ஜெயகாந்தனுடன் ஓர் உரையாடல் – 1

author
2
0 minutes, 17 seconds Read
This entry is part [part not set] of 7 in the series 20000917_Issue


(திண்ணைக்கென்று ஜெயகாந்தன் பிரத்தியேகமாக அளித்த பேட்டி இது. )

திண்ணை : இந்தப் பேட்டியின் அமைப்பு கேள்வி பதிலாக இருப்பினும், கேள்விக்குப் பதிலாக மட்டுமல்லாமல், நீங்கள் தொடர்ந்து அபிப்பிராயம் சொல்ல வேண்டுமென்றாலும் சொல்லலாம். முதன் முதலில் நான் கேட்கப் போகும் கேள்வி ‘ஒரு மனிதன் ஒரு வீடு உலகம் ‘ பற்றியது. நான் எங்கள் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, கிளாஸிக்குகள் பொதுவாகவே துன்பியல் வடிவில் தான் நிறைய எழுதப் பட்டிருக்கின்றன என்பது பற்றி விவாதித்திருக்கிறோம். உதாரணமாக மாக்பெத், போரும் அமைதியும், அன்னா கரீனினா, குற்றமும் தண்டனையும், கரமஸோவ் சகோதரர்கள் – இப்படி. மகிழ்ச்சியை, சந்தோஷத்தை அடிப்படையாய் வைத்து ஒரு கிளாஸிக் வர முடியுமா என்று எங்களுக்குள் விவாதங்கள் நடந்த படி யிருந்தன. அந்தச் சமயத்தில் ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் ‘ தொடராக வர ஆரம்பித்தது. மகிழ்ச்சி ததும்புவதாகவும், சந்தோஷத்தையும் மிகவும் கொண்டு, சாதாரண மக்களிடம் உள்ள சிறப்பையும் , தாம் சாதாரண மனிதர்களாக இருந்து கொண்டே அவர்கள் உன்னதத்தை அடைய முடியும் என்பதை நிரூபிக்கும் விதமாகவும் ஒரு மிகச் சிறந்த கிளாஸிக்-ஆக இந்தப் படைப்பு வெளிவந்தது. அதை எழுதும் போதும், வெளிவந்த போதும் உங்கள் மன நிலை என்ன ? நீங்கள் அதை எப்படி அணுகினீர்கள் ?

