ஜெயகாந்தனுடன் ஓர் உரையாடல் – ஒரு பின்னுரை

This entry is part [part not set] of 11 in the series 20001008_Issue

கோபால் ராஜாராம்


திண்ணைக்கென்று ஜெயகாந்தன் பிரத்தியேகமாக அளித்த பேட்டி கடந்த மூன்று வாரங்களாக திண்ணையில் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து காரசாரமான விவாதங்களும் நிகழ்ந்திருக்கின்றன. ஜெயகாந்தனுடன் உரையாடுவதும் சரி, அவருடைய மேடைப் பேச்சைக் கேட்பதும் சரி ஒரு மேலான அனுபவம். அவருடைய பேச்சில் அனாவசியமான குறுக்கீடுகள் இருக்காது. கோபம் இருந்தால் அது நியாயமான கோபமாய் இருக்கும். இருபது வருடங்களுக்கு முன்பு அவருடைய கோபமும் அவரின் ஆளுமையின் அர்த்தமுள்ள ஒரு பகுதியாய் இருந்தது. இன்று அவருடைய கோபம் தணிந்து விட்டது. கனல் தணியவில்லை. தன்னுள் அமைதி கொண்ட ஒரு அறிவுஜீவியாய்த் தோன்றுகிறார். ஆனால் அடிப்படையான அவருடைய மனிதாபிமானமும், இலக்கிய விசாரமும் ‘பெரிதினும் பெரிது கேட்பதான ‘ தேடலும் சற்றும் குறையவில்லை. தணிந்திருக்கிறாரே தவிர சமரசங்களுக்கு இடமில்லாத படி தான் அவர் வாழ்க்கைப் பார்வை உள்ளது.

ஜெயகாந்தனின் எழுத்து மட்டுமே இந்த நூற்றாண்டின் பின்பகுதி தமிழ் வரலாற்றில் ஒரு மிக முக்கியமான இடத்தை அவருக்கு அளிக்கும் அளவு வலிமையும் , பரப்பும் , தீர்க்கமான பார்வையும் கொண்டது. ஆனால் அவர் வெறும் எழுத்துடன் தன் ஈடுபாடுகளை நிறுத்திக் கொள்ளவில்லை. திராவிட இயக்கங்களின் பிறழ்வுகளுக்கு முதலிலிருந்தே அறிவு பூர்வமான எதிர்ப்பைக் கைக்கொண்டவர். இன்று எல்லோரும் ஏதோ ஒரு வடிவில் திராவிட இயக்கங்களுடன் இணைந்து கொள்ளவும் , சமரசம் செய்துகொள்ளவும் முற்பட்ட ஒரு நிலையில் அவர் தான் கொண்ட கொள்கையிலிருந்து மாறவில்லை. அவர் சார்ந்திருந்த காங்கிரஸ் கட்சி தி மு க – வுடன் அரசியல் இணக்கம் கொண்டிருந்த காலத்திலும் கூட அவர் தி மு க வின் அரசியல் , கலாசார நிலைபாடுகளை விமர்சிப்பதை நிறுத்தவில்லை.

இன்று அரசியல் காரணங்களுக்காக மரண தண்டனை எதிர்ப்பு என்று வேஷம் கட்டியாடும் சந்தர்ப்பவாதிகள் பலர் உண்டு. பல வருடங்கள் முன்பு, எம். கல்யாணசுந்தரம் , ஜெயப் பிரகாஷ் நாராயண் முதலானோர் மரண தண்டனை எதிர்ப்பைக் கருத்துருவுமாகவும், செயல் முறை வடிவிலும் தெரிவித்த போது , காந்தீயச் சமரசவாதம் என்று அதைக் கிண்டல் பண்ணித் தம்மை மார்க்ஸீய-லெனினினிஸ- மாவோயிஸப் போர் வீரர்களாய்த் தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்த வர்க்கப் போராளி வேஷதாரிகள், இன்றைய பேஷனாக மரண தண்டனை எதிர்ப்பு ஒப்பனையை மேற்கொண்டிருக்கிறார்கள். அவர்களில் பலருக்கு , முதல் முதலில் மரண தண்டனை என்கிற தண்டனைக் கோட்பாட்டிற்கு எதிர்ப்பைத் தெரிவித்து , பத்திரிகைப் பக்கங்களில் தன் எதிர்ப்பைக் கருத்துச் செறிவுடனும் , அந்தரங்க சுத்தியுடனும் பதிவு செய்தவர் ஜெயகாந்தன் என்பது – செளகரியமாக – மறந்திருக்கும்.

