியத்துடன் தம் தொடர்பை முறித்துக் கொள்ள விரும்பியவர்கள். காங்கிரஸ், காந்தி, ஹிந்த் மகா சபா , வங்காளத்தின் மறுமலர்ச்சி இயக்கம், தென்னாட்டின் இடது சாரி இயக்கங்கள் , ஜெயமோகன் குறிப்பிடும் நாராயண குருவின் இயக்கம் இவையெல்லாம் மீட்பு வாதத்தினுள் சென்று, இந்தியத் தத்துவச் சார்பை உள்ளடக்கிய சீர்திருத்தம் வேண்டினார்கள்.

திராவிடர் கழக இயக்கம் அறிவு இயக்கம் அல்ல என்று சொல்லும் டோது ஜெயமோகன் இப்படி எழுந்த இயக்கங்களின் வரலாற்றைப் பற்றி அறியாதவர் என்று தான் தோன்றுகிறது.ஐரோப்பியச் சிந்தனையாளர்களில் சாக்ரடாஸ் தொடங்கி மார்க்ஸ் பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் வரை திராவிடர் கழக இயக்கம் தொட்டுச் சென்றது. இன்றைய கோணல்களுக்கு எல்லாமே திராவிடர் கழகமும் பெரியாரின் இயக்கமும் தான் காரணம் என்று சொல்வது தவறு.

*****

ரா கனகலிங்கம் எழுதிய ‘என் குருநாதர் பாரதியார் ‘

பாரதியாரால் பூணூல் அணிவிக்கப்பட்டு பிராமணராக்கப் பட்ட இளைஞர் ரா கனகலிங்கம் எழுதிய இந்தப் புத்தகம் எனக்குக் கிடைத்தது. இதை எனக்கு அன்பளிப்புச் செய்த வலங்கைமான் நண்பர் மருதுவிற்கு என் நன்றிகள். 1947-ல் முதல் பதிப்புக்கண்ட இந்தப்புத்தகம் ஆகஸ்ட் 1996-ல் மறுபதிப்புக் கண்டிருப்பது பற்றி மகிழ வேண்டும். 50 வருடங்கள் தானே பரவாயில்லை. பாரதி பற்றித் தெரிந்துகொள்ள மேலும் மேலும் விஷயங்கள் வந்தவாறே இருக்கின்றன.

மிக எளிமையான நடையில் எழுதப்பட்ட இந்தப் புத்தகம் பாரதி மீது அன்பும் மதிப்பும் கொண்ட அன்பர்களுக்கு அதை இன்னமும் அதிகப்படுத்தும். கனகலிங்கத்திற்கு பூணூல் அணிவித்த நிகழ்ச்சி பற்றி இப்போதும் பலவிதமான விமர்சனங்கள் வந்தவாறுதான் இருக்கின்றன. இது சமூகத்தில் எந்தப் பாரதூரமான பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பது ஒரு குற்றச்சாட்டு. பிராமணீயத்தை நிராகரிக்காமல் , மீண்டும் பாரதியார் பிராமணீயத்திற்குள் புகுந்து கொள்கிறார் என்பது இன்னொரு குற்றச்சாட்டு. நாம் உன்னிப்பர்த்தால் இந்த இரு குற்றச்சாட்டிலும் உணமியில்லை என்பது தெரியும். அவர், பிராமணர்கள் பிறப்பால் உயர்ந்தவர்கள் என்ற பொய்மையை அம்பலப் படுத்துவதற்காக, பிறப்பால் மிகத் தாழ்ந்த சாதியனருக்கு பிராமணப் பட்டம் கட்டுகிறார். பிராமணனாய் இருப்பது அப்படியொன்றும் யாருக்கும் எட்டாத விஷயம் அல்ல. அறிவுத் தேடல் தான் பிராமண அடையாளம் என்றால் அதை எல்லோரும் செய்ய முடியும் என்பது தான் அவர் செயலின் பின்புலம் என்று தோன்றுகிறது.

இந்தப் புத்தகத்தில் பல அரிய நிகழ்ச்சிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. கனகலிங்கம் மட்டுமல்லாமல் ‘தேசமுத்துமாரி அம்மன் சன்னிதியில் அர்ச்சகனாக இருந்த, திருவள்ளுவ நாயனார் வம்சத்தைச் சேர்ந்த ‘ நாகலிங்கத்திற்கும் அவர் பூணூல் அறிவித்திருக்கிறார். ஃப்ரெஞ்சு சுதந்திர கீதத்தை மனமுவந்து கற்றுக்கொண்டு பாடியிருக்கிறார். தம்முடைய மகளையும் அந்தப்பாடலைக் கற்றுப் பாடும்படி செய்திருக்கிறார். அந்த ஃபிரெஞ்சுப் பாடலைக் கற்பித்த ஆசிரியருக்கு ஜலதரங்கம் பயிற்றுவித்திருக்கிறார். அந்தப் பாடலையொட்டி ‘ஜெயமுண்டு பயமில்லை மனமே ‘ பாடலை இயற்றியிருக்கிறார். மனைவி குழந்தைகளுடன் ஜன்ம விராக்கினி கோயிலுக்குப் போயிருக்கிறார். ஆங்கிலத்தில் , ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி பற்றியும், அன்னி பெசண்ட பற்றியும் விமர்சித்துப் புத்தகம் எழுதியிருக்கிறார். இந்த ஆங்கிலப் புத்தகங்கள் தம்முடைய தமிழ்ப் புத்தகங்களை விட ஆர்வமாய் விற்றபோது கோபமும் , வருத்தமும் அடைந்திருக்கிறார்.

கனகலிங்கத்தின் நடை மிக எளிய நடை. பாசாங்கு இல்லாமல், உள்ளது உள்ளபடிச் சொல்கிறார்.

*********

Series Navigation

author

கோபால் ராஜாராம்

கோபால் ராஜாராம்

Similar Posts