ஜெயகாந்தன் : நீங்கள் சொன்னது போல கிளாசிக்குகள் துன்பியலாய்த் தான் இருக்கும் என்பது முழு உண்மை அல்ல. இந்திய மொழியில் இது அவசியம் இல்லை. இன்னும் சொல்லப் போனால் இந்திய மரபுப்படி எந்த ஒரு கதையும் சோகத்திலே முடிவது கூடாது. தமிழ் மரபிலும், ராமாயணத்திலே கூட இறுதிக் காண்டத்தைத் தவிர்த்து பட்டாபிஷேகத்துடன் நிறுத்தி விடுவார்கள். முதலில் நான் எழுத ஆரம்பித்த போது, ஒரு நல்லவன் எப்படி மூடர்களிடம் சிக்கி அவதியுறுகிறான் என்று எழுதத் தோன்றியது.. ஆனால் , எழுதத் தொடங்கியவுடன், அதைவிடவும் அவன் நல்லவனாக இருப்பதால் எல்லாவற்றையும் எப்படி எல்லாவற்றையும் நல்லவனாகவே பார்க்கிறான், என்பதையும் எழுத எண்ணினேன். Negative aspect- சிறிதும் இல்லாமல் எழுத மனதில் தீர்மானித்துக் கொண்டேன். அவன் ஒரு யுனிவர்சல் மேன். கிராமத்திலே வாழ்கிறான். பரந்து பட்ட உலகத் தன்மை எப்படி ஒவ்வொரு கிராமத்திலும் குடி கொண்டிருக்கிறது என்பதை அவன் வழியாகச் சொல்வது தான் என் நோக்கம். அது ஒரு முடிந்த நாவல் அல்ல. அதன் முடிவு எப்படி இருக்கும் என்று தெரியாமலே அதை எழுதத் தொடங்கினேன். எனக்கு மனதில் மேன்மையான ரொம்ப மேன்மையான உணர்ச்சியும், அந்த உணர்ச்சியினால் நான் தான் ஹென்றி என்று உணர்வுஇ கொண்டேன். என் நண்பர்களிடம் இதைச் சொல்லி , எப்படி எழுதுவது என்று முடிவாக வில்லை என்றேன். நண்பர் குப்புசாமி நான் சொன்ன விதமாகவே எழுதலாமே என்றார். அப்பொழுது நாங்கள் ஒரு லாரியில் பிரயாணம் செய்து கொண்டிருந்தோம். மொத்தம் அந்த லாரியில் ஏழு பேர் இருந்தார்கள் என்ற வரியோடு அந்த நாவல் தொடங்கியது .முடிவற்ற நாவலாக எழுதிக்கொண்டே போவது தான் என் விருப்பம். ஆனால் பத்திரிகைக் காரர்களுக்கு இதை முடிக்க வேண்டும் என்று தோன்றி விட்டது. இது இன்னும் எத்தனை வாரம் வரும் என்று கேட்டார்கள். அடுத்த வாரமே முடித்து விட்டேன். அது முடித்த பிறகு நான் நிறைய எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிற விஷயங்கள் கூட மனதின் அடியாழத்துக்குப் போய் விட்டன. நீங்கள் கேட்டது : இந்த நாவல் எழுதும்போது என் மனநிலை பற்றி – மனிதர்களையும், கிராமத்தையும், இயற்கையையும் நேசிக்கிற ஒரு பறவை மாதிரி நான் அந்த காலத்தில் இருந்தேன் இந்தக் கதை என் உடம்பையே லேசாக்கி ,பறவை போல இருந்தது என் மனநிலை. ஆனால் பறந்து கொண்டே இருக்க முடியாதல்லவா ? காலூன்றி ஒரு இடத்தில் நிற்கத்தான் வேண்டியிருக்கிறது. ஆனால் இன்னும் கூட அதை மறுபடியும் தொடங்கணும். எழுத வேண்டும் என்று ஆர்வம் உண்டு. ஒரு காரியம் நிறைவேறுவதற்கு ஆர்வம் மட்டும் போதாது. வேறு சில புறச் சூழ்நிலைகளும் தேவையல்லவா ? அது வரலாம் வராமலும் போகலாம்.

திண்ணை : மிக்க நன்றி. நீங்கள் எப்படி மேம்பட்டவர்களாய் உணர்ந்தீர்களோ அது போல அதைப் படித்த எல்லாருமே உணர்ந்திருக்கிறோம் என்பது அந்த நாவலின் வெற்றிக்கு ஒரு சான்று. அவன் ஒரு விதத்திலே அந்தச் சூழ்நிலைக்கு அன்னியனாய் இருக்கிறான். எல்லாவிதத்திலும் இந்தியாவிலிருந்து விலகி, ,இந்திய மரபிலேயிருந்து விலகி இருக்கிறான். எல்லாவற்றையும் புதிதாய்ப் பார்க்கிறவனாய், இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று எல்லாவற்றையும் புதிதாய்ப் பார்க்கிற ஒரு மனநிலையிலே இருக்கிறான். இப்படிப் பட்ட மனநிலை உள்ளவர்களுக்குத் தான் வாழ்க்கை மகிழ்ச்சியாய் இருக்கும் என்று சொல்லலாமா ? அவன் மகிழ்ச்சியாய் இருக்கிறதனால் அவன் சூழ்நிலையே மாறிவிடுகிறது. இதற்கு உந்துதல் நீங்கள் தான் என்று எனக்குத் தெரியும் , இருந்தாலும் நீங்கள் அப்படிப்பட்ட மனிதர்களை சந்தித்திருக்கிறீர்களா ?