ஜெயகாந்தன் எப்பொழுதுமே எல்லாரும் ஏற்றுக் கொள்கிற கருத்தைத் தான் வெளியிட வேண்டும் என்று இருந்ததில்லை. பல சந்தர்ப்பங்களில், பல விதமாகவும், தம்முடைய மனசாட்சியை மட்டுமே முன்னிறுத்தி அவ்வளவாக ‘பாபுலர் ‘ இல்லாத கருத்துகளையும் வெளிப் படுத்தித் தான் வந்திருக்கிறார். மன்னர் மானிய ஒழிப்பினால் சோஷலிஸம் வந்தே விட்டது என்று பிரசாரம் செய்யப் பட்ட போது, அனேகமாக அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்தவர் அவர் ஒருவர் தான் என்று நினைக்கிறேன். ‘அரசாங்கம் அளித்த உறுதி மொழியை மீறுவது அரசாங்கத்தின் நம்பகத் தன்மைக்கு ஊறு விளைவிக்கிற செயல் ‘ என்று அவர் கூறினார். குடும்பக் கட்டுப்பாடு பிரசாரம் பற்றியும் அவர் மேன்மையான கருத்துக் கொள்ள வில்லை. ‘குழந்தைகளை வெறுக்கச் சொல்லிக் கொடுக்கிறது இந்தப் பிரசாரம் ‘ என்கிறார். அவர் தன்னை காந்தீயத்துடன் இணக்கம் கொண்டவராய் வெளிப்படுத்திக் கொண்டாலும், அசட்டு ஒழுக்கங்களை வலியுறுத்தி ‘குடிக்காதே, சிகரெட் பிடிக்காதே, கஞ்சா புகைக்காதே ‘ என்றெல்லாம் அரசாங்கம் தனி மனிதத் தேர்வுகளில் மூக்கை நுழைத்து, சுதந்திரத்தைச் சுருக்க நேரிடும் போது அதைக் கண்டிக்கிறார். அவருடைய முன்னுரைகள் அனைத்துமே இலக்கிய வாசகனுக்கு ஒரு மேலான இலக்கிய ரசனைப் பயிற்சியை அளிக்க வல்லன. அவருடைய அரசியல் அனுபவங்களும், கலையுலக அனுபவங்களும் பதிவு பெற்ற அளவில் அந்தக் காலத்தின் சூழ்நிலையை மிகத் துல்லியமாய் வெளிப் படுத்துகின்றன.

இந்த உரையாடலை நிகழ்த்தும் முன்பு திண்ணை ஆசிரியர் குழுவில் என்ன கேள்விகள் கேட்பது என்றும் எப்படிப் பட்ட அணுகு முறையை மேற்கொள்வது என்றும் விவாதிக்கப் பட்ட போது, சம்பிரதாயமான கேள்விகளைத் தவிர்த்து படைப்பாளியின் மன நிலையை அறியும் முயற்சியாக இதனை மேற்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தோம். அதனால் அவருடைய மிக முக்கியமான படைப்புகளைப் பற்றியும் அதனை எழுதும்போது அவர் மன நிலை பற்றியும் கேள்விகள் அமைந்தன. ஜெயகாந்தனும் திண்ணையின் அணுகலைப் புரிந்து கொண்டு சிறப்பான ஒத்துழைப்பு அளித்தார். எனினும் சம்பிரதாயமான கேள்விகளை முழுக்கவும் தவிர்க்க முடியவில்லை.

‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் ‘ தமிழின் தலை சிறந்த நாவல்களில் ஒன்று. இதற்கு ஈடு சொல்லக் கூடிய நாவல்கள் நானறிந்த வரையில் மற்ற இந்திய மொழிகளில் கூட இல்லையென்று சொல்லலாம். Saintly Character என்று சொல்லத் தக்க ஒருவன் ஹென்றி. ஆனால் முழுக்க மண்ணிலிருந்து விலகினவனும் அல்ல. சற்று மிகைப் பட்டிருந்தாலும் நம்பகத்தன்மையை இழந்திருக்கக் கூடிய ஆபத்து அதன் முதல் வரியிலிருந்தே இருக்கிறது. ஜெயகாந்தனின் தேர்ந்த கலைத் திறமை இந்த நாவலை மிக மிக உயர்த்தி விடுகிறது.

‘பாரிசுக்குப் போ ‘வும். ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறா ‘ளும், ‘சில நேரங்களில் சில மனிதர்களும் ‘ தமிழின் நாவல் வரிசையில் அழியா இடம் பெறுவன. அவருடைய கலைத்திறமையால், குறுநாவல் தமிழில் சிறப்பான ஒரு இடத்தைப் பெற்றது. ஆனால், அவருடை ய குறு நாவல்கள் எல்லாமே சிறுகதைகள் என்று தான் சொல்ல வேண்டும். அவருடைய பல படைப்புகளுக்குத் தமிழில் முன்மாதிரியும் இல்லை. அதற்கப்புறமும் இவை முயலப் படவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ‘ரிஷி மூலம் ‘ , ‘ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன ‘, ‘கோகிலா என்ன செய்து விட்டாள் ? ‘, ‘சினிமாவுக்குப் போன சித்தாளு ‘ போன்றவை இவை. இதில் ‘கோகிலா என்ன செய்து விட்டாள் ‘. சினிமாவிலும் சரி, எழுத்திலும் சரி பலரை ‘ஈர்த்து ‘ள்ளது. சமீபத்தில் நான் பார்த்த ‘முகம் ‘ படத்திலும் ‘சினிமாவுக்குப் போன சித்தாளு ‘ வின் எதிரொலி உள்ளது. ஆனால் ‘ரிஷிமூலம் ‘ , ‘ஆடும் நாற்காலிகள் ‘ – பக்கம் யாருமே போவதில்லை. உளவியல் ஆய்வு, தன்னாய்வு என்றாலே தமிழ்ப் படைப்பாளிகள் தம்முள் சுருண்டு கொள்வார்கள் போலிருக்கிறது.

ஜெயகாந்தனைப் புரிந்து கொள்வதில் நாங்கள் கேட்ட முக்கியமான கேள்வி ‘விளிம்புகளைத் தாண்டுவது ‘ பற்றியது. இதற்கு ஜெயகாந்தன் அளித்த விடையில் அவருடைய முழு வாழ்க்கைப் பார்வையுமே அடங்கியுள்ளது. ஒரு விதத்தில் அவருடைய பாத்திரங்கள் எல்லாமே ‘கோடுகளைத் தாண்டாத கோலங்கள் ‘ தான். விளிம்புகளைத் தாண்டுகிற மனிதர்களையும் சூழ்நிலைகளையும் சித்தரிக்கிற படைப்புகளாய் உதாரணிக்கத் தக்கவை : தி ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள் ‘, அல்பெர் கம்யூ வின் ‘அன்னியன் ‘, தாஸ்தாவ்ஸ்கியின் ‘ குற்றமும் தண்டனையும் ‘. விளிம்பை மீறியவர்களையும் அவர்களின் சூழலையும் எதிர் கொள்கிற , அவற்றின் பலாபலன்களை ஆராய்கிற , இந்தப் படைப்புகளுக்கு, இந்த முறையில் , இணை சொல்லக் கூடிய படைப்பு ஜெயகாந்தனின் ‘ரிஷி மூலம் ‘ ஒன்று தான். அதிலும் ராஜாராமன் பைத்தியமாகி விடுவது தற்செயலில்லை.