ஜெயகாந்தன் : அவன் – ஹென்றி – ஒரு கண்டெடுக்கப் பட்ட குழந்தை. அவன் பெற்றோர்கள் எந்த தேசத்தைச் சேர்ந்தவர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று எனக்கும் தெரியாது, வாசகர்களுக்கும் தெரியாது. யுத்தத்திலே வீடிழந்து நாடிழந்து பர்மாவிலிருந்து ஓடி வந்த ஒரு கணவனும் மனைவியுமல்லாதவர்கள் . சபாபதிப் பிள்ளையும் அவர் நண்பன் மனைவியும் அந்தக் குழந்தையைக் கண்டெடுக்கிறார்கள். தகப்பனாக நினைத்துக் கொண்டிருக்கிற சபாபதிப் பிள்ளை அவன் தகப்பனில்லை. அவன் மம்மி அவன் தாயுமில்லை., சபாபதிப் பிள்ளையும் தாயும் , கணவன் மனைவியும் இல்லை. .அன்பினாலேயும், அபிமானத்திலேயும் ஒன்றுபட்ட ஒரு சூழ்நிலையிலே அவன் வாழ்கிறான்.ஆதனால் அவன் அன்னியத் தன்மை இல்லாதவனாய் இருக்கிறான் என்பது தான் விஷயம். அவனை விடச் சிறந்த சுதேசி யாரும் கிடையாது. ஆனால் அவன் யார் என்று யாருக்கும் தெரியாது. அவன் ஒரு புராணகாலத்துப் பாத்திரம் மாதிரி. இன்னும் சொல்லப் போனால் ஒரு அவதார புருஷன் மாதிரி. அவன் சொந்தமில்லாதவன் போலிருக்கிறான். ஆனால் எல்லாருடனும் அவன் சொந்தம் கொண்டாடுகிறான். நகரத்திலே ஒரு ரெயில்வேத் தொழிலாளியின் பிள்ளையாக வாழ்ந்த அவன் கிராமத்திற்கு வருகிறான். அந்த கிராமம் அவன் அப்பா வெறுத்து ஒதுக்கி ஓடிப் போனது. அவன் சுற்றம் அங்கே இருக்கிறது. அவர்களுடன் உறவு கொள்வதற்கு வருகிறான். அவர்களுள் ஒருவனாக ஆகப் போகிறான் என்பது இரண்டாம் பகுதியில் வரும். ஹென்றி ஹென்றிப் பிள்ளையாக மாறுவது அதன் அடையாளம் தான். எனவே அவன் அன்னியனல்ல – அன்னியன்போலத் தோற்றமளித்தாலும் . வேரூன்றுகிற வரையிலும் கதை இருக்கிறது ஒரு மனிதன் வருகிறான் ஒரு வீட்டைப் புதுப்பிக்கிறான் அவன் உலகம் விரிகிறபோது அந்த அத்தியாயம் விரியும்.

திண்ணை ; அடுத்த படியாக நான் கேட்கப் போவது அக்கினிப் பிரவேசம் பற்றி . ஒரு விதத்திலே பார்த்தால் ரொம்பச் சாதாரண கதை. எந்த விதத்திலே என்றால், ஒரு உணர்வுள்ள எந்தத் தாயும் , ஒரு உணர்வுள்ள எந்தப் பெண்ணுக்கும் செய்கிற விஷயம் தான். தமிழ்நாட்டின் பிறழ்வான சூழ்நிலையில் வெளிவந்ததால் அந்தப் பிறழ்ச்சியை நேர் படுத்துகிற ஒரு முக்கியமான வேலையை அது மேற்கொண்டது. அதனால் அது முக்கியமான கதையாகப் பேசப்படுகிறது. பேசப் படவேண்டும். அவள் தொடர்ந்து தன் வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து கொண்டிருக்கும் போது அவள் மாமா சொல்கிற வார்த்தைகள் ‘நீ அவனைத் தேடிக்கண்டுபிடி, இல்லையென்றால் நீ வைப்பாட்டியாய் இருக்கத் தான் லாயக்கு ‘. முதலில் விளையாட்டாகவும் , மபிறகு சீரியஸாகவும் , எடுத்துக் கொண்டு – அவளும் சரி அதையே செய்கிறேன், ஆனால் என் தேர்வாகத் தான் அது இருக்கும் என்று சொல்வதுபோல் ஒரு மிகச் சுதந்திரமான ஆன்மாவாகத் தன் வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும் என்று ஆன ‘கங்கை எங்கே போகிறாளில் ‘ இதை விட்டுக் கொடுக்கிறாள் போல உணர்வு ஏற்படுகிறது.