ஜெயகாந்தன் மரபு சார்ந்த முறையில் தான் இதனை எதிர் கொள்கிறார். அவர் ‘கோடுகளைத் தாண்டாத கோலங்கள் ‘ என்று ஒரு கதையுமே எழுதியிருக்கிறார்.

சினிமாவில் அவர் ஈடுபாடு பற்றிக் கேட்கப் பட்டிருக்க வேண்டும். அவர் எழுதிய ‘தூய கதைகள் ‘ என்று சொல்லத்தக்க ‘இல்லாதவர்கள் ‘, ‘பாட்டிமார்களும், பேத்திமார்களும் ‘ பற்றிக் கேட்டிருக்க வேண்டும்.

அவர் பற்றி எனக்கு விமர்சனம் இல்லாமலில்லை. விமர்சனத்தைத் தான் அவரும் விரும்புவார் என்று நம்புகிறேன். திராவிட இயக்கம் பற்றி அவர் கொண்டுள்ள எதிர் மறைப் பார்வை எனக்கில்லை. கலாசார ஈடுபாடுகளில் திராவிட இயக்கத்தினரின் செயல் பாடுகள் எல்லாமே எந்தச் சிறப்பும் இல்லாதவை என்கிற அவர் என்ணம் எனக்கு முழுக்கவுமே உடன் பாடு தான். ஜெய காந்தனின் ‘உன்னைப் போல் ஒருவனின் ‘ ஒரு ஃபிரேமுக்குக் கூட , திராவிட இயக்கத்தினரின் திரைப்பட வெளிப்பாடு அனைத்தையுமே வரிசைப் படுத்தினால் கூட ஈடு சொல்ல முடியாது. ஜெயகாந்தனின் மிகச் சாதாரணச் சிறுகதைக்கு ஈடாகக் கூட எந்த திராவிட இயக்கத்தினரும் படைத்தளிக்க வில்லை தான். ஆனால், சமூகதளத்தில், அதிகாரமும், உரிய இடமும் மறுக்கப் பட்ட சமூகத்தினருக்கு எழுச்சியும், சமத்துவ உணர்ச்சியும், தம் முக்கியத்துவம் பற்றிய பெருமிதமும் அளித்ததில் திராவிட இயக்கத்தின் பங்கு மிக முக்கியமான ஒன்று என்று தான் நினைக்கிறேன். அதனால் தான் காங்கிரசும் , இடது சாரி இயக்கமும் மட்டும் தான் இந்திய வரலாற்றில் பொருட் படுத்தத் தக்க இயக்கங்கள் என்ற கருத்தையும் நான் பகிர்ந்து கொள்ளவில்லை. தமிழ் நாட்டில் மட்டுமல்ல எல்லா மாநிலங்களிலுமே , வேறு வேறு வகையான நுண் அரசியல் இயக்கங்கள் தாம் பேரியக்கங்களின் வழியைக் கூடச் செப்பனிட்டுத் தந்தன என்று நான் நம்புகிறேன்.

அவர் கதைகளில் ‘விளக்கங்கள் ‘ சற்று அதிகம் என்ற விமர்சனமும் எனக்கு உண்டு. கதைகளின் உள் தர்க்கத்தினால் அவை அவசியம் என்று ஒரு கருத்து உள்ளது. எனினும் சில கதைகளில் விளக்கம் அதிகம் தான்.

இந்தப் பேட்டியை அளித்த ஜெயகாந்தனுக்கு என் சார்பிலும் , திண்ணை ஆசிரியர் குழு சார்பிலும், திண்ணை வாசகர்கள் சார்பிலும் நன்றி தெரிவிக்கக் கடமைப் பட்டுள்ளேன்.

இந்தப் பேட்டிக்கு உறு துணை புரிந்த முருகானந்தம், சாரதா, கெளசல்யா, மணிமொழி, துக்காராம், சிவகுமார் அவர்களுக்கும் நன்றி.

Series Navigation

author

கோபால் ராஜாராம்

கோபால் ராஜாராம்

Similar Posts