ஜெயகாந்தன் : ஒரிஜினல் கதை ‘அக்கினிப் பிரவேசம் ‘ தான். அதன் முடிவை மாற்றினால் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் பிறந்தது ‘சில நேரங்களில் சில மனிதர்கள் ‘. அந்த முடிவு பிடிக்காததால் அது முடிவு வரைக்கும் சென்று பார்ப்பது ‘கங்கை எங்கே போகிறாள் ‘. கங்கையில் போய் விட்டாள் என்று தான் சொன்னேனே ஒழிய, அவள் இன்னொரு புறம் கரையேறியும் வரலாம். அவள் சுய தன்மையை அவள் இழந்ததாய் எனக்குத் தோன்றவில்லை. ‘ சில நேரங்களில் சில மனிதர்கள் ‘ இன் duration ஒரு வருஷம் தான். பனிரெண்டு வருஷத்திற்குப் பிறகு ஒரு வருஷம். ‘கங்கை எங்கே போகிறாள் ‘ அவளுடைய அறுபது வயது வரையில் செல்கிறது. எனவே அதை இன்னும் விரிவாக எழுதி யிருந்தால் உங்களுக்கு இந்தச் சந்தேகம் வந்திருக்காது.

திண்ணை : அடுத்த படியாக ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் ‘ பற்றி.. இது மிகுந்த உருவ அமைதி கொண்ட நாவல் . measured -ஆக எழுதப் பட்டிருக்கிறது. இந்த மூன்று நாவல்களுமே பேசப்படுகிற அதே மாதிரி இண்டெலக்சுவலாய்த் தன்னை

எப்படி ஒரு இண்டெலக்சுவல் தன் சொந்த வாழ்க்கை என்று வரும் போது தன் அறிவார்ந்த சிந்தனையை உபயோகிக்க முடியாமல் இருப்பதும். இண்டெலக்சுவலாகத் தன்னை அடையாளம் கண்டு கொள்ளாத ஒரு பெண் அறிவு பூர்வமாய்த் தீர்க்கமாய்ச் சிந்திப்பதும் இதில் வெளிப்படுகிறது.

ஜெயகாந்தன் : இண்டெலெக்சுவல் என்பது படித்தவர்கள் இல்லை. சிந்திக்கிறவர்கள். ஒரு பாத்திரம் சிந்திக்கிற பொழுது, தன் அறிவினால் தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறவர்களாக மாறுகிறார்கள். அவள் ஓரளவிற்குப் படித்தவள். ஓரளவிற்குச் சிந்திக்கத் தெரிந்தவள். வாழ்க்கையில் ஆண் துணை வேண்டும் என்று சிந்தித்து செயல் படுகிறாள். அவர்(சாமி) முன்னாலே ப்ரொபோஸ் பண்ணியிருந்தால், அவருடன் கூட அவள் இருந்திருக்கக் கூடும். அவளுக்குப் பத்திரிகை நிருபராய் வரும் ரங்காவிடம் ஒரு ஈடுபாடு. அவள் தான் அவனுக்குக் கடிதம் எழுதி இந்தக் கடிதம் எங்கேயிருந்து வருகிறது என்று தெரிந்தால் வந்து சந்திக்கவும் என்று எழுதுகிறாள். ஆனால் ரங்கா , அவளை பேட்டி காண்பவனாக வருகிறான். போட்டோவிலே கையெழுத்துப் போடச் சொல்லிக் கேட்பான். போட்டோவிலேயாவது கையெழுத்துப் போடலாமில்லையா ? என்று கேட்பான். துர்கனேவ்-இன் ஒரு நாவலில் நாயகி இப்படித் தான் தனக்குப் பிரியமானவனுக்கு எழுதுகிறாள். அதைப் படித்ததன் விளைவு என்று பிறகு கண்டுபிடித்தேன். அவள் கால் விளங்காமலான பிறகு, மனிதாபிமானத்தோடு இணைகிறான். அதன் காரணமாக அவளை விவாக ரத்து செய்து விடலாம் என்று சட்டம் சொல்லும் பொழுது அது அவனுக்கு அநியாயமாகத் தோன்றுகிறது. மனிதாபிமானத்திற்கு விரோதமென அவனுக்குத் தோன்றுகிறது. காதலுக்கு அடிப்படை மனிதாபிமானம் தான் . அது தான் இந்த நாவலில் வலியுறுத்தப் படுகிறது.

திண்ணை : தமிழில் முதன் முதல் வெளிவந்த Novel of ideas என்று சொல்லத்தக்கது ‘பாரிசுக்குப் போ ‘ முதன் முதலில் Novelist of ideas ஆக வந்தவர் நீங்கள் தான். இதன் சாரங்கனுக்கு , நீங்கள் பார்த்துப் பழகின சினிமாத்துறையில் பார்த்தவர்கள் காரணமா ? ‘பாரிசுக்குப் போ ‘ பாதிப்பு ஏற்பட்டு தான் இளையராஜா போன்றவர்கள் வித்தியாசமாய் சினிமா இசையில் முயன்றார்கள் என்று எனக்கு ஒரு எண்ணம் .

ஜெயகாட்ந்தன் : எம் பி சீனிவாசன் என்று ஒருவர் இருந்தார். நான் சந்திக்கும் போது டெல்லியிலிருந்து வந்திருந்தார். அவருடைய மனைவி ஒரு பஞ்சாபி முஸ்லீம். இருவரும் இசையில் மிக ஈடுபாடு கொண்டவர்கள். இன்னும் சொல்லப் போனால் எம் பி சீனிவாசனால் தான் எனக்கு மேற்கத்திய இசையில் ஈடுபாடு வந்தது. அவருக்கு எவ்வளவு மேற்கத்திய இசையில் ஈடுபாடு இருந்ததோ அதே அளவுக்குக் கர்னாடக சங்கீதத்திலும் ஈடுபாடு உண்டு. அவரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது , சங்கீதத்தைப் பற்றியும், அதில் செய்ய வேண்டிய புதுமைகள் பற்றியும் பேசும்போது,. சினிமா இந்தப் புதுமைகள் செய்ய நல்ல களன் என்றும் பல விஷயங்கள் பேசுவோம். எம் பி சீனிவாசன் அல்ல சாரங்கன் என்ற பாத்திரம். அவருடைய கருத்துகளினால் உருவான பாத்திரம். பலருடைய குணங்களையும் என் குணங்களையும் சேர்த்து உருவான பாத்திரம் தான் சாரங்கன்..எனக்கு முதலிலே மேற்கத்திய இசையில் தான் ரொம்ப ஈடுபாடு இருந்தது. பல விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்போம். அதன் பிறகு அதன் வழியாகத் தான் கர்நாடக சங்கீதத்தில் ஈடுபாடு. நான் சொல்வதுண்டு – கர்நாடக இசை தக்களியில் நூல் நூற்பதைப் போன்றது. மேற்கத்திய இசை ஊடும் பாவுமாக தறி போட்டு துணி நெய்வதைப் போன்றது. ஸிம்ஃபனி என்கிற வார்த்தையைத் தமிழில் முதலில் எழுதியவன் நான் தான் என்று நினைக்கிறேன். நிச்சயமாய் அது பல upcoming musicians-க்குக் கிளர்ச்சியையும். தாக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கும். நான் கூட நினைப்பதுண்டு — சாரங்கன் அமைக்க விரும்பிய இசை, சீனிவாசனும், இளையராஜாவும் என இன்றுள்ள ரகுமான் வரையில் வந்துள்ளது என்று . சமூகம் சார்ந்த கருத்து , சமூகத்தைப் பாதிக்கிற போது அது பிற கலைகளையும் பாதிக்கும். பாதிக்க வேண்டும். இதற்கு ‘பாரிசுக்குப் போ ‘ உதாரணம்.

திண்ணை : ‘பாரிசுக்குப் போ ‘வில் சாரங்கன்-லலிதா- மகாலிங்கம் உறவு டால்ஸ்டாயின் அன்னா கரீனினா-வை நினைவு படுத்துகிறது.

ஜெயகாந்தன் : ஆமாம், அதிலேயே அது வரும்..

திண்ணை : ஆமாம், வரும். உங்கள் பாத்திரங்கள் எல்லாமே இது மாதிரி விஷயங்களில், விளிம்பு வரை சென்று திரும்பிவிடுகிறார்கள். அதற்கு மேல் அந்த விளிம்பைத் தாண்டவிடாமல் அவர்களைத் தடுப்பது , அவர்களுக்குள் இருக்கும் தடுப்புணர்ச்சியா , அல்லது ஜாக்கிரதை உணர்ச்சியா, அல்லது உங்களுக்குள் இருக்கும் இந்திய மரபின் தாக்கமா ?

ஜெயகாந்தன் : அது தான் என்று நினைக்கிறேன். இந்திய மரபு மேற்கத்தியப் பண்புகளை தன் வசம் சுவீகரித்துக்கொண்டாலும், அது இந்திய மரபாய்த் தான் பரிணமிக்கும் . அல்லது, பரிணமிக்க வேண்டும் என்று நான் நினைப்பதாகவும் இருக்கலாம்.

திண்ணை : நீங்கள் இந்திய மரபு என்று சொன்னால் கூட உங்கள் fiction எல்லாமே ரஷ்ய, ஐரோப்பிய மரபின் தொடர்ச்சி , வெளிப்பாடு தான் இல்லையா ? Realism போன்றவை.

ஜெயகாந்தன் : Unconscious – ஆக இருக்கலாம். இன்னும் சொல்லப் போனால், இந்திய மரபின் விளைவு தான் அன்னா கரீனினா தற்கொலை செய்து கொள்வது . அவள் ஓடியிருந்தால் கதையே இல்லை. அவள் மன உறுத்தலும் , தன்னையே அவள் மன்னித்துக் கொள்ள முடியாமல் இருப்பதும் தான் தற்கொலைக்குக் காரணம் . அவள் ஓடிப் போய் விட்டால் கதையே இல்லை. கார்க்கி டால்ஸ்டாயை ரொம்பக் கண்டிக்கிறார். நீ தான் கொன்று விட்டாய் என்று டால்ஸ்டாயிடம் சொல்கிறார்.

திண்ணை : நாங்களும் கூட உங்களை . . .

ஜெயகாந்தன் : ஆமாம், நான் தான் பிரித்து விட்டேன். அப்ப தான் அது மேன்மையாய் இருக்கிறது. சாரங்கனுடன் லலிதா ஓடியிருந்தால் அந்தக் கதையை எழுதவே வேண்டியதில்லை. யாரும் தெரிந்து கொள்ள வேண்டாத செய்தி இது. ராமன் காட்டுக்குப் போனதினால் தான் ராமன். இல்லையென்றால் மற்ற ராஜாக்களைப் போலத் தான். sacrifice என்பது எல்லா மரபிலும் இருக்கிறது. டால்ஸ்டாய், டால்ஸ்டாய் ஆனதிற்குக் காரணம் இந்தியத் தாக்கம். அவர் இந்தியராய் வாழ்ந்த ஐரோப்பியர். நாம் ஐரோப்பியர்களாய் வாழ்கிற இந்தியர்கள்.

Series Navigation

Similar Posts

2 Comments

Comments are closed.